Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -11

அத்தியாயம்-11

கோவில் குளத்தைப்போல சுபாஷினியின் மனமும் சலனப்பட்டிருந்தது. இங்கு வந்ததே தப்பு என்று மனது வாதிட்டாலும், இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட அவளுக்கு மனதில்லை. அவனோடு பேசியே ஆகவேண்டும். இடைப்பட்ட இத்தனைவருடத்தில் என்னதான் நடந்தது என்பதை அவனிடம் கேட்டால்தான் தெரியும். என்பக்க நியாயத்தையும் அவனுக்கு புரிய வைக்கவேண்டும். இன்றோடு எல்லாவற்றையும் பேசிவிட்டு இனி உங்களுக்கும் எனக்கும் எதுவும் இல்லை. எதையும் நினைத்து குழம்பிக்கொள்ள வேண்டாம். உங்க வழியில் நீங்க போங்க என் வழியில் நான் போகிறேன் என்று தெள்ள தெளிவாக சொல்லிவிட வேண்டியதுதான். என்று எண்ணியவள் உடனே தன் கருத்து தவறு என்றும் உணர்ந்தாள்.




அவனால் இவளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இத்தனை வருடங்களாக அவன் இவளை எந்த விதத்திலேயும் தொந்தரவு படுத்தவில்லை என்பது உண்மை. இப்போதுகூட இவளாகத்தான் இந்த ஊருக்கு வந்திருக்கிறாளே தவிர அவனாக இவளைத்தேடி வரவில்லை. முயற்சிக்கூட செய்யவில்லை. அவன் வழியில் அவன் போய்க்கொண்டு இருக்கிறான். தற்செயலாக சந்தித்தபோதுதான் இவளிடம் எதையோ சொல்லவேண்டும் என்று அவன் முயற்சி செய்கிறான். அப்படியென்றால் இந்தனை வருடங்களாக அவனிடம் எதோ ஒரு விஷயம் மறைந்திருக்கிறது. அது என்ன என்பதை தெரிந்துதான் கொள்வோமே!!.

“அம்மா மல்லி வாங்கிக்குங்க அம்மா…முழம் இருவது ரூவாதான்.”

பாவம் சின்ன பொண்ணு ஸ்கூல் யூனிபார்மோட பூ விற்கவே சுபாஷினி  தன்னையும் அறியாமல் பர்சை திறந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள்.

“இரண்டு முழம் பூ கொடும்மா…”

“ஐயோ… சில்லரையில்லையே… அவருக்கே நான் இருவது ரூவா குடுக்கணும், உங்ககிட்ட வாங்கி அவருக்கு கொடுக்கலாமுன்னு நெனச்சிகிட்டு இருந்தேன்…”

என்றவள் பின்பக்கம் திரும்பி யாரையோ தேட..!

“நான் அவங்ககிட்ட வாங்கிக்கிறேன் நீ… போம்மா..”

என்ற கம்பீர குரலை கேட்டு  குழப்பத்தோடு திரும்பிப்பார்த்தாள் சுபாஷினி.




அங்கே நின்றவன் அவள் எதிர்ப்பார்த்து காத்திருந்த முரளிதரனேதான். தடுமாற்றத்துடன் எழுந்து நின்றவளின் அருகில் வந்து அவள் கரங்களில் மொத்தப்பூவையும் திணித்தான்.

“இந்தா… சாமிக்கு போட்டுட்டு வா… பிறகு பேசிக்கொள்ளலாம்.”

அதிர்ச்சியும் குழப்பமும் ஒரே நேரத்தில் தோன்ற செய்வதறியாமல் உறைந்துப்போய் நின்றாள்.

“சுபாஷினி உன்னைத்தான் சொல்கிறேன். சாமிக்காவது பயன்படட்டும் போ..”

எவ்வளவு உரிமையோடு பேசுகிறான். ஒரு மாவட்டத்தின் துணை கலெக்டர் நண்பனின் வருங்கால மனைவி இதில் ஏதாவது ஒன்றுக்காவது மரியாதை கொடுக்கலாம் அல்லவா?

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அந்த பூச்சரத்தோடு சாமி சன்னதியை நோக்கி சென்றாள். கண்டிப்பாக முரளிதரன் மாறி இருக்கிறான். பேச்சிலும் சரி செயலிலும் சரி முன்புபோல் இல்லை. பேச்சில் ஒரு குத்தலும் பார்வையில் ஒரு வெறுமையும் சற்று குறைந்தாற்போல் தோன்றியது. என்னதான் நடந்தது என்று கேட்டுவிடுவோம்.

சுபாஷினி வரும்வரை அந்த குளக்கரையிலேயே காத்திருந்தான் முரளிதரன். இவள் அவன் அருகில் வந்தவுடன் இங்கேயே உட்காருவோமா? அல்லது அந்த வில்வமரத்திக்கு கீழே உட்காருவோமா? என்றான். இவளுக்கோ கோவம் வந்துவிட்டது.

“விஷயத்தை சொல்லுங்கள் நான் வீட்டுக்கு போகவேண்டும்…” எரிந்து விழுந்தாள்.




