Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -7

அத்தியாயம்7

 

பிரியங்காவின் கல்லூரி படிப்பு முடித்த சிலநாட்களில் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட்டாகி சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு வேலை கிடைத்தது. அப்பாயின்மென்ட் ஆர்டரை அம்மாவிடம் காட்டியபோது அவள் முகத்தில் எந்தவித பிரதிபலிப்புமில்லை. அம்மா எப்பவும் இப்படித்தான் சந்தோஷமோ! துக்கமோ! எதுவாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தத் தெரியாது. தாத்தா பாட்டியிடம் சொன்னப்போது அவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். ஆனால் சென்னை என்றவுடன் முகம் மாறினார்கள். “பொம்பள புள்ள அவ்வளவு தூரம் போய் தங்கி வேலைப்பார்க்கிறது எல்லாம் சரிப்பட்டு வராது. மும்பையில் இல்லாத வேலையா? இங்கேயே ஏதாவது வேலைக்குப்போ…” என்றார் தாத்தா.

“இல்ல தாத்தா கவர்மென்ட் வேலை. கிடைத்ததே பெரிய விஷயம் எடுத்தவுடனே ஐம்பதாயிரம் வரை கிடைக்கும் காலேஜ்ல கிளாஸ் எடுக்கிற வேலை ப்ரொஃபஸர் வேலை. ப்ரொஃபஸர்ன்னா காலேஜ்க்கு வாத்தியார் மாதிரி, கொஞ்ச நாள் வேலை பார்த்துட்டு அப்புறங்கூட மும்பை டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திடலாம்.” அப்போதைக்கு சமாதானப்படுத்தும் நோக்கத்தில் கூறினாள்.




“நீ என்ன வேணா சொல்லு தனியா உன்னை அங்கெல்லாம் அனுப்ப முடியாது, உங்க அம்மாவே சம்மதிச்சாலும் நாங்க சம்மதிக்க மாட்டோம் நீ வேலைக்குப் போய் சம்பாதித்து போடணும்னு அவசியமில்லை. என் உயிர் இருக்கிற வரைக்கும் இந்த டிபன் கடையே போதும். இதை நடத்தி குடும்பத்தை காப்பாற்றுவேன் அதை பத்தி கவலை படாதே?. அடுத்தது இந்த விஷயத்தை உங்க மாமா கிட்ட சொன்னியா மாமா என்ன சொன்னான்? மாமாவுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு கேட்டுக்கோ அவனுக்கு விருப்பம் இல்லாத எந்த விஷயத்தையும் செய்யாதே..” என்று முடித்து விட்டார் தாத்தா.

பிரியங்காவின் முகம்  சோர்ந்துப்போனது. இது மாதிரி ஒரு வேலை கிடைக்கறது ரொம்ப பெரிய விஷயம். அதுவும் கவர்மெண்ட் வேலை இதை ஏன் தாத்தா புரிஞ்சுக்கமாட்டுறார்? மாமா கிட்ட சொன்னா அவரால இதை புரிஞ்சுக்க முடியும் என்று போனை எடுத்து நம்பரை போட்டாள். தீடிரென்று ஒரு எண்ணம் தோன்றியது. இந்த வேலையும் வேணாம் ஒன்னும் வேணாம். ஐம்பதாயிரம் சம்பளம் தானே? அதே சம்பளத்தில் இங்கே வேலை பார்த்துக்கலாம், மெட்ராஸ் போறதுல எங்களுக்கு விருப்பமில்லை என்று மாமா ஒரேடியாக மறுத்துவிட்டால் என்ன செய்வது? என்று தோன்றிய அடுத்த நிமிடமே போனை கட்பண்ணி விட்டாள்.

பாட்டிக்கும் இதில் விருப்பமில்லை.

