Serial Stories கன்னம் வைத்த கள்வனே

கன்னம் வைத்த கள்வனே – 80

80

பிரத்தியேகமாய் உனக்கென விளைவித்திருந்த
மலர் தோட்ட மலர்கள்
வண்ணம் வண்ணமாய் மலர்ந்து கொண்டிருந்தன .
இன்றிலிருந்து ஏனோ நீர் வண்ணத்திற்கு
மாறிவிட்டன ,
இத்தனை வெயிலையும் கடந்து செல்ல
என்னிடம் அன்பு இருக்கிறது ,
ஆனாலும் …
சுதந்திரமென கூறி என் விலாப்புற சிறகுகளை
மட்டும் பிடுங்கி விடாதேடா
ராட்ச்சா ….





சிலு சிலுவென்ற காற்று இப்போது உடலின் ஆடைகளை ஊடுருவி உட் புகுந்த்து .சிலீரென ஒரு இதம் உடல் முழுவதும் ஏற்பட , விழி மூடி குளிர்ந்து விட்ட தன் உடலின் சிலிர்ப்பை அனுபவித்தாள் ஜோதி .

இந்த இயற்கைக்குத்தான் எத்தனை பெரிய சக்தி இருக்கிறது .எத்தனை பெரிய மனபாரத்தையும் நொடியில் இல்லாமல் செய்து விடுகிறதே .இத்தனை நேரம் காரணமறியாமல் மனதை அழுத்திக் கிடந்த பாரம் கரைய   சிலீரிட்ட உடலால் மனமும் குளிர , சிப்பியாய் மூடிக்கிடந்த தன் விழிகளை திறக்கும் எண்ணமில்லை அவளுக்கு .

இந்த  குளிர் சூழலை நாவாலும் சுவைப்பவள் போல் நா ஊறிய எச்சிலை விழுங்கி , தொண்டை  அசைத்தாள் .இனிமையாய் தொண்டையிலிருந்து நெஞ்சமெல்லாம் நிறைந்த்து அச்சூழல் .

” ரொம்ப சுவீட்டோ …? ” எதிரிலிருந்து கேட்டது ஹர்சவர்த்தனின்    குரல் .

இவ்வளவு நேரமும் அந்த லேப்டாப்பை கட்டி மேய்த்தானே இப்போது இங்கே ஏன் வந்தானாம் …? செல்லமாய் சிணுங்கியது அவள் உள்ளம் .

காது வழியே உள்ளே புகுந்து   வசீகரிக்கும் அந்த குரலுக்கு வசியப்பட விரும்பவில்லை அவள் இதயம் .

சாதாரணமாக குரல் மட்டும் கேட்டதுமே முகம் பார்க்க தூண்டும் கவர்ச்சி நிறைந்திருந்த ஆண்மையும் , ஆளுமையுமான குரல்தான்  ஹர்சவர்த்தனுடையது. .ஆனாலும் விழி திறக்கவில்லை அவள் .

தன்னையறியாமல் திறந்து விடுமோ …எனப் பயந்தோ என்னவோ …இன்னமும் இமைகளை இறுக்கிக் கொண்டாள் .சூழலோடு அந்த குரலையும் உட்சேர்த்து விழுங்கி உள்ளம் முழுதும் பரப்பினாள் .




” கண்ணை திறந்து பார்க்கலாமே ….” 


திறவாத கண்களுடன் அழகாக தலையசைத்து மறுத்தாள் .

” உன் ஜிமிக்கிகள் மிக அழகு மகரா ….” திடுமென   ரசித்து ஒலித்தது அவன் குரல் .

பெரிய மகராசா போல புடை சூழ இவ்வளவு நேரமாக வலம் வய்தானே …இப்போது மட்டும் இவனது வேலைகளை விட்டு விட்டு எதற்காக என் முன்னால் வந்து உட்கார்ந்திருக்கிறானாம் …? மனதிற்குள் அவனுக்கு வக்கலம் காட்டிக் கொண்டாள் .

விழி திறக்காது இறுக்கி தன் கோபத்தை அவனுக்கு காட்டினாள் .

ஹர்சவர்த்தனின்  விரல்கள் வெகு ஜாக்கிரதையாய் அவள் காது ஜிமிக்கியை மட்டுமே தொட்டு , வருடி விலகியது .ஆனால் காது மடலை தொட்டு வருடியது போல் அவள் நரம்புகளில் ஒரு சிலிர்ப்பு ஓடியது .

