Serial Stories Sollamal Thotu Sellum Thenral

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 38

38

வெயில் கசியவிடும் நிழலென
மேலப்பிக் கொள்கிறாய் திட்டு திட்டாக,
குழி விழுந்த கன்னங்களில்
பரவச தேங்கல்கள்




“கொஞ்சமாக ஊற்று..” சொல்லிவிட்டு திரும்பி பக்கத்தில் உட்கார்ந்திருந்த கல்யாணசுந்தரத்திடம் ஏதோ தொழில் பேச ஆரம்பித்தான் பரசுராமன்..
மைதிலி சாம்பாரை கரண்டி நிறைய அள்ளி இலையில் ஊற்ற அது வடிந்து பரசுராமனின் மடியில் சூடாக பட்டு அவனது உடையை பாழாக்கியது..
“ஏய் அறிவிருக்காடி உனக்கு.. கொஞ்சமாக ஊற்றுன்னு சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.. கண்ணு தெரியாதா உனக்கு..” ஆத்திரத்தோடு கத்திய பரசுராமனின் கை மைதிலியின் கன்னத்தில் இடியாக இறங்கியது..
“அண்ணா..” கல்யாணசுந்தரம் பதறி எழுந்தான்.
“நீ உட்கார்ந்து சாப்பிடுடா.. இந்தக் கழுதை செய்த காரியம்.. என் உடையெல்லாம் பாழாகிவிட்டது.. இனி இதை மாற்றி.. கிளம்பி..” புலம்பலோடு தன் அறைக்குள் போனான்..
மைதிலி கலங்கிய கண்களுடன் பின் வாசலுக்கு போய்விட்டாள்.. அடுப்படிக்குள் ஓர் ஓரமாக நின்றிருந்த வந்தனா நிகழ்ந்தவற்றை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..
ஆண்கள் அனைவரும் கிளம்பிப் போனதும் வந்தனா மைதிலியிடம் வந்தாள்.. மைதிலி கோதுமையை கிரைண்டரில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள்..
“உனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்ததா மைதிலி..? எனக்கு அதிர்ச்சியாக போய்விட்டது தெரியுமா..?”
“எதற்கு வந்தனா..?”




“பரசு அத்தான் இப்படி பட்டென கைநீட்டி விட்டாரே..”
“பச்.. இது எனக்கு புதிதா என்ன..? எனக்கு பழகி விட்டது வந்தனா..?” மைதிலி அரைத்த கோதுமையை பக்குவம் பார்த்து அள்ள ஆரம்பித்தாள்..
“இதற்கு முன் அத்தான் உன்னிடம் அப்படி நடந்து கொண்டதற்கு பின் காரணமாக நான் இருந்தேன்.. ஆனால் இப்போது ஒரு காரணமும் இன்றி உன்னுடன் இப்படி நடந்து கொள்கிறாரே..”
“நீ சொன்னதால் அப்போது இப்படி நடந்து கொள்ள இல்லை வந்தனா.. அவருடைய குணாதிசயமே இதுதான்.. விடு.. நான் என்னை அதற்கேற்றாற் போல் பழக்கிக் கொள்கிறேன்..”
“இது அநியாயம் மைதிலி.. உன்னை கைநீட்டி அடிக்க எப்படி அவருக்கு மனது வருகிறது..”
“எல்லா புருசனும் பொண்டாட்டியை தேவதையாக கொண்டாடுவார்களா என்ன..? என் புருசனுக்க நான் ராட்சசி போல் தெரிகிறேன் போல..”
மைதிலி கோதுமையை பிழிந்து பாலெடுக்க ஆரம்பித்தாள்.. வந்தனாவின் மனதினுள் அவள் சொன்ன தேவதையும், ராட்சசியும் தட்டாமாலை சுற்றினர்.. கல்யாணின் வான் தேவதை அவள் மனம் முழுவதும் நிறைந்து பரவியது..
“நான் பரசு அத்தானிடம் பேசப் போகிறேன் மைதிலி..”
“என்ன பேசப் போகிறாய்..?”
“நான் உன்னை பற்றி முன்பு தப்பாக கூறியதையெல்லாம் சொல்ல போகிறேன்..”
“அம்மா தாயே உன் திருவாயை மூடிட்டு இரு.. அவரிடம் என்னைப் பற்றி யார் நன்றாக கூறினாலும் அவருக்கு என் மீதுதான் சந்தேகம் வரும்.. நான்தான் அவர்களை அப்படி பேச வைக்கிறேன் என்பார்.. அதுவும் இப்போது நாம் இருவரும் கொஞ்சம் ஒற்றுமையாக வேறு இருக்கிறோம்.. நிச்சயம் நான்தான் உன்னை அனுப்பி வைத்திருக்கிறேன் என்றுதான் நினைப்பார்.. நீ எனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால் என்னைப் பற்றி எதுவும் பேசாமலிருந்தாலே போதும்..”
வந்தனாவின் முகம் சோர்ந்தது..




