Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே -5

5

 

தூக்கம் வராமல் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள் கவியாழினி .துரும்பு சுழற்றும் சூறையாய் அவள் மனம் முழுவதும் அலறிக் கிடந்தான் மகிநந்தன்.

 

சை …எழுந்து அமர்ந்து படுக்கையை குத்திக் கொண்டாள் .என்ன வார்த்தை கேட்டுவிட்டான் ? இவன் மொகரையை எனக்குப் பிடித்திருக்கிறதாக்கும் ? நான் …இவனை …வ…வந்து …காதலிக்கிறேனாக்கும் ? பெரிய மன்மதராசா இவன் ! பார்க்கும் பெண்களெல்லாம் இவன் பின்னால் வர , பொருமியவளின் மனக்கண்ணில் , கிண்டலும் , கேலியுமாக மகிநந்தனும் , வெட்கமும் , கூச்சமுமாக அமிழ்தினியும் நின்றிருந்த கோலம் .

 

கட்டிலின் மேலிருந்த தலையணை எதிர்புற சுவரில் மோதி விழுந்தது கவியாழினியின் கோபம் தாங்கி .

 

எதற்கு ? ஏன் ? எப்படி இப்படி நினைத்தான் ? இவன் தலையை வருடிப் பார்த்ததாலா ? தனது சிறுவயது முட்டாள்தனம் நினைவு வர விழிகளை இறுக மூடிக் கொண்டாள் .

 




சிறு வயதில் அவர்கள் தெரு மூலையில் இருக்கும் ஒரு சுமாரான பார்க்தான் , இவர்கள் குழு கூடும் இடம் .அந்த இடத்தில்தான் பாட்டுக்கு பாட்டு , அந்தாக்‌ஷரி , பரமபதம் , தாயக்கட்டை போன்ற விளையாட்டுக்கள் மட்டுமன்றி இவர்கள் பாடங்களையும் படிப்பார்கள் . அவர்கள் குழுவில் நன்றாகப் படிப்பவன் , எல்லா விளையாட்டுக்களும் தெரிந்தவன் மகிநந்தன் மட்டுமே. எனவே அவனே அனைவருக்கும் லீடர் .

 

குழுவின் ஐந்து உறுப்பினர்களில் ஆண்கள் தனியாக வர , அமிழ்தினி , பவித்ரா பெண் குழந்தைகளென்பதால் தனியே வராமல் பவித்ரா தனது தம்பியுடனும் , அமிழ்தினி தங்கை அல்லது தம்பியுடனும் வருவார்கள் . பிள்ளைகள் அனைவரும் அந்தப் பகுதியில் நன்கு அறிந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்  என்பதால் , அந்தப் பக்கத்தினர் அவர்களின் படிப்பு , விளையாட்டுக்களை புன்னகையோடு பார்த்துக் கடப்பர் .

 

அன்றைய விளையாட்டு அந்தாக்‌ஷரி என முடிவாகி , அவரவர் பாட வேலைகளை முடிக்க வேண்டுமென அதட்டிவிட்டு , கவியாழினியின் முதுகில் கொஞ்சம் பலமாகவே ஒரு அறை வைத்தான் மகிநந்தன்.

 

” நேராக நிமிர்ந்து உட்கார் .கூனாதே ”

 

முறைத்தவளின் கண்களுக்கு நேராக விரல்களை குத்துவது போல்  கொணர்ந்து ஆட்டினான் .” முட்டைக்கண்ணி .முறைக்காதே ! கண்ணை நோண்டிடுவேன் .எங்கே காட்டு ” அவள் கை நோட்டை வாங்கிப் பார்த்தவன் அலறினான் .

 

” ஐயோ இதென்ன கொடுமை ! சிவனே என்னைக் காப்பாத்துப்பா .எவ்வளவு பிழை ? ஏன்டி உனக்கு தமிழே வராதா ? ”

 

எல்லோரும் சிரிக்க கவியாழினி நோட்டை பிடுங்கிக் கொண்டு எழுந்து ஓட முயல தோள்களை அழுத்தி அமர்த்தினான் .” எங்கே ஓடுற ? ஒழுங்கா பாடத்தை முடிச்சுட்டு போ ”

 

” ஏய் உட்காருடி .அம்மாகிட்ட சொல்லிடுவேன் ” அமிழ்தினி அதட்ட அடங்கி அமர்ந்து விட்டாள் கவியாழினி .அம்மா சுந்தரி இந்த மகிநந்தன் கட்சி .எப்படியாவது என் மகளை எழுத்துப்பிழை வராமல் தமிழ் எழுத வைத்துவிடுப்பா என இவனிடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பவள் .

