Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே- 11

11

 

” உன் அக்கா எழுந்து வந்து விளக்கேற்றி ஒரு மணி நேரம் ஆயிற்று .நீ ஆடி அசைந்து இப்போதுதான் எழுந்தே வருகிறாய் .இதென்ன பழக்கமோ ? ”

 

ஏழு மணிக்கு எழுந்து  கீழே வந்த கவியாழினிக்கு காதில் கேட்ட நவரத்தினத்தின் குரல் அவளது பாட்டி தங்கபுஷ்பத்தை நினைவிற்கு கொண்டு வந்தது .

 

சரிதான் இங்கே இன்னொரு மாமியாரா ? அலுப்பான நினைப்புடன் அமிழ்தினி கொண்டு வந்து கொடுத்த கப்பை வாங்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்து தன் போனை எடுத்தாள்.நவரத்தினம் சட்டென அந்த போனை பறித்தாள் .

 

” போனை பார்த்தாத்தான் காபி இறங்குமோ ? அதை இப்படி கொடு ”

 




” இது காபி இல்லை பால் .நான் காபி குடிக்க மாட்டேன் ” சொல்லிவிட்டு தன் போனை மீண்டும் வாங்க முயற்சித்தாள் .

 

” காபியோ …பாலோ ..பல்லை தேய்ச்சியா இல்லையா ? ” நவரத்தினம் போனை தன் முதுகுக்கு பின்னால் ஒளித்துக் கொண்டாள் .

 

” அதெல்லாம் தேய்ச்சாச்சு , போனை கொடுங்க ஆன்ட்டி .நியூஸ் படிக்கனும் ”

 

” ஓ..போனிலேயே செய்திகளும் படிச்சிடுவாயா ? ”

 

” நான் மட்டுமல்ல .இன்றைக்கு என் வயதுப் பிள்ளைகள் எல்லோரும் அப்படித்தான். கொடுங்க…”

 

இருவரும் போனுக்காக மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க ” அம்மா என்ன இது ?நடுவீட்டில் ஒரு யுத்தமே நடக்கிறது ” கேட்டபடி உள்ளே வந்தான் அபிநந்தன் .

 

” இன்னமும் இவள் குளிக்க கூட இல்லை .அதற்குள் போனை கையில் தூக்கிக் கொண்டு அலைகிறாளடா .அதுதான் பிடுங்கி வைத்தேன் ”

 

” நியூஸ் படிக்கனும் .போனை தரச் சொல்லுங்கள் அண்ணா ” கவியாழினி சொல்ல , இருவரும் விழித்தனர் .

 

” எப்படி அழைத்தாய் ? ” அபிநந்தன் கேட்க , நாக்கை கடித்துக் கொண்டாள் .

 




” என்னையும் ஆன்ட்டி என்றாளடா ” தனது புகாரையும் பதிந்து வைத்தாள் நவரத்தினம்

 

” கவி , அம்மா உனக்கு அத்தை .நான் அத்தான் .இப்படித்தான் அழைக்க வேண்டும் ”

 

” சின்ன வயதிலிருந்து அழைத்த பழக்கம் .திடுமென மாற்றச் சொன்னால் எப்படி ? ” சலித்தாள் .

 

” அதெல்லாம் மாற்றலாம் .ஒழுங்காக உறவை சொல்லிக் கூப்பிடு ” நவரத்தினத்தின் அதிகார வேகத்தில் இனி எப்போதும் ஆன்ட்டியும் , அண்ணாவும்தான் என்ற முடிவுக்கு வந்தாள் கவியாழினி .

 

” இன்னொரு கப் காபி குடிக்கிறீர்களா ? ” பின்னால் குழைவாக கேட்கும் குரல் யாருடையதாக இருக்கும் …? யோசனையோடு திரும்பிப் பார்த்தவள் திகைத்தாள் .

 

அமிழ்தினிக்கு இப்படி ஒரு குரலா ? தேனில் முக்கி சர்க்கரையில் பிரட்டிய பலாவாக மிழற்றியது அவள் குரல் .சேலை முந்தானையை திருகியபடி தலை குனிந்து நின்றிருந்தாள் .ஓரக் கண்ணால் அபிநந்தனை பார்த்துக் கொண்டிருந்தாள் .

 

அவளது இத்தனை பாவங்களுக்கும் அபிநந்தனிடம் எந்த பதிலும் இல்லை .” காலையிலேயே குடித்து விட்டேனேம்மா .வயல்காட்டை பார்த்து விட்டு வந்தது கசகசப்பாக இருக்கிறது .குளித்து விட்டு வருகிறேன் .சாப்பிட்டு விடலாம் ” தவிட்டு மூட்டை சுமக்கும் அவன் பண்ணையாளிடம் போல் பேசி விட்டு மாடியேறினான் .

 

இதென்ன இப்படி இருக்கிறார் ? அக்காவிடம் கேட்க நினைத்து அவளைப் பார்க்க , அவள் தானும் மாடியேறுவதற்கான காரணங்களை மனதினுள் ஆலோசித்தபடி இருப்பதை உணர்ந்தாள் .




