Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 14

14

 

 


அன்றைய சமையல் விபரங்களை வேணுகோபாலனிடம் சொல்லிவிட்டு , அமிர்தனை பாடம் படிக்க அமர்வித்தாள் சுடரொளி .இப்படி தினமும் ஒரு மணி நேரமேனும் பாடத்திற்கென ஒதுக்கி அவனை புத்தகங்களை தொட வைக்க , அவள் படாத பாடுதான் படுகிறாள் .

” அம்மா எனக்கு பாயாசம் ” புத்தகத்தை திறக்கவும் அமிர்தனுக்கு பசி் வந்து விட்டது .

காலை எழுந்ததும் சத்து மாவு கஞ்சியை அவள் அவனுக்கு பழக்கப்படுத்த , அவன் மறுக்க …பனங்கற்கண்டு , ஏலக்காய் போட்டு அதனை பாயாசமென அவன் வயிற்றுக்குள் தள்ள முயற்சித்திருந்தாள் .முகத்தை அஷ்ட கோணலாக்கியபடி நான்கு மடக்கு உறிஞ்சியவன்  ஐந்தாவது மடக்கில் வாந்தி உணர்வை முகத்தில் காட்ட ,சரியென விட்டு விட்டு பாடம் சொல்ல வந்தால் எனக்கு பசியென்கிறான்.

” இப்படியா பிள்ளை வளர்த்து வைத்திருப்பீர்கள் ? ” ஆனந்தபாலனிடம் எரிந்து விழுந்தாள்.

” அச்சோ ! ஏன்டா கண்ணா அம்மாவை தொல்லை செய்தீர்களா ? ” மகனை தூக்கி முகத்தின் முன் கொணர்ந்து மூக்கோடு மூக்குரசி கொஞ்சினான் .

” இதுதான் கண்டிக்கும் லட்சணமா ? “

” உர்ரென்று பார்த்து , சர்ரென்று சீறி ,முடிந்தால் தலையில் கொட்டி …இப்படியெல்லாம் கண்டிப்பு காட்ட ஆசைதான் .ஆனால் உங்கள் முகத்தை பார்த்ததுமே இப்படி கொஞ்சத்தான் தோன்றுகிறது .என்ன செய்ய ? “

” யாரை சொல்கிறீர்கள் ? “

” அம்மா , மகன் இருவரையும்தான் .” சொல்லியபடி கண்ணடித்தவனின் கொஞ்சல் மகனிலிருந்து மனைவிக்கு மாறியிருக்க , கதகதத்த தன் மூக்கு நுனியை வருடியபடி கணவனை செல்லமாக முறைத்தாள் .

” ஐ…அப்பா நானும் …” அமிர்தனும் போட்டிக்கு வர , சுருக்கிய மூக்குடன் தன் மூக்குரச  அருகே வந்த மகனின் பால் முகம் சுடரொளியின் தாய் மனதை தூண்ட , சட்டென அவன் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தி எடுத்தாள்.

” நானெல்லாம் இரண்டு பேருக்கும் பொதுவாகத்தான் செய்தேன் ” கோபம் போல் முகம் தூக்கிக் கொள்ளும் கணவனின் செயலில் நெகிழ்ந்த மனதை அதட்டி விட்டு , ” பிள்ளையை செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறீர்கள் ”  புகாரிட்டாள் .




” எனக்கு எஸ்டேட் வேலைகள் சுடர் . அமிர்தனின் மூன்று வயதிலேயே அவனுக்கு பாடம் எடுக்கவென ஒரு டீச்சரை நியமித்து விட்டேன் .அத்தோடு அரை நாள் இங்கே ஒரு ப்ளே ஸ்கூலுக்கும் போய் வந்தான் .இந்த கொரோனா நேரத்தில் பள்ளிகள் விடுமுறை விட்டதால் , பள்ளிக்கும் செல்லாமல் , பாடம் எடுக்க டீச்சரும் வராமல் அவன் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டான் “

” இரவு முழுவதும் டிவி முன்னாலேயே கிடக்கும் அளவு …ம் …சோம்பேறி யார் ? அவனா ? அவனை இப்படி மாற்றிய அவன் அப்பாவா ? “

