Serial Stories Sollamal Thotu Sellum Thenral

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 40

40

நிராகரிப்பையும் மிக நேர்த்தியாய்
நிகழ்த்தி செல்கிறாய்..
நிராதரவுகளின் தார் சாலையில்
புளியம்பழ உலுப்பலாய் என் மனம்..




“அவள் அப்பாவை நச்சரித்து நம் திருமணத்தை நிறுத்த போட்ட திட்டத்தை சொல்லப் போகிறாளாம்.. நம் திருமணத்திற்கு முன் என்னை மிரட்டியதை, ரவீந்தர் பற்றி சொன்னதை எல்லாம் எல்லாவற்றையும் கொழுந்தனிடம் சொல்லப்போகிறாளாம்..” மைதிலி கலங்கிய குரலில் கணவனிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள்..
பரசுராமன் எந்த சலனமுமின்றி கண்ணாடியை பார்த்து தலை சீவியபடி உம் கொட்டிக் கொண்டிருந்தான்.
“அத்தனை செலவு செய்து ஏற்பாடு செய்திருந்த திருமணத்தை நிறுத்துவதென்றால்.. அதையும் வந்தனாவின் அப்பா செய்தாரென்று உங்கள் தம்பிக்கு தெரிந்தால் வந்தனா மீது மட்டுமில்லாமல் அவள் குடும்பத்தின் மீதே ஒரு வெறுப்பு வந்துவிடாதா..?”
பரசுராமன் பதிலின்றி பவுடரை தன் உடல் முழுவதும் போட்டுக் கொள்ள தொடங்கினான்.. அவன் முகத்தில் யோசனை தெரிந்தது..
“பி.. பிறகு நம் விசயம்.. கல்யாண் கொழுந்தன் உங்கள் மீது நிறைய மரியாதை வைத்திருப்பவர்.. உங்கள் கல்யாணத்தை நிறுத்த நினைத்து முடியாமல் திருமண வாழ்வையும் கெடுக்க நினைத்ததை, அதையும் வந்து.. அதில் ரவீந்தரையும் சேர்த்து பேசியதை.. இ.. இதையெல்லாம் எந்தக் கணவன் ஏற்றுக் கொள்வார்..?”
பரசுராமன் பீரோவை திறந்தான்.. மைதிலியின் இத்தனை நேர விளக்கத்திற்கும் அவன் வாயே திறக்க வில்லை மைதிலி எரிச்சலாக அவனைப் பார்த்தாள்.. திறந்து கொண்டிருந்த பீரோவை மறைத்து இடையில் நின்றாள்..
“நான் பேசுவதை கேட்கிறீர்களா இல்லை..? வாயைத் திறந்து ம் கொட்டினால்தான் என்ன..? வாய் முத்து உதிர்ந்து விடுமா..?”
பரசுராமனின் முகம் புன்னகையில் மலர்ந்தது.. திறந்து இருந்த பீரோ கதவுக்குள் அவளை இழுத்துக் கொண்டவன்..




“வாயில் முத்து எதுவும் இல்லை மைதிலி.. பார்க்கிறாயா..?” அவள் முகத்தை மிக நெருங்கி தன் முகத்தை கொண்டு போனான்..
மைதிலி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.. அவன் மீசை முடியை தன் கன்னத்தில் உணர்ந்தவள், அவன் மார்பில் கை வைத்து தள்ள முயன்றாள்..
“என்ன செய்கிறீர்கள்..? தள்ளிப் போங்கள்..”
“நீ ஏதோ சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தாயே.. மைதிலி.. அதை தீர்க்கும் கடமை எனக்கு இருக்கிறதேம்மா..”
“நான் என்ன கேட்டால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?” தலையை பின்னால் நகர்த்தி அவன் அருகாமையை தவிர்க்க நினைத்தாள். ஆனால் இம்மியும் பின்னால் நகர முடியாது என்றன.. அவள் பின் நாப்தலின் வாசனையோடு தேய்த்து அடுக்கப்பட்டிருந்த அவனது உடைகள்..
“எவ்வளவு முக்கியமான விசயம் பேசும் போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..?”
மைதிலியின் குரலில் லேசான கரகரப்பு தெரிய பரசுராமன் தன் குறும்பு பேச்சை மாற்றிக் கொண்டான்.
“வந்தனா எண்ணப்படியே நடக்கட்டும் மைதிலி.. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றே நம்புவோம்..”
“அதெப்படி நல்லபடியாக நடக்கும்..? தன் குடும்பத்தை, குடும்பத்தினரை ஏதோ ஓர் வேகத்தில் கெடுதல் செய்ய நினைத்தவளை எந்த ஆணுக்கு பிடிக்கும்..?”
“இதனை நீ அவளிடமே சொல்லியிருக்கலாமே..?”
“சொன்னேன்.. எங்கள் இருவருக்கும் இடையே உண்மையான காதல் இருந்தால் இதெல்லாம் ஒரு பொருட்டாக அவருக்கு இருக்காது என்கிறாள்..”
பரசுராமன் புன்னகைத்தான்.. மைதிலிக்கு பின்னால் கைநீட்டி பீரோவிலிருந்து ஒரு சட்டையை எடுத்து போட்டுக் கொள்ள தொடங்கினான்.




