Serial Stories கன்னம் வைத்த கள்வனே

கன்னம் வைத்த கள்வனே – 72

72

உடைந்த மனதில் சிராய்த்ததுன்
சொல் சிலாம்பு
இருள் தித்தித்த அந்த மரங்களருகே
சொருகியிருந்தன
தழுவிய பொழுதுகள.
ஏனோ அங்கே பூக்காத மஞ்சள் மலர்கள்
இங்கே பூத்து தள்ளுகின்றன ,
துடைத்தும் போகாமல்
கன்னத்திலேயே தூர்ந்து கிடப்பது
உன் முத்தத்தின் தடமடா ராட்ச்சா …




” நாங்கள் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த போது , நீங்கள் எங்கே இருந்தீர்கள் …? ” அப்பா , அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த போது மாடி பால்கனியில் அசைவை ஜோதி உணர்ந்திருந்தாள் .அதுதான்  அவளை அப்போது உறுத்தியபடி இருந்த்து

” மாடியில் …பால்கனியில் .நின்று கொண்டு ….”

” நாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டீர்களா …? ” ஆத்திரமாக இடையிட்டாள் .

” ஆமாம் ….” தயங்காமல் ஒத்துக் கொண்டான் .

” நீங்கள் மூன்று பேரும் தூரத்தில் நடந்து வரும் போதே சன்னல் வழியாக பார்த்துவிட்டேன் .உள்ளே வராமல் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தீர்கள் .எனக்கு கேட்க வேண்டாமா ….? அதுதான் பால்கனிக்கு வந்து நின்று ….ம் …கிட்டதட்ட உங்கள் பேச்சு முழுவதுமாக கேட்டு விட்டேன் ….”

” சை எந்த மாதிரி மோசமான ஆள் நீங்க …? எவ்வளவு மட்டமாக நடந்து கொள்கிறீர்கள் …? ” ஜோதி கோபத்துடன் அவன் மார்பில் குத்த தொடங்கினாள் .

” மோசமாக…மட்டமான …அப்படி என்ன செய்துவிட்டேன் மகரா …ம் ….” தன் நெஞ்சை குத்திக் கொண்டிருந்த அவள் கைகளை இறுக பற்றியவன் , ஒரு நொடி  அவள் முகத்தையே பார்த்தபடி இருந்தான் .திடுமென அவளை இழுத்து  தன்னோடு சேர்த்து அணைத்து அழுத்தமாக அவள் கன்னத்தில் இதழ் பதித்தான் .

செயலிழந்து விட்ட கைகளுடன் ஜோதி அப்படியே நின்று விட , ” கொஞ்ச நேரம் முன்பு  உன் அம்மா உன் கன்னத்தில் முத்தமிட்ட போது கூட சும்மா பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் ….”  அவனது இதழ்கள் இப்போது அடுத்த கன்னத்தில் புதைந்தன .

” அவர்கள் என் அம்மா …எனக்கு முத்தம் கொடுப்பார்கள் …உங்களுக்கென்ன ….” நலிந்த வார்த்தைகளால் சொல்லியபடி அவனை தள்ளினாள் .இரு கன்னத்து ஈரத்தையும் அழுத்தி துடைத்துக் கொண்டாள் .

” வேறொன்றுமில்லை .எனக்கும் அதே ஆசை வந்து விடுகிறதே …என்ன செய்ய …? ” சொன்னபடி மீண்டும் அருகே நெருங்கியவனின் வேகத்தில் மிரண்டு திண்ணை தூணொன்றின்  பின் போய் நின்று கொண்டாள் .

” கிட்டே வராதீர்கள் .அங்கேயே நில்லுங்கள் …” எச்சரிக்கை போல் சொன்னாள் .முடிந்த அளவு  தூணின் பின்னால் பதுங்கிக் கொண்டாள் .




