Short Stories sirukathai

முழுமையானவள் (சிறு கதை)




அது அரண்மனையின் அந்தப்புரம் , நள்ளிரவு நேரம் ,மிக நீண்ட விசாலமான பெரிய மஞ்சம் , அவ்வளவு பெரிய மஞ்சத்தில் அவள் ஒருவள்  மட்டுமே தனி ஒருத்தியாக படுத்து இருந்தாள் ; “ஓ இறைவா”  இவள் என்ன மானுடப் பெண் தானா  !?அல்லது செதுக்கப்பட்ட சிற்பமா ?வரையப்பட்ட ஓவியமோ ?  மலர்ந்து நிற்கும் புதுமலரோ ! யார் இவள்.அவள் முகத்தில் எழில் மட்டுமல்ல , உடலின் வனப்பும் மிக அபாயகரமாக இருந்தது ; அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததனால் , ஆடைகள் ஆங்காங்கே நெகிழ்ந்து அவளது இளமை கும்மாளமிட்டு கொண்டு வெளியே தெரிந்தது .

‘  ஓ ‘ அந்த அம்சத்தை தூரிகா மஞ்சத்தில் அவள் மட்டும் இல்லையோ, அதோ ஓர் பச்சிளம் குழந்தை ; ‘அடடா’ இந்த மலர் வயிற்றில் தோன்றிய முத்தா இவன் , தாயின் மார்பில் அருந்திய பாலின் சொச்சம், இதழ் ஓரத்தில் வழிந்து இருக்க ஏகாந்தமாய் உறங்கிக் கொண்டிருந்தது “அந்த பிஞ்சு” .
இப்பொழுது அந்த பெண்ணிடம் சிறிய அசைவு , தன் கைகளை ஒரு புறமாக திருப்பி தன் பக்கத்தில் தடவிப் பார்க்கிறாள் . அவளது பாலகன் இந்தப் புறம் இருக்க, அந்தப்புரம் யாரைத் தேடுகிறாள் ?

அவள் , அவளுடைய கனவில் காதலனுடன் கொஞ்சிக் கொண்டு இருந்திருக்க வேண்டும் , அவள் முகத்தில் அதற்கான மையல் தெரிந்தது. ஏதோ ஒரு சில காட்சிகளை நினைத்து நானி சிவந்தது அவளது முகம்.

“விடுங்கள் சுவாமி”   வெட்கத்துடன் கூறிவிட்டு டக்கென்று எழுந்து விட்டாள்.

இப்பொழுது தன் நிலை உணர்ந்து, திருதிருவென்று விழிக்க ஆரம்பித்தாள்.

தன் குழந்தையின் எழில் கொஞ்சும் உருவத்தை, ஒரு முறை தன் உள்ளமெங்கும் வாங்கி நிறைத்துக் கொண்டாள்.




‘  எங்கே’ —-‘எங்கே போய்விட்டார் இவர்’?  சுவாமி—— சுவாமி —- ஒருவேளை நகர்வலம் சென்று இருப்பாரோ ?; இல்லையே, அப்படி ஒரு பழக்கம் உள்ளவர் இல்லையே , மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து உப்பரிகை நோக்கி நடந்தாள். நிலவு வீசிய  ஒளிக்கீற்று அவள் உடல் முழுவதும் பரவியது. அவளது பட்டு உடல்  கணவனின் அரவணைப்புக்கு ஏங்கியது.

இந்த அர்த்த ராத்திரியில் எங்கு சென்று இருப்பார் . இது போல் ஒரு நாளும் சென்றவர் இல்லையே.  சரி வரட்டும் காத்திருக்கலாம். இப்பொழுது குழந்தையின் பக்கம் அவள் பார்வை திரும்ப , குழந்தை தூக்கத்தில் லேசான அரும்பு புன்னகை ஒன்றை வெளியிட்டது.தாய் உள்ளம்   குதூகலித்தது.

