Serial Stories உறவெனும் வானவில்

உறவெனும் வானவில் -17

16

மறுநாள் அலுவலகம் வந்த உடனேயே அவள் முன் வந்து நின்றான் சக்திவேல்.

“நேற்று உன் சித்தியிடம் என்ன பேசினாய்?”

“இங்கே நடப்பதை சொன்னேன்”

“எனக்கு தண்டனை கொடுத்திருப்பதையா?”

“ம்ஹூம்.எனக்கு இங்கே அதிகாரம் கிடைத்திருப்பதை…வந்து சித்திக்கு இங்கே நான் மாமியார்,நாத்தனார்,கணவர் எல்லோரிடமும் கொடுமைப்பட்டு முதல்தாரத்து பிள்ளையை வளர்த்துக் கொண்டு வீட்டிற்குள் கிடக்க வேண்டுமென்ற ஆசை.நிறைவேறாத அவர்கள் ஆசையை போட்டு உடைத்தேன்.ஹையோ அப்போது அவர்கள் மூஞ்சியை பார்க்க வேண்டுமே…இஞ்சி தின்ற குரங்கு போல் மாறிவிட்டது “

கை தட்டிக் குதூகலித்தவளின் காதகளை தன் இரு கைகளாலும் பற்றி ஆட்டினான் சக்திவேல்.”இதென்ன யவா…சின்னப்பிள்ளை போல.உன் சித்தி ரொம்ப ஆபத்தான பெண்.அவர்களிடம் இப்படி எல்லாம் ஒப்பிப்பாயா?”

“அங்கே இருந்து கொண்டு அவர்களால் என்ன செய்ய முடியும் சக்தி?” அவன் கைகளின் ஆட்டலுக்கு காதுகளை கொடுத்தபடி நிமிர்ந்து அவன் முகம் பார்த்து கேட்டாள்.

சக்திவேலின் பார்வை அவள் பார்வையை கோர்த்து நிற்க,கதவை லேசாக தட்டிய சத்தம் கேட்காமல் இருவரும் அப்படியே இருக்க,கதவை தள்ளித் திறந்து உள்ளே வந்த சேர்மராஜ் திகைத்து நின்றார்.

சக்திவேல் அவசரமாக விலக எத்தனிக்க,யவனா அவன் கை பிடித்துக் கொண்டு மெல்ல நிதானமாக தன் காதுகளை விடுவித்துக் கொண்டாள்.சேர்மராஜ் “சாரி” என்று வெளியேறினார்.

கொஞ்சம் சங்கடத்துடன் தானும் வெளியேறப் போன சக்திவேலிடம் “நான் உங்கள் களிமண் வட்டுக்களை பார்க்க வேண்டும்”என்று எழுந்து உடன் நடந்தாள்.

” வழக்கமானது போலத்தானே உள்ளது.இது நான் சொன்னது போல் செய்தீர்களா?” கேட்டபடி திரும்பியவள் சக்திவேலின் கையில் துப்பாக்கி பார்த்ததும் “ஓவ்…நோ” என அலறினாள்.




“நேற்று கத்தி…இன்று துப்பாக்கியா? யாராவது காப்பாற்ற வாருங்களேன்” போலியாக கத்தியவளின் வாயை தன் அகன்ற கை கொண்டு மூடியவன்,”கத்தாதடி” என்க…சுவரடி பந்தாய் திருப்பினாள் “ஏன்டா?”

“ம்.என்னிடம் மட்டும் உடனே பதிலுக்கு பதில்.உன் சித்தியிடம் பத்து வருடங்களாக மௌனப் பாவை”

யவனாவின் முகம் வாடியது.”எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன்”

அவளது வருத்தத்தை ஓரக் கண்ணால் பார்த்தபடி துப்பாக்கியை வட்டுக்கு குறி வைத்து அழுத்தினான் சக்திவேல்.

