Serial Stories உறவெனும் வானவில்

உறவெனும் வானவில் – 1

1

 

” சார் ” – வாசலில் கேட்ட உத்யோக  குரலுக்கு மடியிலிருந்த பெயின்டிங்கை சோபாவில் வைத்து விட்டு எழுந்து வாசலுக்கு போனாள் யவனா.

” மிஸ்டர்.நல்லசிவம் ,மிஸஸ்.அருந்ததி.இந்த வீடுதானேம்மா ? ” அதட்டலாய் கேட்டபடி நின்றிருந்தார் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்.

” ஆமாம் சார்.என் அப்பாவும் , சித்தியும்தான் அவர்கள்.உள்ளே வாங்க” மலர்ந்த முகத்துடன் போலீஸ்காரரை வரவேற்றாள்.

” இருக்கட்டும்மா ” முன் வராண்டாவில் கிடந்த மர ஸ்டூலில் அமர்ந்து கொண்டு ,தொப்பியை சுழற்றி நனைந்திருந்த தலைமுடியை கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டார்.

” ஷ்…என்னா வெயில்! கொஞ்சம் தண்ணி கொடுங்கம்மா.அப்படியே அவுங்க ஆதாரை எடுத்துட்டு வாங்க “

பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய  ஜில்லென்ற எலுமிச்சை பானத்தை கொண்டு வந்து கொடுத்தவள் ஆதாரையும் நீட்டினாள்.

உயிர் பானம் போல் அதனை பருகியவர் , ஆதாரை சரி பார்த்தார்.” ம் …சரிதான் “

” சார் பாஸ்போர்ட் எப்போ வரும் ? “




” நாங்க போய் ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும்மா.ஒரு வாரத்தில் வந்துடும்.ஜூஸுக்கு நன்றிம்மா “

அவர் சென்றதும் யவனா நிஜமாகவே சந்தோசத்தில் இரண்டு தப்படி எழும்பி எழும்பி குதித்து டிவியை ஆன் செய்து தனக்கு பிடித்த சினிமா பாடலை தேர்ந்தெடுத்து அந்த கதாநாயகியோடு சேர்ந்து தானும் ஆடத் துவங்கினாள்.

உச்சஸ்தானியில் பாடவும் செய்தாள்.ஆடலும் பாடலுமாக பத்து நிமிடங்களாக பொழுதை போக்கியவள் ஒரு அழகான நடன அசைவிற்காக பின்புறம் ஒயிலாக திரும்பிய போது, வாசலில் நின்றிருந்த அருந்ததியை பார்த்ததும் உயர்த்திய கையும் ,காலும் அப்படி அப்படியே நிற்க அசையா சிலையாக அச்சடித்து நின்றாள்.

“ஹி…ஹி…சித்தி “

அருந்ததி அகலமான கண்களை விரித்து அழகாக முறைத்தாள்.”வயதுப்பெண் செய்யும் வேலையா இது ?”எப்போதும் போல் சாக்ஸபோன்களே கூவின அவள் குரலில் திட்டுகிற போதும்.

“அது…வந்து சித்தி ஒரு சந்தோசமான செய்தி… அதுதான் “

“சந்தோசமோ துக்கமோ அதை மனதிற்குள் வைத்து கொண்டாடத் தெரியனும்.இல்லாதவள் பொண்ணோட சேர்த்தி கிடையாது “

“சரி விடும்மா.யவனா வயதுப்பெண்.ஏதோ உற்சாகம்…” சமாதானமாக வந்த நல்லசிவத்தின் குரல் அருந்ததிக்கு பின்னால் இருந்தது.

அகலம் குறைவான வாசலில் நெகு நெகு உயரமும் அதற்கேற்ற பருமனுமாயிருந்த அருந்ததியின் பின்னால் சராசரிக்கும் சற்று குறைவான உயரமும் , கெச்சலான உடம்புமான  நல்லசிவம் மறைந்து விட்டதில் ஆச்சரியமில்லை.

“நீங்க உள்ளே வாங்க ” கணவனின் கை பிடித்து உள்ளே அழைத்து வந்தவள் யவனாவை முறைப்பதை நிறுத்தவில்லை.

யவனா பள்ளிக்கூடத்தில் ஆட்டம் போட்டு மாட்டிக் கொண்ட மாணவியாக கை கட்டிக் கொண்டு பவ்யமாக நின்றாள்.

கணவரை சோபாவில் அமர வைத்துவிட்டு உள்ளே போய் தண்ணீர் எடுத்து வந்து அவருக்கு கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு, அதே சொம்பை தன் வாயிலும் கவிழ்த்துக் கொண்டவளின் கோபம் சற்றுக் குறைந்தாற் போலிருக்க,யவனா ஓடிப் போய் அவள் தோள்களில் தொற்றிக் கொண்டாள்.

“சித்தி பாஸ்போர்ட் விசாரணைக்கு போலீஸ் ஸ்டேசனிலிருந்து ஆள் வந்துட்டாங்க.இன்னும் ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் வந்துடுமாம்” குரல் குறைத்து மிழற்றினாள்.

