Short Stories sirukathai

குயிலி எங்கே ?  (சரித்திர சிறுகதை)  




                               

                                குயிலி எங்கே ?                                  

image.png




அடர்ந்த வனப்பகுதி , விண்ணை முட்டும் மரங்கள் , சலசலத்து ஓடும் அருவி நீர் , இயற்கை , பச்சை அழகை மட்டுமல்ல , சில பாறைகளையும் ஆங்காங்கே உருவாகி இருந்தது . அந்த இடத்தில் இந்திய வரலாற்றில் மாறாத இடத்தைப் பெற்ற மாவீரர்கள் , எமனையும் ஜெயிக்கும் வல்லமை படைத்த மகா பலசாலிகள் , ஓர் இடத்தில் ஒருங்கே கூடி இருந்தனர்
மாபெரும் அரசவையின் கொலு மண்டபத்தில் நடக்க வேண்டிய அந்த மந்திராலோசனை , இப்படி மரத்தடியில் கானக மத்தியிலே நடக்க வேண்டிய அவல நிலையில் , அன்னை தேசம் பரங்கியரிடம் அடிமைப்பட்டு கிடந்த நேரம் .

அருவி நீர் சிறிய ஓடையாக ஓடிய  இடத்தின் அருகே ஒரு பெரிய கற்பாறை இருந்தது. அது, குடையப்பட்டு
ஒரு சிம்மாசனம் போல் மாற்றப்பட்டிருந்தது. அதனை சுற்றிலும் ‘சிறிய சிறிய’  கற்பாறைகள் இருந்தன.  அதன்மேல் சரித்திரப் புகழ்பெற்ற மகா ரதங்கள் அமர்ந்து இருந்தனர் .

       தேவி ; இவ்வளவு அவசரமாக மந்திராலோசனை ஏற்படுத்திய காரணம் என்ன ?

image.png

ராஜ சிம்மாசனம் போல் அமைந்திருந்த கற்பாறையின் , அருகே இருந்த பீடத்தில் அமர்ந்திருந்த , அந்த ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட மனிதர் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் இந்த கேள்வியை கேட்டார் .

”  அப்பப்பா ”  அந்த சிம்மாசனத்தின் மீது அமர்ந்திருக்கும்  பெண்ணின் முகத்தில் தான் எத்தனை தேஜஸ் ! உடலில் ஒரு அசாத்திய விறைப்பு  , ஆணை ஒத்த விரிந்த மார்பும் , திரண்ட புஜங்கள் , நீண்ட கைகள் , கூரிய நாசி ,  நிலவை ஒத்த வதனம். ஆனால், கண்களில் மட்டும் ‘சோகம்’ .
சேனாதிபதிக்கு தெரியாத விசயம் ஏதாவது உண்டா , என்னிடம் தாங்கள் இந்த கேள்வியை கேட்கலாமா !?

அரசியின் மனதில் இருப்பதை நான் ஓரளவு அறிவேன் ,  இருப்பினும் மந்திர ஆலோசனையில்  முதலில் பேச வேண்டிய விஷயத்தை ஆரம்பிக்க வேண்டியது அரசியின் கடமை. அதனாலேயே, தங்களை நான் கேட்டுக்கொள்கிறேன் .




அரசியிடம் இதை பேசிய நபர் ஆண்களின் லட்சணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவராக    இருந்தார் ;  ஆறரை அடிக்கும் மேற்பட்ட உயரம் , பனைமரத்தை ஒத்த கைகள் ,  வீரம் ததும்பி வழியும் முகம்  , கூரிய விழிகள் , நீண்டு பெருத்து இருந்த மீசைக்கு பின்னே இருந்த அந்த கம்பீரமும்  , ஆண்மையும் , என் தாய், தமிழ் மண்  தன் குழந்தைகளுக்கு தந்த மாபெரும் சொத்தாகும் .

அந்த வீரத்திருமகன் அமர்ந்திருந்த பீடத்திற்கு பின்னே ஏறத்தாழ அவரைப்போலவே ஒத்த உருவமும் அங்க லட்சணங்களும் கொண்ட ஒருவர் அவருக்கு மிகுந்த மரியாதை தரும் வண்ணம் நின்றபடி இருந்தார். இருவரும் உருவ தோற்றத்திலும் ஒன்றுபோல் இருந்தனர்.

‘ சாரங்கா ‘  நீ கொண்டு வந்த விஷயத்தை சபையில் சொல் அரசியின் ஆணை .

