Serial Stories உறவெனும் வானவில்

உறவெனும் வானவில் 16

16

 

“இந்த இந்தோனேசியா ஆர்டரை நான் பார்க்கலாமா மாமா?” மறுநாள் அலுவலகத்தில் மாமனாரிடம் கேட்டாள்.

“அதில் என்ன பார்க்க போகிறாயம்மா?”கேட்டபடி சேர்மராஜ் அங்கே அழைத்துப் போனார்.

சக்திவேல் செய்து அடுக்கப்பட்டிருந்த வட்டுகளின் தரம் பார்த்து கில்லனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.

” இப்படி கறுப்பு,பழுப்பு என செய்யாமல் கலர் கலராக வட்டுக்கள் செய்யலாமே மாமா?”

“அது எதற்கம்மா?”

“துப்பாக்கியால் குறி வைத்து சுடும் போது வண்ணங்கள் சிதறினால் நன்றாக இருக்குமில்லையா?”

சேர்மராஜ் யோசிக்க,சக்திவேல் அவளை நிமிர்ந்து பார்த்து சூப்பர் என்பதாக கட்டைவிரல் உயர்த்திக் காட்டினான்.

“அது நன்றாக இருக்குமாம்மா?சிறுபிள்ளை விளையாட்டாகி விடாது?”

யவனாவின் பார்வை தானாக சக்திவேலை நாட,அவன் இல்லையென தலையசைத்தான்.தொடர்ந்து பேசும்படி சைகை செய்தான்.யவனா உற்சாகமாக தொடர்ந்தாள்.




“முதன் முதலாக துப்பாக்கி பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வண்ணங்கள் சிதறுவது சந்தோசத்தை கொடுக்கும்.வட்டுக்குள் வெவ்வேறு வண்ணங்களை நாம் பொதித்து வைத்தால் ஒவ்வொரு முறை சுடும் போதும் ஒரு வண்ணம் வருமே.அது பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும்”

“ம்.நல்ல ஐடியாவாகத்தான் தோன்றுகிறது.பார்க்கலாம்மா.முதலில் பத்து வட்டுக்கள் சாம்பிளுக்கு செய்து பார்க்கலாம்”

சொல்லிவிட்டு சேர்மராஜ் மகனை திரும்பிப் பார்க்க,அவன் தலையசைத்தான்.”நாளையே ஏற்பாடு செய்கிறேன்”

ஓ…அப்பாவும் மகனும் பேசிக் கொள்ள மாட்டார்களாக்கும்! உதடுகளை பிதுக்கியபடி வெளியேறும் முன் அவள் பார்வை தானாக கணவனை நாட அவன் உன் ஐடியா சூப்பர் என கை ஜாடை செய்தான்.யவனாவினுள் நீரூற்றொன்று உற்சாகமாக புறப்பட்டு உச்சந்தலையை தாக்கியது.

அன்று இரவு சேர்மராஜ் கிளம்பும் வரை காத்திருந்து,பின் மெல்ல கில்லனை நோக்கி நடந்தாள் யவனா.கில்லன் அருகே ஓரமாக  ஆஸ்பெட்டாஸ் சீட் வைத்து சிறு இடமொன்று இருந்தது.அங்கேதான் சக்திவேல் தங்கியிருந்தான்.கதவைத் திறந்தவன் நிச்சயம் இவளை எதிர்பார்க்கவில்லை என்பது தெரிந்தது.

யவனா வாசலில் நின்றபடி விழிகளை உள்ளே சுழற்றினாள்.ஒரு மர மேசை அடுப்பு மேடையாக உபயோகமாக,அதன் மேல் எலெக்ட்ரிக் அடுப்பில் சிறு குக்கர் விசிலடித்துக் கொண்டிருந்தது.அரிசி வேகும் மணம் அந்த இடத்தில் நிரம்பியிருந்தது.சக்திவேலின் கையில் கத்தியும் பாதி உரித்த வெங்காயமும்.

“உள்ளே வா யவா” நகர்ந்து நின்று கொண்டு அவளை அழைத்தான்.

“ம்…கத்தி வைத்திருக்கிறீர்களே!பயமாக இருக்கிறது” விழிகளை அவள் உருட்ட,சக்திவேலின் முகம் வாடியது.வேகமாக கத்தியை மடக்கிக் கொண்டு அவள் கை தொட்டு உள்ளே மெல்ல இழுத்தான்.

“ஆம்லெட்டுக்கு வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தேன்.மற்றபடி வேறெதற்கும் கத்தியை உபயோகிக்கும் எண்ணமில்லை.”

