Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 15

15

 


மறுநாள் காலை எழுந்த உடனேயே ஆனந்தபாலனுக்கு அருகே படுத்திருக்கும் மனைவியை காணாதது சிறு ஏமாற்றமாகவே இருந்தது. இரவு முழுவதும் மனைவியுடன் கூடலில் சுகித்திருந்தவன் , அதே நினைவில் கண்களை திறக்காமல் அவளை அருகாமையில் தேட , வெறுமையாக இருந்த படுக்கை அவனுக்கு எரிச்சலைக் கூடத் தந்தது .

” சுடர் ” அழைத்தபடி திரும்பி மகனை பார்க்க , அவன் தூக்கம் கலைந்து அசைய மெல்ல தட்டிக் கொடுத்து அவனை தூங்க வைத்துவிட்டு , எழுந்து கீழே வந்தான் .

” துரையம்மா நான் எழுறதுக்கு முன்னமே எழுந்துட்டாங்க. தோட்டத்துலதான் சுத்திட்டு இருந்தாங்க. அப்புறம் காரில் போனாங்க.உங்களுக்கு தெரியும்னு சொன்னாங்களே ? ” வேணுகோபால் சொல்ல , ஆனந்தபாலன் யோசித்தான் .

எனக்கு தெரியும் இடமா ? எங்கே போனாள் ?

ஏதோ தவறுதலாகப் பட , ஆனந்தபாலன் உடனே சுடரொளியின் வீட்டைக் கண்காணிக்க தான் ஏற்பாடு செய்திருந்த ஆளை தொடர்பு கொண்டான் .அங்கே சுடரொளி வரவில்லை என அறிந்தான் .

மேலும் சில இடங்களில் விசாரித்துக் கொண்டிருக்கும் போது , அமிர்தன் எழுந்து வந்து விட , வேணுகோபாலை அவனைக் கவனிக்க சொல்லிவிட்டு ராஜாவிற்கு போன் செய்தான் .

” நான் மேடத்தை நேற்று உங்கள் வீட்டில் பார்த்ததுதான் சார் .என்ன சார் எதுவும் பிரச்சனையா ? “

” இல்லை ரேஞ்சர் சார் .கோவிலுக்கு ஏதாவது போயிருப்பாளென்று நினைக்கிறேன் . நான் பார்த்துக் கொள்கிறேன் ” பேசி முடிக்கும் முன்பே அமிர்தனின் அழுகை சத்தம் அவன் காதை அதிர வைத்தது .

” அம்மா இல்லாமல் குடிக்க மாட்டேன்கிறான் துரை ” வேணுகோபால் சத்துமாவு கஞ்சியுடன் தலையை சொறிந்தபடி நிற்க , ஆனந்தனுக்கு சுருசுருவென எரிச்சல் வந்தது.




” ஒரு சின்ன பிள்ளைக்கு பால் கொடுக்கத் தெரியாதா உங்களுக்கு ? ” எரிந்து விழுந்து விட்டு , தன் மகனின் பிடிவாதம் நினைவு வந்து தம்ளரை தான் வாங்கிக் கொண்டான் .மடியில் அமர வைத்து தானே மகனுக்கு ஊட்ட முயன்றான் .

முழுதாக குடித்தால்தான் அம்மாவிடம் போகலாம் என்று அதட்டி , மிரட்டி ஒரு வழியாக பாதி கஞ்சியை உள்ளே தள்ளினான் .அழுதழுது பிள்ளை மீண்டும் தூங்கி விட , ஆனந்தபாலன் திரும்பவும் தனது போனை எடுத்தான் .இப்போது அவன் போன் செய்தது உஷாந்திக்கு .

” உங்கள் மனைவியை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் ? ” அலட்சியமாக பேசியவளின் கன்னத்தில் அறையும் ஆவலை மட்டுப்படுத்தியவன் …

” என் மனைவியை எனக்குப் பார்த்துக் கொள்ளத் தெரியும்.நேற்று நீ அவளிடம் என்ன பேசினாய் என்று மட்டும் சொல் ” என்றான் .

” அதை உங்கள் மனைவியிடமே  கேட்பதுதானே ? “

” அ…அவள் சொல்ல மாட்டேனென்கிறாள் ” ஆனந்தபாலனின் குரல் கம்மியது.