” அ..க்க்கா …” லேசாக கூப்பிட்டு அவள் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கும் போதே …

 

” அடுப்பில் என்ன இருக்கிறது அமிழ்தும்மா ? ” நவரத்தினம் கேட்க , ” இதோ பார்க்கிறேன் அத்தை ” அமிழ்தினி அடுப்பிடம் ஓடி விட்டாள் .

 

” வா தம்பி , காபி போடச் சொல்லவா ? ” நவரத்தினத்தின் அழைப்பில் பின்னால் திரும்பாமல் நேரே பார்த்தே அமர்ந்திருந்தாள் .

 

” ம் ” என்றபடி சோபாவில் அமர்ந்து பேப்பரை பிரித்து முகத்தை மறைத்துக் கொண்டான் மகிநந்தன் .

 

முதல் நாள் இரவு அவர்களுக்கிடையேயான வாக்குவாதத்தின் பின் இவள் கோபத்தோடு கத்திய பின் , மகிநந்தன் அதிர்ந்து நின்ற சில நிமிடங்களை பயன்படுத்தி , தான் தூங்கப் போவதாக அறிவித்து விட்டு சோபாவில் முடங்கிக் கொண்டிருந்தாள் .

 

காலை எழுந்த போது மகிநந்தன் தூங்கிக் கொண்டிருக்க , இவள் சத்தமில்லாமல் இறங்கி கீழே வந்துவிட்டாள் .

 

பேப்பரை சிறிது தழைத்த போது , காணக் கிடைத்த அவனது முகத்தில் சிவந்திருந்த கண்களும் , தளர்ந்திருந்த முகமும் இரவு முழுவதும் நாங்கள் ஓய்வெடுக்கவில்லை என அறிவித்தன.கவியாழினி எழுந்து கொண்டாள் .

 

இங்கிருந்து இவனை ஆராய்வதற்கு பதிலாக அடுப்படிக்குள் கூனிக் கிடக்கும் அக்காவின் முதுகையாவது நிமிர்த்தலாம் ..என்றெண்ணியபடி அடுப்படிக்குள்  நுழைந்தாள் .

 

” பெரியபாப்பு எத்தனை மணிக்கு எந்திரிச்ச ? இந்த வீட்டு சேவல் கூட நீ எழுந்த பிறகுதான் கூவினது போல ? ” கேட்டபடி அக்கா சுட்டு வைத்திருந்த வடைகளில் ஒன்றை கையில் எடுத்தாள் .

 

” அதை கீழே வை ” அதட்டலோடு வந்தாள் நவரத்தினம் .

 




அக்கா , தங்கையின் பேச்சை ஒட்டுக் கேட்கிறாரா ? எரிச்சலோடு நவரத்தினத்தை பார்க்க , அவள் அமிழ்தினியை முறைத்துக் கொண்டிருந்தார் .

 

” நல்ல பழக்கங்களெல்லாம் இவளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கவில்லையா ? குளிக்காமல் இப்படி அடுப்படிக்குள் வரலாமா ? ” கவியாழினி  வாயில்  வைக்கப் போன வடையை இரக்கமில்லாமல் பிடுங்கி திரும்ப பாத்திரத்திற்குள் போட்டாள் .

 

” மன்னித்துக்கோங்க அத்தை .இனி நான் சொல்லி தந்து விடுகிறேன் ” அமிழ்தினி கைகளை கட்டி இடை வரை குனியாதது ஒன்றுதான் குறை .

 

அக்காவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளின் தோளில் தட்டியவள் ” அடுப்பை தொட்டுடாதே .குளிச்சுட்டுத்தான் சாப்பிடனும் ” போய்விட்டாள்.

 

” சுத்தமாக என்னை விட இரண்டடி உயரம்  கம்மி இந்த ஆன்ட்டி .இவுங்களை இப்படி நான் கொஞ்சம் பலமாக தட்டினால் தாங்குவார்களா ? சொல்லுக்கா செய்யட்டுமா ? ” பேராசை மின்னும் கண்களுடன் கேட்ட தங்கையின் தலையில் நச்செனக் கொட்டினாள் அமிழ்தினி .

 

” வாயை மூடுடி .முதலில் வெளியே வா ” பின்பக்கத்திற்கு இழுத்துப் போனவள் , ” அத்தை கேட்டதில் என்ன தப்பு ? காலையில் குளிக்காமல் அறையை விட்டு வந்ததே உன் தப்பு .அத்தோடு கிச்சனுக்குள் வேறு வந்து பாத்திரங்களை தொட்டு பாழாக்குகிறாய் ”

 

” பெரியபாப்பு இந்த கட்டுப்பாடெல்லாம் நம்ம வீட்டில் கிடையாதே .சில நேரம் சாப்பிட்டு கூட குளிப்போமே …இங்கே மட்டும் ஏன் இப்படி ? ”

 

” ஐயோ மக்கே ! ” தங்கையை தன்னருகே இழுத்துக் கொண்டு காதில் கிசுகிசுத்தாள் .

