Entertainment Short Stories sirukathai

“செவ்வந்தீ…!” (சிறுகதை)




“செவ்வந்தீ…!”

( டெய்சி மாறன்)

“பொன்னி… பொன்னி…”

“………”

“யம்மா…யம்ம்மா… பொன்னி எங்கம்மா…?”  என்று கேட்டுக்கொண்டே கூடத்துக்கு வந்தாள் செவ்வந்தி.

“அங்க தான் எங்கியாவது  இருப்பா பாரு…” அடுக்களையில் பாத்திரத்தை உருட்டிக் கொண்டே மகளுக்கு பதில் கூறினாள் கோவிந்தம்மாள்.

“ஏய் செவ்வந்தி நான் இங்கே இருக்கேன். ஆமா…காலங்காத்தால எதுக்கு என்னயே தேடுறே…?” பள்ளிக்கூட பையிலிருந்த காகித குப்பைகளை கீழே  கொட்டிக் கொண்டே அலட்சியத்துடன் கேட்டாள் பொன்னி.

“அடியே… உங்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்… இப்படி பெத்தவள பேர சொல்லி கூப்பிடாத…பேரு சொல்லி  கூப்பிடாதேன்னா   கேக்குறீயா…? பதினாறு  வயசு குமரி மாதிரியா நடந்துக்கிறே? வாயில  சூடு போட்டா தான் உனக்கெல்லாமா புத்தி வரும்…” என்று உரக்க கத்திக் கொடுத்துக்கொண்டே சமையல் அறையிலிருந்து வெளியில் வந்த பாட்டி கோவிந்தம்மாளுக்கு பயந்துக்கொண்டு வாசல் பக்கம்  ஓடிய பொன்னி வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த காளியப்பன் மீது மோதி நின்றாள். அவனிடமிருந்து வந்த  பீடியின் நெடி, அவளை முகம் சுளிக்கவைத்தது.

காளியப்பனை  பார்த்தவுடன் உள்ளே நின்றிருந்த இரண்டு பேரின் முகமும் வெளிறிப்போனது. காரணம் காளியப்பன் வந்தாலே ஏதோ எழவு செய்தியாகத்தான் இருக்கும். சுத்துப்பட்டு எட்டு கிராமத்துல யார் வீட்டுல எழவு விழுந்தாலும் சேதி  அனுப்புவதற்கு காளியப்பனை தான் தேடுவார்கள். இது அனைவருக்கும் தெரிந்த சங்கதிதான்.

“யாரோ மண்டையை போட்டுட்டாங்க போலருக்கு அதான் காலங்காத்தாலே வந்திருக்கான்.” என்று கோவிந்தம்மாள் வாய்க்குள் முனகி கொண்டாள்.

“ஏலே…காளியப்பா இந்நேரத்துக்கு வந்திருக்கீயே என்னடா சமாச்சாரம்…?” ஏற்றத்தோடு தொடங்கிய கோவிந்தம்மாளின் குரல் சற்று பிசிறு தட்டி நின்றது.

“ஆத்தா… பயப்படாத துக்க சேதி இல்லே…உம்மோட மருமவன் செம்மங்குடிக்காரரு  இருக்காரே…! அவரு  சாவக் கெடக்காரு. ரெண்டு நாளா பச்ச தண்ணிக்கூட தொண்டயில எறங்கலையாம். செம்மங்குடி ஜனங்க கடைசியா உன் மகளை வந்து பாத்துட்டு போக சொல்றாங்க. அதுதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். இன்னிக்கி ராத்திரி வரைக்கும் கூட தாங்காதுன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க. உசுரோட இருக்கும்போதே கடசியா ஒரு எட்டு போய் பாத்துபுட்டு வந்துடுங்க  ஆத்தா…”

கோவிந்தமாளும் செவ்வந்தியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

அங்கு சற்று நேரம் அமைதி நிலவியது.

