Serial Stories

மித்ரஹாசினி 3-பூந்தோட்டத்தில் ஒரு பூகம்பம்.

3

“விநாசகாலே விபரித புத்தி”

 என்று ஆச்சார்யார் பகர்ந்ததுமே சக்ரவர்த்தியின் விழிகள் வெயில் பட்ட ஈட்டிமுனையின் பளிச்சிடலாய் மின்னின. புதல்வனை ஆரத் தழுவிக் கொள்ள மனமும் தடந்தோளும் விரும்பி விம்மியது. தந்தையின் உணர்வுகளை பேரரசன் என்ற போர்வை மறைத்தது.




“ஐயனே! எனக்குக் கிடைத்த செய்திகளின் படி கலிங்க மன்னன் கோதாவிரி  வழியாக தபி நதியை அடைந்து நர்மதையை கடந்து முற்றுகையைத் துவங்க உள்ளார்.

ஏனெனில் சாத்பூரா மலைக்கானகம் அடர்த்தியானது. இதன் வழியே  தோவாஸ் நகரத்தையோ பேதுல் நகரத்தையோ தாக்கி வசப்படுத்தக்கூடும் என்பது என் எதிர்பார்ப்பு. அல்லது மூலதபதி நகரை வளைக்கவும் கூடும். இவை மூன்றுமே சிறிய நகர்கள். ஆனால் எல்லைப்புறத்திலிருப்பவை. இது மௌரியப் பேரரசின் வாயிலைப் போன்றவை! இதன் வழியே ஊடுருவினால் நிலைமை விபரிதமாகும்.  ஆனால் அதற்கு நாம் இடம் தராமல் அவர்களை நர்மதைக்குக் கிழக்கே முகத்துவாரத்திலேயே அதாவது நீரிலேயே யுத்தத்தை நாம் துவங்கி விட வேண்டும். தர்மாவை அமராவதிக்கு அனுப்பியுள்ளேன். படகுகள் மரக்கலங்கள் நாவாய்களைச் சேகரித்து போர்ப்படைக்கு தயார் செய்யும்படி கூறியுள்ளேன். அமராவதி நகரிக்காவுக்கு ஓலையெடுத்துக் கொண்டு போயிருக்கிறான் தர்மா.

பூர்வ குடிகளை அணுகி உதவியைக் கேட்போம். கேட்கிற விதத்தில் கேட்டால் உதவுவர். மேலும் ஆச்சார்யா அவர்களுக்கு  சக்ரவர்த்தியின் ஆரம்பகால நிலையில் கானகவாசிகளுக்கு வாக்களித்திருக்கிறார். அவர்களும் அதை ஏற்றிருக்கின்றனர். அதை பயன் படுத்திக் கொள்ளவே விழைகிறேன். அவர்கள் வாக்கு தவற மாட்டார்கள். நானே நேரில் போய் வருகிறேன். அவர்களுடைய இயல்பை மீறாமல் உதவுவதற்கான வழிகளையும் யோசனைகளையும் பெற முயல்கிறேன் சேனாதிபதியாரே! முயற்சிப்போம்.

முயற்சி திருவினையாக்கும்.  உங்களின் ஆசானின் சக்ரவர்த்தியின் ஆசிகள் வெற்றித் திருமகளை கொண்டு வந்து சேர்க்கும். “

“ஜெய விஜயீ பவ! ஜெய விஜயீ பவ “

என்ற வாழ்த்தொலி எழுப்பினார் ஆச்சார்யா.




“இளவரசே! உன் முயற்சியைத் துவங்கிவிடு நாளையே உஜ்ஜையின் கானக மா காளி கோயிலில் பூஜையை வைத்துக்கொண்டு விடுவோம். பூர்வகுடிகளிடம் அன்புடன் பரிவுடன் பேசு. பாஷை புரியாவிட்டாலும் அன்பு புரியும். அன்பை விட மிகச் சிறந்த மொழி அகிலத்திலேயே இல்லை.  நாளை உஷத்கால பூஜையில் சந்திப்போம். உன் சந்திப்பு மௌரியப் பேரரசுக்கு இன்னுமோர் உறுதியான துணையை சேர்க்கட்டும்.போய் வா . கலிங்கனுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.  “

சுருதவர்மனும் இளவரசனும் வணங்கி  விடைபெற்றுக் கிளம்பினர்.

குடிலின் வெளியே வந்து சங்கேதக் குரல் தர ரதா ஓடி வந்தான்.

கூடவே மற்றோர் குதிரையும்! இருவரும் புரவியிலேறிச் சென்றனர்.