“சென்னையே வேணான்னு சொல்லுறீங்களே அதுதான் ஏன்னு கேக்குறேன்.? சென்னைக்கு ஏன் போகக்கூடாதுன்னு சொல்றீங்க? உங்களுக்கு கூட பூர்வீகம் அந்த சைடு தானே உங்க சொந்த பந்தங்கள் எல்லாம் அங்கே இருக்குறதா சொல்லுவீங்களே? அப்படி இருக்கும்போது அவங்களை எல்லாம் போய் பாக்கணும் அப்படின்னு உங்களுக்கு தோணலையா? என்னை காரணம் காட்டியாவது  ஒருமுறை வாங்களேன். நான், நீங்க, அம்மா எல்லாம் சேர்ந்து சொந்தக்காரங்களை பாத்துட்டு வரலாம்.” இப்படி சொன்னால் பாட்டி சம்மதிப்பாள் என்ற நப்பாசையில் மெல்ல சொல்லிவிட்டு அமைதியாக இருந்தாள் பிரியங்கா.




“சொந்த பந்தம் எல்லாம் வேணான்னு தலைமுழுகிட்டு வந்தாச்சு..,திரும்பவும் அங்கப்போயி உறவை புதுப்பிக்க வேணாம். இதோப்பாரு நீ சின்னப்புள்ள உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது. பெரியவங்க ஒரு விஷயத்தை முடிவு பண்றாங்கன்னா அது நல்லதுக்குத்தான்னு இருக்கோனும் புரியுதா? நீ அங்க போக கூடாதுன்னு நாங்க நினைக்கிறோம். எங்களுக்கு விருப்பமும் இல்லை மீறி போறேன்னா அது உன்னோட விருப்பம். இதுல உங்க அம்மாவும் உங்க மாமாவும் சம்மதம் சொன்னா தான் நீ அந்த இடத்துக்கு போறத பத்தி நினைக்கனும். ஆனா ரெண்டு பேரும் சென்னைக்கு போறதை விரும்பமாட்டாங்க…அதுக்கப்புறம் உன்னுடைய இஷ்டம்” என்று பட்டும் படாமல் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பாட்டி.

சரி இனிமே இவங்ககிட்ட பேசறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை. திரும்பவும் மாமாவுக்கே போன் பண்ணி பேசிவிடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டாள். ஆனால் ஃபோன் லைன் கிடைக்கவில்லை. சரி மெசேஜ் போட்டு விடலாம். ஒரு வேலை டவர் கிடைக்காமல் இருக்கலாம். என்று தன்னுடைய இந்த வேலை விஷயத்தை மாமாவுக்கு மெசேஜ் பண்ணினாள் பிரியங்கா,

ஆனால் அவளுடைய மாமாவோ இந்த வேலைக்கு போகவே தேவையில்லை என்று ஒரு பதிலை போட்டுவிட்டான். பிரியங்காவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. வேலைக்கு போகவேண்டும் என்று நினைத்தது தப்பா? ஆளாளுக்கு தடைபோடுறாங்களே? வேலை கிடைப்பதே பெரிய விஷயமா இருக்கும்போது கிடைச்ச வேலைக்குக்கூட போகக்கூடாதுன்னு சொலுறது என்ன நியாயம்?”

ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் அழுதப்படி பட்டினியாக கிடந்தாள். அடுத்தநாள் அம்மாவும் பாட்டியும் பதறியப்படி வந்து,

“சரி…உன் விருப்பபடியே வேலைக்கு போ..உன் மாமாகிட்ட நாங்க பேசிக்கிறோம். ஆனா ஆறே ஆறு மாசத்துல மாற்றலாகி மும்பை வந்துடனும்…” என்ற கண்டிஷனோடு சம்மதித்தார்கள்.




பிரியங்காவின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது. துணிமணிகளை எல்லாம் பேக் பண்ணி சென்னைக்கு செல்வதற்கு ஆயத்தமானாள்.

அடுத்தநாள் அதிகாலை…

சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கினாள் பிரியங்கா. உடல் சோர்வாக இருந்தது ட்ரெயினில் போகிறேன் என்றவளை கட்டாயப்படுத்தி பிளைட்டில் அனுப்பி வைத்ததே தாத்தாதான். பிளைட்டில் போனா சீக்கிரமா போயிடலாம். உன்னுடைய வேலையில ஜாயிண்ட் பண்றதுக்கும் ஈசியா இருக்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த மாதிரியும் இருக்கும். பணம் செலவான பரவாயில்லை நீ சரியான நேரத்துக்கு போறதுதான் முக்கியம். அதனால நீ சீக்கிரமா கிளம்பு என்று ஊக்கப்படுத்திய தாத்தாவை இப்போதுகூட நினைத்து சந்தோஷப்பட்டாள் பெருமையாகக்கூட இருந்தது.

