Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -10

அத்தியாயம்-10

 

சுபாஷினி கேரளா மாநிலத்தில் துணைகலக்டர் பதவியில் இருந்த சமயம்.

அன்று அதிகாலையில் அப்பாவிடமிருந்து போன் வரவும் சுபாசினிக்கு பட்டென்று தாத்தாவின் ஞாபகம்தான் வந்தது. காரணம் எவ்வளவு பெரிய தலைபோகிற விஷயமாக இருந்தாலும் மகளில் தூக்கத்தை கெடுப்பது தகப்பனுக்கு பிடிக்காது. சுபாஷினி தூங்கி எழும் வரை வெயிட் பண்ணி லேன்ட் லயனில் மகள் எழுந்ததை உறுதிப் படுத்திக்கொண்ட பிறகுதான் கால் பண்ணுவார். அப்படி இருக்க, இப்போ அதிகாலையிலே போன் வரவே தாத்தாவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற பதற்றத்தோடு படுக்கையை விட்டு எழுந்து போனை ஆன்பண்ணினாள்.




“அலோ.. அப்பா சொல்லுங்கப்பா?”

“சாரிம்மா…உன்னை எழுப்பக்கூடாதுன்னுதான் நினைத்தேன். ஆனால் பொறுமையா இருக்க முடியலே அதான் போன் பண்ணிட்டேன். பதற்றப்படும்படி எதுவுமில்லம்மா…தாத்தாவுக்குத்தான் கொஞ்சம் உடம்பு சரியில்லை…உன்னை பார்க்கனுன்னு ஆசைப்படுறார். ஒரு ரெண்டுநாள் லீவ் போட்டுட்டு வந்து பார்த்துட்டுப்போம்மா…”

“சரிப்பா…கேரளாவுல இருந்து சென்னைக்கு இன்னைக்கே வந்துடுறேன்…நாளைக்கு காலயில ஊருக்கு போகலாம்…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

அடுத்தநாள் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கின பயணத்தில் இருந்தனர். டிரைவர் காரை ஓட்ட சுபாஷினி குடும்பத்தார் சற்று ரிலச்சாக வந்தனர்.

வெள்ளையாக பூப்பூத்த சின்ன சின்ன முட்செடிகள் இருபுறமும் குவியல் குவியலாக அடர்ந்திருந்தன. புதுப்புது வண்ணங்களில்,  அடையாளம் கண்டுபிடிக்க முடியாத குருவிகள் எல்லாம் நாவல்மர கிளைகளில் தாவிக்குதித்து தூங்கமூச்சி மரங்களை எழுப்பி விளையாடிக்கொண்டிருக்க, கருவேல முட்புதர்கள் மண்டிக்கிடந்த இடம் வெறும் கட்டாந்தரையாக மாறியிருந்தது. பிளாட் போடுவதற்கு ஏதுவாக பிரிக்கப்பட்டு இடையிடையே கற்களுக்கு வண்ணம் பூசி நட்டு வைத்திருந்தார்கள்.

 “இதெல்லாம் நம்ம இடம்தான் தாத்தா பெயர் போட்டிருக்கு பாரு!  காரை ஓட்டிக்கொண்டிருந்த வரதராஜன் மகளிடம் சொன்னார். ஆனாலும் அந்த இடத்தின் அமைப்பு விசித்திரமான ஒரு உணர்ச்சியை உண்டாக்குவதுபோல் உணர்ந்தாள் சுபாஷினி. ஆழ்மனதில் அவளை அறியாமல் ஒருவித அச்சம் பரவியது. கடவுளே தாத்தாவுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று பிராத்தித்துக்கொண்டே இருந்தது அவள் மனம்.




வீட்டு வாசலுக்கு சற்று முன்பாக காரை நிறுத்திவிட்டு இறங்கி விட்டுக்குள் சென்றார்கள். சிறுபிள்ளையாய் இருந்ததிலிருந்தே அப்பா  அம்மாவுடன் வருடத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் வந்துவிடுவாள். ஆனாலும் இந்தமுறை வீட்டுக்குள் நுழையும்போதே  மொழிதெரியாத ஊருக்கும் நுழைவதுப்போல் மிரள மிரள விழித்தப்படி வந்தது சுபாஷினிக்கே மனகுழப்பத்தை உண்டு பண்ணியது.

 “எப்படி இருக்கீங்க தாத்தா…? நான் சுபாஷினி வந்திருக்கேன்.”

தாத்தாவின் அருகில் சென்று இவள் சொன்னது அவர் மூளையை எட்டவில்லை.

