Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -9

அத்தியாயம்-9

 

மிசோரம் மாநிலத்தின் தலைநகரமான அய்சால் நகரின் அதிகாலை நேரம். செங்குத்தான மலை பிளவுகள் மலைகள் மற்றும் பள்ளத்தாக்கு அடங்கிய அந்த நகரத்தை நோக்கி 200க்கும் மேற்பட்டோர் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றார்கள்.

அந்த துர்ட்லாங் மலை கம்பீரமான சிகரங்களில் சூழப்பட்டிருந்தது. வளர்ந்துவரும் நகரமான இந்த அய்சால் மிசோரம் மாநிலத்தின் முக்கிய நகரம் என்பதால் பல அடுக்குக்கட்டிடங்களுடன் நவீன தோற்றத்துடன் காட்சியளித்தது. பொதுவாக இங்கே மிசோ இன மக்கள்தான்  அதிகம் வசிப்பதால் மிசோரம் என்பதும் மிசோ இன மக்களின் பூமி என்பது பொருள். இந்திய நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது மிசோரம் மாநிலம்.




ட்ரக்கிங் போனபோது இந்த மிசோ இன மக்களை சந்திக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது. காலங்காலமாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டுவரும் இனம் என்பதால் மிசோ இனத்தாரின் திருவிழாக்கள் மற்றும் சடங்குகள் இதையெல்லாம் அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பும் கிடைத்தது. இவர்கள் பெரும்பாலும் ஜும் எனப்படும் விவசாய முறையை பின்பற்றி வருகிறார்கள் இந்த முறைப்படி அறுவடை முடிந்து வயல்களுக்கு தீவைப்பது அவர்களுடைய வழக்கமாம். அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. மற்றும் மிம் குட் பாவல் குட் ஆகியவை இங்கு கொண்டாடப்படும் இரண்டு முக்கிய அறுவடை திருநாட்கள் என்று அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

அன்று அவர்கள் கொடுத்த காட்டுக்கிழங்கு, தேன், திணை வகை உணவு என சாப்பிட்டு முடித்த பிறகு அவர்களின் பாரம்பரிய நடனம் நிகழ்த்தப்பட்டது. அதை கண்டு ரசித்துவிட்டு இரவு அங்கேயே தங்கி  அதிகாலையில் எழுந்து பயணத்தை தொடர்ந்தார்கள்.

வழியில் ஓடிய ஆறு பார்க்கவேண்டிய அம்சங்களில் முதன்மையானதாக அமைந்திருந்தது. நகருக்கு மேற்கே பள்ளத்தாக்குகளில் வழியாக இந்த ஆறு ரம்மியமாக வழிந்தோடியது.

அது மட்டுமல்லாமல் கிழக்கே டுரியல் என்னும் ஆறு மற்றும் அதனை ஒட்டிய பள்ளத்தாக்குப் பகுதி பிரமிக்க வைத்தது. மற்றுமொரு முக்கியமான கவர்ச்சி அம்சமாக அமைந்து இருக்கும் டம்டில் ஏரியில் பயணிகள் படகு சவாரி பொழுது போக்கில் ஈடுபட்டனர். மலை எற்றத்துக்கு சென்ற மாணவர்களும் அவர்களோடு கலந்து கொண்டனர்.  இவை தவிர இந்த மாநிலத்தில் மிக உயரமான நீர்வீழ்ச்சியா  விளங்கும் வன்டாவாங் நீர்வீழ்ச்சியும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்களில் ஒன்று என்றனர்.




இமயமலைப் பகுதிகளில் தற்போது மிக அரிதான பிரம்ம கமல மலர்கள் பூத்திருக்கின்றன என்று கூறினார்கள். இமயமலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பிரம்ம கமல மலர்களின் அரிய புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்திருந்தனர்.