“சரி ஆத்தா… அப்ப நான் கிளம்பட்டா…?”

என்றவன் இடத்தை விட்டு நகராமல் தலையை சொரிந்துக்கொண்டு  நின்றான். அவன் தயக்கத்தைப் புரிந்து கொண்ட கோவிந்தம்மாள்  முந்தானையில் முடிந்து  வைத்திருந்த நூறு  ரூபாயை நடுங்கும்  தன் கைகளால் அவிழ்த்து நீட்டினாள்.

காளியப்பன் ரூபாயை வாங்கி சட்டை பாக்கெட்டில் சொருகிக் கொண்டு வாசலில் நின்ற  சைக்கிளில் ஏறி சிட்டாய் பறந்தான்.

காளியப்பனின் தலை மறைந்ததும் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள் கோவிந்தம்மாள்.

“அந்த  பட்டுக்கெடப்பானுக்கு  உன்னை கட்டி கொடுத்து கடம முடிஞ்சிடுச்சுன்னு உங்க அப்பன் போய் சேர்ந்துட்டார். நான் தாலியறுத்தது  பத்தாதுன்னு இந்த சின்ன  வயசுல நீயிம் தாலியறுத்து மூலியாகணும்னு.., ஓ தலையில் எழுதி இருக்கு… நான் என்ன பண்ணுவேன் யாரு கிட்ட போயி இந்த கொடுமையை சொல்லுவேன்…” என்று கோவிந்தம்மாளின்  அழு  குரல் உச்சத்தை தொட அக்கம் பக்கத்து வீட்டினர்  எல்லாரும் ஒன்றுக்கூடினார்கள்.

“எல்லாரும் கொஞ்சம் வழி விடுங்க…யம்மா கோவிந்தம்மா காளியப்ப விஷயத்தை சொன்னான். எதுக்கு அழுவுற அழாதே… பழச எல்லாம் நினக்கிற  நேரமா இது? உம்  மொவளையும் பேத்தியையும் கூட்டிட்டு போயி கடைசியா அந்த ஆளு மொகத்தை பார்த்துட்டு வருவீயா! அதை வுட்டுட்டு ஊர கூட்டி ஒப்பாரி வைக்கிற ஒப்பாரி.. சரி சரி அந்த ஆளுக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆவுறத்துக்குள்ள சட்டுபுட்டுன்னு மூணு பேரும் கிளம்புங்க..,”

கூடியிருந்த ஊர் மக்களுக்கு நடுவில்  நின்றிருந்த அந்த பெரியவர் சொல்லவும் மற்றவர்கள் அவர் பேச்சை  ஆமோதிப்பது போல் தலையசைத்தார்கள்.

கோவிந்தம்மாள்  கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டு  மகள் செவ்வந்தியை பார்த்தாள். செவ்வந்தி அடுக்களை ஓரமாய் இருந்த மர அலமாரியில் மேல்  இறுக்கத்தோடு சாய்ந்து நின்றிருந்தாள். அவள் கண்கள் மோட்டுவளையை வெறித்துக் கொண்டிருந்தது. மகள் பொன்னி தாயின் அருகில் குத்துக்காலிட்டு தரையில் அமர்ந்திருந்தாள்.

 




“மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி கோவிந்தம்மா..நான் போய் என் மவனை  அனுப்பி வைக்கிறேன் அவனோட ஆட்டோவுல போய் பார்த்துட்டு வாங்க…” என்றார் அந்தப் பெரியவர்,

“சரி சரி  வழியை விடுங்க ஐயாதான் போறத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு இல்லே! அவங்க மூனு பேரும் போய் பார்த்துட்டு வரட்டும். யாராவது கூட போறதா இருந்தா போயிட்டு வாங்க…” என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவரை தொடர்ந்து வெளியேறினார் ஒரு வெள்ளை சட்டைக்காரர்.

