Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே -10

10

 

” ஏய்…சின்னப்பாப்பு ப்ளீஸ்டி இந்த ரூமை எனக்கு கொடுத்துடுடி ” அமிழ்தினி கெஞ்ச , கவியாழினி அக்காவை முறைத்தாள் .

 

அக்கா , தங்கை இருவருக்கும் ஆளுக்கொரு அறை மாடியில் உண்டு .அமிழ்தினிக்கு இவ்வளவு நாட்களாக அவள் பயன்படுத்தி வந்த அறையை இப்போது பிடிக்கவில்லை .காரணம் திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு வந்த அபிநந்தன் இந்த ரூமை விட அந்த ரூம் நன்றாக இருக்கிறதே என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டான் .உடனே அமிழ்தினி தங்கையின் அறையை தனதாக்க தலைகீழாக நிற்கிறாள் .

 




” பெரிய பாப்பு இன்னமும் இரண்டு நாட்களில் இந்த வீட்டை விட்டே போகப் போகிறோம் . இப்போது போய் எதற்கு ரூம் மாற்ற வேண்டும் ? ”

 

” ஒரு வாரம் நம்ம அம்மா வீட்டில்தான் இருப்போம் .மாப்பிள்ளை விருந்து இருக்கிறதே …அதோடு அடிக்கடி இங்கே வந்து தங்கத்தானே செய்வோம் ? ஏய் ப்ளீஸ்டி ரூம் மாத்திக்கலாம்டி ” தங்கை நாடி பற்றி கெஞ்சினாள் .

 

கவியாழினிக்கு எரிச்சலாக வந்தது .அப்படியென்ன இவளுக்கு அவள் புருசன் கண் பார்த்து சேவை செய்ய வேண்டியதிருக்கிறது ? சும்மாவே திருமண சடங்குகளை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உரசிக் கொண்டே செய்து கொண்டிருந்த அருகாமை ஜோடி அவளுக்கு எரிச்சலை உண்டாக்கி இருந்தது. இப்போது இது வேறு…

 

அக்காவிற்கு தனது அறையை கொடுக்கக் கூடாதென்ற முடிவிற்கு வந்தாள் .அதற்கு அவளுக்கு வேறொரு காரணமும் இருந்தது.

 

கவியாழினி மாடியிலிருந்து கீழிறங்கி வந்தாள் .வீட்டின் முன்னால் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் உறவினர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் மகிநந்தன் .

 

” ம்க்கும்…” அவனருகே போய் நின்று மெல்ல கனைத்தாள் .

 




” என்னையா சின்னப்பாப்பு ? ” கூடியிருந்தவர்களுக்கிடையே சத்தமாக கேட்டு , அவளது மறைமுக அழைப்பை சந்தைப்படுத்தினான் மகிநந்தன்.

 

கவியாழினி முறைக்க , ” இருங்க மச்சான் .என் பொண்டாட்டி கூப்பிடுறா …என்னன்னு கேட்டுட்டு வர்றேன் ” அவளது அழைப்பை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக்கி விட்டு எழுந்து வந்தான் .

 

” சத்தமில்லாமல் கம்முன்னு வர முடியாதா ? ” உள்ளறைக்கு போனதும் எகிறியவளை வியப்பாகப் பார்த்தான்.

 

” எதற்கு பாப்பு ? நாம் கணவன் மனைவிதானே ? ஒளிவு மறைவாக பேச வேண்டிய காரணம் என்ன ? ஒரு வேளை வெறுமனே பேசக் கூப்பிடவில்லையா நீ ? ” அவனது கண்களில் திடுமென வந்துவிட்ட காந்தம் தன்னை உருவி , ஒட்டிக் கொள்ள அழைப்பது போலுணர்ந்து சற்று தள்ளி நின்று கொண்டாள் . காந்தசக்தி எல்லைக்கு அப்பால் இருந்து கொள்வது நல்லதுதானே !