இந்த பிரம்ம கமல மலர்கள் ஹிமாலயப் பகுதியிலும், உத்ரகாண்ட் மற்றும் பர்மா, சீனாவின் சில பகுதிகளிலும் மலரும். இந்த மலர் உத்ரகாண்ட் மாநிலத்தின் தேசிய மலராகும். இந்த மலருக்கு ஒரு சிறப்பம்சம் என்ன வென்றால், இதில் ஆண் மற்றும் பெண் மகரந்தங்கள் தன்னகத்தே அமைந்திருப்பதுதான். பொதுவாக இந்த மலர் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பாறைகள் மற்றும் புற்கள் நிறைந்த மலைப் பகுதிகளில் பூப்பது வழக்கம்.

இந்த மலரும், செடியும் மருத்துவ குணம் கொண்டவை. திபெத் நாட்டில் இதனை மருத்துவத்துக்காக பயன்படுத்துகிறார்கள். இந்த மலருக்குப் பின்னணியில் ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது, லட்சுமணனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சஞ்சீவினி மூலிகையால் குணம் அடைந்தார். அப்போது, சொர்கத்தில் இருந்து கடவுள் பூக்களை தூவினார். அதில் சில பூக்கள் இமாலயப் பகுதியில் விழுந்ததாகவும், அதுவே பூமியில் வேர்விட்டு வளர்ந்து பிரம்ம கமலம் என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்த அந்த மலர்களை பார்த்து ரசித்துக்கொண்டே மலையுச்சிவரை சென்ற சுபாஷினியை கைகளை பற்றி தடுத்து நிறுத்தினான் உடன் வந்த மனோஜ்.

“சுபாஷினி…என்ன கண்ணை மூடிகிட்டு போய்கிட்டே இருக்கீங்க.., நான் பிடிக்கலேன்னா கால் தவறி அதால பாதாளத்தில் விழுந்திருப்பீங்க தெரியுமா?”

“ஓ…சாரி மனோஜ்…நான் சரியா கவனிக்கலை, அந்த வெண்ணிற மேகங்களை பார்த்தவுடன் என்னையும்மறியாமல் அதை தொட நினைத்து…”




“நல்லா நினைச்சீங்க போங்க…நாம இப்போ எங்க இருக்குறோம் தெரியுமா? கர்ணம் தப்பினா மரணம் என்று சொல்லுவாங்களே அப்படிப்பட்டாதான ஒரு மலை உச்சியில்தான் இருக்கிறோம்…”

மனோஜ் சொன்னபிறகுதான் இவள் அந்த பள்ளத்தாக்கின் ஆபத்தை உணர்ந்தாள்.

“ரொம்ப தாங்க்ஸ் மனோஜ் என்னுடைய ஊயிரை காப்பாத்தீயதற்கு…”

“என் அங்கிள் பொண்ணாச்சே இதைகூட செய்யமாட்டேனா?” என்றவனின் குரலில் மெல்லிய நேசம் இழையோடி கிடந்தது.

தூரத்தில் நின்று இவர்களை கவனித்துக்கொண்டிருந்த முரளிதரனின் கண்கள் சிவந்தது. தற்செயலாக திரும்பிய சுபாஷினிக்கு அவனின் கோபமான முகத்தை பார்த்து குழப்பம் மேலிட்டது.

அன்றிரவு ஒரு கிராமத்தில் அவர்கள் தங்கினார்கள். அந்த ஊர் மக்கள் இவர்களுக்கு தேவையான உணவை சமைத்துகொடுத்தனர். அந்த உணவுக்கு பெயர் தெரியாவிட்டாலும் சுவைத்து உண்டனர்.

ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் தனிதனி டென்ட் போடப்பட்டு அதில் தங்கி இருந்தனர். புது இடம் என்பதால் தூக்கம் வராமல் வெளியில் வந்தவளுக்கு அழகான அந்த முழுநிலவின் ஒளி ரசிக்கும்படி இருக்கவே சற்று தூரம் நடந்து சென்று ஒரு மரதிண்டில் அமர்ந்தாள்.

“க்கும்….” கனைப்பு சத்தம் கேட்டு பட்டென்று திரும்பினாள்.