அருந்ததி அருந்திய நீர் மிடறு மிடறாய் தொண்டைக்குள் இறங்க அவள் முகத்தில் விரும்பா பாவம்.நல்லசிவம் சந்தோசமாக மனைவியை பார்க்க, அருந்ததி விருட்டென அடுப்படிக்குள் போய்விட்டாள்.

என்னம்மா இது என்பது போலொரு சங்கடப் பார்வை பார்த்த தந்தைக்கு சரியாகிடுமென கையசைத்து ஜாடை சொல்லிவிட்டு சித்தியின் பின் போனாள் யவனா.எரியாத அடுப்பு முன் வெறித்தாற் போல் நின்றிருந்தாள் அருந்ததி.




“அரு…அருந்…தீ..தீதீதீதீ…”வழக்கமான  விளையாட்டாய் சித்தியை சீண்டினாள்.அருந்ததியின் முதுகு விரைத்து தணிய சித்தியின் மனதை உணர்ந்தவள் வேகமாக பின்னிருந்து அவளை மெல்ல கட்டிக் கொண்டாள்.

இன்றைய பிணி சூழலில் சமூக இடைவெளி நிர்பந்தமாகி விட்டாலும்,சக மனிதர்களின் ஸ்பரிசம் என்பது அலை பாயும் மனதிற்கான ஆறுதல் உயிர் துடிப்பென்பதனை யவனா நன்கு அறிவாள்.

அவளது தாய் இறந்த பின்பு இன்னொரு மணம் வேண்டாமென இருந்த தந்தைக்கு கட்டாயப்படுத்தி அருந்ததியை மணம் முடித்து வைத்தவள் அவள்தான்.இது போன்ற பாச வருடல்கள் தனக்கு மட்டுமல்ல தன் தந்தைக்கும் அவசியமென்பதனை அவள் அந்த பதினோரு வயதினிலும் உணர்ந்தே இருந்தாள்.

அதனால்தான் பனிரெண்டு வயதில் பெரிய மனுசி ஆன போது வலியும்,பயமுமாக சுருண்டு கொள்ள ஒரு ஆதரவான அன்னை மடி கிடைத்தது அவளுக்கு.ஐந்து வயது வரை தாயின் அரவணைப்பில் வளர்ந்தவள்.பிறகுமே தந்தையின் அணைப்பை மிகவுமே எதிர்பார்ப்பாள்.

நல்லசிவத்திற்குமே மனைவி போன பிறகான வாழ்க்கை பயத்திற்கு ஆதரவாக மகளின் அண்மை தேவைப்பட்டது.எந்நேரமும் தகப்பனின் தோள்களில் ,மடியில் இரவில் அவருடன் அரவணைப்பான தூக்கத்தில் என இருந்த பேத்தியை யோசனையாக பார்த்தார் சௌந்தரம் பாட்டி.நல்லசிவத்தின் அம்மா.

மருமகள் மறைந்ததும் கிராமத்திலிருந்து இங்கே வந்து மகன் ,பேத்தியுடன் தங்கியிருந்தார்.ஆனாலும் தன் கிராமத்து வாழ்வை விட வேண்டியிருந்ததில் மனச் சங்கடத்தில் இருப்பவர்.இரண்டு ஆண்டுகள் கடந்த பின் மகனிடம் மறு திருமண பேச்சை எடுக்க ,மகன் மூர்க்கமாக மறுக்க தந்தை மகளின் பாச பிணைப்புகளை சற்றே கவலையாகவே பார்த்திருந்தார்.

பெண்பிள்ளை…யாரையும் ஒட்டாதே …தள்ளி நில்லு.அப்பா மடியிலெல்லாம் உட்காராதே.எதற்கு இப்படி மேலே விழுகிறாய் ? இப்படியெல்லாம் அப்பாவை நெருங்கும் போது மட்டுமன்றி அவரை தொடும் போதும் நச்சரித்த பாட்டியை யவனாவிற்கு பிடிக்காமல் போனது.

மேலும் இரண்டு வருடங்கள் கடந்த பின்பு இழந்து விட்ட பேரிழப்பு தந்தை ,மகள் இருவருக்குமே தனித்திருக்கும்,ஆட்களின் அருகாமையற்ற நிலை ஒரு வித பயத்தை தருவதை சௌந்தரம் உணர்ந்தார்.மீண்டும் நல்லசிவத்திடம் திருமண பேச்சை ஆரம்பித்தார்.திரும்பவும் அவருக்கு தோல்வியே.

தகப்பனும் ,மகளும் அவர்களுடைய தனியுலகிலிருந்து வெளி வருவதாக தெரியக் காணோம். இப்போது பாட்டி தனது தாக்குதல் முனையை மாற்றினார்.இந்த நகரத்து வாழ்வு மூச்சு முட்டுவதாக புலம்பினார்.கிராமத்தை நினைத்து ஏங்கினார்.தனது அரைக்காணி நிலமும்,இரண்டு சென்டு ஓட்டு வீடும் நாதியத்து கிடப்பதாக பெருந்தன சொத்துக்காரியாக அரற்றினார்.

