Serial Stories எங்கே நானென்று தேடட்டும் என்னை

எங்கே நானென்று தேடட்டும் என்னை – 19

19.தேடல்

மகளின் புதுக் கோலம் நரசிங்க தேவனுக்கு நெகிழ்வையும் கர்வத்தையும் அச்சத்தையும் தந்தது. ஒரு நல்ல தகப்பனுக்கான நியாயமான உணர்வுகளே அவை.

ஒரு பெண்குழந்தை குடும்பத்துக்கு தேவதை யெனில் அவள் வளர வளர கண்ணுக்குத் தெரியாத சிறகுகளும் கூடவே வளர்கின்றன. ஒரு தந்தையின் பரிவான கவனிப்பில்தான் அந்த சிறகுகளுக்கு பலமும் வனப்பும் செழிப்பும் கிடைக்கின்றன. நந்தினிதேவி பிறந்து படிப்படியாக வளர அவளை அப்படி பாதுகாத்தார் நரசிங்கதேவன். அஞ்சுவதற்கும் அஞ்சாமைக்குமான நூலிழை வேறுபாட்டை உரமிட்டு வளர்த்தார். தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்குமான முரண்பாட்டை சொல்லி திருத்தினார். நந்தினிதேவி சிறப்பான வார்ப்பாக வளர்ந்தாள்.

இன்று பெண்ணாக மலர்ந்தபோது அழகு விகசிக்கவே செய்தது.பாட்டியும் தாத்தாவும் பெருமிதத்தோடு வீடு வந்து ஆசிர்வாதம் செய்தார்கள். வீடு வரை விசேஷம் செய்ய நாள் குறித்து ஆவன செய்வதில் மூழ்கினார்கள்.

பாட்டியும் மதுமதியும் பக்கலில் படுத்துக் கொள்ள நந்தினி உறங்க ஆரம்பித்தாள்.




அடுத்த அறையில் நரசிங்க தேவன் தாளமாட்டாத உணர்வுக்குவியலாக மனைவி ஸ்ரீலஷ்மியின் அருகில் படுத்திருந்தார். இருவருமே உடலுரச அருகருகே சயனித்திருந்தாலும் கூடல் இல்லா வருடலில் உடல் தழுவலில் மனம் சங்கமித்து சந்தோஷத் தேனை விசிறிக் கொண்டிருந்தது. நிறைவான. அமைதியில் திளைத்துக் கிடந்தது மனசு. முகத்துக்கருகில் வெகு அருகில் விழிமூடிக் கிடந்த புருஷனைப்பார்க்கையில் ஸ்ரீலஷ்மி  பூரித்துப் போனாள். எப்பேர்ப்பட்ட ஆண்மகன். சின்னமுகச்சுளிப்போ கடும் சொற்களோ பேசாதவன். மனைவிக்கு மனைவியின் பெற்றோருக்கு சுற்றத்திற்கென மரியாதை தருபவன் இதைவிட வேறென்ன ஒரு பெண்ணுக்குத் தேவை? கணவனின் புருவச்சுருக்கத்தை தளிர் விரலால் நீவி விட்டாள்.

“நாதேவுடுக்கு ஏமையிந்தி? “(என் தேவனுக்கு என்னாச்சு?)

“ம்! ஸ்ரீம்மா எப்படிடி என்மேல இத்தனை நம்பிக்கை வச்சி உன்னை என்னிடம் கொடுத்தே! ஊரு தெரியாது உறவு தெரியாது” “

அவன் பக்கமாய் திரும்பியவள்

“இன்னும் எத்தினி காலம் தான் கேட்பீங்களோ! பொண்ணு கூட பெரியவளாகிட்டா? “

பழசெல்லாம் பொங்கிக் கொண்டு மேலெழுந்து வந்தது.

ஸ்ரீலஷ்மியை மணந்து கொள்ள அவளின் தந்தை கேட்டபோது அவர் திகைத்தார். எந்த நம்பிக்கையில் இவர் பெண்ணைத்தர முன் வருகிறார். தன் பூர்வாசிரமம் தெரியாமலேயே இதென்ன இப்படியோர் நம்பிக்கை?

