Entertainment Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்-9

9

முகத்தில் வெதுவெதுப்பான சூட்டினை உணர்ந்தவளுக்கு தூக்கம் கலைய ஆரம்பித்தது. யாரது முகத்திற்கு ஒத்தடம் கொடுப்பது …சோம்பலாக சுருண்டு கொண்டவள் முகத்தில் வந்து விழுந்த சூரிய ஒளியில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த பின்புதான் முதல் நாள் நடந்த சம்பவங்கள் வரிசையாக நினைவிற்குள் வந்தன. வேகமாக குனிந்து தன் கழுத்தில் கிடந்த திருமாங்கல்ய செயினை எடுத்துப் பார்த்தாள்.

 ஜீவிதா உனக்கு திருமணம் ஆகி விட்டதடி… உன் குழந்தைக்கு இப்போது வயது மூன்று. தனக்குத்தானே நினைவுறுத்தியபடி அருகில் தேடினாள், ஈசனை காணவில்லை.முன்தின இரவு விட்டால் காரிலேயே சுருண்டு விடுவாள் போல் இருந்தவளை எழுப்பி கூட்டி வந்து இந்த அறைக்குள் ஹரிஹரன் விட்ட அடுத்த நிமிடமே ஈசனை தன் அருகில் படுக்க வைத்து கொண்டு கண்கள் சுழல தூங்கிப் போனது நினைவு வந்தது.

 போனில் மணி பார்த்து 9 என காட்ட வேகமாக எழுந்தாள். இவ்வளவு நேரமாகவா தூங்கி விட்டேன்? அவசரமாக பெட்டியை திறந்து உடைகளை எடுத்த போது அறையை நோட்டமிட்டாள். மிகவும் பழங்கால அறை. சுவர்களில் இருந்து தரை வரை எல்லாமே மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. 

எந்த காலத்து வீடு இது? விழிகளை சுழற்றியபடி பாத்ரூமிற்குள் நுழைந்தவள் ஆச்சரியமானாள். பாத்ரூம் டைல்ஸ்சும்,கிரானைட்டும்,வெஸ்டர்ன் டாய்லட்டும்,பாத்டப்புமாக நாகரிகமாக பளபளத்தது. அட பரவாயில்லையே மெச்சியபடி இதமான சுடு தண்ணீர் குளியலை முடித்து வெளியே வந்தவளின் உடல் சொடுக்கு எடுத்தாற் போல் இலகுவாக இருப்பதை உணர்ந்தாள்.

மாடியில் இருந்து கீழ் இறங்கி வர ஹால்போல் இருந்த பெரிய அமைப்பில் ஒரு ஓரமாகக் கிடந்த மர மேஜையின் முன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹரிஹரனும் ஈசனும் தென்பட்டனர். ஈசனை டேபிள் மேல் அமர்த்திக் கொண்டு தட்டில் இருந்த இட்லியை அவன் வாயில் திணிக்க பாடுபட்டுக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.

“அந்த குருவி பாரு கண்ணா! அதோ சன் வருது பாரு!” அவன் வாய்க்குள் ஒரு துண்டு இட்லியை தள்ள முயல குழந்தையோ, வீட்டிற்குள் அங்கும் இங்குமாக பறந்து திரிந்த குருவிகளை அண்ணாந்து பார்த்துவிட்டு “ஐ” எனக் கைதட்டி குதூகலித்து விட்டு உணவிற்கு மட்டும் வாயை இறுக்கமாக திறக்காமல் வைத்துக் கொண்டிருந்தான். 

அடுத்த கவள ஊட்டலின் போது எழுந்து நின்று டேபிளின் இந்த முனைக்கும் அந்த முனைக்கும் 

ஓடலானான். மேலே பறக்கும் குருவிகளை ஓடி ஓடி பார்க்கிறானாம். ஹரிஹரனும் கையில் இருந்த இட்லியோடு அவனுக்கு போட்டியாக டேபிளை சுற்றி ஓடிக்கொண்டிருந்தான்.