“பரசு அத்தான் முன்பெல்லாம் இப்படி கிடையாது மைதிலி.. ரொம்ப நல்லவர்..”
“எல்லா ஆண்களும் மனைவியிடம் ஒரு முகமும், வெளியில் ஒரு முகமும் காட்டுவார்கள் தான் வந்தனா.. சரி நீ போய் படுத்து ரெஸ்ட் எடு.. நான் இந்த அல்வாவை கிண்ட ஆரம்பிக்கிறேன்..”
கோதுமை பாலை இரும்புச் சட்டியில் ஊற்றி அடுப்பில் ஏற்றினாள்..
“ஐயோ இது ரொம்ப நேரம் ஆகுமே நான் உனக்கு ஹெல்ப் பண்ணுகிறேன் மைதிலி..”
“வேண்டாம் வந்தனா.. காய்ச்சல் வந்த உடம்பு.. ரொம்ப அலட்ட வேண்டாம்.. போய் படுத்துக்கொள்.. கௌரிம்மா இப்போது வந்து விடுவார்கள்.. அவர்களிடம் கிண்ட சொல்லிவிட்டு நான் கொஞ்சம் படுத்து எழுகிறேன்..”
வந்தனா போகவும் மைதிலி கிண்ட ஆரம்பித்த அல்வா மெல்ல பதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது பரசுராமன் வந்தான்.. தொடர்ந்து கிண்டியதால் கை வலிக்க ஆரம்பிக்கவே இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி அல்வாவை கிண்ட உபயோகித்தபடி இருந்தவளின் கை இதமாக பற்றப்பட்டது..
“நான் கொஞ்ச நேரம் கிண்டவா மைதிலி..” கேட்டபடி நின்றவனை கண்டதும் மைதிலி கண்களை அவசரமாக சுழற்றி பார்த்தாள்..
“நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்..? இப்போது இங்கே என்ன வேலை..? வந்தனா பார்த்து விட்டால் அவ்வளவுதான் போங்க..”
“அவள் தூங்கியிருப்பாள்.. நீ நகர்.. நான் இதைக் கொஞ்ச நேரம் பார்க்கிறேன்..” அவளை விலக்கிவிட்டு கரண்டியை தான் வாங்கி கிண்டத் தொடங்கினான்.. அல்வா இறுகும் பதத்திற்கு வந்து விட்டதால் கிண்டுவது கடினமாக இருக்க, இழுத்து சேர்த்து லாவகமாக கிண்டியவனை பார்த்த மைதிலியின் மனதிற்கு பழி தீர்த்துக் கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை விடும் எண்ணமில்லை..
“ஆம்பளைங்க வெளி வேலையை பார்க்க போகாமல் இப்படி வீட்டிற்குள் இருந்து கொண்டு பொம்பளைங்களுக்கு வேலை செய்து கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் உருப்படுமா..?”
பரசுராமனின் கை ஒரு நிமிடம் நின்று பிறகு மீண்டும் அல்வாவை கிண்ட ஆரம்பித்தது.. முகம் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இறுகி இருந்தது..
“என்னங்க நான் சொல்வது சரிதானே..?” மேலும் சீண்டியளை உதட்டில் விரல் வைத்து.. “உஷ்” என அதட்டினான்..




