Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 24

 24

சுட்டெரிக்கும் உன் சூரிய  தகிப்பிற்கு
பதிலாய் ,
முட்களை பூக்கும் சப்பாத்திக்கள்ளியாய்
நான் ,
நமக்கிடையே பந்தி விரித்து காத்திருக்கிறது
முன்னொரு முறை நாம் பகிராத பொழுதொன்று ,
கட்டைகளை நீ உருட்ட
தாயத்திற்கு காத்திருக்கிறேன் ,
காலங்களை தின்றபடி
கனைத்து நிற்கிறது மரக்குதிரை ,
மலைத்து வந்தாலும்
மிதப்பாய் நடக்கிறேன் நான் ,
மனிதனை கண்டுகொள்ளா
கந்தர்வகன்னி பாவனையில் .




சாம்பவிக்கு கோபமாக வந்த்து .முந்தைய நா்ள்  கோவில் சம்பவத்திற்கு பின் இரவு முழுவதும் அவள் தூங்கவேயில்லை .எப்போதடா விடியும் …? எப்போது ரிஷியை பார்க்கலாம் என தவித்தபடியிருந்து பத்து மணிக்கு வரவேண்டிய ஆபிசிற்கு ஒன்பதரைக்கே வந்து நின்றால் , ரிஷிதரன் ஆபிசிற்கே வரவில்லை .

அவனில்லாது வேலை ஓடாமல் போய்விட இவனென்ன இப்படி சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விடுகிறான் .வரட்டும் …வச்சுக்கிறேன் ..என மனதிற்குள் பேசியபடி இருந்தாள் சாம்பவி .அப்போது மெல்ல உள்ளே நுழைந்த சஹானா கண்களில் பட்டாள் .நிதானமாக நடந்து போய் அவள் முன் நின்று கொண்டு கைகளை கட்டிக்கொண்டு , அவளையே குறுகுறுவென பார்த்தாள் சாம்பவி .

அவள் விழிகளை சந்திக்க முடியாமல் முதலில் திணறியவள் , பிறகு தன்னை சுதாரித்துக்கொண்டு ” என்ன …? எதுக்கு அப்படி பார்க்கிறாய். …? ” என்றாள் .

” நேற்று கோவிலில் ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தாயே …? அது யாருடைய குழந்தை சஹி …? ” குறும்பாக கேட்டாள் .

” ஏய் ரொம்பத்தான் அலட்டாதே .அங்கே உன் குழந்தை மட்டுமல்ல .எந்த குழந்தையாக இருந்தாலும் …நான் அப்படித்தான் செய்திருப்பேன் …”

” எப்படி …அப்படி கட்டியணைத்து …முத்தம் கொஞ்சி …என்றா …? “

” ஷட் அப் யுவர் மவுத் .என்னவோ சாதித்தது போல் பீற்றுகிறாயே …”

” அப்போ அது என் குழந்தையென்று ஒத்துக்கொள்கிறாய் .அப்படியானால் அதற்கு அப்பா யாராக இருக்ககூடும் …? “

சஹானா அவளை எரிப்பது போல் பார்த்தாள் .

” யாரென்றே தெரியாதவனுக்கெல்லாம் பிள்ளை பெற்றுக் கொள்ளும் அளவு உன் தோழி மட்டமானவளா சஹி ….? ” சாம்பவியன் குரல் தழுதழுத்தது .

” யூ …..ஐ டோன்ட் வான்ட் ட்டூ சீ யுவர் பேஸ் .கோ ட்டூ ஹெல் …” கத்திவிட்டு ஆபிஸ் அறைக்குள் போய் பூட்டிக்கொண்டாள் .

சுற்றிலும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வேடிக்கை பார்க்க , தளுதளுத்த தனது குரலை காட்டாமல் அவர்களை அதட்டி வேலை பார்க்க பணித்துவிட்டு தனது கண்களை துடைத்துக்கொண்டாள் சாம்பவி .