 டேபிளின் பக்கவாட்டில் இருந்த ஜன்னலில் மரத்திலேயே ஜாலி போன்ற அமைப்பு மேலிருந்து கீழ் வரை இருந்தது காற்றையும் வெளிச்சத்தையும் மிக தாராளமாக வீட்டிற்குள் அனுப்பிய அந்த அமைப்பின் வழியாக சூரிய ஒளி தாராளமாக ஜாலியின் சித்திரத்தை ஒத்து உள்ளே தரை மீது படிந்து விழுந்திருக்க,அவ்வெளிச்சத்திற்கு இடையே அப்பாவும் மகனுமாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது ஒரு கவிதை போல் ஜீவிதாவிற்கு பட்டது.

 இதழ்கள் தாமாக புன்னகைக்க, அப்படியே சிறிது நேரம் அவர்களை பார்த்தபடி நின்றாள். முதல் இட்லியை குத்திக் குதறி போட்ட பிறகு இரண்டாவது இட்லியில் முதல் வாயை பிட்டு எடுத்துக்கொண்டு மகனின் பின் ஓடிய ஹரிஹரன், டைனிங் டேபிள் சேரில் முட்டி இடித்து விட “ஆ” என்று குனிந்தான்.

 ஜீவிதா அவசரமாக மாடியில் இருந்து இறங்கி வந்தாள். “என்ன ஆச்சு?” குனிந்து அவன் காலை கவனித்தாள். 

“ஹப்பா வந்து விட்டாயா? இந்தா நீயாச்சு,உன் மகனாச்சு! ஒரு வாய் வாங்கவில்லை. அரை மணி நேரமாக போராடிக் கொண்டிருக்கிறேன்” சலித்தபடி அந்தப் பக்கம் ஓட முயன்ற குழந்தையை பிடித்து தூக்கி ஜீவிதா பக்கம் தள்ளினான்.

 மெத்தென மேலே விழுந்த குழந்தையை ஆசையுடன் அள்ளி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு “ஏன்டா தம்பு,ஏன் இப்படி பண்றீங்க?” கொஞ்சினாள்.

“ம்மா… ப்பா… உஸு…ஆஆஆ”  நாக்கை வெளியே நீட்டி காண்பித்தான். 

“கார சட்னி தொட்டு கொடுத்தீங்களா?” முறைத்தாள்.

“எதூ… இது கார சட்னியா?” ஹரிஹரன் காட்டிய ஈசனின் வெள்ளித்தட்டின் ஓரம் சீனி,நாட்டுச்சர்க்கரை. வெல்லத்தூள்,ஜாம் என்று இனிப்பின் அத்தனை வகைகளும் அமர்ந்திருந்தன.

” இதில் எதைத் தொட்டுக் கொடுத்தாலும் உன் மகனுக்கு காரமாம். அப்போதிருந்து என்னை அலையவிட்டுக் கொண்டிருக்கிறான்” சலித்தபடி சேரை இழுத்து போட்டு அமர்ந்தான்.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி “தம்பு அம்மா உனக்கு சுகர் தொட்டு தரவா?” கேட்டபடி நெய் ஜாடியிலிருந்து ஒரு ஸ்பூன் நெய் எடுத்து வைத்து அதனை தொட்டு இட்லியை வாயில் திணித்தாள்.

“காரமில்லைல்ல தம்பு?”

“ம்ஹூம்” தலையாட்டி மறுத்து சமத்தாக வாயில் வாங்கிக் கொள்ளும் மகனை செல்ல முறைப்பாய் பார்த்தான்.இடையிடையே லேசாக சாம்பார் தொட்ட இட்லியும் பிள்ளை அறியாமல் உள் தள்ளப்படுவதை ஆச்சரியமாக பார்த்தவன்…

” எப்பா இது தனி பி.எச்.டி போலவே” முணுமுணுத்தான்.

