Entertainment Serial Stories

சந்தன முல்லை -8

(8)

                          கண்மூடி நின்றாள் முல்லை.

       மனது பார்வதிக்காக வேண்டியது. அவளை நினைத்து உருகியது.

       ஒரு தாயின் மனக் குமுறலையும், ஏமாற்றத்தையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

       ஒரு பெண்ணுக்கு தன் வாழ்வை விட மகன் மேல்தான் ஆசையும், பாசமும் அதிகம். அவனை இந்த உலகத்திற்குக் கொண்டு வர அவள் தன் உயிரையே கொடுக்கத் தயாராகிறாள். ஆனால் அந்தத் தியாகம் பிள்ளைகளால் புரிந்து கொள்ளப் படுவதே இல்லை.

       பல பிள்ளைகள் நன்றி மறந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

       சிறகு முளைத்தவுடன் பறந்து விடுகிறார்கள்.

       பெற்று வளர்த்து, படிக்க வைத்து, வேண்டியதை வாங்கித் தரும் வரை பெற்றவர்கள் தேவை. அதன் பின் அந்தப் பெற்றவர்களுக்குச் செய்யவே கணக்குப் பார்க்கும் பிள்ளைகள் நிறைந்த உலகம் இது..

       முல்லையின் தூரத்து உறவுப் பெண்மணி ஒருவர். ஒரே மகன், அவனைப் படிக்க வைக்க, படாத கஷ்டப் பட்டார். கணவன் இல்லை. இருந்த ஒரு ஏக்கர் பூமியை விற்று, கூலி வேலை செய்து அவனைப் படிக்க வைத்தார். பையன் படித்தான். அமெரிக்கா போனான். அங்கேயே ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டான். தாயைக் கண்டு கொள்ளவே இல்லை.

       அப்பாதான் அவள் சாப்பாட்டுக்கு வழி இல்லை என்று பிச்சை எடுப்பதாகக் கேள்விப்பட்டு அழைத்து வந்து இங்கு ஒரு இல்லத்தில் சேர்த்து விட்டார். அவ்வப்போது போய்ப் பார்த்து விட்டு கையில் செலவுக்குப் பணம் தந்து விட்டு வருவார்.

       அன்புங்கறது நம்ம இதயத்தோட கரன்சி நோட்டும்மா. அதை தேவைப்பரவங்களுக்குக் கொடுக்கணும். அது நம்ம வாழ்வை இன்னும் மலர்ச்சியாக்கும் என்பார் அப்பா.

       அது ஏன் பிள்ளைகளுக்குப் புரிவதில்லை.?

       முல்லையின் ஆச்சர்யம் இதுதான்.




       “அம்மா அம்மா என்று சுற்றும் பிள்ளைகள் மனைவி வந்ததும் அந்த அம்மாவை உதறி விடுகிறார்கள். இதில் அந்தப் பெண்ணைக் குறை சொல்லி பலனில்லை. இவன் சொல் கேட்டுதானே அவன் நடக்கிறான். இவன் சொல்வதுதானே அந்தப் பெண்ணுக்கு தெரியும். அவள் வந்தவள்.– என்பார் பாட்டி.

       “அன்பு மட்டுமே நிரந்தரம் என்பார் அடிக்கடி.

       முல்லை கண்ணுக்குத் தெரியாத நுட்பமான ஒரு சக்தி நம்மைச் சுற்றி இருக்கு. அதனால நாம நல்லவைகளை மட்டுமே எண்ண வேண்டும். ஏன்னா, தீயவை அதை விட வலிமையா நம்மைத் தாக்கும்– என்பார் அப்பா.

       முல்லை எப்போதும் தன் மனதில் நல்ல எண்ணங்களை மட்டுமே வளர்த்தாள். ஏதானும் மாறுபட்டுத் தோன்றினால் உடனே அதைத் தட்டி விட்டு விடுவாள். மனசுல தோன்றும் அன்பு தற்காலிகம். இதயத்தில் தோன்றும் அன்பு நம் வாழ்நாள் முட்டும் இருக்கும். ஆனால் ஆத்மார்த்தமான அன்பு அழியாமல் எடுக்கும் பிறவிகள் தோறும் வரும். எனவே செலுத்தும் அன்பை எதிர்பார்ப்பு இல்லாமல் ஆத்மார்த்தமா செலுத்து என்பார் பாட்டி.

