Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 25

   25

பாராமல் பார்த்து விட்டு செல்லும்
உன் ஓரவிழிகளில் ஒளிந்திருக்கும்
ஓராயிரம் ரகசியங்களிலொன்று
மூடிய என் இமை மேல் அமர
நிலவு கொதித்து நீரிலமிழ
நிறமற்று பிரிந்தது வானவில் ,
சாஸ்திரங்கள் கட்டிய கட்டத்தில்
பொருத்தம் வசீகரமாக ,
எப்படியோ நிகழ்ந்துவிட்டதது
உனை நானோ…
எனை நீயோ…
வசியப்படுத்தியது ….




சாம்பவி சாப்பாடு வீட்டிலிருந்து கொண்டு வந்துவிடுவாள் . மற்ற மூவருக்கும் ஹோட்டல் சாப்பாடுதான் .ஆண்கள் இருவரும் வெளியே போகும் வேலையை எடுத்துக் கொள்வதால் போன இடத்திலேயே சாப்பிட்டு விட்டு வந்து விடுவர் .சஹானாவிற்கும் பார்சல் ஆபிசிற்கே வந்துவிடும் .அப்படி சாப்பாட்டு நேரத்தில் வெளியே போகும் வேலை இல்லாத போது மூன்று பேருமே ஹோட்டலில் சொல்லி இங்கே வாங்கி வந்து …நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது உண்டு .

அப்போதெல்லாம் சாம்பவி கொண்டு வந்திருக்கும் வீட்டு சாப்பாடு அடியும் …பிடியுமாக காலியாகும் .அவள் சாப்பாடு எனக்கு வேண்டாம் என முகம் சுளிக்கும் சஹானாதான் அவளையறியாமலேயே சாம்பவியின் சாப்பாடை அதிகமாக சாப்பிட்டிருப்பாள் .நீ வீட்டில் போய் சாப்பிட்டுக்கொள் என்று கூறியபடி சாம்பவிக்கு ஒரு பருக்கையும் மிச்சம் வைக்காமல் அவளுக்கு ஹோட்டல் பார்சலை தள்ளிவிட்டு மூன்று பேரும் வீட்டு சாப்பாட்டை காலி பண்ணுவார்கள் .

இதனால் முதலில் சின்ன டிபன் டப்பாவில் சாப்பாடு கொண்டு வந்து கொண்டிருந்த சாம்பவி , பிறகு கேரியரில் கொண்டு வர துவங்கினாள் .அது போல் எண்ணித்தான் அன்றும் ஷ்ரத் அந்த ஐடியாவை சொன்னான் . ஆனால் ரிஷியின் மேல் கோபத்தில் இருந்த சாம்பவி …வீட்டுக்கு சாப்பிட போவதாக சொல்லிவிட்டு வீம்புடன் தான் கொண்டுவந்த டிபன் கேரியரையும் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டாள் .

இவர்கள் மூன்று பேரும்தானே ஒரே குடும்பமாக போகிறார்கள் …இடையில் நான் வேறு போய் எதற்கு உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும் ….மனதிற்குள் பொருமியபடி ஸ்கூட்டியை ஓட்டியவள் , தனது வீட்டு வாயிலிலேயே வண்டியை ஆப் பண்ணினாள் .காம்பவுண்ட் கேட்டை சத்தமின்றி மெல்ல திறந்தாள் .ஓசையெழுப்பாமல் ஸ்கூட்டியை உள்ளே உருட்டி வந்து ஸ்டாண்ட் இட்டு விட்டு , காலிங் பெல் அடிக்காமல் உள்ளே போக பின்வாசல் வழியாக வந்தாள் .

மரகதவல்லியும் , மாணிக்கவாசகமும் மதிய  நேரத்தில் தூங்கும் வழக்குமுடையவர்கள் .அவர்களோடு சாஹித்யாவும் இப்போது தூங்கிக்கொண்டுதான் இருப்பாள் .அவர்களது தூக்கத்தை கலைக்க வேண்டாமென்றுதான் இப்படி சத்தமெழுப்பாமல் உள்ளே வந்தாள் .மாலினி எதையாவது தைத்தபடியே , பின்னியபடியோ பின்புறத்தில் உட்கார்ந்திருப்பாள் .இப்படி நினைத்தே பின்புறமாக வந்தாள் .

