Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 16

    16

 

 

 

” பாவம் அவர்களுக்கு அதிக ஆயுளை ஆண்டவன் எழுதவில்லை .இதில் நீங்கள் வருந்த ஒன்றுமில்லை .விடுங்கள் ….” கணவனின் தோள்களை வருடி ஆறுதல் படுத்தினாள் .

அந்த சிறு ஆறுதலே அவனை பலவீனப்படுத்த போதுமானதாக இருக்க சட்டென தளர்ந்து அவள் தோள்களில் சரிந்தான் .




” நான் வைதேகி விசயத்தில் இன்னமும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும் கண்ணம்மா .அதன் பிறகு அந்த அமெரிக்க வேலையே வேண்டாமென இங்கே வந்துவிட்டேன் . அப்பாவின் தொழிலான ஜவுளி வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி …பெரிய அளவில் கொண்டு வந்தேன் .அத்தை இருந்த வரை நித்திகாவை நன்றாக கவனித்தார்கள் .அவளுக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அத்தை இறந்து போக மாமா இங்கே இருக்க மனமின்றி சொந்த கிராமத்திற்கு போய்விட்டார் .அம்மாவிற்கு நித்திகாவை பார்த்துக் கொள்வதில் ஒரு வகை விரக்தி .மகன் சொல்ல சொல்ல கேட்காமல் அவன் வாழ்க்கையை இந்த திருமணம் செய்து வைத்து கெடுத்து விட்டோமென்ற எண்ணம் .நான் மறுமணத்திற்கு உறுதியாக மறுத்து வர, தனது ஆற்றாமையை அடிக்கடி நித்திகா மேல் காட்டினார்கள் .நான் வைதேகியை மறக்க ஒரேடியாக தொழிலில் மூழ்கி போக ….நித்திகா தனிமையாகி போனாள் ….முதலில் அவளை விட்டு விலகி நின்றுவிட்டேனா ….பிறகு என்னால் அவளுடன் சேர முடியவில்லை ….”

” ம் …இனி கவலைப்படாதீர்கள் .அவளை நான் பார்த்துக்கொள்கிறேன் .ஆனால் நீங்கள் இந்த குடியை சுத்தமாக விட்டு விட வேண்டும் ….”

” அதுதான் விட்டு விட்டேனே கண்ணம்மா .என்று உன்னை பார்த்தேனோ …அன்றே இதனை விட வேண்டுமென ….”

அவள் தோள்களில் சரிந்தபடி தன் உதடுகளால் அவளை ஸ்பரிசத்தபடி பேசிக் கொண்டிருந்தவனை கோபமாக தள்ளினாள் .

” நேற்று தத்தி தத்தி நடந்த்தை பார்த்தேனே …அதற்குள் விட்டு விட்டதாக பொய் சொல்கிறீர்களே ….”

” அதென்ன கண்ணம்மா கோப்படும் போது உன் மூக்கு இப்படி துடிக்கிறது …ம் …?! ரசனையாய் அவள் மூக்கை வருடினான் .




மணிபாரதியின் காதல் பார்வையில் உடல் சிலிர்க்க அவன் பிடிக்குள் அடங்கியிருந்த தன்னை பார்த்த கண்ணம்மா , இவன்தானே எனக்குள் தளர்ந்திருந்தான் ….இப்போது நானெப்படி இவனுள் ….எப்போது மாறியது நிலை ….யோசித்தபடி தன்னை அவனிடமிருந்த விடுவிக்க முயன்றாள் .

அவன் ஒரு கையால் அவள் தலையை வருடி சுருண்டிருந்த அவள் கொண்டையை அவிழ்த்து விட்டான் .

