Serial Stories கன்னம் வைத்த கள்வனே

கன்னம் வைத்த கள்வனே – 73

73

வெளிச்சத்தின் பாவனைகளை விழியில் தேக்கி
ஊடுறுவி பார்க்கிறாய் ,
கனத்து கிடக்கின்றன உன் பாதங்கள்
என் மடியில் ,
கலைத்தெடுக்கவோ …கவிழ்த்து தட்டவோ …
மனமின்றி விழி வருடுகிறேன் ,
உன் பாத பெருவிரல்
என் கன்னத்தில் அலைகையில் ,
நிமிர்ந்துன்னை பார்க்கமாட்டேன்
சிரித்து வைப்பாயேடா ராட்ச்சா ….




” வேண்டாம் …வேண்டாம் …” பதறி பின் வாங்கினாள் ஜோதி .

கண்களை இறுக மூடி நின்றவன் ” நான் மிருகமாவதற்குள் உள்ளே போய் விடு …” பற்களை நறநறத்தான் .

கை கால்கள் தந்தியடிக்க ஜோதி உள்ளே ஓடி வந்துவிட்டாள் .

படபடக்கும் தன் நெஞ்சின் ஓசை பக்கத்தில் படுத்திருக்கும் மல்லிகாவிற்கு கேட்டு விடுமோ …பயத்துடன் போர்வையை இழுத்து தலை மேல் போர்த்தி மூடிக்கொண்டாள் .

இவனுக்கு இன்று ஏன் இவ்வளவு கோபம் …? ஹர்சவர்த்தன் கோபமானவன் …வேகமானவன் .இதனை ஜோதி அறிவாள் .ஆனால் அவன் தன் கோபத்தை இப்படி வெளிப்படையாக காட்டியதில்லை .அழுத்தமாக ஒரே ஓர் ” அச்சா ” உச்சரித்தலில் தன் கோபத்தை அடக்கிக் கொள்வான் .

இன்றோ …இத்தனை வேகத்தையும் …ஏன் மோகத்தையும் கூட மறைக்காமல் அவளிடம் காட்டி நின்றிருக்கிறான் . பல் நெரிக்கும் கோபத்தோடு .. இவன் புது ஹர்சவர்த்தன் . இது வரை அவள் அறியாதவன் .

மோகம் கொப்பளிக்க அவளை திணற திணற  தின்ற அவனது கண்கள் நினைவு வர , ஜோதியின் உடல் சிலிர்த்தது .இவன் தப்பான முறையில் என்னை நெருங்க முயல்கிறானா …ஜோதியின் மனம் அவளை கேட்காமலில்லை .

தப்பாக நெருங்க நினைப்பவன் தள்ளி நில்லென்றதும் ஏன் நிறகிறான் …? அந்த நேரத்தில் ஹர்சவர்த்தன் தன்னை தானே மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்த்தை ஜோதியால் உணர முடிந்த்து .அப்படி எந்த விசயத்தையும் ஒரு கட்டுப்பாட்டுடன்   அணுகுபவன் அவன் இல்லையே …கட்டுப்பாடற்ற இலகு வாழ்வு அவனுடையது .

இன்று மட்டுமல்ல , அன்று மருதாணி வைத்த இரவன்றும்  …நடப்பதறியாமல் உறைந்து நின்று விட்ட தன்னை அறையை விட்டு வெளியே தள்ளி போய்விடு குட்டிம்மா என கெஞ்சிய ஹர்சவர்த்தன் அவளுக்கு நினைவு வந்தான் . தன்னிலை மறந்த தன் நிலையை பயன்படுத்திக் கொள்ளாத ஹர்சவர்த்தன் …

வனத்தையே மிதித்து துவம்சம் செய்யும் களிற்றின் வேகத்துடன் இருக்கும் ஒருவனை தன்னால் ஒரு சொல்லில்   கட்டுப்படுத்த முடிகிறதா …ஜோதி தன்னை நினைத்தே ஆச்சரியம் கொண்டாள் .




இதன் காரணம் காதலாக இல்லாமல் வேறேன்ன …? காதல் வயப்பட்டிருக்கும் ஒரு இள மனதால் தனை ஒத்த மற்றொரு காதல் மனதை இலகுவாக இனம் காணமுடியும் .அரையிருளில் ஆசை மின்னும் கண்களுடன் அவள் அருகாமையை வேண்டி நின்றவனின் ஆக்ரோச காதலை ஜோதியால் உணர முடிந்த்து .