பின்புறமாக நின்றிருந்தவனை பார்த்ததும் திக்கென்றிருந்தது. இந்த முரளிதரனுக்கு வேற வேலையே இல்லையா? என்று எண்ணியவள் மரியாதை நிமித்தமாக எழுந்துநின்றாள்.




“என்ன இந்த நேரத்தில் இங்கே..? தூக்கம் வரவில்லையா? அல்லது மனோஜ்ஜை தேடி வந்தாயா?’” அவனுடைய குரலில் கேலி இழையோடியது.

“மனோஜ்ஜை தேடி நான் ஏன் வரணும்? எனக்கு தூக்கம் வரல அதனால்தான் வந்தேன்…”

“ஓ…உனக்கும் தூக்கம் வரலையா?”

“அப்படின்னா….?”

“இந்த புது இடம் புது சூழ்நிலை எனக்கும் தூக்கம் வரவில்லை என்பதற்காகத்தான் டென்ட்டிலிருந்து வெளியில் வந்தேன். தூரத்தில் ஒரு தேவதை உட்கார்ந்திருப்பது கண்ணில் பட்டது. ஆவலோடு அருகில் வந்துப் பார்த்தவுடன்தான் தெரிந்தது நீதான் அந்த தேவதை என்பது…”

இவள் பதிலேதும் சொல்லாமல் அமைதியா இருந்தாள்.

“சுபாஷினி… அந்த முழுநிலவை பாரேன்..கள்ளம் கபடமில்லாமல் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்…முழு நிலவை பார்க்கும் ஒவ்வொரு முறையும் மழலையின் சிரித்த முகம்தான் கண்முன்னால் தோன்றும்…என்னையும் அறியாமல் வெகுநேரம் பார்த்துக்கொண்டிருப்பேன். இப்போ வந்ததுக்கூட இந்த அழகை ரசிக்கத்தான். இந்த முழுநிலவை பார்க்கும்போது உனக்கு என்ன தோணுது”

“நீங்க சொல்லுற எந்த விஷயமும் எனக்கு தோணல…வானத்துல வட்டமா ஒரு நிலா மட்டும்தான் தெரியுது…” என்று சொல்லிவிட்டு எழுந்து தான் தங்கியிருக்கும் டெண்ட்டை நோக்கி நடக்கத்தொடங்கினாள்.

அவனோ எந்தவித சலனமுமின்றி அப்படியே நின்றிருப்பது இவளின் ஓரப்பார்வையில் நன்றாகவே தெரிந்தது.




படுக்கையில் வந்து சாய்ந்தப்பிறகும் வெகுநேரம் வரை தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்தாள். கட்டியிருந்த டெண்டின் கேப்பிலிருந்து முழுநிலா மழலையாய் சிரித்துக்கொண்டிருந்தது.

***

அதன் பிறகு பலவருடங்கள் கடந்தும்கூட எப்போவாது பவுர்ணமியன்று அன்று முழுநிலவை பார்க்கும்போதெல்லாம் முரளிதரனின் ஞாபகம் மனக்கண்முன்னால் வந்துபோகும். அப்போதெல்லாம் அந்த மன வலியிலிருந்து முழுவதுமாய் மீள முடியாமல் துடிதுடித்துப்போவாள்.

  சுபாஷினி ஐஏஎஸ் எக்ஸாம் அதாவது முதல்கட்ட பிரிலிமினரி தேர்வு பாஸ் பண்ணிவிட்டு இரண்டாம் கட்ட மெயின் தேர்வு எழுதி  ரிசல்ட்காக காத்திருந்த நேரம்.

என்னதான் நகர வாழ்க்கையில் எல்லா வசதிகளும் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் மனம் கிராமத்தை நோக்கி ஓடத்தான் செய்கிறது. கிராமத்தில் இருக்கும் அப்பா அம்மா மற்ற  உறவுகளை வருடத்தில் ஒருமுறையாவது சந்தித்து விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருப்பவர் வரதராஜன். திருச்சி பக்கத்துல இருக்கிற அந்த கிராமத்துக்கு வருடா வருடம் பொங்கலுக்கு செல்வதை வழக்கமாக்கி  கொண்டிருந்தார். அந்த வருடமும் மகள் சுபாஷினி மற்றும் மனைவி விஜயாவுடன் சொந்த ஊருக்கு கிளம்பினார் வரதராஜன். மகள் சுபாஷினி ‘ஐஏஎஸ்’ இரண்டாம் கட்ட ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறாள்.