அவன் இழுவைக்கு உள்ளே போனவள் “ப்ச் நம்பித்தானே ஆகனும்.எனக்கு வேறு வழி?” என சலிக்க,சக்திவேல் கூர்மையாக அவளை பார்த்தான்.

“உனக்கு இங்கே எந்த நிர்பந்தமும் கிடையாது யவனா. நிச்சயம் நீ நினைத்த வாழ்வை வாழலாம்”

“ம்…இங்கிருந்து நான் வெளியே போய் வாழ விரும்பினால்…?”

“நிச்சயம் அதற்குரிய ஏற்பாடுகளையும் நான் செய்வேன்” உறுதியாக சொன்னாலும்,சக்திவேலின் முகம் இருண்டிருந்தது.

“என்ன ஏற்பாடுகள் செய்வீர்கள்?”

“நீ என்ன எதிர்பார்க்கிறாய்?உனக்கு பிறந்தவீடு வேண்டுமா சொல்.அடுத்த வாரமே உன் சித்தியை இந்தியா இறங்கச் செய்கிறேன்.உன்னை வீட்டுப் பெண்ணாக மரியாதையாக நடத்த வைக்கிறேன்”

இவன் நிச்சயம் இதை செய்வானெனும் அவன் தொனி யவனாவினுள் பாலூற்றை பொங்க செய்தது.

“ப்ச் புகுந்தவீடே தேவையா என யோசித்துக் கொண்டிருக்கிறேன்…”பேசியபடி அவன் முகத்தை ஆராய்ந்தாள்.அங்கே இருண்ட மௌனம்.

” என்ன அமைதியாகி விட்டீர்கள்?”

“அ…அதுவும் உன் விருப்பம்தான்” சக்திவேல் தொண்டையை செருமிக் கொண்டான்.

“தேங்க்ஸ்.நான் என் சித்தார்த் அத்தானுடன் பேசி அவரை இங்கே வர வைக்கலாமென்று நினைக்கிறேன்”

“செய்.உங்கள் திட்டங்களை என்னிடம் சொல்லி விட்டீர்களானால் எனக்கு என் வீட்டினரிடம் பேச வசதியாக இருக்கும் “அவன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டு குக்கரை இறக்கி வைத்தான்.




யவனா கைகளை உயரத் தூக்கி சோம்பல் முறித்தாள்.” நாளை பேசுகிறேன்.கொஞ்சம் பசிப்பது போலிருக்கிறது.என்ன சமையல்?”

“நீ வீட்டிற்கு போ யவனா.இங்கே சோறும்,ரசமும் மட்டும்தான் வைத்திருக்கிறேன்.”

“பரவாயில்லை.அதையே கொடுங்கள்.வீட்டிற்கு போகும் வரை பசி தாங்காது”குக்கரை திறந்து சோற்றை இரு தட்டுக்களில் அள்ளி வைத்தாள்.

” ஆம்லெட் போடலையா?”மெலிதாய் அதட்டினாள்.

சக்திவேல் அவளை புரியா பார்வை பார்த்தபடி இரண்டு ஆம்லெட்டுகளை போட்டு எடுத்தான்.ரசம் ஊற்றிக் கொண்டு தரையில் அமர்ந்து இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

“நீ வீட்டிற்கு போய் நன்றாக சாப்பிடலாம்.நான் ஏனோ தானாவென எதையோ சமைத்திருக்கிறேன்.எப்படி இருக்கிறது யவனா?”

யவனா சோற்றையள்ளி வாயில் அடைத்துக் கொண்டு,புன்னகைத்தாள்.”ரசம் சூப்பர்.வாசனையே சாப்பிடச் சொல்கிறது.எனக்கு இது கூட செய்யத் தெரியாது.சித்தி எனக்கு எதையுமே சொல்லித் தரவில்லை” இயல்பாக சொல்லி விட்டவளின் முகம் வாட,தண்ணீரை எடுத்து குடித்தாள்.

“எப்படி யவனா பத்து வருடங்களாக உன் சித்தியை பற்றி உணராமல் இருந்தீர்கள்?”

“அம்மா போனதிலிருந்து நானும் ,அப்பாவும் அன்பாய் நாலு வார்த்தை பேச இதமாக முதுகு வருட,யாராவது ஒருவரை எதிர்பார்த்து ஏங்கிப் போயிருந்தோம்.அந்த பாசத்தை சித்தி அள்ளித் தர கண் மூடித்தனமாக அவர்களை நம்பி விட்டோம்”

“உன் சித்தியை போலொரு பெண்ணை நான் சந்தித்ததே இல்லை யவனா.எவ்வளவு பேச்சு சாதுர்யம்!எத்தனை துல்லியமான திட்டமிடல்கள்!” பேசியபடி போனவனை இடைமறித்தாள்.