” டிவி பார்க்க பழக்கியது உஷாந்தி .அவள் இங்கே கடந்த ஆறு மாதங்களாக இருக்கிறாள் .எங்களுக்கு தொல்லை இல்லாமல் இருக்கட்டுமென்று …” பேசியபடி போனவன் அவள் பார்வையில் சரணென கையுயர்த்தி …

” எங்களுக்கு என்றால் எனது எஸ்டேட் வேலைகளுக்கு அவளது படிப்பு வேலைகளுக்கு என தனித்தனியே தொல்லையின்றி இருக்க , அப்படி பழக்கி விட்டு விட்டாள் .எனது வேலைகளில் நான் இதனை கவனிக்காமல் விட்டு விட்டு கவனித்த போது காலம் கடந்து விட்டது .அமிர்தனை டிவியிடமிருந்து பிரிக்க முடியவில்லை .”

” இந்த அளவு எவளோ ஒருத்தியிடம் பிள்ளையை ஒப்படைத்திருக்கிறீர்கள் ? “

” உஷாந்தி ஒரு டைரக்டரின் மகள் .அவர்தான் அம்மாவை முதன் முதலில் சினிமாவில் அறிமுகம் செய்தவர்.அத்தோடு பல வெற்றிப்படங்களை அம்மாவிற்கெனவே எடுத்தவர் .சினிமா இன்டஸ்ரியில் அம்மா மரியாதை வைத்திருக்கும் வெகு சிலரில் இவரும் ஒருவர். இப்போது சினிமா  வாய்ப்பிழந்து சேர்த்த பணமெல்லாம் தொலைந்து கஷ்ட ஜீவனத்தில் இருக்கிறார் .அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது  இவருக்காக ஏதாவது செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள் .அதனால் உஷாந்தியின் மேற்படிப்பு செலவை நான் ஏற்றுக் கொண்டேன் .அவள் மனதில் வேறு எண்ணம் வைத்து இங்கே தங்க வந்த போது , முதலில் அவளை தவிர்க்க முடியாமல் வீட்டிற்குள் விட்டேன் . ஆனால் உன்னை இங்கே கொண்டு வர திட்டமிட்டதும் , உன் பொறாமையை தூண்ட அவளை உபயோகித்துக் கொள்ளலாமென தோன்றியது .செயல்படுத்தினேன்.அவ்வளவுதான் “

” அதற்காக என்னவெல்லாம் பேசினீர்கள் ? ” ஆனந்தபாலனின் அன்றைய தாம்பத்தியம் பற்றிய பேச்சு நினைவில் சுடரொளி முகம் சுளிக்க , ஆனந்தபாலனின் முகமும் அதே நினைவில் கன்றியது .

” எனக்கும் கொஞ்சம் அப்படி பேச சங்கடம்தான் .ஆனால் நான் அந்த மாதிரி பேசும் போதெல்லாம் மனதிற்குள் உன்னைத்தானே நினைத்துக் கொள்வேன் ” சொல்லும் போதே கனிந்து சிவந்த கணவனின் முகம் மடை மூடிய வெள்ளமாய் அவளுள் கிடந்த காதலை உடைப்பெடுக்க வைக்க , மகன் கவனியாத சமயம் ,சட்டென எக்கி கணவன்  கன்னத்தில் இதழ் பதித்தாள் .

” நானும் இரண்டு பேருக்கும் பொதுவாக செய்தேன் ” முணுமுணுத்தவளை ” ஹேய் ” என்ற கூச்சலுடன் அவன் பற்றியபோது , அறைக்கு வெளியே ஏதோ அசைவு கேட்க , சுடரொளி வேகமாக கணவனிடமிருந்து விலகி வெளியே வந்து பார்க்க வேக நடையுடன் படி இறங்கிக் கொண்டிருந்தவள் உஷாந்தி .

” இவள் இங்கே எதற்கு வந்தாள் ? “

” நான்தான் வரச் சொன்னேன் .வா ” ஆனந்தபாலன் அவள் கை பற்றி கீழே அழைத்துப் போனான் .