உள்ளே போன சஹானா அழுது கொண்டிருப்பாளென தோன்றிவிட , அவளை சாமாதானப்படுத்தவென போனவள் , அங்கே ஷ்ராவத் அவள் தலையை வருடியபடி ஏதோ ஆறுதலான வார்த்தைகளை அவளுக்கு கூறிக்கொண்டிருந்த்தை கண்டாள் .

அதனை பார்த்ததும் ஏனோ தனது வாழ்வு சீரடைந்து விடப் போவதாக அவளுக்கு தோன்றியது .ரிஷிதரன் திரும்பி வந்த்தும்  ஆவலோடு சாம்பவியை நெருங்கும் போதெல்லாம் சஹானாவை நினைத்துதானே அவள் தயங்கினாள் .வேறு சில காரணங்கள் அவனை தவிர்க்கவென்று அவள் இதயத்தில் தோன்றியபடி இருந்தாலும் முக்கிய காரணம் சஹானாதான் .கண் முன்னால் துறவி போல் வாழ்ந்து கொண்டிருக்கும் தோழியை காணும் போதெல்லாம்! அவள் மனதில் குற்றவுணர்வு அரித்துக் கொண்டேயிருக்கும் .

இப்போது யோசித்து பார்த்தால் ரிஷிதரன் கூட இந்த யோசனையிலேயே இருந்திருப்பானென்று தோன்றியது .அதனால்தானே தங்கையை கோவிலுக்கு அழைத்து வந்து சாஹித்யாவுடன் பழக வைத்திருக்கிறான். அவன் நினைத்தது போன்றே அவனது திட்டம் வெற்றி பெற்றுவிட்டது .இதோ இப்போது ஷ்ராவத்திடம் ஆறுதல் தேடுமளவு சஹானா இறங்கி வந்திருக்கிறாள் .இவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணைந்து விட்டால் அதன் பிறகு சாம்பவியும் , ரிஷிதரனும் இணைவதில் என்ன தடை இருக்க போகிறது .

இந்த எண்ணம் வந்தவுடன் சாம்பவிக்கு உடனடியாக ரிஷிதரனை பார்க்க வேண்டும் போலிருந்த்து. இதோ இப்போது சஹியை சீண்டியது போல் …தூணின் பின்னால் மறைந்திருந்து அவனது குழந்தையை போட்டோ எடுத்தானே …அவனையும் சீண்ட வேண்டும் போலிருந்த்து .என்ன இது மணி பதினொன்றாக போகிறதே ..அவனை இன்னமும் காணவில்லையே …? இனிமையான படபடப்புடன் வாயிலை பார்த்தபடி இருந்தாள் சாம்பவி .

அப்போது ஷ்ராவத் வந்து நோகாமல் ஒரு இடியை சாம்பவியின் தலையில் இறக்கி விட்டு போனான் .ரிஷிதரன்  சென்னை போய்விட்டானாம் .அவன் அம்மாவிடமிருந்து அவசர அழைப்பு என ஷ்ராவத் பேச்சுவாக்கில் சொன்னான் .உற்சாக பலூனாக எழுந்திருந்த சாம்பவியின் மனது காற்று போய் சுருங்கியது .மஞ்சுளா ….அவளது மாமியார் ..இவளை எப்படி மறந்தாள் …? இப்போதும் ரிஷியும் …சாம்பவியும் சேருவதற்கு தடையாக இருக்கும் ஜீவனல்லவா ..அவள் .வாய்த்துவிட்ட சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு , சிறிய பேச்சுக்களையும் பெரிதாக்கி …சாமர்த்தியமாக இருவரையும் பிரித்து விட்டவளல்லவா அவள் …?

அம்மாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டுதானே ரிஷிதரன் இவ்வளவு நாட்கள் இந்த பக்கமே எட்டியும் பாராமல் நாட்டை விட்டே ஓடி போனான் .இப்போதும் மகனின் உள்ளம் இந்த பக்கம் மெல்ல சாய ஆரம்பித்ததும் மஞ்சுளா அவனை அழைத்துக் கொண்டாளா …? மீண்டும் இங்கே வர விடுவாளா …அல்லது அமெரிக்காவிற்கு திரும்பவும் பேக் பண்ணிவிடுவாளா …?

