Short Stories sirukathai

மீனு (சிறுகதை)

மீனு (சிறுகதை)

                ( விஜி முருகநாதன்)

நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த மீனுவைப் பார்க்கப் பார்க்க “பக்”கென்றிருந்தது விஜிக்கு..

கடந்த பத்து நாட்களாகத்தான் இப்படி.. எதிலேயும் ஒரு ஒட்டாத தனம். கேட்ட கேள்விக்கு ஆமாம்/இல்லை என்பது தவிர வேறு பதிலில்லை..

ஸ்கூல் விட்டு  வரும் போதே அப்படி ஒரு குதியலும் சந்தோஷமாகத்தான் வருவாள்.. வேனை விட்டு இறங்கியதுமே தயாராகக் காத்திருக்கும் இவளைப் பார்த்ததுமே “ஹாய் மம்மி”என்று கூச்சலிடுவாள்..

உள்ளே நுழைந்ததுமே பாட்டி பரிமளத்தைத்தான் தேடுவாள்..

அவர் ஹாலில் இருந்தாலும் அவர் ரூமில் இருந்தாலும்  “ஹாய் க்ராண்ட்மாம்”என்று கூப்பிட்டு வந்தால் தான் திருப்தி அவளுக்கு..

என்னடி!தஸ் புஸ்ன்னு..அழகாப் பாட்டி ன்னு கூப்பிடு என்று கடிந்து கொண்டாலும் பேத்தி இங்கிலீஸ் ல  அப்படிக் கூப்பிடுவதில் மகாப்பெருமை அவருக்கு..

அதேபோல் தான்  மாலை வேலை முடிந்து ஈஸ்வரன் வீட்டுக்கு வந்ததும்  ஓடிப் போய் டாடி என்று கத்திக் கொண்டே கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்குவாள்..

அப்படி உற்சாகப் பந்தாக துள்ளிக் குதிக்கும் பெண் இப்படி உம்மாணமூஞ்சியாக …பெருமூச்சொன்று எழுந்தது..விஜிக்கு

வேன் வந்த சத்தம் கேட்டு பேத்தி வந்து விட்டதை அறிந்து எட்டிப் பார்த்த பாட்டி..”ஏண்டி.. எப்ப வந்த.?”என்றார்..

ஒன்றும் பதிலில்லை  மீனுவிடம்..வெடுக்கென்ற தலை திருப்பல் மட்டுமே..

அவளின் தலை திருப்பலைப் பார்த்த பரிமளம்..,”சும்மா அழிச்சாட்டியம் பண்ணாத..உன் ஆட்டத்துக்கெல்லாம் ஆட இங்க ஆள் கிடையாது..”என்றார்..

அதற்கும் எந்த பதிலும் சொல்லாத மீனு..”ம்மா..பூஸ்ட் கொடு..”என்றாள் மீனுவிடம்..

“ஏய்..மீனு..ரவாலட்டு பிடிச்சு வச்சுருக்கேன்..சாப்பிடு..”என்றார்..பரிமளம்..

அம்மா..பூஸ்ட் கொடுன்னு சொன்னேன் என்றாள் மீண்டும் அழுத்தமாக மீனு..

இதற்கு மேல் நின்றால் அந்த பூஸ்ட்டையும் குடிக்க மாட்டாள்..என்று அவசரமாக சமையலறைக்குள் நுழைந்தாள் விஜி..

எப்போதும் மீனுவின் சத்தத்தால்  கலகலவென்று இருக்கும் வீடு  இப்போது வெறிச்சோடியது..

மாலை ஈஸ்வர் வந்ததும்  என்ன மீனு..என்ன பண்ற..?என்றார்..

ஹோம்வொர்க் என்று சுருக்கமாக பதில் வந்தது மீனுவிடம் இருந்து ..பாரு..டாடி உனக்குப் பிடித்த ஹனி கேக் வாங்கிட்டு வந்திருக்கேன்..என்றார் ஈஸ்வர்..

ஒருகணம் கண்கள் பளிச்சிட்டாலும் எதுவும் பேசாமல் மீண்டும் தலைகுனிந்து எழுதத் தொடங்கி விட்டாள்..

மனதின் வேதனையை முகம் காட்ட மேலே எதுவும் பேசாமல் உள்ளே சென்றார் ஈஸ்வர்..

பார்த்துக் கொண்டிருந்த விஜிக்கு கண்ணீர் கரை கட்டியது.

பாவம் !ஈஸ்வர் என்ன செய்ய முடியும்..?பெற்ற அவளால் தான் என்ன செய்ய முடியும்..?

