Serial Stories கன்னம் வைத்த கள்வனே

கன்னம் வைத்த கள்வனே – 77

77

நிதம் வரும் நிரந்தர கனவுகளில்
நீ வருகையிலெல்லாம் ,
என் வீட்டு பின் தோட்டத்தில்
மஞ்சள் தாமரைகள் மலர்ந்திருந்தன
கை பிடிக்க நீ கட்டியம் கூறிய போது
ஒழுங்கற்ற மேகமொன்றை பிடித்தபடி
வானில் வழுக்கிக் கொண்டிருந்தேன்
வானவில் இறையும் முன்பே
என்னை வளைத்தெடுத்து
வண்ணமாய் கொஞ்ச
வந்து விட டா ராட்ச்சா …




” என்ன பிரச்சினை அங்கிள் …? ” ஒன்றுமறியாதவனாக பதவிசாக சுந்தரத்திடம் கேட டான் ஹர்சவர்த்தன் .

” ஒன்றுமில்லை தம்பி . நாங்கள் கொஞ்சம் எங்கள் குடும்ப விசயம் பேசிக் கொண்டிருந்தோம் ….” விலகி போ என பரமசிவம் சொல்லாமல் சொல்ல …

” சார்தான் நேற்று சாமியாடி சொன்ன விபரங்களை என்னிடம் சொன்னார் அப்பா ….” வடிவேல் சொன்னார் .

ஆமாம் …இவன்தான் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தவன் .இப்போது முடிக்க போகிறவன் போல் வந்து நிறகிறான் ….ஜோதியின் மனதில் இப்போது ஹர்சவர்த்தன் குறித்த கலவரம் வந்திருந்த்து .

இவன் பிரச்சினையை முடிப்பானா …? அதிகப்படுத்துவானா ….? கவலையாக அவனை பார்த்தாள் .

.”  ஆமாம் தாத்தா .நானதான் சொன்னேன் .எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையென்றாலும் , அவர் சொன்னது நம்ம மகரஜோதியை பற்றியாயிற்றே . அதை அவ்வளவு அலட்சியமாக விட முடியவில்லை .அதனால்தான் அங்கிளிடம் விபரம் கேட்டேன் …”

பாவி …போட்டுக் கொடுத்த ராட்ச்சன் நீதானா …என்ற பார்வை பார்த்த நடராசனுக்கு பதிலாக இந்த விளக்கத்தை கொடுத்தான் .

தப்பை செய்துவிட்டு , அதையே எல்லோருக்கும் சரியாக்கி காட்டி விடுகிறானே …இந்த வித்தையை இவன் எங்கே கற்றிருப்பான் …ஜோதியின் விழிகள் தேன் ஈயாய் அவனையே மொய்த்தன .

” சாமியாடி சொன்னதுதான் இப்போது  பிரச்சினை தம்பி.ஜோதி எங்கள் வீட்டு செல்ல பெண் .அவளுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்துவிட்டு அதனை என் பெண்ணும் , மருமகனும்   எங்களடமிருந்து மறைக்கிறார்கள் .காரணம் தெரியவில்லை .அந்த சாமியாடி சொன்னது எதுவும் நடந்து விடுமோவென எங்களுக்கு பயமாக இருக்கிறது ….”

” அவர்கள் மறைப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கலாமே தாத்தா ….? “

” என்ன பெரிய காரணம் இருந்து விட போகிறது …? இவர்கள் பார்த்தது ஒரு தகுதியில்லாத வரன் என்பதை தவிர ….”

பரமசிவத்தின் கத்திப்பார்வை கலையரசி , நடராசனை குத்தி எடுத்தது .

” தாங்கள் பார்த்த வரன் உங்களுக்கு பிடிக்குமோ …பிடிக்காதோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாமில்லையா …? “




” ம் …அதை வெளிப்படையாக  சொன்னால்தானே நாங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும் …”

” அதுவும் சரிதான.சொல்லி விடுங்களேன் அங்கிள் …” நடராசனிடம் பேசிய ஹர்சவர்த்தனை பாவிப்பயலே எனப் பார்த்தாள் ஜோதி .நடராசனும் கலையரசியும் தவித்து விழித்தனர

ஹர்சவர்த்தன் தோள்களை குலுக்கிக் கொண்டான் .

