Serial Stories Sollamal Thotu Sellum Thenral

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 42 ( Final )

42

பஞ்சடைத்த பொம்மைகளாய்
உன் அடித்து திருத்திய பிசகுகள்
நெஞ்சடைத்து நிறைத்திருக்கிறது
உன் தளிர் வாசல் பிரபஞ்சம்,
ஆதிச்சொல்லென்று திரும்ப திரும்ப சொல்கிறது..
நீ.. நான்.. நாம்..




மைதிலியின் மனம் அவளுக்கு ஏதோ அபாயம் அறிவித்தது.. எங்கே போனான்..? கல்யாண சுந்தரம் முதல் ஆளாக வீட்டிற்கு வந்து விட்டான்.. வந்தனாவும், அவனுமாக சீக்கிரமே சாப்பிட்டு விட்டு அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டனர்..
அன்று முழுவதும் வந்தனாவின் கால்கள் தரையில் படியவே இல்லை.. ஏதோ வானத்தில் மிதப்பது போன்றே நடமாடியபடி இருந்தாள்.. மது உண்டவளை போல் அவள் கண்கள் எந்நேரமும் ஒரு வகை மயக்கத்தில் இருந்தன.. இப்படி அனுபவித்து வாழ வேண்டிய வாழ்வை வீணாக்க நினைத்தாளே இவள்.. மைதிலி மென் புன்னகையோடு அவளை கவனித்தபடியிருந்தாள்.. வந்தனா நேரடியாக மைதிலியின் முகம் பார்க்க நாணி கையில் பால் தம்ளருடன் வேகமாக அறைக்குள் நுழைந்து கொண்டாள்..
இவன் எங்கே போனான்… ஒருவேளை என்னை அம்மா வீட்டில் விடுவதற்கு பிடிக்காமல் இப்படி லேட் பன்னிக் கொண்டு அங்கேயே இருக்கிறானோ… நினைத்துவிட்டு, இல்லை அவன் அப்படிப்பட்டவன் இல்லை.. சொன்னால் சொன்னதை செய்பவன்.. வந்து விடுவான்.. காத்திருந்தாள்..
அருணாச்சலம் வந்தார்.. பரசுராமனுக்கும், ரவீந்தருக்கும் கடையில் வேலை இருப்பதாகவும், வருவதற்கு கொஞ்சம் நேரமாகுமென்றும் சொல்லிவிட்டு சாப்பிட்டு போய் படுத்துவிட்டார்.. அவர்கள் வரவும் சாப்பாடு போட்டு விட்டு போய் படும்மா.. மகாராணியும் படுக்க போய்விட மைதிலியின் மனது காரணமின்றி திதும் திதுமென அடித்தது..
அவள் வாசல்படியில் வந்து அமர்ந்து கொண்டாள்.. காம்பவுண்ட் கேட்டை தாண்டி தெருவில் பார்வையை பதித்தபடி இருந்தாள்.. திடுமென தெருவில் ஏதோ பரபரப்பு தெரிய, ஒன்றிரண்டு ஆட்கள் அங்குமிங்குமாக ஓடினார்கள்.. ஏதோ பேசினார்கள்.. கூட்டமாக போனார்கள்.. மைதிலி வேகமாக எழுந்து போய் காம்பவுண்ட் கேட்டருகே நின்று கொண்டாள்..
“அண்ணா என்னாச்சுண்ணா..? எல்லோரும் எங்கே போகிறீர்கள்..?” வழியில் போன ஒருவரிடம் கேட்டாள்.
“நம்ம மீனாட்சி அம்மன் கோவிலில் தீப்பிடிச்சிருச்சாம்மா, கோவில் முழுவதும் தீ பரவிடுச்சாம்.. எல்லோரும் அங்கேதான் போகிறோம்.. தீயை அணைக்க வேண்டுமே..” சொல்லிவிட்டு அவர் போய்விட மைதிலி அதிர்ந்தாள்..




