Serial Stories கன்னம் வைத்த கள்வனே

கன்னம் வைத்த கள்வனே – 75

75

பச்சை பகலையும் …சிகப்பு இரவையும்
எனக்குத் தர தெரிந்த உனக்கு ,
பெரு மழைக்காலமொன்றை தரவேண்டும்
அதில் அடித்து செல்லப்பட சிறு காகித கப்பல்களையும்
கொடுக்கவேண்டும் ,
நிரப்ப முடியா வெற்றிடமொன்று என் மனதில்
உன் தீ கொண்டு நீயதை நிரப்பியாக வேண்டும்
அத்தீயருந்தி நான் திளைத்த இரவுகளை
நீ அறியமாட்டாயடா ராட்ச்சா ….

” வொன்டர்புல் ….” ஹர்சவர்த்தனின் கண்கள் அகல விரிந்தன .




” இது பாலைவனப் பகுதி சார் .இதை போய் இப்படி ரசிக்கிறீர்களே …” கதிரேசன் ஆச்சரியப்பட்டான் .

” நான் உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன் கதிர் .ஆனால்  இது போல் ஒரு அழகான பாலைவனத்தை நான் இதுவரை பார்த்ததில்லை …” தன் போனில் போட்டோக்கள் எடுக்க ஆரம்பித்தான் .

அவர்கள்  தேரிக்காட்டில் இருந்தனர் .

” நான் கூட சின்ன வயதில் பார்த்தது . அப்போது பார்த்ததறகும் , இப்போது பார்ப்பதறகும் வித்தியாசம் இருக்கிறது .சின்ன பிள்ளையில் இந்த இடம் வெறும் மணல் மேடுகளாக பார்க்க எரிச்சல் தருவதாக இருக்கும் .ஆனால் இப்போது இது ஒரு அதிசய பூமியாக இருக்கிறது ….” ஜோதியின் விழிகளும் விரிந்து அந்த இடத்தை ஆவலுடன் சுற்றி வந்தன .

” நீ முன்பு இங்கே வந்திருக்கிறாயா மகரா …? “

” ம் .அப்பாவுடன் .அடிக்கடி வருவேன் .அப்பாவிற்கு இங்கே ஒரு  பனந்தோப்பு இருந்த்து .அதனால் அடிக்கடி வருவோம் .இந்த சிகப்பு மணல் பிடித்தாலும் , இந்த வெயிலும் , வெக்கையும் எரிச்சலூட்டும் ….”

ஜோதி வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டாள் .” சை …ஒரே வேக்காடு ….”

மூவருமாக  வியர்வை வழிய , அனல் வீச சுடும் மணலில் நடந்தனர் .தூரத்தில் பனைமரங்கள் வரிசையாக அந்த மணல்காட்டின் காவல் வீரனாக அணி வகுத்து நின்றனர் .செக்கச் செவேரென பஞ்சின் மென்மையோடு அந்த அதிசய மணல் காலடியில் மிதிபட்டது .

” பனந்தோப்புகள் இங்கே அதிகம் போல ….? “

” அந்த தோப்புகள்தான் இந்த மணல் குன்றுகளின் நகர்வை கட்டுப்படுத்துகின்றன சார் ….”

” என்ன …? மணல் நகருமா ….? “




” ஆமாம் சார் .இந்த மணல் பரப்பு தண்ணீர் போல் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு திடீரென நகர்ந்து போய்விடும் . அதனால்  பாதையே மாறிவிடும் .இந்த இடத்திலேயே பழகியவர்கள் கூட பாதை மாறி திணறுவார்கள் ….”

” ம் …அதிசய பூமி ….” கால்களால் பூமியை அளைந்தபடி இருந்த
ஹர்சவர்த்தன் ஓரிடத்தில் கீழே குத்திட்டு அமர்ந்து அந்த மணலை கையில் அள்ளி பார்த்து விரலிடுக்கில் வழிய விட்டான் .

,”நைஸ் சேன்ட் ….”

” எப்படி மாவு மாதிரி இருக்குது பாருங்களேன் …இந்த வெயில் மட்டும் இல்லைன்னா சின்ன பிள்ளைல இதன் மேலேயே படுத்து தூங்கலாம்னு இருக்கும் .இது எனக்கு சாப்டா மெத்தை மாதிரி தோணும் ….”;   ஜோதியும் அவனருகில் அமர்ந்து மண்ணில் விரல் அளைந்தாள் .