அரை மணி நேரத்திற்கு பிறகு…

கழற்றி வைத்த தாலியை தேடி எடுத்து கழுத்தில் மாட்டினாள் செவ்வந்தி. சபையறிய கழற்ற  வேண்டுமே அதுக்காக.

மகளையும்  பேத்தியையும் எதிர்வீட்டு சாந்திக்கூட ஆட்டோவில் அனுப்பி வைத்த கோவிந்தம்மா தான் மட்டும் வரமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

தாயின் மனநிலையை புரிந்து கொண்ட செவ்வந்தி  ஒருவித   இறுக்கத்துடன் பொன்னியோடு ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

பொன்னியின் முகத்தில் ஈயாடவில்லை. ஆயிரந்தா இருந்தாலும் பெத்தவனாச்சே பாசம் இல்லாமலா இருக்கும்? என்று மனது நினைத்தாலும் பழைய சம்பவங்கள் கண்முன் தோன்றி, செவ்வந்தியின் உடலை நடுங்கச் செய்தது.   நடுக்கத்தை மறைத்தபடி நிமிர்ந்து அமர்ந்த செவ்வந்தியிடம்,

“அம்மா எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கும்மா நாம திரும்பி பாட்டி வீட்டுக்கே போயிடலாம்மா…” சொன்ன மகளை ஆறுதலோடு அணைத்துக் கொண்டாள்.

“அம்மா இருக்கேன்லே எதுக்கு பயப்படுறே பொன்னி…? தைரியமா இருக்கனும் புரியுதா?”

ஆட்டோ ஊர் எல்லையைத்  தொட்ட போது ஐயனார்கோயில் கண்ணில் பட்டது. பதினேழு அடி ஐயனார் சிலையை பார்த்தப்போது முன்புப்போல பக்தி தோன்றவில்லை. கோவிலுக்கு எதிரில் இருந்த ஆல மரத்தை பார்த்தாள். அன்று சின்னதாக இருந்த ஆலமரம் தற்போது விழுதுகள் விட்டு அகலமாய் படர்ந்திருந்தது. பதிமூனு வருஷத்திற்கு முன்பு இதே இடத்தில்  நடந்த பழைய விஷயம் நினைவுக்கு வர நெஞ்சில் ஈட்டி இறங்கியது போல் ஒரு வித வலியினை  உணர்ந்தாள்.

பதிமூனு வருஷம் கழிச்சி இந்த ஊருக்கு வரேன். அதுவும் சாவ  கிடைக்கிற அந்த மனுஷன பார்க்குறதுக்கு. வேற ஒரு சமயமா இருந்திருந்தால்  வர முடியாதுன்னு அடிச்சு  சொல்லி இருப்பேன். கடைசியா ஒரே ஒரு கடமை மிச்சம் இருக்கு  அதுக்காக தான் மறுப்பு சொல்லாம வரேன். என்று நினைத்தவளுக்கு  மனம் சில வருடங்கள் பின்னோக்கி சென்றது.

செவ்வந்தியின் அப்பா சின்னையா, பக்கத்து ஊர்ல பெரிய பணக்காரரான நாற்பது  வயசு இசக்கிமுத்துவுக்கு பதினெட்டு வயதேயான  தன் மூத்த பொண்ணு செவ்வந்தியை கட்டிக் கொடுக்க முன்வந்தார்.

செவ்வந்தியின் அம்மா கோவிந்தம்மாளும் ஊர் மக்களும் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும்,

இசக்கிமுத்துவை கட்டிக்கிட்டா தான் என் மக மகாராணி மாதிரி வாழ முடியும்… இசக்கிமுத்து என் கடனை எல்லாம் அடைச்சு எனக்கு ரெண்டு ஏக்கர் நெலம் எழுதிக் கொடுக்கிறதா  சொல்லியிருக்கார். அதுமட்டுமல்ல இது என் குடும்ப விஷயம் இதுல ஊர்க்காரங்க யாரும் தலையிடாதீங்க…” என்று கட்டன் ரைட்டா பேசி ஊர்மக்களின் வாயை அடைத்துவிட்டார்.