” ஓ …அவளே சொல்லாததை நான் மட்டும் எப்படி சொல்வதாம் ? அதென்ன ஆனந்த் எங்கள் இருவருக்கும் இடையே நீங்கள் குளிர்காய நினைக்கிறீர்கள் ? “

” உஷாந்தி ஒழுங்காகப் பேசு “

” எப்படி …எப்படி …உன் பொண்டாட்டியை உன்னுடன் சேர்த்து வைக்க , நான் தீச்சட்டி எடுக்க வேண்டுமா ? எந்த ஊர் நியாயம் இது ? என்னை வைத்து அவளிடம் கேம் விளையாடினாய்தானே ? இப்போது என் நேரம் . நான் எங்கே எப்படி இருந்தாலும் சாகும் வரை உன்னைக் காதலித்துக் கொண்டே இருப்பேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அது அவளை காலம் முழுவதும் உறுத்திக் கொண்டேயிருக்கும் .எப்படி நீங்கள் இருவரும் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பார்க்கிறேன் “

” ஷிட் …யு ராஸ்கல் …” மேலும் ஏதாவது கெட்ட வார்த்தைகள் வந்து விடுமோ எனப் பயந்து போனை கட் செய்தான் .விழிகளை இறுக மூடி பெரிய மூச்சுக்கள் விட்டு தன்னைத் தானே சமனப்படுத்தினான்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் உஷாந்தியை அழைத்தவன் ” சாரி ” என்றான் .அவள் மறுமுனையில் பேச்சின்றி திகைத்து நிற்க ” எங்கள் இருவருடைய காதலைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவன் , உன்னையோ …உன் மனதையோ கவனிக்கத் தவறிவிட்டேன் உஷாந்தி .உண்மையில் வருந்துகிறேன் .உணர்ந்து மன்னிப்பு கேட்கிறேன் ” சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு எழுந்தான் .




ராஜாவையும் , செங்காந்தளையும் நேரில் சென்று சந்தித்தான் .சுடரொளியின் மனம் சிறிது கஷ்டத்தில் இருந்ததை சொல்லி , ஒரு வேளை மனம் வெறுத்து இந்தக் காட்டிற்குள் போயிருந்தாளானால் , அவளைக் கண்டுபிடிக்க முடியுமா ? எனக் கேட்டான்.

” மேடம் அப்படி தனது பொறுப்புக்களை உதறிச் செல்பவர்கள் கிடையாதே சார் ? இந்தக் காட்டிற்குள் வழி தெரியாதவர்கள் போனால் , வந்து …கண்டுபிடிப்பது கஷ்டமாச்சே ” ராஜாவின் குரலில் நிறைய கவலை இருந்தது.

” மேடத்தின் அம்மா வீட்டில் பார்த்தீர்களா சார் ? எனக்கென்னவோ அவர்கள் காட்டிற்குளெல்லாம் போயிருக்க மாட்டார்களென்று தோன்றுகிறது ” செங்காந்தள் கேட்டாள் .

” ஏன் அப்படி நினைக்கிறீர்கள் செங்காந்தள் ?”

” சும்மா ஒரு கணக்குதான் சார்.பெண்கள் நாங்கள் கணவனுடன் கோபம் என்றால் வேறு எங்கு போவோம் ? அம்மா வீட்டைத் தவிர எங்களுக்கு வேறு போக்கிடம் ஏது ? கணவனை மிரட்டுவதற்கு அப்படி சொல்லாமல் போய் அங்கே உட்கார்ந்து கொள்வதுதான் ” மென்மையாக புன்னகைத்தபடி செங்காந்தள் கூறியது ,அந்த இக்கட்டான நிலைமையிலும் ஆண்கள் இருவருக்கும் புன்னகையை வரவழைத்தது.

” நான் அறிந்த வரை சுடரொளி அப்படி வெறுமனே மிரட்டவென்று ஒன்று செய்பவள் கிடையாது . அப்படி போய் உட்கார்ந்து கொள்ள அவளுக்கு அம்மா வீடும் கிடையாது .அம்மா இறந்து விட்டார்கள் .அப்பா படுக்கையில் இருக்கிறார் .அவர்களை நான் என் கண்காணிப்பில்தான் வைத்திருக்கிறேன் .எதற்கும் இருக்கட்டுமென்று அங்கேயும் விசாரித்து விட்டேன் .அவள் அங்கே போகவில்லை “

” சரி சார் , நான் என் ஆட்களுடன் காட்டிற்குள் போகிறேன் .மேடம் எங்கேயாவது இருக்கிறார்களா என்று பார்க்கிறேன் ” ராஜா கிளம்பி விட்டான் .

வீட்டிற்கு கிளம்பிய ஆனந்தபாலனுடன் செங்காந்தளும் கிளம்பினாள் .” நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் சார் . நீங்கள் மேடத்தை தேடுங்கள் “

அங்கே அமிர்தன் விழித்துவிட்டு கத்திக் கொண்டிருந்தான் .அவனருகே பத்மினி விநாயக்குடன் நின்றிருந்தாள் .அமிர்தனை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தாள் .

” அழாதே கண்ணா ! அம்மா இரண்டு நாளில் வந்துடுவாங்க “

” குழந்தையைக் கூட விட்டு விட்டு மேடம் எப்படி சார் போவாங்க ? ” செங்காந்தளின் சந்தேகம் ஆனந்தபாலனுக்கு வந்திருக்க புருவத்தை நீவியபடி யோசித்தான் .அப்போது அவன் போன் ஒலிக்க ,எடுத்து பார்த்தவனின் புருவங்கள் மேலும் சுருங்கியது .உஷாந்தி அழைத்துக் கொண்டிருந்தாள் .