தகப்பன் இல்லாமல் வளர்ந்திருந்தாலும் தாத்தா நல்ல பிரண்டா தகப்பனுக்கு தகப்பனா தாய்க்குத் தாயாய் இருந்து நம்மள வளர்த்திருக்கிறார். வேலைக்கு சேர்ந்து முதல் மாசம் சம்பளம் வாங்கியப்பிறகு அவருக்கு ஆன்றாயிடு செல் வாங்கி தரவேண்டும் என்று மனசுக்குள்ள தீர்மானித்தாள்.

ஏற்கனவே தோழி சுஜி மூலமாக அந்த பெண்கள் விடுதியை பேசி வைத்திருந்தாள். அந்த இடத்திற்கு திரும்பவும் ஒருமுறை போன் பண்ணி பேசினாள்.

“ரூம் ரெடியா இருக்கும்மா நீங்க வந்து ரிசப்ஷன்ல கீ வாங்கிக்கோங்கோ,” என்று பதில் வந்தது சற்று நிம்மதியுடன் ஆட்டோ பிடித்து அந்த விடுதி முகவரியை சொல்லி ஏறி அமர்ந்தாள். சுமார் அரை மணி நேரத்தில் அந்த ஹாஸ்டலில் வந்திறங்கினாள்.




ரிசப்ஷனில் வந்து பார்மால்டிஸ் எல்லாம் முடித்தபிறகு சாவியை வாங்கி தன்னுடைய அறைக்கு சென்று திங்க்ஸ்சை வைத்துவிட்டு மூடிக்கிடந்த ஜன்னலை திறந்து வெளிக்காற்றை உள்வாங்கியபோது மனதும் உடலும் புத்துணர்வு பெற்றது. அங்கு வந்தது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தாலும் மாமாவை நினைத்து மனசு கொஞ்சம் பதட்டமடையவே செய்தது. இதுவரை எந்த விஷயமாக இருந்தாலும் முரளிதரனின் யோசனையை கேட்ட பிறகுதான் எந்த முடிவாக இருந்தாலும் எடுப்பாள். ஆனால் முதல் முறையாக அவரைக் கேட்காமல் எடுத்த முடிவு இது ஒன்றுதான். இந்த விஷயம் தெரிஞ்சா கண்டிப்பா மாமா கோபப்படுவார். எப்படியாவது அவரை சமாளிக்கணும் இல்லன்னா சரணடைந்து விட வேண்டியதுதான்.

கோபமான மாமாவின் முகத்தை ஒருமுறை நினைத்துப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.

அடுத்த நாள் காலேஜ்ல போய் வேலையில் சேரனும் சேர்ந்த பிறகு மாமாகிட்ட சொல்லிடலாம். எத்தனை நாளைக்கு மாமா கிட்ட சொல்லாம மறைக்க முடியும் தாத்தாவும் பாட்டியும் மாத்தி மாத்தி இதையேத்தான் சொன்னாங்கள். அதாவது இந்த விஷயத்தை இப்போதைக்கு உன்னுடைய மாமா கிட்ட சொல்ல வேணாம் சொன்னா கண்டிப்பா கோபப்படுவான். ஒரு மாசமாவது ஆகட்டும் கைல சம்பளத்தை வாங்கின பிறகு  சொல்லிக்கலாம்.  சம்பளத்தை வாங்கியாச்சுன்னா  அதுக்கப்புறம் இந்த வேலை வேண்டான்னு அவனால் சொல்லமுடியாது. சரி கொஞ்ச நாள் வேலை பார் என்று சொல்லுவான் அப்படியே அந்த வேலையை நீ தொடர்ந்துப் பார்க்கலாம் என்று இருவரும் சொன்னார்கள்.

