Serial Stories Sollamal Thotu Sellum Thenral

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 37

37

புளகாங்கிதமடைய வைக்கும் உன்
புன்னகை இதழ்களின் நியாயங்களை
நானே தான் உருவாக்கிக் கொள்கிறேன்..




“திடுமென இங்கே இனிப்பிற்கு எங்கே போவீர்கள்..?” மைதிலி குறுநகையுடன் அவனை பார்த்தாள்..
அந்த அறையை ஆபிஸ்ரூம் என்று பெரிதாக சொல்லிக் கொண்டாலும் அப்படி சொல்வதற்கான அடையாளம் அந்த அறையின் நடு மையத்தில் கிடந்த பெயின்ட் உதிர்ந்த, பரசுராமன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த சிறிய மர மேஜை ஒன்றுதான்..
மற்றபடி அந்த அறையிலும் சுற்றி மளிகை சாமான்களே அடுக்கப்பட்டிருந்தன.. சாக்கு மூட்டைகளும், ஓலைப் பெட்டிகளுமாக நிறைந்து கிடந்த அந்த இடத்தில் டேபிளை தவிர, இருவர் நிற்குமளவு மட்டுமே இடமிருந்தது.. இங்கே இனிப்புக்கு எங்கே போவான்.. மைதிலி நினைத்த மறுநொடியே அவள் வாய் தித்திப்பால் நிறைந்தது..
அங்கே ஓலைப்பெட்டியில் இருந்த கருப்பட்டியில் ஒரு துண்டு எடுத்து அவள் வாயில் திணித்திருந்தான் பரசுராமன்.
“உடன்குடி கருப்பட்டி மைதிலி.. சுத்தமாக ருசியாக இருக்கும்..”
திடுமென இனிப்பு நிரம்பிய தனது வாயால் திணறிய மைதிலி.. “ம்.. என்ன இது…” சிணுங்க, அவள் இதழோரம் லேசாக வடிந்த எச்சிலை தனது ஆட்காட்டி விரலால் தொட்டெடுத்து தன் நாக்கில் வைத்துக் கொண்டான் பரசுராமன்..
“இனிப்பான செய்தி கேட்ட எனக்கு.. இனிப்பும் வேண்டாமா..?” மைதிலியின் உடல் சிலிர்க்க முகம் சிவந்தது..
“கருப்பட்டி நல்ல டேஸ்ட் தானே மைதிலி..?”




மைதிலி பதில் சொல்லாமல் அவன் முகம் பார்க்கவும் முடியாமல் தடுமாறி தலை குனிந்த போது..
“எக்ஸ்கியூஸ்மீ நான் உள்ளே வரலாமா..?” என வெளியிலிருந்து ரவீந்தர் குரல் கேட்க, கணவனை விட்டு விலகி நின்று கொள்ள எண்ணி தன்னை பார்த்த மைதிலி அதிர்ந்தாள்.. என்ன இது..? இது எப்போது நிகழ்ந்தது..?
அவள்.. மைதிலி.. அவள் கணவனின்.. பரசுராமனின் மடியில் அமர்ந்திருந்தாள்.. சாப்பிடாத இடது கையால் வளைத்து அவளை மடிமேல் இருத்தியிருந்தவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த வலது கையால் அவளுக்கு கருப்பட்டி ஊட்டிக் கொண்டிருந்தான்.. முதலில் அவள் கல்யாண்-வந்தனா விசயம் சொன்ன போது உற்சாக கூவலுடன் அவளை இழுத்துக் கொண்டானே.. அப்போதே இது நடந்திருக்க வேண்டும்..
கடவுளே கிட்டத்தட்ட கால்மணி நேரமாக அவனது மடிமீதா அமர்ந்திருந்திருக்கிறேன்.. மைதிலிக்கு நொடியில் உடல் வியர்த்து விட வேகமாக அவனை விட்டு விலகி எழுந்து நின்றாள்..
“அதில் உட்காரு மைதிலி..” பரசுராமன் மெல்லிய குரலில் ஒரு மூட்டையை கையை காட்ட, தன் கால்களின் நடுக்கத்தை மறைக்க மைதிலிக்கும் இப்போது இந்த அமர்வு தேவைப்பட்டது.
“சாப்பிட்டாச்சா அண்ணா..” கேட்டபடி உள்ளே வந்த ரவீந்தரை பார்த்தும் மைதிலிக்கு அந்த சந்தேகம் வந்தது.. இவன் எப்போது வந்தான்.. பார்த்திருப்பானோ.. ஐயோ பார்த்திருந்தானால் போச்சு.. வெறும் பார்வைக்கும் பேச்சுக்குமே நூறு கிண்டல் பேசுவான், இப்போது இந்த நெருக்கத்தை வேறு பார்த்திருந்தானானால்.. மைதிலி தலையை கைகளில் தாங்கிக் கொண்டு குனிந்து கொண்டாள்..
“ஆமாண்டா நீ உட்கார்ந்து சாப்பிடு..” சொல்லிவிட்டு தன் இலையை சுருட்டி எடுத்துக் கொண்டு சாதாரணமாக போன பரசுராமனின் முதுகை முறைத்தாள் மைதிலி..
எமகாதகன் எல்லாம் இவனால் வந்தது.. இவனை யார் உற்சாகத்தை இப்படிக் காட்ட சொன்னது..? நகம் கடித்தாள்..
“ரவிக்கு சாப்பாடு போடு மைதிலி..” பரசுராமன் சொல்ல அவனை முறைத்தாள்.. கையும், காலும் நடுங்கிக் கொண்டிருக்கும் போது அவள் எங்கே சாதம் பரிமாற..?
“நான் போட்டுக்கிறேண்ணா.. ஏண்ணா அண்ணி உங்களிடம் அந்த விசயத்தை சொன்னார்களா..?” கேட்டபடி ரவீந்தர் சாப்பிட அமர்ந்தான்..