“இல்லைத்தம்பி! வருஷம் ரெண்டாகப்போகுது. பக்கத்திலிருந்து பார்க்கிறோம். உங்களைவிட நல்லவரன் கிடைக்காதுன்னு என் பார்யா சொல்றா. பொண்ணைப் பெத்தவளுக்கு கனவும் எதிர்பார்ப்பும் இருக்குந்தானே! அது உங்ககிட்டே கிடைச்சுருக்குன்னு நினைக்கேன்”

நரசிங்க தேவன் யோசனையில் ஆழ்ந்தான்.

“நீங்க யோசிச்சு சொல்லுங்க “

“நான் அம்மாயி கிட்டே பேசனுமே”!

அதன்பின்பு அவளை கோயில் குளக்கரையருகே வைத்து சந்தித்தான்.

அவளை நிமிர்ந்து பார்த்தான் பாலையும் மஞ்சளையும் குழைத்த நிறம் அழகானவிழிகள் முகத்தில் விழிநெற்றி நாசி இதழ் எல்லாமே வடிவாகவேயிருந்தன பூத்துக் குலுங்கும் யௌவனம்.அப்போதுதான் டிகிரி முடித்திருந்தாள். எந்த விதக் கவலையுமில்லாது சிறகடிக்கிற பருவத்தின் வாசலில் இளமை ததும்ப நின்றவளைக் கண்டபோது தான் இவளுக்கு பொருத்தமா என்ற கவலை எழுந்தது.

தன் கவலையை தன் கடந்த காலத்தை சொன்னால் இவள் புரிந்து கொள்வாளா…?




அவள்

அவரை ரொம்ப நேரம் தவிக்கவிடவில்லை! எதிர்பார்த்ததற்கு மேலாக புரிந்துணர்வும் முடிவெடுக்கும் திறனும் கொண்டிருந்தாள்.வீட்டிற்கு ஒரே செல்லப்பெண்ணாக வளர்ந்திருந்தாலும் சிந்திக்கும் திறனும் ஆளுமையுமிருந்தது.

அவர் தன் வாழ்வின் அவலப்பகுதியை சொல்லத்துவங்கினார். … அவளுடைய முழு விருப்பமே முக்கியம் என்ற நிபந்தனையோடு ……..

மங்களமாய் திருநாண் பூட்டு  முடிந்தது.தன்னருகில் நின்ற அழகியின் கழுத்தில் மாலை சூடி வகிட்டில் குங்குமம் வைத்து வாழ்த்துப்பா முடிய வாழ்த்துகோஷமும் ஆசிர்வாதங்களும் நடைபெற ஆரம்பித்தன.

இரவு …அந்தப் பெரிய படுக்கையறை பூவால் அலங்கரிக்கப்பட்டு நறுமணம் சூழ்ந்திருக்க இருபத்தைந்து வயது இளைஞன் நரசிங்க தேவன் புதுக்கணவனுக்கேயுரிய ஆசை அலைப்புறுதல்களோடு புது மனைவிக்காக காத்திருந்தான்.

அலங்காரம் சுமந்த அழகுப்பதுமையாக வந்தவள் அவனை ஏறிட்டும் பார்க்கவில்லை. சம்பிரதாய வணக்கமோ நாணமான பார்வையோ பேச்சோ எதுவுமேயில்லாமல் “எனக்கு தூங்கனும்! “என்றவள் மஞ்சத்தின் அடுத்த மூலையில் படுத்துக்கொண்டாள். நரசிங்க தேவன் திக்பிரமை பிடித்து நின்றான்.

இப்படியே பத்துநாளுக்கும் மேலாகக் கடந்து போக இவனுக்கும் புரியவில்லை. இயல்பிலேயே அவன் அதிரடியாகப் பேசமாட்டான். மென்மையாக பேசுபவன். அடுத்தவர் மனதை காயப்படுத்திவிடக் கூடாதென நினைப்பவன்.

 “சிவகாமி! ஏன் இப்படி நடந்துக்கிறே! இந்தத் திருமணம் உன்னை கட்டாயப்படுத்தி செய்யப்பட்டதா? “

“ஆமாம்ன்னா என்ன செய்யறதா உத்தேசம். ?”