‘ உத்தரவு மகாராணி ‘ சபையோர் அனைவரும் அறிவது , நமக்கும் நம் மண்ணிற்கு மிகவும் உறுதுணையாக இருந்த” உடையாள் ”  பரங்கியரால் கைது செய்யப்பட்டாள் , அரசி வேலு நாச்சியார் இருக்கும் இடம் கேட்டு, பரங்கியர் சொல்லன்னா  சித்திரவதைகளை செய்தபோதும் ,  எந்த ஒரு தகவலும் தராது கல்லாய்  இருந்தவள் நம் உடையாள் .

உடையாளால் இனி தமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்த அந்த பரங்கியர் , வெறித்தனமான அந்த செய்கையை செய்தனர் . . ஆம்!! உடையாளின் தலையை ஊர் மத்தியில் வைத்து துண்டித்து தங்கள் வெறியைத் தீர்த்துக் கொண்டனர் . மரணத்தின் கடைசி வினாடி வரை, அவர் அரசியார் பற்றியோ, நம் திட்டங்கள் பற்றியோ ,  எந்த  ஒரு சிறு தகவலையும் தரவில்லை  .




            அரசி வேலு நாச்சியாரின் விழிகளின் ஓரங்களில் இப்போது கண்ணீர் துளிகள் . கேட்டீர்களா சேனாதிபதி ; உடையாள் , என் சகோதரி , என் தோழி ,  என் தாய் , என் உடல் ஒட்டிய உருப்பாய் என்னை காத்து வந்தவள் , இந்த இறப்பிற்கு அந்த வெள்ளை நாய்கள் பதில் சொல்லியே தீரவேண்டும் .

” நிச்சயம் சொல்வார்கள் ” ஒரு பெண்ணை , தலையைத் துண்டித்து , அதன்மூலம்  பயத்தை மக்கள் மத்தியில் கொண்டு வரும் கேவலமான ஒரு விஷயத்தை வெள்ளை அரசு செய்திருக்கிறது .  பாவம் அந்நிய தேசத்தான்  “வெட்ட வெட்ட வீரிட்டு வரும் வீரம் நம் தமிழ் மண்ணுக்கு உடையது” என்பது அவனுக்கு எப்படி தெரியும் .

வீரம் நிறைந்த வெறும் பேச்சை நான் விரும்பவில்லை சேனாதிபதி , செயலில் இதை நாம் செய்தாகவேண்டும் . உடனடியாகச் செய்தாக வேண்டும் .

இப்பொழுது அந்த வீரத் திருமகனின் முகம் சுருங்கியது , அப்படி என்றால் , ராணியார் எங்கள் வீரத்தின் மீது ஏதேனும் அவநம்பிக்கை கொண்டுள்ளாரா , தாங்கள் உத்தரவு தந்தால் நானும் என் தமையனும் தனி ஒருவராய் சென்று ஒட்டுமொத்த பரங்கியர் சேனையையும் அழித்து திரும்ப சித்தமாய் இருக்கிறோம்.

“ஆகா ” அப்படி  யார்  சொன்னது?. மருதுபாண்டியர் வீரத்தை எவர் குறைத்து மதிப்பிட முடியும் . என்னுடைய வார்த்தை தங்களை காயப்படுத்தி இருக்கிறதா பாண்டியரே? அப்படி ஒருவேளை காயப்படுத்தி இருந்தால் நான் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன் . உடையாளின் மறைவு என்னை நிலைகுழைய செய்து இருக்கிறது  சேனாதிபதி.

image.png

“அரசியாரே”  அரசியலில் சிறிது நிதானமான திட்டமிடுதல் தேவை , ‘ஹைதர் அலி’ அவர்களிடமிருந்து வரவேண்டிய துருப்புக்கள் இன்னும் வந்து சேரவில்லை .மேலும், நாம் இன்னும் சில சிற்றரசர்களிடம் திரட்டிய படைப்பிரிவுகள் நம்மிடம் இன்று இரவு தான் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம். இப்போது நம் வசம் இருப்பது மிகவும் சொற்பமான சேனையே , இந்த சேனையுடன் நாம் சிவகங்கையை  மீட்க முடியுமா என்பது சந்தேகமே , ஆனால் போராடி சாக முடியும்  ராணி உத்தரவு தந்தால் அதற்கும் நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம் .