“எந்த விசயத்தை..?”
“அதுதான் அண்ணா.. நீங்கள் அரிவாள் தூக்கிக் கொண்டு ஓடிவந்ததை..”
மைதிலி வேகமாக எழுந்து இலையோரம் இருந்த அப்பளத்தை எடுத்து ரவீந்தர் வாயில் திணித்தாள்.
“அப்பளம் எடுத்துக்கோங்க.. சாப்பிடும் போது என்ன பேச்சு..? பேசாதீர்கள்..” என்றாள்.. ரவீந்தர் விழித்தான்..
அப்போது ஒரு போன் வர பரசுராமன் பேசியபடி வாசல் பக்கம் நகர்ந்து நின்றான்.
ரவீந்தர் “ஏன் அண்ணி..?” என்றான்..
“அ.. அதெல்லாம் அவருக்கு தெரியாது.. நீங்க அந்த விசயமெல்லாம் பேச வேண்டாம்..”
“என்ன அண்ணி இதுவரை நீங்கள் அண்ணனிடம் சொன்னதில்லையா..?” ஆச்சரியமாக கேட்டான்.. அவன் அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விசயத்தை சொல்லி இருவரையும் கலாட்டா செய்யும் நோக்கத்தில் இருந்தவன்..
“இனித்தான் சொல்ல வேண்டும்..” மைதிலி சமாளித்துக் கொண்டிருக்கையில், பரசுராமன்..
“மைதிலி எனக்கு ஒரு வெளி வேலை வந்துவிட்டது.. வருகிறாயா.. உன்னை வீட்டில் விட்டு விட்டு போகிறேன்..” என அழைக்.. மைதிலி வேகமாக தலையை உருட்டியபடி கிளம்பிவிட்டாள்..
இரண்டு நாட்கள் கழித்து பரசுராமன் மைதிலியிடம் விசாரித்தான்..
“என்ன மைதிலி எதுவும் மாற்றம் தெரிகிறதா..?”
“ம்ஹூம்..” மைதிலி உதட்டை பிதுக்கினாள்..
“எப்போதும் போல் இரண்டு பேரும் பட்டும் படாமலுமாகத்தான் இருப்பது போலிருக்கிறது..”
“இதோ நம்மை போன்று கட்டிலும், பாயும் தனித்தனியாகத்தான் அங்கேயும்..?”
மைதிலியிடமிருந்து பதில் வராமல் போக, அவளை திரும்பிப் பார்த்தான்..
“என்ன மைதிலி சத்தத்தைக் காணோம்..”