 

கவியாழினி அந்த தமிழ் கட்டுரையை பிழை திருத்தி முடித்துப் பார்க்க ,நாய் குதறிப் போட்ட குப்பைமேட்டு இலையென நோட்டுப் பக்கங்கள் காட்சி தர , உன் மூஞ்சி மாதிரியே கரியாய் இருக்கே உன் நோட்டும் எனும் மகிநந்தனின் பேச்சுக் கேட்க விருப்பமின்றி , அடுத்த பக்கத்தை திருப்பி அந்த நாலு பக்க கட்டுரையை மீண்டுமொரு முறை எழுதி முடித்தாள் .

 




” ம் .பரவாயில்லை .தேறிட்ட ” என ஒற்றை விரலால் அவள் தலை தட்டும் போது புன்னகையில் சுருங்கி விரியும் கண்ணோரங்களை நினைத்தபடி திரும்பிப் பார்க்க , மகிநந்தன் அந்த பார்க்கின் , ஓரம் உடைந்த சிமெண்ட் பெஞ்சின் மேல் சரிந்து கண்ணயர்ந்திருந்தான் .

 

அனைவரும் அவரவர் வேலையில் ஆழ்ந்திருக்க , கவியாழினி நோட்டோடு எழுந்து சென்று அவனருகே நின்று பார்த்தாள் .ம்ஹூம் அவன் எழுவதாக இல்லை . லேசாக வீசிய காற்று அவன் தலைமுடியை கலைத்து நெற்றி மீது விசிறி விட்டுச் செல்ல , தன்னிச்சையாய் கையுயர்த்தி நெற்றி முடியை ஒதுக்கி தலை சேர்த்தவளின் கை விரல்கள் அந்த முடிக்குள்ளேயே நின்றிருந்தன சில நொடிகள் .அவனிடம் அசைவு தெரிய , ஓடி வந்துவிட்டாள் .

 

அன்றைய சம்பவத்தைத்தான் இன்று ஞாபகப்படுத்துகிறான் .பாவி …அன்று தூங்காமல்தான் இருந்தான் போலும் .காற்று கலைத்த முடியை ஒதுக்கி விடுபவளிடமெல்லாம் இவன் காதலிக்கிறாயா என்பானாமா ? இவனெல்லாம் நல்ல குடும்பத்தை சேர்ந்தவனா ? சரியான ரவுடி .

 

மற்றொரு தலையணை கவியாழினியின் கோபத்தை சந்தித்தது .தன் தலைமுடி கோதிக் கொண்டவள் அந்த வாசத்தை உணர்ந்தாள் .அன்றைய மகிநந்தனின் தலைமுடி வாசத்தை .மூக்கை சுருக்கி விரட்டினாள் அம் மண சுவட்டை .இன்று மட்டுமல்ல அன்றைய கோதலுக்குப் பிறகு எங்கே எந்த மணத்தை நுகர நேர்ந்தாலும் அவளது நாசி முதலில் உணர்த்துவது இந்த மணத்தைத்தான் .

 

என்ன கண்றாவி எண்ணெயை தேய்த்தானோ ? இல்லை என்ன எழவு க்ரீமோ ? இப்படியா வருசம் வருசமா வாடை வரும் ?

 

சை ! கொஞ்சம் மூக்கை சீந்திக் கொள்ளலாமா ? யோசித்தபடி புரண்டு படுத்தவளின் கண்களில் மூடப்பட்டிருந்த பக்கவாட்டு சன்னல் பட , ஒரு படபடப்பு உண்டாக ஆரம்பித்தது .அந்த சன்னல்  வீட்டின் பின்புறம் பார்க்கும் வகையில் அமைந்தது .அதன் வழியாகத்தான் செண்பகத்தின் கோர மரணத்தை கவியாழினி பார்க்க நேர்ந்தது .இப்போது வந்த நாள் முதல் அந்த சன்னலை இறுக மூடியே வைத்திருந்தாள் .

