Serial Stories Sollamal Thotu Sellum Thenral

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 39

39

சகுனியின் சகோதரனாய்
உன் தாயமாட்டம்,
திட்டமிடல் ஏதுமின்றி அப்படியே
எனக்கு பிடித்து போனதிது..




“பட் பட்டென்று அடிக்கிறார்.. உன்னால் அதற்கு பிறகும் அவரோடு.. வந்து எப்படி அவரோடு சேர்ந்து வாழ முடிகிறது மைதிலி..?”
“தாலி கட்டி விட்டாரே, புருசனாச்சே..”
“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசனா.. இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது..” வந்தனா முகம் சுளித்தாள்.. மைதிலி புன்னகைத்தாள்.. மாலை நேரம்.. வேலை முடித்து ஓய்வாக இருவரும் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தனர்..
“அநியாயம் செய்யும் புருசனை நானும் ஒத்துக் கொள்ள சொல்லவில்லை..”
“இது அநியாயம் இல்லையா..?”
“அன்பும், காதலும் இருக்கும் இடத்தில் எதுவுமே அநியாயம் கிடையாது வந்தனா..”
வந்தனா மைதிலியின் தோள் தொட்டு தன் பக்கம் திருப்பினாள்..
“நீ பரசு அத்தானை காதலிக்கிறாயா மைதிலி..?”
மைதிலி தலையசைத்தாள்.. தன் இரு கைகளையும் விரித்தாள்..
“ரொம்ப..”
“எப்படி மைதிலி..? எப்போதிருந்து..?”
“அது எனக்கே தெரியாது.. அவரை முதன் முதலாக பார்த்த கணத்திலிருந்து இருக்கலாம்..”
“கண்டதும் காதலா.. இதென்ன சினிமாவா..?”
“காதலென்றாலே சினிமாதானா வந்தனா.. ஏன் நிஜவாழ்வில் நாம் காதலிக்க கூடாதா..?”




“அம்மா, அப்பா சொல்பவருக்கு கழுத்தை நீட்டி ஒரு கடமை போல் அவரோடு சேர்ந்து வாழவும் ஆரம்பித்து விடுகிறோம்.. உடனே குழந்தைகள்.. இதில் காதல் கத்தரிக்காயெல்லாம் எங்கிருந்து வரும்..? இந்தக் காதல் எப்படித்தான் இருக்கும் மைதிலி..? எனக்கு புரிந்து கொள்ளவே முடியவில்லை..” வந்தனா அலுத்தாள்..
“காதலென்றால் பார்க், சினிமா போவதும், கடலில் கால் நனைப்பதும், ஹோட்டலில் சாப்பிடுவதுமா வந்தனா.. நம் அம்மா, அப்பா எல்லாம் அப்படித்தான் இருந்தார்களா..? அவர்களுக்கிடையே காதல் இல்லையென்று சொல்ல முடியுமா..?”
“அதையேதான் நானும் சொல்கிறேன் மைதிலி.. அவர்கள் எல்லோரும் கல்யாணம் முடித்த கடமைக்காக வாழ்பவர்கள்தானே.. உன் போல்.. என் போல்..”
“அவர்களுக்கிடையே காதல் இல்லையென்று எதை வைத்து சொல்கிறாய் வந்தனா..? உன் அப்பா இறந்த பிறகும் தன் ஒரே மகளுடன் கூட தங்கும் வாய்ப்பிருந்தும் அவர் எனக்கு கொடுத்த வீட்டில்தான் என் கடைசிக்காலம் கழியவேண்டும் என எதிர்வீட்டில் இருக்கிறார்களே உன் அம்மா, அதன் காரணம் என்ன வந்தனா..? அங்கே
அவர்கள் மனதோடு உன் அப்பாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. இதன் பெயர் என்ன..? காதல் இல்லையா..?”
“இத்தனை வயதிற்கு பிறகும் தனது சிறு வேலைக்கும் மனைவியையே நாடுகிறாரே நம் மாமா.. உடனே ஓடுகிறார்களே அத்தை.. இது காதலில்லையா..?”
“காலையில் அடித்துவிட்டு மதியமே சமாதானமாக வந்து அல்வா கிண்டிக் கொடுக்கிறாரே உன் அத்தான்.. இது காதலில்லையா..?”
“மனதுக்கு பிடித்த அத்தை மகளை மனைவியாக்கிய பின்பும் அவளது மனம் மாறும் வரை தொடாமல் பொறுமையாக காத்திருக்கிறாரே என் கொழுந்தன் இது காதலில்லையா..?”
வந்தனா அதிர்ந்து நின்றுவிட்டாள்..
“மைதிலி.. உனக்கு..”