“நடந்ததை என்ன செய்ய முடியும்? நடந்து முடிந்ததை நம்ம வாழ்க்கைக்காக செம்மை பண்ண முடியும். “

“எனக்கு அந்த அவசியமில்லை”

“அப்படின்னா? “

“இந்த சிவகாமி தேவிக்கு எதையும் இரண்டாம் முறை சொல்ற பழக்கமில்லை “

நரசிங்க தேவன் குழம்பித்தான் போனான்.

அன்று உணவருந்தும் நேரம் குடும்பத்தோடு அமர….சிவகாமி தேவி வாயைப் பொத்திக்கொண்டு ஓடிப்போய் வாமிட் செய்ய குடும்பமே சந்தோஷித்தது.

மருத்துவரை வரவழைத்து பரிசோதிக்கும் படி  அவரும் கன்ஃபார்ம் செய்ய நரசிங்க தேவனைத் தவிர எல்லோருமே மகிழ்ந்தனர்.

அன்றிரவு….

அவன் அவளைப் பார்க்க

அவளோ அவனை சட்டை கூட செய்யவில்லை.பார்வையில் ஒரு மெத்தனம் இருந்தது.

மறுநாள்

காலையில் மாளிகையை விட்டு வெளியேறிய நரசிங்க தேவப்பாண்டியன்  அதன் பிறகு வீடு திரும்பவேயில்லை.

அதே மறு நாள் காலையில் செய்தியறிந்த சிவகாமியின் தாய்வீடு சீரோடு வந்தது.மாப்பிள்ளை வேலை விஷயமாக வெளியே போயிருப்பதாக் கூறப்பட்டது.  அவர்களுடனே போக விரும்பிய புது மருமகளை  புகுந்த வீடு அனுப்பி வைத்தது. அதன்பின்பு அவளும் புகுந்த வீடு வரவேயில்லை.

தாய்வீட்டில்

பெற்றோர் முன்பு கண்ணீர் விட்டு கதறினாள். பாட்டியும் ஒத்து ஊதினார். நரசிங்க தேவனுக்கு வேறு ஒரு பெண்ணின் தொடர்பு இருப்பதாகவும் தினமும் தன்னை கொடுமை செய்ததாகவும் ஏங்கியழ பிறந்தவீடு கோபம் கொண்டது அதேநேரம் நரசிங்க தேவனும் காணாமல் போக நரசிங்க தேவன் மீதான குற்றச்சாட்டு நிஜமோ என்ற ஐயத்தை எழுப்பியது. நரசிங்கதேவன் குடும்பமும் பெண்ணின் பாவம் வேண்டாமே என்றெண்ணி நரசிங்க தேவனுக்கு சேரவேண்டிய பங்கைப் பிரித்துத் தந்ததோடு சிவகாமிக்கு தங்கள் குடும்பமே தீங்கிழைத்து விட்டதாக வருந்தியது.  பாட்டியும் பேத்தியும் ரகசியமாய் விழா கொண்டாடினர்.




பாட்டியைக் கட்டிக் கொண்டாள் பேத்தி. பின்னே? ஒரே கல்லில் எத்தனை பெரிய மாங்காய்.? அவர்களே எதிர்பாராதது நரசிங் வீட்டைவிட்டுப் போனதும் அவர்கள் இவளுக்கு சொத்தெழுதி வைத்ததும் ….

சிவகாமிக்கு லாவண்யா பிறந்தாள். லாவண்யாவை நரசிங்க தேவனின் குடும்பமும் கொண்டாடியது. லாவண்யா வளர்ந்தாள்.

 பாட்டியின் தாயின் குணங்களோடு வளர்ந்தாள்.

அவளின் தகப்பன் யாரென்பதற்கான சாட்சி யான நாகம்மைதேவியின் உடலோடும் உள்ளத்தோடுமே அந்த ரகசியம் எரிந்து சாம்பலானது .அதிகமாக நரசிங்க தேவனின் குடும்பத்துடன் உறவாடவேண்டாம் அது பிரச்னையில் முடியக் கூடுமென பாட்டி தன் காலத்திலேயே உறவைக் கத்திரித்திருந்தாள்.

இன்று வரையும் யாருக்குமே தெரியாது லாவண்யாவின் தகப்பனைப் பற்றி. .  அது சிவகாமி தேவி மட்டுமே அறிந்த ரகசியம்.

