Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே -2

2

 

” எனக்கொரு காதலி இருக்கின்றாள்

அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ” – மகிநந்தனின் விருப்ப இசை அவனது கார் முழுவதும் நிறைந்திருந்தது .அவனை திரும்பிப் பார்ப்பதை தவிர்த்து காருக்கு வெளியே பார்வையை போட்டிருந்தாள் கவியாழினி .

 

முடிந்தவரை இவனை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்க வேண்டுமென இவள் நினைத்திருக்க ஊருக்குள் கால் வைத்ததும் இவன் சந்திப்பா …?எப்போது … எதைக் கேட்டு வைப்பானோ ? பதட்டத்தில் கழுத்து சங்கிலி டாலர் நுனியை பற்களில் கடித்தாள் .

 

” ஆக வயது ஏறினாலும் இந்தப் பழக்கம் மட்டும் போகவில்லை ம் …? ”

 

பட்டென செயினை கீழே விட்டாள் .கோதுமை மாடல் சங்கிலியில் தாமரை டாலர் வைத்த ஐந்து பவுன் செயின் அது . அவள் வயதிற்கு வந்ததும் , வயசுப் பொண்ணு தங்கமில்லாமல் இருக்கக்கூடாதென பாட்டி தங்கபுஷ்பம் சொல்லி , அப்பா சதுரகிரி செய்து போட்டது .

 




டாலரில் இதழ் விரித்த தாமரை இருக்கும் .நடு இதழில் பருக்கையளவு வெள்ளை வைரம் இருக்க , பக்க இதழ்களில் , சிகப்பு மாணிக்க கற்களும் , அடி இதழ்களில் பச்சை மரகத கற்களுமாக தனது செல்வத்தை பறை சாற்றுவதாக மகளுக்கு மாலை செய்திருந்தார் சதுரகிரி .டாலரின் அடியில் தொங்கும் பச்சை கற்களின் ஒரங்களை தனது இதழோடு வைத்து செல்லமாக கடிப்பது கவியாழினியின் பழக்கம் .

 

இதென்ன கெட்ட பழக்கமென மகிநந்தன் அவளை அடிக்கடி கண்டித்திருக்கிறான் .இதோ இப்போதும் செல்லமாய் ஓர் கண்டிப்பு அவன் விழிகளில் .

 

” எப்போதுமே என்னை மிரட்டிக் கொண்டிருக்கலாமென நினைக்க வேண்டாம் ” எரிச்சல் அவள் குரலில்

 

” மிரட்டுவதற்கான சந்தர்ப்பங்களை கொடுக்கும் போது ….” என இழுத்தபடி ஸ்டியரிங்கை வளைத்தவனின் முகத்தில் வழிந்த புன்னகை அவளது எரிச்சலுக்கு நெய்யூற்றியது .

 

இப்போது எதற்கு இளிக்கிறானாம் ? கவியாழினிக்கு அவன் எப்போதுமே தன்னை அதட்டவும் , மிரட்டவுமாகவே இருந்த பொழுதுகள் நினைவு வந்தது .

 

அமிழ்தினி , மகிநந்தன் , உதயன் , பவித்ரா , சகாதேவன் ஐவருமாக ஒரு நண்பர்கள் குழு .தஞ்சையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய  செல்வாக்கான விவசாயக் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் இவர்கள் .ஓரிரு வயதுகள் ஏற்ற , இறக்கமுள்ளவர்கள் ஒரே பள்ளி , கல்லூரி என பயின்றதால்  சிறு வயது முதலே நட்புடன் இருந்தார்கள் .

 

வீட்டு பெரியவர்களும் தொழில் தொடர்பு , சொத்துக்கள் என போக்குவரத்தில் இருந்ததால் , ஐந்து குடும்ப உறுப்பினர்களும் உறவுக் குடும்பங்கள் போலவே பழகி வந்தனர்.