அம்மாவோ “எப்போ வருவே பிரியங்கா…?” என்று ஒத்த வார்த்தையோடு முடித்துக் கொண்டார்கள்.“ ஏம்மா நான் போயிட்டா என்னை நீ ரொம்ப மிஸ் பண்ணுவியான்னு கேட்டப்போது, “இல்ல ரொம்ப நாள் வெளி ஊர்ல தங்க வேணாம் அப்பப்ப வந்து எங்களை பாத்துட்டு போ!!…அது என்னமோ ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவாயில்லை. ரொம்ப நாள் எல்லாம் என்னால இருக்கமுடியாது. நீ வரலேன்னா அப்புறம் நான் ட்ரெயின் ஏறி அங்கு வந்துடுவேன்.” கலங்கிய கண்களை துடைத்தப்படி கூறினாள் ஈஸ்வரி.




இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது எதையுமே கண்டும் காணாமல் பட்டும் படாம வாழ்ந்துகிட்டு இருக்கிற அம்மா முதல்முறையா மனசவிட்டு இவ்வளவு நேரம் பேசி இருக்கிறாளே?!! என்ற எண்ணம் புல்லரிக்க வைத்தது.

“கவலைப்படாதம்மா அடிக்கடி வந்து பார்த்துட்டுபோறேன் அதுக்காக டெய்லியும் வரமுடியுமா? மாசத்துக்கு ஒரு முறை தான் வரமுடியும் வந்து பாத்துட்டுப்போறேன். சென்னை என்ன பக்கத்திலேயா இருக்கு? எவ்வளவு தூரம் அங்கிருந்து இங்க வந்துட்டு திருப்பி இங்கிருந்து சென்னைக்கு போறது  இதெல்லாம் ரொம்ப கஷ்டம்தான். சரி உனக்கு சந்தோஷம்னா அதை நான் செய்ய மாட்டேனா என்ன? கண்டிப்பா செய்வேன்.”

அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டு ஆறுதளோடு பிரியங்கா சொன்னபோது அவள் முகம் குழந்தைத்தனமாய் மாறியிருந்தது. கைகள் எல்லாம் சில்லிட்டுப்போயிருந்தது. கொஞ்சம் விட்டா கண்ணுல இருந்து தண்ணி வந்துடும் போல என்று எண்ணியவள் தன் மனதை திடப்படுத்திக்கொண்டு,

“அம்மா உம் பொண்ணு சம்பாதிக்க போறா உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கித்தருவா சரியா? இனிமே தாத்தாவையும் பாட்டியையும் கூட  எதிர்பார்க்கத் தேவையில்லை. என் கிட்டே கேளு உனக்கு என்ன வேணாலும் வாங்கி தரேன். எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு எவ்வளவு ரூபான்னாலும் நான் உனக்கு வாங்கித்தரேன் சரியா? இவளும் குழந்தையாக மாறி தன்தாயிடம் சொல்ல அவள் கண்களில் நட்சத்திரங்கள் மின்னின.

“சரி சரி ஏற்கனவே லேட்டாச்சு இப்ப கிளம்பினால்தான் ஏர்ப்போட்டுக்கு சரியான நேரத்துக்கு போய் சேர முடியும்.. ஓகேவா நான் அங்க போயிட்டு கால் பண்றேன் நீ தாத்தா பாட்டி பேச்சைக் கேட்டுட்டு ஒழுங்கா இருக்கணும். வேளா வேளைக்கு பிரஷர் மாத்திரை ஒழுங்கா சாப்பிடு. சாப்பாடும் ஒழுங்கா சாப்பிடணும் என்ன பத்தி கவலைப்படாதே என் ஞாபகம் வந்துச்சுன்னா உடனே கால்பண்ணு நான் உன் கிட்ட பேசுறேன் சரியா? ஈவினிங்க் இல்லாட்டி நைட் கால் பண்ணு.. ஓகே வா…?” ஈஸ்வரி ‘சரி’ என்று தலையசைக்க இவளும் புன்னகை மாறாத முகத்துடன் கையசைத்துவிட்டு அங்கிருந்து தன் அறைக்கு வந்தது நினைவுக்கு வந்தது.




What’s your Reaction?
+1
16
+1
21
+1
4
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!