Serial Stories கன்னம் வைத்த கள்வனே

கன்னம் வைத்த கள்வனே – 76

      76

இன்னமும் உடையாமல் ஒன்றேனும் இருக்ககூடுமென
நதியில் தேடுகிறேன் …நீர்க்குமிழியினை ,
ஜீவிதங்களை தேடும் என் தவிப்பையறிந்த அது
நகர்ந்து கொண்டே போகிறது ,
நீயோ …
கரு நீலமாய் என் கோப்பைக்குள்
நிரம்பிக் கொண்டிருக்கிறாயடா
ராட்ச்சா ..

பரக்க பரக்க விழித்தபடி நின்றவளை பார்த்தபடி இருந்த ஹர்சவர்த்தன் பெருமூச்சோடு மெல்ல எழுந்தான் .அவள் தோள் பற்றி கட்டிலில் அமர வைத்தான் .




” தண்ணீர் குடிக்கிறாயா …? ” ஜக்கிலிருந்து அவன் சரித்து கொடுத்த தண்ணீர் டமளரை தள்ளியவள் ,

” நீங்கள் சொன்னது உண்மையா …? ” என்றாள் .

” ஆமாம் .நேற்று சாமியாடி உன்னை பற்றி சொன்ன விசயங்களை நான்தான் உன் சின்ன மாமாவிடம் சொன்னேன் .” அவளருகிலேயே கட்டிலில் அமர்ந்து கொண்டான் .

” ஏன் சொன்னீர்கள் …? “

” ஏன் சொல்லக்கூடாது …? “

” ப்ச் .எதிலும் போல் இதிலும் அகராதித்தனம் பண்ணாதீர்கள் ஹர்சா .சாமியாடி என்னை பற்றி நல்லவிதமாக சொல்லவில்லையே .அது என் வீட்டில் எல்லோருக்கும் வருத்தத்தை கொடுக்காதா ….? “

” ஏன் எனக்கு மட்டும் அது வருத்தத்தை கொடுக்காதா …? அவர்களை போல் எனக்கும் உன் மீது அக்கறை இருக்கிறது மகரா ….”

” உங்களுக்குத்தான் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதே …”

” உன் அப்பாவிற்கும் தான் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது .அவர் குறி கேட்கவில்லையா …? “

” அதுதான் அவர் செய்த தப்பு .எப்போதும் போல் இந்த பக்கமே வராமல் இருந்திருக்க வேண்டும் .எனக்காக வந்துவிட்டு இப்போது மாமாக்களிடம் வாங்கி கட்டிக்கொள்கிறார் …”

” யாரோ ஒரு சாமியாடி ஏதோ சொன்ன விசயம் .உன் அப்பாவை எப்படி பாதிக்கும் மகரா …? “

” தாத்தா , மாமாவிற்கெல்லாம் சாமியாடியின் சொல் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு .அவர் நேற்று சொன்னதெல்லாம் தெரிந்து விட்டதால் என் வாழ்வில் என்ன பிரச்சனை .நீங்கள் என்ன செய்தீர்கள் ? அது …..இதுவென அப்பாவை துருவிக் கொண்டிருக்கின்றனர் .மஹிந்தருடன் திருமணம் பேசி அது நின்று போனது தெரிந்தால் , மகளின் வாழ்க்கையை பார்க்கும் லட்சணம் இதுதானா …என அப்பாவை குத்தி குதறி விடுவார்கள் .அதையெல்லாம் நீங்கள் ஏன் சொன்னீர்கள் …? “




” உன் அப்பாவை குத்தி கொதறட்டும் என்றுதான் ….” ஹர்சவர்த்தன் நிதானமான குரலில் சொல்லியபடி முன்னால் ஸ்டூலில் வைத்திருந்த  லேப்டாப்பை ஷட்டவுன் செய்தான.