” எப்போது பார்த்தாலும் டீச்சரம்மா போஸ் ….ஸ்கூலிலிருந்து வந்து எவ்வளவு நேரமாயிற்று .இன்னமும் வாத்யாரம்மாகவே இருந்தால் …கணவனாக எப்படி பக்கத்தில் வருவது …ம் …? ” அவள் கூந்தலை சீராக்கி முதுகில் பரப்பி  விட்டான் .பின் அவள் கூந்தலுக்குள் கைகளை விட்டு இதமாக அழுத்தி பற்றி முகத்தை தன் கைகளில் ஏந்தியபடி …

” என்னை முழுவதுமாக உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் கண்ணம்மா .இனி உன் முறை …நீ சொல்லு …உன் மனதிலிருப்பதை சொல்லு ….”

அழுத்தமாக தலைக்குள் பதிந்திருந்த கணவனின் கைகள் தந்த மயக்கத்தில் , அப்படியே அவன் தோள்களில் சாய இருந்த கண்ணம்மா இந்த கேள்வியில் முகத்தில் வெந்நீர் கொட்டியது போல் திடுக்கிட்டாள் .

நான் சொல்வதா ….? என்ன சொல்ல …? இவன் ஆண் ….இதோ அவன் முதல் மனைவியின் போட்டோவை மடியில் வைத்துக்கொண்டு அவளுக்காக வருந்தியபடி இரண்டாவது மனைவியை எளிதாக அணைக்க முடிகிறது .ஆனால் நான் பெண் .இது போல் சுதந்திரமாக எனது திருமண போட்டோவை காட்டமுடியுமா …? அதனை இவன் ஏற்றுக் கொள்வானா …?

சற்று முன் சொகுசான மெத்தையாய் தோன்றிய அவனது அணைப்பு இப்போது கடும்பாறையாய் மாறி உறுத்த , சட்டென்ற ஓர் உந்தலில் அவனிடமிருந்து விலகிக்கொண்டாள் .

கதவை நோக்கி நடந்தவளை விடாமல் பின்னிருந்து இடையோடு சேர்த்து அணைத்தவன் ….” கண்ணம்மா என்னடா …? ” என்றான் .

” ஒன்றுமில்லை .பூஜைக்கு நேரமாகி விட்டதே .நான் போய் குளித்து விட்டு வருகிறேன் ….” அவன் கையை பிரித்து விட்டு விட்டு அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .

முதல் மனைவிக்காக படையலிட்டு , தேங்காய் உடைத்து , கற்பூரம் காட்டி வழிபட்டதும் ” ஒவ்வொரு வருடமும் இந்த நாளில்  நான் மிகுந்த மனபாரத்தோடுதான் பூஜை செய்திருக்கிறேன் கண்ணம்மா .ஆனால் இன்று …ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் ….” பூஜை முடிந்து சாப்பிடும் போது அவள் புறம் சாய்ந்து முணுமுணுத்தான் .

ஆமாம் ….உன் பாரத்தைத்தான் நான் ஏற்றிக் கொண்டேனே …மனதிற்குள் நினைத்தபடி வெளியில் புன்னகைத்து வைத்தாள் .




” ஏன்டா நித்தி …இப்போதெல்லாம் நீயும் அம்மாவும் டான்சே ஆடுவதில்லையே …ஏன் …? ” புரியாத கணக்கு ஒன்றை மகளின் மண்டைக்குள் திணிக்க கண்ணம்மா வெகுவாக முயன்று கொண்டிருக்கும் போது …மணிபாரதி அவர்களருகே வந்து அமர்ந்து கொண்டு கேட்டான் .

” ஐ …ஆம்ப்பா ….அம்மா நாம டான்ஸ் ஆடலாமா ….? ” நித்திகா வேகமாக பேனாவை கீழே வைத்துவிட்டாள் .

