Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே – 1

1

” சம்போ சிவசம்போ …

ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்

ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ ….”

 

பூஜைக்காக தங்க அரளியை பறித்து பூக்கூடையில் நிரப்பிக் கொண்டிருந்த கவியாழினியின் காதுகளில் வீட்டிற்குள்ளிருந்து கசிந்து வந்து விழுந்தது பாடல் சத்தம் .எம்.எஸ்.வி தன் வசீகர குரலால் உச்சஸ்தானியில் பாடிக் கொண்டிருந்தார் .கவியாழினியின் கால்கள் தானே தாளமிட்டன .

 

முன்பெல்லாம் பழைய பாடல்களில்  அவளுக்கு அவ்வளவாக விருப்பமிருந்ததில்லை.ஆனால் விருப்பம் வர வைத்தவன் அவன்தான் .மகிநந்தன் .

 




பாட்டுக்கு பாட்டு , அந்தாக்‌ஷரி போன்ற அவர்களுடைய விளையாட்டுகளில் முழுக்க முழுக்க பழைய பாடல்களையே பாடி அவளுக்கு , இல்லை அவர்கள் குழுவிற்கே அப்பாடல்களை அறிமுகம் செய்து வைத்தவன் .மகிநந்தனின் நினைவு வந்ததும் கேட்கின்ற பாடலில் துள்ளல் அதிகமானது போலொரு உணர்வு அவளுக்கு.

 

அவள் இங்கே செல்வகணேஷிற்கு அப்பாடல்களை அறிமுகம் செய்து வைக்க , இருவருமாகவே பழைய பாடல்களின் விசிறி ஆகிவிட்டனர் .இதோ இப்போது கூட செல்வகணேஷின் அறையிலிருந்துதான் பாடல் ஒலிக்கிறது .

 

” ப‌ல்லாக்கைத் தூக்காதே

ப‌ல்லாக்கில் நீ ஏறு

உன் ஆயுள் தொண்ணூறு

எந்நாளும் பதினாறு.ஊ….” தானும் பாடலை ஹம் செய்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள் .

 

” இந்தாங்க பெரியப்பா ” பூக்கூடையை ராஜகணேஷிடம் கொடுத்துவிட்டு ,

 

” பெரியம்மா ஒரு அரை கப் காபி  ” சமையலறையை பார்த்து கத்தினாள் .

 

” தோ …கொண்டு வர்றேன்மா ” கல்பனா உள்ளிருந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே , மாடிப்படியில் அவளை உறுத்தபடி இறங்கி வந்தாள் சித்ரா.

 

நுனி நாக்கை கடித்துக் கொண்டாள் கவியாழினி .சை …கவி உனக்கு வாய் நீளம்டி .பக்கம் பார்த்து பக்குவமாக பேச வேண்டாமா ? உள்ளுக்குள் தனக்கு தானே உச்சந்தலையில் கொட்டிக் கொண்டிருக்கும் போதே …சித்ரா வாயைத் திறந்துவிட்டாள் .

 

” அத்தை வயதானவர்கள் .இப்படித்தான் அவர்களை வேலை வாங்குவாயா ? உனக்கு இரண்டாவது தடவை காபி வேண்டுமானால் நீயே போய் கலந்து கொள்வதுதானே ? ” இரண்டாவது தடவை என்ற வார்த்தைக்கு சித்ரா கொஞ்சம் அழுத்தம் கொடுக்க , கவியாழினிக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது .

 

ராஜகணேஷ் பூஜையறையிலிருந்து எட்டிப் பார்த்து , என்ன சொல்வதென்று தெரியாமல் தலையை சொறிந்து நிற்க , சமையலறை வாசலில் அது போன்றே கல்பனா .