       “தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இத்துடன் அன்பும் சேர்ந்தால் உலகமே சொர்க்கமாகி விடும் என்ற விவேகானந்தரின் சொற்களைத்தான் கொட்டை எழுத்தில் தன் ரூமில் எழுதி வைத்து மாட்டி இருக்கிறாள் முல்லை.

       அந்த உணர்வுகளையே எல்லோரிடமும் பரப்ப நினைத்தாள் முல்லை.

       ஆனால் பார்வதி விஷயத்தில் இது தோற்று விட்டது.

       சுவாமிநாதனை விடப் பிடிவாதமாக இருந்தாள் பார்வதி.

       நேற்று காலையில் வந்த உடனே ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்தான் சங்கர்.

       சுவாமிநாதன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் அவன் கேள்விகளுக்குப் பதில் கூறினார். ஆனால் பார்வதி முகத்தைத் திருப்பிக் கொண்டு அவனைப் பார்க்கவே மறுத்து விட்டார்.

       மனம் சுருங்கி சங்கர் வெளியில் வந்து விட்டான்.

       அவனை அந்த நிலையில் பார்க்க அப்பாவுக்குச் சங்கடமாக இருந்தாலும் எதுவும் பேச இது நேரமில்லை என்று அமைதியாகி விட்டார். வீட்டில் மட்டும் புலம்பினார்.

       “இதெல்லாம் ரொம்பத் தப்பு. அவனை விலக்கிட முடியுமா? எத்தனை இருந்தாலும் பெத்த பையன். கோபம் வச்சு என்ன சாதிக்கப் போறோம்? நீர் அடிச்சு நீர் விலகுமா? பார்வதி சரியானதும் பேசணும் இது விஷயமா– என்றார்.

       பார்வதிக்கு ஆஞ்சியோ செய்திருந்தது. ஸ்டென்ட் வைத்தால் போதும் என்று வைத்து இப்போது வார்டுக்கு வந்து விட்டார். சங்கர் இத்தனை நாளும் இங்குதான் இருக்கிறான். ஹாஸ்பிடல் வருவதும், வெளியில் உட்கார்ந்து விட்டு மாலை ரூமுக்குப் போய் விடுவான்.

       அப்பா அவனை வற்புறுத்தி  தன் வீட்டில் சாப்பிட வைத்தார். முல்லை அவனுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வந்தாள். ஆனால் சங்கர் சங்கடப் பட்டதால், அப்பா அவனுடன் கேண்டீனில் சாப்பிட்டார்.

       “எல்லோரும் சேர்ந்து அவனை ஒதுக்கி என்ன செய்யறது? என்ற அவரின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

       ஒவ்வொருவரும் முகத்தைத் திருப்பிக் கொண்டு மூலைக்கு ஒருவராக நிற்பது வருத்தமாக இருந்தது முல்லைக்கு. அவளுக்கு யார் மனசு சங்கடப் பட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றாலும் பிடிக்காது. கலகலப்பாக இருப்பதைத்தான் விரும்புவாள்.

       “வாழ்க்கைல ஆயிரம் பிரச்சினைகள் வரும். அதை எல்லாம் ஃபேஸ் பண்ணனும். இப்படி ஒதுங்கி நின்னா என்ன பலன்? அப்படியே ஒதுக்கி வைங்க. அதுவா சரியாப் போகும் “- என்பாள்.

       இப்போதும் அப்படித்தான் நினைத்தாள். சங்கர் விஷயம் அதுவாகவே சரியாகும் என்று நினைத்தாள். எல்லையற்ற பிரபஞ்ச சக்தி எந்த நேரத்தில் எது செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் என்று நம்பினாள்.

