Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -8

அத்தியாயம்-8

 

பிரியங்கா சென்னைக்கு வந்து கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் தாண்டி விட்டது. ஒருநாள் பெரியம்மாவும் பெரியப்பாவும் ஹாஸ்டலுக்கு வந்து பிரியங்காவை பார்த்துவிட்டு போனார்கள். ஓடிப்போன சுகந்தி இப்போ மாசமா இருக்காளாம். பழசையெல்லாம் மறந்து சென்னையில் இருக்கும் மகள் சுகந்தியைப் பார்க்க வந்தது பிரியங்காவுக்கு வியப்பளித்தது.

அவர்களோடு பேசி அனுப்பிவைத்துவிட்டு சோர்வோடு படுக்கையில் சாய்ந்தாள். பிரியங்கா இதுவரை தங்கியிருக்கும் அறையை விட்டு எங்கேயும் நகரவில்லை. வேலைக்குப் போவதும் திரும்பவும் அறைக்குள் வந்து முடங்கி கொள்வதுமாய் இருந்தாள்.




அன்று சண்டே என்பதால் பக்கத்து அறை தோழி காவியா தனக்குத் தேவையான கார்மெண்ட்ஸ்களை வாங்குவதற்கு கிளம்பும்போது இவளை துணைக்கு  அழைக்கவும் சரி வந்து இத்தனை நாள் ஆகுதே!  அறையைவிட்டு வெளியில் எங்கேயும் போகாமல் இருக்கிறோமே? கொஞ்சம் வெளியில போயிட்டு வந்தாதான் என்ன? என்று மனதில் தோன்றவே சட்டென்று கிளம்பிவிட்டாள் பிரியங்கா.

தோழிகள் இருவரும் தி.நகர் முழுவதும் சுற்றிவிட்டு கடைசியாக அந்த பிரபல ஜவுளிக் கடைக்கு வந்தனர். கடை வாசலில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.

“இந்த ஏரியா எப்பவுமே இப்படித்தான் பிரியங்கா…நாம நினைச்ச மாதிரி பார்த்து பொறுமையா எதையும் வாங்க முடியாது. நான் பலமுறை இங்கே வந்திருக்கேன். ஒவ்வொரு முறையும் அவசர அவசரமாதான் பர்ச்சேஸ் பண்ணிட்டு போவேன்.  இந்த முறையாவது கொஞ்சம் ஃப்ரீயா வாங்கலாம்னு நினைச்சா இன்னைக்கு பார்த்து  கூட்டமும் ரொம்ப ஓவரா இருக்கு…” என்று புலம்பினாள் காவியா.

“சரி வந்ததுதான் வந்துட்டோம் கூட்டத்தைப் பார்த்தால் சரியாக வராது. கொஞ்சம் வெயிட் பண்ணி கூட்டம் குறைந்த பிறகு  உள்ளே போகலாம் காவியா. இந்த கூட்டத்துல உள்ளே போக கொஞ்சம் பயமாதான் இருக்கு…” என்று சொன்ன பிரியங்காவை ஆச்சரியத்தோடு பார்த்தாள் காவியா.

“என்ன காவியா இப்படி ஆச்சரியமா பார்க்கிறே…?”




“ஒண்ணுமில்லை! பிரியங்கா எங்கே நீ பொறுமை இல்லாம உடனே போகலாம்னு சொல்லிடுவியோன்னு பார்த்தேன். நல்ல வேளை நீ என்ன விட  பொறுமைசாலி தான். ஆமாம் பிரியங்கா உங்க வீட்டில நீ ஒரே பெண்தானா? உன் கூட பொறந்தவங்க வேற யாரும் இல்லையா? என்று கேட்டவுடன் முகம் மாறிப் போனாள் பிரியங்கா. ஏன்னா யார்கிட்டயும் தன்னுடைய ஃபேமிலி பற்றி பேசுவதற்கு அவள் விரும்பியதே இல்லை. முதல் கேள்வி இவளைப் பற்றி கேட்பார்கள் அடுத்தது பெற்றோர்களைப் பற்றி கேட்பார்கள். உன்னுடைய அப்பா என்ன வேலை பார்க்கிறார்? இப்படிப்பட்ட கேள்வியோடு தொடங்குவார்கள். எல்லாம் எதிர்பார்த்ததுதான் அவள் யாரிடமும் நெருக்கமாகப் பழகுவதில்லை. இவளும் அடுத்த கேள்வியாக அப்பா அம்மாவைப் பற்றி கேட்கப்போகிறாள். அப்படி கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் தயங்கி நின்றாள்.