பிள்ளைக்கு ஊட்டியபடி ஓரக் கண்ணால் அவனை ஆராய்ந்தாள். “நீங்க இன்னும் குளிக்கல போல?” 

“ஆமாம் இந்த குட்டி சார் காலைலயே எழுந்து என்னையும் எழுப்பி விட்டுட்டாரு. நீயாவது தூங்கட்டும்னு இவனை தூக்கிக்கிட்டு வெளியில் வந்துட்டேன்.நாங்க வாக்கிங் போயிட்டு வந்து, இவனை குளிப்பாட்டி இதோ இப்போ சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தேன். நான் எங்கு குளிக்க..?” சலித்துக கொண்டவனை பார்த்து சிரித்தான் ஈசன்.

“மா ப்பா பேட் பாய்.டர்ட்டி டர்ட்டி…பாத் பண்ணல.நாம ஸ்மெல்… ஸ்மெல்…” என்றபடி அவள் கழுத்தைக் கட்டி கழுத்தடியில் வாசம் பிடித்தான்.

குளிப்பதற்கு அடம் பிடிப்பவனை குளித்தால்தான் ஸ்மெல்லா இருக்கலாம் என்று இப்படி வாசம் பிடித்து பழக்கி வைத்திருந்தாள் ஜீவிதா.

“அடேய்…” ஜீவிதாவின் மடியிலிருந்த குழந்தையின் தலையில் செல்லமாய் கொட்டினான், “உன்னால் தான்டா நான் டர்ட்டி.நீ மட்டும் ஸ்மெல்லோ?” குனிந்து குழந்தையின் கழுத்தடியில் முத்தமிட்டவன்,அப்படியே திரும்பி சட்டென ஜீவிதாவின் கழுத்தடியில் மூச்சை இழுத்து வாசம் பிடித்தான். 

“ஆமாண்டா தம்பு. ரொம்ப ஸ்மெல்.அப்படியே தூக்கிப் போய் வானத்தில் வீசுது.எனக்கு பறப்பது போல் இருக்குது”

ஈசன் கை தட்டி சிரிக்க ஜீவிதா அதிர்ந்து அசையாமல் அப்படியே

அமர்ந்து விட்டாள். “என்னடா தம்பு உன் அம்மா பொம்மை மாதிரி அசையாமல் இருக்கிறாங்க?என்னவாம்?” அவன் கையின் மூன்று விரல்கள் குழந்தையின் கன்னம் வருட,சுண்டுவிரல் அவள் கன்னத்தை தொட்டு தடவியது.

 உணர்ச்சிக் கொந்தளிப்பில் சமைந்து அமர்ந்திருந்த ஜீவிதாவிற்கு அவனது அழைப்பில் மேலும் அதிர்ச்சி. குழந்தைக்கு ஈசன் என்று பெயர் வைத்தவன் எப்போதும் அப்படியே அழைப்பான்.இவளது செல்ல அழைப்பான தம்பி…தம்பு போன்ற சொற்களை தவிர்த்து விடுவான்.இப்போது அவனாகவே தம்பு என்று அழைக்க ஜீவிதாவின் மனதோடு உடலும் நெகிழ்ந்தது.

திரு திருவென விழித்தபடி அமர்ந்திருந்தவளை பார்த்து கண்களை சிமிட்டினான் “நானும் போய் ஸ்மெல் ஆகிட்டு வருகிறேன். நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க” 

இரண்டு நிமிடம் வரை அப்படியே அமர்ந்திருந்து மெல்ல தன்னை மீட்டுக் கொண்டவள், ஈசனுக்கு சூடான இட்லிக்காக அடுப்படிக்குள் நுழைந்தாள்.சரசரவென வாசல் பக்கம் இருந்து உள்ளே யாரோ நகர்வது தெரிய யோசனையுடன் நின்று கவனித்தாள்.

