Cinema Entertainment Serial Stories

பூக்க தவறிய பூக்கள்-சில்க் ஸ்மிதா 3

சிலுக்கின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் ரஜினியையே மிரள வைத்தது என்றால் அது மிகையல்ல..’துடிக்கும் கரங்கள்’ படத்தின் வெற்றி விழா கூட்டத்தில், திரளாக கூடி இருந்த ரசிகர் கூட்டத்தில் ரஜினி ரசிகர்களை விட,சில்கின் ரசிகர்களே அதிகமாக இருந்தனர். ரஜினியின் பெயரை செல்லும் போது எழுந்த ஆர்ப்பரிப்பை விட, சிலுக்கின் பெயரை சொல்லும் போது எழுந்த ஆர்பரிப்பு பல மடங்கு அதிகம். இந்த ஆர்பரிப்பு ரஜினியையே ஒரு வினாடி திகைக்க வைத்தது.





தன்னுடைய16 ஆண்டுகால சினிமா வாழ்வில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்து தள்ளியிருக்கிறார். சில்க்  புகழும் ,பணமும், சேரச் சேர தன்னுடைய நட்பு வட்டாரத்தை மிகவும் சுருக்கிக் கொண்டார் சில்க். அவர் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாகவே வலம் வந்ததனால் அவரை பார்க்கும் நபர்கள் எல்லாம்  பாலியல் தொடர்பாகவே பார்த்தனர். மற்றவர்கள் அவரைப் பார்த்த பார்வை குரூறம் நிறைந்ததாகவே இருந்தது. அந்தக் காரணத்தினால் தானோ என்னவோ, சில்க் தன்னைச் சுற்றி ஒரு கனமான வேலியை அமைத்துக் கொண்டார். படப்பிடிப்பு தளத்திலும் சரி, வெளியிலும்,  சரி யாரிடமும் தேவையில்லாமல் பேசுவது இல்லை. ஒவ்வொரு ஷாட்டுக்கு இடையிலும் பிற நடிகைகள் ஹீரோவிடமும் மற்றவர்களிடமும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய டேக் வரும் வரை  ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதில் தலையை கவிழ்ந்து இருப்பார் சில்க். இதனால் சில்க் ஸ்மிதாவுக்கு  திமிர் பிடித்தவள், அடங்காதவள், போன்ற பல்வேறு பட்டங்கள் கிடைத்தன.




ஒரு முறை தீர்ப்பு பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது நடிகர் திலகம் செட்டுக்குள் வருகிறார். நடிகர் திலகம் வருகிறார் என்று சொன்னவுடனே மொத்த சொட்டும் எழுந்து நின்றது. செட்டில் எழுந்து நிற்காத நபர்களே இல்லை, ‘சில்க்கை தவிர’ அந்த சமயத்தில் எல்லாம் சில்க்கை வாரி தூற்றாத நபர்களே இல்லை என்று சொல்லலாம்.

ஆனால் பின்னாளில் அதற்கான விளக்கமாக சில்க் ஒரு பேட்டியில் சொல்லும் பொழுது, நான் வேண்டும் என்று எதையும் செய்யவில்லை. நான் அணிந்திருந்த உடை அப்படிப்பட்டது. ஒருவேளை அவருக்கு மரியாதை தரும் விதமாக நான் எழுந்து நின்று இருந்தால்!  அது நிச்சயமாக நடிகர் திலகத்தை சங்கடப்பட வைத்திருக்கும். அந்த அளவிற்கு ஒரு மோசமான காஸ்டியூமில் அன்று இருந்தேன் என்ன செய்வது? இது தானே என் பிழைப்பு. என்று மனம் வெதும்பி பேசியிருந்தார் சில்க் ஸ்மிதா. அது போல் ஒரு முறை எம்ஜிஆர் பங்கேற்ற விழா ஒன்றில் சில்க் ஸ்மிதாவும் பங்கேற்பதாக இருந்தது, ஆனால் அன்றைய தேதியில் அந்த விழாவில் சில்க் பங்கேற்கவில்லை. அப்பொழுதும் திமிர் பிடித்தவள், ஆங்காரமானவள் என்ற பட்டப் பெயர்கள் வாரி இறைக்கப்பட்டன. ஆனால் சில்க் கூறியது தெலுங்கில் சிரஞ்சீவியுடனான படப்பிடிப்பின் முக்கிய கட்டம் அது. பல கோடிகளை போட்டு படம் எடுப்பவர்களுக்கு நம் மூலமாக எந்த ஒரு நஷ்டத்தையும் ஏற்படுத்த விடக்கூடாது. அதனாலேயே அன்றைய விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். சில்க் இப்படி மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தனி தீவாக இருப்பதற்கும் யாருடனும் அதிகம் நெருங்கி பழகாமல் இருப்பதற்கும் பல வலுவான பின் காரணங்கள் இருக்க சாத்தியம் இருந்தது. அதில் ஒரு காரணத்தை சில்க்கே ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.