கொதித்தோடிய குருதி ஓட்டத்திற்காக மீண்டுமொரு முறை நா  சுவைத்து  எச்சில் விழுங்கிக் கொண்டாள் அவள் .

” ம் … தவம் …  போதும் .எழுந்து மேலே வா ….” உத்தரவு போல் சொல்லிவிட்டு மேலேறிய அந்த பாதங்களின் ஓசையில் அதிகாரமான ஆண்மைத்தனம் இருந்த்து .

அவனது அருகாமை விலகி விட்டதை உணர்ந்து விழித்தவளின் பார்வையில் மேலே செல்லும் இரும்பு ஏணியின் உச்சி படிகளை கடந்து கொண்டிருந்த அடர் சாம்பல் நிற ஜீன்ஸ் அணிந்த கால்கள் பட்டன .

சட்டென தன் மோன நிலை கலைத்தவள் , பாதி ஆளை உள் விழுங்கியது போன்றதொரு மென்மையுடன் அவளை அணைத்திருந்த அந்த மென் சோபா இருக்கையிலிருந்து எழுந்தாள் .வேகமாக அந்த இரும்பு படிகளில் ஏறினாள் .

ஒரு நேரம் ஒரு ஆள் மட்டுமே , அதுவும் பாதி பாதங்களை மட்டுமே வைக்கும் அளவிலான மிக குறுகிய படிகள் அவை .

இதிலெப்படி அத்தனை வேகமாய் ஏறினான் .சிந்தித்தபடி ஜாக்கிரதையாக பாதம் வைத்து கைபிடியை பிடித்துக் கொண்டு ஏறி உச்சியை அடைந்தாள் .

மேற்புறம் காணக் கிடைத்த காட்சிக்கு தானாகவே வாய் திறந்து கொண்டாள் .விழி விரித்துக் கொண்டாள் .




 

எத்தனை அழகு …இதோ இப்படி பார்க்கும் விழிகள் அதிகமின்றி அநாதை போல் கொட்டிக் கிடக்கும் இத்தனை இயற்கையையும் இப்படி ஒரே நேரத்தில் காணக் கிடைக்கும் போது , ஹப்பா ….உண்மையிலேயே அவளுக்கு மூச்சு முட்டியது .

எதை பார்க்க ….எதை விட …பரபரத்து அங்குமிங்கும் அலை பாய்ந்தன  அவள் விழிகள் …

கரும்பச்சை விரவிக் கிடந்த அந்த கடல் நீரை …கருந்திட்டுக்களாய் இடையில் கிடந்த பெரும் பாறைகளை….கை கோர்த்துக் கொண்டது போல்  வரிசையாக போகும் மலை தொடர்களை ….அவற்றின் மீது கவிந்து கிடந்த வெண் முகில்களை …எழும்ப முடியாமல் தவித்தபடி மேகங்களுக்குள் அமுங்கி கிடந்தபடி , பிடிவாதமாய் மெல்லிய கீற்றாய் தன் ஒளி சிதற விடும் ஆதவனை ….அழுந்தி வந்தாலும் பிடிவாதமாய்  வெளிப்பட்ட வெண்ணொலியை , உள் வாங்கி இளஞ்சிவப்பாய் ஒளிர்வித்துக் கொண்டிருந்த நீலமா ….சிவப்பா ..என சந்தேகம் கொள்ள வைக்கும் வானம் .

எதை பார்க்க ….? எதை விட ….?

பிரமிப்பில் ஒரு மாதிரி கிறங்கிப் போனாள் அவள் .நாலு நாள் பட்டினி கிடந்தவனின் முன்னால் தலை வாழையிலை விருந்து பரிமாறப்பட்டால் , எதை எடுக்க , எதை திங்க …எனத் திணறுவானே ….அது போல் திணறினாள் .

” அதோ …அங்கே பார் .அதுதான் தீவு ..  நாம் ….நெருங்கி விட்டோம் ….”

வன்மையும் ,வலிவும் நிறைந்த நீள் விரல்களை அவள் முன் நீட்டி  சுட்டினான் ஹர்சவர்த்தன்  .இப்போது ஜோதியின்  விழிகள் சுற்றுப்புறத்திலிருந்து அந்த விரல்களுக்கு தாவியது .

மென்மையான  இளஞ்சிவப்பு ரோஜாவை நுனியில் பதிவித்தது போன்ற நகங்கள் அமைந்த நீள் விரல்கள் .புறத்தில் மிக மெல்லிய ரோமங்கள் சுருண்டிருந்து ஆண்மையை பறைசாற்றியது .சட்டென அந்த விரலை தொட்டு இரு விரலால் வருடி உருவ தோன்றியது .

