Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -5

அத்தியாயம்-5

டேராடூன்…

“எஸ் கீஸ் மீ சார்…உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…”  முரளிதரன் முன்னால் வந்து பாதையை மறைத்து நின்றப்படி கூறினாள் சுபாஷினி.

“என்ன பேசணும்…?” அவளை அங்கு எதிர்பார்க்காததால் அவன் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

” அது அது வந்து…”




“உங்ககிட்ட பேச எந்த விஷயமுமில்லை கொஞ்சம் வழி விடுறீங்களா சுபாஷினி…?” சுபாஷினியை அலட்சியத்தோடு பார்த்துவிட்டு பார்வையை வேறுபுறம் திருப்பினான்.

“ஆனால் எனக்கு இருக்கே…” அவனை மேற்கொண்டு பேசவிடாமல் மடக்கினாள் சுபாஷினி.

“என்ன விஷயம்..?” அவன் குரலில் வெறுப்பு மண்டிக்கிடந்தது.

“எனக்கும் உங்களுக்கும் பூர்வஜென்மப் பகை ஏதாவது இருக்கா சார்..?” ஏன் கேட்கிறேன்னா ஒன்னு ரெண்டு இல்ல நிறைய விஷயத்தில் பார்த்துட்டேன் நீங்க என்னை ஏதாவது ஒருவகையில் நோஸ்கட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க.., அப்படி.., என்ன பண்ணினேன் சொல்லுங்க…?”

அவள் பேசுவதை கேட்ட அடுத்த நிமிடம் முரளிதரனின் கண்கள் சிவந்தது. உடல் இறுகி உதடு துடித்தது. கைமுஷ்டிகள் இறுகியது.  கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர படாத பாடுபட்டான். இது எதுவுமே தெரியாததுபோல் இவள் அடுத்து பேச வாய் திறந்தபோது “வழியை விடு…” என்று அவளை தள்ளிக்கொண்டு முன்னேறி நடக்க முயன்றான். ஆனால் அவளோ தன் இரண்டு கைகளையும் குறுக்கே நீட்டி அவனை போக விடாமல் தடுத்தாள்.

அடுத்தகணம் ஆவேசம் கொண்டவன் போல் அவளுடைய கைகளையும் பின் பக்கமாக முறுக்கி அந்த மலை உச்சியிலிருந்து தள்ளி விடுவதுப்போல் கீழ்நோக்கி அழுத்தினான். அவனுடைய அந்த முரட்டுத்தனத்தை சமாளிக்க முடியாமல் “விடுங்க விடுங்க…வலிக்குது” என்று அவனோடு போராடி பின் ஓய்ந்துப்போய் நின்றாள். பேச முடியாமல் தொண்டை வறண்டு நாக்கு பசைப்போல் ஒட்டிக்கொண்டு ஈனஸ்வரத்தில் முனகினாள்.




“இதோ பார் இன்னொரு முறை இப்படியெல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டு எம் முன்னாடி வந்து நிற்காதே… முன் ஜென்ம பகை இல்லை இந்த ஜென்மத்திலேயே நீ பகையாளிதான். உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு கொலவெறிதான் தோணுது. வேணாம் இத்தோட நிறுத்திக்கலாம் இனிமேலும் என் வாயைக் கிளறினேன்னா நான் உண்மையாகவே கொலைகாரனா மாறிடுவேன். கடைசியா சொல்றேன் இந்த ஜென்மம் முழுவதும் நீயும் உன்னுடைய குடும்பமும் எனக்கு பகையாளிதான். அதை மாற்றனுன்னு நானே நினைத்தாலும் மாற்ற முடியாது…”என்று சொன்னவன் அவளை உதறித்தள்ளிட்டு முன்னேறி சென்றான்.

அவன் தள்ளிய வேகத்தில்  பிடிப்பின்றி ஒரு பாறையின் மேல் போய் மோதி சரிந்தாள். கைமுட்டிக்கு கீழ் சிராய்ப்பு லேசா ரெத்தம் கசிய செய்தது.  அந்த கொட்டும் பனியிலும்  உடல்  சூடாகி கண்கள் குளம் கட்டி நின்றன. அவன் செல்வதையே குழப்பத்தோடும் வேதனையோடும் பார்த்துக்கொண்டு நின்றாள் சுபாஷினி.

அவளுடைய போன் மட்டும் அப்போது ஒலித்து அவளை சுயநினைவுக்கு கொண்டு வராவிட்டால் அவள் கற்சிலையாக அப்படியே நின்றுக்கொண்டே இருந்திருப்பாள். கன்னங்களில் வழிந்த நீரை சுண்டி எறிந்து விட்டு போனை ஆன் பண்ணி “ஹலோ…!” என்றாள்.