நம்பாமல் தன்னை பார்த்துக் கொண்டிருந்தவளிடம் ” நம்பு மகரா .சாமியாடியின் வார்த்தைகளை ஒன்று விடாமல் உன் மாமாவிடம் சொல்லி ,  எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது . ஆனாலும்  மகரஜோதியின் வாழ்வில் ஒன்று நடந்தால் தாய்மாமன்கள் உங்களுக்கு தெரிவிக்க வேண்டுமே…இப்படி சொன்னேன் …” விளக்கமாக சொன்னான் .

” நீயெல்லாம் ஒரு மனுசனா …? என் மேல் உனக்கு கொஞ்சம் அக்கறை இருக்கிறது என தவறாக நினைத்துவிட்டேனே …சை கேவலமான பிறவி நீ …” ஜோதி கொதித்தாள. அருகில் அமர்ந்திருந்தவனின் தோளில் குத்தினாள் .

” உன் போற்றுதலோ …பாராட்டுதலோ எனக்கு தேவையில்லை மகரா .நான் நினைத்த காரியம் எனக்கு நடக்க வேண்டும் .அவ்வளவுதான் …”  தன் தோள் தாக்கிய அவள் கையை நிதானமாக எடுத்து விட்டான் .

” எது நீ நினைத்த காரியம் …? உன் பின்னால் நான் வருவதுதானே …? எழுதி வைத்துக் கொள் .என் தலையே போனாலும் உன் பின்னால் மட்டும் நான் வரமாட்டேன் ….”

” உஷ் ஏன் இப்படி கத்துகிறாய் மகரா …? நான் பக்கத்தில்தான் இருக்கிறேன் .எனக்கு காதும் நன்றாக கேட்கும் .பிறகு எதற்கிந்த கூப்பாடு …? ” ஆட்காட்டி விரல் வைத்து தன் காதுகளை அடைத்துக் கொண்டான் .

ஜோதிக்கு அவனை கன்னம் சிவக்க  அறையும் வேகம் வந்த்து .ராட்ச்சன் …ராட்ச்சன் …இவனை நம்பி …இவன் கைகளில் சிறிது நேரமாவது நெகிழ்ந்து விட டேனே …ஜோதிக்கு தன் மேலேயே அருவெறுப்பாக வந்த்து .

” கீழே உன் அப்பாவை புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் .நீ இங்கே ஜாலியாக என்னோடு இருக்கிறாயே மகரா …பரவாயில்லையா …? ” கிண்டலாக  கேட்டதோடு தன் தோளால் அவள் தோள்களில் இடிக்க வேறு செய்தான் .

அவனது ஸ்பரிசத்தில் முகம் சுளித்து துள்ளி எழுந்து நின்று அவனை முறைத்தாள் ஜோதி .




” ஷ் …என்னை பிறகு எரித்துக் கொள்ளலாம் .முதலில் உன் அப்பாவை போய் பார் …”

  ஜோதியின் உடலில் பரபரப்பு ஒட்டிக் கொண்டது .வேகமாக எழுந்தாள் .

” நீ இந்த வீட்டில் இருப்பது இன்றுதான் கடைசி .உன் பெட்டிகளையெல்லாம் பேக் பண்ணி வை .இன்றே வெளியேற வேண்டும் ….” கதவருகே நின்று  வீட்டு மனுசியாய் ஹர்சவர்த்தனுக்கு  உத்தரவிட்டு விட்டு போனாள் .

” உனக்கும் கூட இங்கே இன்றே கடைசி நாளாக இருக்கலாம் மகரா …” முதுகில் கேட்ட ஹர்சவர்த்தனின் குரலை அலட்சியப்படுத்தி கீழே இறங்கினாள் .

கீழே …

சுந்தரமும் , வடிவேலுவும் சேர்ந்து நடராஜை கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தனர் .