‘அவர் வரட்டும் ‘ அவருடைய கழுத்தில் என்னுடைய கைகள் இரண்டையும் மாலையாய் கோர்த்து தொங்கவிட்டபடி, நம் குழந்தை ராகுலன் சிரித்தான் தெரியுமா என்று சொல்ல வேண்டும் .’ அடடா!!’  சிரிக்கும் பொழுது தான் “என் மகன் என்ன அழகு”!!!

நேரம் கடந்து கொண்டே சென்றது , அவன் வரவில்லை. படுக்கை அறை முழுவதும் சுற்றி சுற்றி நடந்து, கால் வலித்து , ஏதோ ஒரு தருணத்தில் படுக்கையில் விழுந்து, அயர்ந்து தூங்கி போய் இருந்தாள் அவள்.

காலை சூரியனின் ஒளி கண்களில் பட்ட பிறகுதான் மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்தாள்.

‘ ஐயோ ‘ இவ்வளவு நேரம் தூங்கி விட்டேனா , ‘ சே என்ன முட்டாள் நான் ‘  அருகில் ராகுலன் இல்லை , சேடிப் பெண்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் .




‘ யார் அங்கே’  அவளது இந்த குரலுக்கு தன் ஐந்தடி உடலை , அரை அடியாய் குறுகிய படி  ஓடி வந்து நின்றாள் ஒரு பெண் , குழந்தை எங்கே?

‘அயர்ந்து உறங்குகிறார் தேவி’.

சரி நீ அவனைப் பார்த்துக் கொள், நான் குளித்துவிட்டு வருகிறேன் ,என்று கூறியபடி எழுந்து நடக்க ஆரம்பித்த அவள் ,ஒரு வினாடி நின்று திரும்பி  “இளவரசர் வந்துவிட்டாரா”? என்று கேட்டாள்.

தெரியவில்லை தேவி, காலை நான் வந்தது முதல் இளவரசரை காணவில்லை .

அவளுடைய பதிலுக்கு எந்த மறுமொழியும் சொல்லாமல், அந்த அந்தப்புரத்தில் மற்றொரு புறம் இருந்த  சிறிய தடாகம் போன்ற அமைப்பிற்கு  சென்றாள் . அந்தத் தடாகம் முழுவதும் , இவளை எதிர் நோக்கி மிக வெதுவெதுப்பான  நறுமண நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது  . இவள் சென்றதும் இரண்டு சேடிப் பெண்கள் அவளது உடல் முழுவதும் வாசனை திரவியங்களை பூசி பணி செய்தனர் . நீரினுள் இறங்கிய பிறகு, மீண்டும் கணவனின் எண்ணம் வந்தது , இந்த நீர் எவ்வளவு இதமாக இருக்கிறது. இந்த மிதமான சூட்டை அவர் மிகவும் விரும்புவார் , இப்போது நம்முடன் அவரும் சேர்ந்து இந்த நீராடலில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும். அந்த எண்ணமே அவளை மிகவும் வெட்கம் கொள்ளச் செய்தது . குளித்து முடித்து கரை ஏறினாள்.  அப்பொழுது இளவரசரின் தேரோட்டி அவளை பார்க்க விரும்புவதாக தகவல் வந்தது .

இளவரசரிடம் இருந்து ஏதாவது செய்தி வந்திருக்கும் புள்ளி மானின்  துள்ளலோடு குதித்து எழுந்து ஓடினாள்.




‘ வணங்குகிறேன் அரசி ‘

சொல்லுங்கள்.தாங்கள் கொண்டு வந்த செய்தி என்ன?.

அரசி அவர்களே, நான் கொண்டு வந்த தகவலை ஏற்கனவே மகாராஜாவிடம் தெரிவித்து விட்டேன். ஆனால், இளவரசர் தங்களிடம் சேர்ப்பிக்க சொன்ன பொருளை தங்களிடம் ஒப்படைக்க வந்தேன் .