“நேற்று உன் சித்தி எனக்கு போன் செய்தார்கள்”

படாரென்ற ஓசையுடன் வெடித்த அந்த போலி குண்டு பட்டு பச்சை வண்ணம் சிதறுவதை பரவசமாய் பார்த்தபடி இருந்தவள்,அவனது பேச்சில் திடுக்கிட்டு திரும்பினாள்.

“என்ன சொன்னீர்கள்?”

“உன் சித்தி என் போனில் வீடியோ கால் வந்தார்கள்.உன் ஆசை போல் நீ சொல்வதையெல்லாம் அவர்கள் நம்பவில்லையென்று நினைக்கிறேன்” சக்திவேல் அடுத்த குழியை துப்பாக்கியால் உண்டாக்க இப்போது சிகப்பு நிறம் சிதறியது.

“நான் உண்மையைத்தானே சொன்னேன்.நம்பாமலிருக்க என்ன இருக்கிறது?”

“ம்.ஏதோ இருக்கிறது.அப்படித்தான் அவர்கள் முக பாவம் சொன்னது” அடுத்த வட்டுக்கு குறியை மாற்றினான்.ஊதா நிறம் ரம்யமாய் வெளியேறியது.

“ப்ச்…” என்றபடி அவன் கை துப்பாக்கியை பிடுங்கினாள் ” அப்படி என்னதான் உங்களிடம் பேசினார்கள்?”

யவனா மற்றொரு வட்டுக்கு குறி வைத்தாள்.”எனக்கு மஞ்சள் நிறம் வேண்டும்” என்றாள்.

“சாதாரண பேச்சுத்தான்.மாமியாராக மருமகனிடம் நலம் விசாரித்தார்கள்” என்றபடி அவள் கை பிடித்து குறியை வலப் பக்க வட்டிற்கு மாற்றினான்.” மஞ்சள் நிறம் இங்கே”

“அதில் உங்களுக்கென்ன சந்தேகம்?” யவனா வேகமாக விசையை அழுத்த குண்டு வட்டை தாண்டி எங்கேயோ பின்னால் பறந்து வீணானது.

“உன் குறி தப்பிவிட்டது” சக்திவேல் புன்னகைக்க “நான் தோற்றால் சிரிப்பீர்களா?” யவனா கோபித்தாள்.




“இல்லை உன்னை சரியாக இலக்கை துளைக்க வைப்பேன்.இப்படி…” சொன்னபடி அவளுக்கு பின் நின்று துப்பாக்கி பிடித்திருந்த அவள் இரு கைகள் மேல் தன் கைகளை வைத்து பிடித்து முன்னிருந்த ஒவ்வொரு வட்டாக குறி பார்த்து சுட்டான்.

“இது மஞ்சள்…இது பச்சை…சிகப்பு…நீலம்…ஆரஞ்ச்…”

ஓவ்வொன்றிலும் ஒரு வண்ணம் சிதற குதித்து குதூகலித்தாள் யவனா.”ஹை ரொம்ப அழகா இருக்குங்க.என் ஐடியா சக்சஸ்”

அவள் குதூகல பேச்சிற்கு பக்க மேளமாய் இரு கைதட்டல் ஓசைகள் ஒலித்தன.திரும்பிப் பார்க்க உற்சாக கை தட்டுடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர் சேர்மராஜும்,மாதவனும்.

“உங்க ஐடியா சூப்பர் அண்ணி”

” இடத்தை குறித்து சுடுவதற்கு கூட இந்த வண்ணங்களை உபயோகிக்கலாம்.அருமையான யோசனைம்மா.நிச்சயம் க்ளைன்ட்சுக்கு பிடிக்கும்”மருமகளை பாராட்டிய சேர்மராஜ் மகன் பக்கம் திரும்பி “ஏன் இங்கேயே நிற்கிறாய்?இவற்றையெல்லாம் கில்லனில் அடுக்க ஏற்பாடு செய்.” என்றார்.

சக்திவேல் தலையசைத்து நடக்க மறுப்பு சொல்ல மாமனார் புறம் திரும்பியவளை”வீட்டிற்கு வாம்மா.முக்கியமான விசயம் பேசனும்”என்றார்.