     காதோரம் குனிந்து மீண்டும் சொன்னாள். இப்போது அவரின் கண்கள் மெல்ல அசைந்தன. உதடு பிரிந்து தலையை அசைத்தார். அடையாளம் கண்டுக்கொண்டு விட்டார் என்று புரிந்தது. உங்க பேத்தி வந்திருக்கு என்று யாரோ சொன்னார்கள். அவர் முகத்தில் மெல்லிய ஒளி வட்டம் தெரிந்தது. வாயை மெல்ல அசைத்தார். பேச நினைத்த வார்த்தைகள் நெஞ்சிலிருந்து எழாமல் தொண்டை அடைத்தது போல, எச்சிலை கூட்டி விழுங்கி வாயை திறந்து சகஜமாக பேச முயற்சி செய்தார். முடியாமல் போகவே மீண்டும் சோர்வோடு கண்களை மூடிக்கொண்டார்.

அடுத்து சுபாஷினியின் அம்மா விஜயா தாத்தாவின் அருகில் சென்றாள். அவரை தொந்தரவு படுத்தாதே என்று வரதராஜன்  தடுக்கவே, கணவரை முன்னால் நிறுத்திவிட்டு அமைதியாக பின்னுக்கு நகர்ந்துக்கொண்டாள் விஜயா.

சுபாஷினியின் பார்வை வாசல் பக்கமாக திரும்பியது. ஊர்மக்கள் ஒன்று கூடி வந்துக்கொண்டிருந்தார்கள். இவர்களை பார்க்கத்தான்  அதுவும் இவளை பார்க்கத்தான் அவர்கள் வருகிறார்கள் என்பது சுபாஷினிக்கு நன்றாகவே புரிந்தது. பின்னே இருக்காதா இத்தனை வருடங்களுக்கு பிறகு அந்த ஊருக்கு வருகிறாளே! அதுவும் ‘ஐஏஎஸ்’ பதவியோடு வந்திருக்கும் பெரியவரோட பேத்தியை பார்க்கவே ஊர்மக்கள் ஒன்றுகூடி வந்தார்கள்.




பார்வையை ஜன்னல் பக்கமாக திருப்பியவளுக்கு. ஜன்னலுக்கு மிக அருகில் அந்த உருவம் கண்ணில் பட்டது., ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்துப்போனாள். இடுக்கிய கண்களும் சுருங்கிய தோலும் உடல் அதிர்வதை பொருட்படுத்தாமல் அவள் பேசிய விதமும் அடிவயற்றில் குளிர்ச்சி பரவி உறைவதுபோல் இருந்தது. அவளை பார்க்க பிடிக்காமல் பார்வையை திருப்பிக்கொண்டாள். பார்க்கவே பயமாக இருந்தது. ஒரு நிமிடம் கண்களை இமைத்த அந்த முகம் சுபாஷினியை நோக்கி நீங்க யாரு…? உங்களை இதற்கு முன்னால் எங்கேயோ பார்த்திருக்கேனே…? என்று கேட்டது.

“நான்…நான்…சுபாஷினி”

வார்த்தைகள் வெளிவராமல் தொண்டையில் சிக்கிகொண்டன.

“நீ..நீங்களா! என்னை யாருன்னு தெரியுதா? நான்தான் கனகா, ஐயாவோட தங்கச்சிப்பொண்ணு..”

சற்று தாமதமாகத்தான் அவள் சொன்னாள்.

சுபாஷினிக்கு அவளை தெரியாமல் இல்லை. நன்றாகவே தெரியும் ஆனால்…?

அப்போ பார்க்க மிகவும் அழகாக இருப்பாள். இப்போ…? மத்தவங்களுக்கு கெடுதல் நினைக்ககூடிய கொடிய எண்ணங்களை கொண்டிருந்தால் எப்படி நன்றாக இருக்க முடியும்? எண்ணம் போல் வாழ்க்கை என்பார்களே அது இவளுக்கு முற்றிலும் பொருந்தும்.

திடீரென்று யாரோ அலறும் சந்தம் கேட்டது.

 “ஐயோ… என்ன பெத்த ராசா, ஊருக்கெல்லாம் படியளந்தவன் இப்படி ஒடிங்கிப்போய் கிடக்கியே…”