       அந்த சக்தியின் பல்வேறு வடிவங்கள்தான் தெய்வ உருவங்கள். ஒவ்வொரு கோவிலில் ஒவ்வொரு தெய்வம் இருந்தாலும் அது எல்லாம் ஒரே பரம்பொருளின் அம்சம் என்று நம்பியதால் எங்கு போனாலும் தெய்வ சன்னதியில் அருட்பெரும் ஜோதி என்று சொல்லி வணங்குவாள்.




       இப்போதும் அருகில் இருந்த விநாயகர் ஆலயத்தில் அப்படிச் சொல்லி கை கூப்பி நின்றாள்.

       “இந்த உலகம் முழுவதும் எல்லையற்ற பிரபஞ்ச சக்தி பரவியுள்ளது. அது நம் நியாயமான ஆசைகளை நிறைவேற்றும். பார்வதியின் மனஸ்தாபமும் விலகும். இறைவா நல்லதை உடனே நடத்து– கண் மூடி நின்றாள்.

       “என்னம்மா பார்வதி நல்லா இருக்காங்களா?– குருக்கள்.

       “ம். பரவாயில்லை. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் செஞ்சிடுவாங்க.

       “சங்கர் வந்தானா?

       “ம். வந்திருக்கார்.

       “அவளும் வந்திருக்காளா?

       எவள் என்று புரிந்தது. வம்பு என்றும் தெரிந்தது. சின்னப் புன்னகையோடு நகர்ந்தாலும் இதே கேள்வியை அம்மாவும் கேட்டாள்.

       “தெரியலைம்மா.

       “ஆனால் வந்த மாதிரி தெரியலை. இருவரும் சேர்ந்து வாழறாங்கன்னு கேள்விப் பட்டேன். தாலி கட்டிக்காம. என்னவோ லிவிங் டுகெதராமே. அப்படி.

       அப்பா கூறியதும் வீடு திகைத்தது.

       “என்னடி இது கூத்து.– பாட்டி.

       “கூத்து இல்லை அம்மா. இதான் இப்போ நடக்குது. விரும்பற வரை வாழலாம். பிடிக்கலைன்னா விலகிடலாம். இப்போ இதுதான் புது டிரெண்டு.

       அபா விளக்கிக் கூற வீடு சீச்சி என்றது. பழைய சம்பிரதாயத்தில் வாழ்ந்த அவர்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் உலகம் ஜெட் வேகத்தில் ஓடுகிறது. எல்லாவற்றையும் டேக் இட் ஈசி என்று ஒதுக்கி விட்டு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். ஓடும் வரை வாழ்க்கை என்று அப்பா கூறினாலும், பாட்டி இது தப்பு என்றாள்.

       “நீ பேசுடா சங்கர்கிட்ட– என்றாள்.

       “இது அவங்க பர்சனல் அம்மா.

       “இருந்தாலும் இது உன் நெருங்கிய நண்பனின் குடும்பம். சங்கர் அந்தப் பொண்ணு கழுத்தில் தாலி கட்டனும். பேரன், பேத்தின்னு எடுத்து அவங்க மகிழ்ச்சியா வாழனும். நம்ம சுவாமிநாதன் குடும்பம்டா.– பாட்டி சொன்னதில் நெகிழ்ந்தார் அப்பா.

       “கண்டிப்பா பேசறேம்மா.– என்றார். முல்லை அந்த நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள்.

       அவள் கல்லூரிக்குப் போய் விட்டு ஹாஸ்பிடல் போன போது சங்கர் ரிசப்ஷனில் அமர்ந்திருந்தான். வழக்கமாய் அங்குதான் அமருவான். முல்லையைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் என்று எழுந்து வந்தான்.

       “முல்லை ஒரு ஹெல்ப் என்றான்.

       “சொல்லுங்க

       “ஹாஸ்பிடல் பிள்ளை நான் பே பண்ணனும்னு விரும்பறேன். கேட்டுச் சொல்றீங்களா?