” ஜோதி நீயுமாப்பா …? சாருக்குத்தான் இந்த இடமெல்லாம் புதுசு .இதெல்லாம் அதிசயமாக தெரிகிறது .உனக்கென்ன …? “

அடிக்கடி அந்த இடத்தை பார்த்து வளர்ந்தவனல்லவா கதிரேசன் .அதன் சிறப்பு அவனுக்கு தெரியவில்லை .

” இந்த மணலின் மதிப்பு உங்களுக்கு தெரியாது கதிர் …” ஹர்சவர்த்தனின் விழிகள் அந்த மணலை ஆழ்ந்து ஆராய்ந்தன .

” இந்த வெறும் மணலில் அப்படி என்ன இருக்கிறது சார் …? ” கதிரேசனும் இப்போது அவர்களருகே குத்திட்டு அமர்ந்தான் .

” இந்த மணலில் செல்வம் கலந்து கிடக்கிறது ….” ஹர்சவர்த்தனின் விரல்கள் மணலை அதி ஆர்வத்துடன் ஆராய்ந்தன .

” செல்வம்னா ….பணமா ….? “

”   உங்கள் தமிழில்  பணத்திற்கு இன்னொரு பெயர் செல்வம்தானே மகரா ….? “

” இப்போது அது எதற்கு ….? ” ஜோதி பார்வையை கூர்மையாக்கி அவன் மனதை ஊடுறுவ முயன்றாள் .

” ஆமாம் சார்.செல்வம்னா பணம்தான் .நீங்க சொல்லுங்க ….” கதிரேசன் ஆர்வமாக இருந்தான் .

” இந்த மணலில் டைட்டானியம் அதிக அளவில் இருக்கிறது கதிரேசன் . அதை பிரித்தெடுத்தோமானால் அவ்வளவும் பணம் …”




” அப்படியா சார் …? ” கதிரேசன் திறந்த வாயுடன் அவன் முகத்தை பார்க்க அவன் தலையில் நச்சென ஒரு கொட்டு விழுந்த்து .

” என்ன அதிசயத்தை கண்டுட்டன்னு இப்படி வாயை திறக்கிற …? ,”

மணல் அள்ளிக் கொண்டிருந்த ஹர்சவர்த்தனின் கை தட்டி விடப்பட்டது .” எந்திரிச்சு வாங்க …? “

” என்னாச்சு மகரா …எதற்கு திடீர் கோபம் …? “

” எதை பார்த்தாலும் அதிலும் பணம் பண்ணும் எண்ணம்தான் உங்களுக்கு வருமா …? “

” மண்ணையும் பொன்னாக்கும்  வித்தை சாருக்கு கை வரப்பெற்றிருக்கிறது ஜோதி .இதில் தப்பென்ன …? “

” உன் மூஞ்சி .என் ஆத்திரத்தை கிளறாமல் எந்திரிச்சு போயிடு .உன் சாரோட பெருமை பாடுவதானால் அந்தப் பக்கம் தள்ளி போய் நின்னு ….மைக் பிடிச்சு இசையமைத்து கச்சேரியே பண்ணு .என் காதில் விழும்படி பேசாதே ….”

” வர …வர ஜோதிக்கு வல்லுசா அறிவே இல்லைங்க சார் .இன்னும் கொஞ்ச நேரம் இவகிட்ட இருந்தீங்கன்னா மண்ணை அள்ளி மூஞ்சியில தூத்துவா …சீக்கிரம் வாங்க போயிடலாம் .நான் அப்படியே இந்த மணல் மேட்டை ஒரு சுத்து சுத்திட்டு வர்றேன் …” கதிரேசன் எரிச்சலுடன் எழுந்து நடக்கலானான் .

தன் அபிமான ஹீரோ முன் அத்தை மகளிடம் வசவு வாங்கிய எரிச்சல் அவனுக்கு .

” போடா …அப்படியே ஏதாவது மணல் மேட்டில் தொலைஞ்சி போயிடு …” ஜோதி அவன் முதுகில் கத்தினாள் .

ஹர்சவர்த்தன் பக்கென சிரித்தான் .

” எதறகு கதிருக்கு இவ்வளவு பெரிய தண்டனை மகரா …? “

” எப்பவுமே உங்களுக்கு ஜால்ரா தட்டிட்டே இருக்கான்ல அதுக்குத்தான் அவனுக்கு இந்த தண்டனை .”

” ஓ … அப்படி இந்த மணல்காட்டில் தொலைந்தே போய்விடுவார்களா என்ன …? “

” இங்கே இருக்கிற மணல்மேடுகளை தவறான நோக்கத்தில் பார்ப்பவர்கள் எல்லோரும் அப்படித்தான் இருக்குமிடம் தெரியாமல் தொலைந்து போவார்கள்  ….” சாபம் போல் சொன்னாள் .