“என்னைப் பற்றி உங்களிடம் என்னென்ன சொன்னார்கள்?”

“வேண்டாம் யவனா.அதெல்லாம் மறந்துவிடலாம்”சாப்பிட்டு முடித்திருந்த அவளது தட்டையும் எடுத்துக் கொண்டு எழுந்தான்.

” எனது முட்டாள்தனத்தின் அளவை நான் தெரிந்து கொள்ள வேண்டும்.ப்ளீஸ் சொல்லுங்க”தலை சரித்து கெஞ்சலாய் கேட்டவளை பார்த்தபடி தட்டுக்களை தோய்த்தான்.

யவனா சமைத்த பாத்திரங்களை ஒதுக்கி போட்டு அவனருகே அமர்ந்து கொண்டு வாளித் தண்ணீரை சேந்தி தேய்த்த பாத்திரங்களை கழுவியபடி “ப்ளீஸ் சக்தி ” என்றாள்.

“என்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் உன் சித்தியிடம் சொல்லித்தான் அப்பா பெண் கேட்டார்.ஆரம்பத்திலிருந்தே நீ ஒரு சோம்பேறி,படிப்பும் வராது…வீட்டு வேலையும் செய்யமாட்டாய் என்பது போல் மறைமுகமாக உன் சித்தி பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்.அதனால் அம்மாவிற்கு உன் மேல் முதலில் அதிருப்திதான்.அப்பாதான் நம் வீட்டிற்கு வரவும் சரியாகிடும்னு சொல்லி வைத்தார்.நன்றாக வேலை கொடுத்து அவளை பழக்குங்கள்னு…”

“மறைமுகமாக மாமியார் கொடுமைக்கு  தூண்டியிருக்கிறார்கள்…”

“ம்.அப்படித்தான்.அன்று சேலை எடுக்க சென்னை வந்த போது உன் சித்தியிடம்தான் முதலில் போனில் பேசினேன்.அப்போது…”தயங்கி நிறுத்தினான்.

” பரவாயில்லை சொல்லுங்க.அன்றுதானே என்னை போனிலேயே முத்தமிட்டாயென்றீர்கள்?”

” அந்த முத்தம் எதிர்பாராமல் வந்த சத்தமென்று வைஷ்ணவி எனக்கு விளக்கம் கொடுத்து விட்டாள்.உன்னைப் பற்றி நிறைய நெகடிவ்ஸ் அன்று உன் சித்தி சொன்னார்கள்.நீ வம்புக்காரி,புறணி பேசுபவள்…மேலும் சித்தார்த்தையும் உன்னையும் பற்றி கூட ஏதேதோ நினைக்க தோன்றுமாறு…”

யவனா உதட்டை மடித்து கடித்து தன்னைக் கட்டுப்படுத்த சக்திவேல் அவள் தோளில் கை வைத்து அழுத்தினான்.

“அன்று ஜவுளிக் கடையில் உன்னை அருகில் பார்த்ததும் என்னால் உன் சித்தியின் வார்த்தைகள் ஒன்றைக் கூட ஒப்புக் கொள்ள முடியவில்லை யவா.நீ அப்பழுக்கற்ற குழந்தையாக இப்போதுதான் புதிதாக பூமியில் பிறந்து இனித்தான் எனக்கானவளாக வளரப் போகிறவள் போல் தோன்றினாய்.கிட்டதட்ட நாற்பது வயதிற்கு பிறகு இனிமேலேதான் என் வாழ்வு ஆரம்பிக்க போவதாக என் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது”

யவனா முகத்தை மூடிக் கொண்டு விம்ம ஆரம்பிக்க,சக்திவேல் செய்வதறியாது அவளைப் பார்த்தான்.

“நான் நடத்தை சரியில்லாதவள்,குடும்பம் நடத்த தகுதியில்லாதவள்.இப்படித்தானே உங்கள் வீட்டினரிடம் அறிமுகப் படுத்த பட்டிருக்கிறேன்?”

“உன் அறிமுகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.எங்கள் தெளிவு எதுவென்பதனைத்தான் நீ பார்க்க வேண்டும் யவா.உன் சித்தியின் வழிகாட்டல்களா இங்கே நடந்து கொண்டிருக்கின்றன?”