       “முதல்ல அம்மாவைப் பார்த்தீங்களா?

       “இன்னும் இல்லை.

       “அவரைப் பாருங்க. என்கூட வாங்க– என்றாள்.

       “தயங்கிய சங்கர், முல்லை வற்புறுத்த அவளுடன் உள்ளே வந்தான். ரூமுக்கு மாற்றி இருந்தார்கள் பார்வதியை. அவள் அருகில் அமர்ந்து எதோ பேசிக் கொண்டிருந்த சுவாமிநாதன் சங்கரைப் பார்த்ததும், முகம் சுருங்கினார்.

       சங்கர் தயங்கி அவர்கள் அருகில் வந்தான். பார்வதி கண்ணை மூடிக் கொண்டாள். முல்லை அதைக் கவனித்தாள்.

       அவளுக்கு ஏதானும் பேச வேண்டும் போல் இருந்தது.

       “எப்படிம்மா இருக்கீங்க?

       “ம்– என்றாள் பார்வதி.

       “உங்க பிள்ளை வந்திருக்கார்.

       “ம். பார்த்தேன்– வெறுப்புடன் வந்தது பேச்சு.

       “எத்தனை நாளைக்கு இந்த வெறுப்பும்மா?

       “- – – – – – – – – -“

       “அவர் செஞ்சது மட்டும் தப்பு இல்லை. நீங்களும்தான்.

       “நாங்களுமா?– திகைத்தனர்

       “ஆமாம். பெத்ததால மட்டும் நீங்க சொல்றதை எல்லாம் கேட்கணுமா? அவருக்குன்னு ஒரு ஆசை இருக்காதா? உங்க ஆசை, விருப்பம், முடிவுன்னு எத்தனை நாளைக்குத்தான் குழந்தைகள் மேல திணிக்கப் போறீங்க.

       முல்லையின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.

       “சரி, தப்புதான். ஆனால் பகை, கோபம், வெறுப்புன்னு வளர்த்து எதைச் சாதிக்கப் போறோம். மரணம்கற விஷயத்தின் முன் எதுக்கும் அர்த்தம் இல்லை. விட்டுக் கொடுத்துப் போகலாமே. அவர் உங்களுக்கு தன் மனசைப் புரிய வைக்க முயற்சி செய்திருக்கலாம். செய்யலை. தப்புதான். ஆனா, உங்களுக்காக அவர் தவிச்சிருக்கார்.

       ஒரு விஷயம் தெரியுமா? உங்க சம்மதம் வேணும்னு அவர் அந்தப் பொண்ணு கழுத்தில் தாலி கூட இன்னும் கட்டளை.

       நன்மை எனில் பொய் கூடச் சொல்லலாம் என்று நினைத்தாள் முல்லை. அது வேலை செய்தது.

       “அப்படியா?- நிமிர்ந்து உட்கார்ந்தார் பார்வதி.

       அதில் துணிந்து முன்னாடி வந்தான் சங்கர்.

       “ஆமாம்மா. நான் முல்லை கழுத்தில் தாலி கட்டியிருந்தா என்னை நம்பி இருந்த மகிமாவுக்குத் துரோகம் செஞ்சவனா ஆகியிருப்பேன். ரெட்டை வாழ்க்கை வாழ முடியாதும்மா. அவ வந்துடுவா. அதன் பிறகு உங்களுக்குச் சொல்லி கல்யாணம் செஞ்சுக்கலாம்னு நினைச்சேன். மகிமாவுக்கு டிரெய்னிங் தள்ளிப் போயிருச்சு. அதுக்குள்ளே நீங்க முகூர்த்தம் வச்சிட்டீங்க.

       “எங்க கிட்ட சொல்லி இருக்கலாம்ல?

       “பயம்பா. உங்க ஆசைகளுக்கும், என் ஆசைகளுக்கும் நடுவில் ஊசலாடிகிட்டு இருந்தேன்.