 

” வ…வந்து நா…நாம் இன்னைக்கே நம்ம வீட்டிற்கு போயிடலாமா ? ”

 

உய்ய்ய்… மெலிதான சீட்டி மகிநந்தனிடமிருந்து .” என்ன பாப்பு…தாலி கழுத்தில் ஏறியதும் கதையே மாறுது ? எப்போது  உன் கூடவெல்லாம் வர முடியாதுன்னு சொல்லப் போகிறாயோன்னு பயந்துட்டிருந்தேன் ”

 

கவியாழினிக்கு அந்த ஐடியாவும் இருந்தது .புகுந்த வீட்டிற்கு கிளம்பும் போது  நீ தாலி கட்டியதற்காக உன் பின்னால் வர வேண்டுமா ? என்று கேட்கலாமென்றுதான் நினைத்திருந்தாள் .ஆனால் அவளது அந்த மாதிரி திட்டங்களுக்கு அமிழ்தினி பெரு இடைஞ்சலாக இருந்தாள் .மறுவீடு போன போதே நந்தன் குடும்பத்தை விட்டு வர அவளுக்கு மனதில்லை .மாடியில் அபிநந்தன் அறைக்கு போனவள் ஆளாளுக்கு மாறி மாறி அழைத்த பின்புதான் மனமின்றி இறங்கி வந்தாள் .

 




இந்த திருமண வாழ்வில் தானெடுக்கும் எந்த முடிவும் , தனது அக்காவின் வாழ்வையும் பாதிக்கும் என்றுணர்ந்தே பெரும்பாலும் வாய் மூடிக் கொண்டிருந்தாள் கவியாழினி.

 

” கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருசன் டைப் பெண் நீ கிடையாதே ” மகிநந்தன் அவள் முகத்தை உற்று நோக்கினான் .

 

” ஆமாம் .இந்த தாலியை காட்டி என்னைக் கட்டிப் போட முடியாது .இப்போது நான் கேட்பதன் காரணம் வேறு ”

 

” ம் …சொல்லு ”

 

” காரணம் சொன்னால்தான் கேட்டதை செய்வீர்களா ? ”

 

” ம் …இப்படி தலைசாய்த்து கொஞ்சினால் மாட்டேனென்று சொல்ல யாரால் முடியும் ? ” சாய்ந்து கிடந்த தலையை இரு கன்னங்கள் பற்றி நேராக்கி அவள் உச்சந்தலையை தன் உச்சியால் முட்டினான் .

 

அவன் என்ன செய்தானென அவள் திகைத்து நிற்கும் போதே அறை வாசலுக்கு நடந்து விட்டவன் , அங்கிருந்து கட்டைவிரலுயர்த்தி அவளுக்கு “டன் ” சைகை காட்டி சென்றான் .

 

இரண்டு நாட்கள் பிறந்தக தங்கலென்ற திட்டம் மாற்றப்பட்டு உடனடியாக மணமக்கள் புகுந்த வீடு செல்வதென்ற திட்டம் பேசப்பட்டது .அரைமணியில் இதனை சாதித்து விட்ட மகிநந்தனை ஆச்சரியமாகப் பார்த்தாள் கவியாழினி .

 




” பெரியவனுக்கு வயக்காட்டை பார்க்கனும் . சின்னவனுக்கு ஆபீஸ் வேலை இருக்கு .என் புள்ளைங்க இரண்டு பேருக்குமே வேலை முக்கியம் .இதுல நாட்கணக்கில மாமியார் வீட்டுல விருந்து சாப்பிட முடியுமா சொல்லுங்கண்ணே ! ” ஆட்சேபம் சொன்ன ஒரு உறவுக்காரரிடம் பேசிக் கொண்டிருந்த நவரத்தினத்தை அலுப்பாய் பார்த்தாள் கவியாழினி .

 

இனி இந்த அம்மாவை வேறு சமாளிக்க வேண்டுமா ?

 

” இதற்கு நன்றி சொல்வாய்தானே ? ” திடுமென பின்னால் கேட்ட குரலுக்கு சம்மதமாக தலையசைத்தாள் .

 

” நிச்சயம் .ரொம்ப நன்றி ” உள்ளார்ந்த உணர்வோடு வந்த நன்றி அவனுக்கு ஏற்புடையதாக இல்லை போலும்.

 

” இதென்ன நன்றி ? கணவனுக்கெல்லாம் நன்றி வேறு விதமாக சொல்லனும் ” என்று அவன் உதடு குவிக்க , கவியாழினி திடுக்கிட்டாள் .