“வேண்டாம் மருதுபாண்டியரே” நமக்கு வெற்றியும் முக்கியம் , நம் வீரர்கள் உயிரும் முக்கியம். இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? .

நாம் கேட்ட படை உதவிகள் மொத்தமும் வந்து சேரும் வரை பொறுத்திருப்போம் அரசி .  போதுமான  படைபலம் கிடைத்தவுடன் நிச்சயம் கோட்டையை தாக்குவோம்,வெற்றியை நமதாக்குவோம் .

image.png

அரசி வேலு நாச்சியாரின் நெற்றியிலே சுருக்கங்கள் அவர் ஏதோ ஒன்றை ஆழ்ந்து யோசிக்கிறார் என்று தெரிவித்தது . அப்படி என்றால் வரும் படைப் பிரிவுகளுடன் நம்மால் நிச்சயமாக வெற்றியை சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

ஏன் அரசியாருக்கு அதில் எதுவும் சந்தேகம் உள்ளதா ?

‘ஆம் மருது பாண்டியரே’  என்னால் அப்படி உறுதிபட வெற்றி என்று சொல்ல முடியவில்லை . நம்மிடம் போதுமான அளவு வெடிபொருட்கள் இல்லை ,  பீரங்கிப் பயிற்சியும் , துப்பாக்கி பயிற்சியும் பெற்ற வீரர்கள் நம் மத்தியிலே மிகவும் குறைவானவர்களே , மேலும் சிவகங்கை கோட்டையின் உள்ளே மாபெரும் வெடிமருந்து கிடங்கு ஒன்றை வெள்ளையன் ஏற்படுத்தி வைத்திருக்கிறான் . அதில் வெடிமருந்துகளும் , துப்பாக்கிகளும் பீரங்கிகளும் , கணக்கின்றி குவித்து வைத்திருக்கின்றான் . அந்த ஆயுத பலத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது, நம் படைபலம் நிச்சயம் தோற்று விடும் என்றே எண்ணத் தோன்றுகிறது .




அரசி ; போர் என்று வந்தபிறகு, நாம் வெற்றி அல்லது வீரமரணம் இது இரண்டையுமே வரவேற்க தயாராக தானே இருக்க வேண்டும். இது மருதுபாண்டியரின் இளைய சகோதரர் கூற்றாக இருந்தது .
இளைய பாண்டியரே தாங்கள் கூறுவது உண்மைதான் , ஆனால் மரணம் மட்டுமே நம் குறிக்கோள் அல்ல. வெற்றி பெறும் முயற்சியில் அடையும் மரணமே வீர மரணம் ஆகும். ஆனால் , வெற்றி வாய்ப்பே இல்லாத பொழுது, நாம் போரிட்டு மடிவது விளக்கை சுற்றும் விட்டில் பூச்சி அந்த விளக்கிலேயே  விழுந்து மடிவது  போல் ஆகிவிடும்.

ராணியின் இந்தக் கருத்தை பெரிய பாண்டியர்  ஆமோதித்தார் .

யுத்த நெறிமுறைகளையும்,   வியூகங்களையும் பற்றி பல்வேறு கருத்து மோதல்கள் , பல்வேறு விதமான வழிகள் , பல்வேறு யோசனைகள் அலசி ஆராயப்பட்டன. ஒருவருடைய கருத்துக்கள் மற்றொருவரால் முறியடிக்கப்பட்டது.  எந்த ஒரு திட்டமும் ஏகமனதாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை . வெறும் சர்ச்சைகளே அந்த இடத்தில் நிறைந்திருந்தது.

அவை நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் அந்த இளம்பெண்.

நன்றாக இருந்தால் அவளுக்கு  ஒரு பதினெட்டு வயது இருக்கலாம்.  எழில் பொங்கும் தோற்றம்  , வலிமை கொண்ட உடல் , கூரிய வேல் ஒன்றை அவள் கையில் பிடித்து இருந்தாள் . அவள் வேலை பிடித்திருந்த அந்த தோரணையில் அவள் எவனுக்கும் அஞ்சாதவள் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது . இப்போது அவள் சபையில் ஓரடி முன்னே வந்து, அரசிக்கு தன் வணக்கத்தை தெரிவித்தாள்.

சொல் குயிலி , “நீ என்ன சொல்லப் போகிறாய்”?.
அரசி , தாங்கள் அனுமதித்தால் நான் எனக்குத் தோன்றும் ஒரு சிறிய யோசனை ஒன்றை கூற விரும்புகிறேன்.