சக்திவேலின் அதட்டலை மீறி யவனா குமுறிக் கொண்டிருக்க,அவன் தன் இரு கைகளையும் விரித்தான்.”துக்கத்தின் போது சாய ஒரு தோழமையான தோள் வேண்டும் யவா.உனக்கு சம்மதமென்றால்…”

சக்திவேல் பேசி முடிக்கும் முன்பே அவன் மார்பில் விழுந்தாள் யவனா.சத்தத்துடன் வாய் திறந்து மூக்குறுஞ்சி விக்கி விக்கி அழத் துவங்கினாள்.சித்தியின் துரோகம் தெரிந்த நாள் முதல் அடக்கி வைத்திருந்த துக்கத்தையெல்லாம் இப்போது கொட்டினாள்.ஆதரவாக அவள் தலை வருடியபடி அணைத்திருந்தான் சக்திவேல்.

“கல்யாணமண்டபத்திலும் சித்தி ஏதேதோ உங்களிடம் மறைமுகமாக சொன்னார்கள்தானே?அன்று சித்தார்த் அத்தான் எதற்காக என்னை தனியாக சந்திக்க வரச் சொன்னார் தெரியுமா?”

சக்திவேல் அவள் உதடுகளின் மேல் ஒற்றை விரல் வைத்தான்.” சித்தார்த் உன் மாமா மகன் யவா.சொந்தங்களான உங்களுக்குள் பேச ஆயிரம் விசயங்கள் இருக்கலாம்.கணவனாகி விட்டதாலேயே அவை எல்லாமே எனக்கும் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லைடா”




“ஆனால் நான் சொன்னால் நீங்க கேட்டுக்கலாம்.என் மாமா என் கல்யாணத்திற்கு தாய்மாமன் சீராக இருக்கன்குடியில் பத்து ஏக்கர் விவசாயநிலம்,ஒரு தென்னந்தோப்பு,ஒரு வீடுன்னு அவர் சொத்துக்களிலிருந்து என் பெயருக்கு மாற்றி எழுதி அதனை அத்தானிடம் கொடுத்து விட்டிருந்தார்.சித்திக்கு தெரியாமல் அதனை என்னிடம் கொடுக்கத்தான் அத்தான் என்னை தனியாக கூப்பிட்டார்”

“சரிதான்.உன் சித்திக்கு மட்டும் அப்போது தெரிந்திருந்தால்,அமெரிக்க பயணத்தையே தள்ளி வைத்து விட்டு இந்த சொத்துக்களை அவர் பெயரில் மாற்றி விட்டுத்தானே கிளம்புவார்!அன்று சித்தார்த் ரொம்பவே தயங்கி நின்று கொண்டிருக்க,நீங்கள் இருவரும் பேசட்டுமென்று நான் விலகி வந்துவிட்டேன்.உன் சித்தி என்னிடம் வந்து என்ன…ஏதென்று குடைந்து கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு இந்த சொத்துக்கள் விசயத்தில் சந்தேகம் இருந்திருக்குமென்று நினைக்கிறேன்”

“ஆமாம்.நான் என் அப்பாவிடம் எதுவும் பேசி விடுவேனோ என்று பயந்துதான் அடுத்த வார பயணத்தை உடனே மாற்றி விட்டார்களென சந்தேகப்படுகிறேன்”

“சந்தேகமெல்லாம் படாதே.அதுதான் நிஜம்.ஒரு வாரத்திற்கு முன்பே திருவனந்தபுரம் போய் தங்கியிருந்து விட்டு பிறகே அமெரிக்கா போயிருக்கிறார்கள்.நான் விசாரித்து விட்டேன்”

சொன்னவனை அண்ணாந்து பார்த்தாள். அவன் மார்பில் சாய்ந்தபடி இப்படி நிமிர்ந்து பார்த்த கோணத்தில் மிக அருகே வித்தியாசமாக தெரிந்தது அவன் முகம்.சரியாக மழிக்கப்படாத தாடையில் ஆங்காங்கே வெள்ளியாய் மின்னின முடிகள்.

சக்திவேலின் வயதை வெளிப்படுத்திய அந்த முடிகளை அவள் பார்ப்பதை உணர்ந்தவன் மெல்ல ஒற்றை விரலால் தாடையை வருடினான்.”இனி உண்மையை மறைப்பதில்லை என முடிவு செய்துவிட்டேன் யவா”

யவனா சட்டென அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.”நான் கிளம்புகிறேன்.எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கிறது “

சட்டென முடிந்து விட்ட அவள் அருகாமையில் சிறிது தடுமாறியபடி” என்ன வேலை ?” என்றான்.

“பேச வேண்டும்.என் சித்தியிடம்…”ஒரு வித தீவிரத்துடன் சொன்னவள்,சக்திவேல் மறுப்பு சொல்லி அழைக்க அழைக்க நடந்துவிட்டாள்.

 




What’s your Reaction?
+1
36
+1
21
+1
2
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Rakshi
Rakshi
1 year ago

Please update the remaining episodes

Bala
Bala
1 year ago

Update plz

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!