அப்பாவோட கடனும் குடும்ப கஷ்டத்தையும் உணர்ந்த செவ்வந்தி மறுப்பேதும் சொல்லவில்லை.

குடும்பத்தின் வறுமை, தனக்கு கீழ் இருக்கும் இரண்டு தங்கைகளின் எதிர்காலம், இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு   மறுபேச்சு பேசாமல் மணமேடையில் ஏறினாள் செவ்வந்தி.

வாக்கப் பட்டு போன பிறகுதான் புருஷனோட குணம் என்னன்னு புரிஞ்சது. நின்னா குத்தம் நடந்தா குத்தன்னு  எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடிச்சி, குத்திக்காட்டி சந்தேகத்தோடு பேசத் தொடங்கினான் இசக்கிமுத்து.

கல்யாணமான புதுசுல இப்படித்தான் இருக்கும் போகப் போக எல்லாம் சரியாயிடும்னு தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு அந்த பதினெட்டு வயதிலும்  மனப்பக்குவத்தோடு குடும்பத்தை நடத்தினாள்  செவ்வந்தி.

ஆனா அந்த மனுஷனோட குணம் கொஞ்சங்கூட மாறவில்லை. போகப்போக சந்தேகம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. வயசு வித்யாசம் பார்க்காம யாரைப் பார்த்தாலும் மனைவியோட இணைத்து  அசிங்க அசிங்கமாய் பேச தொடங்கினார். எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு கல்லாய் இருந்த  செவ்வந்திக்கு மறு வருடம்  பொன்னி பிறந்தாள். குழந்தையின் முகத்தைப்பார்த்தாவது மாறுவாருன்னு பார்த்தாள் அதுவும்  நடக்கவே இல்லை. மனசு உடைந்துப்போன செவ்வந்தி. சரி விட்டுப்போன பாடத்தையாவது படிப்போம் என்று சிந்தனையை படிப்பில் திருப்பினாள்.

பத்தாவதுல கணக்கு பாடத்தில் பெயிலான செவ்வந்திக்கு திரும்பவும் படிக்கணும்னு ஆசை வந்துச்சு. பக்கத்து வீட்டுல பன்னிரண்டாவது  படிக்கும் பையன் சங்கர்  கிட்ட புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பிச்சாள். அக்கா அக்கான்னு அவனும்  ஆர்வத்துடன் இவளுக்கு கணக்குச் சொல்லிக் கொடுத்தான். இதை பார்த்த இசக்கிமுத்து செவ்வந்தியை அந்த பையனோட சேர்த்து வச்சு அசிங்கமா பேசினார். எதிர்த்து கேள்வி கேட்ட செவ்வந்தியை காலால் எட்டி உதைத்து தள்ளினார். சுவற்றில் மோதி மண்டை பிளந்து ரத்தம் வழிந்தது.

எதிர்வீட்டு கனகத்தை  கூட்டிட்டு போய் ஆஸ்பத்திரில கட்டு கட்டிட்டு வந்தாள் செவ்வந்தி. அக்கம் பக்கத்துல தெரிஞ்சா ஆளாளுக்கு வாயிக்கு வந்ததெல்லாம் பேசுவாங்கன்னு தன்னுடைய கணவன் அடித்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் மறைத்தாள்.

எப்படியோ பக்கத்து வீட்டு பையன் சொல்லிக் கொடுத்ததை வச்சு அம்மா வீட்டுக்கு போறேன்னு போய் பரீட்சை எழுதிட்டு வந்தாள்.  கணக்கு பாடத்துல பாஸ்  பண்ணினாள். ஆனாலும்  பாஸ்சான விஷயத்தை  புருஷங்கிட்ட  சொல்லவே இல்லை.