அண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் போல ்..வாசலில் கார் நிற்கிறது என எண்ணியபடி , உள்ளிருந்து  லேசாக கசிந்து வந்த சந்திரனின் குரலை கேட்டபடி வந்தாள் . பூட்டாமல் வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருந்த பின்கதவை திறந்தபடி உள்ளே வந்தவள் …கிச்சனுக்குள் சத்தம் கேட்க அங்கே நடந்தாள் .தானும் அண்ணனுடன் சேர்ந்து சாப்பிட்டு விடலாம் என எண்ணிக்கொண்டாள் .

ஆனால் லேசாக கிச்சன் உட்புறம் தெரியவும் அங்கே கண்ணில்பட்ட காட்சியில் அடுத்த அடி எடுத்து வைக்காது காலை பின்னிழுத்துக் கொண்டாள் .

அங்கே ….கீழே அரிசி டப்பாவின் அருகே தரையில் அமர்ந்திருந்தாள் மாலினி .அவளுக்கருகே …சந்திரன் அமர்ந்திருந்தான் .டேபிளில் அவனுக்காக் பரிமாறப்பட்டிருந்த சாப்பாடு ஆறிக்கொண்டிருந்த்து .

” என்னம்மா இன்று அம்மா பேசியது ரொம்ப கஷ்டமாக இருந்த்தா …? ” மனைவியின் தலையை வருடியபடி கேட்டுக் கொண்டிருந்தான் சந்திரன் .




கண் கலங்க முகத்தில் துயரம் வெளிப்படையாக தெரிந்த போதும் ” இல்லையேங்க ….என் அம்மா இது போல் சொல்லியிருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேனா …? உங்கள் அம்மா …என் அம்மா இல்லையா …? ” என சொன்னாள் மாலினி .

” ம் ….எனது குடும்பம் சீரடைவதற்காக உன்னையும் பலியாக்கிக் கொண்டிருக்கிறோனோ என்ற குற்றவுணர்வு எனக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது மாலு ….”

” எவ்வளவு சுயநலங்க உங்களுக்கு …உங்கள் குடும்பம்னு தனியாக நின்று் கொண்டு என்னை பிரித்து விட்டீர்களே ….சாம்பவி உங்களுக்கு மட்டும்தான் தங்கையா…?எனக்கில்லையா …? உண்மையாக உணர்ந்து சொல்கிறேங்க .அவள் இப்படி கையில் குழந்தையோடு தனியாக நம் வீட்டில் இருக்கிறாளே …இதற்கு காரணமாகிவிட்டேனே என ஒவ்வொரு நாளும் நான் தீயில் வெந்து கொண்டிருக்கிறேன் தெரியுமா ..? “

” உன்னை எனக்கு தெரியும்மா .இந்த துயரத்தோடு அம்மாவின் இடிசொற்கள் , அப்பாவின் பாராமுகம் இதையெல்லாவற்றையும் தாங்கும் வலிமையை உனக்கு தரக்கூடியது கணவனாகிய நான்தானே .எனது ஆதரவான அணைப்புதானே உனது புண்களை ஆற்ற முடியும் …? திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும் ஒரு கணவன் தன் மனைவிக்கு அளிக்க கூடிய நியாயமான சுகத்தை கூட கொடுக்காமல் , சத்தியம் அது இதுவென்ற கட்டுப் போட்டு உன்னை என் வீட்டின் வேலைக்காரி யாக மாற்றி வைத்திருக்கிறேனோ என தோன்றுகிறது எனக்கு ….”