ஆனால் காவியா அடுத்தக் கேள்வியைக் கேட்காமல் தன்னைப் பற்றிச்சொல்லத் தொடங்கினாள்.

பிரியங்கா உங்க வீட்டில ஒரே பெண்ணா இருப்பேன்னு நினைக்கிறேன். ஆனா நான் அப்படி இல்லே. எங்க வீட்டுல மொத்தம்  எத்தனைப் பேர் தெரியுமா? மொத்தம் ஆறு பேர் அதுல நான்தான் முதல் பெண். எனக்கு அடுத்து இருக்கும் ஐந்து பிள்ளைகளும் பள்ளிக்கூடத்தில் தான் படிக்குதுங்க! ரெண்டாவது பொண்ணு பன்னிரண்டாவது. கடைசிப் பையன் நாலாவது படிக்கிறான் அப்படின்னா எல்லாமே எவ்வளவு  சின்ன பிள்ளைங்கன்னு பாத்துக்கோ?

என்னுடைய தம்பி தங்கைகளை நான்தான் படிக்க வைக்கிறேன். அவங்களுக்கு பீஸ் கட்டத்தான் நான் வேலைக்கே வந்தேன். வேலைக்கு வந்த இத்தனை வருடமா எனக்குன்னு எதுவுமே நான் வாங்கிக்கொண்டதில்லை. இப்ப வாங்க வந்ததுக்கூட நான் பார்ட்டைமா ஒரு கடையில் வேலைப்பார்க்கிறேன். அந்தக் காசுலதான் என்னுடைய தேவைகளை பூர்த்தி பண்ணிக்கிறேன். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நல்ல துணிமணிகளை வாங்கி போட்டுக்க முடியுமா? அதுக்காகதான் எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறேன்…” என்று தன்னுடைய ஏழ்மை  நிலையை காவியா சொன்னப்போது பிரியங்காவுக்கு மனம் வலிக்கத்தான் செய்தது.




நல்லவேளை கூட்டம் சற்று குறைவாக இருக்கவே இவர்கள் இருவரும் அந்த துணிக்கடைக்குள் நுழைந்தார்கள். வரவேற்பறையில் இருந்தவர்கள் இவர்களைப் பார்த்தவுடன் கைகூப்பி வரவேற்றார்கள். தோழிகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். பின் குழப்பத்தோடு உள்ளே சென்றனர். எதிர்ப்பட்ட எல்லா ஊழியர்களும் வணக்கம் சொன்னார்கள் மீண்டும் குழப்பம் தொற்றிக்கொண்டது.

“என்னாச்சு எல்லாரும் நம்மள பார்த்து வணக்கம் சொல்றாங்க…?” என்று காவியா பிரியங்காவை பார்த்து கேட்டாள்.

“அதுதான் எனக்கும் ஒன்னும் புரியல…” என்று பதில் சொன்னாள் பிரியங்கா.

“ஒருவழியாக இவர்கள் இருவருக்கும் தங்களுக்கு தேவையான துணி மணிகளை பர்ச்சேஸ் பண்ணிக்கொண்டு பில் போடும் செக்ஷனுக்கு வந்தபோது அங்கே இவர்களை காட்டி எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்  கடை ஊழியர்.

“என்ன சார் எங்களை காமிச்சு ஏதோ சொல்றீங்க என்னன்னு தெரிஞ்சுக்கலாமா…?” மிதமிஞ்சிய கோபத்தோடு அந்த நபரை நேருக்கு நேராக நின்று கேட்டாள் பிரியங்கா.

“அது ஒன்னும் இல்லைம்மா நீங்க கடைக்கு வந்த விஷயம் ஓனருக்கு தெரியாதுன்னு நினைகிறேன். பக்கத்துல ஒருவரை பார்த்துவிட்டு வரேன்னு சொன்னாரு. அப்பாவுக்கு கால் பண்ணுங்கம்மா வந்துடுவார்.”

“அப்பாவா யாரது? நீங்க எங்களை தவறா புரிஞ்சிகிட்டு பேசுறீங்கன்னு நினைகிறேன்.? நாங்க வாங்கின துணிகளுக்கு பே பண்ணிட்டு கிளம்புறோம்..” என்று தன் பங்கிற்கு கோபப்பட்டாள் காவியா.




 “அம்மா அம்மா தப்பா எடுத்துக்காதீங்க!!…ஓனர் ஐயா வந்தா எனக்கு ஏன் கால் பண்ணலன்னு என்னதான் திட்டுவார் ப்ளீஸ்மா…”

அந்த ஊழியர் கெஞ்சும் குரலில் பேசவும் அவரை மீறி செல்ல முடியாமல் இருவரும் தயங்கி நின்றனர். அந்த நேரத்தில் கடை வாசலில் வெண்ணிற கார் வந்து நிற்கவே அதிலிருந்து ஒருவர் இறங்கி உள்ளே வந்தார்.

