Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -6

அத்தியாயம்-6

ஃபிளைட்டிலிருந்து இறங்கி கால்டாக்சி பிடித்து லால்பகதூர் சாஸ்திரி ட்ரெயினிங் சென்டரில் இறங்கியபோது சுபாஷினியை எதிர்ப்பார்த்து காத்திருப்பதுப்போல் நின்றிருந்தான் முரளிதரன்.

“சுபாஷினி…ஒன் மினிட் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று வழியை மறைத்தவனிடம் தன் கோபத்தை கொட்டினாள்.




“பாருங்க சார்…பேசுறதுக்கு நேரமில்லை நான் ரொம்ப டயர்டா இருக்கேன்…முதல்ல ஹாஸ்டல் போகணும் பிரெஷ்சாகனும் பிளீஸ் கொஞ்சம் வழியை விடுங்க…”

“பரவாயில்லை…இப்ப ப்பிரஷ்சாதான் இருக்கே…உங்க அப்பாவை பத்தின ஒரு விஷயத்தை உன்கிட்டே சொல்லியே ஆகணும்…” சட்டென்று ஒருமைக்கு தாவினான்.

“எங்க அப்பாவை பத்தி என்ன சொல்ல போறீங்க? நீங்க சொல்லுறதை எல்லாம் நான் கேட்க தயாரா இல்லை வழியை விடுங்க சார்…”

“இதோ பார் உலகத்திலேயே எங்க அப்பாதான் ரொம்ப நல்லவரு  எங்க அப்பா மாதிரி இந்த உலகத்துல வேற யாருமே இல்லே இப்படி எல்லாம் டயலாக் பேசுறதா இருந்தா அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சிடு…நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும் அதுவும் இத்தனை நாளாய் யாரை ரொம்ப நல்லவர்னு  நினைச்சுக்கிட்டு இருக்கியோ அந்த ஆளைப் பத்திதான். அதாவது உங்க அப்பாவை பத்திய ஒரு உண்மையை நான் சொல்லியே தீரவேண்டும்.”

“என்ன உண்மை………….?”




“நீ நினைக்கிற மாதிரி உங்க அப்பா ஒன்னும் நல்லவர் கிடையாது. உங்கப்பா ஒரு உலக மகா அயோக்கியன். ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்து அவளுக்கு ஒரு குழந்தையையும் கொடுத்து அவள ஊரைவிட்டே துரத்தின ஒரு துரோகி. அப்படியாப்பட்ட ஆளைதான் நீ தலையில் தூக்கி வச்சுக்கிட்டு பேசிகிட்டிருக்கே! அதுதான் என் கோபத்தை அதிகப்படுத்துது…”

“ஹலோ…தட்ஸ் யுவர் லிமிட் டோன்ட் கமண்ட் அபௌட் ஹிம்…”

“வெயிட்…வெயிட்…ஹியர் வாட் ஐ சே…” என்றவனின் கண்கள் ரெத்தமென சிவந்திருந்தது.

“ம்ம்…எதுவும் புரியல…எதுவா இருந்தாலும் புரியற மாதிரி சொல்லுங்க? நீங்க பாட்டுக்கு வாயில் வந்ததையெல்லாம் பேசாதீங்க…எங்கப்பாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? யாரோ பண்ணின தப்பை எங்கப்பா மேல போட்டு அவருடைய இமேஜ் டேமேஜ் பண்ணலான்னு நினைக்கிறீர்கள்.”

“எப்பவுமே உண்மை கசப்பாதான் இருக்கும் சுபாஷினி…”

“எங்க அப்பா யாரு எந்த ஊரு எப்படிப்பட்டவர் எந்த மாதிரி குடும்பத்தில் பிறந்தவர்னு உங்களுக்கு தெரியுமா? அவரு இன்னைக்கோ நேத்தோ திடீர் பணக்காரர் ஆனவரில்லை. தனது உழைப்பால் மூனு தலைமுறையா பல பேருக்கு வேலை கொடுத்து தொழில் செஞ்சுகிட்டு இருக்கிற ஒரு குடும்பத்தை சேர்ந்த பெரிய பிசினஸ்மேன். அவ்வளவு பெரிய கடைக்கு ஓனர் ஐம்பது பேரை வைத்து வேலை வாங்குகிறார். அப்படியாப்பட்ட எங்க அப்பா பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.”