ஒரு பெண் அடுப்பருகே செல்வது தெரிய ,சமையல் பெண்தான் போலும் என்று எண்ணியபடி உள்ளே வந்து “இரண்டு இட்லி சூடாக வேண்டும்” என்றபடி அந்தப் பெண்ணை அளவிட்டாள். 

“ம்” என்ற முணுமுணுப்புடன் வேலையில் இறங்கிய பெண்ணிற்கு இள வயது தான்.இருபத்தியைந்திற்குள்தான் வயது இருக்கும்.

“உங்கள் பெயர் என்ன?”

” மல்லிகா “

திரும்பியே பாராமல் பேசிய பெண்ணின் அருகே போய் நின்றாள். “என் பெயர் ஜீவிதா” 





 

அவள் தெரியும் என்பதாக தலையசைத்தாள். “நேற்று இரவு நிறைய அலுப்பு.அதனால் தூங்கி விட்டேன். இங்கே எந்த விபரமும் எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்கிறீர்களா மல்லிகா?” 

ஓரக் கண்ணால் ஒரு முறை இவளை பார்த்துவிட்டு “இங்கே சார் சொல்வதுதான் எல்லாமே.அவர் சொல்வார், நாங்கள் செய்வோம்.உங்களுக்கும் அவரே எல்லா விபரங்களும் சொல்வார்” என்றாள். 

 “சரிதான்” என்றபடி அவள் கொடுத்த இட்லியை ஈசனுக்கு ஊட்ட தொடங்கினாள்.

அது எப்படி வீட்டிற்குள்ளேயே பறவைகள் வருகின்றன யோசனையுடன் ,ஈசனோடு சேர்ந்து அண்ணாந்து வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தாள்.

“அதோ மேலே இருக்கும் சாளரங்கள் வழியாக பறவைகள் உள்ளே வரும். முன்பு இந்த வீட்டில் இருந்தவர்கள் சாளரங்களை அடைத்து வைத்திருந்தனர். எங்கள் கைக்கு பொறுப்பு வந்தவுடன் நான் செய்த முதல் வேலை அவற்றை திறந்து விட்டதுதான்.பறவைகள் சுதந்திரமாக வீட்டிற்குள் இப்படி திரிவது எனக்கு பிடித்திருக்கிறது” என்றபடி முன்னால் வந்து நின்ற ஹரிஹரன் குளித்து புத்துணர்வோடு இருந்தான்.

“எனக்கும் பிடித்திருக்கிறது” ஆவலுடன் பறவைகளை பார்த்தபடி சொன்னவள் முன்னால் வெகு நெருங்கி நின்றவனின் மேல் மோதியிருந்தாள்.உடல் முழுவதும் மயிர் கூச்செரிய வேகமாக நகர்ந்து நின்றாள்.

 “தம்பு நானும் ஸ்மெல் ஸ்மெல்” என்றபடி குழந்தையை தூக்கி போட்டு பிடித்தவன்,நகர்ந்து நின்றவளை நெருங்கி உரசியபடி “செக் செய்து பார்க்கிறாயா?”என்றான் ரகசிய குரலில்.

“இந்த வீடு வித்தியாசமாக இருக்கிறதே” ஜீவிதா இப்போது அந்த சன்னல் ஜாலிகளின் அமைப்பை ரசிக்க சென்றிருந்தாள்.கைகளின் நடுக்கத்தை மறைக்க ஜாலிகளின் பூக்களை இறுக பற்றிக் கொண்டாள்.

 “இது ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டிய வீடு.உனக்கு தெரியுமல்லவா இந்த எஸ்டேட் பிரிட்டிஷார் காலத்தில் அவர்களே உண்டாக்கியது. உலகிலேயே மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் இதுவும் ஒன்று. அதோ அங்கே பார்…” இயல்பாக அவள் தோள் பற்றிக் கொண்டு  ஜன்னல் வழியாக தூரத்து பள்ளத்தாக்கை காட்டினான்.