வீட்டைவிட்டு ஊரைவிட்டு மாநிலம் விட்டு மாநிலம் வந்தபின்பு அவ்வப்போது நரசிங் விசாரித்துத் தெரிந்து கொண்டவையையும் சேர்த்து சொல்லி முடித்தபோது ஒரு வேள்வி நடத்திய களைப்பு அவனிடம்.

அவளோ

“இப்போதுமே என் முடிவில் மார்ப்பு லேதண்டி (மாற்றம் இல்லைங்க) என்று அதிர வைத்தவள் அவனிடம்

தாயார் கருவறை முன்பு நிற்க வைத்துவிட்டு

“இங்க பாருங்க! தாயாரை வேண்டிகிட்டு கண்ணை மூடுங்க உங்க கண்ணுக்குள்ள என்ன வருதோ யார் வர்ராங்களோ சொல்லுங்க! “

என்றவள் அமைதியாகத் தன் கண்களை

யும் மூடிக்கொண்டு ப்ரார்த்தனை செய்தாள்.

சிலநிமிடங்களுக்குப் பிறகு கண் திறந்தவள் முன்னே நரசிங்கதேவன் முகம் முழுக்கப் புன்னகையோடு நின்றான்.

அவள் புருவம் உயர்த்தி ‘என்னாச்சு ‘என்று கேட்க அவனோ தாயார் பீடத்திலிருந்த குங்குமத்தை நீட்டினான்..

அவளோ அவன் முன்பாக முகத்தை வாகாகக் காட்டியபடி நிற்க…அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான். அன்றைக்குப் பிறகு இதுவரை பழையதைப்பற்றிய சிறு வார்த்தையாடலும் இல்லை. நந்தினி பிறந்தைள் இன்னும் இனிமை கூடியது. இவரும் எப்போதாவது தன்னுடைய வீட்டாரை தூர இருந்தே பார்த்து விட்டு வந்து விடுவார்.

“ஏமண்டி! . பங்க்ஷனுக்கு ஆ ரோஜு(அன்றைக்கு)  வந்தாரே அவரைக் கூப்பிடுங்களேன். நீங்கதான் உங்க குடும்ப சம்பந்தமே வேண்டாம்னு இருந்திட்டீங்க. மீ தரப்புலோ ஈ விஷயம் அவருக்கு அவர் பார்யாக்கு தெலுஸ்தே (தெரிந்தால்)சந்தோஷமா இருக்கும் தானே! “

நரசிங்க தேவன் அவளின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி சிரித்தான்

“அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை! “

“ம்! ஆகிருக்கும்னு நினைச்சேன். சரி விஷயத்தை சொல்லுங்க முடிஞ்சா வரட்டும். பாப்பாவை அவருக்கும் பிடிக்கும் “

“சரி! சரி! சொல்றேன். தூங்கு நேரமாச்சு “

      *******-*–********

தூங்க முடியாமல் இங்கு சிவகாமியும் விஷ்ணுவும் எதையெதையோ எண்ணிக் கொண்டிருந்தனர்.

விழாவுக்குப் போய்வந்த சிவகாமி நகைகளையெல்லாம் கழற்றிப் பேழையில்வைத்துக் கொண்டிருந்தாள். அவளறையிலிருந்த இரும்புப் பெட்டிக்குள் நகைகளும் பணமும் தஸ்தாவேஜீகளுமாய் நிறைய இருந்தன.

அவள் கைபட்டு சிறு வெல்வெட் பெட்டி நகர்ந்து கீழேவிழ…அதைத்திறந்து பார்த்தவளின் விழிகள் குத்திட்டு நின்றன.

உள்ளே கனமான தங்கச்சங்கிலியும் அத்துடன் இதயவடிவ லாக்கெட்டும் இணைந்திருந்தது. இதயத்தின் மையத்தில் சிவப்பு நிற ரத்தினம் ஜொலித்தது. விளிம்புகளைச்சுற்றி வைரக்கற்கள் பதிக்கபட்டுமின்னியது.கட்டைவிரலை அழுத்தித் திறக்க அதனுள் அழகான வாலிபனின் போட்டோவும் மறுபுறம் சிவகாமியின் இளவயது புகைப்படமும் இருந்தது.

