Entertainment Serial Stories

சந்தன முல்லை -10

(10)

              “ஞானம் குழைந்து உன் சொரூபத்தை அறிகின்ற

              நல்லோர் இடத்தினில் போய்- நடுவினில் இருந்து உவந்து

              அடிமையும் பூண்டு அவர் நவிற்றும் உபதேசம் உட்கொண்டு

              ஈனம் தனைத் தள்ளி எனது நான் எனும்மானம் இல்லாமலே துரத்தி

       முல்லை நிறுத்தினாள்.

       குரல் ஏனோ நடுங்கியது. ஒரு நிமிஷம் அம்பிகையைப் பார்த்தபடி நின்றாள்.

       அம்மன் அற்புதமான அலங்காரத்தில் ஜொலித்தாள். கும்பகோணம் அருகே ஒரு சிறிய கிராமம். சன்னதியும், சுற்றி ஒரு பிரகாரம் மட்டும்தான். சுவாமிநாதனின் குலதெய்வம். சுவாமிநாதன் அம்மனுக்கு புடவை, ஆளுயர மாலை, அபிஷேகப் பொருட்கள் வாங்கி இருந்தார்.

       கோவிலைச் சேர்ந்தவர்கள் குழுமி இருந்தனர். கோவில் பூசாரி நிறைவாய் அபிஷேகம் செய்து, அற்புதமாய் அலங்காரம் செய்திருந்தார். கண் கொள்ளாப் பேரழகுடன் ஜொலித்த அம்மனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.

       நேற்றே கிளம்பி வந்து உறவினர் வீட்டில் தங்கி காலையில் அபிஷேகம் செய்தார் சுவாமிநாதன். பார்வதி நல்லபடியாகத் தேறி எழுந்ததில் குடும்பமே மகிழ்ந்தது.

       “காசு கணக்குப் பார்க்க வேண்டாம் என்று அம்மாவும், முல்லையும் போய்தான் புடவை, மற்ற அபிஷேகப் பொருட்கள் வாங்கி வந்திருந்தார்கள். சுவாமிநாதன் வீட்டு வழக்கப்படி, அம்மனின் முன்பு அடுப்பு மூட்டி சர்க்கரைப் பொங்கல் செய்வது வழக்கம். ஆனால் பார்வதியால் நிற்க முடியாது என்று அவரின் கையிலிருந்து அரிசி வாங்கி, அடுப்பு பற்ற வைக்கச் சொல்லி, அம்மாவும், முல்லையும்தான் செய்தார்கள்.




       சுற்றிலும் பசுமையான வயல். சின்னதாக ஒரு ஓடை இருந்தது. மழைக்காலம் ஆனதால் அதில் தண்ணீர் ஓடியது. வயலின் நடுவில் கோவில். பல காலமாக சின்னச் சன்னதி இருந்த இடத்தில் இப்போதுதான் இடம் வாங்கி கோவிலை எடுத்துக் கட்டும் முயற்சியில் இருந்தார்கள். அந்தக் குழுவில் சுவாமிநாதன் ஒரு உறுப்பினர். அப்பா கட்டுமான நிறுவனம் நடத்தியதால் கோவில் கட்டும் வேலை அவர் மூலம் நடக்கிறது.

       நேற்று இரவு அது பற்றிய கூட்டம் நடந்தது.

       “சிறப்பா நான் கோவில் கட்டித் தரேன். அந்த தெய்வம் என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்.– அப்பா கலங்கினார்.

       “நீங்க கோவில் வேலையை ஆரம்பிங்க. முடியறதுக்குள்ள உங்க பொண்ணுக்கு அற்புதமான இடம் அமையும். சங்கரும் இங்க வந்து மகிமா கழுத்துல தாலி கட்டுவான்– என்றார் குடும்பத்துப் பெரியவர்.

       எல்லோரின் விருப்பமும் அதுதான்.

       மகிமாவின் மனதை மாற்றி அவளை அழைத்து வருகிறேன் என்று போயிருக்கிறான் சங்கர். அப்பாவும் வாசு குடும்பத்தைப் பார்த்துப் பேசி விட்டு வருகிறேன் என்று போனார். அங்கு என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து போனதும் நிச்சயம் நடக்கலாம் என்று பாட்டி சொன்னார்.