இளவரசர் என்னிடம் ஒப்படைக்க என்ன தந்தார் ;  கண்கள் இரண்டிலும் ஆர்வம் மின்ன  , காதல் கொப்பளிக்க, அவர் தந்த பொருளை வாங்கிக் கொள்வதற்கு பரபரத்தன அவளது கைகள் .

தேரோட்டியோ, மிகவும் கவலையாக அவளை பார்த்தபடி, தன் கையில் இருந்த சிறிய  துணி மூட்டையை அவள் கைகளில் தந்தான் .

பரபரப்புடன் அவள் அந்த மூட்டையை பிரிக்க மூட்டைக்குள் இருந்த பொருள் அவளை திகைப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது. தலைசுற்றியது , நா வறண்டது  , கண்கள் பிதுங்கின, செவி கேட்க மறந்தது ,ஒட்டுமொத்த உலகமே இருண்டு போனது.




அவள் தள்ளாடி விழாது இருக்க  , அருகிருந்த சேடிப் பெண்கள் அவளை தாங்கிக் கொண்டனர் . அவள் கையில் இருந்த சிறிய துணி மூட்டை நழுவி தரையில் விழுந்தது.அதில் இருந்த , வழித்து எடுக்கப்பட்ட இளவரசனின் தலை முடியானது அறை எங்கும் பரவ ஆரம்பித்தது .

அழுது , அழுது அவளுடைய கண்கள் வீங்கி இருந்தன. இதுபோன்ற ஒரு நிலைமை என்றாவது ஒரு நாள், தன் வாழ்வில் நடக்கும் என்பதை அவள் எதிர்பார்த்து தான் இருந்தாள். இருந்தாலும் அது நடக்கும் பொழுது, அதை தாங்கிக் கொள்ளும் மன தைரியம் தான் அவளுக்கு இல்லை.

அவளின் திருமணத்தின் போதே சுற்றத்தாரும் ,தோழியரும், இன்ன பிறரும் அவளிடம் கூறத்தான் செய்தனர். இளவரசன் பிறந்த ஜாதகத்தில் அவன் துறவு பூண வேண்டும் என்பது தீர்க்கமாய் இருக்கிறது என்று. எனவே, திருமணம் செய்து கொள்ள யோசித்துக் கொள்ளும்படியும் கூறினார் . இருந்தாலும்  சொந்த மாமன் மகனான இளவரசன் மீது என்றுமே அவளுக்கு காதல் உண்டு .ஒருவேளை ,அவன் துறவை மேற்கொள்வது ஆனாலும், அதற்கு  எந்த ஒரு மறுப்பையும் தான் தெரிவிக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடன் தான் அவன் கரம் பிடித்தாள்.

இதோ இத்தனை ஆண்டுகள் தாம்பத்தியம் ,தித்திக்க, தித்திக்க அதன் பரிசாக  இதோ என் குழந்தை , பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தை ராகுலன் தாயின் நிலை அறியாது மீண்டும் சிரித்தான் .

நாட்கள் உருண்டோடின , சென்றுவிட்ட இளவரசனை தேடி நாடெங்கும் தூதுவர் கூட்டங்கள் கிளம்பி இருந்தது . ஆனால், எக்காரணம் கொண்டும் யாரும் அவருக்கு எந்தவிதமான தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதில் அவள் மிகவும் உறுதியாக இருந்தாள்.
எனவே, இளவரசனை நெருங்காது தள்ளியிருந்த கண்காணித்தனர்.




அவளின் தாய் தந்தையரும் ,ஏன் மாமன் மாமியும் கூட அவளை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார் .அவள் இன்னமும் இளமையாகவே இருக்கிறாள், அவளுக்கு உண்டான வாழ்நாள் இன்னும் நீளமானதாக இருக்கிறது. எனவே, அவளுக்கான ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி ,அவர்கள் அனைவரும் அவளை எவ்வளவோ கேட்டுக் கொண்டனர் .