இதோ இப்போதுதானே …இனி அவள் சந்தோசமாக வாழப் போவதாக மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தாள் .அந்த சந்தோசத்திற்கு ஆயுள் வெறும் ஒரு மணி நேரம்தானா …? இனி ரிஷிதரன் திரு்ம்பி வருவானா ..? வந்தாலும் அவளது கணவனாக வருவானா …?




சாம்பவியின் சந்தேகம் மெய்யே என்பது போல் இரண்டு நாட்கள் கழித்து திரும்பி வந்த ரிஷிதரன் ” அன்று என்ன நடந்த்து சாம்பவி ..? ஏன் தாலியை சுழட்டி கொடுத்து அனுப்பினாய் …? ” கூர்மையாக அவளை பார்த்தபடி கேட்டான் .

இதற்கு நீ என்னை நான்கு அறை அறைந்திருக்கலாம் என்றெண்ணியபடி அவனை வெறித்தபடி நின்றிருந்தாள் சாம்பவி .

மெல்ல தளும்ப தொடங்கிவிட்ட கண்களுடன் அவள் நிற்பதை பார்த்தும் பிடிவாதமாக ” எனக்கு பதில் வேண்டும் சாம்பவி ” என்றான் அழுத்தமாக .

” சொல்ல முடியாது போடா …” இதழ்களை மட்டும் அசைத்தாள் அவள் வெறுப்போடு .ஆனால் அதனை உணர்ந்து கொண்டவனின் கண்களில் மின்னல் வந்த்து .

” ம் ..கம் அவுட் பேபி ….,” என்றான் யோசனை மாறி உற்சாக  குரலில் .

மனதை புண்ணாக்குகிற மாதிரி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு , பேபி …கீபின்னு என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு ….தலையை சிலுப்பியபடி போக திரும்பினாள் .அவள் கைகளை அழுத்தி பிடித்தான் ரிஷி.

” எனக்கு பதில் சொல்லிவிட்டு போ சாம்பவி …” என்றான் கண்டிப்புடன் .

அதிகாரத்தை பார் …கணவன் பேர் சொல்லி கூப்பிட கூடாது …மரியாதையாக பழக வேண்டும் …இது போன்ற தனது கொள்கைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ..சற்று முன் மனதினுள் நினைத்த ” டா ” வை நேரிலேயே சொல்லிவிடலாமா …என யோசிக்க ஆரம்பித்தாள் சாம்பவி .

புருவங்களை சுருக்கி , விழிகளை உயர்த்தி யோசித்தபடி நிற்கும் மனைவியை கண்டதும் இழுத்து இறுக்கி முத்தமிட வேண்டும் போல் ரிஷிதரனுக்கு தோன்றியது .

வேண்டாம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அப்படி ஏதாவது செய்தானானால் இதோ இப்போது கொஞ்சம் நெருங்கி நிற்கிறாளே அந்த அருகாமைக்கும் பஞ்சம் வந்துவிடும் .துடித்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கியபடி அவள் முகத்தை கறாராக பார்த்தான் .

” கையை விடுங்க …தொடாதீங்க …”

” ஏன் …? ” பிடியை மேலும் இறுக்கினான் .

அதானே …சொன்னதை உடனே கேட்டுக் கொள்கிறவனா நீ …? பல்லைக் கடித்தபடி அவனை முறைத்தாள் .

” எனக்கு பிடிக்கலை …”

” என்ன பிடிக்கலை …? என்னையா …???” கைகளின் பிடி மேலும் இறுகியது .

இவனை பிடிக்கலையாம் ….மடையா …பொண்டாட்டி மனசை புரிஞ்சிக்க தெரியலை நீயெல்லாம் ஒரு வெற்றி பெற்ற தொழிலதிபர் …இதில் யாரையும் , அவர்கள் மனம் போல் பேசி தொழிலை நடத்துபவன் என்ற பெரிய பேர் வேறு உனக்கு …மனதுக்குள் அவனை கரித்து கொட்டியபடி , அவனிடமிருந்து கைகளை விடுவித்துக் கொள்ள போராடினாள் .

