Serial Stories எங்கே நானென்று தேடட்டும் என்னை

எங்கே நானென்று தேடட்டும் என்னை – 15

தேடல் —–15

“தம்பி எங்கேயிருக்கிறிங்க? “

“செல்விக்கா! என்னாச்சு? “

“மதுமதியம்மா  ரூம் கதவைத் திறக்க மாட்டேங்கிறாங்க.நேத்து ராத்திரி முதலே வெளியே வரலை தம்பி அம்மாவுக்கு போன் போடலாம்னு பார்த்தேன்.கோயில்லே இருக்கிறாங்களேன்னு யோசனை”

“நான் ஒருமணி நேரத்துலே வந்திடுவேன். எதுக்கும் நம்மாளுங்களை விட்டு தட்டி பாருங்க. கூப்பிட்டா பதில் வருதா

“பேச்சு மூச்சே இல்லைப்பா!பயமாயிருக்குப்பா!”

“பயப்படாதீங்க நான் வந்திடுறேன் “

விஷ்ணுவுக்கு உள்ளூற பதட்டம் எழுந்தது.

குலதெய்வம் கோயிலுக்கு படையலிட அம்மா அப்பா வோடு சத்யனும் நிஷாவும் கூடவே லாவண்யாவும் போயிருப்பதாகத் தெரியும். கிளம்பும் சமயம் மதுமதிக்கு உடம்பு சரியில்லை என்று வீட்டில் விட்டுவிட்டு வந்ததாகவும் சொன்னார் ரஞ்சனி.

சென்னைக்குப் போய் வேலையை முடித்தவன் வேகமாக கிளம்பியிருந்தான். வீட்டில் செல்வியக்காயிருந்தாலும் சிவகாமி அத்தையிருப்பது நல்லதுக்கில்லை என்றே தோன்றியது.

‘இவளுக்கென்ன உடம்புக்கு? டாக்டரிடம் போனாளா? செல்விக்காவிடம் கேட்காமல் போனோமே! ஏன் திறக்காமலிருக்கா. அத்தைக்கு பயந்து கொண்டா? ‘

சிந்தைக்குள் ஏதேதோ ஓட வண்டி வேகம் பிடித்தது. ::

வாயுவேகம் மனோவேகமாய் பறந்தது வண்டி.

“செல்விக்கா! “

“தம்பி வந்திட்டிங்களா? “

“செல்விக்கா மதுவின் அறைவாசலிலேயே உட்கார்ந்திருந்தவர் இவன் குரல் கேட்டதுமே பதறியெழுந்தார்.

“படபடன்னு வருதுய்யா! நேத்து  சாயந்திரம் பார்த்தது தான்யா மது ம்மா முகத்தை… காலையிலிருந்து முகத்தையே பார்க்கலையே! “




அவனும் தோளில் மோதிப்பார்த்தான். நல்ல தேக்குமரக் கதவு. அசைந்து கொடுக்காமல் நின்றது.

“செல்விக்கா! நான் பால்கனியிலிறங்கமுடியுதான்னு பார்க்கிறேன். இல்லைன்னா கதவை ஒடைச்சிடலாம்.”

இரண்டாம் தளத்தில் தன்னுடைய உடற்பயிற்சி அறையின் பால்கனிக் கதவைத்திறந்தவன்  நல்லமணிக் கயிற்றைத்தேடி எடுத்து வந்து கைப்பிடிச்சுவற்றின் ராடுகளில் கட்டிவிட்டு மெதுவே கீழே இறங்கி முதலாம் மாடியின் பால்கனிச் சுவர் விளிம்பில் கால்வைத்து குதித்தான்.

அது மதுவின் அறையையொட்டிய பால்கனி.

நெஞ்சு தடக் தடக்கென அடித்துக்கொண்டது. கடவுளே! பால்கனி கதவு தாழிடாமலிருக்க வேண்டுமே.

கதவையிழுக்க கதவு திறக்க வரவில்லை. வேகமாய் நான்குமுறை மோதியதில் கதவு திறந்து கொடுத்தது உள்ளே வந்தவன் பார்வை கட்டிலில் படிந்தது.

கலைந்து போன சித்திரமாய் உடலைக் குறுக்கிக் கொண்டு கிடந்தாள். அவள் படுத்திருந்த விதமே பயத்தைக் கிளப்பியது.

அறைக் கதவைத் திறந்தான்.

செல்விக்கா வேகமாய் வந்தார்.

“அம்மாடீ! என்னடாம்மா ஆச்சு! “

“மயங்கிக் கிடக்கிறா ப் போலருக்கு செல்விக்கா! டாக்டர் கிட்ட போகலாம்.”