“ஹா…ஹா…ஹா…”

“எதுக்கு சிரிக்கிறீங்க? எதையும் சரியா தெரிஞ்சுக்காம யாரைப்பத்தியும் வாயில் வந்ததையெல்லாம் பேசிடலாம்னு நினைக்காதீங்க..,நீங்க சொல்ற அந்த மாதிரி ஒரு அயோக்கியத்தனமான நபர் எங்க அப்பா இல்ல. உங்க குடும்பத்துல நீங்கள் பழகின நபர்களை வச்சி நீங்க மத்தவங்கள எடைப்போட கூடாது…”




“வாய மூடு நான் சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. முதல்ல நான் சொல்றத கேட்டுட்டு அப்புறம் உங்க அப்பா நல்லவரா கெட்டவரான்னு நீயே முடிவு பண்ணிக்கோ…”

“அப்படி என்ன தப்பை எங்கப்பா செஞ்சாரு அதையாவது சொல்லுங்களேன்…”

சற்று நேரம் கண்மூடி அமைதிகாத்தவன் ஒரு பெருமூச்சிக்கு பிறகு சொல்லத் தொடங்கினான்.

“இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி உங்க தாத்தா உங்க சொந்த ஊர்ல பெரிய துணிக்கடை வச்சிருந்தாரு. அந்த ஊர்லதான் எங்க குடும்பமும் இருந்திச்சு. உங்கப்பா உங்க தாத்தாவோட கடையில வேலை பார்த்துகிட்டு இருந்தார். அப்போ உங்க தாத்தா தன்னுடைய பையனை ஒரு சக தொழிலாளியாகத்தான் நடத்திக்கிட்டு இருந்தார் இன்ன சொல்லப்போனால் அவர் ஓனரோட பையன் என்ற விஷயமே நிறையப்பேருக்கு தெரியாது. உங்க தாத்தாவோட தொழில் யுத்திதான் அதற்கு காரணம். நம்ம பிள்ளைன்னு தனியா பிரிச்சு வெச்சுட்டா கடை ஊழியர்களுக்கு இருக்கிற பிரச்சனைகள் வெளியில் வராது. அதனால வேலை ஆட்களோட கலந்து பழகி அவங்களோட ஒருவராக இருக்கணும்னு பெருந்தன்மையான ஒரு முடிவை உன் தாத்தா எடுத்திருந்தார்.”

“இதெல்லாம் ஊருக்கே தெரிஞ்ச விஷயம்தானே…?”

“நான் இன்னமும் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் அவசரப்பட்டா எப்படி?”

“ம்ம்…சொல்லுங்க?”

“உங்க அப்பாவும் தாத்தாவும் ஒரே வீட்டிலிருந்து கடைக்கு வந்தாலும் வேற வேற நேரத்தில்தான் கடைக்கு வருவாங்களாம். ஒன்னா சேர்ந்து வருவதுமில்லை சேர்ந்து போவதுமில்லை. வெளிப்பார்வைக்கு அந்த கடையில் வேலை செய்யுற ஒரு சராசரி பையனாதான் எல்லாருக்கும் அறிமுகமாகி இருக்காரு உங்கப்பா!!. அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் அங்கே எங்களுடைய குடும்ப வறுமைக்காக வேலைக்குப் போனா எங்க அக்கா ஈஸ்வரி. எனக்கும் எங்க அக்காவுக்கும் பத்து வயசு வித்தியாசம். அவளுக்கு இருவது வயசு இருக்கும்போது நான் அஞ்சாவது படிச்சிக்கிட்டு இருந்தேன். எங்க அப்பா ஒரு டீ கடையில வேலை பார்த்துகிட்டு இருந்தார். எங்க அம்மா உடம்பு முடியாதவங்கள். அம்மா எந்த வேலைக்கும் போகாமல் வீட்டில் இருந்தாங்கள். எங்க குடும்ப சூழ்நிலை ரொம்ப மோசமா இருந்தது, எங்கப்பாவோட வருமானம் எங்க அக்காவோட வருமானமும்தான் எங்க வயிற்றுப் பசியைப் போக்கிக்கொண்டிருந்தது…”




“எங்க அப்பாவை பற்றி சொல்லுங்க…” பொறுமை இழந்தவளாய் கூறினாள்.