நிச்சயமாக உனக்கு அந்த அனுமதி உண்டு குயிலி  சொல்.




குயிலி மெல்ல மெல்ல தன் திட்டத்தை விவரித்தாள். அதனை கேட்ட மருது சகோதரர் உள்பட அனைவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றனர் .

குயிலி ; உன்னுடைய இந்தத் திட்டம் சிறந்ததாக இருக்கிறது. இருப்பினும், இதை செயல்படுத்த உனக்கு அனுமதி அளிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை .

சிறந்த திட்டம் என்று தாங்கள் ஏற்ற பிறகும், செயல்படுத்துவதற்கு எனக்கு அனுமதி அளிக்க ஏன் தயங்குகிறீர்கள் அரசியாரே?

நீ மிகவும் சிறியவள் , இந்தத் திட்டம் மிகவும் அபாயகரமானதாக உள்ளது. இதனை செயல்படுத்தும் பொழுது மிகப்பெரிய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.அது போன்ற அபாயங்களில் உன்னை ஈடுபடுத்த எனக்கு விருப்பமில்லை .

மன்னிக்க வேண்டும் மகாராணி. தாங்கள் என் திட்டத்தில் உள்ள நிறை குறைகளை விவாதிக்கலாம் , அதை தவிர்த்து அதனை செயல்படுத்தும் போது ஏற்படும் அபாயங்களை பற்றி சிந்திப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது . ராணி வேலு நாச்சியாரும், மாவீரர்  மருது சகோதரர்களும் , பிறந்த அதே மண்ணில் தான் இந்த குயிலியும் பிறந்திருக்கிறாள். பிறந்த மண் அபாயத்தில் இருக்கும் பொழுது என் ஒருத்தியின் அபாயத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது .

அதன் பிறகு ஏகப்பட்ட வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டன. முடிவில் குயிலியின் அந்தத் திட்டத்தை செயல்படுத்த ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது . பெண்கள் படைப்பிரிவின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டாள் குயிலி. திட்டம் செயல்படுத்த நாள் குறிக்கப்பட்டது. “நவராத்திரி அன்று விஜயதசமி” நன்னாளில் அந்த திட்டம் செயல்படுத்த முடிவு எடுத்தார்கள் .

image.png

———    ——-   ————-   ——-  ———–
அன்று விஜயதசமி , சிவகங்கை நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருந்தது  . ராஜராஜேஸ்வரியின் ஆலயத்தில் விஜயதசமி தினத்தை முன்னிட்டு,  விசேஷ பூஜையும் வழிபாடும் நடைபெற்றது .பெண்கள் யாவரும் தடையின்றி கோட்டைக்குள் செல்லவும் கோவிலில் தரிசிக்கவும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. திருவிழா காலமாதலால் பரங்கியரின் கட்டுக்காவலும் தளர்வாக
இருந்தது .

குயிலி தலைமை ஏற்றிருந்த பெண்கள் படைப்பிரிவைச் சேர்ந்த வீர மங்கையர்கள், பெண்கள் கூட்டத்தோடு கூட்டமாக , மறைத்து வைத்த ஆயுதங்களுடன்  கோட்டைக்குள் புகுந்தனர். அவர்கள் திட்டமிட்டபடி கோவிலின் உள்ளும் ,வெளியும் சீரான இடைவெளியில் மக்களுடன் மக்களாக கலந்து எல்லா புறங்களிலும் இருந்து எந்த நேரமும் தாக்குவதற்கு தயாராக இருந்தனர் .




கோயிலுக்குள் இருந்த குயிலி மாறுவேடத்தில் அவர்கள் அனைவரையும் கண்காணித்து, அவர்களுக்கு உண்டான இடங்களை மாற்றிக் கொண்டிருந்தாள் . அப்பொழுது உணவு நேரம் வந்தது.

காவலுக்கு இருந்த வெள்ளை வீரர்கள் உண்பதற்காக , ஓய்வெடுப்பதற்காக  காவல் பணிகளில் முற்றிலும் சிரத்தை இன்றி செயல்பட்டனர்.

இந்த தருணத்திற்காக காத்திருந்த குயிலி தாக்குவதற்கான உத்தரவை தன் படைப்பிரிவிற்கு தெரிவித்தாள்.

