Serial Stories கன்னம் வைத்த கள்வனே

கன்னம் வைத்த கள்வனே – 74

74

அயர்ந்து நின்ற நிச்சலன பொழுதுகளை
மிருதங்க நடுங்கலாய் வியாபித்திருக்கிறாய்
நினைவின் விளிம்பில் வரைந்த வட்டமாய்
புன்னகைக்கும் அந்நேர நிலவு காலத்தில்
விழிகளில் ஆரஞ்சு சுடர்
ஏனடா ….? ராட்ச்சா ….




இவனென்ன இப்படி செய்கிறான் …? நிமிர்ந்து பார்த்து முறைக்கவும் முடியாமல் மடி மேல் கிடந்து கனத்தபடி
இருந்த அவன் பாதங்கள் ஜோதியை இம்சித்தபடி இருந்தன .

” பாரு மகரா …நீ வைத்த மருதாணி நிறத்தை…” வீணையின் நாதமாய்  முணுமுணுத்து வந்த்து ஹர்சவர்த்தனின் குரல் .

தடுமாறிய விழியுடன் அவன் பாதங்களை விழியால் தொட்டவள் , விழி விரித்து அவனது கால்  விரல்களை பற்றினாள் .

” ஹேய் …என்னப்பா இது இவ்வளவு அழகாக சிவந்திருக்கிறது ….கால்களில் இந்த அளவு சிவக்காதே …உங்களுக்கு மட்டும் எப்படி …? ” கருஞ்சிவப்பாய் மின்னிய ஒற்றை வட்டத்தை ஆச்சரியமாக குனிந்து பார்த்தாள் .அவனது கால் பெருவிரல் அவளது கன்னத்தை தீண்டியது .

” வைத்து விட்ட கைகளினால் இருக்கலாம் மகரா …” ரகசியமாக சீண்டிக் குழைந்தான் .

இப்படி பளிச்சென்று அரைத்த சந்தன நிறத்தில் இருந்தால் சிவக்கத்தான் செய்யும் …மனதினுள் நினைத்தபடி அவன் உள்ளங்கால் செம்மை வட்டத்தை ஆட்காட்டி விரலால் வட்டமிட்டாள்  .

” எனக்கு கூட இப்படி சிவக்கலை தெரியுமா ….? ” செல்லமாய் குறைபட்டபடி அவன் காலருகே தன் கையை வைத்து ஒத்து பார்த்தபடி நிமிர்ந்தவள் அவன் பார்வையில் கன்னம்  சிவந்தாள் .

” மருதாணி இங்கும் வைத்தாயா மகரா …? ” முன் சாய்ந்து கை நீட்டி அவள் கன்னம் தடவினான் .

” வர …வர …உங்கள் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை ….” முணுமுணுத்தாள் .

” இல்லையே மகரா .முன்புதானே கொஞ்சம் சரியில்லாமல் இருந்த்து . இப்போது மிகவும் சரியாக , உனக்கு பொருத்தமாகத்தானே இருக்கிறது ….” பேசி முடித்துவிட்டு கண்களை சிமிட்டினான் .

சும்மா …எதற்கும் ஒரு கண்சிமிட்டல் …ஜோதி உதடு கடித்து தன்னை கட்டுப்படுத்தினாள் .




” இப்போது சரியாகி விட்டதென்பதால்  முன்பு சரியில்லாதெல்லாம் சரியென்றாகி விடுமா ….? ” படபடத்தாள் .

” கடவுளே இதென்ன மகரா ….? அடுத்தடுத்த இத்தனை அடுக்கு மொழிகளை என்னால் புரிந்து கொள்ள முடியாதுடா .அந்த அளவு உன் மொழி எனக்கு பழக்கமில்லை …”

இந்த அறிவித்தலில் அவள் மடி மேல் கால்களால் கனத்து கிடந்தாலும் , மனமளவில் தள்ளி போனான் ஹர்சவர்த்தன் .

இவன் யார் …?

” உங்கள் தாய்மொழி என்ன …? ” ஜோதியின் இந்த திடீர் கேள்வியில் ஒரு நிமிடம் தேங்கி நின்றான் ஹர்சவர்த்தன் .