” அங்கே பார்  என்றேன் “

அழுத்தமான அவனது நினைவுறுத்தலில் அவசரமாக விரலிலிருந்து திரும்பிக்கொண்டு , மீண்டும் எதிரே பார்வை பதித்தாள் .

அங்கே முதலில் பார்வையில் பட்டது , அடர்த்தியாய் இருந்த தென்னை மரங்கள்தாம் .மிக நெருக்கமாக வரிசை வரிசையாக பள்ளியில் இறை வணக்கம் சொல்லும் சீருடை அணிந்த குழந்தைகள் போல் அழகாக அமைந்திருந்த அந்த மரங்கள் .





பார்க்க …பார்க்க அவை அருகே நெருங்கி வந்தன .வா …என்னிடம் வா …எனக்குள் வா , என அவை கை நீட்டி அழைப்பது போலிருந்த்து .

ஜோதிக்கு  திடுமென உடல் வியர்க்க தொடங்கியது .புறங்கழுத்து வியர்த்து முதுகில் வியர்வை வடிய தொடங்கியது .கையால் நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்டாள் .திடீரென ஏன் இப்படி வியர்க்கிறது ….?

இவையெல்லாம் இப்போது பார்க்கும் புது இடங்கள் போல் தோணவில்லையே ….முன்பே பார்த்த இடங்கள் போல் அல்லவா இருக்கிறது ….

அந்த மரக்கூட்டங்களை உற்று நோக்கினாள் .உடனடியாக அந்த மரக்கூட்டங்களுக்குள் ஓடிப்போய் தொலைந்து போக வேண்டுமென விரும்பினாள் .அதே நேரம்….வேண்டாம் அவை வேண்டாம் பின்வாங்கி தப்பி போய்விடுவோமென நினைத்தாள் .

இப்போது இன்னமும் அதிகமாக வியர்க்க ஆரம்பிக்க , வீசிய காற்றும் வெக்கையை கொடுத்தது .திடுமென இப்படி சூழல் மாறுவது ஏன் …? இது அந்த இடத்தின் …அதோ நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த தீவின்  …ஏதோ ஓர் பாதிப்போ ….? பயம் கலந்த ஓர் ஆர்வம் அவளுள் .வேண்டாமென்றும் , வேண்டுமென்றும் இரு வேறு உணர்வுகளுக்கிடையே நூலாடி பறந்தபடி திக் …திக்கென தன்னை நெருங்கிக் கொண்டிருந்த அந்த நிலப்பகுதியை பார்த்தாள் .

” அழகான இடம் இல்ல …? ” சிலாகித்த ஹர்சவர்த்தனின்  குரலில் அதே காந்த தன்மை .

” இந்த நிலத்தை ஊராக உருவாக்க வேண்டியது உனது பொறுப்பு மகரா .எத்தனை இடர் வந்தாலும் அந்த பொறுப்பிலிருந்து நீ பின்வாங்க கூடாது “

” இதை …இதையேதான் …இந்த இடங்களையெல்லாம்  நான் முன்பே பார்த்திருக்கிறேன் ஹர்சா ….”

” இந்த தீவையா …? எங்கே …? “

” என் கனவில் …”

” வாட் ….? “

” ம் .ஒரு முறை உங்களிடம் கூட சொல்லியிருக்கிறேனே .என் கனவுகளை .இந்த இடம்தான் .இதே இடத்திற்குத் தான் இது போல் படகு பயணமாக வந்திருக்கிறேன் . அத்தோடு ஒரு ஊரின் சில இடங்களை …கோவில் , பார்க் , வீடு என்பது போன்றவற்றை நான் ப்ளான் போட்டு உருவாக்குவது போன்று கூட எனக்கு கனவு வரும் ….”

” அச்சா …அப்போது  …உன் வேலைகளெல்லாம் உனக்கு கனவிலேயே வரும் …”




” ம் …அப்போது அப்படித்தான் நினைத்தேன் ஹர்சா .இது போல் இடங்களை ப்ளான் போட்டு நானே கட்ட வேண்டிமென்ற ஆசைதான் எனக்கு கனவாக வருகிறதென நினைத்தேன் ….”

உச்சந்தலையிலும் , முகத்திலும் நீர்த்துளிகள் சிதறின .துடைத்துக் கொண்டாள் .மழை வர போகிறதா என்ன …? அதுதான் அவ்வளவு வெக்கையா …?