“எல்லாம் தெரியும் வந்தனா.. இப்படி ஒரு அருமையான புருசன் கிடைத்தும் அவரோடு சேர்ந்து வாழாமல் தள்ளி வைத்திருக்கிறாய் பார்.. உன் போல் ஒரு முட்டாள் பெண்ணை நான் பார்த்ததில்லை..”
வந்தனா உடனே முகத்தை மூடி அழத் துவங்கினாள்..
“அவர் நல்லவர்தான் மைதிலி.. ஆனால் நான் நல்லவளில்லை.. ரொம்பக் கெட்டவள்.. அவர் கூட வாழும் தகுதியில்லாதவள்..”
“ஓ.. அப்படியா.. அப்போ சரி.. நீ உன் அம்மா வீட்டிற்கு போய்விடு.. நாங்கள் அவருக்கு வேறு திருமணம் செய்து வைத்து விடுகிறோம்..”
வந்தனா திக்கென நிமிர்ந்தாள்.. அவள் அழுகை நின்றிருந்தது..
“என்ன மைதிலி இப்படி சொல்கிறாய்..?”
“பிறகு என்ன செய்வது வந்தனா..? நீ தான் அவரைக் காதலிக்கவில்லை.. அவரோடு வாழவும் தயாராக இல்லை.. இனி அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக் கொள்ளுங்கள்..”
“என்னால் முடியவில்லை மைதிலி.. அவர் தொட்டாலே எனக்கு கூசுகிறது..”
“ஓ அதனால்தான் அன்று இரவு மழையில் நின்றாயா..?”
“ம்..”
“அவர் தொடுவதை தடுக்க மழையில் நின்றாயா..? தொட்டதை மறக்க மழையில் நின்றாயா வந்தனா..?”
வந்தனா திடுக்கிட்டு பார்த்தாள்.. பதிலின்றி உதடு கடித்தாள்..
“உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளதே வந்தனா.. முதலில் உன் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வா.. நீ புதிதாக திருமணம் முடித்து வந்திருப்பவள் என நினைத்துக் கொள்.. உன் வாழ்க்கையை வாழ ஆரம்பி..”
வந்தனா குழப்பத்துடன் தலையசைத்து கீழே இறங்கிப் போனாள்..
“வந்தனா என்ன சொல்கிறாள் மைதிலி..?”
“பேசியிருக்கிறேன் யோசிக்க ஆரம்பித்திருக்கிறாள் பார்க்கலாம்..” மைதிலி பாயை உதறி தரையில் விரித்தாள்.
பரசுராமன் அவளை பார்த்தபடியே கட்டிலில் அமர்ந்து இருந்தான்..
“கல்யாணும் – வந்தனாவும் உன் ஆசைப்படி சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டால்..”
“ஏன் அந்த ஆசை உங்களுக்கு இல்லையா..?”
“ம்.. இருக்கிறது.. ஆனால் உன் அளவு தீவிரமாக இல்லை..” மைதிலி அதிர்ந்து அவனைப் பார்த்தாள்..
“ஏன்..?”