“சொல்லுறேன்…அப்படி ஒரு சூழ்நிலையில்தான் எங்க அக்காவோட அழகில் மயங்கி அவளை காதலிப்பதாக சொல்லியிருக்கார்  உங்க அப்பா. எங்க அக்காவும் அவருடைய காதலை ஏற்றுக்கொண்டிருக்கிறாள். ஒரு காலகட்டத்தில் காதல் ரொம்ப ஸ்ட்ராங்கா ஆயிடுச்சு.! தங்களுடைய காதலை யார்கிட்டேயும் சொல்லாம ரெண்டு பேருமே மறைத்திருக்கிறார்கள்.”

அவன் பேசியதை கேட்க விருப்பமின்றி கால் மாற்றி நின்றிருந்தாள்.

“அப்ப நான் சின்ன பிள்ளை என்பதால்  எனக்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது. கொஞ்ச நாட்கள் எங்க அக்கா கூட பழகி அவங்கள கர்ப்பமாகி இருக்காரு உங்கப்பா.”

“நோ…நீங்க சொல்றது பொய்…எங்க அப்பா அப்படிப்பட்டவர் இல்லை…”

“ம்ம்…சொல்லி முடிச்சிடுறேன்…இந்த விஷயம் உங்க தாத்தாவோட காதுக்கு போயிருக்கு கூப்பிட்டு ரெண்டு பேரையும் விசாரித்திருக்கிறார். தன்னுடைய அப்பாவுக்கு தெரிஞ்சா தன்னை வெட்டி போட்டுடுவார் என்று பயந்து இப்போதைக்கு இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேணாம்னு எங்க அக்காவின் கால்களைப் பிடித்து கெஞ்சி இருக்கிறார் உங்க அப்பா. எங்க அக்காவும் தன்னுடையக் காதலை மறைத்து சும்மா பிரெண்டாதான் பழகுறோம்னு சொல்லி இருக்காங்கள். ஆனா உங்க தாத்தாவுக்கு சந்தேகம் வந்திருக்கு. எங்க அப்பா அம்மா ரெண்டு பேரையும் கூப்பிட்டு கண்டித்து இனிமே இந்த ஊருல இருக்க வேணாம். ஊரைவிட்டு போயிடுங்கன்னு மிரட்டி இருக்கார். அதற்கு எங்க அப்பா சம்மதிக்கவில்லை. காரணம் கேட்ட எங்க அப்பாவிடம் உங்க பொண்ணோட நடத்தை சரியில்லை. கடையில இருக்குற ஒரு பையன் கூட ரொம்ப நெருக்கமாக பழகிகிட்டு இருக்கிறாள். பிரச்சனை பெரிசாகி வெட்டு குத்துன்னு ஆகுறதுக்குள்ளே நீங்க இங்கிருந்து போய் விடுவது நல்லது. கவுரவமான குடும்பமா இருக்கிறதாலதான் கூப்பிட்டு சொல்றேன். இத்தனை நாள் என்கிட்ட வேலை பார்த்ததற்கு ஐம்பதாயிரம் பணம் தரேன் இந்தப் பணத்தை எடுத்துட்டு போயி வேற ஊர்ல பொழப்ப பாத்துக்கோங்க…’ என்று நல்லவர் போல் பேசி இருக்கிறார் உன்னுடைய தாத்தா.”