ஹர்சவர்த்தனுக்கு தன் மேல் காதலே …உறுதியாகி விட்ட   இந்த நினைப்பில்  ஜோதியின் கன்னங்கள் சிவந்தன. இப்படித்தானென்ற உறுதியை பெற்றதும் அவள் மனம் மேலும் தடுமாற ஆரம்பித்து விட்டது  .

இதோ என்னை போன்றே அவனும் கூட இந்த இரவை , அவர்களை அவர்களுக்கு உணர்த்திய இந்த அற்புத நேரங்களை அன்பாக …காதலாக உணர்ந்திருக்க கூடும் .இனி வரும் நாளையை எப்படி எதிர்கொள்வது ….?

நாளை அவனது பார்வையை…முகத்தை , எப்படி சந்திக்க …ஜோதியினுள் இப்போதே தடுமாற்றம் ஆரம்பித்து விட்டது .

முதல்நாள் திருவிழா பார்த்த களைப்பில் மறுநாள் வீடு சாவகாசமாக வெயில் சுளீரென அடிக்க ஆரம்பித்த பிறகே விழித்துக் கொண்டது .

” ஜோதி இன்னைக்கு மட்டும் சாப்பிட்டு விட்டு குளிக்கலாம்பா …..” படுக்கையில் உட்கார்ந்தபடியே உடலை வளைத்து சோம்பல் முறித்தாள் மல்லிகா .

” ஆமாம்பா .நானும் .குளியல் பிறகுதான் .அலுப்பாக இருக்கிறது …” சுபத்ராவும் பின்பாட்டு பாடினாள் .அவள் இன்னும் படுக்கையிலிருந்து எழுந்து உட்காரவே இல்லை .

” பல்லையாவது தேய்ங்கடி …முதலில் படுக்கையை விட்டு எழுந்திருங்கள் ….” சொன்ன ஜோதியும் இன்னமும் படுக்கையிலேயேதான் இருந்தாள் .

” நீ முதலில் எழுந்திரிடி .பிறகு எங்களை சொல்…”

” என்னங்கடி எவளுக்காவது எழுந்திரிக்கும் எண்ணம் இருக்கிறதா …? இல்லையா …? ” மதுரம் கத்தியபடி உள்ளே வந்தாள் .

” சீய் …தப்பான வேலை. யாராவது செய்வாங்களாம்மா அதை …? ” கொஞ்சியபடி எழுந்து அமர்ந்திருந்த மல்லிகா மீண்டும் படுத்துக்கொண்டாள் .

” நானும் தப்பு பண்ணமாட்டேன் பெரியம்மா ” சுபத்ரா குரல் கொடுக்க …

” நான் இன்னமும்  எழுந்திரிக்கவே இல்லை …” ஜோதி முகத்தை போர்வையால் மூடிக்கொண்டாள் .

” உங்களுக்கெல்லாம் இன்னமும் பத்து நிமிசம்தான்டி டைம் .அதற்குள் சாப்பிட வரலைன்னா , பாத்திரத்தை கழுவி கவுத்திடுவேன் …” மதுரம் மிரட்டி விட்டு போனாள் .

முன்தின இரவு விழித்தலில் ஏறகெனவே சோர்ந்து பசியோடு இருந்த மல்லிகாவும் , சுபத்ராவும் காலை உணவை இழக்க தயாராக இல்லை . எனவே அடித்து பிடித்து எழுந்தனர் .




ஜோதியை எழுப்ப , அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள் .

” ஏய் அவள் திரும்ப தூங்கிட்டா போலடி .வா நாம் போய் சாப்பிட்டு வரலாம் …” பசியின் வேகத்தில் பறந்து போய்விட்டனர் .

ஜோதி அவர்கள் போன பிறகு நிதானமாக கண் விழித்து எழுந்து குளிக்க போனாள் .வெளியே போனால் ஹர்சவர்த்தனை சந்திக்க வேண்டி வரும் .அவனது சிறு இமையசைவை கூட இப்போது தாங்கும் தைரியம் ஜோதிக்கு இல்லை .

வேலையென அவன் வெளியே போகட்டும் .பிறகு அறையை விட்டு வெளியே வருவோம் என நினைத்தபடி ,  எளிமையான காட்டன் நைட்டி ஒன்றை அணிந்து கொண்டு ஈரதலையை துவட்டிக் கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது .

  அறைக் கதவை திறந்தவள் திகைத்தாள் .அவன்தான் …ஹர்சவர்த்தன் தான் நின்று கொண்டிருந்தான் . பார்வையில் அவள் பட்டதும் பவுர்ணமியாய் முகம் மலர்ந்தான் .தென்றலாய் அவளை பார்வை  வருடினான் .