“சரிப்பா “

“கைகளில் பூங்குவியலாய் ஏந்தினான். காரில் பின்னிருக்கையில் படுக்கவைக்க செல்விக்காவும் வண்டியில் ஏறிக் கொள்ள வண்டி வேகமாக நர்ந்தது. இதையெல்லாம் சிவகாமியின் விழிகள் வன்மமாய் பார்த்தபடியேயிருந்தது. அன்றைக்கு மொட்டைமாடி ஏகாந்தத்தை லாவண்யா வந்து சொன்னதுமே திட்டத்தைத் தீட்டி விட்டார்.தகுந்த சமயத்திற்காக காத்திருந்தார்.

முன்பே போன் செய்திருந்ததினால் எல்லாம் தயார் நிலையிலிருக்க மதுமதி மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டாள்.

வெளியே கிடந்த இருக்கையில் உட்கார்ந்தான் விஷ்ணு. உடம்பே அலண்டு போனாற் போலாகி விட்டது.

கண்களை மூடிக்கொண்டான். ‘தேனு! தேனும்மா! படுத்துறியேடி! “

மதுமதி மூடிய கண்ணுக்குள்  கண்ணடித்து நகைத்தாள். கோபமாய் பொங்கினாள்.  கண்ணீர் விட்டாள் பூவாய்சிலிர்த்தாள். கிளுக்கிச் சிரித்தாள். அவன் கைகளில் துவண்டாள்..”தேனு! உனக்கு இதே வேலையாப்போச்சுடி!பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி விழறது  “

தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்.

செல்விக்கா கண் கலங்க புலம்பிக் கொண்டிருந்தார்.

“நா…நாந்தேன் …கொஞ்சம் சூதானமா இருந்திருக்கனும். எங்க வீட்டு மகாலட்சுமியை குற்றுயிறும் குலையுயிருமா படுக்கையிலே சாச்சிட்டேனே “

“செல்விக்கா! அழாதீங்க! சரியாயிடும். ஆமாம் ஏன் மது கோயிலுக்குப்போகலை “




“என்னத்தை சொல்ல? மழை வற்றது தெரியாது போல.தான் இதுவும். காலையிலே பெரிம்மா காபியக் குடுத்துட்டு மதும்மாவ எழுப்பிடு. வெள்ளனவே கிளம்பனும்னாங்க. நானும் போய் பார்த்தா ….புள்ளை அடிவயித்தைப்புடிச்சுக்கிட்டு குறுகிக் கிடக்கு. கோயிலுக்கு போகப் படாது.

சரீன்னு பெரிம்மா என்னைபார்த்துக்கோன்னு சொல்லிட்டு குலதெய்வம் கோயிலுக்கு கிளம்பிட்டாங்க.

மதும்மாவுக்கு இந்தமாதிரி நேரத்துலே வலியிருக்கும் தம்பி.

சரியா சாப்பிடாது. மோருஞ்சாதம் பழம்னு தான் சாப்பிடும். எளநீ ஒன்னை கண்ணு தொறந்து வச்சுட்டு மதும்மாவை கூப்பிட்டு வரேன். இந்த அத்தையம்மா எளநீயை குடிச்சுட்டு அந்தப் பொண்ணை நிக்கவச்சு கண்டபடியும் பேசுது. வாய்ல வராதபேச்சு.  அந்தப்பொண்ணு  திரும்ப மாடிக்கே போயிடுச்சு.

மதியம் தயிர் சாதம் பிசைஞ்சு மேலேயே கொண்டு போய்த் தரலாம்னு இருந்தேன்.அத்தையம்மா திடீர்னு நீயும் என்கூட கிளம்புன்னு மில்லுக்கு இழுத்துட்டுப் போயிட்டாங்க

திரும்பி வந்து பார்த்தேன். மது தூங்கிட்டிருந்தது.சாதத்தை சாப்பிட்டுருப்பாங்கன்னு நினைச்சேன்.

மறுநாளும் மதும்மா கீழேவரலை. மேலே போனா மதும்மா இன்னிக்குப் பூரா நான் விரதம் சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டாங்க.

பால் கூட வேணாம்னு கதவை அடைச்சிட்டாங்க தம்பி.நேத்து முச்சூடும் சாப்பிடவேயில்லை இன்னிக்கு காலையிலேருந்து கதவும் திறந்த பாடுல்ல. நம்மவூட்டு வாட்ச் மேன் பொஞ்சாதி சொல்றா தயிர்சாதம் ரொம்ப நல்லாயிருந்ததுன்னு

என்னடின்னு கேட்டா புருசன் கொண்டாந்து தந்தானாம். அத்தைம்மா தான் எடுத்துட்டு போ சொன்னதாம்.