” புரியாமலில்லை பவி ….உன்னை உன் மனதை நன்றாக தெரியும் …புரியும் .ஆனாலும் ஒரு சத்தியம் போல் எனக்கு நானே சில கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டிருக்கிறேன்  ,இல்லையென்றால அன்று குடோனிற்குள் ….” என்று சொல்லி அவன் நிறுத்த , சாம்பவியின் முகம் சிவந்த்து .

எதை நினைவுபடுத்துகிறான் பார் …

” நானாக நின்றால்தான் உண்டு .நீயாக என்னை தடுக்க முடியாது பேபி …” மெல்ல பேசுவதாக சாக்கிட்டு அவள் காதுகளில் மீசை குத்த …இதழ்களால் உரசினான் .




முன்பே அவனை தடுக்க முடியாமல் நெகிழ்ந்த தனது பல பலவீனமான தருணங்கள் நினைவில் வர , இப்போதும் அப்படியேதானா …? ஆதங்கத்துடன் தளர்ந்த தனது உடலை பதற்றத்துடன் பார்த்தபடி அவன் கைகளை உதற தொடர்ந்து முயன்றாள் .

தனது இறுக்கத்தை குறைத்து ஆனால் பிடியை விடாமல் ஒற்றை விரலால் மெல்ல அவளது உள்ளங்கையை வருடியபடி ” சொல்லுடா …என்ன நடந்த்து அன்றைக்கு …? ,,” என்றான் .

வாயால் பேசினால் பதில் கிடைக்கவில்லையென இப்படி செயலால் கேட்கிறானா ….? என தோன்றிவிட …

” உன் குழந்தைக்கு அப்பா யார்னு உங்க தங்கை கேட்ட கேள்விக்கும் …இந்த உங்களுடைய கேள்விக்கும் அதிக வித்தியாசமில்லைன்னு நினைக்கிறேன். ….”

” சாம்பவி ….” அதட்டினான் .அவனது பிடி தளர்ந்த்து .

வேகமாக தனது கைகளை உருவிக்கொண்டவள் ” “அவள் என் உயிர்தோழி .என்னை …என் குணத்தை அறிந்தவள் .அவளே …அப்படி …ஆனாலும் அதை என்னால் ஜீரணித்துக் கொள்ளமுடிந்த்து .அதையே நீங்களும் கேட்டு விடாதீர்கள் ….” என நிறுத்தியவள் மஞ்சுளாவின் நினைவு நெஞ்சிற்குள் எழ , கூடவே இதே கேள்வியை ரிஷியும் கேட்கலாமென்ற சஹானாவின் பேச்சும் நினைவிற்கு வர…

” ஒ…ஒரு வேளை …நீங்களும் அ…அப்படி கேட்டு விடுவீர்களா ….?” கண்கள் கலங்க ,இதழ்கள் துடிக்க வேதனையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தபடி கேட்டாள் .
” முட்டாள் ….” என்றவன் அவளை இழுத்து இறுக அணைத்துக்கொண்டான் .

” என்னடா …?எதற்காக உன்னை நீயே இப்படி வேதனை படுத்திக் கொள்கிறாய் …? ” பரிவோடு தலையை வருடினான் .

” சஹானாவின் பேச்சையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ள கூடாது டியர் .அவளுடையது வூன்ட்டேட்  ஹார்ட் .சோ சீ ஸ்பீக் லைக் தேட் ….லீவ் நாட் பிரிங் இட் அன் இஸ்யூ ….”

