Entertainment Serial Stories சந்தன முல்லை

சந்தன முல்லை -9

(9)

   “சோஷியல் வொர்க் முடிந்ததா?– வாசுவின் குரலில் கோபம் இருந்தது.

       மாடல் டிரஸ் பார்த்து துணியை வெட்டிக் கொண்டிருந்த முல்லை நிமிர்ந்தாள்.

       வாசுவின் முகமும், கேள்வியும் அவளுக்குப் புரியவில்லை.

       “வாங்க என்று எழுந்தாள்.

       “அதிசயமா இருக்கு நீ வீட்டில் இருக்கறது

       “இதில் என்ன அதிசயம். சண்டே லீவுதானே?

       “காலேஜ் டேய்ஸ்லையே நீ அங்க ஓடுவே. இன்னைக்கும் அங்க போவியோன்னு நினைச்சேன்.

       “அங்க– என்று அவன் எதைச் சொல்கிறான் என்று புரிந்தது.

       “அம்மாவத்தான் டிஸ்சார்ஜ் செஞ்சாச்சே. இனி என்ன வேலை அங்க?

       “குட், அப்போ இனி நம்ம வேலையைக் கவனிக்கலாமா?

       “முதல்ல உள்ள வாங்க.– அவள் துணிகளை அள்ளிக் கொண்டு பாட்டி என்றபடி உள்ளே போக வாசு பின் தொடர்ந்தான்.

       “வாங்க, வாங்க– பாட்டி வேகமாக ஈரக் கையைத் துடைத்தபடி வெளியில் வந்தாள். அம்மா வீட்டில் இல்லை. அப்பாவுடன் பார்வதியைப் பார்க்கப் போயிருந்தாள். இரண்டு நாள் முன்பு வீட்டுக்கு வந்து விட்டாலும், தினசரி போய்ப் பார்த்து விட்டு ஏதானும் தேவை என்றால் செய்து விட்டு வருவார்கள்.

       அங்கே சங்கருடன் உறவுகளை வைத்துப் பேச்சு வார்த்தை நடக்கிறது.

       “நம்ம குடும்பத்தில் இல்லாத வழக்கமா என்னடா இது சேர்ந்து வாழறது? கல்யாணம் செஞ்சுக்குங்க– என்று உறவுகள் வற்புறுத்துகிறது.

       மகிமாவை வரச் சொல்கிறது. ஆனால் மகிமா வர மறுத்து விட்டாள்.

       “இது நம்ம எண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் நாமதான் முடிவு எடுக்க வேண்டும். கண்டவன்களும் தலையிட அதிகாரம் இல்லை.

       “அவங்க கண்டவங்க இல்லை. என் பெற்றோர்கள்

       “என் அப்பா, அம்மாவே தலையிட உரிமையில்லை

       அவளின் அப்பா, அம்மா மும்பையில் இருக்கிறார்கள். மகளின் எந்த விஷயத்திலும் அவர்கள் தலையிடுவதில்லை. உன் வாழ்க்கை, உன் பொறுப்பு என்று விலகல் தன்மையோடுதான் இருக்கிறார்கள். ஒரே மகன், ஜப்பான் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டான்.

       “உங்களுக்கு வேண்டியதைச் செஞ்சாச்சு. இனி எங்களுக்கான காலம் இது. இரண்டாவது வாழ்க்கை-“ என்று வெளிநாடுகள், உள்ளூர் சுற்றுலா, என்று எஞ்சாய் செய்கிறார்கள்.

       கட்டவிழ்ந்த நாகரீகம். பற்றுதல் இல்லாத வாழ்க்கை முறை.




       இது சற்று சலிப்பாக இருந்தாலும் மகிமாவின் மீதான காதல் அவனை பொறுத்துப் போகச் சொன்னது. தன் அமெரிக்க பயணத்தை சங்கர் மறுத்தது அவளுக்கு ஏகக் கடுப்பு. தினம் சண்டை வீட்டில். ஆனால் சங்கர் உறுதியாக இருந்தான்.

       “நம்ம காதலை எங்க வீட்டில் ஏத்துக்கணும். கல்யாணம். அதன் பிறகுதான் எல்லாம்.என்றான்.

       அவங்களுக்கு அவ்வளவு பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கே. இதுக்கு ஒத்துக்குவாங்களா?