“சுபாஷினி எங்கே இருக்கே…? ஹாஸ்டல் ஃபுல்லா உன்னத்தேடிட்டேன். ஆளையே காணோமே எங்கடி இருக்க? இவ்வளவு நேரம் போனும் போகல சிக்னல் கிடைக்கலன்னு நினைக்கிறேன். நல்லவேலை இப்பதான் உன் லயன் கிடைச்சது.!  கொஞ்சம் சீக்கிரமா வா சுபாஷினி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்…” என்று படபடப்போடு பேசினாள் பவித்ரா. பவித்ரா வேறு டிபார்ட்மென்டாக இருந்தாலும் தினமும் சந்தித்து பேசிக்கொள்ளும் நெருக்கம்.




“இதோ…டென் மினிட்ஸ்ல வரேன்…” என்றவள் ரத்தம் கசிந்து கொண்டிருந்த தன்னுடைய முழங்கையை துடைத்தபடி மெல்ல அங்கிருந்த  மலைப்பாதையில் ஏறினாள். அந்த மலையில் மேல் பகுதியில்தான் ட்ரெய்னிங் சென்டரும் ஹாஸ்டலும் இருந்தது. சுமார் இருபது நிமிட நடைக்குப்பிறகு கேட்டுக்குள் இவள் நுழையும்போதே எதிரில் வேகமாக வந்துக்கொண்டிருந்தாள் பவித்ரா. சற்று நேரத்தில் சுபாஷினியின் அருகில் வந்து,

“ஏய் சுபாஷினி எங்க போனே? உன்னை எங்கெல்லாம் தேடினேன்  தெரியுமா? உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம ப்ரீத்தியோட அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம். ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்காராம். அவ ஊருக்கு கிளம்பிகிட்டு இருக்கா..,உங்கிட்ட சொல்ல சொன்னா, உன்னுடைய நம்பருக்கு எவ்வளவு நேரம் ட்ரை பண்ணினே..,தெரியுமா? சரி…ஏர்போர்ட் வரைக்கும் போய்விட்டுட்டு வரலாம் வரியா…?”

“என்னடி இப்படி கேக்குறே… அவங்க அப்பாவுக்கு  ஆக்சிடென்ட் ஆயிடுச்சின்னா அவ கூட யாராவது போகணுமில்லையா? அவளை தனியா அனுப்ப முடியுமா? அவங்கப்பா இப்போ எப்படி இருக்காராம்…?”

“அது சரியா தெரியல…ஆனா ரொம்ப சீரியஸ் என்று நினைக்கிறேன். அவ அழுது கிட்டே இருக்கா…அவ கிட்ட திரும்ப திரும்ப கேக்குறதுக்கு கஷ்டமா இருக்கு. அவங்க அம்மாவுடைய நம்பரை வாங்கி அவங்ககிட்ட விசாரிக்கலாம்னா அவங்க போனே எடுக்க மாட்டுறாங்க…சரி வா பிரீத்தியை பார்க்கலாம்”

“ஆமாம் வா பவித்ரா முதல்ல ப்ரீத்தியைப் போய் பார்க்கலாம்…” தன்னுடைய வலியை  மறந்து விட்டு  ஓட்டமும் நடையுமாக  பிரீத்தியை சந்திக்க ஓடினாள். அழுதழுது சிவப்பேறியிருந்த கண்களோடு ப்ரீத்தி இவர்கள் இருவரையும் ஏறிட்டாள். அவளை அணைத்து ஆறுதல் படுத்திய சுபாஷினி,

“ஒண்ணும் ஆகாது பயப்படாதே நான் உங்கூட ஊருக்கு வரேன் அங்க போயிட்டு மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்…” என்றாள்.




“சரி என்று தலையசைத்த ப்ரித்தியின் முகம் சற்று தெளிவு பெற்றது. அடுத்தகட்டமாக இருவரும் ட்ரெய்னிங் சென்டரில் லீவ் அப்பளை பண்ணி பர்மிஷன் வாங்கிக்கொண்டு சேலத்துக்கு  கிளம்பினார்கள்.

சுபாஷினியால் தன் கைமுட்டிக்கு கீழ் உறைந்திருந்த அந்த வலியை பயணத்தின் போதுதான் உணரமுடிந்தது. ப்ரீத்தியின் பார்வைக்குத் தெரியக்கூடாது என்று அந்த வலியையும் மறைத்துக் கொண்டாள். இவர்கள் இங்கிருந்து கிளம்பும்போதே தன்னுடைய அப்பாவுக்கு கால் பண்ணி ப்ரீத்தியின் அப்பா விபத்தில் சிக்கிக்கொண்ட விஷயத்தை கூறினாள். அடுத்து அவர் அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிட்டலுக்கு கால் பண்ணி ப்ரீத்தியின் அப்பா உடல் நலத்தை கேட்டறிந்தார்கள். முன்பை விட சற்று முன்னேற்றம் இருப்பதாக தகவல் வரவே இருவர் முகத்திலும் ஒரு அமைதி படர்ந்தது.