“அக்கா  அந்த வீடா…?” ஆட்டோ டிரைவரின் குரல் கேட்டு சுயநினைவுக்கு திரும்பினாள் செவ்வந்தி.

“ம்ம்…..”

மகள் பொன்னியோடு  ஆட்டோவில் இருந்து இறங்கியவள் வீட்டை  சுற்றி கூட்டம் கூடி இருப்பதை பார்த்துவிட்டு தயங்கி நின்றாள்.




இவளை பார்த்த அந்த ஊர் மக்கள் கண் கலங்கியபடி வழிவிட்டனர். வீட்டின் உள்ளே நுழைந்தாள் செவ்வந்தி.

“மலையாள வைத்தியனை…மறக்காமக் கூட்டிவந்தோம்

மலையாள வைத்தியனும்…மருந்தறிய மாட்டலையே!

சீமை வைத்தியனை…சீக்கிரமாக் கூட்டிவந்தோம்

சீமை வைத்தியனும்….சீக்கறிய மாட்டலையே!”  ஒரு முதியவள் ஒப்பாரி வைத்து அழுதாள்.

இசக்கிமுத்துவின் பார்வை நிலைகுத்தி கிடந்தது.

“ஐயோ…இப்பதான் உயிர் பிரிந்தது. நீ அய்யனார் கோயிலை தாண்டி இருப்பேன்னு நினைக்கிறேன். அந்த நேரத்தில்தான் உயிர் பிரிந்தது. மனுஷன்  கடைசி வரைக்கும் கட்டளை பொண்டாட்டியையும் பெத்த புள்ளையையும்  பார்க்காமலேயே போய் சேர்ந்துட்டாரே…” என்ற யாரோ ஒருவரின் குரல் அவள் காதுகளில் இறங்கி மன இறுக்கத்தை குறைத்து சிறையிருப்பை அகற்றியது.

எதுவும் பேசாமல்  திரும்பியவளுக்கு வாசலில் அந்த ஊர் பிரசிடெண்ட் அமர்ந்திருப்பது கண்ணில்பட்டது.

சட்டென்று அவர் அருகில் சென்ற செவ்வந்தி, தன் கழுத்தில் இருந்த தாலியை கழற்றினாள்.

“ஐயா என்ன பொறுத்த வரைக்கும் இந்த மனுஷனுக்கு பதிமூனு வருஷத்துக்கு முன்னாடியே செய்ய வேண்டிய ஈம சடங்கெல்லாம் என் மனசுக்குள்ளேயே செஞ்சுட்டேன். இப்ப நான் இங்க வந்தது எனக்கு சேதி சொல்லி விட்ட இந்த ஊர் மக்களுக்கு மரியாதை கொடுத்துதான். இனிமேலும் இந்த தாலி என் கழுத்துல இருக்கிறதுல அர்த்தமில்லை. இத உங்ககிட்ட கொடுத்துடுறேன் நீங்க ஒப்படைக்க வேண்டியவங்க கிட்ட ஒப்படைச்சிடுங்கள் நன்றி.”

அவரிடம் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு வந்த வழியே நடந்தாள்.  தெருவில் நடந்தவளின் தலையில் காக்கா ஒன்று எச்சமிட்டு பறந்தது. வீட்டுக்கு போனவுடன் தலை முழுக வேண்டும் என்று எண்ணியவள் தலையை உயர்த்திப் பார்த்தபோது தூரத்தில் ஐயனார் சிலை புது பொலிவோடு காட்சியளித்தது. மகளை ஆட்டோவில் அமர வைத்து விட்டு அய்யனார் கோயிலை நோக்கி நடந்தாள்.

“செவ்வந்தி செவ்வந்தி…. செவ்வந்தி…”

குரல் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தாள் அங்கே சங்கரின் அம்மா ஓடி வந்தாள்.