 “முதலாளி முதலாளி அம்மா வந்திருக்காங்க…”?” என்று கத்திக்கொண்டு அந்த ஊழியர் அவர் அருகில் செல்ல தலையை உயர்த்திப்பார்த்தவர் அதிர்ச்சியோடு அப்படியே நின்றுவிட்டார்.

அவர் முகத்தில் பலத்த அதிர்ச்சியும் தடுமாற்றமும் தெரிந்தது.

பிரியங்கா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் பேசினாள்.

  “சார் நாங்க பர்ச்சேஸ் பண்ண வந்தோம் எங்க வேலை முடிஞ்சிடுச்சு ஆனா உங்கள பாத்துட்டு தான் அங்க போகணும்னு இவர் பிடித்து வைத்திருக்கார். என்ன விஷயம் சார் ஒவ்வொரு கஸ்டமர் கிட்டயும் இப்படிதான் பேசுவீங்களா எங்களுக்கு வேலை இருக்கு நாங்க போகனும் இல்லையா? ஆற அமர பேசிகிட்டு இருந்தா எங்க ஹாஸ்டல்ல கேள்வி கேப்பாங்களே?” என்று படபடவென்று பேசிய பிரியங்காவை வைத்த கண் வாங்காமல் அனைவரும் பார்த்தார்கள்.




 “இங்க என்னதான் நடக்குது? எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொன்னாதானே எங்களுக்கு புரியும். நாங்க ஏதோ பெரிய தப்பு பண்ணின மாதிரி எங்களை சுற்றி இத்தனை பேர் இருக்கீங்க எதுக்காக இப்படி எல்லாம் நடந்து இருக்கீங்க…” என்று  காவியாவும் சத்தமாக பேசினாள்.

 “எல்லாரும் போங்கப்பா எதுக்கு இப்படி கூட்டம் சேர்ந்துக்கிட்டு இருக்கீங்க…? நான் அவங்க கிட்ட பேசுகிறேன். நீங்க எல்லாரும் போங்க போங்க என்று ஊழியர்களை விரட்டி விட்டு இவர்கள் அருகில் வந்தார் அந்த ஓனர் திரும்பவும் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார் பிறகு பிரியங்கா பக்கம் திரும்பியவர்,

“அம்மா உங்க பேரு என்ன? எந்த ஊருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று தயவாக கேட்டார்.

அவருடைய பேச்சு அவளை கட்டிப்போட்டது.

“என்னுடைய பெயர் ப்ரியங்கா சார் ஏன் சார் என்னுடைய பெயருக்கு ஏதாவது கிப்ட் கொடுக்கப்போறீங்களா…?” என்று கேட்டு விட்டு மெல்ல சிரித்தாள்.

“கண்டிப்பா கொடுக்குறேம்மா ஆனா இவங்க இத்தனை பேரும் கூட்டம் சேர்ந்து உங்கள நிறுத்தி இருக்காங்களே அந்த காரணத்தை நீங்க தெரிஞ்சுக்கணும்  என் பொண்ணு பேரு சுபாஷினி! இப்ப அவங்க ஐஏஎஸ் ட்ரெய்னிங் போயிருக்காங்க, அவங்களை கூட்டிட்டு வந்து உங்க பக்கத்துல நிக்க வெச்சா ரெண்டு பேரும் ரெட்டை பிள்ளைங்கன்னு தான் சொல்லுவாங்கள். அந்த அளவுக்கு ஒரே மாதிரியான குரலும் உருவ ஒற்றுமையும் இருக்கு!!. ஏன் நானே ஒரு நிமிஷம் தடுமாறி போயிட்டேன்னா பாருங்களேன். ரெண்டு பேரும் ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருக்கீங்க அதை பார்த்த உடனேதான் கடை பசங்க எல்லாம் அதிர்ச்சியுடன் உங்களை சுத்தி நின்னு கிட்டு இருக்காங்க வேற ஒன்னுமில்லே…”




“………………”

“எம் பேச்சுல உங்களுக்கு சந்தேகம் கூட இருக்கலாம் ஒரு நிமிஷம் இருங்க..” என்றவர் தன்னுடைய லேப்டாப்பை எடுத்து ஓபன் பண்ணி அதிலிருந்த மகள் சுபாஷினியின் படம் மற்றும் குடும்ப படம் எல்லாவற்றையும் இவர்களுக்கு காட்டினார்.




What’s your Reaction?
+1
18
+1
16
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!