Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ -3




(3)

“என்னடா இது சத்யாவுக்கு வந்த சோதனை?

சத்யா சிஸ்டம் முன் குழப்பத்துடன் புலம்பினாள்.

“இன்றைய நாள் இனிதே பிறக்கும்னா, இப்படியா?

அவள் முன் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் காலியாக, வெள்ளையாக இருந்தது. எந்த ஒரு படமோ, ஐகானோ இல்லை. சுத்தமாக துடைத்து விட்ட ஸ்லேட் போல் இருந்தது. என்ன ஆச்சு?

காலையில் தன் கேபினுக்குள் வந்ததும், சத்யா லைட்டைப் போட்டு, அங்குள்ள விநாயகர் முன் கண்மூடி நிற்பாள். தினசரி காலண்டரில் தேதி கிழித்து விட்டு அவள் ராசிக்கு என்ன பலன் என்று பார்ப்பாள். அதில் உள்ள பொன் மொழிகளை மனதிற்குள் ஏற்றிக் கொள்வாள்.

ஒரேயடியாக ஜாதகம், ஜோசியம் என்று போக மாட்டாள் சத்யா. என்றாலும், நாட்பலனில் குறித்த நல்ல விஷயங்களை  மட்டும் மனதிற்குள் நிறுத்துவாள்.

மகிழ்ச்சி என்றிருந்தால் அன்று நடக்கும் எந்த ஒரு சின்ன விஷயத்திலும் மகிழ்ச்சி அடைய மனதை தயார் படுத்திக் கொள்வாள். ஏதானும் எதிர்மறையாக இருந்தால் அதை அப்படியே நேர்மறையாக மாற்றி, அந்த நாளை இனிமையாக்கி விடுவாள்.

“எதிர்மறையான சூழலிலும் நேர்மறையாகச் சிந்தி– என்பான் விஜய்.




அண்ணா விஜய் அவளின் உற்ற நண்பன். வழிகாட்டி, அப்பாவுக்கும் மேலானவன். ஆறு வயது வித்தியாசம் என்றாலும், விஜய்க்கு இன்னமும் அவள் குழந்தைதான். அண்ணி மைதிலியோ ஒரு படி மேல். அம்மாவை விட மேல். ரொம்பச் செல்லம் என்றாலும் சத்யாவை அவ்வப்போது திட்டி, அவளின் தவறுகளைத் திருத்துவது மைதிலிதான். தங்கம் தயங்கும் விஷயங்களில் கூட மைதிலி  உரிமையோடு சொல்லி விடுவாள்.

“நாளைக்குப் புகுந்த வீட்டில் நல்ல பெயர் வாங்கப் போவது அவள்தானே– என்ற அவளின் வார்த்தைகளுக்கு எல்லோருமே மதிப்பு கொடுப்பார்கள்.

“உன்னை நீ நம்பு. தெய்வத்தை நம்பு. மற்றபடி எல்லாம் நம்ம மனத்  திருப்திக்குத்தான்– என்பாள் மைதிலி.

“இரவு பகல் எப்படி வருது? உன் உடல் உறுப்புகளை இயக்குவது யார்? ஒரு பிறப்பும், இறப்பும் எப்படி நிகழ்கிறது? ராத்திரி தூங்கற நீ காலைல விழிக்க்றது எந்தச் சக்தியால? எதுவும் தெரியாது. ஆனா அந்தந்த நேரத்துல நடக்கறது நடக்கும்.– என்பாள் மைதிலி.

மைதிலி திருமணம் முடித்து வந்த பிறகுதான் சத்யாவின் படிப்பு முடிந்தது. பெங்களூர் வேலை கிடைத்தது. வீட்டில் எல்லோருக்குமே குழப்பம்.