“இந்த வருசம் எங்க கூட வந்துடு சுபாஷினி…, முன்பானால் வருஷாவருஷம் தாத்தாவீட்டுக்கு போவோம். நீ காலேஜ் சேர்த்து டீகிரி முடிச்சி அப்புறம் ஐஏஎஸ் செலக்ட்டாகி ட்ரெய்னிங் முடிச்சி தாத்தாவீட்டுக்கு போயி கிட்டத்தட்ட ஐந்து வருஷமாவது ஆவுது. போஸ்டிங் போட்டாங்கன்னா எந்த ஊருக்கு போடுவாங்களோ தெரியாது? அதுக்கு அப்புறம் தாத்தா வீட்டுக்கு போறது ரொம்ப கஷ்டம். அதனால இந்த ஒரு முறை  தாத்தா பாட்டி கிட்ட போய்  ஆசிர்வாதம் வாங்கிட்டு  வந்திடலாம்..”  என்று அப்பாவும் அம்மாவும் மாறி மாறி சொல்லவும்,

“சரிதான் போகலாம்பா…” என்று உடனே சம்மதித்தாள். அப்பா சொன்னமாதிரி காலேஜ் எக்ஸாம் செமஸ்டர் என்று தொடர்ந்து ஐந்து வருடமாக அப்பா அம்மாவுடன் சேர்ந்து தாத்தா வீட்டுக்கு போக முடியாத சூழ்நிலை. இந்த முறை போகாவிட்டால் அதன் பிறகு பல வருடங்கள் கூட ஆகலாம் என்று அவளும் ஒரு முடிவில் தான் இருந்தாள்.




வரதராஜன் பரம்பரை பணக்காரர் திருச்சியில் தன் அப்பாவுடன் சேர்ந்து சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகு அப்பாப்பிள்ளை இருவருக்குமிடையே ஏற்பட்ட ஒரு மனத்தாங்கல் உடனே சென்னையில் இருக்கும் தன்னுடைய கடையின் மற்றொரு பிராஞ்சை மகன் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டார் வரதராஜனின் அப்பா தண்டாயுதபாணி. அப்பா கோபக்காரர் ஒரு முடிவு எடுத்தால் பிறகு அதிலிருந்து மாற மாட்டார் மகனை தள்ளி வைத்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார் அதுவும் சரிதான் நாமளும் சொந்தக்காலில் நின்று சாதித்து காட்டுவோம்  என்ற எண்ணத்தோடு மறுபேச்சு பேசாமல் ஜவுளிக்கடை பொறுப்பை ஏற்றுக்கொண்டார் வரதராஜன்.

 அதிலிருந்து என்னதான் அப்பாவும் பிள்ளையும் அந்நியோன்யமாக பேசினாலும் ஏதோ ஒரு சிறு மனத்தாங்கலோடுதான்  அந்த பேச்சு முடிவடையும். அதற்கான வலுவான காரணமும் வரதராஜனிடம் இருக்கிறது அப்பா இப்படி செய்து விட்டாரே என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் தன்னுடைய பழைய வாழ்க்கையை எண்ணி வேதனைப்படுவார் வரதராஜன்.

ஆனாலும் நம்முடைய நல்லதுக்கு என்று எண்ணிதானே அப்பா இப்படி செய்திருக்கிறார் என்று அதை இயல்பாக எடுத்துக் கொண்டு கடந்து சென்று விடுவார். ஆயிரம் தான் இருந்தாலும் சில விஷயங்களை சாகும் வரை நம்மால் மறக்க முடியவில்லை. அப்படிப்பட்ட தானே ஒரு வேதனையான விஷயம் அவருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. அப்பாவோடு பேசும்போதெல்லாம் அவர் முகத்தைப் பார்த்து பேசுவது பிடிப்பதில்லை. காரணம் அவர் கண்களைப் பார்த்துப் பேசும்போது அதில் தெரிந்த ஒரு சின்ன துரோகம் வரதராஜனை துப்பாக்கியாய் துளைத்தது.