கோவிலை விட்டு இரண்டு வீதி தள்ளித்தான் அவர்கள் கடை இருக்கிறது.. அதனால் அவர்கள் கடைக்கு எந்த ஆபத்தும் இருக்காது.. ஆனால் பரசுராமன்.. ரவீந்தர் இருவரும் இதுபோன்ற ஊர் காரியங்களென்றால் துடித்துக் கொண்டு உள்ளே இறங்குவார்களே.. ஏனோ மனம் பதற தன் போனை எடுத்து பரசுராமனின் போனுக்கு போட, அது சுவிட்ச் ஆப் என்றது.. மனதில் பதட்டம் கூட ரவீந்தரின் போனுக்கு கூப்பிட, அவன் போனை எடுத்தான்.
எடுத்ததுமே பின்னால் ஒரே கூச்சலும் கத்தலுமாக கேட்க, அவன் கோவிலில்தான் இருக்கிறான் என தெரிந்து விட்டது..
“ரவி கொழுந்தன் எங்கே இருக்கிறீர்கள்..?”
“அண்ணி நாங்கள் மீனாட்சியம்மன் கோவிலில் இருக்கிறோம்.. இங்கே திடீரென தீ பற்றி விட்டது.. அதனை அணைக்க.. ஷ்.. அண்ணா.. பார்த்து மெதுவாக..” என்ற சத்தத்துடன் அவன் போன் ஆப் ஆனது. மைதிலி கை நடுங்க திரும்ப போட இப்போது போன் சுவிட்ச் ஆப் என்றது..
மைதிலி அதன் பிறகு ஒரு நொடி கூட தாமதிக்க வில்லை.. வீட்டை பூட்டிக் கொண்டு தெருவில் இறங்கி விட்டாள்.. திருடர் பயம், இருட்டு போன்ற எந்தக் கவனமும் இன்றி ஒரு மாதிரி பித்து பிடித்தவள் போல் குறுக்கு வழியில் சந்து சந்தாக நுழைந்து மீனாட்சியம்மன் கோவிலை நோக்கி ஓட ஆரம்பித்தாள்..
அங்கே மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி ஒரே களேபரமாக இருந்தது.. தீயணைப்பு வண்டிகளும், போலீஸ் ஜீப்புகளும் நின்றிருக்க, நிறைய பேர் கைகளில் வாளி, குடங்களிலெல்லாம் கூட தண்ணீரை சுமந்து கொண்டு கோவிலினுள் ஓடினர்.. வசந்தராயர் மண்டபம் பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்தது.. மைதிலி அந்த மண்டபத்தை நோக்கி ஓடினாள்.. அந்த இடம் முழுவதும் தண்ணீரும், கரியுமாக கசகசவென்றிருந்தது.. மைதிலி வேகமாக உள்ளே நுழைய முயல ஒரு போலீஸ்காரர் அவளை தடுத்தார்..
“இந்தாம்மா யார் நீ.. உள்ளே தீ எரிந்து கொண்டிருக்கிறதே.. அங்கே ஏன் போகிறாய்..?”
“உ.. உள்ளே என் கணவர் இருக்கிறார் சார்.. நான் அவரைப் பார்க்க வேண்டும்..” உள்ளே ஓட முயல அவர் திரும்ப தடுத்தார்..
“உன் கணவரா..? இங்கே கடை வைத்திருந்தாரா..? இங்கேயே இரு.. உள்ளேயெல்லாம் போகக் கூடாது.. அங்கே தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருக்கிறது.. உள்ளே போனால் உன் உயிருக்கே ஆபத்து வரும்..”
“என் உயிரே உள்ளேதான் இருக்கிறது சார்.. நான் இங்கே இருந்து என்ன செய்யப்போகிறேன்..” போலீஸ்காரர் இடையில் நீட்டியிருந்த லத்தியை பிடுங்கி எறிந்தவள் எரிந்து கொண்டிருந்த நெருப்பிற்குள் ஓடினாள்..
அங்கே மண்டபம் முழுவதும் வரிசையாக இருந்த கடைகள் எரிந்து கொண்டிருக்க நிறைய பேர் தீயை அணைக்க போராடிக் கொண்டிருந்தனர்.. அந்த இடமே பாதம் பதித்து நிற்க முடியாமல் கொதித்துக் கொண்டிருந்தது.. மைதிலி தவிப்புடன் விழிகளை சுற்றி ஓடவிட்டாள்.. அதோ.. அங்கே.. அந்த நீல சட்டை.. அ.. அது ரவீந்தர்தானே..