 

அக்காவின் தோழனாக அறிமுகமான மகிநந்தன் இப்போது உறவுக்காரனாகப் போவதை நினைக்கும் போது …தொண்டையில் உருண்டையாக எதுவோ அடைக்க லேசாக செருமிக் கொண்டாள் .

 

இந்த உறவை  ஆறு வருடங்களுக்கு முன்பே அவள் எதிர்பார்த்திருந்தாள்தானே !

 




” மகி இன்னமும் ரெகார்ட் எழுதலைப்பா .கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் ” அமிழ்தினி கேட்க , உடனே அவளுக்காக எழுத தொடங்குவான் மகிநந்தன் .

 

” உதய்யோட அக்கா வளைகாப்பிற்கு புது மாடல் சுடி வாங்கலாம்னு இருக்கேன் .ஐடியா கொடேன் ” ஐடியா கொடுப்பதோடு திருச்சி வரை அழைத்துப் போய் புது மாடலில் வாங்கியும் கொடுப்பான் .

 

நட்பை தாண்டியும் அவர்களுக்குள் இழையோடிய ஒரு வகை அந்நியோன்யத்தை அந்த பதினாலு வயதிலும் உணர்ந்திருந்தாள் கவியாழினி .அவர்கள் இருவருக்கிடையே தான் அதிகப்படி என்பதையும் உணர்ந்தாள் .அக்கா பால் அக்கறையாய் வழியும் மகிநந்தனின் பாசம் , இவளிடத்தில் அதட்டலாய் நெருடும்.

 

தலையை பின்னிக் கொள் , கூன் போடாமல் நிமிர்ந்து நட , யாராக இருந்தாலும் கண்ணைப் பார்த்து பேசு – இப்படி இவளுக்கான அதிகாரங்கள் வரிசை கட்டும் . என்னை சொல்ல இவன் யார் மாமனா ? மச்சானா ? இவள் மனம் முரண்டும் .

 

ம் …உன் அக்காவை மணம் முடித்து உனக்கு மச்சானாகத்தான் போகிறானடி அவன் , மனம் குரல் கொடுக்க ஏனோ தொண்டையெல்லாம் கசந்து வாந்தி வருவது போலிருந்தது கவியாழினிக்கு .

 

ஒரு சடன் ப்ரேக்குடன் கார் நிற்க ” இன்னமும் டிராவல் சிக்னெஸ் உனக்கு இருக்கிறதா ? ” கேட்டபடி கீழே இறங்கிப் போனான் மகிநந்தன்.

 

காருக்கு வெளியே எட்டிப் பார்த்து இடத்தை கண்டறிந்து , வீட்டிற்கு ஒரு கிலோமீட்டர்தான் இருக்கும் .இவன் வருவதற்குள் இறங்கி ஓடியே போய்விடலாமா ? அபத்தமாக யோசித்து டாலர் கடித்துக் கொண்டிருந்தவள் முன்பு பெரிய கண்ணாடி டம்ளர் நீட்டப்பட்டது .

 

” எலுமிச்சை ஜூஸ் .குடி .வாந்தி வராது .அதற்கு முன் அந்த டாலரை எடுத்து விடு ”

 

கவியாழினி இப்போது மகிநந்தனை நடுரோட்டில் விட்டு விட்டு தானே கார் ஓட்டி செல்லும் யோசனைக்கு வந்தாள் .ஆனால் எப்போதும் போல் அவளது யோசனை யோசனையாகவே இருக்க விரைவிலேயே அவர்கள் வீடு வந்தது.

 

” என் தங்கம் ! ” தனது வயோதிகத்தை பொருட்படுத்தாமல் ஓடி வந்து அணைத்துக் கொண்டார் பாட்டி தங்கபுஷ்பம் .

 

” லீவுக்குன்னு கூட்டிட்டு போயி வருசக்கணக்கா என் பிள்ளையை அங்கேயே வச்சுக்கிட்டாகளே ! இதைக் கேட்க ஒரு நாதி இல்லாம போச்சே ! ” ஒப்பாரிக்கு ஈடான குலில் தங்கபுஷ்பம் புலம்ப , கவியாழினிக்கு சுரீரென்றது .