இ..இவனை பார்க்க கூடாதென்று நினைத்திருந்தேனே …படபடத்த மனதோடு நிமிர்ந்த ஜோதி அவன் பார்வைக்கு முகம் சிவந்தாள் .

இதற்குத்தான் …இந்த பார்வைக்கு பயந்துதான் இப்படி அறைக்குள் பதுங்கிக் கிடக்கிறேன் …மனதிற்குள் புலம்பியபடி அவன் பக்கம் விழியுயர்த்தாமல் தலையை குனிந்து கொண்டாள் .

” என்ன விசயம் …? “

” காலையில் எழுந்திரிக்கவும் உன் முகத்தை பார்க்க வேண்டும் போலிருந்த்து .அதுதான் வந்துவிட்டேன் …”

அவன் சொல்வது பாசாங்கு போல் அவன் உதடுகள் காட்ட உண்மையென அவன் விழிகள் இயம்பிக் கொண்டிருந்த்து .

” ப்ச் …எதையாவது உளறிக் கொண்டிராதீர்கள் .யாராவது வந்து விட போகிறார்கள் .உங்களுக்கு என்ன வேண்டும் …? “

”  எல்லோரும் கிச்சனிற்குள் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் .நீ வா …” இயல்பாக வலது கை நீட்டி அவன்  அணைத்துக் கொள்வான் போல்  அழைக்க விதிர்த்தாள் .

” எங்கே …? “




” இங்கே வந்த்திலிருந்து    உன்  பெரிய  பாட்டியை இது வரை சந்திக்கவே இல்லை .இப்போது அவர்களை போய் பார்க்கலாம் வா …”  பாட்டி படுத்திருந்த அறை பக்கம் கை காட்டியபடி சொன்னான் .

” அவர்களை எதற்கு நீங்கள் பார்க்கவேண்டும் …? “

” அவர்களை எதற்கு நான் பார்க்ககூடாது …? “

அகராதி பிடித்தவன் …பதிலுக்கு பதில் கரெக்டாக பேசிவிடுவான் .

” பாட்டி உங்களையெல்லாம் பார்க்க மாட்டார்கள் ….”

” ம் …உள்ளே நுழைய விடமாட்டார்கள் .   தூக்கி போட்டு மிதிப்பார்கள்.நீ சொன்னது  .ஞாபகம் இருக்கிறது .அதனால்தான் உன்னையும் கூட்டிப் போய் பாட்டியை பார்க்க நினைக்கிறேன் .எதுவாக இருந்தாலும் நாம் இருவருமாக ஒன்றாகவே எதிர்கொள்வோம் ” கண் சிமிட்டல் ஒன்றுடன் பேச்சை முடித்தான் .

” ப்ச் ..பாட்டியை பார்த்து பேச தனி மூட் வேண்டும் .அந்த மூட் இப்போது என்னிடம் இல்லை .பிறகு பார்க்கலாம் …” ஜோதி கைகளை கட்டிக்கொண்டு பார்வையை பக்கத்து சுவருக்கு மாற்றிக் கொண்டாள் .  அவன் கண் சிமிட்டலின் அதிர்வுகளை உடலினுள் மடக்கி அடக்கினாள் .

வரலைன்னா என்ன செய்துடுவானாம் …? பிடிவாதமாய் மோவாய் உயர்த்திக் கொண்டாள் .

அவனிடமிருந்து சத்தமெதுவும் வராமல் போக மெல்ல விழியசைத்து அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் .இவளது விழி திரும்பி அவன் மேல் விழுந்த்தும் அவன் இதழசைத்தான் .

” அச்சா …” கேலியும் குறும்பும் சுமந்த நயமான அச்சா .

ஜோதி இதழ் மடித்து கடித்தாள் .

” ஒரு ஐம்பத்தியிரண்டு கிலோ இருப்பாயா நீ …? “

” எ …எதற்கு கேட்கிறீர்கள் …? “

” நான் சாதாரணமாக நூறு கிலோ வரை கூட தூக்குவேன்….நீ …”

ஜோதிக்கு வியர்த்துவிட்டது .

” எங்கள் வீட்டினர் யாராவது பார்த்தால் என்ன ஆவது …? ” குரலை குறைத்து சீறினாள் .

” அவர்கள் வருவதற்குள் …சீக்கிரமாகவே நாம் பாட்டியின் அறைக்குள் போய்விடலாம் மகரா .வா …” கைகளை தேய்த்துக் கொண்டு அவளை தூக்க தயாரானான் .