” ஏய் …கணக்கு போடாமல் டிமிக்கி கொடுக்க உனக்கு ஒரு வழி கிடைச்சிருச்சுன்னு குதிக்கிறாயா …? அடி வாங்க போகிறாய் .ஒழுங்காக கணக்கை போடுடி ….” மகளை அதட்டிவிட்டு …

” ஹலோ சார் நான் கஷ்டப்பட்டு அவளை இழுத்து உட்கார வைத்திருக்கிறேன் ்நீங்கள் வந்து கலாட்டா பண்ணாதீர்கள் .இன்று ஏன் அதற்குள் வீட்டிற்கு வந்தீர்கள் …? ஒன்பது மணிதானே உங்க டைம் .போயிட்டு அப்புறமா வாங்க ….” கணவனை மிரட்டினாள் .

” ம்ஹூம் …இன்று சாமி கும்பிடவென வேலைகளையெல்லாம் சீக்கிரம் முடித்துவிட்டு வந்துவிட்டேன் .அதனால் …இங்கேதான் இருக்க போகிறேன் ….” கைகளை கட்டிக்கொண்டு சோபாவில் பின்னால் சாய்ந்து அமர்ந்து அவர்கள் இருவரையும் குறுகுறுவென பார்க்க ஆரம்பித்தான் .

டீச்சராகவும் முடியாமல் , அம்மாவாகவும் முடியாமல் அந்த பார்வை வட்டத்திற்குள  கண்ணம்மாதான் பாடமெடுக்க முடியாமல்  தவித்து போனாள் .

சை …குழந்தையை பக்கத்தில் வைத்துக் கொண்டு இவன் ஏன் இப்படி பார்த்து தொலைகிறான் …? நித்திகாவை பார்க்க அவள் அந்த கணக்கோடு போராடிக் கொண்டிருந்தாள் .

ரூமுக்குள்ளே போ …என்ற கண்ணம்மாவின் பார்வைக்கு முடியாது என பார்வை பதில் சொன்னான் மணிபாரதி .

ஒன்பது மணியாகவும் மணிபாரதி எழுந்து அறைக்குள் போகவும் , கண்ணம்மா திடுக்கிட்டாள் .இந்த நாட்களில் வருடா வருடம் மணி நிறைய குடிப்பான் .கொஞ்சம் பார்த்துக் கொள் …மீனாட்சி சொன்னது நினைவு வர….கண்ணம்மாவும் வேகமாக அவன் பின்னால் போனாள் .

அவளை கேள்வியாக பார்த்தவனிடம் ” என்ன தீடீர்னு எழுந்து வந்துவிட்டீர்கள் ….? ” என்றாள் .

” எவ்வளவு நேரம்தான் சும்மாவே பார்த்துக் கொண்டே இருக்க முடியும் …? குழந்தை பக்கத்தில் இருந்தாள் .எங்கே என் கைகள் என்னை மீறிவிடுமோ ….என பயமாக இருந்த்து .அதுதான் உள்ளே வந்துவிட்டேன் ….”




சை …தெரியாமல் கேட்டுவிட்டேனே ….வெட்கத்தில் முகம் சிவக்க வெளியே போக போனவளின் கைகளை பற்றினான் .

” உனக்கு ஒன்றும் தோன்றவில்லையா கண்ணம்மா …? ” அவள் கன்னங்களை வருடினான் .

” இல்லை …ஆமாம் …நான் …வந்து …” தடுமாறியவளின் இரு கன்னங்களையும் அழுந்த பற்றியபோது ….

” அம்மா ….” வெளியிலிருந்து நித்திகாவின் குரல் பயமாக கேட்டது .

சட்டென கண்ணம்மாவை விட்டு விலகியவன் …” நித்தி உள்ளே வாடா …” என்றான் .

தயக்கத்துடன் மெல்ல உள்ளே வந்தவள் ….” அப்பா …நீங்க நார்மலாகத்தானே இருக்கிங்க …? ட்ரிங்க் பண்ணலையே ….” என்க …இருவரும் அதிர்ந்தனர் .

பார்த்தாயா உன் கெட்ட பழக்கம் குழந்தையை எப்படி பாதித்திருக்கிறது கண்ணம்மா கணவனை கண்களால் சாட , அவன் குற்றம் குறுகுறுக்க மகளை பார்த்து இரு கைகளையும் நீட்டினான் .தயங்கியபடி அருகில் வந்தவளின் தோள்களை அணைத்துக் கொண்டு ….