எட்டுத்திக்கும் உள்ள அத்துணை தேசத்து ராஜாக்களும், இப்பொழுதாவது , இந்த பேரழகி தனக்கு மனைவியாக வந்து விட மாட்டாளா , என்ற ஏக்கத்தில் அவள் காலடியில் காத்துக் கிடந்தனர் . அத்தனையும் வேண்டாம் , என்று ஒரே வார்த்தையில் உதறித் தள்ளினாள்.

தன் குழந்தைக்காக வாழ தன்னை பக்குவப்படுத்திக் கொண்டாள்.

குடிமக்கள் அவள் காலில் வந்து விழுந்தனர் , ‘ அரசி ‘ இளவரசர் எங்களை கைவிட்டார் , நீங்களாவது எங்களுக்குத் துணை நின்று, அரசன் ராகுலனை  உருவாக்கி எங்கள் நலம் காக்க எங்களுக்கு அருள வேண்டும். குடி மக்களின் நலனை காக்கும் பொறுப்பும் தன்மீது வந்திருப்பதை தெளிவாக புரிந்து கொண்டாள் .




சிறுவயது முதலே தன் மகன் துறவறம் மேற்கொண்டு விடக்கூடாது என்பதற்காக  அவனை அரண்மனை சுகபோகங்களில் அமிழ்த்தி, எப்படியாவது குடும்ப வாழ்க்கைக்கு திருப்பி விட எண்ணிய மாமனும், மாமியும் தன் எண்ணம் ஈடேறாது போனதனால்  உடைந்து போயிருந்தனர். அவர்களை தேற்றும் பொறுப்பும் தன்னைச் சார்ந்ததே என்பதை உணர்ந்திருந்தாள்.

எனவே, அவள் எதைக் கண்டும் ஓடிவிட தயாராயில்லை துணிந்து போராட ஆரம்பித்தாள்.

அப்பப்பா!! அந்தப் போராட்டத்தில் தான் எத்தனை இன்னல்கள். நாடாளும் ராணியாக போய்விட்டாலும், ஆண் துணை இல்லாத பெண் ஒருத்தியை,அவ்வளவு எளிதில் வாழ விட்டு விடுமா  இந்த ஆண் சமூகம்.

தந்தை வயது ஒத்த அமைச்சர் முதல், தமையன் வயது ஒத்த  சேவகன் வரை , சேனாதிபதி முதல் சாமானியன் வரை அனைவரும் இவளை பார்த்த பார்வை தான்  எவ்வளவு கொடியது.

என் இளமையும், எழிலும், வனப்பும் உங்களை இவ்வளவு தொந்தரவு செய்கிறதா ?.அது அப்படியாக இருந்தால், இந்த நாட்டிற்கு பேராபத்து.

உடனடியாக ஒரு முடிவிற்கு வந்தாள்.  தன் உடலை அழகு படுத்திய ஆடைகள் அலங்காரங்கள் நகைகள்  அனைத்தையும் துறந்தாள். சுவை ஏதுமற்ற  ஒரு வேளை உணவை மட்டுமே ஏற்று உண்டாள்.

அரண்மனைக்கு உள்ளேயே ஒரு குடிசையை அமைத்து பிக்குணியாகவே  வாழ்ந்தாள்.

என்னவரே, நீங்கள் எதையெல்லாம்  துறந்தீர்களோ, அதையெல்லாம் நானும் துறந்து விட்டேன். ஆனால், அன்பே என் முகம் கண்டு ஒரு முறை கூட  தாங்கள் என்னை பிரிந்து செல்வதை சொல்லியிருக்கலாமே. தங்கள் தவ வாழ்வை கொடுத்து விடவா போகிறேன் நான்.