புதிய குரலாக இருக்கவே யாரு என்று பார்க்கும் ஆவலில் ஜன்னலில் இருந்து பார்வையை திருப்ப,  சுபாஷினியின் கண்களில் அவன் சிக்கினான். இவன் எப்படி இங்கே? வெளிவராண்டாவில் போட்டிருந்த மரநாற்காலியில் ஆனந்த் அமர்ந்திருக்க அவன் அருகில் மிக நெருக்கமாக அமர்ந்திருந்த அவனை பார்த்தவுடன் சுபாஷினியின் உடலில் மெல்லிய நடுக்கம் பரவத்துவங்கியது. ஒரு வேளை மும்பையில் இருந்து மாற்றலாகி வந்திருப்போனோ? அவனை சந்தித்து நாலைந்து வருடங்கள் இருக்கும்  ஆனாலும் வயதின் முதிர்ச்சியா? அல்லது இரவு பகல் பாராமல் உழைத்த கடின உழைப்பால் வந்த நரைமுடியோ? ஒரு சில இடங்களில் அது நன்றாகவே தெரிந்தது. அவனுக்கு கண்களை சுற்றி மெல்லிய கருவளையம், அங்கும் இங்குமாய் அடுக்கி வைத்தார் போன்றிருந்த வெண்ணிற தலைமுடிகள். மீசையின் அடர்த்தி, தாடையின் கடினம். சுபாஷினியின் மனதுக்குள் படபடப்பு தொற்றிக்கொண்டது. அவன் பார்வையும் ஒரு இறுக்கமான மௌனத்தோடு இவள் மேல் கவிழ்ந்திருந்தது.

ஒருவேளை இவன் யார் என்ற விஷயம் தாத்தாவுக்கு தெரிந்திருக்குமோ? கண்டிப்பாக தெரிந்திருக்கிறது இல்லை என்றால் நல்லா இருந்தவருக்கு எப்படி திடீரென்று அட்டாக் வரும்? பாவி சொன்னதுப்போல் செய்துவிட்டானே.

ஒருநாள் இரண்டு நாளா? ஐந்து வருடங்கள் கடந்தோடிவிட்டது. என்றாலும் இன்றும் அவனை பார்க்கும்போது முதல் முதலில் பார்த்த, ஒரு படபடப்பு பயம் இதெல்லாம் ஏன்? இந்த நிலையிலுமா?

கண்களை இறுக்க மூடி மனதை ஒருமுகப்படுத்தினாள். அப்பாவின்  அழைப்பு செவிகளில் எட்டவே இதயத்தின் படபடப்பை மறைத்தப்படி அறைப்பக்கம் திரும்பி நடந்தாள்.

மாலைமங்கி இருள் நனையத்தொடங்கியது. வீட்டை சுற்றி முற்றுக்கையிட்டிருந்த கூட்டம் இவள் பெற்றோரையும் இவளையும் விசாரித்துவிட்டு  கொஞ்சம் கொஞ்சமாக கரையத்தொடங்கியது.

கிட்டத்தட்ட வீடே காலியான நிலையில் மீண்டும் அவர் அறைக்குள் நுழைந்தாள் சுபாஷினி. அவரிடம் முன்பைவிட சற்று முன்னேற்றம் காணப்பட்டிருக்க வேண்டும். நெஞ்சிக்கூட்டின் ஏற்ற இறக்கம் சீர்ப்பட்டு தெளிந்த நீரோட்டமாய் சுவாசம் வந்துக்கொண்டிருந்தது. பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்த சின்னதாத்தாவின் பிள்ளைகள் அருகில் அமர்ந்து தாத்தாவின் முகத்தையே வச்சக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுபாஷினி ஜன்னலோர இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தாள். சற்று நேரத்திற்குபிறகு, “அம்மா சுபாஷினி தாத்தா சரியாயிட்டார் உன் பெயரைக்கூட சொன்னார்.” என்றார் அப்பா.

“இவளுக்கு அதில் நம்பிக்கையில்லை. ஆனாலும் வாய்திறந்து எதையோ பேசியிருக்கிறார் என்பதை உணரமுடிந்தது. அவர் அருகில் சென்று கவனித்தாள். சீரான சுவாசத்தோடு கண்மூடி ஆழ்திருந்தார். அறையை ஒருமுறை கண்கள் துழாவியது. அழுது அழுது ஓய்ந்துப்போய் மூலையில் சுருண்டுகிடந்தாள் அந்த முதியவள்.




“எங்க பெரிய மாமனாருக்கு தூரத்து சொந்தமாம். அக்கா முறையாம். எவ்வளவு ஆதங்கப்பட்டு அழுறாங்கபாரு பின்னே இருக்காதா? பாவம் வரும்போதெல்லாம் ஒரு மாசம் தங்கிட்டு கட்டு கட்டா காசு வாங்கிட்டு போறவங்களாச்சே இனி கிடைக்குமோ கிடைக்காதோ என்ற கவலை வரத்தானே செய்யும்.?”

சற்று நேரத்துக்கு முன் கூடத்தில் கேட்ட குரல் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

ஆனாலும் அந்த முதியவள் மேல் இவளுக்கு பரிதாபம்தான் தோன்றியது.

அங்கிருந்தவர்களை சாப்பிடும்படி அனுப்பிவிட்டு அந்த முதியவளை மெல்ல எழுப்பினாள்.