ஆமாம் …உன் தங்கைக்கு மட்டும்தானே உடைந்து போன இதயம் , எனது இதயத்தையெல்லாம் எந்நேரமும் நீ தேனில் நனைய வைத்துக் கொண்டல்லவா இருந்தாய் …வெறுப்புடன் நினைத்தவள் …

” உங்களுக்கு முன் அவள் என் தோழி .அவளை எப்படி நினைக்க வேண்டும் …எப்படி அணுகவேண்டுமென்று எனக்கு தெரியும் .அதற்காக நீங்கள் ஒன்றும் எனக்கு டியூசன் எடுக்க வேண்டாம் …” வேகமாக கூறிவிட்டு அறைக் கதவை நோக்கி நடந்தவள் …நின்று …

” எனக்காக ஏதேனும் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களானால் , இனி தயவுசெய்து என்னை தொடாதீர்கள் …” என்றுவிட்டு நடந்தாள் .

” நிச்சயம் உனது இந்த ஆசையையாவது நிறைவேற்றுகிறேன் ..சாம்பவி ….” அவனது குரல் பின்னால் வறட்சியாக ஒலித்தது .

சாம்பவியே கேட்டுக்கொண்டதுதான் .அவளது விருப்பமும் அதுதான் .ஆனாலும் அதனை அவனே கூற கேட்டதும் சந்தோசத்திற்கு பதில் அழுகை வந்த்து .எப்போதடா என்னை தொடாமல் தள்ளியிருப்பது என்று எண்ணிக் கொண்டிருந்திருப்பான் போலும் , அதனால்தான் உடனே ஒத்துக் கொண்டான் .என்று எண்ணிக்கொண்டு அதற்காக ஒரு புது  அழுகைக்கு தயாரான கண்களை கொஞ்ச நேரம் சும்மாயிருங்கள் என வைதபடி துடைத்துக்கொண்டாள் .

இருக்கட்டும் …சந்தோசமாக என்னை தொட மாட்டேனென்று சொல்லி விட்டானல்லவா …? இனி என் பக்கத்தில் வரட்டும் …லேப்டாப்பை பார்ப்பது போல் தோளை உரசுவது , டைல்சை அடுக்குவது  போல் இடுப்பை இடிப்பது , பைல்ஸை கொடுப்பது போல் கையை வருடுவது …என்று எதையாவது செய்யட்டும் நன்றாக நாக்கை பிடுங்கிக் கொள்கிறாற் போல் கேட்கிறேன் …என்று எண்ணிக்கொண்டு , பிடிக்கவேயில்லாத்து போல் அது போன்ற தருணங்களுக்காக காத்திருக்க தொடங்கினாள் .

ஆனால் ரிஷிதரன் அது போன்ற எண்ணங்கள் ஏதுமின்றி , அவளுடைய நினைவேயில்லாமல் …தனது வேலைகளிலேயே ஆழ்ந்திருந்தான் .




” காபியை குடித்துவிட்டு வேலையை பாருங்கள் …” பொதுவாக மூவருக்கும் சொல்லிவிட்டு , அவன் முன்னாலும் காபியை வைத்தாள் .தலையை கூட அசைக்காமல் லேப்டாப்பில் ஆழ்ந்திருந்தான் அவன் .

நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லையாக்கும் .  …போடா ..டேய் …நீ மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டால் நான் உன் பின்னாலேயே வருவேனென்று நினைத்தாய் போல ….பெரிய இவன் ….தனது காபியை உறிஞ்சியபடி அவனை அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டு தனக்குள் வைது கொண்டிருந்தாள் .

” இல்லை …ஷரத் …அப்படி ஒன்றும் பெரிய இவனில்லை நான் …..” நிமிராமலேயே பதில் சொன்னான் அவன் .

” என்னடா ….? ” புரியாமல் விழித்தார்கள் ஷரத்தும் , சஹியும் ….

” இல்லடா சிலபேர் நான் பெரிய இவன்னு தலைக்கனமாக இருக்கிறேன்னு நினைக்கிறாங்க .அப்படியெல்லாம் ஹெட் வெயிட் ஏத்திக்கிறவன் நான் இல்லைன்னு சொல்றேன் ….” இன்னமும் சாம்பவி பக்கம் திரும்பாமலேயே காபியை கையில் எடுத்துக்கொண்டான் .