இப்படி …..ஊரே நம்ம வூட்டு சோத்தைத் திங்க நம்ம வூட்டுப் பொண்ணு ஒருவாய் சோறு இல்லாம பச்சப்பட்டினி.இந்த அத்தைம்மாவுக்கெல்லாம் நல்ல சாவே வராது பாரு! வயிரெரிஞ்சு சொல்றேன்  “

விஷ்ணு மனசெல்லாம் தகிப்பாயும் தவிப்பாயுமிருந்தது. கூடவே கோபமும் மிகுந்தது.

“என் வீடு இதுன்னு உரிமையா பேச மாட்டாளா? அப்போ அத்தனை நம்பிக்கை.?  என் மேலே என் காதல் மேலே இல்லையா

தேனு! ஏண்டி இப்படி மனுசனை சாகடிக்கிறே.’

ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டான்.

“மாமா.. மாமா…”

“கிருஷ்ணா! கிருஷ்ணா ஓடாதே”!

விஷ்ணு கண் திறக்க குட்டிச்சில் வண்டு முகமெல்லாம் சிப்போடு சாக்லெட்டை நீட்ட முகம் கனிந்தது .

“ஓடாதேடா! சொன்னா கேட்கமாட்டியா “

“ஹேய்!

“ஹேப்பி பர்த் டே “

.குழந்தை நீட்டிய இனிப்பை ப் பெற்றுக் கொண்டவன்  புன்னகைத்தான்.

பின்னாலேயே வந்தது அவன் தந்தை போலும். அள்ளிக் கொண்டு போய்விட்டான்.

     மதுவுக்கும் கிருஷ்ணனைப் பிடிக்கும்.  இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தியை அப்படி விமர்சையாக கொண்டாடினாள். வாசற்புறமிருந்த. அந்த மண்பத்தில் குழலூதும் கிருஷ்ணன் சிலையை வாங்கி வந்து வைத்து  அலங்காரம் செய்தாள். மண்டபத்தைச் சுற்றி தொட்டிச் செடிகளை வைத்து  கொடியாய் ஏற்றிவிட்டாள். பரண்வீடு போல காட்சி தந்த மண்டபத்தில் கண்ணன் நளினமாய் குழலூதி நிற்க ….வாயிலிலிருந்து பூஜையறைவரை கிருஷ்ணபாதம் வேறு அம்சமாய்!

நைவேத்தியம் செய்ததுடன் நிஷாவுக்கும் கிருஷ்ணனைப் போல அலங்கரித்திருந்தாள். பட்டுப்பாவாடை சரசரக்க குழந்தை வீடு முழுவதும் திரிய கொள்ளையின்பமாயிருந்தது.

கூடவே இவளும் பட்டுப்பாவாடை தாவணியில் முல்லைச்சரம் கூந்தலில் சரிய பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள்.

மண்டபத்தில் கிருஷ்ணன் வந்ததுமே வீட்டுக்கே ஒரு களை வந்தாற் போலிருந்தது. இத்தனைநாளும் விஷ்ணுவுக்கு நினைவு தெரிந்து அந்த மண்டபம் வெறுமையாய்தான் நிற்கும். இப்போது. ,தினமும் பூமாலையோடு தீபாராதனையுமாய் அந்த இடமே தெய்வாம்சமாய் மிளிரும்படி மாற்றி விட்டிருந்தாள் மதுமதி.




       “தம்பி! டாக்டர் வர்ரார்…கேளுங்க.”

டாக்டர் நெருங்கினார்.

“பயப்பட ஏதுமில்லை ரெண்டு நாளாய் சாப்பிடாம இருந்திருக்கிறாங்க கூடவே மென்ஷுவல் ப்ராப்ளம் வேற. அதான் மயங்கிட்டாங்க. ட்ரிப் ஏறுது. நாளைக்கு ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். ஆனா….”

“சொல்லுங்க டாக்டர் “

“ரொம்ப அனீமிக்கா இருக்கிறாங்க. கொஞ்சம் சத்தான உணவா சாப்பிட வைக்கனும். டானிக் எழுதித் தரேன் சாப்பிட வையுங்க. அவங்க சரியா சாப்பிடறாங்களான்னும் கவனிச்சுக்குங்க. “

அன்றிரவு செல்வியோடு அவனுமே மருத்துவ மனையில் தங்கி விட்டான்.

அன்றிரவே மதுமதி கடத்தப் பட்டிருந்தாள்.

(தேடல் தொடரும்)




.

What’s your Reaction?
+1
11
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!