” எதுவாக இருந்தால் உனக்கு பிடிக்கும் மகரா …? ” குறும்பு மறைத்து கூர்மையானான் .

” ப்ச் …ஒரு சின்ன விபரம் கேட்டால் கூட சொல்ல மாட்டீர்களா …? “

” நான் சொல்லும் சிறு செய்தியும் உனக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டுமென்றே விரும்புகறேன் மகரா …” 

” தாய்மொழி பிடித்து வருவது இல்லை .பிறப்பில் வருவது .அதனை மாற்ற முடியாது …”

” நீ என்னோடு என் தீவிற்கு வருவதாக உறுதி சொல்லு மகரா .நீ கேட்கும் எல்லா விபரங்களையும் நான் தருகிறேன …” வலது கையை அவள்புறம் நீட்டினான் .

ஜோதிக்கு கோபம் வந்த்து .தன் மடியில் கிடந்த அவன் கால்களை கீழே தள்ளினாள் .

” ஹலோ ..நீங்கள் யார் சார் …? அழைத்ததும் உங்கள் பின்னால் வருவேனென்று என்ன நம்பிக்கை  உங்களுக்கு….? “

” உன் மேல் …என் மேல் வைத்த நம்பிக்கை …,”

” வைத்துக் கொள்ளுங்களேன் .உங்கள் மேல் வண்டி வண்டியாய் நம்பிக்கை வைத்துக் கொள்ளுங்கள் . என் மேல் வைப்பதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது ….”

” உன் மேல் எனக்கு எந்த உரிமையும் கிடையாதா மகரா …? “

” கிடையாது …”

” என் மேல் உனக்கு எந்த பாதிப்பும் கிடையாதா மகரா …? “




கூர்வேலாய் வந்த அவனது இந்த கேள்வி ஜோதியின் வாயடைத்தது .இவனுக்கு தெரிந்திருக்கிறது .அவள் தடுமாறும்  மனம் பற்றி ஏதோ அறிந்திருக்கிறான் .ஜோதியின் மனதில் ஓர் ஓரமாக கசப்பு பரவியது .

இவனது அருகாமை என்னுள் விதைத்த தடுமாற்றத்தை இவன் உணர்ந்திருக்கிறான் .அதனை வைத்தே என்னை வீழ்த்த நினைக்கிறான் …

” என் மனதை அறிந்து கொண்டுதான் என்னை இது போலெல்லாம் சீண்டினீர்களா …? “

” என்ன உளறுகிறாய் …? “

” இந்த ராத்திரிக்கு மட்டும் என அன்று   ஒருத்தியை கூட்டிக் கொண்டு வந்தீர்களே …அவளை போலத்தானே என்னையும் நினைத்தீர்கள் …? அதனால்தானே என்னிடம் அப்படியெல்லாம் நடந்து கொண்டீர்கள் …? “

வெளிப்படையாக காதலை சொல்லாத எந்த அனபும் எப்போதும் சந்தேகிக்கவே படுகிறது .அத்தோடு ஜோதியின் மனதில் மாறாத வடு அந்த பெண் .அவளை எளிதில் மறக்க தயாரில்லை அவள. .

ஹர்சவர்த்தன் வேகமாக எழுந்தான் .எழுந்த வேகத்திற்கு நிச்சயம் அவன் தன்னை அடிக்க போகிறானென்றே ஜோதி நினைத்தாள் .ஆனால் விழி மூடி இரு நொடிகள் நின்றவன் கண் திறந்த போது மிக அமைதியாக இருந்தான் .

மெல்ல அவள் முன் தரையில் மண்டியிட்டான் .அவனது இந்த செயலுக்கு ஜோதி விழி விரித்தாள் .வலுவான தன் கரங்களை அவள் மடி மீது ஊன்றினான் .  இவன் கால்களுக்கும் , கைகளுக்கும் என் மடி என்ன வீடா ….?  ஜோதியின் விழிகள் படபடத்து அறைக்குள் அங்குமிங்கும் நடந்தன.

இவன் மாய வித்தைக்காரன் …இவன் கண்களை பார்க்க கூடாது …புது வைராக்கியம் ஒன்றை உருவாக்கிக் கொண்டாள் .