       அடுத்த நிச்சயமா? யார் என் மாப்பிள்ளை?

       அங்கு எதோ கண்டிஷன் போட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் என்ன என்று தெரியவில்லை. அதில் மனம் குழம்பித் தவிக்கிறது.

       “ஏம்மா பாட்டை நிறுத்திட்டே?– சுவாமிநாதன்.

       “இதோ பாடறேன் மாமா– முல்லை தொண்டையைச் செருமிக் கொண்டாள்.

       “வான் அந்தம் ஆனவிழி அன்னமே உன்னை என் மனத்தாமரைப் போதிலே

       வைத்து வேறே கவலை அற்றுமேல் உற்றபர வசமாகி அழியாத ஓர்

       ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்?

       பாடி முடிக்கும் வரை அமைதியாக இருந்தது அந்த இடம்.

       “ஆஹா, தேனா வழுக்கறது குரல்.– பார்வதி.

       “சுவாமினாதன் தானே அவளை பாட்டுக்கு விடாப்பிடியா அழைச்சுகிட்டு போனான்.– பாட்டி.

       அவள் பாட வேண்டும் என்பது சாமிநாதனின் ஆசை. வாரம் மூன்று நாள் அவர்தான் அவளை பாட்டு கிளாசுக்கு அழைத்துப் போவார். ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ்டூ வரை சென்றாள். குருவுடன் சேர்ந்து திருவையாறும் சென்று பாடினாள். அவர் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கோவிலில் அவள் அரங்கேற்றமும் நடந்தது. 

       அவள் மேடைக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது அவரின் ஆசை. ஆனால் கொரானா ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என்று அவளால் மேற்கொண்டு கிளாசுக்குப் போக முடியவில்லை. அவளின் குருவுக்கும் கொரானா பாதித்ததால் வகுப்புகளை நிறுத்தி விட்டார்.

       “இது உள்ளுக்குள்ளேயே அமுன்கிடக் கூடாதுடா. இருக்கட்டும். சாய்பாபா காலனியில் ஒருத்தர் பாட்டு கிளாஸ் எடுக்கறார். அங்க கூட்டிட்டு போறேன்.

       “இருக்கட்டும் சாமி. கல்யாணம் செஞ்சுடலாம்.

       “செய். இவ பாடறதை யார் தடுக்கப் போறா? வரவன் இவள் குரலை உலகம் முழுக்க முழங்கச் செய்யட்டும்.

       வாசு செய்வானா? அப்பா யோசனையுடன் இருந்தார். அவர் முகம் எதோ யோசனையும், கவலையுமாக இருந்ததை முல்லை கவனித்தாள். ஒரு வாரமாக இப்படித்தான் இருக்கிறார். அவளைப் பற்றியக் கவலைதான். இதற்குத்தான் பெண் குழந்தைகள் வேண்டாம் என்கிறார்களா?

       ஒரு பெண் குழந்தை பிறந்து அவளை பத்திரமாக, பாதுகாப்பாக ஒருவன் கையில் ஒப்படைக்கும் வரை பெற்றவர்களுக்கு நிம்மதி இல்லை. என்னதான் பெண் படித்து, வேலைக்குச் சென்றாலும் அவள் மனதைக் குரூரமாகக் குலைத்துப் போடும் சமூகம் இன்னும் மாறவில்லை.

       இதயத்தில் கேவலமான புத்தி கொண்டவர்களே இன்னும் நம்மைச் சுற்றி உலாவுகிறார்கள். இதை உதறித் தள்ள பெண்தான் முயல வேண்டும். யார் என்ன சொன்னாலும் தன் பாதையில் அவள் உறுதியாக நடக்க வேண்டும். இதயம் முழுவதும் அன்பு வைப்பது அழகானதுதான். ஆனால் அக்கறையும், கவனமும் கொண்ட இதயம் வலிமையானது.

       எல்லோரையும் திருப்தி படுத்துவது என்பது முடியாத விஷயம்.




       முல்லை சரி, சரி என்று போகப் பழகி இருந்தாள். நடந்ததையோ, நடக்க இருப்பதையோ,பற்றி அவள் கவலைப் படுவதில்லை. இந்த நிமிஷம் வாழலாம். அடுத்த நமிஷம் நடப்பதை காலம் பார்த்துக் கொள்ளும் என்பாள். இந்த மனநிலை அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தது.