”  ம் …இந்த தூணெல்லாம் எனக்கு ஒரு இடைஞ்சலா ….? “

ஹர்சவர்த்தனின் பார்வை மோகம் சுமந்து தூணின் பின்னால் தெரிந்தும் தெரியாமலும் இருந்த  ஜோதியை வருடியபடியிருக்க , வலது கை  நீட்டி அவள் அணைத்து பதுங்கியிருந்த தூணை வருடினான் .

கனத்த அவன் கைகளின் மென்மை  தூண்  வருடலுக்கு ஜோதியின் தேகம் சிலிர்க்க முகத்தையும் தூணில் புதைத்துக் கொண்டாள் .

” வெளியே வா குட்டிம்மா …” அதே தூணில் மறுபுறம் தன் முகம் பதித்து ,கொஞ்சலாய் அவளை அழைத்தான் .

” ம்ஹூம் …” தலையசைத்து மறுத்துவிட்டு இன்னமும் உள்ளே புதைந்தாள் .

” ஏய் …நான் வரவா ….? ” தாங்க முடியாத தாபம்    சுமந்திருந்த்து அவன் குரல் .

” நீங்கள் இங்கே வரக்கூடாது ஹர்சா …” உத்தரவாய் ஒலித்த அவளது குரலில் கோபம் வந்த்து அவனுக்கு .

” சை …” இயலாமையுடன் தூணை குத்தினான் .அவளுக்கு முதுகு காட்டி  திரும்பி அந்த தூணில்  சாய்ந்து நின்று கொண்டான் .

” சர்வாதிகாரிடி நீ …” பல்லை கடித்தான் .

” நானா …? சர்வ அதிகாரமும் நீங்கள்தான் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் …” மெல்லிய குரலில் பேசினாள் ஜோதி .அவள் கண்கள் திரும்பி நின்று தூணில் சாய்ந்திருந்த ஹர்சவர்த்தனின் பரந்த  முதுகில் படர்ந்து வருடியது .

” அதிகாரம் செய்யத்தான் செய்கிறேன்  . ஆனால்  அது  இங்கே ஒன்றும் பலிக்கவில்லை …” கட்டை விரலை பின்னால் நின்றிருந்த அவள் புறம் காட்டினான் .

” நாம் வீட்டிற்குள் போகலாம் ஹர்சா .நாளை பேசுவோம் …” வேண்டலாய் ஒலித்த அவளது குரலை அலட்சியப் படுத்தினான் .

” எதுக்குடி உள்ளே போகனும் …? உன்கிட்ட பேசத்தானே வரச் சொன்னேன் …பேசிட்டுத்தான் நாம் போகிறோம் …”

” இங்கே பேச்சு எங்கே நடக்கிறது …? “

மிக மெலிதாய் ஒலித்த அவள் குரலில் தேனுண்ட வண்டாய் கண்கள் மின்ன திரும்பினான் .

” வேறென்ன நடக்கிறது குட்டிம்மா ….? ” கொஞ்ச ஆரம்பித்து விட்டது அவன் குரல் .

இவன் ராட்ச்சன்தான் .கோபத்தில் மட்டுமல்ல கொஞ்சலிலும் … எப்போதும் இவனை எதிர் கொள்வது எனக்கு கடினமாகவே இருக்கிறது . ஜோதி மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் .




” ஏதோ கேட்டுக் கொண்டிருந்தீர்களே …? ” அவனுக்கு நினைவூட்டினாள் .

தன்னை வேதனைப் படுத்த கூடிய , துக்கப்படுத்த கூடிய ஒன்றைத்தான் அவன் கேட்டானென ஜோதிக்கு தெரியும் . ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தில் இதோ இப்படி மோகம் கொப்பளிக்க , அவளை அள்ளி வாய்க்குள் அடக்கிக் கொள்ளும் பரபரப்புடன்  நிற்பவனை காட்டிலும் …அப்படி குயுக்தி காட்டி சுடு சூரியனாய் தகிப்பவனை   எதிர் கொள்வது அவளிக்கு எளிதாக தோன்றியது. எனவே அவனது ஆரம்ப பேச்சிற்கே திரும்பினாள் .