நான் எதை சொன்னால் …இவன் என்ன செய்ய வருகிறான் ..சை இவனுடன் போராட முடியாது .ஜோதி துள்ளி ஓரடி பின் நகர்ந்தாள் .

” அஞ்சு நிமிடம் வெயிட் பண்ணுங்க .டிரஸ் மாத்திட்டு நான் வர்றேன் …”

” ஏன் இந்த டிரஸ்ஸுக்கு என்ன …? அழகாகத்தானே இருக்கிறது ….” உடையோடு அவள் உடலையும் வடிவெடுத்தன அவன் கண்கள் .

” இது நைட்டி …இதோடு எப்படி வர முடியும் …? “




” எனக்கு பிடிச்சிருக்கு .அப்படியே வந்தால் என்ன …? ” முணுமுணுத்தவன் என்ன நினைத்தானோ …

” சரி வா வெயிட் பண்றேன் ….” என்று விட்டு கை நீட்டி அவள் உச்சந்தலையை தொட்டான் .மெல்ல வருடி வழிந்த கூந்தலோடு நகர்ந்த்து அவன் கை .

” ஜலதோசம் பிடிச்சிக்க போகுது .தலையை நன்றாக உலர வை …” சொல்லிவிட்டு ஹால் சோபாவில் அமர்ந்து  அவள் அறையை பார்த்தபடி  வெயிட் பண்ண தொடங்கனான்.

டப்பென கதவடைத்த ஜோதி   உச்சந்தலையில் தகித்து நின்றுவிட்ட அவனது உள்ளங்கையுடன்  உடைகளை மாற்றினாள் .

” பாட்டி தூங்குறாங்க போலவே ….? ” கண்மூடி சீரான நெஞ்சேற்றத்துடன் படுக்கையில் இருந்த பாட்டியை பார்த்தபடி சொன்னாள் ஜோதி .

” விழிக்கட்டும் மகரா .நாம் வெயிட் பண்ணலாம் …” அங்கே கிடந்த வயர் சோபாவில் அமர்ந்து கொண்டு , அவளுக்கு தன் அருகே இடம் காட்டினான் .

” பிறகு வந்து பார்க்கலாமே .உடனே  பார்க்கும் அவசியம்தான் என ன …? ” சலித்தபடி அவன் காட்டிய இடத்தில் அமராமல் எதிரே அமர்ந்தாள் .

இந்த தவிர்ப்பில்  அவன் முகம் சுருங்கியுது .

” நான் சீக்கிரமே என் தீவுக்கு கிளம்பி விடுவேன் .அதறகுள் பாட்டியிடம் பேச வேண்டும் …”

போயேன் எனக்கென்ன என்பது போல் முகத்தில் அலட்சியம் காட்டி திரும்பிக் கொண்டவளின் மனதில் சற்று முந்தைய அவனது வார்த்தைகள் இமசை செய்து கொண்டிருந்தன. சரிதான் கிளம்ப போகிறான் …இவன் தொல்லை குறையும் .

நீயும் வா என்றால் என்ன சொல்வது …ஜோதி மனதினுள் யோசித்தபடி இருக்க , அவன் அந்த கேளவயை கேட்கவே இல்லை .

கூர் பார்வையுடன் அவள் முக அசைவுகளை கவனித்தபடி இருந்தான் . 

இவன் இப்போது காதலை சொல்லி விடுவானா …ஜோதியின் இதயம் படபடப்போடு தடுமாறி குழைந்த்து .காதலை ஏற்கும் அந்த தருணத்தின் எதிர்பார்ப்பில் …தவிப்பில் இருந்தாள் அவள.

ஹர்சவர்த்தன் வாய் திறந்தான் .




.” இப்போது பார்க்கிறாயா மகரா …? ” என்றான் குழைவான குரலில் .

ஜோதி புரியாமல் பார்த்தாள் .” எதை …? “

” இதை …” தன் இரு கால்களையும் உயர்த்தி எதிரே அமரந்திருந்தவளின் மடியில் நீட்டினான் .

” மருதாணியை….”  ஒற்றை விரலால் தன் பாத்த்தை சுட்டிவிட்டு மீசை நுனி வருடியபடி  அவளை விழியால்   அளக்க ஆரம்பித்தான.

கனமாக தன் மடி மேல் கிடந்த அவனது பாதங்களின் ஸ்பரிசத்தில் தடுமாறினாள் ஜோதி .

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!