தகப்பனும் ,மகளும் அவரை கிராமத்திற்கு மூட்டை கட்ட திட்டமிட , திடுக்கிட்டு… தன் மகனுக்கு ஒரு நல் வாழ்வு அமையாமல் இந்த இடத்தை விட்டு நகர்வேனா நான் என்று வார்த்தை சலம்பல் செய்தார்.இடையில் மகனிடம் தனிமையில் யவனா பெரிய மனுசியாகும் வயதிற்கு வந்து விட்டாள்.இனி அவளுக்கு நிச்சயம் ஒரு பெண் துணை அவசியமென்பதனை மனதில் பதிய வைத்தார்.

இதற்குள் மேலும் இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.இறுதியாக தகப்பனும் ,மகளும் மறுமணத்திற்கு ஒத்துக் கொண்டதோடு,மணப்பெண்ணையும் தாங்களே சுட்டினர்.அவள் அருந்ததி.

தமிழறிஞராக இருந்த நல்லசிவம் அரசுப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்ததோடு,தமிழர்களின் சரித்திரங்களை ஆராய்ந்து சில நூல்களும் எழுதினார்.விறுவிறுப்பான நடையில் இருந்த அவை நல்ல விற்பனையில் இருந்ததோடு,சில கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்பட்டன.தமிழ் ,தமிழர் குறித்த ஆய்விலிருக்கும் மாணவர்கள் நல்லசிவத்தின் புத்தகங்களை தேடி வாங்க,அப் புத்தக பதிப்பகத்திலிருந்து கணிசமான ராயல்டி அவருக்கு கிடைத்து வந்தது.




எனவே அவர் தனது ஆய்வை விரிவுபடுத்தி மேலும் புத்தகங்களை எழுத,அதற்கு உதவ என அவரிடம் வேலைக்கு வந்து சேர்ந்தவளே அருந்ததி. அவர் எடுத்து தரச் சொல்லும் குறிப்புகளை புத்தகங்கள் மற்றும் கூகுளில் தேடி எடுத்து வைப்பது,அவர் பேப்பர்களில் கிறுக்கி வைத்திருப்பதை அழகாக டைப் செய்து வேர்டில் சேமித்து வைப்பது.இவையே அருந்ததியின் வேலை.

அவளையே தகப்பன் மகள் இருவரும் தங்கள் மீத வாழ்க்கையுடன் இணைய தேர்ந்தெடுத்தனர்.பெரிய மனுசியாக அன்று அருந்ததி வீட்டிற்குப் போய் பேசிவிட்டு வந்தவள் பதினோரு வயது யவனாவே!

“அருந்ததி அக்காவை என் சித்தியாக அனுப்பி வைத்தீர்களானால்,அவுங்களுக்கு நிறைய டிரஸ்,நகையெல்லாம் கொடுத்து நல்ல சாப்பாடு போட்டு நாங்களே கவனித்துக் கொள்வோம்.நீங்க அவுங்களுக்கு எதுவுமே கொடுக்க வேண்டாம்”

பெரிய மனுசியாக பேசிய யவனாவை அருந்ததியின் தந்தைக்கு மிகவும் பிடித்துப் போக,அருந்ததியை அடுத்து இருந்த இரண்டு பெண்கள், ஒரு பையனென்ற தன் குடும்பத்தை மனதில் வைத்து ,உடனே சம்மதம் சொல்லி விட்டார்.

அடுத்த வாரமே நல்லசிவம் – அருந்ததி திருமணம் அந்த தெரு முருகன் கோவிலில் வைத்து நடந்து முடிந்தது. வந்திருப்பவள், குழந்தையென பேத்தியை ஒரு கையால் அணைக்கும் போதே,ஆறுதலாக கணவனையும் மறு கையில் அணைத்துக் கொள்வதை பார்த்த சௌந்தரம்,மன நிறைவுடன் கிராமத்திற்கு போய் விட்டார்.

இருண்டு வருடங்கள் முன்பு அவர் இறக்கும் வரை என் குடும்பம் காக்க வந்த மகராசி என்ற பெயரையே அவரிடம் பெற்றிருந்தாள் அருந்ததி. கொஞ்சி கொஞ்சி வளர்த்தாலும் யவனாவிடம் நிறைய விசயங்களில் அருந்ததி பயங்கர கண்டிப்புதான்.ஒரு தாயாக அவளது பருவ துள்ளல்களின் போதெல்லாம் கம்பெடுத்து மிரட்டி அதட்டி ஒடுக்குவாள்.

கதகதப்பான சித்தியின் அணைப்பிலிருந்த இரண்டு நிமிடங்களில் காற்றென இத்தனை விசயங்களும் யவனாவின் மனதினுள் சுழன்றுவிட்டன..

மென்மையாக சித்தியின் முதுகு குலுங்கலை உணர்ந்தவள் திடுக்கிட்டு அவளை திருப்பி முகத்தை பார்த்தாள்.

கண்கள் கலங்க அருந்ததி தேம்பினாள்.” யவனா நான் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்டா.என்னை போகச் சொல்லாதே “




What’s your Reaction?
+1
44
+1
31
+1
4
+1
2
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
trackback
1 year ago

[…] உறவெனும் வானவில் […]

6
3
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!