Serial Stories கன்னம் வைத்த கள்வனே

கன்னம் வைத்த கள்வனே – 79

79

காற்றின் குரலாக அன்பை சொன்னவன்
நேற்று வரை மட்டுமே ஜீவித்திருந்தான்
இன்று என் வானம் சாம்பல் பூத்துவிட்டது
மருதா நதி துவங்கும் அடர் கானகமொன்று
எனக்கருகே அமைந்து விட்டது ,
பின்னும் …
என் உட்காருமிடம் மட்டும்
இந்த சிறிய ஜன்னலாகவே இருக்கிறது
அதென்னவோ … அதன் கதவாக 
நீதானடா இருக்கிறாய் ராட்ச்சா ….




” உடம்பை பார்த்துக்கொள் …”

” தினமும் போன் பண்ணு …”

” அங்கே பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள் …”

” அவர்கள் திருப்தியானால்தான் உங்கள் திருமணம் என்பதை மறக்காதே ….”

” நல்லபிள்ளையாக நடந்து சீக்கிரமே உங்கள் திருமணத்திற்கு அனுமதி வாங்கி விடு ….”

” அவர்கள் அனுமதி கொடுத்ததும் இங்கே வந்துவிடு .நம் ஊரில் வைத்துதான் நம்  சொந்த பந்தங்களை கூட்டி உனது திருமணம் ….”

” இடையில் மாப்பிள்ளை கொடுத்த வேலையையும் பார்த்துக் கொள் . அந்த வேலையை அழகாக பார்த்தாயானாலே மாப்பிள்ளையின் அம்மா , அப்பாவிறகு உன் மேல் நல்ல அபிப்ராயம் வரும் …”

தாத்தா பரமசிவத்திலிருந்து அந்த வீட்டு கடைக்குட்டி சுபத்ரா வரை எல்லோருமே ஜோதியை அறிவுரை மழையில் நனைத்துவிட்டனர் .

ஜோதியை வழியனுப்ப   பெரிய வேன் நிறைய எல்லோருமாக சென்னைக்கே வந்துவிட்டனர் .விமானநிலைய வாசலில் நின்றபடிதான் இத்தனை அறிவுரைகளும் ஜோதிக்கு கிடைத்தது .

” எதற்காக எல்லோரும் வெளியில் நின்றே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் …? எங்களை வழியனுப்ப உள்ளே வரவில்லையா …? ” ஹர்சவர்த்தன் புன்னகையுடன் கேட்டான் .அவன் இவ்வளவு நேரமாக இவர்களது பாசப் பரிமாறல்களுக்கடையே வராமல் ஓரமாக ஒதுங்கி இருந்தான் .

” நாங்களும்  உள்ளே வரலாமா …? ” பிரமிப்புடன் அந்த விமான நிலையத்தை அண்ணாந்து பார்த்து கேட்டார் மரிக்கொழுந்து பாட்டி .

” தாராளமாக வரலாம் பாட்டி .இதோ உங்கள் எல்லோருக்கும்  என்ட்ரஸ் டிக்கெட்  வாங்கிட்டேன் . வாங்க ….” ஹர்சவர்த்தன் பாட்டியின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு அவரை அணைத்தபடி விமான நிலையத்தற்குள் நுழைந்தான் .




பரக்க பரக்க வேடிக்கை பார்த்தபடி அனைவரும் கூட்டமாக உள்ளே நுழைந்தனர் .

ஒரு ஹைலெவல் பணக்காரத்தன ஆணுக்குரிய அத்தனை இயல்புகளையும் கொண்டவன் ஹர்சவர்த்தன் . உனது பட்டிக்காட்டு கும்பல் என்னுடன் ஏர்போர்ட் வரை வருவதை நான் விரும்பவில்லை …இப்படி நேரடியாக சொல்லாவிட்டாலும் , பூசி மெழுகுவதான ஏதோ ஒர் சப்பை காரணத்தை சொல்லி  அவர்களை தடுத்திருக்கலாம் .ஆனால் எனது குடும்பத்தை அவனது குடும்பமாக நினைப்பதால் தானே இது போலெல்லாம் அவனால் இயல்பாக இவர்களுடன் இருக்க முடிகிறது .