“சத்யா வேலைக்குப் போய் சம்பாதிச்சு தரணும்னு அவசியமில்லை. கல்யாணம் ஆனா, இந்தியாவா?, வெளிநாடான்னு தெரியாது. அதனால அது வரைக்கும் நம்ம வீட்டில் இருக்கட்டும். இங்க கோவைலேயே பாக்கலாம். நம்ம கூட கொஞ்ச நாள் இருக்கட்டும்– என்று மைதிலிதான் முடிவு எடுத்தாள்.

“எப்போ கல்யாணம் பண்ணுவீங்க?– சத்யா.

“ஏன்? அவசரமா? யாரானும் லவ் பண்றியா?

“ நான் எதுக்குப் பண்றேன். நீங்க பொறுப்பை தட்டிக் கழிக்கவா? நான் ரெண்டு வருஷம் வேலைக்குப் போய் ஜாலியா இருந்துட்டு கல்யாணம் செஞ்சுக்கறேன்.

“அதெல்லாம் இல்லை. நல்ல மாப்பிள்ளை கிடைச்சா உடனே

ஆனாலும் திருப்தியாக எதுவும் வரவில்லை.

ஒரு வருடமாக சத்யா சம்பளத்தை மைதிலியிடம் கொடுத்து விடுவாள். அதில் மாதா, மாதம் ஒரு பவுன் வாங்கி விடுவாள். அது போக கைச்செலவுக்கு அஞ்சாயிரம் தருவாள். விஜய் அஞ்சாயிரம் தருவான். அப்பா தனியாக இரண்டாயிரம்.




“இவ்வளவு பணத்தை நான் என்ன செய்யறது அண்ணி.

சத்யா கவலைப் பட்டாள்.

“அசடு, டிரஸ் வாங்கு. ஃபிரண்ட்ஸ் கூட சினிமா, காபி ஷாப் போ.

“நான் ஏன் அவங்க கூடப் போகணும்?– என்பாள் சத்யா.

எங்கு போவதாக இருந்தாலும் குடும்பத்தோடுதான் போவார்கள். விஜய் ஹனிமூன் கூட ஊட்டிக்கு குடும்பமே போனது. நாளைக்கு சத்யா கூட இப்படிப் போனா, அடுத்த நாளே மாப்பிள்ளை டைவர்ஸ் செஞ்சுடுவார்– என்பார் அப்பா.

“அவர் என்ன சொல்றது? நானே டைவர்ஸ்.– சத்யா.

“என்ன பேசறதுன்னு விவஸ்தை இல்லையா?– மைதிலி சீறினாள்.

“எப்பவும் பாசிடிவா, திங்க் பண்ணிப் பழகுங்க– என்றால்.

அதிலிருந்து சத்யா எதையும் நெகடிவாக யோசிக்க மாட்டாள்.

ஆனால் இன்று சிஸ்டம் இப்படி இருந்ததைப் பார்த்ததும் மனசு குழம்பி விட்டது. அவளும் எது, எது பட்டனையோ தட்டிப் பார்த்தாள். ஒன்றும் சரியாகவில்லை.

முக்கியமான புரோக்ராம். இன்று காலையில் வந்ததும் டீம் மேனேஜர் வந்து விடுவார். மனுஷன் முசுடு. இந்தியாவே கொள்ளை போனது போல் கத்துவார்.




முகம் முழுவதும் கலவரம் பூச தலையில் தட்டியபடி அமர்ந்திருந்தாள்.

“என்னாச்சு? முகம் கலவர பூமியா இருக்கு? இலங்கைக்கு மாற்றி விட்டார்களா?– சிவசு வந்து அவள் டேபிளில் தன் மொபைலை வைத்து விட்டு அமர்ந்தான்.

சத்யா  விஷயத்தைச் சொல்ல. அவன் சிஸ்டத்தை ஆஃப் செய்து ஆன் செய்து எதோ கீயைத் தட்ட டக்கென்று உயிர் பெற்றது.

“கில்லாடி சிவசு நீ– சத்யா கை தட்டினாள்.