” இங்கே என்னை பார் குட்டிம்மா .நீயெல்லாம் நினைவு வைத்து அடிக்கடி பேசும் அளவு தகுதியானவள் அவள் இல்லை ..அன்று அந்த ஹோட்டலில் கூட உன்னிடம் பேசிய பிறகு அவளிடம் மனது செல்லவில்லை .  ஏதோ தவறு செய்வது போலொரு எண்ணம் . பணம் கொடுத்து அனுப்பி விட்டேன் .இவளை போன்றவர்களெல்லாம் எனக்கு ஜஸ்ட் ஒரு டைம் பாஸ் ….”

திருப்பி அனுப்பி விட்டேன் என்ற அவன் சொல்லில் நெகிழ்ந்திருந்தவள் இறுதி வார்த்தையில் மீண்டும் கோபமானாள் .

பிடிக்க தோதாக அவள் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் இரு காதுகளையும் தன் இரு கைகளால் கொத்தாக பற்றிக் கொண்டவள் ….




” பொண்ணுங்கல்லாம் உனக்கு டைம் பாஸாடா …? உனக்கு பொழுது போகலைன்னா பொண்ணுங்களுக்கு கை காட்டுவாய் .தேவை தீர்ந்த்தும் கை அசைத்து விரட்டுவாய் .என்ன மனுசன்டா நீ …? இதை தைரியமாக என்னிடம் சொல்ல வேறு செய்கிறாயே ….உன்னை ….” வார்த்தைக்கு வார்த்தை தன் பிடியிலிருந்த அவன் காதுகளை பற்றி ஆட்டினாள் .

” ஆ …ஆ…ஐயோ .போதும் குட்டிம்மா …போதும் .தப்புத்தான் . நான் செய்தெல்லாம் தப்புத்தான் .இனி இது போலெல்லாம் செய்யமாட்டேன் . தோப்புக்கரணம் வேண்டுமானாலும் போடுகிறேன் ….”

” சரி …போடு …”

” என்னது …? ” விழித்தான் .

” உன்னை தோப்புக்கரணம் போட சொன்னேன் …” அவன் காதுகளை விட்டு விட்டாள் .தோள் பிடித்து தள்ளினாள் .

” எழுந்திரு …தோப்புக்கரணம் போடு …”

ஹர்சவர்த்தன் திருதிருத்தான் .தயங்கி எழுந்து நின்றான் .

” நிச்சயம்தானா …? ” மீண்டுமொரு முறை கேட்டு சந்தேகம் தெளிந்து கொண்டான் .

” மிக நிச்சயம் .ம் …சீக்கிரம் ….” ஜோதி கால் மேல் கால் போட்டுக் கொண்டாள் .

” ம் ….எல்லாம் நேரம் .என் கம்பெனி ஸ்டாப்ஸ் யாராவது இதை பார்க்கனும் …” மென்குரலில் புலம்பியபடி தன் காதுகளை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ ஆரம்பித்தான் .

” எத்தனைன்னு சொல்லிடுடா ….” தோப்புக் கரணத்திற்கிடையே திணறலாக பேசினான் .

” எண்ணிக்கையெல்லாம் கிடையாது .நான் சொல்லும் வரை போட்டுக் கொண்டே இருக்கவேண்டும் ….” ஆட்காட்டி விரலை மேலும் கீழுமாக தோரணையாக ஆட்டி  கறாராக பேசினாள் .

” நான் அறியா பையன் மகரா .இத்தனை கண்டிப்பு வேண்டாம் .கொஞ்சம் என் மீது கருணை காட்டு ….”




” அறியா பையன் பேசும் பேச்சா அது …? பொம்பளைங்களை போக பொருளாய் மட்டும் நினைக்கும் எல்லா ஆம்பளைகளுக்கும் இதை விட கொடுமையான தண்டனைகள் தரவேண்டும் ….” ஜோதியின் குரல் கடுமையாக ஒலித தது.