“பொய்…எல்லாமே கட்டுக்கதை இதை நான் நம்ப தயரா இல்லை…”

“நம்புவதும் நம்பாததும் உன் விருப்பம். சொல்ல வந்ததை சொல்லிடுறேன். எங்க அப்பா ரொம்ப ரோஷக்காரர் மானத்தோட வாழணும்னு நினைக்கிறவர். தன்னுடைய பொண்ணு மேல கொஞ்ச நாளாவே அவருக்கு சந்தேகம் இருந்திருக்கு. அத ஊர்ஜிதப்படுத்துற மாதிரி ஓனர் கூப்பிட்டு சொல்லவும் நாளைக்கு பின்னால விஷயம் விபரீதமா போயிடக்கூடாதுன்னு ராத்திரியோட ராத்திரியா மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு அந்த ஊரைவிட்டு வந்துட்டோம்.”

“ஏன் உங்க அக்கா ஒன்னுமே சொல்லலையா?”

“கடைசி வரைக்கும் எங்க அக்கா உண்மையை சொல்லாமல் மறைத்து விட்டாள். ஆனா ஒருநாள் நாங்க ஊரைவிட்டு கிளம்புறதுக்கு முன்னாடி ராத்திரி நேரத்துல என்னைத் துணைக்கு கூட்டிட்டு அக்கா அந்த கடைக்குப் பின்பக்கமா போனாள்.

“இங்கேயே நில்லுன்னு…” என்கிட்ட சொன்னா சரி ஏதோ வேலையா நிக்க சொல்லி இருக்கான்னு நானும் அமைதியா நின்னேன். பின் பக்கமா போயி யார்கிட்டேயோ ரொம்ப நேரம் வாக்குவாதம் பண்ணி பேசினா..குரல் மட்டும் கேட்டுச்சு! கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தவள் கண்ணெல்லாம் சிவந்து அழுது வீங்கி போயிருந்தது. “என்னாச்சுக்கா…?” என்று கேட்டேன்.“எனக்கு  எல்லாமே முடிஞ்சிடுச்சு வா போகலாம்னு..” ஒத்த வரியில முடிச்சிட்டாள்.

“…………”




“உங்க அப்பாக்கிட்ட தான் அவள் பேசியிருக்கா என்ற விசயா அப்போது எனக்குத்தெரியாது. உங்க அப்பாவும் தன்னுடைய கழுத்தில் இருந்த செயினை கழட்டி இதை வச்சுக்கோ வெளி ஊருக்கு போயிட்டு லெட்டர் போடு கண்டிப்பா உன்ன நான் வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லியிருக்கார். ஆனா அவர் வரவே இல்லை நாங்க வெளியூருன்னு போனது மும்பைக்கு அவுட்டரில் ஒரு ஊருக்கு. அங்க போயி ரெண்டு மாசத்துக்கு அப்புறம் தான் எங்க அக்கா கர்ப்பமா இருக்குற விஷயம் தெரிஞ்சது. தெரிஞ்ச மறுநிமிடம் எங்க அப்பாவும் அம்மாவும் அவளை கண்ணு மண்ணு தெரியாம அடிச்சாங்க…கதறி கதறி அழுதாள். ஆனா உண்மையை சொல்லவே இல்லை. நீ சொல்லலனா நான் இப்படியே விட்டுட மாட்டேன் உன்னுடைய ஓனருக்கு அந்தப் பையன் யாருன்னு தெரியும். அவர்கிட்ட உன்னை கூட்டிட்டு போறேன் உடனே கிளம்பு எங்கப்பா பிடிவாதமா சொன்னார். எப்படி கேட்டும் எங்க அக்கா உண்மையை சொல்லவே இல்லை. எங்க அக்கா உங்க அப்பாவுக்கு கடிதம் எழுதினாள். அவர் கிட்ட இருந்து எந்த பதிலும் இல்லை. அங்க இருந்த ஒரு டெலிபோன் பூத்தில் இருந்து போன் பண்ணினாள். கடையில் இருந்து யாரோ ஒருத்தர் போனை எடுத்து அவருக்கு விடிஞ்சா கல்யாணம் அதனால எல்லாரும் கல்யாணத்துக்கு போயிருக்காங்கன்னு சொல்லி இருக்காங்கள். எங்க அப்பா உடனே எங்க எல்லாம் கூட்டிட்டு போகலாம்னு ப்ளான் பண்ணினார். ஆனா எங்க அக்காவோ கடைசிவரைக்கும் அவரை பற்றி சொல்லவே இல்லை. என்னை மீறி போனீங்கன்னா நான் செத்துருவேன் என்று ஒரே அழுகை. காரணம் தன்னால அவரோட வாழ்க்கை கெட்டுப் போயிடக்கூடாதுன்னு எங்க அக்கா நெனச்சது. அந்த அளவுக்கு எங்க அக்காவுடைய காதல் உண்மையானதா இருந்தது.”