“என் நிலைமையே இங்கே கவலைக்கிடமாக இருக்கிறதே.. இதில் என் தம்பி வாழ்க்கையை நான் என்ன பார்க்க..?”
பிரிந்து படுத்திருக்கும் தங்கள் இருவரையும் அவன் காண்பிக்க மைதிலி பதில் பேசாமல் திரும்பி படுத்துக் கொண்டாள்.. இவனுக்கு எந்நேரமும் அதே நினைப்புதான்.
“அவர்கள் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்து விட்டால் எனக்கு என்ன தருவாய் மைதிலி..?”
மைதிலி திரும்பி அவனை முறைத்தாள்..
“உங்கள் தம்பி வாழ்வு..”
“நீ காட்டும் அதிக அக்கறையில் அவன் என் தம்பி என்பதைவிட உன் கொழுந்தன் என்பதுதான் மனதில் முதலில் நிற்கிறது.. சொல் மைதிலி… எனக்கு என்ன தருவாய்..? ஒரு நல்ல நிகழ்வு நடந்தால் அதற்காக பாடுபட்ட நாமும் அதைக் கொண்டாட வேண்டுமல்லவா..?”
“ம்.. நடக்கட்டும்.. பார்க்கலாம்..”
“வாக்கு மாறக் கூடாது மைதிலி..”
“நான் எப்போது வாக்கு கொடுத்தேன்..”
“இதோ இப்போது கொஞ்ச நேரம் முன்பு வாக்களித்தாயே.. என் விருப்பம் போல் நடந்து கொள்வதாகக் கூறினாயே..”
மைதிலி பல்லைக் கடித்தாள்.. எமகாதகன்.. தலையணையை தூக்கி அவன் மேல் எறிந்தாள்..
“புளுகு மூட்டை..” வைதாள்..
“ஆ.. ஐயோ.. கொலை.. என் பொண்டாட்டி என் மீது கல்லைத் தூக்கி போடுகிறாள்..” அவன் நாடகத்தனமாக கத்த, வேகமாக எழுந்து போய் அவன் வாயை பொத்தினாள்.
“ஏன் கத்துகிறீர்கள்..? எல்லோருக்கும் கேட்க போகிறது..”
“சரி.. அப்போது யாருக்கும் கேட்காமல் மெதுவாக பேசுவோம்..” அவன் அவள் முகத்தை நெருங்கி மெல்ல உதட்டசைக்க ஆரம்பிக்க, அவன் மார்பில் கை வைத்து தள்ளியவள்..
“வெளியே போய் படுத்துக் கொள்வேன்..” எச்சரித்தாள்.. அவ்வளவுதான் பரசுராமன் அமைதியாகி விட்டான்.
“வேண்டாம் மைதிலி சும்மா உன்னை பார்த்துக் கொண்டாவது இருக்கிறேன்..” நல்லபிள்ளையாக படுத்துக் கொண்டான்.




தன் பாய்க்கு திரும்பிய மைதிலியின் மனதில் அடுத்து ஒரு திட்டம் உண்டானது.. ஆனால் வந்தனா மறுநாள் வேறொரு திட்டத்துடன் வந்தாள்.. மறுநாள் காலை காபிக்கு பாலை மைதிலி சுடவைத்துக் கொண்டிருக்கும் போதே வந்தனா அந்த அதிரடித் திட்டத்துடன் வந்தாள்..
“நான் இன்று அவரிடம் பேசப் போகிறேன் மைதிலி, என்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன்.. எனது கெட்ட புத்தியை சொல்லப் போகிறேன்.. நான் உன் வாழ்க்கையில் விளையாண்டதை சொல்லப் போகிறேன்.. உங்கள் கல்யாணத்தை நிறுத்த போட்ட திட்டத்தை சொல்லப் போகிறேன்..”
மைதில் வான் இடிந்து தலை மேல் விழுந்தது போல் அதிர்ந்தாள்..

What’s your Reaction?
+1
6
+1
3
+1
1
+1
0
+1
0
+1
1
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!