இரண்டே எட்டுக்களில் அவனை அடைந்தவள் அவன் தோளை பற்றி இழுத்தாள்.. திரும்பியவன் மைதிலியை பார்த்து அதிர்ந்தான்..
“அண்ணி நீங்களா..? நீங்க இங்கே ஏன் வந்தீங்க..? இந்தத் தீக்குள் எப்படி வந்தீங்க..? உங்களுக்கு ஒன்றும் இல்லையே..”
“எனக்கு ஒன்றும் இல்லை.. உங்கள் அண்ணனை எங்கே..? அவருக்கு என்ன ஆச்சு..? அவர் ஏன் என் போனை எடுக்கலை..? அவர் பத்திரமாக இருக்கிறார்தானே..? ப்ளீஸ் என்னை அவரிடம் கூட்டிப் போங்க..” மைதிலி அழுதபடி படபடத்தாள்.
“மைதிலி..” குரல் அவளுக்கு பின்னிருந்து வந்தது.. பரசுராமன்தான்.. மைதிலி வேகமாக பின்னால் திரும்ப தன் தோளில் ஒரு குடத்தை சுமந்தபடி நின்றிருந்தான் அவன்.. அவன் விழிகள் அவளை விழுங்கிக் கொண்டிருந்தன.. அவனை பார்த்த அடுத்த நொடி மைதிலி தன்னை மறந்தாள்.. சுற்றுப்புறத்தை மறந்தாள்..
“என்னங்க..” என்ற கூவலுடன் ஓடிப்போய் பரசுராமனை கட்டிக் கொண்டாள்.. அவன் தோளில் இருந்த குடம் நீரோடு சரிய தன் உடம்போடு ஒட்டிக் கொண்டு விம்மிய மனைவியை அணைத்தபடி பரசுராமன் பிரமித்து நின்றிருந்தான்..
பொருள் சேதமும், உயிர் பயமுமாக சுற்றியிருப்பவர்கள் கதறியபடி இருக்க, நடுவில்
இவர்கள் இப்படி நின்றால், ரவீந்தர் மெல்ல அவர்களருகே வந்து அவர்களுக்கு முதுகு காட்டியபடி அவர்களை மறைத்தாற் போல் நின்று கொண்டான்.. சுற்ற ஓடிக் கொண்டிருப்பவர்களின் கவனத்தை திருப்பும் விதமாக ஹி..ஹி என ஒரு மாதிரி இளிப்பாக முகத்தை வைத்துக் கொண்டான்..
“அண்ணா, அண்ணி உங்களுடைய இப்போதைய நிலைமைக்கு ஏற்ற இடம் இது இல்லை.. இங்கே இருக்கிற கடைக்காரங்கள் எல்லாரும் ஏற்கெனவே ஏக கடுப்பில் இருக்கிறாங்க.. நீங்க இப்படி நிற்கிறதை பார்த்தால் உங்களை அடிக்க கூட வருவாங்க.. நீங்க இரண்டு பேரும் இடத்தை காலி பண்ணுங்க..”
பரசுராமன் தயங்கி நின்று.. “இல்லைடா இந்த தீ..” என இழுக்க,
“இந்த பொதுச்சேவையை நாங்க பார்த்துக்கிறோம்.. நீங்க உங்க வீட்டைப் பாருங்க.. ம்.. போங்க..” இருவரையும் முதுகில் கை வைத்து தள்ளினான்.
“வாங்க..” மைதிலி அவன் கையை இழுத்துப் பிடித்துக் கொண்டு நடந்தாள..
மண்டப வாசலுக்கு வரும்போது அந்த போலீஸ்காரர் அவர்களை திரும்ப பார்த்தார்.. பரசுராமனை அடையாளம் தெரிந்து கொண்டு வணங்கியவர்..
“உங்க ஒய்பா சார்..? நான் உள்ளே இருக்கிற யாராவது கடைக்காரங்கன்னு நினைச்சேன்.. உள்ளே போகாதீங்கம்மா உயிருக்கு ஆபத்துங்குறேன்.. என் உயிரே உள்ளே தான்யா இருக்குன்னு சொல்லிட்டு பயமில்லாமல் தீக்குள் ஓடுறாங்க.. லக்கி மேன் சார் நீங்க..”
அவரது பாராட்டை பரசுராமன் தலையசைத்து ஏற்றுக் கொள்ள, மைதிலி கூச்சத்துடன் உதட்டைக் கடித்துக் கொண்டாள்..
கோவில் இருந்த தெருவை தாண்டியதும் பரபரப்பும் நடமாட்டமும் குறைந்து தெருக்கள் அமைதியாக இருந்தன.
“பைக் நம் கடையில் நிற்கிறது மைதிலி.. அங்கே போய் எடுத்துக் கொள்வோம்.. ஆட்டோ பிடிக்கவா..?”
“வேண்டாம் இப்படியே நடந்தே வீட்டிற்கு போய் விடலாம்..”
“அதெப்படி நடந்து போக முடியும்..?”
“ஏன் நான் நடந்து வரவில்லை.. வீட்டிலிருந்து கோவில் வரை ஓட்டமும் நடையுமாகத்தான் வந்தேன்.. உங்களால் முடியாதோ..”