 

” பாரும்மா உன் வீட்டில் உன்னை எப்படி வளர்த்தார்களோ எனக்கு தெரியாது .என் வீட்டிலெல்லாம் பெரியவர்களை வேலை ஏவக் கூடாது .முடிந்த அளவு அவர்களுக்கு உதவ வேண்டுமென்று சொல்லித்தான் வளர்த்திருக்கிறார்கள் .ஆனாலும் நீ எப்படி …இப்படி இருக்கிறாய் …சே…சே …” தோள்களை குலுக்கிக் கொண்டவளை அழுத்தமாக பற்றி உலுப்பும் ஆசை வந்தது கவியாழினிக்கு .

 




உங்க பேரனுக்கு சாப்பாடு கொடுங்க அத்தை , குளிக்க வைங்க அத்தை , நைட் டிபனுக்கு கேப்பை அடை செய்யுங்க …இப்படி சித்ரா மாமியாருக்கு  இடும் பட்டியல்களை எந்தக் கணக்கில் சேர்க்க ?

 

இது போல் ஏவும் உரிமைகளெல்லாம் இங்கே எனக்கு மட்டும்தான் .நீ இந்த வீட்டுப் பெண் கிடையாது .ஒதுங்கி இரு .இதுதான் சித்ரா கவியாழினிக்கு உணர்த்த விரும்பும் செய்தி .

 

செல்வகணேஷும் , சித்ராவும் கொரோனா காரணமாக தங்களது வேலையை வீட்டிலிருந்து செய்யும் வகையில் மாற்றிக் கொண்டு , அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த போதிருந்தே அந்த வீட்டின் சட்ட திட்டங்கள் மாறிவிட்டன.

 

வீட்டுத் தோட்டத்தில் புதிதாக பதியமிடப் போகும் ரோஜாவின் நிறத்திலிருந்து , அந்த மாத மளிகையில் நெய் கூடுதலாக கால் கிலோ வாங்க வேண்டுமென்பது வரை சித்ராவின் கைக்குள் போய்விட்டது .ஆறே மாதங்களில் இந்த மாற்றம் எப்படி வந்தது ? கவியாழினிக்கு தெரியவில்லை .

 

பொறுத்துக் கொள்ளம்மா ! என்ற பெரியம்மாவின் கெஞ்சல் பார்வையை பார்த்த பின்பு , தன் இதழ்களில் புன்னகையை வழிய விட்டுக் கொண்டாள் கவியாழினி .

 

” சரிதான் அண்ணி .பெரியவர்களை வேலை சொல்லக் கூடாதுதான் .வாங்களேன் நாமே போய் நமக்கு காபியும் , குட்டிப் பையனுக்கு சத்துமாவும் கலந்து எடுத்து வருவோம் ”

 

சித்ராவின் முகம் கோபத்தில் சிவப்பதை பொருட்படுத்தாமல் அவள் கை பிடித்து அடுப்படிக்குள் அழைத்துச் சென்று , ” அதோ அந்த பிங்க் நிற டப்பாவில் இருப்பது சத்துமாவு .கலக்குங்க ” என்றுவிட்டு தனக்கு காபி கலந்தாள் .

 

” செல்வா …” சித்ரா மாடியைப் பார்த்து கத்த , ” என்ன சித்து …?” பதறியபடி வந்தான் செல்வகணேஷ் .

 

” இந்த சத்துமாவு கண்றாவியெல்லாம் எனக்கு கலக்கத் தெரியாது .உங்க அம்மாதான் இங்க வந்த பிறகு அபிஷேக்கிற்கு அதை பழக்கப்படுத்தி விட்டிருக்காங்க .இப்போ என்னையே செய்ய சொன்னால் எப்படி ? எனக்கு ஒன்பது மணிக்கு மீட்டிங் இருக்கு .நான் மீட்டிங்கை பார்க்கவா ? கஞ்சி கரைச்சுட்டு உட்கார்ந்திருக்கவா ?”