அந்த வீட்டில் எல்லாவற்றின் முடிவும் பரிமளத்துடையதுதான்..அப்பா இல்லாமல் சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்த அம்மா தான் முதல் தெய்வம் ஈஸ்வருக்கு..அதை இம்மியளவும் மாற்றாத நல்ல மருமகளாகவே இதுவரை இருந்து வந்தாள் விஜியும்..

பரிமளமும் அவளைப் பெற்ற தாய் போலத்தான் பார்த்து வந்தார்..

மீனுவும் பாட்டி செல்லம்தான்..

காலையில் ஸ்கூலுக்கு போக பின்னல் போடுவதில் தொடங்கி மாலை ஸ்கூல் விட்டு வந்ததும் அவளுக்குப் பிடித்த டிபனை ஊட்டிவிட்டு என்று எல்லாவற்றுக்கும் பாட்டி வேண்டும் அவளுக்கு.. பெற்றவர்கள் கூட இரண்டாம் பட்சம்தான்.. பல நாட்கள் இரவுப் படுக்கை பாட்டியின் மீது கால் போட்டபடிதான்..

இதெல்லாம் பத்து நாட்கள் முன்பு வரை..மீனுவின் ஸ்கூலிருந்து அந்த சர்க்குலர் வரும் வரை..

மீனு இப்போது நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாம் வகுப்பு போகிறாள்.. இதுவரை அவள் ஸ்கூலில் சிறப்பு வகுப்புகள் எதுவும் இல்லை.. ஐந்தாம் வகுப்பில் இருந்து தொடங்கி இருந்தார்கள்.. ஸ்கூல் விட்டதும் “அரைமணி நேரம் சிறப்பு வகுப்புகள் வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும்.. கராத்தே பரதநாட்டியம், வீணை,ஸ்போக்கன் இங்கிலீஷ் இன்னும் பிற “விருப்பப்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.. பீஸ் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” . .என்ற விபரத்தை மீனு சொன்னதுமே ..”அட .பரவாயில்லையே..பரத நாட்டியத்திற்கென்று தனிக்கிளாஸ் போக வேண்டாம்.. ஸ்கூல்யே சேர்ந்து கொள்..”என்றார் பரிமளம்..

“போங்க.. பாட்டி.. நான் கராத்தே தான் சேருவேன்..”என்றாள் மீனு..

கராத்தேவா..!ஏண்டி.. பொம்மணாட்டிப் புள்ள யாராவது ஆ..ஊ..ன்னு கத்தி சண்டை போடுவாங்களா..?!”மரியாதையா நான் சொல்ற மாதிரி பரதநாட்டியம் கத்துக்கற வழியைப் பாரு..என்றவர்..

அப்போதே ஈஸ்வர்_விஜியை அழைத்துச் சொல்லி விட்டார்.. அவள் அடம்பிடிக்கறான்னு எங்கேயாவது கராத்தே ல சேர்த்தீங்கன்னா..?அப்புறம் தெரியும் சேதி..!என்றார் மிரட்டும் குரலில்..

ஈஸ்வரும் மீனுவிடம் பரத நாட்டியம் சேர்ந்துக்க கண்ணா..பாட்டி ஆசைப்படறா..என்று விட்டார்..

அன்றிலிருந்து தொடங்கியது பாட்டிக்கும் பேத்திக்குமான யுத்தம்..

முகம் தூக்கும் மகளிடமும் ,கொஞ்சமும் தன் நிலையில் இருந்து இறங்கி வராத பாட்டியிடமும் மாட்டிக்கொண்டு இருதலைக் கொள்ளி எறும்பானார்கள்.. ஈஸ்வரும், விஜியும்..

முதல் நான்கு நாட்களில் மீனுவின் முகம் தூக்கலை விளையாட்டாக நினைத்தவர்கள் நாள் செல்ல செல்ல அது சிறிதும் குறையாததில் மிகுந்த சங்கடத்துக்குள்ளானர்கள்..

அன்றிரவு வழக்கம் போல் பாட்டியின் அறைக்குப் போகாமல் தன் அறையில் சுருண்டு படுத்திருந்த மகளைப் பார்த்தவளின் அடிவயிற்றில் இருந்து ஆயாசப் பெருமூச்சொன்று எழுந்தது..

தங்கள் அறைக்குள் வந்தவளிடம் ,ஈஸ்வர் ..”தூங்கிட்டாளா..?என்றார்..

