Serial Stories Sollamal Thotu Sellum Thenral

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 41

41

சுளீரென உன் தேகம் சொல்லும்
இக் காட்டாற்றின் வலிமை,
தோற்றிடும் போதெல்லாம்
தந்து செல்கிறதோர் விழுப்புண்ணை.




விடிய விடிய கொண்டாட்டம் என்பதன் அர்த்தம் மைதிலிக்கு அன்றுதான் தெரிந்தது.. வானில் விடிவெள்ளி தோன்றும் வரை அவளை ஒரு நிமிடம் கூட கண் மூட அனுமதிக்கவில்லை அவள் கணவன்.. விதம் விதமான அனுபவங்களை அவளுக்கு வகை வகையாக சொல்லிக் கொடுத்தான்.. எனக்கும்.. என்று கறாராக கேட்டு வாங்கிக் கொண்டான்.. அவள் தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் தகர்க்கும் வித்தையை தன் விரல்களிலும், உதடுகளிலும் வைத்திருந்தான்..
அந்த இரவு விடிந்த போது ஐம்பது முழு ஆண்டுகள் இணையுடன் கூடி வாழ்ந்த திருப்தியை மைதிலி உணர்ந்தாள்.. இந்த ஒரு இரவு என் வாழ்வு முழுமைக்கும் போதும், தனக்குள் சொல்லிக் கொண்டாள்.. எழுந்து குளித்து முடித்து, தனது பெட்டியில் துணிகளை நிதானமாக அடுக்க தொடங்கினாள்..
“மைதிலி எங்கே கிளம்பிக் கொண்டிருக்கிறாய்..?” கணவனின் கேள்விக்கு..
“என் அம்மா வீட்டிற்கு..” என நிதானமாக பதிலளித்தான்..
“என்ன..?” அதிர்ச்சியோடு எழுந்தவனை சாதாரணமாக பார்த்தாள்..
“இது நாம் முன்பே பேசிக் கொண்டதுதானே..”
“மைதிலி… என்ன இது..?” இப்போது அதட்டிய அவன் குரலுக்கும் அவள் பயப்படவில்லை..
“ஏன் கத்துகிறீர்கள்.. எழுந்து போய் குளித்து விட்டு வாருங்கள்..” அவன் தோள் பற்றி எழுப்பி பாத்ரூமுக்குள் தள்ளினாள்..
அவன் குளித்து முடித்து வரும் போது அவன் அன்று போட வேண்டிய உடைகளை பீரோவிற்குள்ளிருந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்..
கட்டிலை ஒதுக்கி விரித்து, அறையை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்திருந்தாள்..
“நாளையிலிருந்து இதையெல்லாம் நீங்களேதான் செய்து கொள்ள வேண்டியிருக்கும்..”
“ஏய் என்னடி விட்டால் இஷ்டம் போல் பேசிக் கொண்டே போகிறாய்..? இப்போது எதற்காகடி உன் அம்மா வீட்டிற்கு போகப் போகிறாய்..?”




“காரணம் உங்களுக்கு தெரியாது..?” மைதிலியின் கேள்வி குத்தூசியாய் பரசுராமனின் நெஞ்சில் சொருகியது.
“ஏன் மைதிலி.. அதையெல்லாம் மறந்து விட முடியாதா..?” தணிந்து வந்தது பரசுராமனின் குரல்.
“என் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது எப்படி என்னால் மறக்க முடியும்..?” மைதிலியின் குரல் நடுங்கியது..
ஆதரவாக நீண்ட பரசுராமனின் கரத்தை மறுத்து பின்னால் நகர்ந்தாள்..
“தேவையான ஆறுதலை நேற்று இரவே கொடுத்து விட்டீர்கள்.. அதுவே போதும்.. இனி என் வழியை நான் பார்த்துக் கொள்வேன்..”
“நீ எனக்கு மிகவும் அநியாயம் செய்கிறாய் மைதிலி..”
“நீங்கள் எனக்கு செய்ததை விடவா..?”
“நிச்சயமாக உனக்கு அநியாயம் செய்துவிட்டு அதனால் உன்னை விட அதிகம் வருந்தியவன் நான் தான் தெரியுமா..? ஆனால் நீ இப்போது என்னை வாசல் படிக்கல் போல் மிதித்து விட்டு போகிறாய்..”
“உங்களுக்கு மறந்து விட்டதென்று நினைக்கிறேன்.. சில மாதங்களுக்கு முன்பு, உங்கள் காலுக்கு கீழ் படிக்கல்லாய் நான்தான் கிடந்தேன்..”
“பழி வாங்குகிறாயா மைதிலி..?”
“ஆமாம்.. நான் எவ்வளவோ முயற்சித்தும் என் நெஞ்சின் வஞ்சினத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.. அது என்னை அறியாமல் வார்த்தைகளாக உங்கள் மீது வந்து விழுந்து கொண்டே இருக்கிறது.. இந்த நிலை நம் எதிர்கால வாழ்விற்கு ஒத்து வராது.. நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு வாழ்வென்ற பெயரில் ஏதோ செய்து கொண்டு இருப்பதற்கு பதில் நாகரீகமாக பிரிந்து விடுவோம்..”
“ஒருவரையொருவர் அடித்துக் கொண்டா.. அப்படி அடிப்பதற்காகவேனும், சொல்லால் சுருக் சுருக் என்று குத்துவதற்காகவேனும் நீ என் அருகில் இருக்க வேண்டும் மைதிலி..”
“இல்லை அப்படி ஒரு வாழ்வு எனக்கு சாத்தியமில்லை..”
“வந்தனா அவள் கணவனுடன் வாழுவதற்கு எத்தனையோ அறிவுரைகள் சொன்னாயே மைதிலி.. அதில் ஒன்றைக் கூட உனக்கானதாக நினைத்து சொல்ல வில்லையா..?”