 

செல்வகணேஷ் தாயின் புறம் திரும்பும் முன் கவியாழினி முந்திக் கொண்டாள் .” நான்தான் அண்ணா அண்ணியை சத்துமாவு கரைக்க சொன்னேன் ”

 

” ஏன் …? அம்மாவிற்கு வேலையிருந்தால் நீ செய்வதுதானே ? சித்துவிற்கு இருக்கும் வேலையைப் பற்றித் தெரியுமா உனக்கு ? பெண் என்றால் அடுப்படிக்குள் கிடந்து ஆக்கிப் போட என்று மட்டும் நினைத்தீர்களா ? நான் அப்படி ஆணாதிக்கவாதி் கிடையாது .என் மனைவிக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன் .அவள் ஆபீஸ் வேலை மட்டும்தான் பார்ப்பாள் .வீட்டு வேலைகளெல்லாம் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் .நீ வா சித்து .மீட்டிங்கிற்கு நேரமாச்சு ” மனைவியின் கை பிடித்து அழைத்துப் போய்விட்டான் .

 

செல்வகணேஷ் திருமணத்திற்கு முன்பெல்லாம் இப்படி இருந்தவனில்லை .கவியாழினிக்கு பாடம் சொல்லிக் கொடுக்க , உடன் ஷாப்பிங் வர , ஆண் நண்பர்களுடன் பக்குவமாக பழக என உடன்பிறந்தவனைப் போலொரு சிறந்த அண்ணனாகவே இருந்தான் .

 




அதெப்படி இந்த ஆண்களுக்கு தனக்கென ஒரு வாழ்க்கை அமைந்ததும் ,தாய் , தந்தை, உடன்பிறந்தோரையெல்லாம் பக்கத்து வீட்டு ஆசாமிகளாக பார்க்க முடிகிறது ?

 

ஐயா பரந்த மனப்பான்மையாளரே !பெண் இனம் காக்க அவதாரம் எடுத்தவரே ! உன் அம்மாவும், தங்கையும்  பெண்களோடு சேர்த்தி இல்லையாய்யா ?  நாவில் துடித்த கேள்வியை கேட்க விடாமல் தடுத்தது அவள் கை பற்றிய கல்பனாவின் மென் விரல்கள் .

 

கவியாழினி மௌனமாக சத்துமாவை கரைக்க ஆரம்பித்தாள் .இவர்கள் வந்த பின்பு பெரியம்மாவிற்கு இருக்கும் வேலை பளுவை உணர்ந்த பின்பும் , தனக்கென ஒரு வேலை ஏவியதற்கு மனதிற்குள் பெரியம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள் .

 

அன்று இரவு காற்றாட மொட்டைமாடியில் அமர்ந்திருந்த போது …

 

” நீ் …கொஞ்ச நாட்கள் உங்க வீட்டிற்கு போய் இருந்து விட்டு வருகிறாயாம்மா ? ” ராஜகணேஷின் கேள்வியை சில நாட்களாக ,  செல்வகணேஷ்  இந்தியா வந்த சில மாதங்களில் கவியாழினி எதிர்பார்த்தே இருந்தாலும் , அந்த கேள்வியின் பின்னணியில் அவள் மனதில் ஓடிய காட்சிகளால் உடலில் ஒரு திடுக்கிடல் வந்தது.

 

கல்பனா தான் அமர்ந்திருந்த கைபிடிச் சுவரிலிருந்து இறங்கி எதிரே அமர்ந்திருந்தவளை இறுக அணைத்துக் கொண்டாள் .தங்கை மகள்தான் .ஒரே ஒரு மகனோடு இனி பிள்ளை பாக்கியம் இல்லை என்றாகி விட்ட நிலையில் ஒரு வித வெறுமையோடு வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தவர்களுக்கு வரமாய் வந்தவள் .பெண்பிள்ளைகள் இருக்குமிடம் தேவதைகள் வாழுமிடம் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறாள் . பெற்ற மகனைக் கூட கொஞ்சம் தள்ளி வைத்து தங்கள் மொத்த அன்பையும் அவளிடமே கொட்டினர் இருவரும் .அதனால்தானோ என்னவோ கவியாழினிக்கு அவளைப் பெற்றவர்களிடம் போகும் எண்ணமே வரவில்லை .