காதல் வாழ்வு பறிபோன சோகமும், துக்கமும்  மெது மெதுவாக அவளை விட்டு விலகலாகின. எதிலும் ஒரு நிதானம். எதிலும் ஒரு தெளிவு. நேர்கொண்ட பார்வை. கருணை வழியும் கண்கள். ஒளிபொருந்திய உடல் மெல்ல மெல்ல ஒரு ஒளிவட்டம் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

12 ஆண்டுகள் உருண்டோடி இருந்தது.

ஒரு நாள் தகவல் வந்தது புத்தர் வருகிறார்.” ஆம் ஞானம்”, பெற்று திரும்பி வருகிறார் ஏராளமான சீடர்களை கொண்டு வருகிறார். பொதுமக்கள் அனைவருக்கும், “ஆன்மீக ஞானத்தை” அள்ளித் தருகிறார். தற்போது தன் மனைவி “யசோதாராவை” காண கபிலவஸ்து நோக்கி வருகிறார்.

“கபிலவஸ்து” நகரமே காத்துக் கிடந்தது. ‘சித்தார்த்தனாக சென்று  ‘புத்தனாக’ திரும்பி வரும் இளவரசனை காண்பதற்காக.

அப்பொழுதும், யசோதரா பரபரப்பு அடையவில்லை. நிதானமாகவே இருந்தாள். நாட்டுக் குடிமக்கள் அனைவருக்கும் ஞானத்தைப் போதித்து,, நாட்டின் அரசரை சந்தித்து ,, தான் பெற்ற மகனை பார்த்த பிறகு, கடைசியாக யசோதராவை பார்க்க வந்தார் புத்தர்.

 முழுமையாய் மாறிப் போயிருந்த கணவனை கண்டால் யசோதரா.  முழுமையான ஞானத்தை அடைந்த புத்தர் ஒளிவட்டம் பெற்றவராய் விளங்கினார்.

சுவாமி, நள்ளிரவில் தாங்கள் இந்த பேதையை பிரிந்து சென்ற தன் காரணத்தை நான்  அறியலாமா?.

“நான் ஞானத்தை தேடி சென்றேன்”.

ஏன்? தாங்களால்  இந்த அரண்மனைக்குள் இருந்தபடி, அந்த ஞானத்தை பெற முடியாதா?..

யசோதரையின் இந்த கேள்விக்கு புத்தரிடம் பதில் இல்லை.

சுவாமி இவர்கள் உங்களை  புத்தர் என்று அழைக்கிறார்கள் அப்படி என்றால் என்ன அர்த்தம்?.

அறிவாளி, ஆன்மீக, ஞானம் பெற்றவன் ,உலகம் அறிந்தவன், உன்னதமானவன்.




யசோதரை ஒரு சிறிய புன்னகையுடன்,  நாம் இருவருமே ஒரு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டோம். நீங்கள்  பெற்ற ஞானத்தால்,  இந்த உலகம் முழுவதும் ஆன்மீக ஒளியை பரப்பி வருகிறீர்கள். ஆனால், நான் கற்றுக்கொண்ட பாடம் பெருமளவு  இந்த உலக மக்களை சென்றடையாமல் போய்விட்டது.

“நீ என்ன பாடம் கற்றுக் கொண்டாய்”?.

“தன்னம்பிக்கை உடைய தைரியமான பெண், தன்னளவில் முழுமை அடைய; யாருடைய உதவியும் தேவையில்லை”. அவளே முழுமையானவள்.

       இப்பொழுது புத்தர் புன்னகைத்தபடி, அவளிடமிருந்து விடை பெற்றார்.

             நல்ல மனைவி, பாசம் மிகுந்த தாய், சிறந்த மருமகள் மக்கள் நலம் பேணும் நேர்மையான அரசகுல பெண், எப்போதும் எங்கும் தன் கண்ணியத்தை தவற விடாத பெண் யசோதரா. யசோதரையின் ஒத்துழைப்பு இல்லாது போயிருந்தால் இந்த உலகத்திற்கு புத்தர் கிடைத்திருக்க முடியாது.




What’s your Reaction?
+1
11
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!