” அவர்கள் ரொம்பவும் பயப்படுகிறார்கள் .நானே சொல்லிவிடுகறேன் .பிறகு முடிவெடுப்பது உங்கள் கையில்தான் தாத்தா ….” கை கட்டி பரமசிவம் முன்னால் போய் நின்றான் .

வேண்டாம் …வேண்டாம் சொல்லாதே மனதினுள் கூக்குரலிட்ட ஜோதியை அவன் திரும்பிப் பார்த்தானில்லை .

” மகராவின் அப்பா அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை…. நான்தான் தாத்தா ….,” கைகளை விரித்து பரமசிவத்தின் முன் தலை குனிந்து நிமிர்ந்தான் .

கலையரசியும், நடராசனும் காதில் கேட்டதை நம்ப முடியாமல் விழித்து நிற்க , ஜோதி அப்படியே உறைந்து நின்று போனாள் .

” வேறு மொழி , வேறு இனம் …இதனால்தான் என்னை உங்களிடம் மாப்பிள்ளையாக அறிமுகப்படுத்த தயங்கியபடி இருந்தார் ….”

” மாப்பிள்ளை இது உண்மையா …? ” பரமசிவம் நம்பமுடியாமல் கேட்க ,

மறுப்பதா …ஆமோதிப்பதா எனத் தெரியாமல் ஒரு மாதிரியாக தலையசைத்து வைத்தார் நடராசன் .

” அதெப்படி உங்களை …நீங்கள் ..ரொம்ப பெரிய மனிதர் .உங்களை எப்படி …? ” சுந்தரத்தின் குரல் குழறியது .

” ஜோதி எனக்காக ஒரு ஹோட்டல் ப்ராஜெக்ட் செய்தாள் .அப்போது எனக்கு ஜோதியை மிகவும் பிடித்து விட்டது .ஜோதிக்கும் என்னை மிகவும் பிடித்துவிட்டது .நான் முறையாக  அவள் அப்பாவிடம் மணம் முடிக்க கேட்டேன் .அவர் உங்களை சொல்லி தயங்கினார் .நானே உங்களை சாமாதானப்படுத்துவதாக சொல்லி இங்கே வந்து தங்கினேன் ….”




இதுதான் நடந்த்து …இதுதான் உண்மை என்பது போல் சிறு பிசிறுமின்றி சொல்லிக் கொண்டே போனான் .

அடப்பாவி எத்தனை பொய்கள் …எப்படியெல்லாம் ஜோடித்து பேசுகிறான் .கொஞ்சம் கூட நாக்கு கூசாமல் அடுக்கடுக்காக இப்படி புளுகுகிறானே ….ஜோதி இமை தட்டாமல் அவனது அளப்புகளை பார்த்தபடி நின்றாள் .

” சரிதானே அங்கிள் ….? ” ஹர்சவர்த்தன் நடராசனிடம் திரும்பி கேட்க அவர் ஆமாமென தலையசைத்தார் .அவருக்கு மனதினுள் ஒரு வேளை இவன் சொல்வது உண்மைதானோ என்ற எண்ணம் வந்திருந்த்து .

மகளை திரும்பிப் பார்க்க அவள் ஒரு வித பிரமிப்பு தன்மையுடன் ஹர்சவர்த்தன் மேல் பார்வையை பதித்தபடி இருக்க , இது உண்மைதான் போல என நடராசன் தன் மனைவியுடன் பார்வை பரிமாற்றங்களை நடத்தினார் .

” இப்போது பதில் சொல்ல வேண்டியது நீங்கள்தான் தாத்தா ….” அழுத்தமான குரலில் பரமசிவத்திற்கு நினைவூட்டினான் ஹர்சவர்த்தன் .