சிவகாமியின் முகம் பல்வேறு உணர்வுகளைக் காட்டியது. நெஞ்சே வெடித்து விடுவது போன்ற உணர்வில் அந்த சங்கிலியை கையில் அழுத்திப் பிடித்துக்கொண்டாள். எல்லாவற்றையும் பூட்டினாள். அதுவரையும் அது அவள் கைகளிலேயே இருந்தது. அறைக்குள்ளிருப்பது மூச்சு திணற வைக்க தோட்டத்துப்பக்கம் சென்றாள்.

கையினுள்ளேயே பொத்திவைத்தபடி அதையே பார்க்க அற்கு உரிமையானவன் இதைத் தன் கழுத்தில் அணிவித்த போது உண்டான குறுகுறுப்பை இப்போதும் உணர்ந்து சிலிர்த்தது அவளின் உடல்.

அன்று பாட்டி ஊரிலில்லை. பாட்டியும் வீராவும் எங்கோ போயிருக்க ரஞ்சனி தாய்வீட்டுக்குப் போயிருந்தாள்.இவளோ பாட்டியின் ஜாகையில் தங்கியிருந்தாள். மாலை நேரம் கவிழ்ந்த நேரம்..குளியலொன்றை ஆனந்தமாகப் போட்டுவிட்டு கொஞ்சம் சுவாதீனமாகவே அறைக்குள் வந்தவள்…. ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள். சூட்சுமம் அதிகம் எப்போதுமே அவளுக்கு. தலையில் கட்டிய துவாலையும் துடைத்தும் துடைக்காத ஈர உடலில் ஒட்டிய ஆடையுமாக நின்றவள் சட்டென்று முக்காலி மீது பழத்தட்டோடு இருந்த கத்தியை எட்டிக் கையிலெடுத்தவள் உரக்கவும் அழுத்தமாகவும் சொன்னாள்.




“யாராயிருந்தாலும் வெளியே வா “

சட்டென்று மறைவிலிருந்து வெளிவந்த ஆடவனைக் கண்டு இவள் திடுக்கிட அவனோ

“சபாஷ் சிவகாமி! நீ தைரியமான பொண்ணுன்னு கேள்விபட்டிருக்கேன். ஆனா நேரா பார்க்கிறப்போ சந்தோஷமாயிருக்கு. “

சிவகாமி முகம் சிவக்க

“நீங்க…இங்கே …”

“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.”

“என்னைப்பார்க்கவா? “

“அன்றைக்கு பார்த்தது போதவில்லை எனக்கு …தெவிட்டாத அழகைத் திகட்டதிகட்ட பார்க்கனும்னு வந்திட்டேன்.ஒரு பரிசு தரவும் ஆசைப்பட்டேன். “

“ஆ…அதுக்காக இப்படியா ” மனதில் கர்வம் குமிழியிட்டது.

“உன் வீட்டுப்பெரியவர்களை சந்தித்துப் பேசிவிட்டு த் தான் உன்னை பார்க்க நினைச்சேன். வந்ததும்தான் தெரிந்தது. யாருமில்லைன்னு சரி! வந்ததற்கு தேவி தரிசனம் கிட்டுமான்னு இந்த மாளிகைக்குள் எகிறி குதித்து விட்டேன். வந்தா ….”

“ம் வந்தா! “

“வீர தரிசனமே கிடைத்தது “

“ரொம்பவே துணிச்சல் தான்! “

“உட்காருங்க உடை மாற்றி வருகிறேன் என்று உள்பக்கமேயிருந்த அறைக்குள் நுழைந்தவள் தாழிட்ட கதவின் மீதே தன்னுடலை சாத்தி நின்று பெரிய பெரிய மூச்சுகள் எடுத்து சமன் செய்து கொண்டாள்.

மனசுக்குள்  அச்சமும் ஆசையும் பெருமிதமும் போட்டியிட்டன.தன்னை வேகமாக ஒப்பனை செய்து கொண்டவள் ஒய்யாரமாகவே வெளியே வந்தாள்.

அவனோ அவளுடைய மஞ்சத்தில் சயனித்திருந்தான்.