” நானுமா மகரா ….? ” கைகளை கட்டிக்கொண்டு அவள் முகம் பார்த்து கேட்டான் .

முன்பு போல் நிர்தாட்சண்யமாக தன் சாபம் சொல்லமுடியவில்லை மகராவால் .மௌனமாகி விட்டாள்.

” என் பக்கம் ஒருத்தர் பேசினால் உனக்கு இவ்வளவு கோபமா …? “

” நீங்க பண்றதே நியாயமில்லாத்து .அதற்கு ஒரு ஒத்து வேற ….”




” நியாயமில்லாத எதை செயதேன் மகரா …? அது இருக்கட்டும் அதென்ன ஒத்து …அப்படின்னா என்ன …? “

” உங்களுக்கு தமிழுக்கே பொழிப்புரை சொல்லியே நான் ஓஞ்சிடுவேன் …”

” ஹை …பொழிப்புரை .தி அனதர் நியூ வேர்டு …அதென்னடா ….? “

ஜோதிக்கு வந்த எரிச்சலுக்கு காரணம் அந்த சுட்டெரிக்கும் வெயில் மட்டுமில்லை .

” பொழிப்புரைன்னா …விளக்க உரைன்னு அர்த்தம் .”

” ஓ …நைஸ் வேர்ட் .அப்போ அந்த ஒத்து … ? “

” ம் …நாதஸ்வரம் வாசிப்பாங்கள்ல . அவருக்கு பக்கத்தில் ஒருத்தர் பக்கவாத்தியமா குழல் வாசிப்பாரில்ல .அவருக்கு பேருதான் ஒத்து …”

” ஓ …இதுதான் ஒத்து ஊதுறதா …? என்ன விசயத்துக்கு எங்கே இருந்து உவமை பிடிக்கிறீங்கப்பா …? ” சலித்தான் .

” சரி மண்ணில் விளையாண்டது போதும் .எந்திரிச்சு வாங்க …” ஜோதி நடக்க ஆரம்பிக்க ஹர்சவர்த்தன் அவள் பின்னால் நடந்தான் .

” அந்த டைட்டானியம் எடுக்கிற விசயத்தையெல்லாம் மறந்துடுங்க …”

தன்னருகே ஒட்டி நடக்க முயன்ற ஹர்சவர்த்தனை தவிர்த்து தள்ளி நடந்தபடி அவனை எச்சரித்தாள் .

” ஏன்டா …? நல்ல தொழில் அது தெரியுமா …? நிறைய பணம் பார்க்கலாம் அதில் ….”

” எப்போதும் கையை கூட்டி பணம் அள்ளுவதிலேயே இருப்பீர்களா …? கொஞ்சம் மனித மனத்தையும் பார்க்க மாட்டீர்களா …? “

” ஏன் நீ பணத்தை வேண்டாமென்று விடுவாயா …? உனக்கு அது தேவையில்லையா …? அதென்ன எப்போது பார்த்தாலும் எல்லாவற்றிலும் பணத்தை பார்க்கிறாய்னு என்னையே சொல்கிறாய் ….? “

” ஆமாம் அப்படித்தான் .எப்போதும் எதிலும் பணம்தான் உங்களுக்கு குறி .அந்த நோக்கத்தில்தான்  ஒவ்வொரு விசயத்திலும் அடமென்டாக  நடந்து கொள்கிறீர்கள் ….”

ஹர்சவர்த்தன் ஒரு நிமிடம் நின்று புருவம் சுருக்கி அவளை பார்த்தான் .

” நான் அப்படித்தான் மகரா .எந்த விசயத்திலும்  எனக்கு லாபம் வரும் இடத்தை மட்டும்தான் பார்ப்பேன் .இதோ இங்கே வந்த ஒரு மாதத்தில் இந்த ஏரியாவிற்கு ஏற்ற  நானகு புது தொழில்களை தொடங்கியிருக்கறேன். அதில் இந்த தேரி மணல்காடு தொழிலும் ஒன்று .இதையும் நிச்சயம்ஆரம்.பிக்கத்தான் போகிறேன் …”

” இதற்காகத்தான் இங்கே வர வேண்டுமென அடம பிடித்து வந்தீர்களா …? “

” அதற்கேதான் .என் தொழிலுக்கான இடத்தை நான் தீவிரமாக ஆராய வேண்டாமா …? “




ஹர்சவர்த்தன் தன்னுடன் வெளியே வருவதற்காகத்தான் இந்த தேரி மணல்காட்டுக்கு  வர  ஆசைப்பட்டான் .அவனுடன் இங்கே தனது சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலுடனருந்த ஜோதியின் மனம் அவனது இந்த பதிலில் வேதனையுற்றது .