“வந்தனா நிலை வேறு.. அவள் நிறைய தவறுகள் செய்திருக்கிறாள்.. அதனால் தன் வாழ்வை பயத்துடனேயே எதிர் பார்த்திருந்தாள்.. நான் அந்த பயத்தை போக்கினேன். ஆனால் நான் மனதளவில் கூட எந்த தப்பும் நினைக்காதவள்.. எனக்கு ஏன் இந்த நிலைமை வர வேண்டும்..?” பேசிக் கொண்டிருக்கும் போதே அழுகை வந்துவிட, மைதிலி கைகளால் முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள்.
பரசுராமன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“அழாதே மைதிலி ப்ளீஸ்.. நீ விடும் ஒவ்வொரு கண்ணீர் துளியும், அமிலமாய் என் நெஞ்சை பொசுக்குகிறது.. ஏற்கெனவே எனக்குள் நானே மிகவும் நொந்து கொண்டிருக்கிறேன்.. நீயும் என்னை நோகடிக்காதே மைதிலி..”
“இந்த நோகடிப்பதெல்லாம் உங்களுக்குத்தான் தெரியும்.. அதன் அரிச்சுவடி கூட அறியாதவள் நான்.. என்னை எப்படியெல்லாம் நினைத்து.. எப்படியெல்லாம் நடத்திவிட்டீர்கள்..?”
மைதிலியின் அழுகை வெடித்து சிதறியது.. ஆறுதலாக அருகிருந்தவனை உதறி தள்ளினாள்..
“தள்ளிப் போங்கள்.. உங்கள் அருகாமையை நான் விரும்பவில்லை..”
“ஏன் மைதிலி.. பிறகு என் நேற்றிரவு என்னுடன் அதனை இணக்கமாக நடந்து கொண்டாய்..?”
“கல்யாண்-வந்தனா வாழ்க்கையை செம்மை படுத்த எனக்கு நீங்கள் உதவினீர்கள்.. அதற்கு நீங்கள் கேட்டதை நான் உங்களுக்கு தருவதாக சொல்லியிருந்தேன்..
நீங்கள் கேட்டீர்கள்.. நான் கொடுத்தேன்.. அவ்வளவுதான்.. நேற்றோடு நம் இருவருக்குமிடையே இருந்த கணக்கு முடிந்து விட்டது..”
பரசுராமன் கைகளைக் கட்டிக் கொண்டு கண்களை இறுக மூடி நின்றான்.. ஐந்து நிமிடங்கள் அவனிடம் எந்த அனசவுமில்லை.. பின் திறந்த அவன் கண்கள் ரத்தச் சிவப்பில் இருந்தன.. உள்ளத்து சங்கடமெல்லாம் கண்களில் தேங்கி விட்டது போல.. ஒரு முழு நிமிடம் மைதிலியின் கண்களுக்குள் பார்த்தான்.. மைதிலி அவன் பார்வையை தயங்காமல் எதிர் கொண்டாள்.
“எப்போதும் உன் சந்தோசம்தான் எனக்கு முக்கியம் மைதிலி.. என்னைப் பிரிந்து வாழ்வதுதான் உனக்கு சந்தோசம் என்றால்..” சற்று நிறுத்தினான்.. அவன் குரல் கரகரத்தது..
“நாம் பிரிந்து விடலாம் மைதிலி..”