வெள்ளையர்கள்  சற்றும் எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்தது அந்த தாக்குதல். எந்தப் புறம் இருந்து தாக்குகிறார்கள் , எத்தனை பேர் தாக்குகிறார்கள், எந்த ஆயுதங்கள் கொண்டு தாக்குகிறார்கள், தாக்குபவர்கள் பெண்களா ! என்பது போன்ற பல்வேறு ஆச்சரிய அதிர்ச்சியில் வெள்ளைய துருப்புக்கள் திண்டாடி நின்றன.

அந்த சிறிய இடைவெளி குயிலியின் படைக்கு போதுமானதாய் இருந்தது. அவர்கள் முன்னேறி பரங்கியர்கள்  தலையை கொய்து வீழ்த்தியபடி இருந்தனர் .  கோவிலை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் ஒரு வெள்ளையனுக்கும் தலை இருக்கப்போவதில்லை என்பது குயிலுக்கு பட்டவர்த்தனமாக தெரிந்தது.

இனி திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியதுதான். குயிலி வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கு இருந்த பகுதிக்கு சென்றாள். குயிலியின் பெண்கள் படை வீராங்கனைகள் ஆயுதக் கிடங்கை சுற்றிவளைத்து இருந்தனர் .

இந்த இடத்தில்தான் குயிலியின் திட்டத்தில் முதல் சறுக்கல் ஏற்பட்டது .

‘தளபதி’ நம் போராளிகள் எவ்வளவு போராடியும் ஆயுதக் கிடங்கை நெருங்க முடியவில்லை .

‘ஏன்’  ஏன் நெருங்க முடியவில்லை  . நான்கு புறமும் சுற்றி வளைத்து சக்கர வியூகமாக தாக்குதலை மேற்கொண்டு இருக்கிறோம் . இருப்பினும் நாம் பின் வாங்க வேண்டிய சூழ்நிலை வருவது ஏன் ?




ஆயுதக் கிடங்கில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமான வீரர்கள் இருக்கிறார்கள் .மேலும் இப்பொழுது வெள்ளையன் சுதாரித்துக் கொண்டான் . கோயிலை காட்டிலும் இப்போது இந்த ஆயுதக் கிடங்கை காப்பதில் முழு கவனத்தை செலுத்துகின்றனர்  . உள்ளபடி சொல்லப்போனால், இப்பொழுது நாம் அனைவரும் வெள்ளை வீரர்களால்  சுற்றி வளைக்கப்பட்டு  உள்ளோம். தளபதியாரே  மேலும் அவர்கள் இப்பொழுது துப்பாக்கி கொண்டு தாக்க ஆரம்பித்ததில், நம் வீராங்கனைகள் பெருமளவில் வீர மரணத்தை சந்தித்து இருக்கின்றனர் .

குயிலியின் முன்னே ஏகப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்கள் கிடந்தன , குயிலியின் இதயம் கனத்தது .

“தோல்வியா ” கூடாது , நிச்சயம் கூடாது , இந்த வெடி கிடங்கு அழிக்கப்படும் பொழுதுதான் வெளியில் காத்திருக்கும் நம் படைகள் கோட்டைக்குள் நுழையும். அப்படித்தான் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த கிடங்கு அழிக்கப்படாத வரை உள்வரும் நம் படைகள் வெற்றி பெறுவதற்கு எந்த விதமான சாத்தியங்களும் இல்லை. தீவிரமாக யோசித்த குயிலி “வெற்றிவேல் வீரவேல் ” என்ற முழக்கத்துடன் எஞ்சியிருந்த போராளிகளுக்கு ஊக்கத்தை தந்துவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள் .

image.png
குயிலியின் தலைமையை உணர்ந்த ஒரு வெள்ளையன், குதிரையில் வந்த படி குயிலியின் பாதையை மறைத்தான் .

நீ தான் இந்தப் போராளிகளின் தலைவியா?

குயிலியிடம் மௌனம்….




     “நீ மிகவும் அழகாக இருக்கிறாய்” நீ என்னுடன் வந்து விடுகிறாயா? உனக்கு வேண்டிய பொன்னும் பொருளும் தருவேன் . இந்த நாட்டுப் பெண்களுக்கு தான் எவ்வளவு அபாரமான உடல் வளைவுகள் !!   பல்லை இழித்தபடி குதிரையிலிருந்து இறங்கி குயிலியை சுற்றிவர ஆரம்பித்தான் . அவன் கைகளில் இருந்த துப்பாக்கி எந்த நேரமும் தோட்டாவை வெளியிடுவதற்கு தயாராக குயிலியின் மார்பின் மேல் பதிந்திருந்தது .