” சரிதான் .அப்போ இந்த இடம் , வேலை எல்லாம் பிடித்திருக்கிறதுதானே  …? ” .

ஜோதி சட்டென திரும்பி ஹர்சவர்த்தனின் கண்களை சந்திக்க நினைத்தாள் .  அந்த கண்கள் தான் அவளுக்கு தேவையான உண்மையான  விபரங்களை தரும் .

உடனடி முடிவெடுத்து பின்னால் நின்றிருந்த    அவனை பார்க்க விருட்டென திரும்பினாள் .குபீரென அவள் முகத்தின் மீது கொத்தாக விழுந்த்து நீர் .

அவன்தான் எதிலோ நீரெடுத்து அவள் முகத்தில் ஊற்றியிருக்கிறான் .அவனை பார்ப்பதை தடுக்கவா இப்படி செய்தான் …? முகத்தில் வழிந்த நீரை துடைத்தபடி கண் விழித்து பார்த்தாள் .

” போதும் கனவிலிருந்து விழித்து நனவுக்கு வா ….” விரல் நீட்டி உத்தரவிட்டான் .

” ஹர்சா …ஏன் இப்படி இன் டீசன்டாக நடந்து கொள்கிறீர்கள் …? ” ஜோதி கோபத்தில் கத்தினாள் .

” இன்டீசன்ட் ….? நானா …? உன் பேமிலியா …? “

இவன் இப்போது எதற்கு என் குடும்பத்தை இழுக்கிறான் .ஜோதி குழம்பினாள் .

படகு கரையை அடைந்து தட்டி நின்றது .மேலும் சிலர் படியேறி மேலே வரும் சத்தம் கேட்டது .

கை விரல்களை சொடுக்கி தீவை காட்டினான் ஹர்சவர்த்தன் .

” கடைசியில் உன்னை இங்கே கொண்டு வந்துவிட்டேன் ….” வெற்றி பெற்ற  மன்னவன் போர்க் கைதியை இழுத்து வருவது  போன்ற முக பாவத்துடன் இருந்தான் அவன் .

” என்ன சொல்கிறீர்கள் ஹர்சா …? ” ஜோதிக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது .

ஹர்சவர்த்தன் கோபமானவன்தான் .அவனை ஜோதிக்கு நன்றாகவே தெரியும் .அவன் ஜோதியிடம் அன்பாக குழைந்து நின்ற நேரங்களை விட , சினத்தோடு சீறி நின்ற பொழுதுகள்தான் அதிகம் . அடக்கி வைக்கப்பட்டு , ஒரு அச்சாவில் தெறிக்கும் அவனது கோபம் உச்சந்தலையை தாக்கி உள்ளங்காலை சில்லிட வைக்கும் .




 

ஏன் …தனது காதலையும் , மோகத்தையும் கூட அவன் ஜோதியிடம் ஆக்ரோசமாகத்தான் இது வரை வெளிக்காட்டியிருக்கிறான் . அப்போதெல்லாம் மனத்துள் பயமிருந்தாலும் இவனது இந்த வேகத்தை தன்னால் எதிர் கொள்ள முடியுமென்ற உள் மன தைரியம் அவளுள் உள்ளோடியபடி இருக்கும் .அதனால் திமிராடும் விழியோடு இது வரை அவனை எதிர் நோக்கியிருக்கிறாள்.

ஆனால் இப்போதோ …இதோ முகம் சிவக்கும் கோபத்துடன் கண்கள் கன்ன்று நிறகும் இந்த ஹர்சவர்த்தன் அவளுக்கு புதியவன் .இ …இவனை அவளால் தாங்க முடியுமா …?

பரிதவித்து பார்த்த ஜோதியின் பார்வையை அவன் அலட்சியப்படுத்தினான் .

” இது போலத்தான் கலங்கிய கண்களுடன் ஒரு பெண் உன் வருகைக்காக இரண்டு வருடங்களாக இங்கே காத்துக் கொண்டிருக்கிறாள் ….ம் .இறங்கு .அவளுக்கு பதில் சொல்லவேண்டும் நீ ….” ரௌத்ரமாய் பேசிய ஹர்சவர்த்தனின் கோபத்தில் ஜோதி தலை சுற்றி மயங்கும் நிலைக்கு போனாள் .

  •                                      -அடுத்த பாகத்தில் தொடரும் –‘

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!