” கணவன் மனைவி உறவென்பது  எதுங்க …? கட்டிலில் படுத்து சுகம் காண்பது மட்டுமா ..? இதோ இப்போது எனை அணைத்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே , அத்தை என்னை திட்டும் போதெல்லாம் பார்வையாலேயே என்னை ஆறுதல் படுத்துவீர்களே …எனது சிறிய தேவைகளை கூட கவனித்து யாரும் அறியாமல் நிறைவேற்றுவீர்களே …இவைகளிலெல்லாம் ஏற்படாத நிறைவு அந்த கட்டிலிலா கிடைத்து விட போகிறது …? உடல்கள் கூடுவது மட்டுமே சுகம் இல்லைங்க ..உள்ளங்கள் இணைவதுதான் உண்மையான சுகம் .அப்போது உடலும் சேர்ந்து கொண்டால் அது திருப்தியின் உச்சம் .உடலின் தேவையே தோன்றாமல் நீங்கள் என்னை பார்வையாலேயே தினமும் பலமுறை திருப்தி படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் .முன்பே நாம் பேசிக்கொண்டது போல் சாம்பவி வாழ்வுக்கு ஒரு விடிவு வராமல் நிச்சயம் எத்தனை வருடங்களானாலும் நாம் கணவன் , மனைவியாக படுக்கையில் சேரப் போவது இல்லை ்இதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களோ இல்லையோ நான் மிகவும் உறுதியோடு இருக்கிறேன்! …..” சூளுரைப்பது போல் சொன்ன மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான் சந்திரன் .

” அதிகபட்சமாக ஓரிரு தடவைகள் சின்னதாக முத்தம் கொடுத்து கொள்ளலாமில்லையா …? அதனால் நமது சத்தியத்திற்கு பங்கம் ஏதும் வராது மாலு ….” குழைந்த குரலில் சந்திரன் கொஞ்சுவதை கேட்க சாம்பவி அங்கே இல்லை .

அவள் பேயறைந்த்து போல் ஒரு உணர்வுடன் செலுத்தப்பட்டவள் போல் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் .அவளுக்கிருந்த அதிர்ச்சிக்கு  இப்போதைக்கு அவள் ஆறுதல் அடையக்கூடிய ஒரே இடம் ரிஷிதரன்தான் என்று தோன்றியது .கை போன போக்கில் ஸ்கூட்டியை ஓட்டியவள் ஆபிஸிற்கு வந்த்தும் நேரே செலுத்த்ப்பட்டவள் போல் அறைக்குள் நுழைந்தாள் .

அதுவரை இருந்த வேகம் அறையினுள் இருந்த மூவரையும் கண்டதும் குறைந்துவிட , கதவை தட்டாமல் உள்ளே வந்த்து உறைக்க , இது போன்ற விசயங்களையெல்லாம் இவர்கள் இன்டீசன்ட் என்று எடுத்துக் கொள்வார்களே …ஆயாசத்துடன் அவள் கண்களை மூடி நின்றபோது சஹானாவும் , ஷ்ராவத்தும் வெளியேறிவிட்டனர் .இது போலெல்லாம் எதுவும் குத்தலாக சொல்லாமல் அவர்கள் வெளியேறியதே பெரும் ஆறுதலாக இருக்க ரிஷிதரனை ஏறிட்டவள் அவனது விரிந்த கரங்களை கண்டதும் தனை மறந்து அதில் தஞ்சமடைந்துவிட்டாள் .




அழுகையும் , கேவலும் , விக்கல்களுமாக தான் பார்த்த நிகழ்வை ரிஷிதரனின் தோள்கள் கொடுத்த தைரியத்தில் சொல்ல ஆரம்பித்தாள் .அவளை வருடி , ஆறுதல் படுத்தி அழுகையை கட்டுப்படுத்தி மெல்ல அவளிடமிருந்து விசயங்களை வாங்கினான் ரிஷிதரன் .
” மூன்று வருடங்கள்ங்க ….நம்மை போன்றே அவர்களுக்கும் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிறது .முதல் ஆறு மாதங்கள் வரை அம்மா அண்ணியை அண்ணனின் ரூமின் பக்கத்தில் கூட போக அனுமதிக்கவில்லை .பிறகு நான் அம்மாவை பேசி சமாளித்து அண்ணியை இரவு உள்ளே அனுப்பினேன் .ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லாத்து போல் இவர்கள் மூன்று வருடங்களாக இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்கள் .இதில் பெரிய கொடுமை என்னவென்றால் கடந்த ஒரு வருடமாக குழந்தை இல்லையென்று அம்மா அண்ணியை …மலடி …அது …இதுவென்று குத்திக் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் .அத்தனையும் தாங்கிக் கொண்டு ஒரு தவறான சொல் பேசாமல் அண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் .இன்னமும் எத்தனை ஆண்டுகள்  போனாலும் என் வாழ்க்கைக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை இப்படியே வாழ்வேனென்று கலங்காமல் சொல்கிறாள் .குரலில் எவ்வளவு உறுதி தெரியுமா …? இதை கேட்டு அண்ணனுக்கு பெருமை வேறு .எனக்கு அவர்கள் இருவரின் கால்களிலும் பூ போட்டு வணங்க வேண்டும் போலிருந்த்து ….”