 




அவள் போய் இருந்தது அம்மாவின் பிறந்த வீட்டு சொந்தத்திடம் , இதனை அம்மாவின் புகுந்தவீடு எப்படி ஏற்றுக் கொள்ளும் ? ஆறு வருடங்களாக பாட்டியிடம் வார்த்தையால் கொத்துப்பட்ட அம்மாவின் நிலை புரிய , மனம் கலங்க நிமிர்ந்தவளின் விழியில் பட்டான் மகிநந்தன் .

 

தப்பு செய்தாய் தானே ? என்பது போன்ற கேள்வி பாவனையில் அவனிருக்க , பார்வையை திருப்பிக் கொண்டாள் கவியாழினி .இல்லை நான் செய்தது சரிதான் .தனக்கு தானே ஒரு நியாயம் உருவாக்கிக் கொண்டாள் .

 

” சின்ன பாப்பு ” விம்மல் கலந்து ஒலித்த அம்மாவின் குரலுக்கு காற்றின் சடுதியுடன் போய் அன்னையை அணைத்துக் கொண்டாள் .

 

” அம்மா …அம்மா …”

 

” பாப்பு நல்லாயிருக்கியாடா ? ”

 

” ம் …நீங்க ? ”

 

” ம் ..ம் …”

 

” அட…அட …என்ன ஒரு பாசமலர் சீன்பா .சீரியலெல்லாம் தோத்து போகும் ” கிண்டல் செய்தபடி மாடியிறங்கி வந்த அமிழ்தினியின் விழிகளும் லேசாக கலங்கியே இருந்தன .ஆவலுடன் அக்கா நீட்டிய கையை பற்றிக் கொண்டாள் கவியாழினி.

 

” கல்யாணப் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் ” என்றாள் .சிரிக்க முயன்றாள் .

 

” அடிப்பாவி ! கல்யாண வாழ்த்தை இப்படி அழுது கொண்டேவா சொல்வாய் ? ” அமிழ்தினி கேட்கவும், அவசரமாக  இதழ் பிரித்து பற்களை காட்டிக் கொண்டாள் .

 

” ஐயோ …கொடுமையே , சிரிக்காதம்மா , எனக்கு வேப்பிலை அடிக்கனும் போல . ஓம்  முருகா  இந்த அல்லல் கொடுக்கும் அடங்கா முனியிடமிருந்து என்னைக்  காப்பாற்று .அடுத்த மாதம் என் நிச்சயதார்த்தம் .நான் நந்தா குடும்பத்து மருமகளா முழுசா போய் சேரனும் ” சூழ்நிலையை இலகுவாக்க அமிழ்தினி கேலி பேச , நந்தா குடும்பத்து மருமகளென்ற  சொற்றொடர் வேலொன்றை கவியாழினியின் நடு நெஞ்சில் பாய்ச்சியது .

 

அவள் விழிகள் தாமாக மகிநந்தனை நாட , அவனோ அமிழ்தினியை பார்த்துக் கொண்டிருந்தான் .அமிழ்தினியின் பார்வையும் அவனிடமே .இருவரது கண்களும் ஒன்றோடொன்று சேதி சொல்ல , எப்போதும் போல் இருவருக்குமிடையே அநாதரவாக தன்னை உணர்ந்தாள் கவியாழினி.

 




என்னை அழைத்து வந்து விடும் சாக்கில் ,அக்காவை சைட் அடிக்க வந்தானா இவன் ? எரிச்சலுடன் அவனை முறைத்திருக்க ,சட்டென இவள் புறம் திரும்பி விட்டவன் என்ன என புருவம் உயர்த்தி் வினவினான் .

 

ஆஹா …உன் புருவ அசைவுக்கு தண்டனிட காத்திருக்கிறேன் பார் ! வெடுக்கென திரும்பியவளின் உடல் மெலிதாய் நடுங்கியது .