” நம் ஊர் சாமியாடிகள் வாக்கு பொய்க்காது .நம் மகரஜோதியின் வருங்காலம் அவ்வளவு நன்றாக இருக்காதென அவர்கள் சொன்னார்களென்றால் ….எங்கேயோ ஏதோ ..நடந்திருக்கிறது …அல்லது நடக்க போகிறது .சொல்லுங்கள் .நம் மகா வாழ்வு எப்படி இருக்கிறது …? நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் …? “

திரும்ப திரும்ப இதே கேள்விகள் …வெவ்வேறு வித வார்த்தைகளில் …தொனிகளில் கேட்கப்பட்டன .நடராசன் சொன்ன பதில்களில் திருப்தியின்றி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டன .

” ஐயோ …ஏன் அண்ணா எங்களை இப்படி படுத்துகிறீர்கள் …? நாங்கள் பொத்தி பொத்தி பூப்போல் ஜோதியை வளர்த்து வைத்திருக்கிறோம் .நீங்கள் அவளையே அழைத்து கேளுங்களேன் …அவளுக்கு நாங்கள் எந்த குறையும் வைத்ததில்லை …”

” அவளுக்கென்ன  தெரியும் …? அவள் சின்னப்பெண் ….”

” எப்போதும் சுவாதியை விட ஜோதியை நீங்கள் ஒரு படி குறைவாக த்தான் பார்த்திருக்கிறீர்கள் …”

” இல்லை மச்சான் .என் பெரிய பெண் சுவாதியை விட சின்னப்பெண் ஜோதியை என் கண்ணுக்குள் மணியாக பார்த்திருக்கிறேன் …”

” அப்படியா …ஆனால் உங் க மூத்த பொண்ணிற்கு உசத்தியான டாக்டர் படிப்பு .இரண்டாவது பெண்ணிறகு சாதாரண படிப்பா …? “

” நீங்கள் நினைப்பது தவறு மாமா .நான் படித்திருக்கும் படிப்பு சாதாரணமானது கிடையாது .டாக்டர் படிப்பிற்கு இணையானது . அப்பா என்னையும் மெடிக்கல்தான் படிக்க சொன்னார் .எனக்கு அந்த படிப்பு பிடிக்காத்தால் …இந்த படிப்பு பிடித்ததால் இந்த ஆர்க்கிடெக்சரல்சை  தேர்ந்தெடுத்தேன் ….” ஜோதி வேகமாக முன்வந்து தன்னிலை விளக்கம் கொடுத்தாள் .




” அப்படி சொல்ல சொன்னார்களா உன்னை …? ” வடிவேலுவின் கேள்விக்கு வாயை மூடிக்கொண்டாள் .

இவர்கள் இப்படித்தான் கேட்பார்களென தெரியும். அவர்களை பொறுத்தவரை ஜோதி இன்னமும் சிறு குழந்தை .அவள் பிறந்த்தும் மாமன் சீராக பட்டுச்சட்டையும் , தங்க சங்கிலியும் கழுத்தில் அணிவித்து கையில் தூக்கி கொஞ்சினார்களே …அதே சிறு பிள்ளை . அப்படித்தான் அவளை இன்னமும் கொஞ்சிக் கொண்டிருந்தனர் .ஒரு வகையில் அந்த செல்ல பாசம்தான் இதோ இப்படி தாய்மாமன்களை பேச வைத்து கொண்டிருக்கிறது .

இந்த அதீத பாசத்தை தாங்கவும் முடியாமல் , தாண்டவும் முடியாமல்தான் ஜோதி இரு தலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருக்கிறாள் .

டாக்டருக்கே படித்து விடு எனக் கெஞ்சினேனே கேட்டாயா …? நடராசனின் குற்றப் பார்வைக்கு ஜோதி தவித்து தலை குனிந்தாள் .