” ம் …அதனை நீ அப்போதே செய்திருக்க வேண்டும் பவி …” குரலில் நெகிழ்வோடு சொன்னான் ரிஷிதரன் .

” செய்திருப்பேங்க …ஆனால் மிகக் குறைவாக அவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த சின்ன தனிமையை வேறு கலைக்கவேண்டுமா …என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டேன் .அத்தோடு எனக்கு அப்போது உடனே உங்களை பார்க்க வேண்டும் போல் …எல்லாவற்றையும் சொல்லி அழ வேண்டும் போல் தோன்றியது ..அதனால்தான் உடனே இங்கே ஓடிவந்துவிட்டேன் ….” மறைவின்றி தனது மனதை உரைத்த மனைவியை இறுக்கி அணைத்துக் கொண்டான் .

” போதும்டா அழுதது …எப்போது பார்த்தாலும் சின்ன குழந்தை போல் இது என்ன அழுகை …? ” அதட்டியவன் அவள் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரை தன் கன்னத்தால் அழுந்த தேய்த்து துடைத்தான் .

” இப்போது நான் என்னங்க செய்யட்டும் …? யாரிடம் பேச …? அண்ணனிடமா …? அண்ணியிடமா …? என்ன பேச ….? …” குழந்தையாய் தன் முகம் பார்த்து கேட்ட மனைவியின் முகத்தை வருடியபடி …

” உன் அம்மாவிடம் பேசு ….” என்றான் .

” அம்மாவிடமா …ஐயோ வேண்டாங்க .அது சரி வராது .அம்மாவிற்கு ஏற்கெனவே அண்ணியை பிடிக்காது …”

” அதனால்தான் அவர்களிடம் பேச சொல்கிறேன் .உன் அண்ணியை பற்றி உன் அம்மா தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா …? “

ரிஷிதரன் விளக்கமாக சொன்னாலும் சாம்பவிக்கு தயக்கமாகத்தான் இருந்த்து .

” அம்மாவிடம் மட்டும் பேசினால் சரியாகிவிடுமா …? ” கணவன் , மனைவியாக சேர்ந்து பேசி முடிவெடுத்திருக்கிறார்கள் .இதில் அம்மா சொல்லி என்ன நல்லது நடக்க போகிறது என்ற எண்ணம் சாம்பவிக்கு .

” உன் அம்மாவையும் , அப்பாவையும் இன்று மாலை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அழைத்து போய் பேசு பவி  மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன …” ரிஷிதரன் உறுதியாக சொன்னான் .

” அண்ணி பாப்பாவை பார்த்துக்கொள் .நாங்கள் கோவலுக்கு போய்விட்டு வருகிறோம் ….” என்று அம்மாவையும் , அப்பாவையும் அழைத்து வந்து தெப்பகுள படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தாள் சாம்பவி .மெல்ல பேச தொடங்கினாள் .

சுட்டு எடுத்து வைத்திருந்த செங்கற்களின் தரத்தை சோதித்துக் கொண்டிருந்த சந்திரன் , அவர்கள் கம்பெனி வெளிப்புற கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ஆளைக்கண்டதும் வியப்பால் விழிகளை விரித்தான் .

” என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையெதுவும் இருக்காது என்று நினைக்கிறேன் ்..”,என்றபடி வந்து நின்றவன் ரிஷிதரன் .




” வா…வாங்க ..நா…நானே உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன் …” சந்திரன் தடுமாறினான் .

” ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை .முடிந்தவரை உன்னை சந்திக்ககூடாது என்றே நினைத்திருந்தேன் .ஏனென்றால் எனக்கிருக்கும் கோபத்திற்கு உன்னை நேரில் பார்த்தால் ….” முடிக்காமல் பற்களை நறநறத்தான் .