செட் போன்ற பழங்கால அமைப்பிலிருந்த கட்டிடத்தை காட்டி, “அதுதான் தேயிலை தொழிற்சாலை. அதில் இருக்கும் இயந்திரங்கள் எதையுமே இன்று வரை மாற்றவில்லை. பிரிட்டிஷார் உருவாக்கிய அதே பழைய எந்திரங்கள்தான் இன்னமும் இருக்கிறது. இங்கே தேயிலை பதப்படுத்தம் முறை கூட அதே ஆங்கிலேயர் காலத்து முறைகள்தான். அதனால்தான் கொழுக்குமலை தேநீருக்கு தனி ருசி இருக்கும். உலக அளவில் இந்த தேனீருக்கு தனி மவுசு உண்டு” ஹரிஹரன் விழிகள் மின்ன பேசுவதை தலை சரித்து கேட்டுக் கொண்டாள்.

இது போல் பேச,பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் இருந்தாற் போலிருந்த அவனது தவிப்பை அவளால் உணர முடிந்தது. செய்கைகளை,வெற்றிகளை பகிர தோதான தோளற்ற நிலையும் பெருங் கொடுமைதானே! அம்மா நான் ஜெயிச்சுட்டேன் என ஓடி வரும் குழந்தையை ஹரிகரனில் கண்டாள்.இப்போது ஈசனுக்கும்,ஹரிகரனுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை அவளுக்கு.

“இந்த வீடும் அப்போது கட்டியதுதானோ?” கண்களால் வீட்டை சுற்றியபடி இன்னமும் அவனுக்கு பேச்சு சுதந்திரம் வழங்கினாள்.  

“வீடு உனக்கு பிடித்திருக்கிறதா ஜீவி? அதோ அங்கே மரங்கள் நெருக்கமாக இருக்கிறதே,அதன் பின்னால் ஒரு பெரிய  வீட்டினை இந்த எஸ்டேட் எங்கள் கைக்கு வந்த பிறகு எங்கள் குடும்பத்தினர் கட்டி வைத்திருக்கிறார்கள். இந்த வீடு ஆங்கிலேயர்கள் கட்டிய வீடு. எனக்கு அந்த நவீன பங்களாவை விட சிறியதாக இருந்தாலும் இந்த மர வீடு மிகவும் பிடித்துப் போனது. அதனால் இங்கேயே தங்க ஆரம்பித்து விட்டேன். நமது வசதிக்கு ஏற்ப கொஞ்சம் ஆல்டர் செய்து கொண்டேன்.நாளை உனக்கு அந்த பங்களாவை கூட்டிப் போய் காட்டுகிறேன். ஒருவேளை உனக்கு அங்கே இருக்க பிடித்ததென்றால் நாம் அங்கேயே மாறிக் கொள்ளலாம்”

“வேண்டாம். எனக்கும் இந்த வீடு ரொம்பவே பிடித்திருக்கிறது” ஜீவிதா சொல்லவும் ஹரிஹரனின் முகம் மலர்ந்தது.

” நன்றி ஜீவி.பின்னாளில் ஒரு வேளை நமது பிள்ளைகளுக்கு அந்த வீடு தான் பிடித்ததென்றால் நாம் அங்கே மாறிக் கொள்ளலாம். சரியா?” என்றான்.

சரிதான் என தலையசைத்து விட்டு ஒரு மாதிரி விழித்து நின்றாள்.இப்போது என்ன சொன்னான்? எதற்கு தலையசைத்தேன்? அவளது திணறலை பார்த்து ஹரிஹரனுக்கு சிரிப்பு வர குனிந்து அவள் நெற்றி மீது நெற்றியால் முட்டினான். “என்ன யோசனை எங்கே பறக்கிறது?” சரசமாக வினவினான். 