” வேண்டாம் ஹர்சா .இந்த இடம் அறபுதமானது .பழமை வாய்ந்தது .ஆதிச்சநல்லூரின் ஆராய்ச்சியுடன் தொடர்புடையது இந்த இடம் . தொடர் ஆராய்ச்சியில் பழந்தமிழரின் வாழ்க்கை முறையை கண்டுபிடிக்குமளவு நிகழவுகளை உள்ளடக்கியது .இதன் அருமை தெரியாமல் சிலர்  அரசியல்வாதிகளின் துணையோடு இங்கிருக்கும் மணல்களை அள்ளி அள்ளி …பாதி தேரிக்காட்டை முன்பே அழித்துவிட்டனர் .அவர்கள் வரிசையில் நீங்களும் சேர்ந்து விடாதீர்கள் .இந்த மணல் குன்றுகளை தொடாதீர்கள் ….”

ஹர்சவர்த்தன் கால்களை அகட்டி வைத்து அவளுக்கு முன்னால் நடந்தபடி உறுதியான குரலில்   சொன்னான் .” எனது தொழிலில் தலையிடும் உரிமையை நான் யாருக்கும் …எப்போதும் தருவதில்லை மகரா ….”

ஜோதி அதிர்ந்து தேங்கி ஒரு நிமிடம் நின்றாள் . பின் தளர்வாய் காருக்கு நடந்தாள் .கதிரேசனும் வந்து சேர்ந்து கொள்ள மூவரும் கிளம்பினர் .

வழி பயணம் முழுவதும் ஹர்சவர்த்தன் மேலும் மேலும் தேரிக்காட்டு தகவல்களை கதிரேசனிடம் துருவி துருவி கேட்டு வாங்கியபடி இருக்க , அழுகையும் , ஆத்திரமுமாக காருக்கு வெளியிலேயே  பார்வையை வைத்தபடி வந்தாள் ஜோதி.

” டிஷ்யு வேணுமா ….? ” திடுமென ஹர்சவர்த்தன் அவள் பக்கம் வந்து கேட்டபோதுதான் கார் வீட்டில் நின்றிருப்பதை உணர்ந்தாள் .

அவன் காருக்கு வெளியே நின்று அவள் முகத்தை பார த்தபடி கேட்டுக் கொண்டருந்தான் .

” என்ன …? எதுக்கு …? “

” இதோ …ஒழுகிக் கொண்டிருக்கும் மூக்கை துடைக்க வேண்டாமா மகரா …? ” சொல்லி விட்டு ஒரு டிஷ்யூவை அவள் மேல் வீசிவிட்டு அவளால் தாக்கப்படும் முன் வீட்டினுள் ஓடிவிட்டான் .

ஓடினாலும் இவனை விடப் போவதில்லை  என்ற வேகத்தோடு காரிலிருந்து இறங்கிய ஜோதி , கீழே கிடந்த கற்களில் எதை எடுத்து அவன் மண்டையை உடைக்கலாம் என்று ஆராய்ந்து குனிந்து  தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த போது ,

” உன் அப்பா எங்கே இருக்கிறார் மகா குட்டி.நீ இங்கே என்னடா தேடிக் கொண்டிருக்கிறாய்  ….? ” கேட்டபடி வந்து நின்றார் சுந்தரம் .

” அப்பா உள்ளேதான் இருக்கிறார் மாமா .சென்னைக்கு கிளம்புறதா சொல்லிட்டு இருந்தார் ….என்ன விசயம் மாமா …? ”  கையிலெடுத்த கல்லை வேகமாக கீழே போட்டு காலால் எத்தி ஓரமாக தள்ளி  மறைத்தாள் .

” ஒரு விபரம் பேசனுமே .நேற்றுத்தானே திருவிழா முடித்தது .அதறகுள் உன் அப்பாவிற்கு என்ன அவசரமாம் …? ” பேசியபடி பின்னால்  வந்த வடிவேலுவின் குரலில் குத்தல் இருந்த்து .




அது ஏதோ ஒரு விபரீத்த்தை ஜோதிக்கு சொல்ல , அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது .

” என்ன பேசனும் பெரிய மாமா …? ” சுந்தரத்திடம் அவள் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே , வடிவேல் அதிர் நடையுடன் உள்ளே போனார் .