பதில் கோபமாக வேகதாக வெளியே வந்து விழத்துடித்த வார்த்தைகளை தங்கையை நினைத்து அடக்கினான் சந்திரன் .

எப்போதும் போல் அன்றும் அவளிடம் தங்காமல் அழுது அடம் பிடித்த சாஹித்யாவை சமாளிக்க முடியாமல் திணறினாள் மாலினி .மரகதவல்லி வரும் போது மட்டும் சாஹித்யா அழுது கொண்டிருந்தாளென்றால் அவ்வளஙுதான் மாலினி தொலைந்தாள் .அதற்குள் குழந்தையை சமாதானப்படுத்தி விட வேண்டுமென்று மாலினி முனைய , சாஹித்யா …உனக்கும் பெப்பே …உங்க அப்பனுக்கும் பெப்பே …என சொல்லுவது போல் அவளை ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தாள் .

தூக்கி எடுத்து இடுப்பில் நிறுத்த முனைய அதற்கு அடங்காது திமிறிபடியிருந்த சாஹித்யாவை பார்த்தபடி உள்ளே நுழைந்த மரகதவல்லியை பார்த்ததும் மாலினிக்கு கை கால்கள் நடுங்க தொடங்கியது .

“சாப்பாடும் கொடுத்து பார்த்துட்டேன். விளையாட்டும் காட்டி பார்த்துட்டேன் .ஆனால் அழுது கொண்டே இருக்கிறாள் அத்தை …” மிகுந்த பயத்நோடு தன்னை நோக்கியபடி பேசிய மருமகளை பார்த்த மரகதவல்லி பதில் பேசாமல் குழந்தையை தனது கைகளில் வாங்கிக் கொண்டாள் .

” காபி கொண்டு வரவா அத்தை …? ” பயத்துடனேயே கேட்டாள் .

” ம் …நீ …குடித்துவிட்டாயா …? “

மாமியாரின் கேள்வியில் ஆச்சரியமானாள் மாலினி .

” குழந்தையை சமாளிக்கத்தான் உனக்கு நேரமிருந்திருக்கும் .போ …முதலில் நீ காபி குடித்து விட்டு பிறகு எங்களுக்கு கொண்டு வா …,”

தன் காதுகளில் வழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் உள்ளே நடந்தாள் மாலினி .

” நல்ல நாள் பார்க்கலாமா …? ” மரகதவல்லி மாணிக்கவாசகத்திடம் கேட்க , அவர் …

” இதற்கு மேல் என்ன நல்ல நாளடி இருந்து விட போகிறது .இன்று அமாவாசை .நல்ல நாள்தான் ” என்றார் .

” பூ வாங்க வேண்டும் பாப்பு …” ஆட்டோவை அனுப்பிவிட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்த சாம்பவியிடம் கூறினாள் மரகதவல்லி .

” வேறு எதுவும் வாங்க வேண்டுமானாலும் சொல்லி விடுங்கள் அம்மா .நான் வண்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டு வருகிறேன்” என்றாள் சாம்பவி .

என்ன பேசுகிறார்கள் என்ற குழப்பத்தில் இருந்தாள் மாலினி .வீட்டிற்கு வந்த சந்திரனின் முகத்திலிருந்தும் எதுவும் அறிய முடியவில்லை அவளால் .

இரவு அவளது அறைக்குள் அவளை இழுத்து போன சாம்பவி ஒரு பட்டு சேலையை கொடுத்து உடுத்திக் கொள்ள சொன்னாள் .காரணம் கேட்டபோது இன்று ஏதோ நல்ல நாளாம் ..அதனால் இந்த ஏற்பாடுகளை அம்மா செய்ய சொன்னதாக சொன்னாள் .

உண்மையை சொல்லி மாலினியுடம் பேசிவிட சாம்பவிக்கு ஆசைதான் .ஆனால் மாலினி அறைக்குள்ளே போகவே ஒரேடியாக மறுத்து விட்டால் என்ன செய்வதென்ற பயம் அவளுக்கு .மாலினியின் உறுதியான பேச்சை கேட்டவளல்லவா அவள் .எனவே பேசாமல் அறையையும் , அண்ணியையும் அலங்கரித்து அறைக்குள் அனுப்பிவிட்டு அவள் திரும்ப வந்துவிடுவாளோ என்ற பயத்துடன் கொஞ்சநேரம் அறைக்கதவை கவனித்தபடி இருந்தாள் .