“சரியான கேள்விக்கு மட்டும்தான் இங்கே பதில் கிடைக்கும்..”
“நான் கேட்டது சரியில்லாத கேள்வியா..? தவறு இருக்கிறதா அதில்..?”
மைதிலி வாய் திறப்பதாக இல்லை..
“நீ வந்தனாவிடம் பேசேன் மைதிலி..”
“ஆமாம் பேசத்தான் போகிறேன்..” மைதிலியின் உடனடி பதிலுக்கு ‘ம்’ கொட்டியவன் கண்களை இறுக மூடிக்கொண்டான்..
“எனக்கு என்னை நினைக்கவே ரொம்பவும் கேவலமாக இருக்கிறது மைதிலி..” வந்தனாவின் குரலில் அழுகையின் ஆரம்பம் தெரிந்தது.. மைதிலிக்கு ஆயாசமாக வந்தது..
என்ன பெண்ணிவள்.. ஏதாவது ஒரு விசயத்தை எப்படியாவது நினைத்துக் கொண்டு மனதை வருத்தியே தீருவேன் என்ற முடிவில் இருப்பவள்..
“எதற்கு வந்தனா..?” கேட்டுவிட்டு அவள் பதில் சொல்ல வாய் திறக்கும் முன்பாகவே..
“இதோ பார் திரும்ப உனக்கு துரோகம் செய்து விட்டேன், குற்றம் செய்துவிட்டேன் என்று ஆரம்பத்திலிருந்து வராதே.. ஒரு வாரமாக உன் வாயிலிருந்து அதை மட்டுமே கேட்டு கேட்டு என் காதுகளில் ஓட்டை விழுந்து விட்டது. திரும்பவும் அதையே பேசினாயானால் நான் பின்விளைவுகளை பற்றி நினைக்காமல் இதோ இங்கே குதித்து விடுவேன்..” எதிரேயிருந்த தெப்பக்குளத்தைக் காட்டினாள்..
அவர்கள் இருவரும் மதுரை மீனாட்சியை தரிசிக்க வந்திருந்தனர்.. ஆணாதிக்கம் அடர்ந்திருந்த அந்தக் காலத்திலேயே அத்தனை ஆண்களையும் அடக்கி நாட்டையே ஆண்டவளாயிற்றே அந்த அன்னை.. அவளிடம் தங்கள் வாழ்க்கை செழிக்க வேண்டிக்கொண்டு, இருவருமாக தெப்பக்குள படிக்கட்டுகளில் வந்து அமர்ந்திருந்தனர்.. வந்தனா திரும்பவும் சோககீதம் வாசிக்க ஆரம்பிக்க மைதிலி அவளை அதட்டிக் கொண்டிருந்தாள்..
வந்தனா புன்னகைத்தாள்..