       “பிள்ளைப் பாசம். எதையும் மறக்க வைக்கும்.

       சங்கர் உறுதியாக இருந்தான். அவன் அப்படி இருப்பதே பார்வதிக்குப் பெருமையாக இருந்தது. மனம் சமாதானமாகி எழுந்து விட்டாள். பிள்ளைக்கு வகை, வகையாய் சமைத்துத் தர வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டாள்.

       சங்கர் அவளிடம் வந்து “நன்றி முல்லை என்றான்.

       “என் வாழ்க்கையின் மகிழ்ச்சியை திருப்பிக் கொடுத்திருக்கே– என்றான்.

       “இல்லை சங்கர். நம்ம மகிழ்ச்சிக்கு நாமதான் முழுப் பொறுப்பாளி. மத்தவங்க அதி உங்களுக்குத் தர முடியாது. அம்மாவுக்கு உடம்பு முடியலைன்னதும் ஓடி வந்தீங்கள்ள, அப்பவே உங்க மகிழ்ச்சியை உருவாக்கத் தொடங்கிட்டீங்க. இதை அப்படியே மெயின்டெய்ன் செய்யுங்க– என்றாள்.

       ஒரு வாழ்வின் மகிழ்ச்சி என்பது அதன் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது என்று நம்பினாள் முல்லை. கோபமோ,வெறுப்போ அது நம்மையே திருப்பித் தாக்கும். உங்கள் மனதை சுத்தமாக வையுங்கள் என்றுதான் சொல்வாள் முல்லை.

       ஒரு சின்னக் கனிவான புன்னகையால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்று நம்பினாள் முல்லை. ஒரு நெகடிவான சூழ்நிலையில் கூட அதில் புதைந்திருக்கும் கோல்டன் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பார் அப்பா.

       அவளின் உறவுகள் கூடக் கேட்டது.

       “அவ்வளவு பெரிய விஷயம் நடந்த பிறகும் உன்னால் எப்படி இயல்பா இருக்க முடியுது?– என்று.

       நேர்மறையான, உற்சாகமான வாழ்க்கைக்கான திறவுகோல் நம் வில்பவர்தான். அது நம் பயணத்திலிருந்து துணிவையும், சந்தேகத்தின்போது நம்பிக்கையையும்,இழப்பின் போது சமாளிக்கலாம் என்ற தைரியத்தையும் தருகிறது. அந்தக் கீ நம் மனம்தான்.

       முல்லை தன் மனதைத் திறந்து வைத்திருந்தாள். எதையும் தைரியமாக ஏற்றுக் கொண்டாள். அவளால் எல்லோரையும் நேசிக்க முடிந்தது. எதையும் அவர்கள் நோக்கில் நின்று யோசிக்கக் கற்றிருந்தாள்.

       சங்கரின் காதலையையும், அவன் நிலையம் அவளுக்குப் புரிந்தது. அதனால் அவன் மேல் கோபப் பட முடியவில்லை. தன் மனதை அந்த நிகழ்வை விட்டு விலகக் கற்றுக் கொண்டாள்.

       வீது அவளைப் புரிந்திருந்தது. உறவுகளிடம் வீடே பதில் சொன்னது. ஒரே பெண். நாளை அப்பாவின் சொத்துக்கள் அவளுக்கு என்ற எண்ணத்தில் உறவுகளில் சிலர் பெண் கேட்டு வந்தாலும் அப்பாவுக்கு இஷ்டமில்லை. வாசு வந்து பேசியபோது, “ஏம்மா, உனக்கு இஷ்டமா?– என்றுதான் கேட்டார்.

       “எனக்குத் தெரியலைப்பா. உங்க இஷ்டம்– என்றாள்.

       வாசு இப்போது காலேஜுக்கு வரவில்லை. திருப்பூரில் புதிதாக ஆயத்த ஆடை பிரிவு ஆரம்பித்திருந்தான். அப்பா ஒருமுறை அவன் வீட்டுக்குப் போய் விட்டு வந்தார்.

