Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ -2

 (2)

காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றி விடும் என்பார்கள்.

ஆனால் சிவகாமி மேலும், மேலும் காயங்களை ஏற்படுத்திக் கொண்டே இருந்தாள். இருபது வருஷம் அவளுடன் இருந்த எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்டாலும், நினைவிலிருந்து ஒதுக்க முடியவில்லை.




அப்பாவுக்கும், சிவகாமிக்கும் ஆறு வயசு வித்தியாசம். அவள் பிறந்ததும் தனக்கு விளையாட ஒரு பொம்மை கிடைத்தது என்றுதான் அப்பா மகிழ்ந்தார். ஸ்கூல் நேரம் போக எந்நேரமும் அண்ணன் தோள் மீதுதான். அண்ணா ஊட்டினால்தான் சாப்பிடுவேன். அண்ணாதான் தூங்க வைக்கணும் என்று அண்ணா புராணம்தான்.

வீட்டின் இளவரசி. குல தெய்வம் என்று கொண்டாடினார்கள். அழகு, அறிவு என்று முழுமையான அழகியாக இருந்தாள் சிவகாமி. என் தெய்வமே என்று கொஞ்சுவார் தாத்தா.

தாத்தா சம்பந்தம் உக்கடத்தில் பெரிய கடை வைத்திருந்தார். இரண்டு அடுக்கு கடை. ஒரு தளத்தில் வெள்ளி சாமான்கள். இரண்டாவது தளத்தில் பித்தளை, வெண்கல , சில்வர் சாமான்கள். அருகில் மரச் சாமான்களுக்காக ஒரு கடை கட்டிக் கொண்டிருந்தார். பத்து வயதுப் பெண்ணாக சிவகாமி அங்கு வந்து கடை கல்லாவில் அமர்வாள். அந்த வயசுக்கே சம்பந்தம் தன் மகளுக்கு, கழுத்தில் நெக்லஸ், ஜிமிக்கி, செயின், காலில் தண்டை, கொலுசு என்று போட்டு, பட்டுப்பாவாடை கட்டி சிலை மாதிரி அலங்கரித்துக் கூட்டிப் போவார்.

பள்ளிக் கூடம் தாண்டவில்லை. என் பொண்ணு அழகுக்கு ராஜ குமாரன் வருவான் என்று பெருமை பேசுவார் சம்பந்தம். எல்லோரும் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள். சிவகாமிக்கு பதினஞ்சு வயசு எனும் பொது அவளுக்கு அம்பது பவுன் நகை, பத்து லட்சம் டெபாசிட் இருந்தது. ஏதானும் பெரிய டாக்டர், வெளிநாட்டு மாப்பிள்ளையாகப் பார்ப்பார்கள் என்று அனைவரும் நினைத்த சமயத்தில், கடையில் வேலை பார்த்த ஒரு ஆளுடன் ஓடிப் போனாள் சிவகாமி.

அப்போது அப்பாவுக்கு திருமணம் ஆகியிருந்தது. மெகானிகல் என்ஜீனியரிங் முடித்து வேலை வேண்டாம் என்று மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் ஆரம்பித்தார். கடையின் பெயரே சிவகாமி ஸ்பேர் பார்ட்ஸ். சிவகாமிதான் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி கடையைத் திறந்து வைத்தாள்.




கடையில் வேலைக்கு வந்த எடுபிடி ஆள்தான், செல்வராஜ். ஒரே மாதத்தில் காதல். வளர்ந்து இரண்டாவது மாதம் ஓடிப் போனாள். வீடே கலகலத்துப் போனது. அவமானத்தில் உடைந்து போன சம்பந்தம் மாரடைப்பு வந்து படுத்த படுக்கை ஆனார். சிவகாமியின் தாயார் தூக்கில் தொங்கினார். அப்பாவுக்கு திருமணம் முடிந்து தங்கத்தின் வயிற்றில் அண்ணா விஜய்.