 

ஆடிப் பெருக்கு விழாவிற்காக தனது பிறந்தகம் சென்றிருந்த கல்பனா துறுதுறுப்பும் , சுறுசுறுப்புமாக அங்குமிங்கும் சுற்றித் திரிந்த கவியாழினியை தங்களுடன் சில நாட்கள் வைத்துக் கொள்ளும் ஆசையில்தான் ” லீவுக்கு பெரியம்மா வீட்டிற்கு வருகிறாயாம்மா ? ” என்றுக் கேட்டாள் .

 

உடனே சம்மதித்த கவியாழினி அப்படியே இவர்களுடன் ஒட்டிக் கொண்டாள் . .பத்தாவது வகுப்பு லீவில் இங்கு வந்தவள் தொடர்ந்து பள்ளி மேற்படிப்பு , கல்லூரி என ஆறு வருடங்களாக இங்கேயே தங்கி விட்டாள் .

 

செல்வகணேஷிற்கு .மூன்று வருடங்களுக்கு முன்பு  திருமணம் முடிந்ததுமே , அமெரிக்க வேலை அமைய மனைவியுடன் அங்கே சென்று விட்டான், மனைவியின் பிரசவத்தை அவள் பிறந்த வீட்டினர் உதவியோடு அங்கேயே பார்த்துக் கொண்டவன்  , இந்த கொரோனா காலத்தில் இங்கே திரும்பியிருக்கின்றான் .

 

பொதுவாகவே அண்ணிகளுக்கு நாத்தனார்களை பிடிப்பதில்லை .இந்த நாத்தனார் தேவையற்ற இடைச் சொருகல் எனும் போது சும்மா இருப்பதற்கு சித்ரா பைத்தியமல்லவே !  மருமகளோ , மகளோ தான் மட்டுமே அங்கே என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள்  .சில வருடங்கள் கழித்து வந்திருக்கும் ,இன்னமும் சில மாதங்களில் திரும்ப அயலகம் போகும் மகன் ,மருமகளை ,  ஒன்றும் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர் கல்பனா – ராஜகணேஷ் தம்பதி .

 




கவியாழினி தன் ஊருக்கு கிளம்ப முடிவு செய்துவிட்டாள் . அக்கா அமிழ்தினிக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் .கவியாழினி இல்லாமல் இந்த விசேஷத்தை அவள் பெற்றோர் நடத்த போவதில்லை .எதை சொல்லி ஊருக்குப் போகாமல்  தப்பிப்பது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க விதி அவளாகவே அங்கே போகும்படி செய்துவிட்டது .

 

பெருமூச்சு ஒன்றுடன் முதுகில் பேக்கை ஏற்றிக் கொண்டு , டிராலியை இழுத்தபடி ரயிலிலிருந்து இறங்கினாள் .பிறந்த ஊரென்றால் தனிதான் போலும் .தரையில் கால் பதித்ததும் ஒரு வகை சிலிர்ப்பு உடலில் ஓடியது .

 

அப்பாவின் கார் எங்கே நிற்கிறது ? கண்களால் அவள் தேடியபடி நின்ற போது

” கார் அந்தக் கடைசி வரிசையில் நிற்கிறது .போகலாமா ? ” என்று பின்னால் கேட்ட குரலில் உள்ளுக்குள் படபடத்து திரும்பிப் பார்த்து திகைத்தாள் .

 

அவள் கண்களை ஊடுறுவியபடி மகிநந்தன் நின்றிருந்தான் .இவனா …? நிச்சயதார்த்த மாப்பிள்ளையே அவளை அழைத்துச் செல்ல வந்து நிற்கிறானே !

 

What’s your Reaction?
+1
14
+1
11
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
13 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!