       “வீடு நல்லா இருக்கும்மா. அப்பாவும் இவரும் சேர்ந்துதான் பிசினஸ் பாத்துக்கறாங்க. ஒரே பையன். அம்மா கல்லூரியில் பேராசிரியை. ரொம்ப நல்லாப் பேசறாங்க. உன்னை ரொம்ப விரும்பறான் வாசு. அவன் இஷ்டத்துக்கு மாற்று சொல்ல முடியாது. அவன் இஷ்டம்தான் எங்களுக்கும். முல்லையைப் பத்தி நிறையப் பேசுவான்னு சொன்னாங்க.

       “அப்புறம் என்னடா பேசிடலாமே?– பாட்டி.

       “பேசலாம். ஆனா கொஞ்சம் நிதானிக்கலாம்னு பாக்கறேன். கல்யாணம் நின்னு போனதுல அவங்க எதோ சுப சகுனம் இல்லைன்னு நினைக்கறாங்க. அத்தோட சங்கர்தான் நம்ம முல்லைக்குன்னு சின்ன வயசுலேர்ந்து நிச்சயம் செஞ்சது. அதனால் முல்லை மனசுல அவன் மேல இன்னும் நினைப்பு இருக்குமோன்னு யோசிக்கறாங்க. அதுவும் சரிதானே?

       “ஆமாம். யாருக்குத்தான் அந்த நினைப்பு இருக்காது? அதுவும் விடிஞ்சா கல்யாணம்கற நிலையில் இப்படி நடந்தா சந்தேகம் இருக்கும்தானே.

       “யார் தப்பு செஞ்சாலும், அது பொண்ணு மேலதான் விழும். இவ தீக்குளிக்கவா முடியும்?– அம்மா கொந்தளித்தாள்.

       “விடும்மா. கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்.

       “என்ன பரிகாரம் செய்யணுமாம்?

       “எதோ குலதெய்வம் கோவிலில் பூஜை செய்யணும். இங்க வீட்டுல ஒரு ஹோமம் செய்யனும்னாங்க. அதைச் சொல்லி விடறேன்னாங்க.

       அதுக்குத்தான் வந்திருப்பானோ? சந்தேகத்துடன் பார்த்தது வீடு.

       “அப்பா இல்லையா?

       “பார்வதி வீட்டுக்குப் போயிருக்காங்க.

       “அவங்க ரொம்ப வருஷப் பழக்கமா? வாசு தயங்கி கேட்டான்.

       “ஆமாம் அம்பது வருஷப் பழக்கம். பழக்கம்னு கூடச் சொல்ல முடியாது. ஒருத்தர் உயிர்னா, ஒருத்தர் உடல். அந்த அளவுக்கு நெருக்கம்.




       பாட்டியின் பதிலில் வாசுவின் முகம் சுருங்கியது.

       “என்ன விஷயம்பா?

       “நீங்க இன்னும் எந்த முடிவும் சொல்லலியே. அது விஷயமா கேட்டுட்டு வரச் சொன்னாங்க அம்மா. ஏன்னா, வேற ரெண்டு இடத்திலேர்ந்து பொண்ணு வந்திருக்கு. அவங்களுக்குப் பதில் சொல்லணும்.

       “தம்பி இது உடனே முடிவு செய்யற விஷயம் இல்லை. கல்யாணம் நின்னு ரெண்டு மாசம்தான் ஆகுது. மனசளவில் பட்ட காயத்தை மறக்க கொஞ்ச நாள் ஆகும். முல்லையின் படிப்பு முடியட்டும்னு பாக்கறோம்.

       “எப்படி இருந்தாலும் இனி சங்கர் வரப் போறதில்லை. முல்லைக்கு வேற இடத்தில் கல்யாணம் செய்யத்தான் போறீங்க. இன்னும் ஏன், லேட் செய்யணும். எனக்கு முல்லையைப் பார்த்ததும் பிடித்து விட்டது

       “யாருக்குத்தான் அவளைப் பிடிக்காது?– பாட்டியின் குரலில் பெருமை.

       உண்மையில் முல்லை பார்த்ததும் கவரும் தோற்றம்தான். தேய்த்து வைத்த குத்து விளக்கு என்பாள் பாட்டி. அளவான உயரம். பருமன். மஞ்சள் நிறம். கண்கள்தான் அவளின் சிறப்பு. குண்டுக் கண்கள். மையிடாமலேயே கருகருவென்று அடர்த்தியான இமைகள். அதேபோல் புருவம். மூக்கு, உதடு எல்லாமே எழுதி வைத்தது போல் இருக்கும். நீளக் கூந்தலை விரித்து விடாமல் பின்னி, ஒற்றை ரோஜா வைத்திருப்பாள்.