“கொஞ்ச நேரம் பேசாமல் இப்படி உட்கார்..” என்றவன் கை கரண்டியை சட்டியில் விட்டு விட்டு அவளது இடையை இரு கைகளாலும் பற்றி தூக்கி அடுப்பு மேடை மேல் அமர்த்தினான்..
“ஷோகேஸ் பொம்மை போல் இருக்கிறாய்..” முணுத்தபடி அவள் இடையை வருடிக் கொண்டே நிதானமாக கையை எடுத்தவன் மீண்டும் கரண்டி பிடித்து அல்வா கிண்ட தொடங்கினான்..
“பதம் பார்த்து சொல்லு..”
பரசுராமனின் பார்வை அல்வாவில்தான் இருந்தது.. மைதிலியின் பார்வைதான் அல்வாவிற்கும் அவனுக்குமான அலைபாய்ந்தது..
“உங்கள் அம்மா வந்து இப்போது பார்க்க வேண்டும்.. என் மகன் கையில் கரண்டியை கொடுத்து விட்டாயேடி என்று என்னை இந்த வீட்டை விட்டு விரட்டி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்..”
“அப்படி யாரும் உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப முடியாது..”
“நானாக போக நினைத்தால் தடுக்கவும் முடியாது..”
“ப்ச் ஏன் தேவையில்லாதவற்றை பேசுகிறாய்..? இப்போது அடுப்பை மட்டும் கவனி..”
“ம்.. போதும், நிறுத்துங்க அடுப்பை அணைத்து விட்டு அந்த தாம்பாளத்தில் தூக்கி கொட்டுங்க..”
நெய் தடவிய தாம்பாளத்தில் பொன் நிறத்தில் விழுந்து பரவியது கோதுமை அல்வா.. வாசம் சமையலறையை நிறைத்தது..
“ரொம்ப நல்லா வந்திருக்குங்க அல்வா..” மைதிலி விழி விரிந்தாள்..
“ஆமாம் பிடித்தமானதை மனதில் நினைத்துக் கொண்டே சமைத்தால் சமையல் நன்றாக வரும்னு அம்மா சொல்வாங்க..”
“அப்படி எந்த பிடித்தமானதை நினைத்தீர்கள்..? அடுத்து எப்போது என்னை அடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டே அல்வா கிண்டினீர்களோ..?”
பரசுராமன் மைதிலியின் குத்தலை எதிர்பார்த்தே இருந்தான் போலும்.. அவன் முக பாவனையில் மாற்றம் இல்லை..