       அப்பாவின் கவலை அவளுக்கு வேதனையாக இருந்தாலும், இது தேவையில்லாதது என்று நினைத்தாள். மாற்ற முடியாத விஷயங்களைப் பற்றி கவலைப் படுவதில் அர்த்தமில்லை. ஆனால் அவரிடம் எப்படிச் சொலவது என்று தெரியவில்லை. ஆனால் சுவாமிநாதன் கவனித்தார்.

       “என்னடா விஷயம்?– பூஜை முடிந்து அமர்ந்திருக்கும்போது தேங்காயை உடைத்து, ஆளுக்கு ஒன்று கொடுத்து விட்டுக் கேட்டார்.

       “எதோ யோசனையாவே இருக்கே. என்ன விஷயம்?

       “முல்லை கல்யாண விஷயம்தான்.

       “இதில் யோசிக்க என்ன இருக்கு? சங்கர் இல்லைன்னு ஆகிப் போச்சு. அவனும் செட்டில் ஆயிட்டான். முல்லைக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆனா எனக்கு நிம்மதி.

       “ஆமாம். ஒரு பையன் அவளை விரும்பறான்.

       “அவளை யாருக்குத்தான் பிடிக்காது?– பார்வதி. “அழகா இருக்கா. நல்ல திறமைசாலி. அவ பாட்டு ஒண்ணு போதுமே. பதவிசான, அன்பான பொண்ணு. குடும்பமும் நல்ல பாரம்பரியமான குடும்பம். நீங்களும் நல்லா சம்பாதிக்கறீங்க. சீர் செனத்தி நல்லா செய்வீங்க. யாருக்கு பிடிக்காம போகும்?. பையன் நல்ல குடும்பமான்னு பாருங்க.

       “நல்ல குடும்பம்தான். எங்களுக்கு தூரத்து சொந்தம் வேற.

       அப்பா வாசு பற்றிக் கூறினார்.

       “நல்ல குடும்பமாத் தெரியுதே. பேசிடலாம் கோபாலன். சொந்தமா இருந்தா கொஞ்சம் நிம்மதி. தெரிஞ்சவங்க, அப்படின்னா, நாளைக்கு ஒரு பிரச்சினைன்னா என்னன்னு கேட்கலாம். ஆனா முல்லை குணத்துக்கு எதுவும் வராது. அவ அமோகமா வாழ்வா.– சுவாமிநாதன் நெகிழ்வோடு கூறினார்.

       “நானும் வரேன். நாளைக்குப் போய் பேசிட்டு வந்துடலாம். சுபஸ்ய சீக்கிரம்.

       குதூகலத்துடன் பேசிய சுவாமிநாதனை கவலையோடு பார்த்தார் அப்பா. அவருடனான உறவு கூடாது என்பதுதானே அவர்களின் கண்டிஷன்.

       “நாங்க இப்படிச் சொல்றதை தப்பா நினைக்காதீங்க. இருபது வருஷத்துக்கு மேலா, சங்கரும், முல்லையும்தான் ஜோடின்னு பேசி வளர்ந்த குடும்பம், முல்லைக்கும் மனசல அவன் மேல நிறையக் கனவுகள், கற்பனை இருந்திருக்கும். அவன் ஆம்பளை. ஆனா பெண் அவ்வளவு சீக்கிரம் எதையும் மறக்க முடியாது. கற்பனைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனா திருமணத்தன்று அவன் ஓடிப் போனதை சாகும் வரைக்கும் மறக்க முடியாது– வாசுவின் அம்மா பேசும்போது எதிர்த்துப் பேச முடியவில்லை அப்பாவால். மௌனமாக இருந்தார்.