ஒரு தெலுங்கு பட அவுட்டோர் சூட்டிங்கில் சில்க் ஸ்மிதா கலந்து கொண்ட பொழுது காலையிலிருந்து மாலை வரை வேலை செய்ய வேண்டி இருந்தது. இன்றைக்கு இருப்பது போல் அந்த காலகட்டங்களில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கொண்ட கேரவன்கள் எல்லாம் கிடையாது. ஷூட்டிங் நடந்ததோ அத்துவான காடு .. சில்க் அணிந்திருந்த்ததோ தலை முதல் கால்வரை ஜிப் வைத்திருந்த உடை. எனவே ஒரு கட்டத்தில் அடக்க முடியாத அளவில் இயற்கை உபாதை சில்க் ஸ்மிதாவை உந்தித்தள்ள வேறு வழி இல்லாமல் சுற்றுமுற்றும் பார்த்து சற்று ஒதுக்கு புறமாக இருந்த ஒரு புதர் மறைவில் ஒதுங்கினார். தன்னுடைய இயற்கை உபாதை நீங்கிய பின் எழுந்த அவர் சுற்று முற்றும் திரும்பி பார்த்த போது அருகில் இருந்த மரங்கள்,  சுற்றி இருந்த புதர்கள் அனைத்திலும் ஆண்களின் தலைகள் தெரிந்தன வெறுத்துப்போன சில்க் ஸ்மிதா ஓடிப்போய் மனோரமாவின் தோளில் சாய்ந்து கதறி அழுதாராம். இந்த சம்பவத்தை கூறி ஆண்களில்  நல்லவர்கள் என்பதே  இல்லையா அத்தனை பேரும் அயோக்கியர்கள் தானா என்று ஒரு பேட்டியில் மனம் வெதும்பி கேட்டிருப்பார்.




மேலும் ஒரு பத்திரிக்கை பெட்டியில் சில்க் ஸ்மிதா நான் சினிமாவில் நடிப்பது என் வீட்டிற்கு பிடிக்கவில்லை. ஆனால் பணம் வந்தவுடன் அது தெரியவில்லை என்று கிண்டல், கேலி, ஆதங்கம் என்று அனைத்தும் கலந்த ஒரு இறுக்கமான குரலில் பதிவிட்டிருந்தார்.

போதும் போதும் என்றும் அளவுக்கு பட வாய்ப்புகள், திகட்ட திகட்ட புகழ், வீடு கொள்ளாத அளவிற்கு பொருள், இவ்வளவும் கிடைத்த பின்னரும் சில்க் ஸ்மிதாவின் மனது வெறுமையாகவே இருந்தது. அவருடைய  லட்சியம் கனவு எல்லாம் என்ன சாவித்திரி போல் பெரிய நடிகையாக வேண்டும் என்பது தானே ஆனால் இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன? தன்னுடைய நடிப்புத் திறமையை, தன்னுடைய கலையை ரசிக்க இங்கு யாரும் இருப்பது போல் தெரியவில்லையே. என்ற ஏக்கம் அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாகவே தமிழை விட மலையாள திரையுலகில் அவர் அதிக கவனம் செலுத்தினார் ஏனென்றால் அங்கு அவருக்கு நடிப்பில் முக்கியத்துவம் தரும் படங்களும் வழங்கப்பட்டன. தமிழிலும் அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை போன்ற நல்ல திரைப்படங்கள் ஏதாவது எனக்கு தாருங்கள் என்று வரும் தயாரிப்பாளர்களை வெளிப்படையாக கேட்க ஆரம்பித்தார் சில்க் ஸ்மிதா.   உண்மையிலேயே சில்க் ஸ்மிதாவை நாம்தான் கவர்ச்சி பதுமையாக பார்த்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றும் சம்பவமும் ஒன்று உண்டு. ஒருமுறை கமல்ஹாசன் அவர்களிடம் அவரது தந்தையார் உன்னை விட மிகச் சிறந்த கலைஞன் ஒருவனை என்னிடம் அழைத்து வா என்று கூறினாராம். அப்பொழுது கமல்ஹாசன் அழைத்துச் சென்றது சில்க் ஸ்மிதா தான் என்று சொல்வார்கள். அப்படி என்றால் கமல் சில்க் ஸ்மிதாவின் கலையை அந்த அளவிற்கு அறிந்திருக்கிறார் என்று தானே அர்த்தம்.




ஆனால் சில்க் ஸ்மிதா எதிர்பார்த்தது போன்ற கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. கிடைத்த பாத்திரங்களை செய்து வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக இருப்பதில் அவருக்கு விருப்பமில்லாமல் போனது. ஒரு விரக்திக்கு ஆளானார் சில்க் ஸ்மிதா. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் ஒரு பத்திரிகை பேட்டி ஒன்றில் நீங்கள் சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என்று நிருபர் கேட்ட கேள்விக்கு பளிச்சென்று சில்க் கூறிய பதில் என்ன தெரியுமா?

சில்க் என்ன பதில் சொல்லி இருப்பார். யோசித்து கொண்டிருங்கள் நண்பர்களே  நாளைய பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.




What’s your Reaction?
+1
3
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!