 

” நன்றியை இன்று இரவு சொல் பாப்பு ” அவள் இதுவரை அறிந்திராத வகையில் மகிநந்தனின் குரல் குழைந்தது.கூடவே சற்று அருகே வந்தவனை கொஞ்சம் பயமாக ஏறிட்டாள் .

 

அந்தப் பயத்தில் மகிநந்தனின் நடை தயங்கி நிற்க , வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தவளின் முன் சதுரகிரி வந்து நின்றார்

 

” சின்னப்பாப்பு உனக்கேதும் பிரச்சனையில்லையே ? ”

 

அலைக்கு தப்பி உலையில் விழும் மீனைப் போல் தனை உணர்ந்தாள் கவியாழினி .

 

” இன்றே இங்கிருந்து போவது உன் விருப்பம்தான்னு மாப்பிள்ளை சொன்னார் .ஒரு நாள் கூட நம் வீட்டில் தங்கப் பிடிக்காமல் அப்படி என்ன அவசரம்மா ? ”

 

” ஒன்றுமில்லை .நான் போய் திங்க்ஸ் பேக் பண்ணுகிறேன் ” தனது அறைக்கு ஓடி வந்துவிட்டாள் .

 

அங்கே அவளது அறைக்குள் உரிமையாக அவளது கட்டிலில் அமர்ந்து கொண்டு காலாட்டிக் கொண்டிருந்தான் மகிநந்தன்.

 

” என்ன ? ” எரிச்சலாக கேட்டவளை உற்றுப் பார்த்தான் .

 

” இந்த ரூம் உனக்குப் பிடிக்காதா பாப்பு ? ” அவன் கண்கள் அறையை வட்டமடித்தன.

 





” அப்படி யார் சொன்னது ? ” வெடுவெடுத்து விட்டு , கட்டில் மேல் வைத்திருந்த தனது பயணப்பெட்டிகளை சரி பார்த்து மூடத் தொடங்கினாள் .

 

” ஏன் இந்த சன்னலை மூடியே வைத்திருக்கிறாய் ? ” மகிநந்தன் அந்த சன்னலை நெருங்கி திறக்க படபடக்கும் மனதை அவனுக்கு காட்டாமல் இருக்க , குனிந்து கொண்டாள் .

 

வடக்கு பக்க சன்னல் வாடைக் காற்றை வாரி உள்ளனுப்ப , ” ஆஹா எவ்வளவு காற்று வருகிறது ? இதைப் போய் இப்படி அடைத்து வைத்திருந்தாயே ? ” மகிநந்தன் காற்றை அனுபவித்தபடி சொல்ல , தட் தட்டென்ற நடையோடு போய் சட் சட்டென சன்னல் கதவுகளை அறைந்து சாத்தினாள் .

 

” எனக்கு இந்தக் காற்று ஆகாது .இந்த சன்னலை திறக்கக் கூடாது ” உத்தரவிட்டவளை ஊன்றிப் பார்த்தவன்…

 

” செண்பகத்தை உன்னால் மறக்க முடியவில்லையா பாப்பு ? ” என்றான் .

 

துடிக்கும் இதழ்களை கடித்தபடி அவள் அமைதி காக்க ” அவளை மறக்கத்தான் எங்களையெல்லாம் விட்டு விட்டுப் போனாயா ? ” துருவினான் .

 

” இங்கே பாருங்கள் இப்படி கண்டதையும் பேசினால் உங்களோடு உங்கள் வீட்டிற்கு வர முடியாதென்று விடுவேன் ” விரலாட்டி எச்சரித்தாள் .

 

” சீ …யாரைப் பற்றியோ நமக்கென்ன பேச்சு ? வா பாப்பு ஒரு சின்ன கிஸ் …” கை நீட்டி அழைத்தவனை திக்கித்து பார்த்தாள் .

 

” என்ன சொன்னீர்கள் ? ” சந்தேகமாக கேட்டாள் .

 

” குட்டியா ஒரு முத்தம் கொடுத்துக்கலாம்னு சொன்னேன் ” அழுத்தி சொன்னபடி நீட்டிய கைகளுடன் அவளருகே நெருங்கினான் .

 

” இ…இல்லை வேண்டாம் ”

 




” என்ன வேண்டாம் ? ”

 

” இ…இதெல்லாம் அ…அங்கே …ந…நம்ம வீட்ல போய் பார்த்துக்கலாமே ” அப்போதிற்கு தள்ளிப் போட்டாள் .