மைதிலியின் வேகக் கேள்வியில் பரசுராமன் புன்னகைக்க..
“இளித்து தொலையாதீர்கள்.. பார்க்க சகிக்க வில்லை..” எரிந்து விழுந்தாள்..
வேகமாக புன்னகைத்த தன் இதழ்களை அவன் மூடிக் கொள்ள முயல புன்னகை பெரும் சிரிப்பாக மாறி அவன் இதழ் வெடித்து சிதறத் தொடங்கியது.. மைதிலி கோபமாக அவனை திரும்பிப் பார்த்தாள்..
பரசுராமன் இவ்வளவு நேரமாக தீயை அணைக்க போராடியதில், தண்ணீரை தூக்கி ஊற்றியதில் உடையெல்லாம் நனைந்திருக்க, உடலெல்லாம் கரி அப்பியிருக்க, ஒரு மாதிரி விநோத பிறவி போல் இருந்தான்.. இவனிருக்கும் இந்த லட்சணத்திற்கு வாயை பிளந்து கொண்டு இப்படி இளிப்பு வேறு.. மைதிலி எட்டி அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்..
“எதுக்குடா சிரிக்கிற..? எனக்கு உயிர் போகிற மாதிரி இருந்தது.. என் தவிப்பு உனக்கு சிரிப்பா..?”
“உன் உயிர் நான்தானே மைதிலி.. அது எப்படி உன்னை விட்டு போகும்..?” பரசுராமன் சிரிப்பை நிறுத்தி நிதானமாக கேட்க, மைதிலி விம்மலுடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்..
“ஏன் மைதிலி இவ்வளவு ஆசையும், காதலும் என் மேல் வைத்துக்கொண்ட ஏன் என்னைப் பிரிந்து விடப் போவதாக சொன்னாய்..?”
மைதிலி பதில் சொல்லவில்லை.. அவனை விட்டு விலகவும் இல்லை… “இன்று காலையிலிருந்து நான் என்ன பாடு பட்டேன் தெரியுமா..? அதுவும் நேற்று இரவு முழுவதும் அவ்வளவு தூரம் எனக்கு இணங்கி இருந்துவிட்டு.. இனி நம் வாழ்வில் சந்தோசம் மட்டும் தான் என நினைத்தபடி நான் கண் விழித்து பார்க்கும் போது கையில் பெட்டியோடு நிற்கிறாய்.. பிரிந்து விடுவோம் என்கிறாய்.. எனக்கு எப்படி இருந்தது என்கிறாய்..?”
“ம் அப்படி இருக்க வேண்டுமென்றுதான் அப்படி சொன்னேன்..” மைதிலி அவனை விட்டு விலகி நடக்க தொடங்கினாள்..
“ஓ அப்போது உண்மையாக சொல்லவில்லையா மைதிலி..? அதுவும் எனக்கு கொடுத்த தண்டனையா..?” பரசுராமன் அவளோடு சேர்ந்து நடந்தபடி ஆவலோடு கேட்டான்..
மைதிலி பதில் சொல்லாமல் நடையை தொடர்ந்தாள்..
“இந்த ரோடு பகல் நேரத்தில் எவ்வளவு சந்தடியாக இருக்கும்.. இப்போது பாருங்கள் ஒரு அரவமும் இன்றி எவ்வளவு அமைதியாக இருக்கிறது.. அது போலவே பார்த்த ரோட்டில் இப்படி அமைதியாக நடப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது..”
மைதிலி அந்த அர்த்தராத்திரி அமைதி சூழ்நிலை ரசிக்க ஆரம்பித்தாள்.. பரசுராமன் அவள் கை பற்றி இழுத்தான்..