குயிலியின் மார்பில் பதிந்திருந்த துப்பாக்கியை தளர்த்தாமல் தலையை குயிலியின் அருகே கொண்டுவந்து, அவள் கழுத்துக்கு மிகவும் நெருக்கமாக அவளை அணைக்கும் தோரணையில் நெருங்கினான் அந்தப் பரங்கியன்.

சரியாக அந்த தருணத்திற்கு தான் காத்திருந்தவள் போல் , குயிலி செயல்பட்டாள்.  எப்பொழுது செயல்பட்டாள் என்பதை ஒருவராலும் யூகிக்க முடியவில்லை  . எப்பொழுது அவள் கையிலே அந்த புலிநகம் வந்தது, எப்போது அதை அவள் தன் கைகளில் கோர்த்துக் கொண்டாள் , எப்பொழுது அதை அந்த பரங்கியனின் கழுத்தில் பாச்சினாள் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் இவை அனைத்தும் நடந்து முடிந்திருந்தது .

சரிந்து விழுந்திருந்த வெள்ளையனின் கைத் துப்பாக்கி மீண்டும் இவளை நோக்கி உயர்த்த ,  தன் வலது காலால் அதனை எட்டி உதைத்து விட்டு , இடது காலை அவன் கழுத்தின் மீது ஊன்றினாள் குயிலி . “இந்த நாட்டுப் பெண்களின் உடல் வளைவுகள் மட்டும் அபாரமானது இல்லையடா உடல் வலிமையும் அபாரமானது தான்”  கூறிய வேகத்தில் அருகில் நின்ற குதிரையின் மீது தாவி ஏறினாள். குதிரை இப்பொழுது கோவிலை நோக்கி திருப்பப்பட்டது .

வீரப் பெண்களே, நாம் அனைவரும் இப்பொழுது ஆயுதக் கிடங்கை நோக்கித் திரும்ப வேண்டும். உடனடியாக அனைவரும் வாருங்கள் கோவிலினுள் சிம்மம்  என கர்ஜித்தாள்  குயிலி .

ஆனால் , கோயிலின் உள்ளும் இப்போது நிலைமை மாறியிருந்தது. அங்கிருந்த பெண்களும் வெள்ளையர்களால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்தனர் . மடியும் வரை போராடி மடிய வேண்டும் என்ற எண்ணத்தில் வெற்றிவேல் வீரவேல் என்ற கோஷத்தை ஒருவருக்கொருவர் எழுப்பி  ஊக்கத்துடன் போராடிக் கொண்டிருந்தனர் .
” கூடாது ,இனி ஒரு நிமிடமும் தாமதிக்கக் கூடாது ” குயிலி  தன் மனதிற்குள் ஒரு தீர்மானமான முடிவிற்கு வந்தாள் . கோவிலில் தீபம் ஏற்றுவதற்காக வைத்திருந்த எண்ணையை எடுத்து தன்னுடன் குதிரையில் ஏற்றிகொண்டாள்.




 வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த தீப்பந்தத்தை கையில் தாங்கிக் கொண்டாள் , ஒரு கையில் வேலும் , மறு கையில் தீப்பந்தமும் ,ஏந்தி கொண்டு குதிரையில்  மீண்டும் ஆயுதக்கிடங்கு நோக்கி புறப்பட்டாள்.

ஆயுதக் கிடங்கின் உள்ளே ஒருவரும் நுழைய முடியாதவாறு இரும்புக் கோட்டை என வெள்ளைய வீரர்கள் சுற்றி வளைத்து நின்றனர் .

ஆனால்  , ‘,அய்யோ பாவம்’ அவர்கள் யாராலும் குயிலியின் வேலுக்கு பதில் சொல்ல முடியவில்லை. என்ன ஒரு அபாரம் ,என்ன ஒரு வேகம் குயிலியின் வேல் மின்னலென சுழன்றது.