” தரலாம் மகரா . ஆனால் நான் ஒரு வகையில் கொஞ்சம் அப்பாவி . நானாக தேடி போகமாட்டேன் .   தேடி வருபவர்களை மட்டும்தான் …அதுவும் எனக்கு மிக தேவையான நேரங்களில் மட்டும்தான் …ஒரு ரிலாக்சேசனாக …”

ஜோதி சட்டென எழுந்து அவன் வாயை பொத்தினாள்.வெட்கங்கெட்டவன் விட்டால் இன்னமும் கண்டதையும் பேசிக் கொண்டே போவான் .சீ …

.” போதும். உங்கள் விளக்கங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். …”

முகம் கூசி சிவக்க ,இதழ் துடிக்க தன் வாய் பொத்தி நின்றவளை கனிவாக பார்த்தவன் , அவள் கையை விலக்கினான் .

” உண்மையை சொன்னேன் மகரா .உன்னிடம் எதையும் மறைக்க கூடாதென்றே இதையெல்லாம் பேசினேன் .   இனி இது போன்ற தப்பு காரியங்களையெல்லாம் விட்டு விட போகிறேன் …மிக நல்ல பையனாக மாறி விடலாமென்று நினைக்கிறேன் ….சரிதானே ….? ” கொஞ்சல் குரலில் பேசியபடி அவள் இடை வளைத்து தன் பக்கம் இழுத்தான் .

” உனக்காக தோப்புக்கரணம் போட்டேனே …எனக்கு ஒன்றுமே கிடையாதா குட்டிம்மா …? “

” தோப்புக்கரணம் செய்த தப்பிற்கான தண்டனை . தண்டனைக்கு சன்மானம் தருவார்களாக்கும் …? ” அவன் மார்பில் கை வைத்து தள்ளிய  ஜோதி அந்நேரம் ஏனோ  மிக பலவீனமாக  தனை உணர்ந்தாள் .

” தரலாம் .குட்டிம்மா .எல்லா நியாயங்களும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தி போவதில்லை .நம் இருவருக்குமிடையே எழுதி வைத்த நியாயங்களுக்கு வேலையுமில்லை .இங்கே நாமே நியாயம் சொல்லிக் கொள்ளலாம் .நாமே அதை மாற்றிக் கொள்ளலாம் .அதனால் கொடுத்த தண்டனைக்கு சம்மாக ஒரு சிறு சன்மானம் …ம் ….”

சரசம் வழிந்தோட ஹர்நவர்த்தன் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான் .ஹோ வென நீர்வீழ்ச்சி ஒன்று ஜோதியின் உச்சந்தலையிலிருந்து வழிந்து  தேன் சொறிந்தபடி அவள் உடல் முழுவதும்  ஓடியது .

நடுங்கிய உடலுடன் ஏதோ ஓர் அதல பாதாளத்திற்குள் உருண்டு கொண்டிருந்தாள் அவள் .யாராவது காக்க வர மாட்டார்களா …அவள் ஏக்கம் தீர்வது போல் கலைவாணியின் குரல் கேட்டது .எங்கோ தொலைவில் …தூரமாய் …




ஹர்சவர்த்தன் அவளை தன்னிடமிருந்து விலக்கினான் .” உன் அம்மா மகரா .உன்னை கூப்படுகறார்கள் …”

பரக்க …பரக்க விழித்தவளுக்கு அறைக்கதவை காட்டினான் .” வெளியே ….”

” ஓ…விடுங்க . நான் போகிறேன் ….” விலகியவளின் தோளிலிருந்து கை வரை வருடியபடி மனமின்றி விடுவித்தான் .

  சிறு விடுபடுதல் உணர்வுடன் ஜோதி அறைக் கதவை திறந்து வெளியேறினாள் .

நிறைவான புன்னகையுடன்   பின்னாலேயே ஹர்சவர்த்தனும் வெளியேற போக ” நில் …” என்ற குரல் பின்னால் கேட்டது . ஹர்சவர்த்தன் திகைத்து திரும்பி பார்க்க …

பாட்டிதான் படுக்கையில் படுத்தபடியே குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் .

ஐயோ …இவர் எப்போது விழித்தார் ….?