இருந்த சில வேலைகளை முடித்துக் கொண்டு யவனா வீட்டிற்கு போன போது நிர்மலாவின் குரல் அவர்கள் அறைக்குள்தான் என்றாலும் வெளி வரை கொஞ்சம் சத்தமாகவே ஒலித்துக் கொண்டிருந்தது.

“நம்ம பாப்பாவுக்கும் இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லைங்க.நான் இவளைப் பார்ப்பேனா?உங்கள் அண்ணன் குழந்தையை பார்ப்பேனா?நானும் மனுசிதாங்க.என் உணர்ச்சிகளையும் புரிஞ்சுக்கோங்க”

ரூபனை கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டிருந்தாள்.அதனால் நிர்மலாதான் ரூபனையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

ஹால் தொட்டிலுக்குள் ரூபன் படுத்திருந்தான்.தூங்கவில்லை.

விழித்துதான் இருந்தான்.ஆனாலும் தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தான்.அம்மாவும் இல்லை.அப்பாவையும் சில நாட்களாக பார்க்க முடியவில்லை.இந்தக் குழந்தை….! ஒரு மாதிரி விழித்தபடி சோர்வாய் படுத்திருந்த குழந்தையை கண்டதும் ஒரு வித குற்றவுணர்வு உண்டாக தொட்டிலை நெருங்கி குழந்தையை தூக்கினாள்.

கதகதப்பான அணைப்பு கிடைத்ததும் பிள்ளை அவள் தோளை இறுக பற்றினான்.”ம்மா…” என்றான்.

உடலெல்லாம் மயிர் கூச்செரிய அப்படியே நின்று விட்டாள் யவனா.தன் கன்னத்தை அழுத்திய குழந்தையின் குண்டு கன்னத்தில் மெல்ல இதழ் பதித்தாள்.ரூபன் சிணுங்கி சிரித்தான்.யவனா மீண்டும் மீண்டும் குழந்தையை முத்திட்டாள்.அவள் கண்கள் தன்னையறியாமல் கலங்கின.

குழந்தையோடு போய் நிர்மலாவின் அறைக் கதவை தட்டினாள்.”ரூபனை நான் மாடிக்கு என்னோடு அழைத்துப் போகிறேன் நிம்மி.தேடாதீர்கள்” சொல்லிவிட்டு மன நிறைவோடு தன் அறைக்கு ஏறினாள்.




வீட்டிற்கு வந்த சேர்மராஜிடம் கண்களில் நீர் வழிய யவனா குழந்தையை தூக்கிக் கொண்டதை விவரித்தாள் சண்முகசுந்தரி.சேர்மராஜும் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார்.

“நம் சக்தி வாழ்வில் நல்லநேரம் துவங்கி விட்டது சண்மு.இன்று பால் பாயாசம் வை.இதையெல்லாம் கொண்டாடலாம்”

“என்ன கொண்டாட்டம் மாமா?” கேட்டபடி இறங்கி வந்த யவனா ரூபனை சந்தோசமாக கைகளில் சுமந்திருந்தாள்.

“சொல்றேன்மா.உட்கார்.ரூபா இங்கே வா” பேரனை அழைக்க அவன் தலையாட்டி மறுத்து யவனாவிடமே ஒட்டிக் கொண்டான்.

“அட சுட்டிப் பையா!அதற்குள் அம்மாவிடம் ஒட்டிக் கொண்டாயா?” குதூகலமாய் அவர் சிரிக்க,பெருமிதமாய் பிள்ளையை தன் மடியிறுத்திக் கொண்டாள் யவனா.

“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் மாமா” யவனா தயக்கத்துடன் ஆரம்பிக்க,சேர்மராஜ் அட்டகாசமாக சிரித்தார்.

“நீ பேசப் போவது என்னவென்று தெரியும்மா.இன்னும் கொஞ்ச நேரத்தில்…” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் அவசர ப்ரேக்குடன் பைக் நிற்கும் சத்தம் கேட்க இன்னமும் வெடித்து சிரித்தார்.