மைதிலி அவன் விழியிலிருந்து தன் கண்களை நகர்த்திக் கொள்ளவில்லை.. அப்படியே பார்த்தபடி “சரி” என்றாள்..
“இப்போது நம் வீட்டுப் பெரியவர்களிடம் எதுவும் சொல்லிக் கொள்ள வேண்டாம்.. ஒரு வாரம் அம்மா வீட்டில் ஓய்வெடுக்க போவதாக சொல்லி வைக்கிறேன்.. பின் மெல்ல மெல்ல பக்குவமாக இரு வீட்டினரிடமும் சொல்லிக் கொள்ளலாம்..”
“சரி..”
“நம் பிரிவிற்கு பிறகு நீ தனித்தே இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.. உன் மனதுக்குப் பிடித்த, உனக்கேற்ற வேறொரு துணையை..” பரசுராமன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் தோள்கள் சுரீரென அடி வாங்கியது..
ஆவேசக் காளியாய் நின்றாள் மைதிலி..
“என் வாழ்க்கை.. என் இஷ்டம்.. அதில் எந்த முடிவெடுக்கும் அதிகாரமும் இனி உங்களுக்கு கிடையாது.”
“சரிதான் மைதிலி..” தலையசைத்தவனின் செய்கையில் மிகுந்த வேதனை தெரிந்தது..
“உன் ஆத்திரத்தையும், ஆதங்கத்தையும் என்னால் உணர முடிகிறதும்மா.. எத்தனை முறை இந்தக் கைகள் உன்னை அடித்திருக்கின்றன..” தன் கையை விரித்து பார்த்து ஒன்றோடொன்று குத்திக் கொண்டான்..
“அந்த என் தவறுக்கான தண்டனையை இப்போது கொடுத்துவிடு மைதிலி.. நான் கொடுத்த அடிகளுக்கு பதில் அடி கொடுப்பேனென்று சொல்லியிருக்கிறாய்.. அதை செய்யாமல் போனால் எப்படி..? இதோ நான் தயாராக இருக்கிறேன்.. உன் ஆத்திரத்தையெல்லாம் என் மீது கொட்டிவிடு..” பரசுராமன் கண்களை இறுக மூடி அவள் முன் கைகட்டி தயாராக நின்றான்..
முதலில் திகைத்த மைதிலி திகைப்பு மாறி யோசித்தாள்.. பின் முடிவெடுத்தாள்.. அவனை நெருங்கினாள்..
“கையால் வேண்டாம் உன் கை வலிக்கும்.. ஏதாவது கம்பு எடுத்துக் கொள்..” கண்களை மூடிக் கொண்டே கூறினான்..
“இல்லை இப்போது நான் ஒரு முடிவில் இருக்கிறேன்.. கம்பை எடுத்து வருவதற்குள் என் முடிவு மாறிவிட்டால்..” பேச்சு முடியும் முன்பே அவன் தோள்களில் அடித்தாள்.. அவன் சிறிதும் அசையாமல் அப்படியே நின்றான்..
அவன் தோள்களை தள்ளினாள்.. குத்தினாள், அடித்தாள்.. “காரணமே இல்லாமல் என்னை அடித்த போது, என் உடம்பு வலிக்கவில்லை.. மனது வலித்தது..” மைதிலியின் கண்களிலிருந்து தானே கண்ணீர் வடிந்தது.
அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்.. மீண்டும் மீண்டும் குத்தினாள்..
“எனக்கு உன்னை பிடிக்கலை போடா..” புலம்பினாள்.
“நான் உன்னை வெறுக்கிறேன்..” சொன்னபடி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளின் வார்த்தை தடுமாறி திக்கியது.. கண்ணாடித் தாளாய் கலங்கி பளபளத்துக் கொண்டிருந்தது அவன் விழிகள்..
“கன்னத்தில் அடி மைதிலி.. அதுதான் சுளீரென்று மூளையைத் தாக்கும்..” எப்போதும் கம்பீரமாய் ஒலிக்கும் அவன் குரல் தளர்ந்து தழுதழுத்தது..