 

” ஓ…நீ அப்படி நினைக்கிறாயா ? சரிதான் ” மகிநந்தன்  வெளியேறியதும்தான் அவளால் மூச்சு விட முடிந்தது .

 

ஆனால் அவளது புகுந்த வீட்டில் அன்று இரவு கணவனின் உரிமையுடன் அருகே நெருங்கியவனை தடுக்கும் வகையறியாமல் திகைத்து நின்றாள் .

 

” இது நம்ம வீடு …நம்ம ரூம் …நமக்கான நேரம் …” ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு முத்தமிட்டவனை அழுத்தி தள்ளினாள் .

 

” யாழ் …” அதட்டியவனின் குரலில் நிறைய கோபம் இருந்தது.

 

” இதெல்லாம் இப்போது வேண்டாம் .எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் ”

 

” எதற்கு டைம் ? ”

 

” நம் திருமணம் சரிதானா என்று இதுவரை எனக்கு தெரியவில்லை .எதற்காக என்னை திருமணம் முடித்தீர்களென்றும் புரியவில்லை .நான் என் எதிர்காலத்திற்கு வேறு திட்டம் வைத்திருந்தேன் ”

 

” என்ன மண்ணாங்கட்டி திட்டம் ? அந்த செல்வகணேஷோடு அமெரிக்கா போகும் திட்டம் .அங்கே அவர்கள் வீட்டில் தங்கி அவன் மனைவி வாயில் வறுபட்டுக் கொண்டே இருப்பாயா ? பத்து நிமிடம் அவர்கள் பேச்சை கேட்பதற்கே என்னால் முடியவில்லை .அதை வருடக் கணக்கில் கேட்க துணிகிறாயே ? உனக்கென்ன தலையெழுத்து பாப்பு ? ”

 

” எனக்கு படிக்க வேண்டும் ”

 

” நாளையே நம் ஊர் காலேஜில் சேர்த்து விடுகிறேன் ”

 

” எனக்கு அமெரிக்காவில் படிக்க வேண்டும் ”

 




ஒரு நிமிடம் மௌனமாக இருந்தவன் ” எனக்கு ஆறு மாதங்கள் டைம் கொடு பாப்பு .எனது தொழில்களை கொஞ்சம் வசதி செய்து கொண்டு , நாம் அமெரிக்கா போய்விடலாம். நீ படி ” என்றான் .

 

கவியாழினி விழி விரித்தாள் .” எனக்காக பிறந்த ஊரை விட்டு வருவீர்களா ? ”

 

” ஆறு மாதங்கள் கழித்து நாம் அமெரிக்காவில் இருக்கும் போது இந்தக் கேள்வியை நினைத்துப் பார்த்துக் கொள் ”

 

” ப்ச் …வேண்டாம் ”

 

” என்ன வேண்டாம் ? அடுத்தவரின் வாயில் உன்னை வதைபட விட்டு விட்டு நான் இங்கே இருப்பேனென்று நினைக்கிறாயா ? ”

 

” சித்ரா அண்ணி் பேசியதை ஒட்டுக் கேட்டீர்களாக்கும் ? ”

 

” இல்லாமல் உன்னை அமெரிக்காவிற்கு ஏற்றி விட்டு விட்டு விரல் சப்பிக் கொண்டு நிற்கச் சொல்கிறாயாக்கும் ? இங்கே பார் பாப்பு முன்பு ஒரு முறை உன்னை சிறு அஜாக்கிரதையில் என்னைப் பிரிய விட்டு விட்டேன் .இனியொரு முறை அப்படி நடக்க விட மாட்டேன் ”

 

” விடுங்கள் .நான் எங்கேயும் போகவில்லை ”

 




” அப்போது ஏன் போனாய் ? ”

 

கவியாழினிக்கு மிகுந்த எரிச்சல் வந்தது. ” உங்களால்தான் …நீங்கள்தான் காரணம் .என் மனதைக் கொன்று என்னை ஊரை விட்டு போக வைத்ததற்கு நீங்கள்தான் காரணம் ” கத்தினாள் .

 

மகிநந்தன் அதிர்ந்து நின்றான் .

 

What’s your Reaction?
+1
6
+1
2
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!