” பாட்டி …” ஹர்சவர்த்தனின் ஆச்சரிய கேளவிக்கு பாட்டி ஆத்திரம் தந்தார் .

” யாரடா நீ …? என் வீட்டிறகுள் நுழைந்து என் பேத்தியையே சீண்டிக் கொண்டிருக்கிறாய் ….? உன் பேரென்ன …? ஊரென்ன ….? “

கணீர் கணீரென ஒலித்த கேள்விகளில் ஹர்சவர்த்தன் ஆச்சரி
மானான. படுக்கையில் படுத்து இருப்பவரிடம் இத்தனை பெரிய அதட்டல் குரலை அவன் எதிர்பார்க்கவில்லை . பாட்டியின் அதிகார குரல் உங்கள் இருவரின் ஊடல் , கூடல்களை நான் பார்த்துவிட்டேன் என அறிவித்தது .

” எதற்கடா விழித்துக் கொண்டு இருக்கிறாய் ….? திருட்டு  பயலே …” பாட்டி தொடர்ந்து வசவுகளை அதிகபட்சமாக  வாரி இறைத்துக் கொண்டே போக ஹர்சவர்த்தன் காதுகளை மூடிக்கொண்டான் .




” பாட்டி …ப்ளீஸ் …ஸ்டாப் ….ஸ்டாப் .நீங்கள் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டீர்களானால் நான் என்னை பற்றிய விபரங்களை சொல்லுவேன் ….”

” என் வாயை மூடச் சொல்ல நீ யாருடா …? என் இடத்திற்குள் வந்து என்னையே வாயை மூடச் சொல்கிறாயா ….? நல்லா தடிமாடு மாதிரி வளர்ந்து நிற்கிறாயே …ஒன்றுமறியாத சின்னப்பிள்ளையை சீண்டிக் கொண்டிருக்கிறாய் …கையை உடைத்து விடுவேன் .ஜாக்கிரதை …”

தொடர்ந்து கொண்டே போன பாட்டியின் வசவுகளை தாங்க முடியாமல் ஹர்சவர்த்தன் அவர்ருகே போய் அவர் வாயை மூடினான் .படாரென பாட்டியிடம் கன்னத்தில் அடி வாங்கினான் .

” கொன்னுடுவேன் படுவா …என் வாயவா மூடுற …? எந்த காட்டுப் பயடா நீ …? பொறுக்கி மாதிரி தெரிகிறாய் …என்ன சொல்லி என் பேத்தியை ஏமாற்றி வைத்திருக்கிறாய் …? சொல்லுடா ….”

என் பாட்டி துஷ்டனை தூக்கி போட்டு மிதிப்பார்கள். ஜோதியின் வார்த்தைகளின் உண்மையை அப்போது உணர்ந்தான் ஹர்சவர்த்தன் .பாட்டியின் கைகளை பிடித்துக்கொண்டான் .

” ஐயோ பாட்டி நிறுத்துங்க .என் பெயர் ஹர்சவர்த்தன் .என் ஊர் கொல்கத்தா .நான் பொறுக்கியெல்லாம் கிடையாது .பெரிய அளவில் தொழில் செய்து கொண்டிருக்கறேன் …”

” கல்கத்தாவா ….? ” பாட்டியின் கைகள் தளர்ந்தன .

” வங்காளி பையனா நீ …? “




” ஆமாம் பாட்டி …”

இப்போது பாட்டி அமைதியாகிவிட்டார் .

” உனக்கு ….நீ …நீ …எதற்கு …இங்கே ….?” பாட்டியின் குரல் தடுமாறியது .

” எல்லாம் தெரியும் பாட்டி .நான் மகரஜோதியை கூட்டிப் போகத்தான் வந்திருக்கிறேன் …”

பாட்டியின் முகம் கடுமையானது .

” முடியாது .அவள் எங்கள் வீட்டு பெண் .அவளை நான் எங்கும் அனுப்பமாட்டேன் …”

” அவள் இல்லாமல் நானும் இங்கிருந்து போகமாட்டேன் …” ஹர்சவர்த்தனின் குரல் எஃகென ஒலித்தது .

பாட்டியின் முகம் அச்சத்தில் வெளுத்தது .

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!