“வந்தனாவை சிறு பெண் என்று நினைத்திருந்தேன்.. அவள் இந்த அளவு யோசிக்கிறாளா..? இனி அவள் வாழ்வை அவள் பார்த்துக் கொள்வாள் மைதிலி.. நாம் கவலைப்பட வேண்டாம்..”
பரசுராமனின் பட்டன் போடத் தொடங்கிய கையை விலக்கி விட்டு தானே அவன் சட்டை பட்டன்களை போட்டுவிட ஆரம்பித்தாள் மைதிலி..
“எனக்கென்னவோ இதுவும் அவளது சிறுபிள்ளைத் தனமாகத்தான் தோன்றுகிறது.. இது சரியாக வருமா..?” பட்டன் போட்டு முடித்து விட்டு அண்ணாந்து தன் முகம் பார்த்து கலக்கமாக கேட்ட மனைவிதான் இப்போது பரசுராமனின் கண்களுக்கு குழந்தையாக தென்பட்டாள்..
அவன் அவள் கன்னங்களை பற்றி தன் அருகே இழுத்து செல்லமாக நெற்றியோடு நெற்றியை மென்மையாக மோதினான்..
“எல்லாம் நல்லபடியாக முடியும்டா.. கவலைப் படாதே.. இன்று கடைக்கு சரக்கு வரும் நாள்.. வேலை அதிகம் இருக்கும்.. சீக்கிரம் போக வேண்டும்..” வெளியேற நகர்ந்தவன் ஆச்சரியத்தில் விழி விரித்தான்..
மைதிலி இரு கைகளாலும் அவன் சட்டையை இறுகிப் பிடித்தபடி நின்றிருந்தாள்.. அவள் கண்கள் ஏதோ யோசனையில் அலைந்தபடி இருக்க, தானிருக்கும் நிலையை அவள் உணரவில்லை எனப் புரிந்தான் பரசுராமன்..
“டேய் செல்லம் சட்டையை விடுடா.. நான் போகனும்..” சற்று பலமாக அவள் கன்னத்தில் தட்ட, மைதிலி தன் பிரமை கலைந்தாள்.. வேகமாக கையை எடுத்தவள்.. “சாரி” என்றபடி கசங்கியிருந்த அவன் சட்டையை தன் கைகளால் தேய்த்து சரிப்படுத்த முயன்றாள்..
“சீக்கிரம் வந்துடுங்க.. நீங்க வரும் வரை என் மனது பாரமாகத்தான் இருக்கும்..”
பரசுராமனுக்குள் குறும்பு வந்து ஒட்டிக் கொண்டது.
“உன் மனபாரம் தீர நான் ஒரு வழி சொல்லவா..?”




மைதிலி என்னவென்ற கேள்வியோடு அவன் முகம் பார்க்க, அவன் குனிந்து துடித்துக் கொண்டிருந்த அவள் இதழ்கள் மீது தன் உதடுகளை அழுத்தமாக பதித்து நிமிர்ந்தான்..
“இனி நான் வரும் வரை என்னை, என் முத்தத்தை மட்டும் நினைத்துக் கொண்டிரு..” சட்டென விலகி வெளியே போய்விட்டான்..
திறந்து கிடந்த பீரோவை மூடத் தோன்றாது, அதே இடத்திலேயே மைதிலி வெகுநேரம் உறைந்து போய் நின்றிருந்தாள்..
அந்த வருடக் கணக்கை மொத்தமாக பார்க்க வேண்டுமென்று ஆண்கள் அனைவரும் அன்று கடையிலிருந்து சீக்கிரமே வந்து விட்டனர்.. உன் முற்றத்தில் அமர்ந்து பெரிய பெரிய கணக்கு நோட்டுகளை வைத்துக் கொண்டு கொடுக்கல், வாங்கல், இருப்பு, வரவு, செலவு என நோட்டுகளில் குறித்துக் கொண்டிருந்தனர்..
வந்தனா மெல்லிய பரபரப்புடன் ஹாலில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.. அவளது நிலை புரிந்த மைதிலி அவளை அடுப்படிக்குள் அழைத்தாள்.
“நன்றாக யோசித்துப்பார் வந்தனா.. இப்போது நீ செய்ய நினைத்திருக்கும் காரியத்தில் ஏதாவது ஒரு இழை தவறினாலும் அதன் பாதகம் உன் பக்கம்தான் திரும்பும்.. பாதிக்கப்பட போவது உன் வாழ்வுதான்..” கடைசி முயற்சியாக திரும்ப அவளிடம் பேசினாள்..
“நன்றாக யோசித்து விட்டேன்.. முடிவும் எடுத்து விட்டேன்..” வந்தனா தன் பிடியிலேயே நின்றான்.
“வேண்டாம்மா.. நம் வாழ்க்கையில் நடந்த எல்லா விசயங்களையும் புருசனிடம் சொல்லியே ஆக வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் கிடையாது..”