       “நாங்க முல்லையைத் தப்பு சொல்லவில்லை. அது அநியாயம். எங்க வீட்டிலும் பெண் இருக்கு. அநியாயமா ஒரு பெண் மேல் பழி போட மாட்டோம். ஆனா அந்தக் கருப்பு தினத்தை விட்டு அவ விலகனும்னு விரும்பறோம். எங்க குடும்பத்துக்கு வந்துட்டா, அவ மனசுல வாசு முழுமையா இருக்கணும்னு விரும்பறேன். உங்க நண்பர் குடும்பம் வந்து போயிண்டு இருந்தா அவங்களைப் பாக்கறப்போ எல்லாம் சங்கர் ஞாபகம் வரும். எங்களுக்கும் சங்கடமா இருக்கும். முல்லை இங்க நிம்மதியா வாழ முடியுமா?. அவங்களுக்கும் வாசுவைப் பாக்கறப்போ தன் பையன் இருக்கற இடத்தில் இவன் இருக்கானேன்னு எண்ணம் வரும். இல்லைன்னு சொல்லாதீங்க

       அப்பா எதுவும் சொல்லவில்லை. சரி என்றுதான் நினைத்தார். ஆனால் மனிதர்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்? அதிர்ச்சியாக இருந்தது. இந்த நோக்கில் அவர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. வியப்பு, அதிர்ச்சி என்ற உணர்வில் தாக்கப் பட்டார்.

       இதைக் கேள்விப் பட்டால் சுவாமிநாதன் எப்படித் துடித்துப் போவார் என்று கற்பனை செய்யவே முடியவில்லை. அதை விட முல்லை. என்றாலும் வாசுவை விட மனமில்லை.

       அவன் முல்லையை ரொம்ப விரும்புகிறான் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. தெரிந்தவர்கள். சொந்தம். நல்ல குடும்பம். வசதி. பையனும் படித்தவன். அழகாக இருக்கிறான். நல்ல படிப்பு என்று யோசித்தார்.

       பாட்டியிடம் மட்டும் விஷயம் சொன்னதும். “அது சரிதான். ஆனா சுவாமிநாதனை வராதேன்னு எப்படிச் சொல்ல முடியும்?

       “அதுதான் எனக்கும் புரியலை.

       “சரி, முல்லைகிட்ட இது எதுவும் சொல்ல வேண்டாம். கோவிலுக்குப் போய்ட்டு வந்துட்டு இது பற்றிப் பேசலாம்

       “அம்மா, இனி வேற எடம் பார்த்து, அந்தப் பையன் எப்படி என்னன்னு விசாரிச்சு அலையறதை விட இது நம்ம மாமா குடும்பம். நல்ல மனுஷங்கதான். முல்லையை நல்லா பாத்துக்குவாங்க. ஆனா சாமிநாதன் வேண்டாம்னா எப்படி?

       “அவன் முல்லை வீட்டுக்கு வர வேண்டாம்னுதானே சொல்றாங்க.

       :அவங்க வர எந்த பங்க்க்ஷனுக்கும் அவன் வரக் கூடாதுன்னு சொல்றாங்க.

       “அதெப்படி. முல்லை வீட்டுக்குப் போக வேண்டாம். சரி. நம்ம வீட்டுக்கு வாரதை எப்படித் தடுக்க முடியும்? அப்படிச் சொல்லவும் கூடாது.

       “சொன்னால் சுவாமிநாதன் தாங்க மாட்டான்,

       “சொல்ல வேண்டாம். முதல்ல கோவிலுக்குப் போய்ட்டு வரலாம். அப்புறம் எல்லாம் பேசலாம். எதிலேயும் உடனே முடிவு எடுக்க வேண்டாம். கொஞ்சம் தள்ளிப் போடு. பொறுமை பல விஷயங்களுக்கு நல்ல முடிவு தரும்.

       “முல்லையோட கல்யாணத்தைச் சீக்கிரம் முடிக்கணும். அதுதான் என் ஒரே கனவு

       “எல்லாம் நல்லதா முடியும். பொறுமையா இரு– என்ற பாட்டி, அம்பிகையிடமே சரண் அடைந்து விட்டாள். இது பற்றி யாரிடமும் கலந்து பேச முடியாது. உடனே வம்பர் மகாசபை கூடி விடும். மனதிற்குள் இஷ்ட தெய்வம், குல தெய்வம் என்று வலம் வந்து பிரார்த்தனை மட்டும் செய்தாள்.

       அவர்கள் அனைவரின் முகத்தைப் பார்க்கையில் மட்டும் முல்லைக்குள்  எதோ உள்ளுணர்வு உறுத்தியது.

                                  ************************




 

 

 

 

What’s your Reaction?
+1
18
+1
21
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!