“……………….”

 “ஆனால் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்னு சொல்லுவாங்க…தப்பு செஞ்சது அவர் ஆனா தண்டனை மட்டும் எங்க அக்காவுக்கு. அன்னையிலிருந்து அவருடைய நினைவுகளுடன் பத்து மாதம் குழந்தையை சுமந்து  பெற்றெடுத்து வளர்த்து கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிறாள் எங்கக்கா? அவள் நல்லவளா? அவளை இந்த நிலைமைக்கு ஆளாகி எங்க குடும்பத்தை அசிங்கப்படுத்தி விட்டு நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருக்கிற உங்க அப்பா நல்லவரா?

“……………..”




“இப்ப சொல்லு உண்மையாவே உங்க அப்பா நல்லவரா இருந்தால் தன்னால கைவிடப்பட்டு அதுவும் குழந்தையை சுமந்தப்படிப் ஊரைவிட்டே போன அந்தப்பொண்ணை தேடி அவர் வந்திருப்பார் இல்லையா? எங்க அக்காவை ஒதுக்கி வைத்துவிட்டு அவர் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார். வசதியான ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு பெரிய ஜவுளிக்கடை நடத்திக்கிட்டு இருக்காரு எல்லாம் எங்களுக்கு இப்பதான் தெரியும். ஆனா இப்பகூட அவர் மேல கேஸ் போட்டு உள்ள தள்ளலாம்னு சொன்னா அதுக்கு எங்க அக்கா சம்மதிக்க மாட்றா.. அதுதான் எனக்கு இன்னமும் புரியல! அது காதல் என்று சொல்ல முடியாது. தனக்கான உரிமையை தட்டி கேக்க விருப்பம் இல்லாத ஒரு கோழையாய் இருக்கா எங்க அக்கா…” என்று பேசிக்கொண்டே இருந்தவன் கோபம் மிகுதியால் எதிரில் இருந்த சுவற்றில் ஓங்கிக்குத்தினான்.

அவனுடைய கோபம் நியாயமானதுதான். தன்னுடைய ரெத்த சொந்தத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் யாராக இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும். ஆனாலும் இவன் சொல்வதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பா இப்படியெல்லாம் நடக்க கூடியவர் இல்லை.

ஆனால் நான்தான் விஸ்வநாதனின் மகள் என்று எப்படி தெரிந்தது? இவ்வளவு நாட்களுக்கு பிறகு தன் அக்காவை ஏமாற்றியது இவர்தான் என்று எப்படி கண்டுபிடித்தான்.? என்று எண்ணி குழம்பினாள்.. இவள் மனதை படித்தவன்போல அதைப்பற்றியும் சொன்னான்.

உன்னை முதல் முதல் பார்த்தவுடன் எனக்கு பயங்கர அதிர்ச்சி. காரணம் என்ன என்பது நேரம் வரும்போது சொல்கிறேன். நீ யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணத்தில் உன்னைப்பற்றின டீட்டைல்ஸ்சை எடுத்து பார்த்தேன் அப்போதான் நீ…எங்க அக்காவை ஏமாற்றின விஸ்வநாதனின் மகள் என்பது தெரிந்தது.

அவன் சொல்ல சொல்ல சுபாஷினியின் முகம் இருண்டது.




What’s your Reaction?
+1
13
+1
24
+1
2
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!