“அப்படி பூசி மொழுக எனக்கு பிடிக்கவில்லை மைதிலி.. நான் என் வாழ்க்கையின் கறுப்பு பக்கங்களை என் கணவருக்கு காட்டத்தான் போகிறேன்..”
“எதை காட்டப் போகிறாய் வந்தனா..? யாரிடம்..?” அடுப்படி வாசலில் திடுமென வந்து நின்ற கல்யாண சுந்தரத்தை பார்த்ததும் இரு பெண்களுமே அதிர்ந்தனர்..
“நீ.. நீங்கள் கணக்கு பார்க்க போகவில்லையா.. போங்க கொழுந்தன்..” மைதிலி அவனை அவசரமாக வெளியேற்ற முயல கையுயர்த்தி அவளை நிறுத்தினான் கல்யாணசுந்தரம்..
“தலை பயங்கரமாக வலித்தது அண்ணி.. அப்பாவிடம் சொல்லிவிட்டுத்தான் எழுந்து வந்தேன்.. எனக்கு ஒரு காபி போடுங்க.. நீ என்ன பேச நினைத்தாய் வந்தனா..?”
வந்தனா அதிர்ச்சியிலிருந்து மீண்டு கொண்டாள்.
“நம் எதிர்கால வாழ்க்கையை, அது சீராக அமைவதற்காக என் முன் வாழ்க்கையை பற்றி உங்களிடம் பேச நினைத்தேன்..”
“எனக்கு தெரியாத முன் வாழ்க்கை ஒன்று உனக்கு இருக்கிறதா என்ன..?”
“நிச்சயம் இருக்கிறது..”
“அப்ப சரி.. வா நாம் பேசலாம்..” மைதிலி கொடுத்த காபியை ஒரு கையில் வாங்கிக் கொண்டவன், மறு கையை வந்தனாவை நோக்கி நீட்டினான்.. வந்தனா தயங்காமல் அவன் கையை பற்றிக் கொண்டாள்.
“வா மொட்டை மாடியில் போய் பேசலாம்.. காற்றாட அமர்நதாள் என் தலைவலி குறையும்..” நிலவும், இருளும், குளிருமாக இருக்கும் மொட்டை மாடி மன பாரத்தைக் குறைக்குமென கல்யாணசுந்தரம் நினைத்தானோ என்னவோ வந்தனாவின் கையை பற்றியபடி மொட்டை மாடிக்கு ஏறினான்..
அவர்கள் போனதும் மைதிலி இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்.. மகாராணி போய் படுத்துவிட, ஆண்கள் உட்கார்ந்து கணக்கு பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு மூன்று முறை போய் எட்டிப் பார்த்து விட்டு வந்தாள்.. இவர்கள் இப்போதைக்கு முடிக்க மாட்டார்கள் போலவே.. தவித்தபடி இருந்த போது, பரசுராமன் வந்து விட்டான்..
“எதற்கு இத்தனை டென்சன் மைதிலி..?”
“வந்து விட்டீர்களா..?” வேகமாக அவனருகில் ஓடினாள்..
“நீ திரும்ப திரும்ப வந்து எட்டிப் பார்க்கவும் அப்பா மீதம் கணக்கை நாளை பார்த்துக் கொள்வோமென்று அனுப்பி வைத்துவிட்டார்.. இப்போது நீ ஏன் இப்படி தவித்துக் கொண்டிருக்கிறாய்..?”
“கல்யாண் கொழுந்தனும் வந்தனாவும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. எனக்கு பயமாக இருக்கிறது..”