தண்டாயுதபாணி மகள் பார்வதி மேல் ரொம்ப பிரியம் திருமணத்திற்கு பிறகு மகளுக்கும் தனி வீடு எல்லாம் கட்டி கொடுத்து குறையில்லாமல் அனுப்பிவைத்தார் உள்ளூரிலேயே கட்டி கொடுத்ததால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாள் பார்வதி. வரதராஜனுக்கு கூடப் பிறந்தது அக்கா பார்வதி மட்டும்தான். பார்வதி உள்ளூர் பள்ளியில் ஹெட் மிஸ்ஸஸ்சாக இருக்கிறார்கள். பார்வதியின் கணவர் சுப்பிரமணி எக்ஸ்போர்ட் கம்பெனி நடத்திக்கொண்டிருக்கிறார். பார்வதிக்கு ஒரேமகன் பெயர் ஆனந்த். தாய்தகப்பன் இருவரும் பெரும்பாடுபட்டு மகனை டாக்டருக்கு படிக்கவைத்து திருச்சி மெயின்ரோட்டில் பெரிய ஆஸ்பிடல் கட்டிகொடுத்திருந்தார்கள்.




பார்வதியின் மகன் ஆனந்த் டாக்டரானவுடன் உறவுக்காரர்கள் நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு பொண்ணு கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் பார்வதியும் சுப்ரமணியனும் சுபாஷினியை மனதில் வைத்துக்கொண்டு வரும் வரன்களை எல்லாம் தட்டிக் கழித்துக்கொண்டிருந்தார்கள்.

வரதராஜனுக்கும் தன் மகளை தன்னுடைய அக்கா மகனுக்கு கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது. ஆனால் மகளோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நாமளே கற்பனையை வளர்த்துக்கக்கூடாதுன்னு அமைதியாய் இருந்தார்.

எப்போதாவது வரும் மகன் வரதராஜனிடம் தாய் விழுந்து விழுந்து பேசுவாள். அடிக்கடி வந்து விட்டுப் போகுமாறு கெஞ்சுவாள் ஆனால் வரதராஜனோ வருஷத்துக்கு இரண்டு முறைதான் வந்து போவார். சில வருடங்களுக்குப் பிறகு அதுவும் ஒரு முறையாக குறைந்துபோனது. இந்த இருபத்திரண்டு  வருடங்களாக வரதராஜன் சென்னைவாசி ஆகிப்போனார். மகள் சுபாஷினி பிறந்தது கூட சென்னைக்கு வந்த பிறகுதான். மகள் பிறந்த நேரம் வரதராஜனின் பிஸ்னஸ் ஓகோ என்று உயர்ந்தது.

வரதராஜனின் மனைவி விஜயா ரொம்ப சாந்த குணம் உடையவள். மற்றவர்களிடம் அதிர்ந்துக்கூட பேசமாட்டாள். தான் உண்டு தன் வேலை உண்டென்று வீடே கெதி என்று கிடப்பவள். கணவன் மகள் வீடு மூன்றுதான் உலகம் என்று எண்ணக்கூடியவள். ஒரு சின்னப்பிரச்சனை என்றாலும் எதிர்கொள்ள முடியாமல் நத்தை ஓட்டில் சுருங்குவது போல் சுருங்கிப்போவாள். இதனாலேயே எந்த பிரச்சனையாக இருந்தாலும் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள தயங்குவார் வரதராஜன். ஆனால் சுபாஷினி அப்படியல்ல அப்பாவைப்போல தைரியசாலி. எந்த பிரச்சனை என்றாலும் துணிந்து இறங்கிவிடுவாள்.




What’s your Reaction?
+1
15
+1
20
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!