” இல்லடா செல்லம் .இதோ அப்பாவை பாரு .நார்மலாக இருக்கிறேன் .அந்த கெட்ட பழக்கத்தையெல்லாம் விட்டு விட்டேன் …”

” நிஜம்மாகவா அப்பா ….” தன் தோள் பற்றி குதூகலித்த மகளின் உச்சியில் பாசமாய் இதழ் பதித்தான் .

” நிஜம்தானடா …இல்லையென்றால் இந்த டீச்சரம்மா விட்டுடுவாங்களா …? ” என்றவனை செல்லமாக முறைத்தாள் .

” நித்தி இன்னும் கொஞ்சநாள் இந்த பழக்கத்தை உன் அப்பா விடாமல் இருந்திருந்தால் , இப்போது லேசாக தெரியும் தொந்தி அப்போது இப்படி இருந்திருக்கும் ….” கைகளால் தன் வயிற்றை சுற்றி உருட்டி காண்பித்தாள் .
” ஏய் ….யாருக்கு தொந்தி …? ” மணிபாரதி கோபமாக அவளை மிரட்ட …

” உங்களுக்குத்தான் …அங்கே பாருங்கள் ….சட்டையை லூசாக விட்டு மறைத்து வைத்திருக்கிறீர்கள் ….”  கண்ணம்மா கண்களால் காட்ட …

” உன்னை ….” என கண்ணம்மாவை அடிக்க வந்த மணிபாரதியின் கைகளை பிடித்த நித்திகா …

” அப்பா …அம்மா சொல்வது உண்மைதாம்பா .உங்களுக்கு லேசாக தொந்தி தெரிகிறது ….” சீரியசான குரலில் சொல்ல, அவன் அவசரமாக குனிந்து தன்னை பார்த்துக் கொண்டான் .

” ஏய் அம்மாவும் , மகளும் சேர்ந்து என்னை கலாய்கறீங்களா ….? ” இருவரையும் அடிக்க வர , நித்திகா ” நான் சாப்பிட போகிறேன்பா ….” கீழே ஓடிவிட்டாள் .

பின்னாலேயே ஓட முயன்ற கண்ணம்மாவின் கையை பற்றி நிறுத்தியவன் …” ஏய் …உனக்கு கொழுப்பாடி .எங்கேடி எனக்கு தொந்தி இருக்கிறது …? ” என்றபடி தனது சட்டை பட்டன்களை அவிழத்தான் .

” மறைத்து வைத்திருக்கிறேனா ….? எங்கேடி …காட்டு பார்ப்போம் ….”




 

மிக லேசாக அப்போதுதான் வர ஆரம்பித்திருந்த அவன் தொந்தியை விளையாட்டாக அடித்து காட்டிவிட்டு போக முயன்ற கண்ணம்மாவின் கைகளை   அழுத்தி பற்றி தன் வயிற்றில் இருத்தினான் .

” இதெல்லாம் ஒரு தொந்தியாடி …” மெல்லமாய் கிசுகிசுத்தபடி அவள் கைகளை அழுந்த பற்றி தன்னை சுற்றி படர விட்டுக்கொண்டு அவள் கழுத்தில் முகம் பதித்தான் ..கண்ணம்மா மெல்ல தன் வசமிழக்க ஆரம்பித்தாள் .

” அம்மா …உங்கள் போனுக்கு ஏதோ மெசேஜ் வந்திட்டே இருக்கு .என்னன்னு பாருங்க ….” கீழேயிருந்து நித்திகா கத்த …

மெசேஜ் …ராமச்சந்திரன் …அவனை நான் எப்படி மறந்தேன் …? கணவனின் காதல் அணைப்பிற்குள்ளேயே கண்ணம்மாவின் உடல் நடுங்க தொடங்கியது .

What’s your Reaction?
+1
3
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!