“எதற்கு பயம்..? அவர்கள் பேசி தெளிந்து வரட்டும்.. நாம் போய் படுக்கலாம் வா..”
“ம்ஹூம் அவர்கள் வந்த பின்தான் நான் வருவேன்..” மைதிலி ஹால் சோபாவில் அமர்ந்தவிட, பரசுராமன் வேறு வழியின்றி டிவி போட்டுக் கொண்டு தானும் அவளருகில் அமர்ந்தான்..
இரண்டாவது நிமிடமே, அவன் மடியை ஒற்றை விரலால் சுரண்டினாள் மைதிலி..
“என்னங்க எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது.. நாம் மெல்ல மேலே போய் பார்க்கலாமா..?”
பரசுராமன் அவளை விநோதமாக பார்த்தான்.
“புருசன் பொண்டாட்டி பேசிக் கொண்டிருக்கும் போது நாம் எப்படி அங்கே..?”
மைதிலி அவன் நாடியை பிடித்து கெஞ்சலாக கேட்டாள்..
“சண்டை எதுவும் போட்டுட்டு இருந்தாங்கன்னா நாம் போய் சமாதானப்படுத்தலாமே.. மேலே மேலே வார்த்தை வளராமல் தடுக்கலாமே..”
பரசுராமன் தலையசைத்தான்.. எழுந்து கொண்டான்.. இருவரும் சத்தமின்றி மாடிப்படி ஏறினர்.. அங்கே வந்தனாவின் அழுகை சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.. கொஞ்சம் பதட்டமாக இருவரும் எட்டிப் பார்க்க மொட்டைமாடி கைப்பிடி சுவரில் அமர்ந்து வந்தனா அழுது கொண்டிருந்தாள்.. அவளது அழுகையை பார்த்தபடி கல்யாணசுந்தரம் நின்றிருந்தான்.
உடனே அங்கே போக எட்டெடுத்து வைத்த மைதிலியை தடுத்து இருளுக்குள் இழுத்துக் கொண்ட பரசுராமன், தன் உதட்டில் விரல் வைத்து அமைதி சைகை காட்டினான்.. முதலில் சத்தமாக கேட்ட வந்தனாவின் அழுகை மெல்ல மெல்லக் குறைந்து விசும்பலில் வந்து நின்றது..




“என்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் என் கெடுதல் புத்தி, குரூரம், பொறாமை எதையும் மறைக்காமல் சொல்லிவிட்டேன்.. இன்னுமா என்னைக் காதலிக்கிறீர்கள்..?”
“எவ்வளவு கெட்ட புத்தி இருந்தாலும், எதையும் புருசனிடம் மறைக்க கூடாது என்ற நியாய புத்தி உனக்கு இருக்கிறதே வந்தனா.. இப்போதுதான்டி இன்னமும் அதிகமாக உன்னைக் காதலிக்கிறேன்..”
“இன்னுமா என்னைக் காதலிக்கிறீர்கள்..?” வந்தனாவின் குரலில் இப்போது பரவசம் வந்திருந்தது..
“இதற்கு மேல் என் காதலை விளக்க வேண்டுமானால், இந்த இடம் சரியில்லை.. வாடி நம் ருமுக்குள் போய்விடலாம்.. அங்கே காட்டுகிறேன் என் காதலை..” சொல்லிவிட்டு கல்யாணசுந்தரம் அழுத்தமான காலடிகளுடன் வந்தனாவை நெருங்க, மைதிலி உடல் முழுவதும் கூச்ச அலையடிக்க படபடவென படியிறங்கி தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.. பின்னேயே பரசுராமனும் இறங்கும் சத்தம் கேட்டது..
அவள் பின்னேயே அறைக்குள் வந்து கதவை மூடியவன், அறைக் கதவின் மீதே வெட்கத்தில் முகம் மறைத்து சாய்ந்து நின்றிருந்தவளின் பின்னால் தானும் படிந்து நின்றான்..
“உன் சந்தேகம் தீர்ந்ததா..?” கேட்டபடி அவள் பின் கழுத்தில் முத்தமிட்டான்.
“ம்..” என்ற வெட்க முனகலுடன் தன்னுள் தானே சுருங்கியவளை திருப்பி தன்னோடு சேர்த்து அணைத்து இறுக்கிக் கொண்டான்.
“மைதிலி.. நம் கடமை முடிந்தது.. இனி இதனை வெற்றியாக முடித்தற்கான நம் கொண்டாட்டம்தான் மீதம் இருக்கிறது..”




பரசுராமனின் குரல் இறைஞ்சலாய் ஒலிக்க, மைதிலியிடமிருந்து ஒற்றை எழுத்து பதிலாக வந்தது.. “ம்” என்ற அந்த எழுத்து சம்மதத்தை சொல்ல பரசுராமன் வான் பறவையின் பரவசத்தை பெற்று, மைதிலியை கைகளில் அள்ளிக் கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான்.
விடியல் வெகு சுகமாக இருக்க சோம்பலாய் கண் திறந்த பரசுராமன் அதிர்ந்தான்.. மைதிலி பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்தாள்..
“நான் என் அம்மா வீட்டிற்கு கிளம்புகிறேன்..” அறிவித்தாள்..

What’s your Reaction?
+1
4
+1
6
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!