Serial Stories உறவெனும் வானவில்

உறவெனும் வானவில் -18

17

 

“யோவ் என்ன உளர்றீங்க?”மாதவன் அவர்களிடம் பாய,

” கொஞ்சம் இப்படி உட்காருங்க.நாம் பேசுவோம்”சேர்மராஜ் சொல்ல,

யார் பேச்சையும் காதில் வாங்கும் நிலையில் சங்கரபாண்டி இல்லை.

“உங்க கிட்டெல்லாம் என்ன பேச்சு? என் மருமகளை அனுப்புங்கய்யா”

யவனா திகைப்போடு சக்திவேலை திரும்பி பார்க்க,அவன் நிதானமாக

“யவனா உன்னை கூட்டிப் போகத்தான் வந்திருக்கிறார்கள்.கிளம்பு” என்றான்.அவள் ஸ்தம்பித்து நின்றாள்.

“அம்மாடி வாடா கண்ணு.நம்ம வீட்டுக்கு போகலாம். என் வீட்டு மகாலட்சுமிடா நீ.யார் பெற்ற பிள்ளையையோ வளர்க்கனும்னு உனக்கென்ன தலையெழுத்து?வாடாம்மா…”

சங்கரபாண்டி யவனாவின் கை பிடித்து இழுத்தார்.

“மாமா கொஞ்சம் இருங்க.நான் சொல்வதை கேளுங்க”

“அட நீயென்னம்மா சொல்லப் போற?வாம்மா “

“ஹலோ சார்,அண்ணிதான் பேசனும்னு சொல்றாங்கள்ல.பொறுங்க…” மாதவன் இடையில் வர அவனை ஓங்கி இடித்தார் சங்கரபாண்டி.

“யாருக்கு யாரடா அண்ணி?அது பச்சப்புள்ளடா.அதை ஏமாத்தி இரண்டாம்தாரமா கல்யாணம் முடிச்சிருக்கீங்க.பெரிய மனுசங்களாடா நீங்கெல்லாம்?”

“ஐய்யோ மாமா.இவுங்க யார் மேலும் தப்பு இல்லை”




“தப்பில்லையா? யவனா என் முகத்தை பார்த்து சொல்லு.சக்திவேலுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி குழந்தை இருப்பது உனக்கு தெரியுமா?”

“தெ…தெரியாது மாமா”

“அவ்வளவுதான்மா.இதுக்கு மேல் நீ பேச ஒண்ணும் இல்லை.வா போகலாம்”

சங்கரபாண்டி யவனாவின் கையை பிடித்து இழுத்தபடி வாசலுக்கு நடந்தார்.சண்முகசுந்தரி சக்திவேலின் கை பிடித்து உலுக்கினாள்.

“டேய் சக்தி என்னடா பாத்துட்டு நிக்கிற? போடா போய் உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வா”

சக்திவேல் மாமனிடம் இழுபட்டு செல்பவளை அசையாமல் பார்த்தபடி நின்றான்.”யவனாதான்மா பதில் சொல்லனும்”

சேர்மராஜ் அர்த்தத்துடன் மகனை திரும்பிப் பார்க்க,அவன் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.

வாசல் வரை இழுபட்டு போன யவனா வாசல் தாண்டும் போது தன் பலமனைத்தும் திரட்டி மாமனை உதறினாள்.

“நிறுத்துங்க மாமா.எப்பவும் எதற்கிந்த கோபம்?இதனால்தான் என் அம்மா போன பிறகு என்னால் உங்களுடன் உங்கள் குடும்பத்தினருடன் ஒட்ட முடியாமலேயே போய்விட்டது.கோபத்தை குறைத்து கொஞ்சம் நிதானமாக சுற்றிலும் நடப்பதை கவனியுங்கள்”

சங்கரபாண்டி அதிர்வுடன் நின்று அக்காள் மகள் முகம் பார்த்தார்.

” ஆமாம் மாமா.எனக்கு இவருக்கு முன்பே திருமணம் ஆகியிருப்பது தெரியாது.அது தெரிய வந்த போது நானும்உடனே இங்கிருந்து வெளியேறி விட வேண்டுமென்றுதான் நினைத்தேன்.சித்தி செய்த தவறுக்கு எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொண்டு உடம்பு சரியில்லாமல் போன போது,இவர்கள் குடும்பத்தினர் எல்லோரும் என்னை எப்படி கவனித்துக் கொண்டார்கள் தெரியுமா?அப்போது நான் இவர்கள் எல்லோரையும்,இதோ இந்த பச்சைக் குழந்தையையும் கூட உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தேன்.ஆனாலும் எல்லோருமாக சேர்ந்து என்னை தாங்கி தேற்றிக் கொண்டு வந்தார்கள்”

“அதற்காக இவர்களுக்கு உன் வாழ்க்கையே பலி வைப்பாயா?” கேட்ட குரல் சித்தார்த்துடையது.அவன் அப்போதுதான் மண்டப வாயிலுக்குள் நுழைந்தான்.அழுத்தமான காலடிகளுடன் யவனாவின் எதிரே நின்றான்.