“மக்கு. சிஸ்டம் உயிர் விடப் போவுது. சட்டுன்னு எல்லாத்தையும் பேக் அப் கொடுத்து, புது சிஸ்டம் வாங்கு.

“அந்த முசுடு கத்துமே?

“நீயும் பதிலுக்குக் கத்து.

சத்யா தயங்கினாள். மேனேஜரிடம் போவது என்றாலே சிறிது பயம்தான் எல்லோருக்கும். எந்த நிமிஷம் எதற்காகக் கத்துவார் என்று தெரியாது. ஆனாலும் இதைச் சொல்லித்தானே ஆகணும். சிறிது நேரம் கழித்து எல்லாவற்றையும் பேக்-அப் எடுத்து விட்டு அவரின் ரூம் நோக்கி நடந்தாள்.

மேனேஜருக்கு அம்பதுக்குப் பக்கமாக இருக்கும். சேரை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார். தலைமுடியின் கருகரு டை என்று நிரூபித்திருந்தது. முகத்தின் பாதிக்குக் கண்ணாடி. கீழ்க்கண்ணால் அவளைப் பார்த்துச் சிரித்தார்.

“என்னம்மா மாயாண்டி ஹோகையாவா?

“மர்கயா சார்.

“மங்களம் பாடிடு. இறுதிச் சடங்கு இன்னைக்குப் பண்ணிடலாம்.

சத்யா நம்ப முடியாமல் பார்த்தாள்.




இன்னைக்குப் புதன் கிழமை. நல்ல ஹோரை எப்போன்னு பாரு. புது சிஸ்டம் கொண்டு வந்து வைக்கச் சொல்றேன். உனக்கு யார் வேணும்? கருப்பு சாமியா? சுமேந்திரனா?

புதுசு, பழசு என்று எல்லா சிஸ்டத்துக்கும் ஒரு பெயர் வைத்திருந்தார். லேப்டாப்புக்கு பிரதீப், பிரணவ், நரேஷ் என்று நவீனப் பெயர்கள்.

“கருப்புசாமிதான் சார் சௌகர்யம்.

“ஓல்டு ஈஸ் கோல்டு என்றவர் அப்போதே ஆளைக் கூப்பிட்டு அவள் டேபிளில் ஒரு சிஸ்டம் ஒன்றை  வைத்து விட்டார்.

“நீ ஏதானும் சொன்னியா சிவசு?

அவன் மேனேஜரிடம் சொல்லாமல் அந்த முசுடு உடனடியாக தனக்கு சிஸ்டம் தந்திருக்காது என்று நம்பினாள் சத்யா.

“ஜஸ்ட் ஒரு செய்தியா காதில் போட்டேன்.

“சத்யா நாம சொல்றதுக்கு உடனடியா எந்த ரெஸ்பான்சும் கிடைச்சிடாது. சிந்திக்க டைம் தரனும். அவருடைய சூழ்நிலை எப்படி இருக்குன்னு பாக்கணும். அதனாலதான் நான் அவர் நல்ல மூடுல இருக்கும்போது அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். திங்க் பண்ணியிருப்பார். சாங்க்ஷன் பண்ணிட்டார்.

“நன்றி சிவசு

“அட, இதுக்கெல்லாம் எதுக்குமா நன்றி?– அவன் சாதாரணமாகச் சொல்லி விட்டுப் போய் விட்டான். ஆனால் சத்யா வெகு நேரம் அவனை  நினைத்துக் கொண்டிருந்தாள்.

சிவசு மழை மாதிரி. எந்த இடம், யார் என்று பார்க்க மாட்டான். உதவி எங்கு தேவை என்றாலும் அங்கு அழைக்காமல் ஆஜராகுபவன். கம்பெனியில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை. புத்தி கூர்மை அதிகம். சிஸ்டத்தில் என்ன பிரச்சினையா? கூப்பிடு சிவசுவை என்பது கம்பெனியின் தாரக மந்திரம்.