  அவனுக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த  ஜோதியின் விழிகள் காதலுடன் அவனது பரந்த  முதுகில் பதிந்தன .அவன்தான் முதுகிலும் கண்களை வைத்திருப்பானே ….சட்டென திரும்பி காதல் ததும்பி வழிந்து கொண்டிருந்த ஜோதியின் பார்வையை சந்தித்து விட்டான் .

தடுமாறிய ஜோதியின் விழிகளை மென்று தின்பவன் போல் பார்த்து அவளை தவிக்க வைத்தவன்  , சரி விடு … பார்த்து விட்டு போ  என்பதாக பெருந்தனமை பாவனை காட்டி   தனது பார்வையிலேயே   அவள் தவிப்பை  ஒத்தியும் எடுத்தான் .

” ராட்ச்சன் …” ஜோதி செல்லமாக அவனை மனதிற்குள் வைது கொண்டாள் .

” இனிய ராட்ச்சன் …”  இதழ் தித்திக்க தனக்குள் அவனை சீராட்டிக் கொண்டாள் .

” கவனம் ஜோதி ….” குரலில் லேசான தளுதளுப்புடன் தன் கை பற்றிக்கொண்ட மதுரத்தை ஆச்சரியமாக பார்த்தாள் ஜோதி .

” அத்தை ….”

” என்னடி அப்படி பார்க்கிறாய் …? இப்படி எங்கேயோ ஒரு கண் காணாத தீவிற்கு உன்னை அனுப்பி விட்டு நாங்கள் இங்கே நிம்மதியாக இருந்து விடுவோமா …? ” வடிவழகி மறுபுறம் நின்று கையை பற்றினாள் .

” சின்னத்தை …”

ஜோதி இருவரையும் ஆச்சரியமாக பார்த்தாள் .




” சும்மா முட்டை கண்ணை உருட்டாதடி . புது ஊர் , புது குடும்பம் , புது வேலை …பார்த்து  சூதானமாக நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா …? “

” ஆமாம் .நம் குடும்பத்தின் தரம் குறையும் எந்த வேலையையும் செய்து விடாதே .இன்னார் வீட்டு பெண் என அந்த வீட்டினர் உன்னை பெருமையாக மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும் .அந்த அளவு புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் ….”

திக்கி திணறி வந்த வார்த்தைகளுக்கிடையே  அவர்கள் இருவரும் மறைக்க முயற்சித்த கண்ணீர் துளிகள் இருந்தன. ஜோதி நெகிழ்வுடன் இருவரையும் அணைத்துக் கொண்டாள் .கொஞ்சலுடன் அவர்கள் தோள்களில் சாய்ந்து கொண்டாள் .

மாமாக்களின் மனைவியாகத்தான் அத்தைகள் நமக்கு அறிமுகமாகிறார்கள் .ஆனால் இலை நிறைய சோறள்ளி வைக்கையிலோ , கை நிறைய தின்பண்டம் திணிக்கையிலோ , தலை நிறைய பூவள்ளி சூடுகையிலோ ….திடீர் பிரிவின் நெருக்கத்தில் கலங்குகையிலோ …ஏதோ சில வாழ்வியல் நேரங்களில் அவர்கள் நமக்கு மறு தாயாகி விடுகின்றனர் .

” ஏட்டி அழுறியா என்ன …? ” மதுரம் அவளை நெம்பினாள் .

” ம் .அத்தை …அ…அம்மா …போல ….அம்மா நினைவு ….”