“போ… ஒரேடியா போ.. அதற்கு முன்னாலே நான் என்ன சொல்றேன்னு ஒருமுறை கேட்டுட்டு போ? நான் எதுக்கு உன்ன இங்க வர சொன்னேன்னு சொல்லிடுறேன். அதுக்கப்புறமா நீ போயிடு நான் வேணாம்னு சொல்லலை. பாதியில் விட்டுட்டு போவதுதான் சிலருக்கு கைவந்த கலையாச்சே…?”

குரலை தாழ்த்தி ஈட்டி போல வார்த்தைகளை இறக்கினான்.

“இதோ பாருங்க எனக்குன்னு ஒரு ஸ்டேடஸ் இருக்கு இதுமாதிரியான பொது இடங்களில் தனியா சந்திப்பதே தவறு என்று நினைப்பவள் நான். ஆனாலும் சில விஷயங்களை தெரிந்துகொண்டு சில விஷயங்களை தெளிவுபடுத்திவிட்டு போகலாம் என்ற எண்ணத்தில் தான் இங்கு வந்திருக்கிறேன். இப்பக்கூட நான் உங்களுடன் தனியாக பேசுவதை யாராவது பார்த்தால் பிரச்சினை. ஏன்னா இது நகரமில்லை கிராமம்.

சுபாஷினியின் பேச்சு அவனை யோசிக்க வைத்ததோ என்னமோ, பதில் எதுவும் பேசாமல் வில்வமரத்தடியில் சென்று அமர்ந்தான். இவள் அவனுக்கு எதிர்புறமாக அமர்ந்துக்கொண்டாள்.

“கடைசியாக நாம சந்தித்தோமே அதற்கு பிறகு என் வாழ்க்கையில் என்ன நடத்தது என்று உனக்கு தெரியுமா?”

“தெரியாது…உங்க அக்காவை பார்த்துட்டு வரும்போது நடந்த விஷயத்தை பற்றி சொல்லுறீங்களா? அது நம்மையும் அறியாமல் ஏற்பட்ட சிறு தடுமாற்றம் அதை நான் அப்போதே மறந்துவிட்டேன். திரும்ப திரும்ப பழசையே கிளறிக்கொண்டிருக்காதீங்க…”

“அதை நானும் மறக்க முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கேறேன்“

“…….”




“ம்ம்…அதன் பிறகு என்ன நடந்ததுன்னு நான் சொல்லுறேன்..”

சுபாஷினி அமைதியாக இருக்கவே அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டு பேச தொடங்கினான்.

“எனக்கும் பிரியங்காவுக்கும் கல்யாணம் நடக்கணும் என்பது எங்க வீட்ல இருக்கிற அத்தனை பேரோட ஆசை அது உனக்கே நல்லா தெரியும். கல்யாணத்தை வெகு சீக்கிரமாகவே நடத்திட எல்லாரும் தீவிரமாக இருந்தார்கள். அது சம்மந்தமா என் அப்பாவிடம் சென்று பேசினேன். உனக்கும் விருப்பம் இருந்தால் நான் மறுப்பு எதுவும் தெரிவிக்கமாட்டேன். என்று சொன்னார்.” என்று பேசிக்கொண்டே போனவன் இவள் யோசனையோடு பார்க்கவும் பேச்சை நிறுத்திவிட்டு என்ன என்றான்.

“உங்களுடைய விருப்பத்தை விடுங்க பிரியங்காவுக்கு இதில் விருப்பம் இருந்ததா? அதாவது உங்கள கல்யாணம் பண்ணிக்க பிரியங்காவுக்கு முழு சம்மதமா அவ கிட்ட கேட்டிங்களா…?”

சற்றுநேரம் அவள் முகத்தையே ஊடுறுவியவன் நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டப்படி தொடர்ந்தான்.

“இதுல உனக்கு என்ன சந்தேகம் பிரியங்காவுக்கு என் மேல் உயிர் என்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தக்கால்ல நின்னா. சின்ன வயசுல இருந்து அவ மனசுல நான் மட்டும் தான் இருக்கிறேன் என்ற விஷயம் எனக்கு நல்லாவே தெரியும். அந்த விஷயத்தில் நான் தான் கொஞ்சம் யோசிச்சேன் அதற்கு காரணம் நீ…”

“நானா நான் எப்படி காரணமாவேன்? நீங்களா எதையாவது பேசி தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்காதீங்க…பிரியங்கா உங்களை நேசிக்கிறா நீங்களும் பிரியங்காவை நேசிக்கிறீங்கள் இருவரும் கல்யாணம் பண்ணிக்கிறது நல்ல விஷயந்தானே…?”