“நான் அதனை சொல்ல வரவில்லை மைதிலி.. என் வாழ்க்கையைப் பற்றி பேச வந்தேன்..”
“ம்.. இது ஓகே சொல்லு..” மைதிலி கன்னத்தில் கை வைத்து கதை கேட்க தயாராக, வந்தனா அவள் தலையில் கொட்டினாள்..
“ஏய் நான் எவ்வளவு சோகமாக என் நிலைமை சொல்ல போகிறேன்.. நீ சீரியல் பார்ப்பவள் போல் உட்கார்ந்திருக்கிறாயே..”
“என் மேல் தப்பில்லம்மா.. நீதான் சீரியல் ஹீரோயின் மாதிரி மூக்குறிஞ்சிக் கொண்டு இருக்கிறாயே.. பிறகு எனக்கு அந்த பீலிங்தானே வரும்..”
“ஹீரோயினா..? நானா..? நான் சீரியல் வில்லியாக கூட தகுதியில்லாதவள்.. எனக்கு போய் ஹீரோயின் போஸ்ட் கொடுக்கிறாயே..”
வந்தனாவின் வேதனையில் மைதிலி துணுக்குற்றாள்.. இத்தனை வேதனையா.. இவள் மனதில் என்னதான் இருக்கிறது..?
“சீரியல்களிலெல்லாம் இப்போது ஹீரோயினை விட வில்லிகளுக்குத்தான் அதிக வாய்ப்பு வந்தனா.. அதுவும் வில்லிகள்தான் ஹீரோயின்களைவிட அழகாக இருக்கிறார்கள்.. ஹீரோயின்களைவிட அழகான வில்லிகளுக்குத்தான் அதிக ரசிகர்களும் இருக்கிறார்கள்.. நீயும் அதுபோல் ஒரு அழகான ராட்சசியாக இருந்து விட்டு போயேன்..”
“சரிதான் என்னையெல்லாம் மனித பிறப்பில் சேர்க்கவே முடியாது.. நான் ராட்சசி இனமாகத்தான் இருக்கும்.. அந்த சூர்ப்பனகையின் அவதாரமாக இருப்பேனாயிருக்கும்..”
இதற்கு மேல் தாங்க முடியாமல் மைதிலி வந்தனாவின் தோளில் பட்டென அடித்தாள்..
“நீ இப்படி வாய்க்கு வந்தபடி உளறுவதை நிறுத்தப் போகிறாயா இல்லையா..? அப்படி என்ன பெரிய தப்பு செய்து விட்டாய் நீ..?”
வந்தனா மைதிலியை இமைக்காமல் பார்த்தாள்..
“நம் வீட்டில் எல்லோரும் என்னைக் குழந்தையாக நினைக்கின்றனர் மைதிலி.. உனக்கு மட்டும்தான் என் மறுபக்கம் தெரியும்.. என் குரூரத்தை நீ மட்டுமே அறிவாய்.. உனக்கு கூட நான் செய்த தப்பு புரியவில்லையா..?”




“நம் வீட்டில் நானும் ஒரு உறுப்பினர் வந்தனா.. அங்கே எல்லோருக்கும் நீ குழந்தை என்றால் எனக்கும் அப்படித்தான்.. சொன்ன பேச்சு கேட்காமல் அடாத செயல்கள் செய்யும் பிள்ளையை நேர்மையான தாய் தண்டிப்பாளே தவிர ஒதுக்க மாட்டாள்.. கொஞ்சம் பொறாமை கொண்ட பிடிவாதக் குழந்தை என்பதை தவிர உன்னிடம் எனக்கு வேறு எந்த குற்றமும் தெரியவில்லை..”
வந்தனா விம்மலுடன் மைதிலி மடியில் சாய்ந்து விட்டாள்.. ஏதோ பேச வாய் திறந்தவளின் இதழ்கள் மேல் தன் கைவிரல்களை வைத்து அழுத்தினாள் மைதிலி..
“என்னைப் பற்றி எதுவும் பேசக்கூடாது.. உன்னை, உன் கணவனை உங்கள் வாழ்க்கையை பற்றி மட்டும் பேசு..”
“என்னை பற்றியா.. நா.. நான்.. ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன் மைதிலி..?”
“ப்ச் திரும்ப உளற ஆரம்பித்து விட்டாயா..?”
“ஒழுக்கம்தான் ஒரு பெண்ணிற்கு உயிர்.. நா.. நான் அதனையே காற்றில் பறக்க விட்டு விட்டு..”
“வந்தனா உன் நிலைப்பாடு எனக்கு சத்தியமாக புரியவில்லை..”
“கொஞ்சம் யோசி மைதிலி புரியும்.. இதனை உன்னைத்தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.. இந்த கேவலத்திற்கான தீர்வை நான் வேறு யாரிடமும் பெறவும் முடியாது..”




“ஏய் மேலும் மேலும் புதிர் போடாமல் என்னவென்று சொல்லித் தொலைடி..” மைதிலி எரிச்சலுடன் கத்தினாள்.
“அண்ணனை காதலித்து விட்டு தம்பியை திருமணம் செய்து கொண்டிருக்கிறேனே.. நான் எவ்வளவு கேவலமான பெண்ணாக இருப்பேன் மைதிலி..”
வந்தனா விம்ம, மைதிலிக்கு அவளது மன உளைச்சலுக்கான காரணம் புரிந்தது.. அதே நேரம் கல்யாண்-வந்தனாவின் வாழ்க்கையை சீர் செய்து விடலாமென்ற நம்பிக்கையும் வந்தது.

What’s your Reaction?
+1
7
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!