” நீயே இப்படி மூக்குறிஞ்சிட்டு நின்னா உன் அம்மாவை நாங்க எப்படி சமாதானப்படுத்த …? நிமிருடி …நேர நிமிர்ந்து  நில்லு …” செல்ல அதட்டலுடன் மருமகளை சமாதானப்படுத்தினர் அத்தைகள் .

ஜோதி அத்தைகளை விட்டு கலையரசியை நெருங்கி அணைத்துக் கொண்டாள் .” போய்விட்டு வர்றேம்மா “

கலையரசி கேவலுடன் மகளின் தோளில் முகம் புதைத்துக. கொண டாள் . ” எப்படி ஜோதிம்மா உன்னை விட்டுட்டு இருக்க போகிறேன் …? “

” ஏய்  கலை அவளை என்னைக்குன்னாலும் அவ புருசன் வீட்டுக்கு அனுப்பி வைக்கத்தானே செய்யனும் .அது மாதிரி நினைச்சுக்கோ . புள்ளையை சிரிச்ச மூஞ்சியா அனுப்பி வைக்காம , மூக்குறிஞ்சிட்டு ….” மகளை அதட்டி விட்டு பரமசிவம் முகத்தை திருப்பி கண்ணீரை தோள் துண்டால் துடைத்துக் கொண்டார் .

பாட்டி , அம்மா , அக்கா என ஒவ்வொருவரிடமும் ஜோதி அழுகையோடுதான்   விடை பெற்றாள் .

ஆண் , பெண் வித்தியாசமின்றி அனைவரும் கண்ணீர் விட்டு கலங்கி அழுதுதான் ஜோதிக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர் .அந்த விமான நிலையமே அவர்களை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தது .

எல்லோருக்கும் கை கொடுத்து விடை பெற்ற ஹர்சவர்த்தன் கதிரேசனை அணைத்துக் கொண்டான் .

” உங்களுக்குத்தான் நான் ரொம்ப நன்றி சொல்லவேண்டும் கதிரேசன் …”




” ஜோதி  சின்னப்பிள்ளை சார் .அவளை பத்திரமாக பார்த்துக்கோங்க ….” பாடுபட்ட வந்த அழுகையை அடக்கினான் அவன் .

சமாதானமாக அவன் தோள் தட்டியவன் ஜோதியை ஆதரவாக தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் .

அந்த செய்கையிலேயே  எல்லோரும் திருப்தியாகி கண்ணீர் துடைத்து தலையசைத்தனர் .இருவரும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்து நின்றிருந்தனர் .

” என்ன சார் புது கல்யாணமா …? வெளி நாட்டிற்கு உங்கள் பெண்ணை அனுப்புகிறீர்களா …? ” யாரோ ஒருவர் ஆதரவாக விசாரிக்க …சுந்தரம் மறுப்பு சொல்ல வாய் திறக்கும் போதே ….

” ஆமா சார் .எங்கள் வீட்டு செல்ல பொண்ணு . அவள் புகுந்த வீட்டிறகு போகிறாள் …” பரமசிவம் தளுதளுத்தார் .கேட்டவர் சமாதானமாக தாத்தாவின் தோளை தட்டி விட்டு போனார் .

ஜோதியும் , ஹர்சவர்த்தனும் ஏறிய விமானம் வானில் புள்ளியாக மாறும் வரை பார்த்திருந்து விட்டு , அவர்கள் அனைவரும் தங்கள் ஊருக்கு கிளம்பினர் .

இன்னமும் சுரந்து கொண்டிருந்த கண்களை மறைக்க சன்னல் வழியே பார்த்தபடி அமர்ந்திருந்த ஜோதியின் தோளை தனது தோளால் உரசினான்  ஹர்சவர்த்தன் .

” என்னங்க மேடம் கொஞ்சம் அக்கம் பக்கம் பார்ப்பது …”

” ம் …” என திரும்பிய ஜோதியிடம் டிஷ்யூவை நீட்டினான் .