அங்கே உஷாந்தியுடன் அவள் அப்பாவும் .ஆனந்தபாலனை பார்த்ததும் கை கூப்பினார் அவர் .” உஷாவிற்கு பெரிய யுனிவர்சிடியில் சீட் வாங்கி கொடுத்திருக்கிறீர்கள் சார் .இப்போதிற்கு என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத இடம் அது .நாளை அவள் டெல்லி கிளம்புகிறாள் .உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தோம் “

அவரது கூப்பிய கைகளை எடுத்து விட்டான் ஆனந்தபாலன் .” என்ன சார் இது …? உஷாந்தி என் உடன்பிறந்தவள் மாதிரி .அவளுக்கு நான் செய்யமாட்டேனா ? “

பேயறைந்தது போல் மாறிய உஷாந்தியின் முகத்தை சுவாரசியமாக பார்த்தாள் சுடரொளி .

” அம்மாவிற்கு நீங்கள் செய்ததற்கு இதெல்லாம் ஒன்றுமில்லை சார் .விரைவிலேயே ஒடிடி தளத்திற்காக ஒரு சீரிஸ் தயாரிக்கும் யோசனை இருக்கிறது .அப்படி நான் தயாரிக்க ஆரம்பித்தால் அதற்கு நீங்கள்தான் டைரக்டர் .தயாராக இருங்கள் ” டைரக்டரின் கண்கள் கலங்கி விட்டன.அவரால் பேச முடியவில்லை.

” ஆனந்த் …” உஷாந்தியின் குரல் தழுதழுத்தது.இப்போது அவளது கை கூப்பியிருந்தது . ” எங்கள் வாழ்வின் திசையை மாற்றி விட்டீர்கள் “

அதன் பிறகு இருவரும் உணவுண்டு விட்டு கிளம்பினர் .வீட்டுத்தலைவியாய் அவர்களை வாசல் வரை வந்து சுடரொளி வழியனுப்பிய போது அவளது கை பற்றினாள் உஷாந்தி .

” கொஞ்ச நேரம் முன்பு கணவன் மனைவியாக உங்கள் இருவரையும் நெருக்கமாக பார்த்தேன் .நிச்சயமாக சொல்கிறேன் சுடரொளி .அது எனக்குப் பிடிக்கவில்லை .ஏனென்றால் நான் ஆனந்தை மிகவும் காதலிக்கிறேன் .எங்கேயோ தூரமாக அவரை விட்டுத் தள்ளி இருந்தாலும் நான் அவரை காதலித்துக் கொண்டேதான் இருப்பேன் .அவருடன் மனதிற்குள் மனைவியாக குடித்தனம் நடத்திக் கொண்டேதான் இருப்பேன் .உன்னால் என்ன செய்ய முடியும் ? ” நிதானமாக கேட்டுவிட்டு போய் தந்தையருகே காரில் ஏறிக் கொண்டாள் .உற்சாகமாக கையாட்டி விடை பெற்றாள் .

அசைய மறந்து சிலையாக நின்றுவிட்டாள் சுடரொளி . ஆனந்தபாலன் மீண்டும் மீண்டும் கேட்டும் தனது வாடிய நிலைக்கான காரணத்தை அவள் சொல்லவில்லை .

அன்று மாலை ராஜாவும் , செங்காந்தளும் வந்தனர் .” நீங்கள் எடுத்த நடவடிக்கைக்கு ரொம்ப நன்றி சார் ” ராஜா சொல்ல செங்காந்தள் கை கூப்பினாள் .” ரொம்ப நன்றிங்க சார் “

” அந்தக் குட்டி யானைக்கு தீங்கு செய்தவர்களை கண்டுபிடித்து சட்டப்படி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வைத்தேன் .அதைத்தான் சொல்கிறார் ” புரியாமல் பார்த்த சுடரொளிக்கு விளக்கினான் ஆனந்தபாலன் .