ஓடிப்போன சிவகாமி சும்மா இல்லை. சொத்தில் தன் பங்கைக் கேட்டு கேஸ் போட்டாள். சம்பந்தம் வக்கீல் மூலம் அவளுக்கு எதுவும் இல்லை என்றார். ஆனால் சிவகாமி விடவில்லை. வந்து, வந்து வாசலில் நின்றாள்.

“உன்னைப் பார்க்கவே விரும்பலை. போ என்றார் சம்பந்தம்.

“என் பங்கைக் கொடு. போயிடறேன் என்றாள் சிவகாமி.

“இனி உனக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை. இனி என் முகத்தில் விழிக்க மாட்டேன்னு எழுதிக் கோடு– சம்பந்தம்.

அவர் நினைத்ததற்கு மாறாக சிவகாமி எழுதிக் கொடுத்தாள். சம்பந்தம் அதில் அதிர்ந்து போனார். பெற்ற தகப்பன், அம்மா இறந்து போனது என்று எந்தக் கவலையும் இல்லாமல் சொத்துக்காக எந்த உறவும் இல்லை என்று எழுதிக் கொடுத்த சிவகாமியின் செய்கை அவருக்கு அதிர்ச்சி அழைத்தது.

எல்லா உறவினர்கள், வக்கீல், ஆடிட்டர் வைத்து, தன் எல்லாச் சொத்துக்களையும் சிவகாமிக்கு எழுதிக் கொடுத்தார். தான் சம்பாதித்தது, பூர்வீக சொத்து என்று எதையும் விடவில்லை. குடியிருந்த வீடு, அப்பா ஆரம்பித்த ஸ்பேர் பார்ட்ஸ் கடை மட்டும் அப்பாவுக்கு.

“நீ என்னை மட்டும்தான் கேட்பேன்னு நினைக்கிறேன். அதனால்தான் நீ ஆரம்பித்த கடை மட்டும் உனக்கு என்றார்.




“அதையும் அவளுக்கே கொடுங்கப்பா. நீங்க என் கூட இருந்தாப் போதும்– என்றார் அப்பா. சம்பந்தம் மகனைத் தழுவி கண்ணீர் விட்டார்.

அப்பா, வீட்டையும் சிவகாமிக்குத் தந்தார். சிவகாமி ஸ்பேர் பார்ட்ஸ் கடையையும் அவளுக்கு தந்தார். பணம்தான் முக்கியம்னு நீ நினைச்ச பிறகு எந்தச் சொத்தும் எங்களுக்கு வேண்டாம் என்று அனைத்தையும் கொடுத்து விட்டு கை உதறிக் கொண்டு தாங்கள் இருந்த வீட்டை விட்டு வெளியில் வந்தார்கள். தங்கத்தின் அண்ணா கூப்பிட்டு ஆதரித்தார்.

அப்பாவிடம் ஒரு இரண்டு லட்சம் பணம் மட்டும் இருந்தது. அப்போது விஜய் பிறந்தான். எல்லாச் சொத்துக்களையும் எழுதி வாங்கிக் கொண்டு போன சிவகாமி அவைகளை விற்றாள். தங்கத்தின் அண்ணாவும், அப்பாவும் சேர்ந்து உக்கடம் கடைகளை மீண்டும் விலைக்கு வாங்கினார்கள். பணத்தை வாங்கிக் கொண்டு கோவையை விட்டுப் போனவள்தான். அதன் பிறகு இப்போதுதான் பார்க்கிறார்.

சிவகாமியிடம் கடைகளை வாங்கினவரிடம் அப்பாவே அந்தக் கடைகளை முதலில் லீசுக்கு வாங்கி, பின் வங்கி லோன் போட்டு சொந்தமாக்கிக் கொண்டார். அயராத உழைப்பு. இப்போது உக்கடத்தில் உள்ள வெள்ளி, பித்தளை கடைகளுடம் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், மர சாமான்கள் கடை என்று பெருகியது. விஜய் ஆடிட்டருக்குப் படித்தான். சத்யா பி.ஈ. இருவரும் வங்கி லோன் கட்டுகிறார்கள்.