“ஏய் நான் கேட்டுட்டே இருக்கிறேன்.. உனக்கு இப்போது என்னடி சுற்றுப்புறத்தை ரசிக்க வேண்டிய திருக்கிறது..” கொஞ்சலாய் கேட்டு அவள் தலை பற்றி உலுக்கினான்.
“போடா சொல்ல மாட்டேன்..” மைதிலி அவனை தள்ள..
“என்னது ‘டா’ வா இதற்கு என்ன தண்டனை தெரியுமா..?” பரசுராமன் வேட்கையுடன் அவள் முகத்தை நெருங்கி விட்டு, பிறகு தாங்கள் நிற்கும் இடம்
உணர்ந்து தன் வேகத்தை அடக்கிக் கொண்டு நிதானிக்க, இடைப்பட்ட அந்த கண நேரத்தில் மைதிலி தன் இதழ்களை அழுத்தமாக அவன் உதடுகளில் ஒரு நொடி பொருத்தி விட்டு வேகமாக அவனை விட்டு விலகி ஆளில்லா அச் சாலையில் உற்சாகமாக ஓடத் துவங்கினாள்..
“ஏய் நில்லுடி..” பரசுராமன் கள்ளுண்ட தேனியாய் அவளை விரட்டிப் பிடித்து மடக்கினான்..
“என்னடி செய்தாய்..?” அவன் இதழ்கள் அவள் கன்னத்தை உரசி உரசி மீண்டன..
“சீய் என்ன இது நடு ரோட்டில் வைத்துக் கொண்டு..” மைதிலி பாவனையாய் மிழற்றினாள்..
“கொஞ்ச நேரம் முன்பு எங்கேயடி நின்று கொண்டிருந்தோம் வானத்திலா..?” கொஞ்சலாய் கேட்டுவிட்டு சற்று முன் மென்மையாய் அவள் கொடுத்த தாக்குதலுக்கு பதிலாக மிக வன்மையாக ஒரு பதிலடி கொடுத்தான்..
“ஏங்க விடுங்க.. யாராவது வந்துடப் போறாங்க..” மைதிலி மெலிதாய் முனங்க..
“ம்ஹீம்.. விடமாட்டேன்.. நீ சொல்லு.. இன்று காலையில் ஏன் அப்படி பேசினாய்..?”
“நான் ஒரு வாரம் உங்களை பிரிந்திருந்து கஷ்டப்படுத்த நினைத்தேன்.. நீங்கள் என்னைப் படுத்திய பாட்டிற்கு அது தண்டனையாக இருக்க வேண்டும் என்று தான் அப்படி பேசினேன்..”
பரசுராமன் அவளை இறுக்க அணைத்தான்..
“எவ்வளவு பெரிய கொடுமைக்காரிடி நீ..? மைதிலி இதே ஒரு வாரக் கணக்குதான் நானும் உனக்கு வைத்தேன்.. நீ பிடிவாதமாக உன் அம்மா வீட்டிற்கு போயே தீருவnன் என்றதும், வேறு வழியில்லாமல் சரியென்று விட்டு, உன்னை உன் அம்மா வீட்டில் ஒரு வாரம் விட்டு விட்டு, பிறகு மெல்ல பேசி திரும்ப நம் வீட்டிற்கு அழைத்துக் கொள்ளலாமென நினைத்தேன்..”
“ம் இந்த பிளானெல்லாம் ஒழுங்காக போட்டு விடுங்கள்..” மைதிலி அவன் கன்னத்தை கிள்ளினாள்..
“அப்படியென்றால் உனக்கு என் மேல் வெறுப்பில்லைதானே மைதிலி..? என்னை விரும்பித் தானே கல்யாணம் செய்த கொண்டாய்..?”
“எதற்கு உங்களுக்கு இந்த சந்தேகம்..?”