“இல்லை வேறு நினைத்துக் கொண்டிருந்தேன்..”
“என்ன நினைத்தீர்கள்..?”
“அப்படியே உன்னை இழுத்து அணைச்சு படபடன்னு பேசுற அந்த உதட்டை…” என நிறுத்த மைதிலியின் முகம் வெளுத்தது.. பேந்த பேந்த விழித்தாள்.. பரசுராமன் அடக்கிய புன்னகையுடன் அவள் முகத்தை வேடிக்கை பார்த்தபடி ஒருநிமிடம் இருந்துவிட்டு..
“இரண்டு உதட்டையும் சேர்த்து கடித்து வைத்து விடலாமான்னு யோசித்துக் கொண்டிருந்தேன்..” தயக்கமின்றி சொல்லி முடித்தான்..
“இப்போது அல்வாவை துண்டு போட்டு விடலாம்..” மைதிலி வேகமாக அவனுக்கு முதுகு காட்டி நின்றபடி அல்வாவை கத்தியால் கோடு போட துவங்கினாள்..
“எப்படி துண்டு போடுவது மைதிலி..?” கேட்டபடி அவளுக்கு பின் நின்று கொண்டு கைகளை நீட்டி கத்தியோடு தாம்பாளத்தில் நகர்ந்து கொண்டிருந்த அவள் கை மீது தன் கையை வைத்தான்..
“காலையில்தான் வந்தனா முன் சண்டை போட்டாக வேண்டுமென்று சண்டை போட்டோம்.. இப்போது இப்படி நிற்பதை அவள் பார்த்துவிட்டால்..”
“புருசன் பொண்டாட்டிக்குள் சண்டையும், கொஞ்சலும் சாதாரணமென்பதை அவள் தெரிந்து கொள்ளட்டும்..” பரசுராமன் சிறிதும் விலகவில்லை..
“அடிப்பது போல் நடிக்க நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டேன் மைதிலி..”
அவன் மூச்சுக்காற்று தன் கன்னத்தில் தகிப்பதை எச்சில் விழுங்கி சகித்தவள், “நடிக்காமல் உண்மையாகவே அடித்திருந்தீர்களானால் மிகவும் இலகுவாக இருந்திருக்கும்..” மீண்டும் குத்தினாள்..
பரசுராமன் பதிலின்றி மெல்ல தன் நெருக்கத்தைக் குறைத்துக் கொண்டு விலகுவதை உணர்ந்தவள்..
“உங்களுக்கு நீங்கள் நினைப்பது உடனே நடக்க வேண்டும் அவ்வளவுதானே..?” தொடர்ந்து சீண்டினாள்.
“ஆமான்டி எனக்கு எப்போதும் நான் நினைப்பது தான் நடக்க வேண்டும்.. இப்போது என்ன நினைக்கிறேன் தெரியுமா..?”




அவனது வேக குரலில் கலவரம் வர, மைதிலி சுதாரித்து திரும்பும் முன் பின்னிருந்து அப்பலாய் அவள் மேல் படிந்து கொண்டான்.. அழுத்தமாக அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்..
மைதிலி அவனைத் தள்ள முயல, அவளது காதுக்குள்.. “ஷ் மைதிலி அசையாமலிரு.. பின்னால் வந்தனா இருக்கிறாள்..” சொல்லிவிட்டு அடுத்த கன்னத்தில் இதழ் பதித்தான்..
மைதிலி கண்களை இறுக மூடி அவன் அணைப்பிற்குள் துவண்டு நின்றிருந்தாள்.. பரசுராமன் அடுத்து தன் இதழ்களை அவள் பின் கழுத்தில் பதித்தவன், அதே நிலையிலேயே சிறிது நேரம் இருந்தான்..
“போய்விட்டாள்..” முணுமுணுத்தான்.. மைதிலி வேகமாக அவன் அணைப்பிலிருந்து வெளியே வந்து அவனை முறைத்தாள்..
“என்ன இது.. அவள் சொல்லித்தான் நீங்கள் என்னை அடிக்கிறீர்கள் என்ற அவளது குற்றவுணர்வை போக்கவும், உங்கள் மேல் அவளுக்கு இருக்கும் நல்ல அபிப்ராயம் மாறவும் என்னுடன் சண்டையிடுவது போல் நடிக்க சொன்னால், அவள் முன்பே அப்படி.. செய்கிறீர்களே..”
“எப்படி செய்தேன் மைதிலி..?” பரசுராமன் அப்பாவியாய் விழி விரித்தான்.. மைதிலி ஆத்திரத்துடன் பற்களை கடித்தாள்..




“உன் யோசனை சரிதான் மைதிலி.. நான் கூடுதலாக புருசன் பொண்டாட்டி சண்டை பொழுது போனால் போய்விடும் என்பதையும் காட்ட விரும்பினேன்..” பரசுராமனின் பார்வை அர்த்தத்தோடு மைதிலி மேல் படிந்தது..
“எல்லா சண்டைகளும் அப்படி உடனே மறந்து போய் விடுவதில்லை..” மைதிலி பிடிவாதமாக சொல்லிவிட்டு அடுப்பு பக்கம் திரும்பிக் கொண்டாள்..

What’s your Reaction?
+1
6
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!