வீடு தங்கத்தின் அண்ணாவுடையது. அவர் வெளிநாட்டில் இருப்பதால் அந்த வீட்டில் தங்கம் இருக்கிறார்கள். இப்போதுதான் விஜய் நவாவூர் பிரிவில் இடம் வாங்கி இருக்கிறான். சத்யா திருமணம் முடிந்த பிறகு கட்டலாம் என்று ஐடியா. தங்கத்தின் அண்ணா பெண்தான் மைதிலி.

எந்த உறவும் வேண்டாம் என்று விலகி விட்டார் அப்பா. கடைகள் மீண்டும் கைக்கு வந்த பின்தான் சம்பந்தம் இறந்தார். இந்த வீடும் மைதிலிக்கு அவள் அப்பா கொடுத்தது. அனுசரணையும், அன்புமான பெண் மைதிலி. கச்சிதமான குடும்பம். கனிவும், அன்பும் நிறைந்த மனைவி, குழந்தைகள் என்று திருப்தியான வாழ்க்கை.

இனி சிவகாமியுடன் எந்த உறவும் கூடாது என்றுதான் சம்பந்தம் சொன்னார். நடுவில் ஒருமுறை சிவகாமி வந்த போது கூட பார்க்க மறுத்து விட்டார். ஆச்சு இருபது வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டது. விஜய்க்கே இருபத்தி ஆறு.  அமைதியான குளத்தில் கல் எறிய ஏன் வந்திருக்கிறாள் சிவகாமி?

“அண்ணா உன் கோபத்தில் நியாயம் இருக்கு.– சிவகாமி மெல்லப் பேசினாள்.

“நான் அப்படி நடந்திருக்கக் கூடாது. ஆனா அப்போ என் சூழ்நிலை அப்படி? என்னவோ செலவராஜ் மேல காதல். புத்தி கெட்டு ஓடிப் போய்ட்டேன். உங்களை எல்லாம் கஷ்டப் படுத்தினதுக்கு நல்ல தண்டனை கிடைச்சுது எனக்கு.– சிவகாமி அழுதாள்.

“உங்க உறவே வேண்டாம்னு போனேன். ஆனா எனக்கே எந்த உறவும் இல்லாம போச்சு.– முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். அவளை மெதுவாக தட்டிக் கொடுத்தான் கௌதம்.

சத்யா தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். மைதிலி காபி கலந்து கொடுத்தாள்.

“நீ முதல்ல இந்தக் காபி குடி– தங்கம்.




சிவகாமியைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது. மினுமினுவென்று ஜொலித்தவள் கருத்து, இளைத்து, தலை நரைத்து, முன் தலையில் வழுக்கை விழுந்து, கைகளில் கண்ணாடி வளையல், காதில் சின்னத் தோடு. கழுத்தில் நூலாக ஒரு செயின். கண்கள் உள்ளடங்கி, நோயில் விழுந்தவள் போல் இருந்தாள்.

எதோ ஒரு மோகத்தில் செல்வராஜுடன் ஓடிப் போனாளே தவிர, அப்பா தங்களை சேர்த்துக் கொள்வார் என்று நம்பினாள். ஆனால் சம்பந்தம் ஒரேயடியாக ஒதுக்கி விட்டார். தன் சொத்துக்கள் அனைத்தையும் பெண்ணுக்கே எழுதித் தந்து விட்டு கையை, உதறிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார்.

செல்வராஜ் புளுகு மூட்டை, எதற்கும் உதவாத ஆள் என்று அவனுடன் போன பிறகுதான் தெரிந்தது. ஆள் அழகாக சினிமா ஹீரோ மாதிரி இருப்பான். சிவகாமியைத் திருமணம் செய்து கொண்டாள் வசதியாக வாழலாம் என்று திட்டம் போட்டான். ஆனால் குடும்பமே ஒதுக்கி விட்டது.