       மௌனமானார் சுவாமிநாதன். உண்மைதான். முல்லைதான் தன் மருமகள் என்று உறுதியாக இருந்தார். சங்கர் சொல்லி இருந்தால் கூட அவர் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.

       “சரி, விடுங்க. பழசை எல்லாம் பேசிட்டிருந்தா எதுவும் மாறாது. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கணும். எல்லாமே கடக்க வேண்டிய விஷயங்கள்தான்.

       “உங்களைப் பார்க்காம இருக்க முடியாதுன்னுதான் நான் அமெரிக்கா வாய்ப்பை கூட வேண்டாம்னு சொன்னேன்.

       கேள்வியாக சங்கரைப் பார்த்தார் சுவாமிநாதன். சங்கர் மெதுவாக தைரியம் வந்து அம்மாவின் காலடியில் அமர்ந்தான்.

       “அம்மா, நீதானே எனக்குச் சகலமும். நீயே என்னை வெறுக்கலாமா? நான் செஞ்சது தப்புதான். ஆனா என் பயம், குழப்பம் எல்லாம் உனக்குக் கூடவா புரியலை? உன்னைப் பாக்காம என்னால எப்படிம்மா இருக்க முடியும்? என்னை அமெரிக்காவுக்கு புது ப்ராஜெக்ட் துக்குப் போகச் சொன்னாங்க. ஆனா போனா ஐஞ்சு வருஷம் உன்னைப் பாக்காம இருக்கணும். அது என்னால் முடியாதும்மா. அதனால நான் மறுத்துட்டேன்.

       “அடப் பைத்தியமே– பார்வதியின் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.

       “உங்களை விட்டுப் பிரியறதுங்கரதை என்னால் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. எதோ முட்டாள்தனம் செஞ்சிட்டேன். என்னை மன்னிக்கக் கூடாதா?– சங்கர் உடைந்து அழுதான்.

       மகனின் அழுகையில் பார்வதி நெகிழ்ந்தார். எழுந்து மகனைத் தாவி அனைத்துக் கொண்டார். அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு சங்கரும் அழத் துவங்க முல்லை வெளியில் வந்தாள்.

       மனது மகிழ்ச்சியாக இருந்தது.

       எப்போதும் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் பல பிரச்சினைகள் தீரும். சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லாமல் இருப்பது கூடப் பல பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடும். தவறான புரிதல்களே இங்கு பல குடும்ப உறவுகள் பிரியக் காரணம்.

       ஒரு விதத்தில் சங்கர் ஓடிப் போனது கூட நல்லதுதான். பெற்றோர் கட்டாயத்துக்காக தாலி கட்டியிருந்தாலும், அந்த வாழ்க்கையில் நிறைவு, மன மகிழ்ச்சி இருக்காது.

       எதுவும் நல்லதுக்குத்தான். நன்றி இறைவா.




       முல்லை அப்பாவுக்குப் போன் செய்தாள்.

       “கண்ணு எங்க இருக்கே.

       “நீங்க ஹாஸ்பிடல் வாங்களேன்.

       “என்னம்மா விஷயம்?

       முல்லை விஷயம் சொல்ல அப்பா குஷியானார். “அட– என்றார்.

       “ஒரே, கொஞ்சலும், உருகலுமா இருக்குப்பா. நீங்க வந்து பாருங்க.

       “நீ அங்கேயே இரு. நான் வந்து உன்னை கூட்டிண்டு வரேன்.

       “சரிப்பா. நான் கொஞ்சம் துணியெல்லாம் வாங்கணும். என் கிளாசுக்கு.

       “நான் வரேன். வந்துட்டு எங்கே வேணாலும் போகலாம்.

       அவரிடம் தெரிந்த உற்சாகத்தை ரசித்தபடி முல்லை மேலே வந்தாள். எதிரில் சுவாமிநாதன் வந்தார். அவளைப் பார்த்ததும் “எங்கம்மா போனே? என்றவர் மென்மையாக “நன்றி முல்லை– என்றார்.

                                  ********************

What’s your Reaction?
+1
19
+1
21
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!