“பாட்டி… போய் சாப்பிடுங்க மணியாகுது பாருங்க..”

மெல்ல தலைத்தூக்கி பார்த்தவள் இவளை அடையாளம் கண்டுக்கொண்டாள் போல

“எப்படிம்மா இருக்கே நல்லா இருக்கியா? எந்தனை பிள்ளைங்க?”

அவள் குரலில் தெளிவும் முகத்தில் மலர்ச்சியும் காணப்பட்டது.

“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை…”

“என்னை யாருன்னு தெரியுதா தங்கம்?”

சந்தேகத்தோடு கேட்டாள் அந்த முதியவள்.

சுபாஷினி எவ்வித பதிலும் சொல்லாமல் ஒரு சிரிப்பு சிரித்தாள்.




“ஏம்மா சிரிக்கிறே… நான் பெரியவரோட நெருங்கிய சொந்தம்தான்…”

“தெரியும்…உங்களை நான் பார்த்திருகிறேன்……”

“அப்படியா…என் ராசாத்தி நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். தங்கம் என் மனசுல…ஒரு ரகசியம் பொதைஞ்சி கிடக்கு எனக்கு சாக்காடு வரதுக்குள்ள யார்கிட்டையாவது சொல்லிடனுன்னு  இருந்தேன்,, கடவுளா பார்த்துதான் உன்னை அனுப்பியிருக்கார் தாயி…’’

“என்கிட்டேயா….?”

இந்த முதியவளுக்கு ஏதோ விஷயம் தெரிந்திருக்கிறது. இல்லை என்றால் இவ்வளவு ரகசியமாக பேசுவாளா?

“ம்ம்…உங்கப்பாவுக்கும் அந்த டீ கடைகாரர் பொண்ணுக்கும்…”

“எனக்கு எல்லாமே தெரியும்…” என்று அந்த முதியவளின் வாயை அடைத்தாள். அடுத்து பேச்சை தொடர நினைத்தபோது கையிலிருந்த மொபைல் ஒலிக்கவே, மேற்கொண்டு அவளிடம் எதுவும் பேசாமல் வெளியில் வந்து போனை அட்டன் பண்ணினாள். மறுமுனையில் பேசியது மினிஸ்டர்.

“ஹலோ… வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா..?”

“நல்லா இருகேம்மா…நீங்க எப்போ சென்னைக்கு வர்றீங்க?

“ஏன் சார்…எனி இம்பார்ட்டன்ட் நியூஸ்?”

“நாளன்னைக்கு ஒரு போர்ட் மீட்டிங்  இருக்கு. நீங்கத்தான் நடத்தப்போறிங்க, அதான் நாளைக்கு வந்திட்டீங்கன்ன நல்லா இருக்குன்னு பார்த்தேன்”

“சார்…வேற யாராவது அரேஜ் பண்ண முடியுமா? ஏன்னா என் தாத்தா சீரியஸா இருக்கார். என்னால உடனே வரமுடியாது சார்”

மறுமுனையில் இருப்பவர் இவளிடம் தொடர்ந்து பேசினார். அவருக்கு தன் சூழ்நிலையை புரியவைத்துவிட்டு போனை கட்பண்ணியப்படி இவள் திரும்பியபோது, இவளுக்கு எதிரில் வந்து வழியை மறைத்தப்படி நின்றான் அவன்.




மீண்டும் படபடப்பு தொற்றிக்கொள்ள,

“நா… நான் உள்ள போகணும், வழியை விடுங்க” அடிக்குரலில் எச்சரித்தாள்.

“உன்னிடம் பேசவேண்டும்…” என்று மொட்டையாக கூறினான்.

“எ…என்ன…என்ன பேசவேண்டும்? பேசுவதற்கு என்ன இருக்கு? அதான்..எல்லாமே முடிஞ்சிப்போச்சே…”

“எதுவுமே முடியவில்லை இனிதான் எல்லாமே ஆரம்பம். ஓகே  ஈவினின்ங் குளக்கரைக்கு வா.. நீ மட்டும் தனியா”

அந்த தனியா என்பதில் ஒரு அழுத்தம் தெரிந்தது. அடுத்து இவளுடைய பதிலுக்காக காத்திராமல் தெருவில் இறங்கி விறு விறுவென்று நடந்து சென்று மறைந்தான்.

ஒரு பக்கம் கோபமாகவும் வெறுப்பாகவும் இருந்தாலும் முற்றிலுமாக மறுக்கமுடியவில்லை. பேசவேண்டும் கண்டிப்பாக பேசினால்தான் இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். மாலை குளக்கரைக்கு போய்தான் பார்ப்போமே… என்ற முடிவுக்கு வந்தாள்.




What’s your Reaction?
+1
13
+1
23
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!