“செவ்வந்தி எப்படிம்மா இருக்க நல்லா இருக்கியா? என் புள்ள உன் மேல ரொம்ப பாசமா இருந்தான்… அக்கா அக்கான்னு உயிரையே விடுவான் அவனுக்கு இந்த உலகத்துல வாழக் கொடுத்து வைக்கவில்லையே… செவ்வந்தி நீ எப்படி இருக்க நல்லா இருக்கியா…?”

“இப்பதான் நிம்மதியா இருக்கேன் மா என் தம்பி சங்கர் எங்கிருந்தாவது நம்மள ஆசீர்வதிச்சுகிட்டு  இருப்பான் கவலைப்படாதீங்க…” என்றவளுக்கு  துக்கம் தொண்டையை அடைத்தது அன்று நடந்த நிகழ்ச்சி கண்முன்னால் வந்தது.

பொன்னிக்கு  மூன்று வயது முடிந்தபின் பக்கத்து ஊர்ல இருக்கிற இங்கிலீஷ் மீடியம் பள்ளிக்கூடத்துல மகளுக்கு அப்ளிகேஷன் வாங்கிட்டு திரும்பிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.

அய்யனார் கோயில் அருகே வந்தபோது,

“அக்கா… அக்கா… நில்லுங்க.” என்று குரல் கேட்டு திரும்பி பார்த்தாள். பின்னாடி சங்கர் நின்றிருந்தான்.

“என்ன தம்பி எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா வெளியூர்ல படிக்கிறதா கேள்விப்பட்டேன்…?”

“நல்லா இருக்கேன் அக்கா வெளியூர் காலேஜ்ல பைனல் இயர் படிக்கிறேங்கா…” என்றான் சங்கர்.

“அப்படியா ரொம்ப சந்தோஷம்…” என்று இருவரும் பேசிக் கொண்டிருந்ததை தூரத்தில் வந்து கொண்டிருந்த இசக்கிமுத்து பார்த்துவிட்டார். ஓட்டமும் நடையுமாக வந்து மனைவியின் தலைமுடியை கொத்தாக பற்றி இழுத்து அடித்து உதைத்து சித்ரவதை பண்ணி அசிங்கமாக பேசினார்.

இதை பார்த்த சங்கர் தடுக்க முயன்றபோது “என்னுடைய பொண்டாட்டிக்கும் உனக்கும் கள்ளத்தொடர்பு இருக்கு என்கிற விஷயத்தை இந்த ஊர் மக்கள் கிட்ட சொல்ல போறேன்னு” சொன்னார்.




தவறான உறவு இருக்கு என்று அப்பட்டமாக கத்தியும் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, சங்கரின் முகம் கோபத்தின் உச்சிக்கு சென்றது. கண்கள் சிவக்க இசக்கிமுத்துவை தாக்கினான் சங்கர்.

“கூடப் பிறந்த அக்கா மாதிரி பழகின என்னப்போய் தப்பா சொல்லிட்டியே  உன்னை சும்மா விடமாட்டேன்..” என்று கூறிக்கொண்டே  பக்கத்துல இருந்த கல்லை  எடுத்து அவரை அடிக்க ஆரம்பித்தான். அவரும் திருப்பி தாக்க முயல,  அங்கிருந்தவர்கள்  இருவரையும்,  சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.

செவ்வந்தி இரவெல்லாம் தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தாள். பாவம் சங்கர் நல்ல பையன். எல்லாருக்கும் முன்னாடியும் அவனை எங்கூட சேர்த்து வச்சு  இப்படி தப்பா பேசிட்டாரே?  என்று அதையே  நினைத்து இரவெல்லாம் தூக்கம் வரவில்லை.

விடிந்தவுடன்  பக்கத்து வீட்டில் ஒரே அழுகை சத்தம் கேட்டது.  என்ன ஏதுன்னு வாரி சுருட்டிக் கொண்டு ஓடிப்போய் பார்த்தால், நேற்று நடந்த சண்டையிலே அவமானம் தாங்க முடியாம சங்கர் தூக்கில் தொங்கிடான்.