இம்முறை நேராக அரண்மனைக்குச் சென்றான் இளவல். மதிய உணவுக்குப் பின்பு சற்றே ஓய்வெடுத்தவன் ரதாவை அழைக்க அதுவும் எஜமானை உரசிக் கொண்டு நின்றது.  அதன் கழுத்தைத் தடவியபடி எதுவோ முணுமுணுக்க அது லேசாய் கனைத்து தன் சம்மதத்தைத் தெரிவித்து முன்னங்காலை உயர்த்தியது. அரண்மனை பணியாளர்களுக்கு இந்தக் காட்சி தெவிட்டா விருந்தாக அமைந்தது.

அதன் மீது அமர்ந்ததும் அது நான்குகால் பாய்ச்சலில் வேகமெடுத்தது. அந்த வேகத்திலும் ஒரு ரிதம் தெரிந்தது. எஜமானனை அலுங்காமல் சுமந்தது. ஓட்டத்தில் துள்ளல் தெரிந்தது.

ரதா வேகமாய் ஓடி ஒரு பெரிய தோட்டத்தின் வாயிலின் முன்னே நிற்க பிம்பிசாரன் இறங்கி ரதாவின் கழுத்தைத் தடவிக் கொடுக்க அதுவும் புரிந்தாற் போல் தலையாட்டிக் கொண்டே நகர்ந்தது.

குட்டியாய் வந்தது முதலே பிம்பிசாரனின் கையில் வந்தது ரதா. ரதம் போன்ற அதன் வேகத்தைக் கண்டே ரதா என்று பெயரிட்டவனுக்கு அது ஒரு உயிர்த் தோழனைப் போலாகி விட்டது. உண்மையிலேயே அவன் தொடுகையிலேயே அவன் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடக்கும். வேறு யாரையும் தொடக் கூட விடாது. இளவரசன் சொன்னால் மட்டுமே மற்றவர்கள் சொற்படி கேட்கும். அபூர்வமான புரவியது. வெள்ளைவெளேர் என்று ஒரு தேவதூதனை ஒத்திருக்கும் அதன் அழகு காண்போரை மயக்கும்.




முதலில் கண்ணில் விரிந்தது பூந்தோட்டமே நானாவித நிறங்களில் விதவிதமான மலர்கள். செயற்கை பொய்கையில் தாமரையும் குவளையும்!

செண்பக மரங்களும் மகிழம் கொன்றை என மரங்களில் கண்ணைக் கவரும் விதமான நிறங்களில்  பூத்துக் குலுங்கிய பூக்களோடு கொடிப்பூக்களும் செடிகளும் போட்டியிட்டு தத்தம்  பூக்களோடு நறுமணத்தை பரப்பின.   அலாதியான நறுமணம் சூழ்ந்திருந்தது. மனதை மயக்கியது.

பூந்தோட்டம் அமைந்திருந்த பகுதியை அடுத்து பழமரங்கள்.காய் பிஞ்சு வகைகளுடன் கனிந்தவை லேசாக வெடித்தும் மரங்களிலும் கொடிகளிலும் பழுத்து தொங்கின தீஞ்சுவை கனிவகைகள். காபூலின் திராக்ஷை கனிகூட கொத்து கொத்தாய்!  பழங்களின் வாசனை பசியுணர்வை எழுப்பிது. பணிமக்கள் சிலர் நீர் வார்த்துக் கொண்டும் சருகு தழைகளை அப்புறப்படுத்திக் கொண்டும் பக்குவமாக கனிகளை கொய்தபடியுமிருந்தனர். பறவைகளின் கீச்கீச் சப்தம் செவியை நிறைத்தது.

தோட்டத்தினுள் நுழைந்து முன்னேறியவனின் விழிகள் கனிக்கூட்டத்திற்கு நடுவே கனிந்த பழக்குலையாய் நின்றிருந்தவளைக் கண்டதும் இமைக்க மறந்தன.

கையில் சிறுகுறுவாளுடன் திராக்ஷை பழக்குலைகளை நாசூக்காக அறுத்து அருகே வைத்திருந்திருந்த கூடையில் பக்குவமாக வைத்தாள்.கைகள் வேலையை செய்ய வாய் மட்டும் புலம்பிக் கொண்டிருந்தது.




“அடி ஹாசினி! இந்த ஆண்களை நம்பவேக் கூடாது! ஏமாற்றுக் காரர்கள். வருவேன் என்பார்கள் வரமாட்டார்கள் பார்த்து பார்த்து கண்கள் பூத்து பூத்து நாம் தான் நொந்து போக வேண்டும். வரட்டும் அந்த மனிதர்.  முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறேன் பார் “

கிளைகளில் தொத்திக்கொண்டிருந்த தத்தைகளும்

“ஆமாம்! ஆமாம்! “என்று கொஞ்சின.

என்று தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தவளின் பின்னே போய் கண்மலர்களைப் பொத்தினான் பிம்பிசாரன்.

ஒரு

பூகம்பம் எழுந்தது அங்கே!

(தொடர்வாள்.)




What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!