“ஒன்றுமில்லை விடுங்கள்” தோள் அணைத்திருந்த கைகளை விளக்கி விட்டு நகர்ந்தாள். புயல் சுழற்றி வீசும் தூசுகளாய் அவள் மனம் அடர்ந்து கிடந்தது.

மிகப்பெரிய வீடு இல்லை அது. விதானம் மகா உயரமாய் இருந்தது, வீட்டை பிரம்மாண்டமாய் காட்டியது. தரையில் இருந்து சுவர் வரை எல்லாமே மரங்களில் செய்யப்பட்டிருந்தது. நீளமான பெரிய ஹால்,வலப்புறம் மூன்று அறைகள். அவை அடுப்படி,சாமான்கள அறை போக மற்றொன்றை ஆஃபீஸ் அறையாக ஹரிஹரன் உபயோகித்துக் கொண்டிருந்தான். மாடியிலும் சிறிய ஹாலோடு இதே மூன்று அறைகள்.இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருக்க, ஒரு அறையை இவர்கள் படுக்கை அறையாக உபயோகித்துக் கொண்டிருந்தனர்.

“அந்த இரண்டு ரூமுடைய சாவி வேண்டும்” ஹரிஹரனிடம் கேட்டாள். லேப்டாப்பை மடித்து எடுத்து சார்ஜரை சுருட்டி எல்லாவற்றையும் பேக்கிற்குள் திணித்துக் கொண்டிருந்தவன், அவசரமாக “எதற்கு?” என்றான்.

“சும்மாதான். பூட்டியே கிடந்தால் தூசாகத்தானே இருக்கும்? சுத்தம் செய்யலாம் என்று தான். அத்தோடு ஒரு அறையை ஈசனுக்கு விளையாட்டு அறையாக மாற்ற நினைக்கிறேன்”

 ஒன்றும் சொல்லாமல் வெறுமனே”ம்” என்றவன், “அதோ அந்த கப்போர்ட்டில் சாவி இருக்கிறது” கைகாட்டி விட்டு, வேகமாக ஓடி வந்த குழந்தையை அள்ளி முத்தமிட்டு  “ஈசா அப்பா கிளம்பிட்டேன். பாய்” படிகளில் படபடவென இறங்கி போனான்.

” கொஞ்ச நாட்களாக எந்த வேலைகளும் சரியாக பார்க்கவில்லை ஜீவி.இப்போது நிறைய வேலைகள் இருக்கிறது. நீயும் ஈசனும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள். வேலைகளை கொஞ்சம் குறைந்ததும் உங்களை வெளியே கூட்டிப் போகிறேன்” சொல்லிவிட்டு வந்த அடுத்த நாளே வேலைகளுக்குள் நுழைந்து கொண்டான்.

அது சரி என்னை கரெக்ட் பண்ண இங்கே வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தாய், இப்போது அதையும் சேர்த்து பார்க்க தானே வேண்டும், நினைத்தபடி தலையாட்டினாள். அவன் சொன்னது போலவே மிக அதிக வேலைகள் தான் போலும்.

காலை உணவை உண்டபின் எட்டு மணிக்கு கிளம்பி விடுபவன் இரவு அநேகமாக இவர்கள் இருவரும் தூங்கிய பிறகே வந்து படுத்தான். அரை குறை தூக்கத்தில் அவன் தங்கள் அருகே வந்து படுப்பதை உணர்வாள் ஜீவிதா. மறுபக்கம் திரும்பி படுத்து உறக்கத்தை தொடர்வாள். 

“அப்பா அம்மா அறை.ரொம்ப எதையும் கலைக்க வேண்டாம்” ஹரிகரன் சொல்லிவிட்டுப் போன அறைக்கதவை திறந்தாள் ஜீவிதா. 




What’s your Reaction?
+1
54
+1
34
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!