வெள்ளையர்களுடன் குயிலி போரிட்ட பொழுது அவள் எந்த புறமிருந்து தாக்கினாள் , எப்படி தாக்கினாள்  என்பது எந்த ஒரு வெள்ளையனுக்கும் புரியவில்லை . சில நேரம் வலப்புறம் , சில நேரம் இடப்புறம், யுத்தகளத்தில் மேலே ,யுத்த களத்தின் கீழே , “அய்யகோ ” யுத்தகளம் எங்கும் அவளே நிறைந்திருந்தாள் . ஒரு கட்டத்தில் வெள்ளையர்கள் குயிலியின் அருகே நெருங்க கூட அஞ்சினர்.

image.png

குயிலியை நோக்கி புறப்பட்ட தோட்டாக்கள் கூட விரையமாயின. இந்திரஜித்தின் பானங்களுக்கு இடையே சஞ்சரித்த அனுமனைப் போல் வெள்ளையனின் தோட்டாக்களுக்கு இடையே எளிதில் புகுந்து அவன் தலையை வெட்டி வீழ்த்தி கொண்டிருந்தாள் அந்த “வீர மங்கை “.

அவள் கையிலிருந்த வேல் சக்கரமாக சுழன்று கொண்டிருந்தது. அவள் சென்று கொண்டிருந்த பக்கமெல்லாம் வெள்ளையனின் உயிரற்ற உடல்கள் விழுந்து கொண்டிருந்தன . ஆனால் , வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் போல் எண்ணிலடங்கா வெள்ளை வீரர்கள் புற்றீசல் போல் மீண்டும் வந்து கொண்டே இருந்தனர் .




          கூடாது  , இன்னும் நேரம் விரயம் கூடாது  , திடீரென்று ஒரு முடிவிற்கு வந்த குயிலி  தன்னுடன் குதிரையில் எடுத்து வந்திருந்த எண்ணையை தன் உடலெங்கும் ஊற்றிக் கொண்டாள் . தான் அமர்ந்திருந்த குதிரையிலிருந்து கீழே இறங்கி, தட்டிக்கொடுத்து குதிரையை செல்வதற்கு அனுமதித்தாள் . தன் கையில் இருந்த தீப்பந்தத்தை வைத்துக் தன் உடலில் தானே தீ வைத்துக் கொண்டாள் .

அவளது இந்த செய்கையைக் கண்ட வெள்ளைய வீரர்கள் சப்த நாடியும் ஒடுங்கி , விழிபிதுங்க அவளைப் பார்த்த வண்ணம் இருந்தனர் .

குயிலியின் உடல் முழுவதும் தீ திகுதிகுவென்று எரிய ஆரம்பித்தது. சுற்றிலும் நின்ற பெண் வீராங்கனைகள் வெற்றிவேல் வீரவேல் என்று கோஷமிட்டனர்.

image.png

உடல் முழுவதும் தீ பற்றிக்கொண்டு எறிந்தாலும், அப்படி எந்த ஒரு வேதனையையும் உணராதவள் போல் குயிலி செயல்பட்டாள்.  அவள் கையிலிருந்த வேல் முன்னிலும் பன்மடங்கு வேகத்தில்  சுழன்றது .உடல் முழுவதும் பற்றி எரியும் நெருப்புடன் மாறாத நெஞ்சுரத்துடன் , மின்னலென வேலை சுழற்றியபடி வரும் பெண்ணைக் கண்ட  வெள்ளையர் கூட்டம் தெறித்து ஓடியது. அதிர்ச்சியில் திறந்த விழிகள் மூடுவதற்குள், குயிலி ஆயுதக் கிடங்கில் பாய்ந்து இருந்தாள் .

“டம்மம்மம டமால்ல் டமார்ர் டமார்ர் டம்ம்” ஆயுதக் கிடங்கில் இருந்த அத்தனை வெடிமருந்துகளும் வெடித்துச் சிதறின. துப்பாக்கி பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வானை முட்டும் வரை தூக்கி எறியப்பட்டு உபயோகம் அற்ற இரும்பு குவியல்களாய் எங்கெங்கோ போய் விழுந்தன . இந்த தருணத்திற்காகவே கோட்டைக்கு வெளியே காத்திருந்த மருதுபாண்டியர் உட்பட்ட மிகப் பெரிய படையுடன் ராணி வேலுநாச்சியார் கோட்டைக்குள் புகுந்தார் . வெற்றிவேல் வீரவேல் என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது சரியாக ஒரு நாழிகை நேரத்தில் சிவகங்கை கோட்டை ராணி வேலுநாச்சியார் வசமானது . கோட்டை வசப்பட்டதும் ராணி கேட்ட முதல் கேள்வி  “குயிலி எங்கே “ ஆம்    குயிலி எங்கே!!!!.




What’s your Reaction?
+1
2
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!