பெரிதான அலுப்பு மூச்சொன்றை வெளியேற்றிய ஹர்சவர்த்தன் அவளிலிருந்து பார்வையை வான் நிலவுக்கு மாற்றினான் .

” உன் திருமணம் நின்றது இங்கே உள்ளவர்களுக்கு தெரியுமா …? “

” இந்த திருமணம் பேசியதே இங்கு யாருக்கும் தெரியாது …”

” அச்சா …” யோசனையில் உருண்ட அவன் விழிகள் ஜோதிக்கு அச்சத்தை தந்த்து .

ராட்ச்சன் என்ன திட்டம் போடுறான் …?

” எ …என்ன நினைக்கிறீர்கள் …? “

” ம் …தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தி விட்டால் என்ன …என்று நினைக்கிறேன் …”

” ஐயோ …வேண்டாம் …” அலறியவளை ஒரு விதமாக பார்த்தான் .

” வேண்டாம் ஹர்சா ப்ளீஸ் ….” இறைஞ்சினாள் .

” நான் சொல்வதை நீ கேட்டாயா என்ன …? நீ சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் …? “

அவன் சொன்னது நினைவு வர , ஜோதியின் உடல் சிலிர்த்து நின்றது …   வில்லங்கம் பிடித்தவன் .இவன் சொன்னதும் …நான் சொன்னதும் ஒன்றா …??

கெஞ்சல் தேக்கி பார்த்த அவள் பார்வையில் கொஞ்சம் மாறியவன் …” ப்ளீஸ்னா கேட்டாய் …? என்னிடம் தயவு கேட்பாயா நீ …பதிலுக்கு பதில்தானே திமிராக சொல்வாய் …செய்வாய் …”  நிலவொளியில் தூணின் பின்புறமிருந்து நீட்டி தெரிந்த அவளது மூக்கு நுனியில் இரு விரல்களால் சுண்டினான் . .

நீ இப்படித்தான் பேச போகிறாயா …கேட்டபடி நின்ற அவள் பார்வையைக் கண்டதும் தோள்களை குலுக்கிக் கொண்டான் .




” சொல்லு உன் பிரச்சினை என்ன …? “

வேகமாக பதில் பேச வந்தவள் திடுமென உதட்டில் பசை தடவிக்கொண்டாள் .

” சொல்ல நினைப்பதை சொல்லி தொலையேன்டி …” உறுமினான் .

” எனக்கு சொல்ல ஒன்றும் இல்லை …” முகத்தை திருப்பிக் கொண்டாள் ஜோதி .

” ஆனால் எனக்கு நிறைய இருக்குதடி .உன் தாத்தாவிடம் உன் மாமாக்களிடம் உனது இந்த நின்று போன திருமணத்தை பற்றி சொல்ல வேண்டும் .விளக்கங்கள் கொடுக்க தயாராக இருக்கும்படி உன் அப்பாவிடம் சொல்லி விடு ….”

” ப்ளீஸ் ஹர்சா வேண்டாம் …” ஜோதி பதட்டத்துடன் அவன் கையை பற்றினாள் .

தன் கை மீது படிந்திருந்த அவள் கையை குனிந்து பார்த்தவன் ” கையை எடுடி …” சீறினான் .

” உனக்கு தேவைன்னா தொட்டு பேசுவ .வேண்டாம்னா எடுத்தெறிஞ்சு பேசுவ ….இந்தப் பக்கம் வராதேன்னு கோடு கிழிச்சு நிற்க வைப்பாய் .  உன் இஷ்டத்திற்கு ஆட நான் உன் கை பொம்மையா …? “

இவன்தானே என்னை ஆட்டுவிக்கிறான் …நான் இவனை ஆட்டி வைப்பது  போ ல் ஏன் பேசுகிறான் …?ஜோதிக்கு குழப்பம் .நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் சோர்ந்தாள் .