” இரண்டு பேருக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லையே .மூத்தவளுக்கு முதலில் திருமணம் , அடுத்தவளுக்கு பின்னேயே திருமணம் என்றீர்களே …மகாவோட திருமணம் என்ன ஆச்சு …? “

நடராசன் திணறினார் .இப்படித்தான் அவர்கள் பேசி வைத்திருந்தனர் .அந்த எண்ணத்தில்தான் இரண்டு மகள்களுக்கும் ஒன்று போலவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் .அவரவர் படிப்பிற்கேற்ற மாப்பிள்ளையாக பார்த்தார் .சுவாதிக்கு டாக்டர் மாப்பிள்ளை அமைவது தள்ளிக்கொண்டே போக , ஜோதிக்கு அவளது படிப்பிற்கேற்ற மாப்பிள்ளையாக மஹிந்தர் கிடைத்தான் .இவர்களை விட வசதி படைத்தவர்கள் .திருமணத்திற்கு முன்பே ஜோதியை தங்கள் தொழிலில் கூட சேர்த்துக் கொள்ள நடராசனுக்கு மஹிந்தர் மிக நல்ல வரனாக பட்டான்.

இரண்டு திருமணங்களையும் ஒன்றாக நடத்த விரும்பி ஜோதியின் திருமண நிச்சயத்தை தள்ளிப் போட , ஒரே நேரத்தில் இரு  திருமணம் கிடையாது என முத்துராமன் மறுத்துவிட்டார் .எனவே    சுவாதி திருமணம்முடிந்த உடனேயே      ஜோதியின் திருமணம் என முடிவெடுத்து , அது வரை ஏதாவது நொய் நொய்யென பேசும் சொந்த்த்தற்கு எந்த தகவலும் சொல்ல வேண்டாமென முடிவெடுத்திருந்தனர் .

சுவாதி திருமணத்திற்கு வரும் சொந்தங்களிடம் அப்போது ஜோதி திருமண நிச்சயத்தை சர்ப்ரைசாக சொல்ல நினைத்திருக்க , ஜோதியின் ஆக்சிடென்ட்  அந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டது .

தற்சமயத்திற்கு நின்றதுதானே …அடுத்த மாதமே திரும்பவும் நிச்சயம் , திருமணம் இரண்டையுமே சேர்ந்தாற் போல் நடத்தி விடலாமென எண்ணி , ஜோதியின் திருமண ஏற்பாட்டு விபரம் எதையுமே கலையரசி தனது பிறந்தவீட்டிற்கு தெரியப்படுத்த வில்லை .

ஆனால் திருமணம் நிரந்தரமாக நின்றதுமே இருவருமாக உள்ளுக்குள் பதறியபடிதான் இருந்தனர் .இதற்கான விளக்கத்தை தனது தாய் , தந்தை , சகோதர்ர்களுக்கு எப்படி கொடுக்க போகிறோம் என கலையரசி தவித்தபடி இருந்தாள் .

அந்த தவிப்பை அறிந்த ஜோதி இது விபரம் யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை .திருமணம் நின்றதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை .எனக்கு மஹிந்தரை பிடிக்கவில்லை …என மறைமுகமாக தாய் தந்தையை சமாதானப்படுத்தி வைத்திருந்தாள் .




ஆனால் அந்த மெனக்கெடல்கள் எல்லாமே வீணாகி விடும் போல் இங்கே சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கன்றன. தாத்தா பரமசிவமும் , பாட்டி மரிக்கொழுந்தும் தங்கள் மருமகனை எதுவும் பேசவில்லை என்றாலும் , எங்கள் மகன்களின் கேள்விக்கு பதில் சொல்லி விடுங்களேன் என்பதை ஒரு வித ஆராய்ச்சி கலந்த வேண்டுதல்  போல் வைத்தபடி .  அமைதியாக நடப்பதை பார்த்தபடி இருந்தனர் .

” சுவாதிக்கு வரன் பார்த்தீர்களே  … ஜோதிக்கு எதுவும் வரன்   பார்்த்தஈர்களா மாப்பிள்ளை ..?சுந்தத்தன கேள்விக்கு ஒப்பவும் முடியாமல் , மறுக்கவும் முடியாமல்  திணறிக் கொண்டிருந்தனர் .

” ஆமாம் அப்பா .நம் ஜோதிக்கும் மாமா மாப்பிள்ளை பார்த்திருந்தார் …” நிலைமையை சமாளித்து மாமாவிற்கு உதவுவதாக நினைத்து குரல் கொடுத்து விட்டாள்  மல்லிகா .