நாணத்தோடு நெருங்கியவள்  என்ன பேசுவதென்று தடுமாற அவனோ அவள் கைப்பிடித்து தன்னருகில் அமர வைத்துக்கொண்டான்.

அதன்பின்னாக நடந்தவை …காதலர்களின்  நேசத்தூறல்களும் காதல் சாரல்களும்…ஒரு வாரம் முன்னால்தான் கரந்தைக்குடி ஜமினிலிருந்து பெண்கேட்டு வந்து சம்மதம் பேசி முடித்துவிட்டுப் போயிருந்தனர். வரும் சுப முகூர்த்த நாளில் ஊரறிய  நிச்சயமும் பிறகு மணவிழாவும் என்று அச்சாரமாய் ஆபரணத்தையும் கழுத்திலணிவித்து விட்டு மகிழ்வோடு கிளம்பி யிருந்தனர். சில நிமிடங்கள் மட்டுமே  பார்த்திருந்தவளை ஆசைமீதூர ஏதோ சாக்கு வைத்துக் கொண்டு பார்க்க வந்திருந்தான் மாப்பிள்ளை விஜயவல்லப காண்டீபன்.

ஆறடி உயரமும் உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடலும் களையான முகமுமாய் சிவகாமி முதல் பார்வையிலேயே விழுந்து போனாள்.

ஏகாந்தமான தனிமை இளையவர்களுக்குத்  துணிவைத் தந்தது. ஆசைத்தீ கொழுந்து விட்டெரிந்ததில் காதல் வேள்வி நடந்தது இயல்பாகவே ….இளமை …தனிமை …யாருமில்லா இனிமை கூடலின் சுவையில் அத்துமீறியது இளஞ்சோடி. மூன்று முழு இரவுகள் தெவிட்டாத இரவாகிப்போக …சிவகாமியின் பெண்மை விஜயவல்லப காண்டீபனின் ஆண்மைக்கு விருந்தாகியது. அந்த அழகான உறவு துவங்குமுன்னே விஜயவல்லப காண்டிபன் தன் கழுத்திலிருந்த சங்கிலியை கழற்றி அவளின் சங்குக் கழுத்திலிட்டான்.”இதோ இதைத்தான் என் காதல் பரிசாக என் தேவிக்கு தருவதற்காக வந்தேன்” என்று  தன் முதல் முத்திரையை அவள் நெற்றியில் பதித்தான்.பெண்மை தன்னை வழங்கத் தயாராகிவிட்ட பலவீனமான நொடி அது.

உறவின் அடையாளம் அவள் வயிற்றில் உதிக்க ஆரம்பித்த நேரம் திருமணப்பேச்சும் வேலைகளும் மும்முரமான சமயம்…… விஜயவல்லப காண்டிபன் பயணித்த காரில் பாம் வெடித்தது.  நெருப்புப் பிழம்பில் அவன் உடல் கூட கிடைக்காமல் காரோடு உருகி கருகிப் போயிருந்தது. …

செய்தி கிடைத்ததும் சிவகாமி மயங்கி விழுந்தாள்.

பங்காளிகளின் சதிவேலை என்றார்கள். சிவகாமியின் ராசி என்றார்கள். சிவகாமி முதன் முறையாக கலங்கிப்போனாள்.

பாட்டியோ பேத்தியின் விவரம் தெரிய வந்த போதுகன்னம் கன்னமாக அறைந்தாள். நாகம்மைதேவி யோசித்தாள்.தேட ஆரம்பித்தாள்.விஷயம் வெளியே கசியாமல் சிவகாமியை கன்னிகாதானம் செய்து விட விரும்பினாள்.

ஆனல் ….உருக் கொண்ட கருவோ விதியோடு சேர்ந்து சிரித்தது.

“அம்மா …இங்கியா இருக்கே! “லாவண்யாவின் குரலில் சுதாரித்து கண நேரத்தில் தன்னை இழுத்துப்பிடித்து மாற்றிக் கொண்டாள்.

சிவகாமி தேவி தன்னை மீட்டுக்கொண்டுநிமிர்ந்தாள் கம்பீரமாக.

(தேடல் தொடரும்)




What’s your Reaction?
+1
6
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!