செங்காந்தள் தனியாக சுடரொளியிடம் நன்றி சொன்னாள் .புரியாமல் பார்த்தவளிடம் ” எனக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தந்ததற்கு ” என அவள் நாண , அவளது பார்வை ராஜாவின் மீதிருக்க , சுடரொளி வியப்பால் விழி விரித்தாள் .




அட , இதனை எப்படி கவனிக்காமல் போனேன் ? ஆனந்தபாலனிடம் இதனை பகிர்ந்து கொண்டபோது , அவன் தோள்களை குலுக்கினான் .

” முட்டாள்தனமான நினைப்புகள் இனி ஆகாது என்று தெரிந்து விட்டது .ரேஞ்சர் செங்காந்தள் பக்கம் பார்வையை திருப்பி விட்டார் “

” எனக்கு புரியவில்லை பாலா “

தன் முன் நின்ற மனைவியின் தோள்களில் தன் முழங்கைகளை ஊன்றி குனிந்து அவள் முகம் பார்த்தான் .” ரேஞ்சர் சாருக்கு உன் மேல் ஒரு கண் “

” சீச்சி ” உடன் அருவெறுப்பில் சுருங்கிய முகத்தின் கன்னங்களை பற்றிக் கொண்டவன் , ” தவறாக இல்லை சுடர் .அப்போதைய உனது வேடம் நினைவிருக்கிறதுதானே ? ராஜாவிற்கு அவரது காட்டு வேலையை காரணம் காட்டி இப்போது வரை திருமணம் அமையவில்லை .இந்த காட்டுப்பகுதியை விரும்பும் , ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருக்கும் போது நீ கண்ணில் பட்டாய் .உன்னை திருமணம் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிடலாமென்று ஐயாவுக்கு திட்டம் .நமது கதை தெரிந்ததும் பெரிய அதிர்ச்சி .நான் அவரை செங்காந்தள் பக்கம் திருப்பி விட்டேன் “

” செங்காந்தளா …? “

” ஆமாம் .செங்காந்தளும் தனது இனத்திற்காக திருமணம் செய்யாமல் தனித்திருப்பவள் .காடு , காட்டு உயிர்களென அக்கறை காட்டும் ரேஞ்சர் சார் மேல் ஒரு அபிப்ராயம் வைத்திருப்பவள் .ராஜாவுக்கும் செங்காந்தளை பிடிக்கும் .ஆனாலும் …என்று அவரை தடுமாற வைத்தது செங்காந்தளின் இனம் .இப்போது சார் சரியாகி விட்டார் .விரைவிலேயே இருவருக்கும் திருமணம் “

” இதையெல்லாம் எப்போது கவனித்தீர்கள் ? எப்படி செய்தீர்கள் ? “

” எப்போதுமே எதிரிலிருப்பவர்களை தவிர சுற்றுப்புறத்திலும் கவனம் வைக்க வேண்டும்மா “

” அன்று காட்டிற்குள் யானை விரட்டியபோது …” அன்றைய நிகழ்வு இப்போது போல் நினைவு வர உடல் நடுங்கியவளை அணைத்துக் கொண்டான் .

” ஷ்…என்னடா இது ? “

” அ..அன்று உங்களைத் தவிர வேறு யாருமே என் கவனத்தில் இல்லை ” சொன்னவளின் இதழ்களை தன் வசப்படுத்தினான் .உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் மேலும் மேலும் நீண்ட முத்தம் முடிவினை விரும்பவில்லை .

” இன்னமும் நாம் தனித்திருக்கத்தான் வேண்டுமா சுடர் ? ” கணவனின் ஏக்கம் சுமந்த கேள்விக்கு , கன்னங்களில்  செம்மை பூசி , வேண்டாமென தலையசைத்தாள் சுடரொளி .

அந்த இரவு மோக முத்தங்களும் , தாப பேச்சுக்களுமாக தம்பதிகளுக்கான இரவாக அழகாக அமைந்தது .

மறுநாள் காலை  ஆனந்தபாலன் எழுந்து பார்த்த போது சுடரொளி அங்கு இல்லை .




What’s your Reaction?
+1
52
+1
26
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!