” அப்படியா …? அது எப்படி உனக்கு தெரியும் …? “

” அத்தையும் , மாமாவும் ஜோதிக்கு நிச்சயித்த மாப்பிள்ளை …நல்லவர்தான் …ஆனாலும் , எனபது போல் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் .எங்கள் காதில் அரைகுறையாக விழுந்த்துப்பா …” மல்லிகா ஆரம்பித்ததை சுபத்ரா முடித்து வைத்தாள் .

நடராசனும் , கலைவாணியும் மிகவும் சோர்ந்துவிட்டார்கள் .மாப்பிள்ளை பார்க்கவே இல்லையென்று கூட சமாளித்துவிடலாம் , இப்போது யார் மாப்பிள்ளை ..? என்ன விபரம் என்றால் என்ன செய்வது .நிச்சயதார்த்தம் நின்று விட்டது .அதுவும் பெண் சரியில்லையென மாப்பிள்ளை வீட்டிலேயே நிறுத்தி விட்டனர் என்று அறிந்தால் ,தரைக்கு வந்த தங்க நிலவென தங்கள் மருமகளை கொண்டாடிக் கொண்டிருக்கும்  இந்த தாய்மாமன்கள் சும்மா இருப்பார்களா …?

ஜோதி தாங்கள் இது வரை மறைத்து வந்த விசயங்கள் வெளி வரப்போவதை உணர்ந்தாள் .சுருக் சுருக்கென தன் மாமன்களிடம் சொற்குத்து வாங்கப் போகும் தந்தை , தாயை கவலையுடன் நினைத்தாள் .

” ஜோதிக்கு மாப்பிள்ளை பார்த்தீர்களா மாப்பிள்ளை …? “

” யார் அது …? “

” ஏன் எங்களிடம் சொல்லவில்லை …? “

பறந்து வந்து விழுந்த கேள்விகளில் ஒன்றிறகு கூட பதில் சொல்லமுடியாமல் எச்சில் விழுங்கினார் நடராசன் .

சுடலை மாடா உனக்கு படையல் வைத்து கும்பிட்டோமே .என் தாய் , தந்தையை காப்பாற்றப்பா ..  கண் மூடி,.மனதிற்குள் கடவுளை வேண்டி முடித்த ஜோதியின்  மனதில் , கடவுளுக்கு பதில் வந்து நின்ற உருவம்  ஹர்சவர்த்தனேதான் .

இவன் ஏன் மனதிற்குள் வருகிறான் …இவனால்தானே இந்த பிரச்சனைகளெல்லாம் வந்தன …இப்படி வெறுப்புடன் அவள் நினைத்தாலும் அவள் இதழ்கள் அவளையறியாமல் ஏனோ  முணுமுணுத்தன .

” ஹர்சா …”




” அழைத்தாயா மகரா …? “

மறைந்து தோன்றும் மாடனை போல் திடுமென அருகில் நின்றிருந்தவனை விழி விரித்து பார்த்தாள.

தன் இரு விழிகளையும் அழுத்தமாக மூடி நானிருக்கிறேன் என அபயம் சொன்னான் அவன் .

அந்த அபய முத்திரையில் ஜோதியின் மனப்பாரங்கள் எல்லாமே பரிதி கண்ட புல் மேல் பனி போல் காணாமல் போயின .

அந்த நிம்மதியில் இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் ஹர்சவர்த்தன் தான் என்பதையோ …அவன் அப்படி ஒன்றும் மிக நல்லவன் கிடையாது என்பதையோ ….அவன் அடிக்கடி  தன்னிடம் ராட்ச்சதனத்தை காட்டும் ராட்ச்சன் என்பதையோ மறந்தே போனாள் .

அவன் சற்று முன்   சும்மா என்னிடம் வாயாடினான் .இதோ எனக்கொன்று என்றதும் உதவ வந்துவிட்டான்  …இப்படித்தான் அவளது பேதை மனம் அப்போது நினைத்தது .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!