“திரும்ப திரும்ப உன்னை நான் நழுவ விடமாட்டேன் யவனா.இனி நீ எனக்குத்தான்.வா போகலாம்”கை பற்றி இழுத்தான்.




” அத்தான் நீங்களுமா?நீங்கள் படித்தவர்.உங்களுக்கும் என் நிலை புரியவில்லையா?”

” ஆஹா! உடம்பு சரியில்லாதவளுக்கு மனிதாபிமானம் உள்ள யார் வேண்டுமானாலும் உதவுவார்கள்.இதற்காக இவர்கள் காலடியில் கிடக்கப் போகிறேனென்கிறாயே…உன் முட்டாள்தனத்தை என்ன சொல்ல?அப்பா இவளை யோசிக்க விடக்கூடாது. இழுத்து வாருங்கள்…” கை காட்டிவிட்டு நடக்க முயன்றவனின் சட்டையை கொத்தாக பற்றி இழுத்தாள் யவனா.

“முட்டாள்.உன்னை விரும்பாத பெண்ணை கூட்டிப் போய் வலுக்கட்டாயமாக திருமணம் செய்வாயா?அதெப்படி அவளுடன் உன்னால் வாழ முடியும்?”

“ஏன் இதோ இந்த பெரிய மனிதருடன் விருப்பம் இல்லாமல்தானே மூன்று மாதங்களாக வாழ்ந்து வருகிறாய்.அப்படியே என்னுடனும் வாழ்ந்து முடி”

“ஏய் அவர் மீது விருப்பமில்லையென்று யார் சொன்னது? அவரை என்று முதன் முதலாக பார்த்தேனோ அன்று முதல் அவரை காதலித்து வருகிறேன்.இல்லாமல் போனால் இங்கேயே வாழ வேண்டுமென்று ஏன் நினைக்கப் போகிறேன்.அவரில்லாமல் என்னால் வாழவே முடியாது.மரியாதையாக என் கணவருடன் என்னை விட்டு விட்டு நீங்களெல்லோரும் போய்விடுங்கள்”

யவனா கத்தலாக பேசி முடித்ததும் அந்த இடமே ஒரு நிமிடம்  அமைதியாக  இருந்தது.சித்தார்த் புன்னகையோடு பட்பட்டென கை தட்டினான்.

“அப்பா இப்போது திருப்தியா ?” சங்கரபாண்டி தலையசைத்தபடி ஒதுங்கி நின்றார்.

“ஹலோ பிரதர் ஓ.கேவா?” சித்தார்த் இப்போது கேட்டது தள்ளி நின்ற சக்திவேலை பார்த்து.அவன் யவனாவை பார்த்தபடி நிற்க யவனா திகைப்போடு சித்தார்த்தை பார்த்தாள்.

“உன் ஹஸ்பென்டுக்கு உன் வாழ்க்கையை கெடுத்து விட்டதாக பெரிய குற்றவுணர்வு.அப்பாவிற்கு தன் மருமகளை தவறான இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டதாக குற்றவுணர்வு.இரண்டு பேரிடமும் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை,யவனா விரும்பிதான் அங்கே இருக்கிறாள்னு விளக்க முயன்று எனக்கு தோல்விதான்.அதுதான் இப்படி ஒரு டிராமா போட வேண்டியதாயிற்று.சக்தி பிரதர் நல்லா கேட்டுக்கிட்டீங்கதானே?”

சக்திவேல் சுற்றி இருப்பவர்களை பற்றிய கவலையின்றி மனைவியை இறுக அணைத்துக் கொள்ள,அனைவரும் சேர்ந்து நின்று கை தட்டி ஆரவாரித்தனர்.அதன் பிறகு கும்மாளமும் குதூகலமுமாய் விழா இனிதாக நடந்து முடிந்தது.

மருமகளை சக்திவேலின் கையில் பிடித்துக் கொடுத்து கண்கள் பனிக்க விடை பெற்றார் சங்கரபாண்டி.அன்று இரவு யவனா கணவனின் சட்டையை பிடித்து உலுக்கினாள்.

“யோவ் என்ன தைரியம் இருந்தால் என்னை என் மாமாவோடு அனுப்ப நினைத்திருப்பாய் ?”




What’s your Reaction?
+1
46
+1
27
+1
0
+1
7
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!