சொத்துக்களை விற்று பணத்துடன் வந்தவர்களை செல்வராஜ் குடும்பம் இருகை நீட்டி அனைத்துக் கொண்டது. அவனின் இரு தங்கைகளுக்கு திருமணம் செய்தது. அதற்குள் மூத்த மகன் கௌதம் பிறந்தான். கையிருப்பு கரைந்து போனதும் சிவகாமி சுதாரித்துக் கொண்டாள். தன் நகைகளை விற்று தன் பெயரில் டெபாசிட் செய்து கொண்டாள். இருந்த மிச்ச பணத்தையும் டெபாசிட் செய்து வீட்டிலிருந்து, புருஷனுடன் வெளியில் வந்தாள்.

வாழ்க்கை அவளை கடுமையாகச் சோதித்தது. புரட்டிப் போட்டது. எல்லாவற்றையும் இழந்து, மீண்டும் அப்பாவிடம் வந்த போது அந்த வாசல் திறக்கவில்லை. அப்போது ஒரு பெண் குழந்தை வேறு. செல்வராஜை குடி பற்றிக் கொண்டது.

செல்லமாய், இளவரசியாய் வாழ்ந்தவள் கட்டிட கூலி வேலைக்குப் போனாள். கௌதமைப் படிக்க வைத்தாள். அவளின் ஒரே பெண் அம்மா மாதிரியே கூலி ஆளுடன் ஓடிப் போனாள். சென்ற இடத்தில் ஒரு விபத்தில் அவளும், அவள் புருஷனும் இறந்து போனார்கள். குடியால் குடல் வெந்து செல்வராஜ் இறந்து போனான்.

கனவுகள் அனைத்தும் கருகி, கடந்த கால நினைவுகள் மட்டுமே இப்போது அவளிடம் மிச்சம்.

“எல்லாத்தையும் இழந்துட்டேன். உங்களுக்குச் செஞ்ச துரோகத்துக்கு நல்ல தண்டனை கிடைத்தது. உங்க நினைப்பை மட்டும் விட முடியலை.

அப்பா தங்கையின் நிலை பார்த்து கலங்கிப் போயிருந்தார். கண்ணீர் மல்க சிவகாமியைப் பார்த்த படி நின்றார். குடும்பமே கலங்கி விட்டது.

“நான் உங்க ஆதரவைத் தேடி வரலை. உங்க மீண்டும் சிரமப் படுத்த விரும்பலை. உங்களை எல்லாம் ஒரு தடவை பாத்துட்டு, எங்கேயானும் போயிடலாம்னு வந்தேன்.– சிவகாமி அழுதாள்.

“எங்க போப் போறீங்க?-விஜய்.

“ஒரு அநாதை இல்லத்துல என்னை சேர்த்துட்டு, இவன் ஏதானும் துபாய் மாதிரி போய் வேலை தேடலாம்னு சொல்றான்.

“கௌதம் என்ன படிச்சிருக்கே.?

“மாமா மாதிரி. பி.ஈ. மெகானிகல்.




“ம். அதுக்கு அங்க வேலை கிடைக்கும்.

அப்பா எதுவும் பேசவில்லை. தங்கம் முன்னாடி வந்தார்.

“நாங்க இருக்கறப்போ நீ எதுக்கு அநாதை இல்லத்துக்குப் போகணும்? இங்கேயே இரு. கௌதம் முயற்சி செய்யட்டும். அது வரைக்கும் நம்ம கடையைப் பாத்துக்கட்டும். விஜய் இங்கும், அங்கும் அலைஞ்சுகிட்டு இருக்கான். கடைக்கு பக்கத்துல வேஸ்ட் சாமான் போட்டு வச்சிருக்கிற வீடு இருக்கு. அங்க இருந்துக்க. உள்ள வா. குளிச்சு சாப்பிடு.

சிவகாமி கலக்கத்துடன் அப்பாவின் முகம் பார்த்தாள்.

“உள்ள போ– என்றார் அப்பா.




What’s your Reaction?
+1
11
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!