இவன் இப்படி மூஞ்சியில் முள்ளை  வைத்துக் கொண்டு நின்றானானால் என்ன கேட்க முடியும் …?




” உன்னை பார்த்த நாளிலிருந்து எனக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டதுடி .தெளிந்த ஓடையாய் திசை பற்றிய கவலையில்லாமல் சுதந்திரமாக ஓடிக் கொண்டிருந்தவனை உன் இஷ்டத்திற்கு வளைத்து இழுத்து திசை திருப்பி இம்சித்துக் கொண்டருக்கிறாய் .எப்படி உன்னிடமிருந்து மீளப் போகிறேனென தெரியவில்லைடி …குட்டிப் பிசாசே …”

தாங்க முடியாத தவிப்பும் , மீள முடியாத கொதிப்பும் கலந்து ஒலித்தது ஹர்சவர்த்தனின் குரல் .

இவன் ஜோதிக்கு புது ஹர்சா …அலட்சியமும் அகம்பாவமுமான ஹர்சா இல்லை .தீராக் காதலும் , தீர்க்க முடியாத மோகமுமாக தனை மறந்து புலம்பும் புது ஹர்சா .

என்ன சொல்லி இவனை சமாதானப்படுத்துவாள் …? இதோ இந்த மயக்கு  நிலவில் அவள் சொல்லும் சிறு பிசகான சொல்லும் , மன்மதன் கை பாணமென அவள் புறமே பாய்ந்து எரித்து விடும்  அபாயமுண்டு .

பாதங்களை அழுத்தி தரையில் ஊன்றி கண்களை இறுக மூடி முதலில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தாள் ஜோதி .

” நாம் பேசுவதற்கான நேரம் இன்னமும் வரவில்லையென்று நினைக்கிறேன் ஹர்சா …” மெல்லிய குரலில் சொன்னாள் .

இந்த பேச்சு ஹர்சவர்த்தனை காயப்படுத்துமென அவளுக்கு தெரியும் .என் மன ரகசியங்களை  உனக்கு சொல்வதற்கில்லை என அவள் கூறும் இந்த வார்த்தைகள் , அவளை தனக்கானவளாக்கிக் கொள்ள துடித்து நின்று கொண்டிருப்பவனுக்கு வெறியை கொடுக்குமென அவள் அறிவாள் .

அதையே ஹர்சவர்த்தன் செய்தான் .வேட்டை நாயாய் மூச்சிரைத்தான் .

” அப்புறம் ஏன்டி இங்கே நிற்கிற …? போயேன் .போய் உன் அம்மா முந்தானையை பிடித்துக் கொண்டு படுத்துக்கோ போ….” அவள் தோள்களை பிடித்து தள்ளினான் .

” இல்லாமல் …இங்கே உங்கள் அழகு முகத்தை பார்த்துக் கொண்டு நின்றிருப்பேனென நினைத்தீர்களோ …? அதென்ன எப்போதும் என்னை கீழே தள்ளி விடுவது …? உங்கள் உடல் பலத்தை …ஆண் திமிரை காட்டுகறீர்களா …? ” பட்டென்ற அவன் தள்ளலில்   ஜோதியும் எகிறினாள் .

ஹர்சவர்த்தன் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான் .” அச்சா …”




ஜோதிக்கு அடி வயிறு கலங்கியது .இ …இப்போது எதற்கு இந்த அச்சா …?

” உடல் பலம் …ஆண் திமிர் …காட்டுகிறேன் பார்க்கிறாயா …? “கிழித்து வைத்த கோடு தாண்டி  வேங்கையென தன்னை நெருங்கியவனை அச்சமாக பார்த்தாள் .

What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!