பரமசிவம் தடுமாறினார் .ஒரு மாதமாக அவர்கள் வீட்டிலேயே தங்கி அவர்களுடன் உண்டு , உறங்கி இருந்த ஹர்சவர்த்தனின் அவர் அறிந்த குணத்திற்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுப்பார் .அவனது செல்வமும் , செல்வாக்கும் எக்ஸ்டிரா போனஸ் .

ஆனால் …

” அப்பா அந்த தம்பி மதம் , சாதி , மொழி ….? ” வடிவேல் சன்னமான குரலில் அப்பாவிடம் குனிந்து பேச ,

” நானும் உங்களை போல் முருகனை கும்பிடுபவன்தான் அங்கிள் .அதனால் உங்கள் ஆட்சேபங்களில் மதத்தை எடுத்து விடுங்கள் …” குரல் கொடுத்தான் ஹர்சவர்த்தன் .

கதிரேசன் தாத்தா காதருகே குனிந்து ” தாத்தா இது போல் ஒரு கோல்டன் ஆப்பர்சுனிட்டியை மறுப்பவன் நிச்சயம் அடிமுட்டாள் …” என முணுமுணுத்தான் .

” என்னது …? ” பரமசிவம் புரியாமல் பார்க்க ….

” கோல்டன் ஆப்பரசுனிட்டி தாத்தா .தங்க வாய்ப்பு .இதெல்லாம் எல்லோருக்கும் வாய்க்காது .உங்கள் பேத்திக்கு வாய்த்திருக்கிறது .கெடுத்து  விடாதீர்கள் “

” சின்னப்பயலே வாயை மூடுடா  …” தாத்தா உறும , அவன் ஜோதியின் அருகே நகர்ந்து நின்று …

” ஜோதி இவுங்க சரிப்பட்டு வரமாட்டாங்க .நீ பேசாமல் ஹர்சா சாரோட ஓடிப்போயிடு …” என ஐடியா கொடுத்தான் .




” டேய் எந்த நேரத்தில் எதைடா பேசுற …? ” ஜோதி பல்லை கடித்தாள் .

” சரியான நேரத்தில் சரியான ஐடியா கொடுக்கிறேன் .ஆனாலும் நீ இப்படி ஒரு அமுக்குனியா இருந்திருக்க கூடாது ஜோதி ….”

” என்னடா சொல்ற …? “

” நீயும் , ஹர்சா சாரும் லவ்வர்ஸ்னு எனகிட்ட ஒரே ஒரு கோடி காட்டுனியா  நீ ….? “

நானும் , ஹர்சாவும் லவ்வர்சா ….ஜோதியினுள் காஷ்மீரத்து மேகம் ஒன்று உருவாகி பனியை பொழிந்தது .அவள் திரும்பி ஹர்சவர்த்தனை பார்க்க அவன் ஜாக்கிரதையான முகத்துடன் தாத்தாவை பார்த்தபடி இருந்தான் .அடுத்து வந்து விழப்போகும் கேளவிகளை எதிர்கொள்ள தயாரானதோர் பாவனையில் இருந்தான் .

” ஆமாம் ஜோதி இப்படி ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்து விட்டாயே …? ” அனபு தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டான் .

” ஆனால் எனக்கு தெரியுமே …” மல்லிகா கிசுகிசுத்தாள் .

” நான் கூட சந்தேகப்பட்டேன் …” சுபத்ராவும் வந்தாள் .

” எனக்கும் கூட அப்பப்ப சந்தேகம் வரும்பா …” சுவாதியும் இவர்களுடன் இணைந்து கொண்டாள் .

ஜோதிக்கு பயம் வந்த்து .இல்லாத ஒன்று இவர்கள் அனைவருக்கும் எப்படி தெரிந்திருக்கும் …?

” ஏய் எல்லோரும் உளறாதீங்க …” எதையோ அவர்களிடம் மறைக்க போராடினாள் ஜோதி .

” ஜோதிக்கு பார்த்த மாப்பிள்ளையை பற்றி கேட்டபோது , இவள் அப்போதே ஹர்சான்னுதான் சொன்னாள் …” மல்லிகா போட்டு உடைத்தாள் .