“ஐயோ… என் பிள்ளைக்கு கிரகம் சரி இல்லைன்னு ஜோசியக்காரன் சொன்னானே அவன் சொன்ன மாதிரியே இப்படி ஆயிடுச்சே…” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுத சங்கரின் அம்மாவை கட்டிக் கொண்டு அழுதாள் செவ்வந்தி.

செவ்வந்தியின் தலைமுடியை கொத்தாக பற்றி தன் வீட்டிற்கு இழுத்து வந்தார் இசக்கிமுத்து.

“ஏய் செவ்வந்தி கள்ளக்காதலன்  போயிட்டானேன்னு அழறீயா…?” என்று ஒரு அசிங்கமான அபிநயத்துடன் அந்த கெட்ட வார்த்தையை திரும்பவும் கூறினார்.

அடுத்த நிமிடமே கையை ஓங்கி விட்டாள் செவ்வந்தி.

“இனி ஒரு வார்த்தை பேசினே… நான் சும்மா இருக்க மாட்டேன். நானும் பத்தினிதான். என்னாலேயும் உன்னையும் இந்த ஊரையும் சேர்த்து எரிக்க முடியும் தெரியுமா?. பொறுத்து பொறுத்து போறேன்னு என்னை சாதாரணமா எடை போடாதே.., கட்டுனவனுக்கு  மரியாதை கொடுக்கனும்னு பொறுமையா போய்கிட்டு இருக்கேன் அவ்வளவுதான். இனிமேலும் அப்படி இருக்க மாட்டேன். உன் மேல கையை வைக்க எவ்வளவு நேரமாகும்? கை வெக்காம  போறேனேன்னு சந்தோஷப்படு. இனி நீ செத்தா தான் உம்முகத்துல  முழிப்பேன் இது சத்தியம்.”

என்று அன்று தன் பொண்ணை கூட்டிட்டு  வந்தவள்தான் அதுக்கப்புறம் பதிமூன்று வருடத்திற்கு பிறகு  இப்பதான் அந்த ஊருக்குள் வருகிறாள்.

செவ்வந்தி ஐயனார் கோயில் அருகே வந்தபோது மழை இருட்டிக் கொண்டு வந்தது. தென்திசையில் இடி சத்தம் காதைப் பிளந்தது. கோவிலை சுற்றி இருந்த மரங்கள் எல்லாம் தலைவிரி கோலமாய் ஆடிக்கொண்டிருந்தது.

இதே இடத்தில்தான் என்னை அடித்து முகத்தில் காரி உமிழ்ந்து ‘ தவறான வார்த்தை சொல்லி திட்டினான் இசக்கிமுத்து. என்று நினைத்த மாத்திரம்  இசக்கிமுத்துவின் முகம்  விகாரமாய்  கண்முன்னால் தோன்றி மறைந்தது.

ஊருக்கெல்லாம் காவல் தெய்வன்னு சொல்ற இந்த அய்யனாரு அன்று எனக்கு நடந்த கொடுமைகளை பார்த்துகிட்டு சும்மா தானே இருந்தாரு என்ற கோபத்தோடு அய்யனார் சிலையை ஏறிட்டுப் பார்த்தாள்.

கருமேகங்கள் சூழ்ந்து இருந்தபோதும் ஐயனார் முகம் சாந்தமாக இருந்தது.  திடீரென்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. பெய்த மழை அவளை முழுமையாக நனைத்தது. அசைவற்று அதே இடத்தில் நின்றாள். மழைநீரில் நெற்றி பொட்டு கரைந்து நிலத்தில் ஓடியது. செவ்வந்தியின் முகத்தில் அமைதி நிலவியது. அய்யனார் ஆசீர்வதிப்பதாய் உணர்ந்தாள்.

                                                                              முற்றும்

                                                                                                     -டெய்சி மாறன்

 




What’s your Reaction?
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!