சிவசு என்று என்ன பெயர்? சிவ சுப்ரமணியமா? பலர் கேட்கும் கேள்வி.

சிதம்பரம் வசந்தாமணி சுப்ரமணியம் என்று பதில் கூறுவான்.

“பரவாயில்லையே. அப்பா, அம்மா பெயர் இனிஷியல் என்றால், இல்லை என்னைத் தூக்கி வளர்த்து, இன்று அடையாளம் தந்தவர்கள் என்று பதில் வரும்.

சிவசு கடவுளின் குழந்தை.  சிதம்பரம் நடத்தும் அநாதை இல்லத்தின் வாசலில் பிறந்த குழந்தையாகக் கிடந்தான். குழந்தை இல்லாத அவர்கள், இந்த மாதிரி கை விடப்படும் குழந்தைகளின் பாதுகாவலனாக இருந்தார்கள். சிதம்பரத்திற்கு பொள்ளாச்சி அருகில் தோப்பு, வயல்கள் இருந்தது. அதைக் கவனித்துக் கொண்டு கோவை சிங்காநல்லூரில் சின்னம்மாயி என்று அவரின் தாயார் பெயரில் ஹோம் ஆரம்பித்திருந்தார். அதில் முதலில் கிடைத்த குழந்தை சிவசு.

சுப்ரமணியம் என்று முருகன் பெயர் வைத்தார். பள்ளியில் சேர்க்கும் போது தன் பெயரையும், மனைவி பெயரையும் இனிஷியலாக வைத்ததால் அவன் சிவசு என்றாகிப் போனான்.

படித்தது சென்னை கிண்டியில். மேற்கொண்டு பிலானியில் படித்து கம்பெனி ஒன்றை அவனும், நண்பர்களும் கூட்டு சேர்ந்து ஆரம்பித்தார்கள். அதுதான் எஸ். வி. இன்ஃபோடெக் என்ற இந்தக் கம்பெனி. தான் முதலாளி என்ற உணர்வோ, நடவடிக்கையோ எப்போதும் கிடையாது. அனைவருக்கும் அவன் தோழன்.

தோழா என்றுதான் அழைப்பான். அவனையும் எல்லோரும் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.

கம்பெனி சூழ்நிலையை கலகலப்பாக்குவது அவன்தான்.

இப்போதும் ஒவ்வொரு கேபினாகப் போய் பேசிக் கொண்டிருந்தான்.




“இப்படி வேலை செய்ய விடாமல் பேசிட்டிருந்தா எப்படி?– சத்யா.

“நீ இப்போ வேலை பண்றியா சொல்லு.

அவளின் சிஸ்டம் அங்கு இன்ஸ்டால் ஆகிக் கொண்டிருந்தது.

“- – – – – -“

இன்று மாலை எங்கள் சின்னம்மாயி ஆதரவற்றோர் இல்லத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம். அதுக்கு எல்லோரையும் இன்வைட் செஞ்சுட்டிருந்தேன்.

“ஒ! சார். வாழ்த்துக்கள்.

“வெறுமனே வாழ்த்து சொன்னா போதாது. நீ வரணும்

“நான் எப்படி?– திகைத்தாள்.

“எப்படின்னா? ரெண்டு காலால் நடந்துதான் வரணும்.

“வீட்டில் பர்மிஷன் கேக்கணும்

“உங்க அண்ணா, அப்பாகிட்ட நானே கேட்டுக்கறேன். எங்க இல்லத்துக்கு விஜய்தான் ஆடிட்டர்.

விஜய் போகச் சொல்லி விட்டான்.

“நானும் அங்கதான் வரேன். நீ கிளம்பி வா. அப்பாகிட்ட நான் சொல்லிக்கறேன்.

அண்ணா சொன்னதும் குஷியாகக் கிளம்பினாள் சத்யா.




What’s your Reaction?
+1
12
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!