மைதிலி அவன் சட்டைக் காலரை பற்றியபடி குரலெடுத்து விம்மியபடி அவன் மார்பிலேயே
சாய்ந்து விட்டாள்.. விக்கலும் விசும்பலுமாய் அவள் முதுகு குலுங்கியது..
கொஞ்சம் தயங்கியவன் மெல்ல கையுயர்த்தி அவள் முதுகினை ஆதரவாக வருடினான்..
“போதும் மைதிலி.. இனி அழக்கூடாது உன் ஆத்திரங்கள் எல்லாம் ஓரளவுக்கு தீர்ந்திருக்குமென்று நினைக்கிறேன்.. இ.. இனி நீ தேர்ந்தெடுத்த உன் வாழ்வு உனக்கு ஓரளவு நிம்மதியை தரும்.. கிளம்புகிறாயா..?”
மைதிலி கண்களை துடைத்துக் கொண்டு அவன் மார்பிலிருந்து எழுந்தாள்.
“ஆமாம்..” உறுதியாக கூறினாள்..
“முதலிலேயே நம் வீட்டினருக்கு அதிர்ச்சியை தரவேண்டாம்.. கடையில் என் வேலைகளை சீக்கிரம் முடித்து விட்டு நானே வந்து உன்னைக் கூட்டிப் போய் உன் அம்மா வீட்டில் விட்டு விடுகிறேன்.. பிறகு என்ன செய்யலாமென பேசி முடிவு செய்து கொள்வோம்..”
அவனது யோசனைக்கு தலையசைத்து சம்மதம் சென்னாள்..
தனது தட்டில் பரிமாற வந்தவளை கையுயர்த்தி தடுத்துவிட்டு தானே போட்டுக் கொண்டு சாப்பிட தொடங்கினான் பரசுராமன்.. மைதிலி மெல்ல பின்வாங்கி சுவரில் சாய்ந்து நின்றாள்..
அருகில் உணவருந்த அமர்ந்திருந்த கல்யாண சுந்தரத்தை உரசியபடி நின்று குனிந்து மென் குரலில் அவன் தேவையைக் கேட்டபடி கொஞ்சலாய் பரிமாறிக் கொண்டிருந்தாள் வந்தனா.. இருவரது முகமும் திருவண்ணாமலை தீபம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது..
அவர்களது அந்நியோன்யத்தில் மனதில் திருப்தி வர அதனை பரசுராமனுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன் அவன் முகம் பார்க்க, அவன் தலையை நிமிர்த்தாமல் தன் தட்டில் கை கழுவிக் கொண்டிருந்தான்.
மைதிலியின் மனம் தவித்தது..
ஐயோ சரியாக சாப்பிட்டானா இல்லையா.. கவனிக்க வில்லையே.. மைதிலி தவித்திருக்கும் போதே அவன் வாசலுக்கு நடந்துவிட்டான்.. தானாக கால்கள் செலுத்த அவன் பின்னாலேயே போனாள் மைதிலி.. வாசல் படியில் நின்றாள்..
பைக்கை வாசலுக்கு நேராக திருப்பி நிறுத்தியவன் அவளை திரும்பிப் பார்த்தான்.
“உன் உடைமைகளை எடுத்துக் கொள்.. தயாராக இரு.. சீக்கிரம் வருகிறேன்..”
“ம்..”




இருவரும் பேச்சின்றி ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றனர்.. பரசுராமன் படியேறி அவளருகே வந்தான்.. அவள் இடை பற்றி அவளை வீட்டின் முன் வராண்டாவிற்கு இழுத்தான்.. இறுக்கி அணைத்தான்..
தனக்கென்றதோர் தனி உடல் இருக்கிறதா என மைதிலிக்கு சந்தேகம் வருமளவு தன்னோடு ஒட்டி இறுக்கி அணைத்திருந்தவன், பட்டென அவளை விலக்கினான்.. தடுமாறியவளை அங்கிருந்த சேரில் தாங்கி அமர வைத்தான்..
“சாரி மைதிலி இனி நமக்கென்று இதுபோல் தனிமை கிடைக்குமோ என்னவோ என்று நினைத்துக் கொண்டேன்.. அதுதான்..” முணுமுணுத்து விட்டு வெளியேறி பைக்கை எடுத்துக் கொண்டு போய்விட்டான்.
மைதிலி வெகுநேரம் அந்த சேரிலேயே உறைந்து போய் அமர்ந்திருந்து விட்டு உள்ளே வந்தாள்.
சீக்கிரமாக வருவதாக சொல்லிச் சென்ற பரசுராமன் அன்று அவனது வழக்கமான நேரத்தை தாண்டி நன்கு இருட்டிய பிறகும் வீடு திரும்பவில்லை..

What’s your Reaction?
+1
8
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!