” சின்ன மாமா கோபமாக போகிறாரே மாமா …? “

” எல்லாம் உனக்காகத்தான்டா மகாக்குட்டி .நேற்று சாமியாடியிடம் உன் அப்பா குறி கேட்டாராமே . நாங்கள் எல்லோரும் அப்போது அந்த இடத்தில் இல்லை .படையல் வேலைகளில் இருந்தோம் .அந்த குறி கேட்ட விபரம் எதுவும் உன் அப்பாவோ …அம்மாவோ எங்களடம் சொல்லவில்லை .அந்த விபரம் கேட்கத்தான் வடிவேல் போகிறான் ….” சொன்னபடி சுந்தரம் நடந்தார் .

ஐயோ …சாமியாடி சரியான குறி சொல்லவில்லையே .இவர்கள் அதற்கும் அப்பாவைத்தான் ஏதாவது சொல்வார்களே ….ஜோதி கைகளை பிசைந்தாள் .

உள்ளே பக்கவாட்டு அறைக்குள் நடராசனிடம் உயர்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்த வடிவேலுவின் சத்தம் கேட்டது .என்ன செய்வதென தெரியவில்லை …ஆனால் ஏதாவது செய்ய வேண்டும் .தடுமாறிய ஜோதியின் மனம் நிலை கொண்டது ஹர்சவர்த்தனிடம் தான் .

ஏனோ அவளது எல்லா பிரச்சினைகளுக்கும் அவனிடமே தீர்வு இருப்பதாகவே அவளுக்கு இப்போதெல்லாம்  தோன்றியது .வேகமாக மாடியேறியவள் கதவை தட்டக் கூட செய்யாமல் திறந்து அவன் அறைக்குள் வேகமாக போனாள் .

லேப்டாப் முன்னால் உட்கார்ந்திருந்தவன் நிமிர்ந்து பார்த்து விழி விரித்தான் .

” என்ன மகரா …? “

” நீங்கள் கொஞ்சம் கீழே வாங்களேன் .பெரிய மாமாவும் , சின்ன மாமாவும் அப்பாவிடம் ஏதோ கோபமாக பேசிக் கொண்டிருக்கின்றனர் . நேற்று சாமியாடியிடம் குறி கேட்டதை பற்றி ஏதோ கேட்கின்றனர் .சாமி சரியான குறி சொல்லவில்லையென்றால் அப்பா என்ன செய்வார் ….? இந்த சாமி …குறி இதையெல்லாம் பெரிதாக நம்ப வேண்டாமென நீங்கள் மாமாவிடம் சொல்லுங்கள் .உங்கள் பேச்சிறகுத்தான் அவர்கள் கொஞ்சம் செவி சாய்ப்பார்கள் ….வாங்க ….”

ஜோதியின் படபடப்பிற்கு அவனிடம் எதிரொலியில்லை .பார்வையை லேப்டாப்பிறகு திருப்பிக் கொண்டான் .

” அறைக்குள்  வரும் போது அனுமதி கேட்டு வர மாட்டாயா …? ” நிதானமாக கேட்டான் .

அவனது இந்த கேள்வி பெரும் இடியாய் ஜோதியின் உச்சந்தலையை தாக்கியது .வெறித்த பார்வையுடன் அவனை பார்த்தபடி நின்றாள் அவள் .

” உன் அப்பா பக்கம் பேச வேண்டுமென எனக்கு என்ன அவசியம் …? “

” கோபமாக இருக்கிறீர்களா ஹர்சா …? எதற்கு ….? ” ஜோதியிடம் பரிதவிப்பு .




ஹர்சவர்த்தன் பார்வையை உயர்த்தவில்லை .

” இன்று தேரிக்காட்டில் உங்கள் தொழிலை தடுத்தேனே அதற்காகவா …? “

” நீ தடுப்பதால் என் தொழில் நிற்க போவதில்லை .வேண்டும் …வேண்டாமென முடிவெடுக்க போவது நான்தான் …,”

” அப்படியானால் இப்போது ஏன் இவ்வளவு கோபமாக பேசுகிறீர்கள் ….? “

” நேற்றிலிருந்து யோசித்து திட்டம் போட்டு வார்த்தைகளை கோர்த்து  நானே தொடக்கி வைத்த ஒரு செயலை  நானே எப்படி தடுப்பேன் ….? “

நான் சரியாகத்தான் கேட்கிறேனா ..இவன் இப்போது என் ன சொன்னான் .  ஜோதி காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டாள் .

” உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் மகரா .நேற்று சாமியாடி சொன்ன குறியை உன் மாமாவிடம் விளக்கமாக சொன்னதே நான்தான் …”

ஹர்சவர்த்தனின் விளக்கத்தில் ஜோதிக்கு மயக்கம் வருவது போலிருந்த்து .

What’s your Reaction?
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!