“உடனே வந்தாயிற்று பயலுக்கு பொறுக்கலை…என்னம்மா நீ கேட்க நினைத்தது இதுதானே ?” சேர்மராஜ் வாசலைக் காட்ட,தோளில் பேக்குடன் வந்து கொண்டிருந்தான் சக்திவேல்

எல்லோரும் சிரிக்க,யவனா திருப்தியுடன் தலையசைக்க,மடியில் குழந்தையுடன் அமர்ந்திருந்த யவனாவை நம்ப முடியாமல் பார்த்திருந்தான் சக்திவேல்.அவன் முகத்தில் பெரிதாக மகிழ்வில்லை.

ரூபன் “அப்பா” எனத் தாவ,மகனை வாங்கிக் கொண்டவன்,”குழந்தையை பார்த்துக் கொள்பவர் வரவில்லையா அம்மா?” என்றான்.

“நான்கு நாட்கள் லீவ் சக்தி” சண்முகசுந்தரி சொல்ல “ம்” உடன் குழந்தையோடு எதிர் சோபாவில் அமர்ந்து கொண்டான்.

“என்னங்க! சக்தியை வீட்டில் தங்க சொல்லிட்டீங்களா?”

“அப்படி நான் சொல்லலைன்னா உன் மருமகள் நம்மை வீட்டை விட்டு அனுப்பினாலும் அனுப்பிடுவா.அதுதான் பயலை வரச் சொல்லிட்டேன்” சேர்மராஜ் கண்களை சிமிட்ட மீண்டும் அனைவரும் சிரித்தனர்.

“யாமினியை இங்கே எல்லோருக்கும் அறிமுகப் படுத்தனும்.இவர்கள் ரிசப்சனை வைத்து விடலாமென்று நினைக்கிறேன்.என்னம்மா சொல்கிறாய்?” மருமகளிடம் அபிப்ராயம் கேட்டார்.

“உங்கள் இஷ்டம் மாமா” என்றபடி எழுந்து ரூபனை வாங்கிக் கொள்ள கை நீட்டியவளிடம் தராமல் தானே பிள்ளையுடன் மாடியேறினான் சக்திவேல்.

அவன் முதுகை முறைத்தபடி பின்னால் ஏறியவள் அறைக்குள் நுழைந்ததும் ” ரிசப்சனுக்கு என் மாமா,அத்தானையும் அழைக்க போகிறேன்” என அறிவித்தாள்.

“செய்” என்றவனின் குரலில் உணர்ச்சி துடைக்கப்பட்டிருந்தது.

“அவர்கள் வந்தார்களானால் இங்கே எனது வாழ்க்கை லட்சணம் அவர்களுக்கு தெரிந்து விடும்”மிரட்டல் போல் சொன்னாள்.

” என்றாவது தெரியத்தானே வேண்டும்.தெரியப்படுத்தி விடு” சலனமின்றி சொல்லி விட்டு பால்கனியில் போய் நின்று மகனுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தவனின் முதுகில் ஓங்கி குத்தலாமென வந்த உணர்வை அடைக்கிக் கொண்டாள்.

“போடா” கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டு போர்வையை இழுத்து மூடி படுத்துக் கொண்டாள்.

சொன்னாளே தவிர யாமினி சங்கரபாண்டியை ரிசப்சனுக்கு அழைக்கவில்லை.ஆனால் அவர் வந்து நின்றார்.சும்மா இல்லை…தனது ஊர் ஆட்கள் பத்து பேரை துணைக்கு அழைத்துக் கொண்டு,கையில் ஆயுதங்களுடன் வந்து இறங்கினார்.

” என் அக்கா மகளை ஏமாற்றி கல்யாணம் முடித்து வந்து விட்டீர்கள்.மரியாதையாக அவளை என்னுடன் அனுப்பி விடுங்கள்.அவளுக்கு என் மகனை மணம் முடித்து வைக்க போகிறேன் ” என்றார் அரிவாளை சுழற்றியபடி.




What’s your Reaction?
+1
54
+1
29
+1
1
+1
4
+1
1
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Bala
Bala
1 year ago

16 episode missing

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!