” ஏதாவது தகவல் தெரிந்ததா ? ” உஷாந்தி கேட்க , ” இல்லை ” என்றான் .

” யாரையெல்லாம் விசாரித்தீர்கள் ? “

” ராஜா , செங்காந்தள் …”




” உங்க பக்கத்து வீட்டுக்காரங்களை விசாரிச்சீங்களா ? “

” அவர்களா …அவர்கள் எப்படி ..? ”  ஆனந்தபாலனின் கண்கள் பத்மினியை அளந்தபடி இருக்கும் போதே உஷாந்தி போனை வைத்துவிட்டாள் .

” என்னம்மா இந்தப் பக்கம் வந்திருக்கிறீங்க ? உங்க வீட்டுக்காரர் ஊரில் இல்லையா ? ” ஆனந்தபாலன் பத்மினியிடம் விசாரித்துக் கொண்டிருந்த போது , மீண்டும் போன் வந்தது .உஷாந்திதான் .

” ஆனால் நான் இன்னமும் உங்க மேல் கோபமாகத்தான் இருக்கிறேன் .இதெல்லாம் அந்த அவள்…உங்க மனைவிக்காகத்தான் ” சொல்லிவிட்டு கட் பண்ணிவிட்டாள் .

ஆனந்தபாலன் புன்னகைத்துக் கொண்டான் .இவள் அவனை காதலித்துக் கொண்டே இருப்பாளாம் …இதனை சுடரொளியிடம் சொல்லி அவள் மனக்குழப்பத்தை நீக்க வேண்டும் நினைத்தவன் …அதற்கு முதலில் அவள் கிடைக்க வேண்டுமே என எண்ணியபடி பத்மினியிடம் திரும்பினான்.

” என்னம்மா சொன்னீங்க ? “

” அவரும் மாமனாரும் ஊருக்கு போயிருக்காங்க அண்ணா “

” எந்த ஊருக்கு ? “

” ஊட்டிக்கு இல்லை சென்னைக்கு …? “

” ஊட்டியா …? சென்னையா …? “

” சென்னைக்குத்தான் “

” ஓ…அப்போ வக்கீலை பார்க்க போயிருக்காங்களா ? ” ஆனந்தபாலன் செங்காந்தளுக்கு பத்மினி அறியாமல் கண் ஜாடை காட்டினான் .

” வக்கீலா ?எதுக்கு அண்ணா ? “

” என்னம்மா உங்களுக்குத் தெரியாதா ? உங்க தங்கும் விடுதி சட்டப்படி அனுமதி வாங்கி நடத்தலையே .அதற்காக உங்க கணவருக்கு அரெஸ்ட் வாரண்ட் போட்டிருக்காங்களே…தெரியாது ? “

” அரெஸ்ட் வாரண்டா ? ஏதோ அனுமதி வாங்காமல் சமாளிக்கனும் அதுக்காகத்தான் இதெல்லாம்னு சொன்னாரே ? “

” எதெல்லாம் ? “

” அ…அது …”

” சரி வாங்க .உங்க வீட்டுக்கு போகலாம் ” ஆனந்தபாலன் நடக்க , பத்மினி தயங்கி நின்று , தன் மகனை பார்க்க , அவன் செங்காந்தளின் கைகளில் இருந்தான் .




” இவனை நான் பார்த்துக் கொள்கிறேன் அக்கா .நீங்க சாரோடு போயிட்டு வாங்க ” செங்காந்தள் விநாயக்கை இரு கைகளாலும் சிறை செய்து கொண்டு , கைப்பிடியில் அமிர்தனோடு ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டாள் .உடன் அறை வாசலில் வேணுகோபால் வந்து நின்று கொண்டார் .

” மீன் வெட்டிட்டு இருந்தேன்மா ” கையில் ஒரு கூர்மையான கத்தியை வைத்துக் கொண்டிருந்தார்.சிநேகமாக புன்னைகைத்தார் .

பத்மினி இருண்ட முகத்தோடு தன் வீட்டிற்கு நடந்தாள் .

” உங்க ஹஸ்பென்டை கூப்பிடுங்க ” சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான் ஆனந்தபாலன் .

” அ…அவர்தான் ஊட்டி …சென்னை போயிருக்கிறாரே “

” ஆமாம் .சொன்னீங்கள்ல , சரி சுடரொளியை கூப்பிடுங்க “

” எ…என்ன…யா…யாரை சொல்றீங்க ? “

ஆனந்தபாலனின் முகம் இறுகி கடுத்தது ” என் மனைவியை கூட்டிட்டு வாங்கன்னு சொன்னேன் ” அதிகாரமாய் உயர்ந்த குரலில் கோவென அழுதபடி ஓடி வந்து அவன் காலைப் பிடித்தாள் பத்மினி .




What’s your Reaction?
+1
50
+1
36
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!