“அவள் என்னை நேசிக்கிறாள் ஆனால் நான் அப்படி இல்லை இடையில உன்ன பார்த்ததாலே என்னுடைய மனசெல்லாம் நீதானே நிறைந்திருந்தே! உன்ன கல்யாணம் பண்ணிக்கணும். உங்க பழைய ஊருக்கே வந்து சந்தோசமா வாழனும் இதெல்லாம் தான் என்னுடைய கனவு!! அதனால பிரியங்காவை கல்யாணம் பண்ணிக்க முடியாது. என்று மறைமுகமாக எங்க அப்பாகிட்ட சொன்னேன்… ஆனா அதற்கு எங்க அப்பா சம்மதிக்கலை பிரியங்காவை கல்யாணம் பண்ணிக்கலேன்னா  குடும்பத்தோட தற்கொலைப் பண்ணிப்பேன்னு சொன்னார்…”

“ஆமாம்… என்கிட்டே கூட போனில் பேசினார்… உங்க அப்பா”

என்று அமைதியாக கூறினாள்.

“நீ அவரிடம் முழுமையா பேசலன்னு நினைகிறேன்?”

“ஆமாம்…ஆனால் பேசியிருக்கலாமோன்னு இப்ப தோணுது.” என்றவளின் கண்கள் மெல்ல கலங்கியது.

“கடைசிவரை யாருக்கு திருமண ஏற்ப்பாடு செய்கிறார் என்பது தெரியாமலே இருந்ததுதான் பெரிய கொடுமை.. அதன் பிறகு  பிரியங்காவுக்கும் எனக்கும் கோவிலில் வைத்து எளிய முறையில் திருமணத்தை முடித்துக்கொள்ளலாம் என்று என் பெற்றோரும் என் அக்காவும் முடிவு செய்திருக்கிறார்கள். அதை பிரியங்காவிடம்  சொல்லி இருக்கிறார்கள் அவளும் ‘சரி’ என்று சம்மதம் சொல்லியிருக்கிறாள். அவர்களின் சித்துவேஷம் தெரியாமல் நானும் நம்பியதுதான் பெரிய முட்டாள் தனம். எப்படியோ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி என்னை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்துவிட்டார்கள்”

“………..”




“விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் அன்று இரவு நான் எங்கு இருந்தேன் தெரியுமா? போலிஸ் ஸ்டேசனில்”

அதிர்ச்சியோடு அவன் முகத்தை ஏறிட்டாள்.

அந்த வருடம் முசொரியில ஒரு ‘ஐஎப்எஸ்’ ஆபீசரை கொலை பண்ணிட்டாங்க தெரியுமா? அந்த கொலை கேசுல குற்றவாளியை நான்தான் போலீஸ்க்கு அடையாளம் காட்டினேன். குற்றவாளியை அரஸ் பண்ணின போலீஸ் அடையாளம் காட்டுவதற்காக என்னை கூட்டிட்டு போனாங்க. அதன் பிறகு…?”

“என்ன நடந்தது…”




“எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. கட்டாயப்படுத்திதான் இந்த கல்யாணத்துக்கே சம்மதிக்க வைத்தார்கள். ஒரு பெண்ணோட வாழ்க்கை மணமேடை வரை வந்து நிற்கக்கூடாது என்றுதான் நான் சம்மதிச்சேன். ஆனா என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறவர் ஒரு கொலை கேசுல மாட்டின பிறகும் அவரை நான் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை. என்று என் அக்கா மகள் சொல்லிவிட்டாளாம். அதனால் அந்த கல்யாணம் நின்னுபோச்சி. அந்த அதிர்ச்சியில் என் அக்காவும் படுத்த படுக்கையாய் ஆகிவிட்டார்கள். எவ்வளவோ சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனளிக்கவில்லை. அடுத்த வருடம் மகளோட பிறந்தநாள் அன்றே அவர்கள் உயிர் பிரிந்துவிட்டது. அவர்களோட கடைசி ஆசையைகூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை.”

“கடைசி ஆசையா…?”

“ஆமாம்…பிரியங்காவை கல்யாணம் பண்ணலன்னாலும் பரவாயில்லை.., என்னுடைய இன்னொரு பொண்ணு சுபாஷியையாவது நீ கல்யாணம் பண்ணிக்கணும். அதை நான் கண்குளிர பாத்துவிட்டால் போதும் என்றார்கள். இப்போ என் வாழ்க்கை மட்டுமல்ல என் லட்சியமும் தரைமட்டமாயிடிச்சி தெரியுமா”

“அது உங்களோட முட்டாள்தனம்…”

சட்டென்று முரளிதரனின் முகம் கருத்துப்போனது.

“சுபாஷினி உண்மையை சொல்? நீ என்னை நினைப்பதே இல்லையா? உண்மையாகவே நீ நிம்மதியாகத்தான் வாழுறீயா?”

“இதில் என்ன சந்தேகம்? எனக்கு எந்த குறையுமில்லாமல் நிம்மதியாகத்தான் வாழ்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல டாக்டர் ஆனந்துக்கும் எனக்கும் எங்க பெற்றோரின் சம்மதத்தோடு கல்யாணம் நடக்கப்போவுது. இப்போ என்னுடைய கவலையெல்லாம் என் கல்யாணத்துக்கு முன்னாடி தாத்தாவுக்கு எதுவும் ஆகிடக்கூடாது என்பதுதான்..”




What’s your Reaction?
+1
9
+1
24
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!