 

” சின்ன பாப்பு ” கரகரத்து வந்தது சதுரகிரியின் குரல் .மகளை நோக்கி நீண்ட அவரது கரத்தில் சிறு நடுக்கம் .

 

” அப்பா ” ஓலமிட்ட மனதை அதட்டி அடக்கி புன்னகைத்தாள் . ” நல்லாயிருக்கீங்களாப்பா ? ”

 

” சின்ன பாப்பூஊ ” கத்தியபடி உள்ளே வந்தான் சிவரஞ்சன் .அவளது அண்ணன் .

 

” உன்னைக் கூப்பிட நான் ரயில்வே ஸ்டேசன் போய் காத்துக் கிடந்தால் ,நீ இங்கே வந்து நிற்கிறாயே ? ”

 

” அண்ணா ,நீங்கள்  வந்தது எனக்கு தெரியாதேண்ணா .நான் இவருடன் வந்தேன் ”

 

” மகி அத்தான் .உங்களுக்கு இருக்கும் வேலைகளோடு இவளையும் இழுக்க வேண்டுமா ? நானெல்லாம் எதற்கு இருக்கிறேன் ? ”

 

ஆக , நிச்சயம் முடிவதற்குள்ளாகவே குடும்பமாக உறவு பேச ஆரம்பித்துவிட்டார்கள் …அண்ணனின் உறவு அழைப்பு கவியாழினியின் நெஞ்சைக் கீறியது .

 

” ஒரு பிசினஸ் ப்ரெண்டிற்காக ரயில்வே ஸ்டேசன் போனேன் சிவா .அப்படியே சின்ன பாப்புவை கூட்டி வந்துவிட்டேன் ”

 

வீட்டினர் போல் அவன் தன்னை அழைத்த விதம் எரிச்சலூட்ட , அண்ணன் பக்கம்  திரும்பினாள் .

 




” சிவாண்ணா இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ? எங்கே படிக்கிறீர்கள் ? ”

 

தங்கையின் கேள்விகளுக்கு பதில் சொன்னவன் , மகிநந்தனிடம் ” அத்தான் எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது .சின்ன பாப்புவை ஏதாவது டாக்டரிடம் காட்டுவோமா ? ” என்றான் .

 

” எதற்குடா ? ” மகிநந்தனின் கண்களில் சுவாரஸ்யம் .

 

” பாருங்களேன் வார்த்தைக்கு வார்த்தை ” ங்க ” பவ்யமாக மரியாதை .நம்புங்க அத்தான் , அப்படிப்பட்ட பெண் கிடையாது இவள் .நிச்சயம் ஏதோ ஒரு மனபாதிப்பு இருக்கிறது .முதலிலேயே பார்த்துவிட்டால் ….”

 

” டேய் அண்ணா , எவ்வளவு கொழுப்புடா உனக்கு ? ” சோபா குஷனை தூக்கிக் கொண்டு அண்ணனை கவியாழினி விரட்ட …

 

” ஓவ் …இப்போ பைத்தியம் சரியாயிடுச்சு ” என்றபடி தங்கையிடமிருந்து தப்பி ஓடினான் சிவரஞ்சன் .

 

” என்னது பைத்தியமா ? ” கவியாழினியின் விரட்டல் வேகம் அதிகரிக்க , தன்னைக் கடந்து ஓடியவளுக்கு இடையில் லேசாக காலை நீட்டி இடறி தடுமாற வைத்து , அவள் கைகளை பற்றிக் கொண்ட மகிநந்தன் ” சிவா , பிடிச்சுட்டேன் .தப்பிச்சு போயிடு ” என்றான் .

 

இளஞ்சூடான அவனது கைகளின் வெப்பத்தில் தடுமாறி நின்ற கவியாழினி , இவர்களது அருகாமையை முறைத்தபடியிருந்த அமிழ்தினியை பார்த்ததும் வேகமாக விலகினாள் .

 

What’s your Reaction?
+1
7
+1
10
+1
0
+1
5
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!