       அதற்காகவே பாட்டி வீட்டில் ரோஜாச் செடி வளர்த்தாள்.

       இன்றைய தலை விரித்துப் போடும் நாகரீகம் அவளிடம் வரவில்லை. கண்ணுக்குத் தெரியாமல் பொட்டு வைக்காமல், நல்ல பெரிய பொட்டாக வைத்து சின்ன விபூதிக் கீற்று வைத்திருப்பாள்.

       பார்க்கவே ரம்யமாக இருப்பாள். அந்தப் பாந்தம், பதவிசுதான் அவளை வாசு விரும்பக் காரணம். மனதின் தன்மை முல்லையின் முகத்திலும் தெரியும். முதல் நாள் பார்த்த உடனேயே அவளைப் பிடித்து விட்டது. அதன் பிறகு அவளைப் பற்றி விசாரித்த போது, அப்பாவின் தொழில், சொத்து விவரங்கள் திருப்தியாக இருந்தது. சொந்தம் என்று தெரிந்த பிறகு அம்மாவுக்கும் சம்மதம்.

       ஆனால் வாசுவின் மனதில் ஒரு உறுத்தல் மட்டும் இருந்தது.

       கிளம்பும்போது “ஒரு நிமிஷம்– என்று முல்லையை அழைத்தான்.

       அவளிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து “இதில் என்ன பூஜை எதுன்னு விவரம் இருக்கு. நல்ல நாளும் குறிச்சிருக்கு. அப்பா வந்ததும் இதைக் கொடுத்து உங்களுக்குச் சௌகர்யமான நாளைக் குறிக்கச் சொல்லுங்க.-என்றான்.

       “சரி. ஆனா கொஞ்சம் நாளாகும்.

       “ஏன்?

       “அடுத்த வாரத்தில் பார்வதி அம்மா வீட்டில் ஒரு ஹோமம் இருக்கு. அவங்களோடு குல தெய்வம் கோவிலுக்குப் போகணும். வேண்டுதல் இருக்கு. அப்பாவும், மாமாவும் சேர்ந்து புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிக்கறாங்க. அதுவரை வேறு எதையும் சிந்திக்க முடியாது.

       முல்லை சொன்னதும் சுர்ரென்று கோபம் வந்தது வாசுவுக்கு.

       “அங்க பொண்ணு வீட்டில் அவசரப் படறாங்கன்னு சொன்னேன்ல?

       “பரவாயில்லை. உங்களுக்குப் பொருத்தமான பெண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சுக்குங்க. ஆனா அவசரமா எதுவும் செய்ய முடியாது. புரிஞ்சுக்குங்க

       “எனக்கு ஒரு விஷயம் புரியலை.

       “சொல்லுங்க.

       “அவங்க பையன் இத்தனை துரோகம் செஞ்சிருக்கான். நீங்க இன்னமும் அந்தக் குடும்பத்தை கட்டிக்கிட்டு அழறீங்க. அப்படி என்ன அவங்க உசத்தி?

       பதில் சொல்லவில்லை முல்லை. நட்பின் பெருமையை எப்படி இவனுக்குப் புரிய வைப்பது. உயிரை விட இனிமையான நட்பு இந்தக் குடும்பத்தினருக்கு நடுவில் நிலவுவதை எப்படி இவனுக்குப் புரிய வைப்பது? வார்த்தைகளில் விளக்காமல் உணர்வுகள் மூலம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.

       வாசு அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.

       “எனக்கு ஒரு சந்தேகம்.

       “கேளுங்க.

       “இன்னமும் உன் மனசில் சங்கர் இருக்கானா? என் கூட வாழும்போதும் அவனைப் பற்றி நினைச்சுக்கிட்டுத்தான் இருப்பியா?

       முல்லை புன்னகையுடன் கூறினாள்.

       “யாரையும், எதற்காகவும் மறக்க முடியாது. எப்படி முடியும்?

       வாசு வேகமாக இறங்கிப் போனான்.

                                         ****************




 

What’s your Reaction?
+1
19
+1
18
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!