” அதென்ன ரிஷி அப்படி சொல்லிட்ட …? இந்த வருடம் தமிழ்நாட்டில்  சிறந்த தொழிலதிபர் அவாரட்டுக்கு உன்னைத்தான் செலக்ட் பண்ணியிருக்காங்க …நீ என்னவென்றால் …நான் ஒண்ணும் பெரிய ஆளில்லைங்கிற ….”

ஷ்ரத்தின் இந்த பதிலால் விழிகளை விரித்தவள் அப்படியா என்பது போல் ரிஷியை பார்க்க , அவன் இவளை பார்க்காமல் காபியை உறிஞ்சினான் .

” யெஸ் ரிஷி …நம்ம டாடிக்கும் , மம்மிக்கும் இதில் எவ்வளவு பெருமை தெரியுமா …? ரொம்ப சந்தோசப்பட்டாங்க ….”

ஆக …இவர்கள் எல்லோருக்கும் இந்த விசயம் …அவளது கணவன் வாங்கப்போகிற மிகச்சிறந்த விருதின் விசயம் தெரிந்திருக்கிறது .அவளை தவிர …ஏனென்றால் இவர்கள் எல்லோரும் ஒரே குடும்பம் .நான் வேறு யாரோ ஒரு வெளி ஆள்  …தன்னிரக்கம் அலைக்கழிக்க அவள் தடுமாறினாள் .

இனி நீ இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் கூட வந்தேனா பாரு …? மனதிற்குள் எண்ணியதை செயல்படுத்தும் விதமாக அவன் இருக்கும் இடத்திற்கு கூட வராமல் இரண்டு நாட்களாக அங்குமிங்கும் அலைந்தாள் .

” ஒரே ஒரு கங்கிராட்ஸ் கூட கிடையாதா …? ” என அவன் இடையில் ஒருமுறை அவளிடம் கேட்க ,

” உங்களை வாழ்த்த நான் யார் சார் ….? ” என்று பட்டு தெறித்தாற் போல் பேசிவிட்டு நகர்ந்தாள் .

அவனை நெருங்க கூடாது …நெருங்க விடவும் கூடாது …என மனப்பாடம் செய்து மனதினுள் வைத்திருந்த அவளது பாடமெல்லாம் …மறு நாளே தலைகீழாக மாறிப்போனது .

அன்று மதிய உணவு நான்கு பேருமாக சேர்ந்து ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம் …என ஷ்ரத் சொல்ல , அண்ணனும் , தங்கையும் ஒத்துக்கொள்ள சாம்பவி மட்டும் நான் வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வர போகறேன் என பிடிவாத்த்துடன் கூறிவிட்டு சென்றாள் .

இவர்கள் மூவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஆபிஸ் அறையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டருந்தனர் .ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்த சாம்பவி தலை கலைந்து , கண் கலங்க , முகம் சிவந்து வேதனையோடு இருந்தாள் .




கதவை தட்டாமல் வேகமாக திறந்தபடி உள்ளே நுழைந்தவள் இருந்த கோலத்தை பார்த்த ரிஷிதரன் ,ஷ்ராவத்தை பார்க்க அவன் …

” சஹி …வா நாம் போய் அந்த புது மாடல் டைல்ஸை பார்த்துவிட்டு வருவோம் …” என்று அவளை கூட்டிக்கொண்டு வெளியே போய்விட்டான் .

அவர்கள் போன உடன் சாம்பவியை பார்த்த ரிஷிதரன் தன் இரு கைகளையும் ஆதரவாக விரித்தான் .ஒரு கேவலுடன் அவன் கைகளுக்குள் புகுந்து கொண்ட சாம்பவி குமுறியபடி அழத்துவங்கினாள் .அவள் தலையை வருடியபடி அவளை அழவிட்டு யோசனையில் இருந்தான் ரிஷிதரன் .




What’s your Reaction?
+1
47
+1
27
+1
1
+1
0
+1
0
+1
1
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!