” துடைத்துக்கொள் மகரா .பின்னால் சாய்ந்து நன்றாக தூங்கு . அங்கே போனதும் உனக்கு தூக்கம் இருக்குமோ என்னவோ …? “

” ஏன் …அப்படி சொல்கிறீர்கள் …? “

” ம் …என்ன வேலையாக வருகிறாய் என மறந்து விட்டாயா ..? ”
” என்ன வேலையாக வருகிறேன் …? “

ஹர்சவர்த்தனின் பெற்றோரின் மனதில் இடம் பிடித்து அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும் .இது மட்டும்தான் ஜோதயின் மனதில் ஓடிக்கொண்டிருந்த்து .இதில் தூக்கம் போவதற்கு என்ன இருக்கிறது …

” நான் சொன்ன தீவு வேலை நினைவில்லையா …? ” ஹர்சவர்த்தனின் குரலில் நிச்சயம் எரிச்சல் இருந்த்து .




” ஓ …ஆமாம் .சாரி நான் அதை மறந்துவிட்டேன் …” கெஞ்சலாய் சொன்னாள் .

” இனி மறக்காதே .இப்போது தூங்கு .நானும் ….” பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு பின்னால் சாய்ந்து கண்களை மூடிக் கொண டான்  .

” இப்போது எங்கே போகிறோம் …? ” மெல்ல கேட்டாள் .

” போர்ட் ப்ளேயருக்கு .அங்கிருந்து நம் தீவிற்கு போட்டில் ….”

அங்கே யார் …யார்  இருக்கிறார்கள் …? அவர்கள் எல்லோரும் எப்படிப்பட்டவர்கள் …? அவர்களிடம் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் .இது போல் அவனிடம் கேட்பதறகு ஆயிரம் கேள்விகள் ஜோதியினுள் முட்டி மோதிக் கொண்டிருந்த ன .ஆனால் கண்களை இறுக மூடிக் கொண்டவனிடம் எதனை கேட்க முடியும் …?

ஜோதியின் மனதில் சிறு நெருடல் வர , அவசரமாக அந்த நெருடலை துரத்தினாள் .

அவன் வீட்டினருக்கு என்னை அறிமுகப் படுத்தும் டென்சன் ஹர்சாவிற்கு …தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் , ஹர்சா அப்படியெல்லாம் டென்சன் ஆகுபவன் கிடையாதே என்ற கேள்வியும் அவளுள் எழாமல் இல்லை .

ஹர்சவர்த்தனுக்கு அம்மா , அப்பா ஒரு தங்கை உண்டு என்பது அவளுக்கு தெரியும் .அவர்களில் யார் …எப்படி ….அவர்களை எப்படி எதிர்கொள்வது …குழப்பும் கேள்விகளுடன் கண் மூடிக்கொண்ட ஜோதி அந்த குழப்பம் போகாமலேயே சிறிது நேரத்தில் தூங்கிப் போனாள் .

போர்ட் ப்ளேயரில் அவர்கள் செக் இன் முடிந்து வெளியே வரவுமே அலாவுதீன் விளக்கு பூதம் போல் அந்த பெண் அவர்கள் முன் தோன்றினாள் .

” வெல்கம் சார் …? ” பொக்கே ஒன்றை ஹர்சவர்த்தன் கையில் கொடுத்து விட்டு அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் .

அந்த முத்தத்தில் அதிர்ந்து நின்ற ஜோதியை கவனிக்க அங்கு யாருமில்லை .ஹர்சவர்த்தன் தன் கை பொக்கேயை திடுமென அவனை சுற்றி சூழ்ந்து விட்டவர்களில் ஒருவனின் கையில் எறிந்து விட்டு , கூடவே அந்த விளக்கு பூதத்தின் முத்தத்தையும் கீழே போட்டு  விட்டு படபடவென நடக்க ஆரம்பித்தான் .

” மை செகரட்டரி ஷ்ரத்தா …” அந்த பூதத்தின் அறிமுகம் இது .