” நாங்க இரண்டு பேரும் ஹர்சா சாரை சும்மா பார்த்தால் கூட இவளுக்கு பொறுக்காது .கடுகடுன்னு எங்கள் மேல் விழுவாள் ….” சுபத்ரா கண்டுபிடிப்பு திலகமானாள் .

சுவாதி மட்டும் மஹிந்தரின் குழப்பத்தில் கொஞ்சம் யோசனையாக நின்றாள் .ஆனாலும் இவர்களுக்கிடையே காதலென்றால் அதற்கு முதல் சாட்சி நானென கை தூக்குவாள் போலிருந்தாள்.

” ஹர்சா சார் என்னை தேடி வந்து உங்கள் வீட்டில் தங்கலாம்னு இருக்கிறேன்னு சொன்ன போதே நான் புரிஞ்சிட்டிருக்கனும் ….” கதிரேசன் தனது தாமத புரிதலுக்கு வருத்தப்பட்டான் .

” ஹர்சா எங்கே வெளியே போனாலும் ஏதாவது டிரிக் பண்ணி ஜோதியையும் கூட்டிட்டே போவாரே ….” அனபு தன் பங்குக்கு கண்டுபிடித்தான் .

” ஜோதிக்கு ஆக்சடென்ட் ஆனப்ப ஹர்சா சார்தான் ஹாஸ்பிடலில் சேர்த்து ஒரு நாள் முழுவதும் கூடவே இருந்து பார்த்துக் கொண்டார் ….,” புது தகவல் ஒன்று கொடுத்தாள் சுவாதி .

அடப்பாவிகளா ஆக்சிடென்ட் பண்ணிய ராட்ச்சனே அவன்தான்டா …மனதுக்குள் புலம்பினாள் ஜோதி .

ம்ஹூம் …இவனுங்க யாரும் சரிப்பட்டு வர மாட்டார்கள் .அவர்களை ஒத்துப்போகவும் முடியாமல் , மறுக்கவும் முடியாமல் அவர்களது ரகசிய குரல் காதில் விழாத்து போன்ற பாவனையை காட்டி தள்ளி நின்று கொண்டாள் ஜோதி .




” நான் உலகம் முழுவதும் சுற்றுபவன் .எனக்கு எல்லா மொழியும் தாய்மொழிதான் .அதிலும் தமிழ் எனக்கு மிகப் பிடித்த மொழி …”

ஹர்சவர்த்தன் பரமசிவத்திடம் தனது வேற்று மொழிக்கான வாதாடலில் இருந்தான் .

” ஆனாலும் எங்களால் முழு மனதோடு ஒத்துக் கொள்ள முடியவில்லை தம்பி .உங்களுக்கும் இதே பிரச்சனைதான் இல்லையா மாப்பிள்ளை ….? ” பரமசிவம் இப்போது நடராசனையும் எளிதாக தங்களோடு சேர்த்துக் கொள்ள , அவர் வேறு வழியில்லாமல் தலையாட்டி வைத்தார் .

” சாதி , மதம் , மொழி தாண்டி என்னை பற்றி மட்டும்  யோசித்து பார்த்து ஒரு நல்ல முடிவை எடுங்கள் தாத்தா .”

பரமசிவம் அவஸ்தையுடன் தலையை சொறிந்தார் .

” தம்பி ஜோதியை பற்றி …”

” ஜோதி உங்கள் வீட்டு பெண் .இந்த அருமையான குடும்பத்து பெண் . ஒரு மாதமாக நான் உங்கள் வீட்டின் உற்சாகங்களையும், கோப , தாபங்களையும் , பண்பாடு ,பழக்க வழக்கங்களையும் பக்கத்திலிருந்தே பார்த்து வருகறேன் .நீங்கள் ஐஸ் வைப்பதாக நினைக்காவிட்டால் ….இது போன்ற ஒரு குடும்பத்திலிருந்து  ஒரு பெண்ணை எனக்கு  தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகறேன் .எனது இருபத்தியெட்டு வருட வாழவில் உங்கள் குடும்பத்தை போல் ஒரு அருமையான  குடும்பத்தை நான் பார்த்ததில்லை .உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தின்னாக …இதோ இப்படி உங்களோடு சேர்ந்து .  வருடம் ஒரு முறை சுடலை மாடனுக்கு கொடை கொடுக்கும் உரிமை உள்ளவனாக நானும் மாற விரும்புகறேன் ….”

