Cinema Entertainment Serial Stories

பூக்க தவறிய பூக்கள்- சில்க்ஸ்மிதா 1

வாசக நண்பர்களுக்கு வணக்கம்.   இன்றைய ‘பூக்கள் தவறிய பூக்கள்’ பதிவில் நாம் பார்க்கப் போகும் அந்தப் ‘பூ’  நீங்க தான் கண்டுபிடிக்க போறீங்க…




     ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்காத படம் ஓடாது என்ற நிலை தமிழ் சினிமாவில் இருந்தது .இவர் கடித்த ஆப்பிள் லட்சக்கணக்கில் ஏலம் போனது. இவர் நடித்த படங்கள் அனைத்தும் 100 நாட்களை தாண்டி ஓடியது. இவர் வாங்கிய சம்பளம் ஹீரோயின்களுக்கு சவால் விட்டது. ரஜினி, கமல் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் கூட, எடுத்து முடிக்கப்பட்ட பின்னும் வெளியிடப்படாமல் இவர் ஒரு  பாடலுக்காவது நடித்து தரவேண்டும் என்று பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த காலம் உண்டு. சொக்கும் விழி பார்வை, சுண்டியிழுக்கும் கண்கள் ,வசீகரிக்கும் பேச்சு  என்று 1980 முதல் 96 வரை இளையவர் முதல் பெரியவர் வரை என்று எத்தனையோ ஆண்களின், இல்லை , இல்லை ஒட்டுமொத்த ஆண் சமுதாயத்தின் தூக்கத்தை கெடுத்தவர்  இவர்.

உச்சியில் இவர் இருந்த காலகட்டத்தில் எத்தனையோ தயாரிப்பாளர்கள் ‘அம்மா தாயே’ நீ ஒரு நாள் கால் சீட் கொடுத்தால் போதும் பட்ட கடன் அத்தனையும் அடைத்து விடுவேன் என்று இவர் காலடியில் கிடந்த காலம் உண்டு. என்னங்க இவ்வளவு தகவல் கொடுத்துட்டேன் இன்னும் தெரியலையா ?

            சரி உங்களுக்காக கடைசியாக ஒரு தகவல் தாரேன் இவருக்கு முந்தைய காலகட்டத்திலும் சரி இவருக்கு பிந்தைய காலகட்டத்திலும் சரி எத்தனையோ குத்தாட்ட நடன கலைஞர்கள் இருக்கத்தான் செய்தனர்.  ஆனால் அன்றும் இன்றும் என்றும் இவர் செய்த சாதனையை எவர் ஒருவராலும் செய்து விட முடியாது.    இப்பொழுது கரெக்டா கண்டுபிடித்து விட்டீர்கள்.




          ஆமாங்க! சில்க் பத்தி தான் பேச போறோம். ‘சில்க்’ இந்தப் பெயரைச் சொன்னாலே சும்மா ஒரு மாதிரி சிலுக்குதில்ல சில்க்கோட பேர சொன்னா மட்டும் இல்ல, சில்க் பார்த்தால், பேசுனா, நடந்தா, எல்லாமே சிலுக்கத்தான் செய்யும். ‘ஓவரா ஜொல்லு விடுறேனோ’,  சரி விடுங்க, ஏங்க, உங்களை ஜொல்லு விட சொல்லலைங்க கதைக்கு வாங்க.   நம்முடைய ‘விஜயலட்சுமி ‘ஆமாங்க சில்க்கோட நிஜப்பெயர் விஜயலட்சுமி தான். ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் ஏளூர் அப்படிங்கற ஊரில பிறந்து இருக்காங்க. இவர் 1960 ஆம் வருடம், டிசம்பர் மாதம், இரண்டாம் தேதி பிறந்திருக்கிறார்.


இவருடன் இவருடைய அம்மா மற்றும் இளைய சகோதரர் இவங்க மட்டும் தான் இருந்து இருக்காங்க. அம்மாவின் பெயர் சரசம்மா இவருடைய தந்தையார் ‘ராமுலு’ இவருடைய சிறுவயதிலேயே  இவருடைய தாயை விட்டுட்டு வேற ஒரு பெண்ணிடம் சென்று விட்டார்.   விஜயலட்சுமியின் குடும்பம் ஒன்றும் மிகவும் வசதியான குடும்பம் அல்ல. சிறுவயதிலேயே சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் அளவில்தான் குடும்பம் இருந்திருக்கிறது. ஆனாலும் சிறு வயது முதலே விஜயலட்சுமிக்கு சினிமா ஆர்வம் இருக்கத்தான் செய்திருக்கிறது.

விஜயலட்சுமியின் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே சாவித்திரி தான். அவருடைய வீட்டில் எங்கு பார்த்தாலும் சாவித்திரியின் படங்களை சேமித்து வைத்திருப்பார். தானும் வாழ்நாளில் சாவித்திரி போல் சிறந்த நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் வறுமை அனைத்தையும் பின் தள்ளி முந்தி நின்றது.