 




இன்றோ வராத உறக்கம் அவளுக்கு ஏதேதோ பழையவற்றை கிளறி விட்டிருக்க , அன்றைய இரவு முழுவதையுமே விழி மூடாமலேயே கழித்தாள் .

 

விடிந்த பின்னும் வராத உறக்கத்தினால் அதிகாலையே எழுந்து குளித்தவளின் சிவந்து எரிந்த கண்கள் காரணியாய் மகிநந்தனை சுட்ட , தனக்கு வராத உறக்கத்திற்கு அவனை சபித்தபடி கண்ணாடியில் தலை முடி கோதிக் கொண்டவளின் காதுகளில் அவன் குரலே .

 

தலை குலுக்கி பிரமையை ஒதுக்கி அறைக் கதவை திறந்தவளுக்கு , வாசல் நிலையில் சாய்ந்து நின்றபடி ஸ்டைலாக குட்மார்னிங் சொன்னவன் மகிநந்தனே.கண்களை சிமிட்டி தலையை உலுக்கி என அவள் செய்து கொண்டிருந்த சேட்டைகளை புன்னகையோடு பார்த்திருந்தவன் அவள் உச்சந்தலையில் தன் கை பதித்தான் .

 

” ஏய் பாப்பி ! கனவில்லை .நான்தான் .காலையிலேயே வந்துவிட்டேன் ”

 

கதகதத்த உச்சந்தலையை அசைக்காமல் அவன் முகம் பார்த்திருக்க , அவள் முகம் நோக்கி குனிந்தான் .

 

” யோசித்தாயா பாப்பி ? ”

 

” எ…என்ன …? ”

 

” நீ என்னை காதலித்தாய்தானே ? ம் …காதலிக்கிறாய் தானே ? ”

 

அவனது ஒவ்வொரு சொல்லும் பூவை இறுக்கும் வாழைநாராய் மனதை அடைத்தபடி இறங்க பரக்க பரக்க விழித்தாள் .

 




” ஏய் முட்டைக்கண்ணி எதற்கு முழியை இந்த உருட்டு உருட்டுகிறாய் ? ”

 

கவியாழினி தன் உணர்வுக்கு வந்தாள் .தனக்கு மிக அருகே நின்றவனின் பரந்த மார்பில் கை பதித்து தள்ளினாள் .

 

” இல்லை …இல்லை …உளறாதீர்கள் .மரியாதையாக இங்கிருந்து போய்விடுங்கள் .ப்ளீஸ் …ப்ளீஸ் .அக்கா நிச்சயம் வரை கூட என்னை இருக்க விடாமல் விரட்டி விடாதீர்கள் .” கதறலாய் ஒலித்த அவளது குரலுக்கு மகிநந்தனின் முகத்தில் யோசனை வந்தது .மெல்ல தனது கையை எடுத்துக் கொண்டான் .

 

கவியாழினி வேகமாக படிகளில் இறங்கி கீழே ஓடினாள் .விம்மலை அடக்கி அடுப்படிக்குள் நுழைந்தவளின் முன் சுடச்சுட காபி டம்ளரை நீட்டினாள் சுந்தரி .

 

” நந்து மாப்பிள்ளைக்கு போய் கொடும்மா .எனக்கு உள்ளே கொஞ்சம் வேலை இருக்குது ”

 

” அந்த அணில் பிள்ளைக்கு நீங்களே போய் கொடுங்க ” வெடு வெடுத்து விட்டு வீட்டின் முன் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டாள் .

 

அமிழ்தினி தூங்கியெழுந்து வந்து மகிநந்தனை ஆர்ப்பாட்டமாய் வரவேற்பதையும் , சிவரஞ்சன் தனது பிரிய ஹீரோவிடம் வாய் மூடாமல் பேசுவதையும் காற்று வாங்கி வந்து இவள் காதில் கொட்ட , காதுகளை இறுக்க மூடிக் கொண்டாள் .

 

நிச்சயதார்த்த புடவை எடுக்க இவர்களை அழைத்துப் போக வந்தானாம் .அதற்கெதற்கடா காலங்கார்த்தாலே வந்து நின்று கழுத்தறுக்கிறாய் ? அதுவும் கண்டபடி கேட்டுக் கொண்டு ? அவனது கேள்வி நினைவு வர ,உடல் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது .

 

இவன் கேட்டது மட்டும் அப்பாவிற்கு தெரிந்தால் , உடனே இந்தக் கல்யாணம் நின்று விடும் . அப்படி இவனை அப்பாவிடம் மாட்டி விட்டாலென்ன ? போனசாக இந்தக் கல்யாணமும் நின்று விடுமே ! கண நேர தன் பிசகு நினைப்பிற்கு தன்னைத் தானே கேவலமாக திட்டிக் கொண்டாள் .

 




கவியாழினி புடவை கடைக்கு வர நிர்தாட்சண்யமாக மறுத்து விட , சதுரகிரி தொழில் விசயமாக முன்பே வெளியே சென்றிருக்க ,மற்றவர்கள் அனைவரும் திருச்சியின் பெரிய ஜவுளிக் கடைக்கு கிளம்பி சென்றனர் .அவளது கதறலின் போது வந்த யோசனை முகபாவம் மாறாமலேயே கிளம்பிச் சென்றான் மகிநந்தன்.

 

அனைவரும் திரும்பி வரும் போது இருட்ட ஆரம்பித்திருந்தது. அப்போதும் வீட்டிற்குள் வந்து சட்டமாக அமர்ந்திருந்தவனை மனதிற்குள் இரைந்தாள் .

 

ஏன்டா உனக்குன்னு வீடு கிடையாதா ? எங்கள் வீடே கதியென்று கிடக்கிறாயே ? இப்போதே இப்படி என்றால் இவன் இந்த வீட்டு மாப்பிள்ளை ஆன பிறகு வீட்டை விட்டு நகர்வானா என்ன ?

 

கவியாழினிக்கு அமெரிக்கா சென்று படிக்கும் எண்ணம் வலுத்துக் கொண்டே வந்தது.

 

” கவி என்னம்மா இது ? ” தாங்கலான குரலோடு அடுப்படியிலிருந்து வந்தாள் சுந்தரி .

 

” குழம்பு , ரசம் , பொறியல் எல்லாம் செய்து வைத்துவிட்டேன் .சாதம் மட்டும் சூடாக மதிய நேரம் வைத்து உன்னையும் , அப்பாவையும் சாப்பிட சொன்னேனே ? நீ சமைக்கவில்லையா ? ”

 

” ஷ்…மறந்துட்டேன் அம்மா .கொஞ்சம் டயர்டாக இருந்தது .தூங்கிவிட்டேன். எனக்கு நூடுல்ஸ் போட்டு சாப்பிட்டேன்மா .”

 

” அப்பாவுக்கு ? ”

 

” அவர் …தெரியலையேம்மா .நான் தூங்கிட்டேன் ”

 

” என்னம்மா ? அவர் நேரம் கெட்ட நேரம் சாப்பிட வருவார் .அந்த நேரத்தில் ஹோட்டலிலும் சாப்பாடு இருக்காது .பட்டினியாகவே போயிருப்பார் .என்ன பெண்ணம்மா நீ ? ” சுந்தரி வருந்தினாள் .

 

” உனக்கு பொறுப்பு வேண்டும் சுந்தரி .பாப்பு சின்னப் பெண்தானே ? அவளை நம்பி நீ ஊர் சுற்ற கிளம்புவாயா ? ” தங்கபுஷ்பம் கோபமாக கத்த , சுந்தரி மௌனமாக உள்ளே  போய்விட்டாள் .

 




” பாட்டி தப்பு என் மேல்தான் .அம்மாவை எதுவும் சொல்லாதீர்கள் ”

 

” உனக்கென்ன தெரியும் சின்னப்பாப்பு ? வீட்டு தலைவன் சாப்பிட்டானா என்ற கவலை கூட இல்லாமல் இப்படி கடை கடையாக சுற்றுபவளைத்தானே சொல்ல முடியும் ? ”

 

” அம்மா ஜாலியாக ஷாப்பிங் போகவில்லை .அக்கா கல்யாண வேலையாகத்தானே போனார்கள் .இதற்காக இப்படி பேசுவீர்களா ? ”

 

கோபமாக பாட்டியுடன் வாதிட்டுக் கொண்டிருந்தவளை புருவம் சுருக்கி பார்த்தபடியிருந்தான் மகிநந்தன்.

 

What’s your Reaction?
+1
6
+1
8
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!