பேசி முடித்ததும் லேசாக கரகரத்து விட்ட ஹர்சவர்த்தனின் குரல் அவன் உணர்ச்சி வசப்பட்டிருப்பதை காட்டியது .

அவனது அந்த உணர்ச்சிகளை அவன் குடும்பத்தனர் அனைவருக்குள்ளும் கடத்தியிருக்க , பெண்கள் எல்லோரும் கலங்கி விட்ட கண்களை முந்தானையில் துடைக்க , ஆண்கள் நெகிழ்வுடன் அவனை பார்த்தனர் .

ஒரே நிமிடத்தில் அனைவரின் முகத்தையும் ஊடுறுவி அவர்களின்  உணர்ச்சகளை உள் வாங்கிக் கொண்டவன் , தன்னம்பிக்கையுடன் அடுத்த பாயிண்டுக்கு நகர்ந்தான் .

” உங்கள் பேத்தி அறபுதமான பெண் தாத்தா.அவள் வாழ்வை பற்றி  சாமியாடி சொன்ன வார்த்தைகள் பலிக்க கூடாது .பலிக்க நான் விடவும் மாட்டேன் .அவளை பொக்கிசமாய் என் கண்களுக்குள் பொத்தி வைத்து பார்த்துக் கொள்வேன் .நம்பி என்னோடு அவளை அனுப்பி வையுங்கள் தாத்தா …”

இப்போது பரமசிவம் திகைத்தார் .

” உங்களோடு அனுப்பி வைக்கவா …? எங்கே …? “

” என் தீவிற்கு . நான் எனக்காக , என் வருங்கால குடும்பத்திற்கென வாங்கி வைத்திருக்கும் தீவு .அதனை எனக்கான , அவளுக்கான ஊராக மாற்ற வேண்டியதே உங்கள் பேத்திதான் தாத்தா .அது அவளது தொழிலும் கூட .  அதற்காக நீங்கள்என்னுடன்  அவளை அனுப்பி வைக்கவேண்டும் ….”




வழக்கமாக திருமணம் முடிந்து புகுந்த வீடு போகும் பெண்ணை எங்கள் வீட்டை பத்திரமாக காத்து பார்க்க வேண்டியது உன் பொறுப்பு என்றுதான் சொல்வார்கள் .ஆனால் இங்கு இவனோ …..என் ஊரையே நீதான் பார்த்து, காத்து   உனக்கேற்றாற் போல் உருவாக்கிக் கொள்  என்கிறான் …

இந்த பிரம்மாண்ட வித்தியாசத்தில் அனைவரும் வாய் திறக்காத குறையாய் நின்றிருக்க …

” உங்களுடன் அனுப்பி வைக்கவேண்டுமா …? திருமணம் முடிக்கும் முன்பே உங்கள் பின்னால் எங்கள் வீட்டு பெண்ணை அனுப்ப வேண்டும் என சொல்கிறீர்களா …? இது சரியில்லையே …”

முதல் ஆட்சேபத்தை பதிவு செய்தவள் மதுரம் .அவளது கண்கள் கூர்மையாய் ஹர்சவர்த்தனை ஆராய்ந்த்து .

அந்த ஆராய்தலுக்கு அதிக நேரம் கொடுக்காமல்  ஹர்சவர்த்தன் தன் முகத்தை வேகமாக திருப்பிக் கொண்டான் .அவன் முகம் பொலிவிழந்து கருத்தது .

இப்போது வீட்டினர் அனைவரும் குழம்ப தொடங்கினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!