“நம் கல்யாணத்திற்கு முன் உன் அண்ணன் சொன்னது.. நீ என்னுடன் ஒட்டாமல் தள்ளி நின்றது.. இதையெல்லாம் நினைத்தால்.. ஏன் மைதிலி வந்தனா வேறு உன்னிடம் என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி வைத்தாள்.. உன் அண்ணனின் எதிர்ப்பு வேறு.. இத்தனையும் தாண்டி என்னை எதற்காக கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தாய்.. உன் அப்பா அம்மாவிற்காகவா..?”
“என்னைப் பற்றியும் வந்தனா உங்களிடம் கண்டபடி பேசி வைத்தாள்.. உங்கள் தம்பி வேறு நம் கல்யாணம் வேண்டாம் என்றார்.. இத்தனைக்கும் பிறகு நீங்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ள நினைத்தீர்கள்.. உங்கள் அம்மா அப்பாவிற்காகவா..?”
நடந்தபடி பேசிக் கொண்டிருந்தவளின் கையை பற்றி நிறுத்தினான்.. தன் பக்கம் திருப்பினான்.. அவள் முகத்தை உறுத்தான்.. மைதிலி கண்ணிமைக்காமல் அவனை பார்த்தாள்..
“உன்னை முதன் முதலாக பார்த்த நாளிலிருந்து என் அடி மனதில் பதிந்து விட்டாய் மைதிலி..”
“நீங்களும் என் மனதில் அச்சடித்த சித்திரம் போல் இருக்கிறீர்கள்..”
“நீ ஸ்கூட்டி ஓட்டி வந்த போது..”
“நீங்கள் அரிவாள் தூக்கிக் கொண்டு வந்த போது..”
“நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போது..” இருவருமாக சிரித்து விட்டனர்.. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டனர்..
“வந்தனாவுடனான திருமண பேச்சிற்கு முன் உன்னைப் பார்த்திருந்தால் அப்போதே அந்த பேச்சை நிறுத்தியிருப்பேன்.. நமது சந்திப்பு கொஞ்சம் லேட்.. அப்போதும் அப்பா என் திருமண பேச்சை எடுத்ததுமே, அவரிடம் உன்னை கைகாட்டி விட்டு பேசாமமல் இருந்து கொண்டேன்.. அப்பா நம் திருமணத்தை பேசி முடித்து விட்டார்..”
“உங்களுடன் திருமணம் என்றதும் என்னுள் ஏதோ மின்னல்.. ஆனால் உங்களை பற்றி வந்த தகவல்கள் எதுவும் சரியானதாக இல்லை… ஆனாலும் நம் திருமணத்தை நிறுத்த எனக்கு மனமில்லை.. அது பொய்.. இது கட்டுக்கதை என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.. நம் திருமணத்திற்கு பிறகு நீங்கள் என்னிடம் காட்டிய கடுமைகளை கூட நான் உங்கள் மேல் வைத்திருந்த காதலால்தான் கடந்து வந்தேன்..”
“என் செல்லம்.. தங்கம்.. நான் முட்டாள்டி.. மூடன்.. முரடன்..” தன்னை வைதபடி மனைவியை செல்லம் கொஞ்சி தீர்த்தான் பரசுராமன்..




அவர்கள் திருமணம் முடிந்து எட்டு மாதங்களாக பேசாத கதைகளையெல்லாம் இந்த ஒரு மணி நேரத்தில் அந்த தனி வீதிகளில் பேசி பேசி தீர்த்தனர் தம்பதிகள்.. ஓட்டலும், உரசலுமாக இடை இடையே நின்று அணைத்து ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டனர்.. ஒரு வழியாக தங்கள் வீட்டை அடைந்தனர்..
“இவன் எப்போது வந்தான்..?” தம்பியின் அறைப் பக்கம் கண்காட்டி கேட்டான் பரசுராமன்..
“சாயந்தரமே.. சீக்கிரமே படுக்க போய்விட்டார்கள்..” சொல்லும் போதே மைதிலியின் முகம் சிவந்தது..
“ம் அதிர்ஷ்டக்காரன்.. அவன் மனம் போல் நடக்கும் பொண்டாட்டி.. எனக்கு மட்டும் எப்போதும் சண்டைக் கோழியாக எதிர்த்து நிற்பவள் வந்து வாய்த்துவிட்டாள்..”
“ஓஹோ நான் சண்டைக்கோழியா.. இன்னைக்கு நீங்க ஹால்ல படுங்க.. நான் உள்ளே போய் படுக்கிறேன்..” மைதிலி முறைத்து விட்டு அறைக்குள் போக, பரசுராமன் அலறியபடி அவள் பின் ஓடினான்.. அவள் கதவை பூட்டப் போன கடைசி விநாடி அறைக்குள் நுழைந்து விட்டவன் தன் காதுகளை பிடித்துக் கொண்டான்..
“சமாதானம்..” என்றான் கெஞ்சுதலாக..
மைதிலி மலர்ந்து சிரித்தாள்.. அவள் முகத்தை விழுங்கியபடி அருகே வந்தவன்.. “உன் சிரிப்பு தென்றல் என்னை தழுவுவது போல் இருக்கிறது மைதிலி.. நீ
ஒன்றும் சொல்லாமல் என்னை பார்வையிலேயே கவிழ்க்கும் தென்றல்..” சொன்னபடி அவள் இதழ் நோக்கி குனிந்தான்..

 

– நிறைவு –

What’s your Reaction?
+1
5
+1
6
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!