அப்படி எதுவும் நடக்காத்தால் நிம்மதியுடன் படுக்க போனாள் .மறுநாள் காலை அறைக் கதவை திறந்து வெளியே வந்த மாலினியின் முகத்தில் நிறைந்திருந்த வெளிச்சமும் , வெட்கமும் சுபமான நிகழ்வை சொல்ல …இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டாள் .

தலை குளித்து ஈரக்கூந்தலை துண்டினால் சுற்றியபடி வந்து நின்ற மாலினி அடுப்படியில் காபி போட்டுக் கொண்டிருந்த மரகதவல்லியிடம் போய் ” நான் காபி போடுகிறேன் அத்தை ” என்றாள் .

” குளித்துவிட்டாயல்லவா …போ ..போய் முதலில் பூஜையறையில் விளக்கேற்று …” திரும்பி பார்க்காமல் சொன்னாள் மரகதவல்லி .

பூஜையறை வாசலில் அவளை நிறுத்திய சாம்பவி அவள் முகத்தை நிமிர்த்தி கண்களுக்குள் பார்த்து ” அண்ணி ….” என கேள்வி கேட்டாள் .

வெட்கத்தில் முகம் சிவக்க ” ரொம்ப தேங்க்ஸ் சாம்பவி உனக்கும்  .உன்னவருக்கும் ….” என அவளை அணைத்துக் கொண்டாள் மாலினி .

” அவரா…அவர் …என்ன ….” குழம்பினாள் சாம்பவி .

” ஆமாம் அவர்தான் நேற்று ஆபிஸில் உன் அண்ணனை பார்த்து பேசியிருக்கிறார் .இப்போது நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறோம் .கொஞ்சம் எங்களுக்காகவும் வாழ போகிறோம் …” என்றவள் …அறையிலிருந்து வெளியே வந்த சந்திரனை காணவும் …

” அவர் எந்திரிச்சிட்டார் போல .நான் போய் அவருக்கு காபி கொடுக்கிறேன் …” என்றாள் பரபரப்பாக .

” ம் …ம் …நடத்து அண்ணி …நடத்து ….” என்ற சாம்பவியின் கேலிக்கு முகம் சிவந்து உள்ளே ஓடிவிட்டாள் .

நீ அம்மாவிடம் பேசு .மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என நேற்று சொன்னானே ..இதைத்தான் சொன்னானா …?சாம்பவியின் மனம் நெகிழ்ந்த்து .ரிஷிதரனிற்கு சந்திரன் மேலுள்ள கோபத்தை அவள் அறிவாள் .மிகவும் வெறுப்பு கூட கொண்டிருந்தான் ்ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு அவனே நேரில் போய் அண்ணனிடம் பேசினானா …? அதனால்தானே இந்த விசயம் இவ்வளவு சுபமாக முடிந்த்து .

கணவனின் மேல் சாம்பவிக்கு காதல் அளவில்லாமல் பெருகியது . உடனே அவனை பார்க்க வேண்டும் போலிருந்த்து .ஆனால் அன்று ஞாயிற்றுகிழமை ஆபிஸ் கிடையாது .நாளைதான் அவனை பார்க்கமுடியும் .இன்றைய நாள் முழுவதையும் அவனை பார்க்காமல் தள்ள வேண்டுமா …அலுப்புடன் நினைத்தபடி டிவி முன்னால் அமர்ந்தாள் அவள் .

அன்று மாலை தனது வழக்கம் போல் சாஹித்யாவை அருகிலிருந்த பார்க்கிற்கு விளையாட கூட்டிச்சென்றாள் .கண் பார்வையில் மகளை விளையாட வைத்துவிட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த போது …

” சாம்பவி …எல்லாம் நல்லபடியாக முடிந்த்தா …? ” என கேட்டபடி அவளருகே வந்து அமர்ந்தான் ரிஷிதரன் .




What’s your Reaction?
+1
52
+1
26
+1
0
+1
2
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!