இன்னும் இல்லைங்க.. என்றாள் விஜி..

ஊம்..என்றபடி வருத்தத்துடன் படுத்தவர்..”நாளைக்கு எலெக்டீரிசியன் வருவான்.. பார்த்து எல்லா வேலைகளையும் பண்ணிக் கொள்.. “என்றார்..

சரிங்க.. என்றவளிடம் ..மீண்டும் பேரு..மூர்த்தி ன்னு சொல்லுவான் என்றார்..

மூர்த்தி யா..? தனக்குள் உறைந்தாள் விஜி..

“ஏய்.. விஜி..அம்மா  கடை வரைக்கும் போய்ட்டு வர்ரேன்.. மூர்த்தி மாமா ராத்திரி ஊருக்குப் போறார்.. உப்புமா செய்ய ரவை ஆகிப் போச்சு.. வாங்கிட்டு வந்துர்ரேன்..நீ எழுதிட்டு இரு..என்றபடி..கூடத்தில் உட்கார்ந்திருந்து புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு இருந்த மூர்த்தி யிடம்..




“செத்த இருங்கோ..கடை வரைக்கும் போய்ட்டு வந்துர்ரேன்.. எதாச்சும் வேணும்னா விஜிகிட்ட கேளுங்கோ..”என்றாள்..

எது இருக்கோ..அதை சாப்பிட்டுக்கறேன்.. எதுக்கு சிரமம்..?என்றார் மாமா..

அது சரி..வராதவங்க வந்துருக்கீங்க..நானென்ன..பருப்பும், பாயாசமுமா செய்யறேன்.. எதோ எங்களால முடிஞ்சது..?என்றபடியே நடந்து விட்டாள்..

அவள் தலை மறைந்ததும் பாவாடைக்கடியில் மறைத்து வைத்திருந்த மாங்காய்ப் பத்தையை எடுத்து பேப்பரில் இருந்த உப்பு மிளகாய்ப் பொடியுடன் சேர்த்துத் தின்றபடியே புத்தகங்களைப் பிரித்தாள் விஜி..

அப்போது தான் அவள் அருகில் வந்து அமர்ந்தார் மூர்த்தி மாமா..

என்ன பண்றடா ..?எழுதறியா..என்றார்..

ஆமாம் மாமா..மாங்கா சாப்பிடறீங்களா..?என்றாள்..

வேண்டாம்.. நீ சாப்பிடு..சமர்த்துக்குட்டி என்றபடியே அவள் கன்னங்களை வருடத் தொடங்கியவரின் கை அப்படியே அவளின் கழுத்து, முதுகு என்று கடைசியாக முன்புறம் வந்து மார்புகளை வருடத் தொடங்கியது..

அனிச்சை செயலாக விஜியின் கை அவரது கையைத் டக் கென்று தட்டி விடவே,தடுமாறியவரின் முகம் அவள் வைத்திருந்த உப்பு மிளகாய் ப் பொடியில் புதைந்தது..

“ஆ”என்று கத்திக் கொண்டே தடுமாறியபடியே பாத்ரூம் நோக்கி ஓடியவர்.. முகம் கழுவிக் கொண்டு வரவும் அம்மா கடையில் இருந்து வரவும் சரியாக இருந்தது..

என்ன..?என்ன..?என்று விசாரித்தவளிடம் எதையோ சொல்லி மழுப்பினார்..

அந்தப் புரியாத வயதிலும் அவரின் தொடுகை எதோ கம்பளிப் பூச்சி ஊர்வது போன்ற அருவருப்பை பின்னாட்களில் கொடுத்து அவள் உடம்பைச் சிலிர்க்கச் செய்யும்..

இப்போதும் மூர்த்தி என்ற பெயர் கொடுத்த அந்த நினைவில் அருவருப்புடன் உடல் சிலிர்த்தவள்..,எழுந்து பாத்ரூம் போனவள் ..திரும்பி வரும்போது மீனுவின் அறையில் எட்டிப் பார்த்தாள்..

அதுவரை தூங்காமல் போர்வைக்குள் நெளிந்து கொண்டு இருந்த மீனுவின் அருகமர்ந்து அவளின் தலை கோதத் தொடங்கினாள்..

கண் விழித்துப் பார்த்த மகளின் முகத்தைப் பார்த்த விஜி உறுதியுடன் சொன்னாள்..”நீ கராத்தேவிலேயே சேர்ந்துக்க..பாட்டிகிட்ட நான் பேசறேன்..”….




What’s your Reaction?
+1
2
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!