” கல்யாணத்திற்கு பிறகு கணவன் மனைவி சேர்ந்து படுத்தால் …அ…அதற்குப் பிறகு இப்படித்தான் .குளித்து நம்மை சுத்தப்படுத்திய பிறகுதான் அடுப்பு , பாத்திரங்களையெல்லாம் தொட வேண்டும் .நீ பால் குடித்தது கூட தவறுதான் ”

 

அக்கா சொல்ல வருவது புரிய ஒரு நிமிடம் முகம் சிவந்து நின்றவள் அந்த மாதிரிதான் எதுவும் எங்களுக்குள் நடக்கவில்லையே என்பதாக பேச வாயை திறந்து விட்டு …

 




” இதென்ன அநியாயம் , இந்த ரூல்செல்லாம் ஆம்பளைகளுக்கு கிடையாதா ? அவர்கள் மட்டும் குளிக்காமல் காபி குடித்துவிட்டு எல்லா இடங்களையும் சுற்றித் திரிவார்கள் .நாம் மட்டும் குளித்து பூஜை முடித்து பவ்யமாக சமைக்க வந்து நிற்க வேண்டுமாக்கும் ? ” என தனது வாதத்தின் திசையை மாற்றிக் கொண்டாள் .

 

தங்கை கேட்பதின் நியாயம் புரிந்தாலும் ” அதெல்லாம் அப்படித்தான் ” என காலம் காலமாக காரணமின்றி பணிந்து போய்விடும் பெண் புத்தியோடு பேசினாள் அமிழ்தினி .

 

” எதெல்லாம் …எப்படி ? ” கேட்டபடி அடுப்படிக்குள் வந்த மகிநந்தன் இயல்பாக ஒரு வடையை எடுத்துக் கடிக்க , பார்த்தாயா எனும் பார்வையை சகோதரிக்கு கொடுத்தவள் ” நீங்கள் இன்னமும் குளிக்கவிலலைதானே ? ” என்றாள் .

 

இல்லை என தலையசைத்தவனிடமிருந்த வடையை பிடுங்கி வைத்தாள் .” குளிக்காமல் இங்கே வரக் கூடாது .எதையும் தொடக்கூடாது ” விரலாட்டி எச்சரித்துவிட்டு நகர்ந்தாள் .

 

என்ன என்பதாக மகிநந்தன் அமிழ்தினியை பார்க்க அவள் அடக்கிய சிரிப்புடன் ” உன் பொண்டாட்டி கிட்டேயே போய் கேள் ” என்றாள் .

 

அறைக்குள் ” இந்த வீட்டில் ஆணுக்கொரு நியாயம் பெண்ணுக்கொரு நியாயமா ? ” கையுயர்த்தி மார் தட்ட தயாராக இருந்தவளை கையமர்த்தினான் .

 

” என்று எப்படி உன் மனதை நான் காயப்படுத்தினேன் .எனக்கு தெரியவில்லை பாப்பு .நீயே சொல் ”

 

” அது…அப்போதெல்லாம் நீங்க அடிக்கடி எனக்கு ஒரு காதலி இருக்கிறாள்னு சொல்லிட்டே இருப்பீங்கதானே ? ”

 

” ஆமாம் அநாவசியமாக என்னை நெருங்க நினைக்கும் பெண்களை திசை திருப்ப அப்படி சொன்னது .அது முழு பொய்யும் இல்லை ”

 




அனுபமா , பவ்யா இன்னும் சில பெண்களின் நினைவு கவியாழினிக்கு வந்து போனது .அவர்களெல்லாம் இவர்களது குழுவோடு இணைந்து கொள்ள ரொம்பவுமே முயற்சித்தவர்கள் .அதன் காரணம் மகிநந்தன் மட்டுமே …

 

” அப்போ ஒரு காதலி இருந்தாள்தானே ? ” கேட்கும் போதே கேள்வியின் பதிலும் அவளுக்கு தெரிந்து விட்டது .அன்று அந்தக் காதலி இடத்தில் அமிழ்தினியை நினைத்திருந்தாள் .இன்று …

 

” இதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமா ? ”

 

கவியாழினியின் மனது படபடக்க தொடங்கியது .மகிநந்தன் அவளை நெருங்கி கைகளைப் பற்றி இழுத்து தன் மீது சாய்த்துக் கொண்டு அவள் உச்சி மீது தலைசாய்த்துக் கொண்டான் .

 

” இருந்தாள் இல்லை இருக்கிறாள் .இப்போது என் கைகளுக்குள் இருக்கிறாள் ” உச்சியில் ஆரம்பித்த அவனது முத்தம் வகிட்டை தாண்டி நெற்றி தொட்டு கண் இமைகளில் பதிந்த போது கண்கள் நீர்த்துளிகளை உதிர்த்தன.

 

” என்னாச்சு பாப்பு ? இது உனக்கு கஷ்டமாக இருக்கிறதா ? ”

 

” ப்ளீஸ் என்னை விடுங்கள் ”

 




யோசனையோடு அவன் அவளை விடுவிக்க சோபாவில் சுருண்டு கொண்டாள் .

 

” நான் கொஞ்ச நேரம் தூங்கப் போகிறேன் ”

 

What’s your Reaction?
+1
4
+1
5
+1
0
+1
1
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!