ஜோதியை அவளுக்கு …அங்கே யாருக்குமே அவன் அறிமுகப்படுத்தவில்லை .நல்லவேளை …அறிமுகம் பண்ணவில்லையென ஜோதி நினைத்தாள் .ஏனெனில் அவளுக்கான அவனது அறிமுகம் ப்ரெண்ட் என்பதாக இருந்து விடுமோ என்ற பயம் அவளுக்கு அப்போது வந்திருந்த்து .

” இஸ் எவ்ரிதிங் கோயிங் குட் …? “




” யெஸ் சார்…”

தொடர்ந்த அவர்களது உரையாடல்கள் தெளிவான உயர்தர ஆங்கிலத்தில் இருந்தன. ஜோதிக்கு சிறிதும் புரிபடாத பல்வேறு தொழில்களை பற்றியவையாக அவை இருந்தன .அவனை சூழ்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் அவனது ஒவ்வொரு தொழிலின் பிரதிநிதியாக இருக்கவேண்டும் .

அவர்கள் விமானநிலையத்தில் இருந்து காரில் ஏறும்வரை , அந்த பெரிய  காரினுள்ளும் கூட   அந்த புரிபடாத உரையாடல்கள் தொடர்ந்தன .

ஜோதிக்கு அந்நிய தேசத்தில் குடியேறிய உணர்வு ஏறபட கண்களை இறுக மூடிக்கொண்டாள் .திடுமென கார் நிறுத்தத்திற்கு வர , கண்களை திறந்த போது எல்லோரும் கீழே இறங்கியிருந்தனர் .

வேகமாக தானும் இறங்க போன ஜோதி கையில் வைத்திருந்த தனது போனை தவறவிட்டிருந்தாள் .அதனை சுற்று முற்றும் தேட , அதறகுள் பத்தடி நடந்திருந்த ஹர்நவர்த்தன் இன்னமும் காரினுள்ளேயே உட்கார்ந்திருந்த ஜோதியை பார்த்து முகம் சுளித்து திரும்ப வந்தான் .

” என்ன …? ” எரிச்சலாக கேட்டான் .

” வ …வந்து எ…என் போன் ….”

” ப்ச் …என்ன சிறுபிள்ளைத்தனம் ….? ” அதட்டலுடன் தனது போனை எடுத்து அவளுக்கு அழைத்தான் .

எங்கோ ரிங் சத்தம் கேட்க , குனிந்து ஜோதி சீட்டுக்கடியில் கிடந்த போனை எடுக்கும் முன் , உடனிருந்தவர்களில் ஒருவர் மறுபக்க கதவை திறந்து  குனிந்து போனை எடுக்க , அதன் திரையில் ராட்ச்சன் என்ற பெயர் மின்னியபடி இருந்த்து .

போனை எடுத்தவர் ஒரு மாதிரி விழித்தபடி அதை ஜோதியிடம் கொடுக்க , ஜோதி அதனை அவசரமாக வாங்கி அழைப்பை கட் பண்ணியபடி ஹர்சவர்த்தனை பார்க்க அவன் முகத்தில் சிறு மாற்றம் தெரிந்த்து .

இவன் பார்த்து விட்டானோ ….? இல்லையென முடிவெடுத்துக் கொண்டாள் .ஏனெனில் நொடியில் அவன் திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டான் .




அடுத்து அவர்கள் பயணம் ஒரு மெகா சைஸ் படகில் ஆரம்பமானது .அத்தனை பெரிய படகில் மிக சிலரே அவர்களுடன் ஏறிக்கொள்ள ஹர்சவர்த்தன் லேப்டாப்பை விரித்து வைத்தபடி தொழில் பேச ஆரம்பிக்க ….

படகு நீரில் மிதக்க மிதக்க ஜோதியின் மனம் ஏதோ நினைவுகளில் தடுமாற ஆரம்பித்தது .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!