விஜயலட்சுமி சிறிய வயதாக இருக்கும் பொழுதே ஏறத்தாழ 15 வயதிலேயேவும் அவருக்கு வீட்டில் திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது. அவரைவிட வயதில் மிகவும் அதிகமான (ஏறத்தாழ 15 வயது அதிகமான)ஒரு ஆணுக்கு அவரை திருமணம் செய்ததாக கூறுகிறார்கள். அதனால் அந்த திருமண வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு போனார் விஜயலட்சுமி. ஒரு கட்டத்தில் கணவன் மற்றும் மாமியாரை விட்டு தப்பி ஓடி பிறந்த வீட்டிற்கு வருகிறார் விஜயலட்சுமி.

இந்த இடத்தில் கொஞ்சம் பொறுங்கள் வாசகர்களே!! இப்ப நான் சொல்லிய இந்த விஷயங்களை சில்க் இளைய சகோதரரும் அவங்க அம்மாவும் முழுவதும் மறுத்திருக்கிறார்கள். விஜயலட்சுமிக்கு எந்த ஒரு திருமணமும் நாங்க செய்து வைக்கவில்லை என்றுதான் கூறுகிறார்கள்.  ஆனால் நம் தமிழ் மொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘இல்லாமல் புகையாது அல்லாமல் குறையாது’ என்று தன்னை விட 15 வயது மூத்த ஒரு நபரை பதினைந்து வயது விஜயலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.’ இது ஒரு வதந்தி’ என்ற அளவில் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். இந்தக் கட்டுரையின் முடிவில்  சில முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு இந்த வதந்தி ஒரு வேளை பயன் அளிக்கலாம்.

சரி நாம் திரும்பவும் விஜயலட்சுமியின் பிறந்த வீட்டிற்கு வந்து விடுவோம். அப்பொழுது அவருக்கு எதுவும் திருமணம் ஆகவில்லை. வீட்டில் வறுமை கோர தாண்டவம் ஆடுகிறது. நான்காம் வகுப்பு படித்த நிலையிலேயேவும் “விஜி” (விஜயலட்சுமியை அப்படித்தான் அழைப்பார்கள்)’ வீட்டில் அவரது படிப்பை நிறுத்தி விட்டனர் விஜிக்கு தன் சகோதரனையாவது படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம்  மனதில் வேரூன்றி இருந்தது.




அப்பொழுது  விஜியின் தூரத்து உறவுக்கார பெண் என்று ஒருவர் வீட்டிற்கு வந்தார். அவர் பெயர் அன்னபூரணி. அவர் சினிமாவில் துணை நடிகையாக நடிப்பவர். அவர் தனக்கு வீட்டில் எடுபிடி வேலைக்கு ஒரு ஆள் தேவை என்றும், தன் உதவிக்கு விஜியை அழைத்துச் செல்வதாக கூறிய பொழுது,  விஜியின் மூலம் வீட்டிற்கு தனியாக ஒரு வருமானம் வரும் என்று மட்டுமே அவர் தாயார் எண்ணினார். ஆனால் விஜியின் கனவுகளிலோ சாவித்திரி வந்து அமர்ந்து கொண்டார். சினிமாவில் வேலை செய்யும் பெண்ணின் வீட்டில் வேலை. நம் கனவு நிறைவேறும் காலம் வருகிறது என்று மகிழ்ச்சி அடைந்தார். அன்றைய தினமே அன்னபூரணியும் விஜியும் வீட்டில் இருந்து கிளம்பினார். அன்று முதல் விஜியின் வாழ்க்கை சென்னையில் ஆரம்பமானது.

        தன்னுடைய வேலையின் ஆரம்பமே சினிமா சூட்டிங்கில் தான் இருக்கும், என்று எதிர்பார்த்த விஜிக்கு கிடைத்தது, ,வீட்டில் மீதமிருந்தது எச்சி பாத்திரங்களும்,   அழுக்குத் துணியும்,  குப்பை கூழங்களும் தான். தன கனவுகள் அனைத்தும் தன் கண்முன்னே சடசடவென்று சரிவது போல் உணர்ந்த விஜயலட்சுமி, சுதாரித்துக் கொண்டார். வாழ்க்கை என்றால் போராடித்தான் ஆக வேண்டும் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டு ,வீட்டு வேலைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டார். வேலை முடிந்து வரும் அன்னபூரணிக்கு கை கால் அமுக்கி விடுவதும் விஜயலட்சுமி தான்.

அன்னபூரணிக்கு கோபம் வரும் பொழுது அவ்வப்பொழுது அடியும் வாங்க வேண்டும். அனைத்தையும் பொருத்து மிகவும் பொறுமையாக இருந்ததன் பலன் விஜயலட்சுமிக்கு பிரமோஷன் கிடைத்தது. என்ன ப்ரமோஷன் என்று கேட்கிறீர்களா?..

என்ன ப்ரமோஷனாக இருக்கும்?. யோசித்து கொண்டு காத்திருங்கள் நண்பர்களே! நாளைய பதிவில் பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!