அடுத்த கட்டமாக சுபாஷினி தன்னுடைய அப்பாவுக்கு கால் பண்ணி ப்ரீத்தியின் அப்பாவுக்கு விபத்து ஏற்பட்ட விஷயத்தை கூறினாள். முடிந்தால் சேலத்துக்கு வாங்க என்ற போது அவரும் உடனே சரிம்மா…என்று வருவதற்கு சம்மதித்தார்.

சுபாஷினி பொறுத்தவரை எல்லாத்துக்குமே அப்பா வேணும். ஸ்கூல்ல கொண்டு விட்டு கூட்டிட்டு வர ஆரம்பிச்சதுல இருந்து ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர் கூட வரணும். முதல் முறையா அப்பா அம்மாவை பிரிந்து வந்திருக்கிறாள் என்றால் அது இந்த ஐஏஎஸ் ட்ரெய்னிங்காகத்தான்.




எந்த இக்கட்டான சூழ்நிலையா இருந்தாலும்  அப்பா கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணும். அவர் இருந்தா எல்லாத்தையும் பாத்துப்பார் அவருக்கு நிறைய டாக்டர்ஸ் தெரியும். என்று பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தபோது சம்பந்தமே இல்லாமல் முரளிதரனின் முகம் வந்து போனது. என்ன காரணம்னு தெரியலை இந்த முரளிதரன் ஏன் இப்படி பண்றான்? எதுவா இருந்தாலும் ஒப்பனா சொல்லலாம். இல்லே  ஓபனா கேட்கவாவது செய்யலாம் ஆனா எதையும் வெளிப்படையா சொல்லாமல் மனசுக்குள்ளேயே வைத்துக்கொண்டு நம்மை பழி வாங்கனும்னு நினைக்கிறானே? அதுக்கு என்ன காரணம்? காரணம் தெரியாமலேயே அந்த துன்பத்தை தாங்கிக்கொள்வது ரொம்ப கஷ்டமா இருக்கு. யார் இந்த முரளிதரன் இவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவன் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு ஊர் என்று சொல்கிறார்கள். அவன் சரளமாக ஹிந்தி பேசுவதிலிருந்து அவன் வடநாட்டை சேர்ந்தவன் என்பது ஊர்ஜிதமாகிறது. அவன் படிச்சது எல்லாமே நார்த்சைடு அப்படி இருக்கும்போது சென்னை தாண்டாத நமக்கும் அவனுக்கும் என்ன பகை? இது விஷயமா அப்பாகிட்ட பேசலாமா? என்று எண்ணிய மறுநிமிடமே மனதை மாற்றிக் கொண்டாள். வேணா வேணா தேவை இல்லாம அவரின் காதில்  போட்டால்  அப்புறம் அவரு சும்மா இருக்கமாட்டார். என்ன ஏதுன்னு நேர்ல வந்து பார்க்கிறேன்னு கிளம்பி வந்து விடுவார்.  நாம ஒரு ஆபிஸர். இந்த எண்ணம் நம்ம மனசுல எப்பவுமே இருக்கணும். எந்த பிரச்சினை வந்தாலும் தனியாளாய் நின்னு டீல் பண்ணனும் இனிமேலும் இன்னொருத்தரோட உதவியை நாடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.




தோழிகள் இருவரும் கோவையில் இறங்கியப்போது இவர்களை அழைத்துச்செல்ல பிரீத்தியின் உறவுக்காரர் வந்திருந்தார். அவரிடம் விசாரித்ததில் பிரீத்தியின் அப்பா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டதை கூறினார். அது இருவருக்கும் சற்று ஆறுதலை அளித்தது. நேராக மருத்துவமனைக்கு சென்றபோது சுபாஷினியின் அப்பா விஸ்வதாதன் அங்கு வந்து சேர்த்தார்.

தெரிந்த மருத்துவரின் உதவியால் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தார் விஸ்வநாதன். மகளில் அருகாமையும் சிகிச்சையின் பலனும் கைக்கொடுக்கவே பிரித்தியின் அப்பா இரண்டாவது நாளே எழுந்துதமர்ந்தார். அப்போவோடு இரண்டுநாள் இருந்துட்டு போம்மா.., சுபாஷினி மட்டும் டேராடூன் போகட்டும் என்று பிரீத்தியை மட்டும் அங்கே விட்டுவிட்டு மகளை பிளைட் ஏற்றிவிட்டுவிட்டு சென்னைக்கு திரும்பினார் விஸ்வநாதன்.




 

What’s your Reaction?
+1
15
+1
23
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!